பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ

பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்].

சாரங்கன்

1

அன்புள்ள சாரங்கன்,

தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. வாசகரிடமுள்ளன என்பதுதான் முக்கியமானது. உண்மையில் வாசக ஏற்புதான் பாலுறவைச் சித்தரிப்பதன் அளவைத் தீர்மானிக்கிறது. அதாவது எழுத்தாளரின் நோக்கம் பாலுறவைச் சித்தரிப்பதாக இருக்கமுடியாது, அது மட்டுமே என்றால் அது இலக்கியம் அல்ல. மானுட இயல்பை, அதனூடாகத் தெளியும் வாழ்க்கைத்தரிசனத்தை வெளிப்படுத்துவதே அவ்வெழுத்தின் நோக்கமாக இருக்கும்.

அந்நிலையில் பாலுறவைச் சித்தரிக்கும்போது அது சரியான அளவிலிருந்தாகவேண்டும். மிகையாக ஆகிவிட்டது என்றால் வெறுமே அதிர்ச்சியோ பரபரப்போ அளித்து எதை நோக்கி வாசகனின் கவனத்தை ஆசிரியன் கொண்டுசெல்ல விரும்புகிறானோ அதை நோக்கி வாசகன் கற்பனை மூலம் செல்வதை தடுப்பதாக ஆகிவிடும். அதாவது காமமும் வன்முறையும் மிதமிஞ்சிய உணர்ச்சிகரமும் படைப்பின் மேல்மட்டத்தில் வாசகனைக் கட்டிப்போடும்தன்மை கொண்டவை.
2

கலைஞன் எப்போதுமே அளவாகச் சொல்லி வாசகனை ஊகிக்கவைக்கவே முயல்வான். உடைத்து வைப்பது வாசகன் செல்லும் பயணத்தை இல்லாமலாக்கிவிடுகிறது.கலையை நிகழ்த்தும் எழுத்தாளன் காமம், வன்முறை, உணர்ச்சிகரம் ஆகியவற்றை மிகமிக நுட்பமாக , தேவையான அளவுக்கு மட்டுமே கையாள்வான். வாசகனை சீண்டி அருகே கொண்டுவருமளவு இருக்கவும் வேண்டும், வாசகனிடமிருந்து நுட்பங்களை மறைக்குமளவு மிகையாகவும் இருக்கக்கூடாது.அந்த அளவை நல்ல கலைஞன் அவன் சமகாலத்துடன் அவன் கொண்டுள்ள மானசீகமான உரையாடல் வழியாகவே கண்டடைகிறான்.

அந்த அளவை எப்போதும் அவன் தீர்மானிப்பதில்லை, அவன் முன்னால் உள்ள உத்தேச வாசகர்களின் மனநிலையே தீர்மானிக்கிறது. உதாராணமாக பிரெஞ்சுப்பண்பாடு பாலுறவை சற்றே நெகிழ்வுடன் அணுகும் நோக்கு கொண்டது. பாலியலை நேருக்குநேர் நோக்கவும் மொழியில் வெளிப்படுத்தவும் அங்கு ஒரு முந்தைய மரபுத்தொடர்ச்சி உள்ளது. தமிழகமோ ஒழுக்கநெறிகளாலும் குடும்ப ஆசாரங்களாலும் இறுக்கமாக கட்டிவைக்கப்பட்ட ஒன்று. இங்கே பாலுறவை பொதுவில் பேசமுடியாது. பாலுறவுச் சித்தரிப்புகள் எப்போதுமே பதற்றத்தை உருவாக்குகின்றன.
3

ஆகவே பிரெஞ்சில் எழுதும் எழுத்தாளன் பாலுறவை எழுதும்போது உருவாகும் வாசக எதிர்வினையை விட பத்துமடங்கு எதிர்வினை தமிழில் உருவாகும். ஆகவே அங்குள்ள ஓர் எழுத்தாளன் எழுதுவதைவிட பத்துமடங்கு குறைவாகவே இங்கே பாலியலை சித்தரிக்கமுடியும். அதேபோல நேற்று பாலியலை எழுதினால் உருவாகும் அதிர்ச்சியை விட பாதியே இன்று உருவாகிறது. காரணம் நம் அளவுகோல்கள் மாறிவிட்டன. ஆகவே இன்றைய எழுத்தாளன் இன்னும் கூடுதலாகச் சொல்லி கலையமைதியை தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஆகவே ஒரு காலகட்டத்தில் அதிர்ச்சியூட்டும் பாலியல்சித்தரிப்பு என கருதப்பட்ட நூல் ஒரு தலைமுறைக்குள் சாதாரணமாகிவிடுகிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சேட்டர்லிஸ் லவர் நாவலை இப்போது வாசித்தால் இது எதற்காக நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது, எதற்காக ஆசிரியர் அத்தனை பெரிய தாக்குதல்களைச் சந்தித்தார் என நாம் திகைப்போம். இன்றைய ‘எரியும் நூல்’ நாளை சாதாரணமாக ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.

7

ஆகவே எந்த அளவுக்கு வெளிப்படையாகப் பாலியலை சொல்லியிருக்கிறது என்பது ஓர் அளவுகோலே அல்ல. அது அக்கலைஞன் அவன் கலைக்குள் தீர்மானிக்கும் அளவு மட்டுமே. படைப்பை மதிப்பிடவேண்டியது அதில் மானுட இயல்பை, வாழ்க்கை குறித்த முழுமைநோக்கை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று மட்டும்தான். அதற்கு அவர் பாலியல்சித்தரிப்பை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் ஆல்பர்ட்டோ மொரோவியோ இன்றைக்கு வெறும் பழங்கால பாலியல் எழுத்தாளர். டி.எச்.லாரன்ஸ் இன்றும் ஆர்வமூட்டும் கலையை படைத்தவர்

நவீனத்தமிழிலக்கியம் எழுதப்பட்ட காலம் முதலே நுட்பமாக பாலியலை எழுதிய பல படைப்புகள் வெளிவந்துள்ளன. நான் இதில் பாலியல்வேட்கையை எழுதிய படைப்புகளைச் சுட்டவில்லை. கு.ப.ராஜகோபாலன் முதல் வண்ணதாசன் வரை அது ஒரு தனி மரபு. நான் கூறுவது பாலியல்சித்தரிப்பினூடாக வாழ்க்கையை காட்டிய படைப்பாளிகளைப்பற்றி.

4 [ராஜேந்திரசோழன்]

முதன்மையாக சொல்லவேண்டிய படைப்பு அ.மாதவையா எழுதிய முத்துமீனாட்சி. அன்றைய பிராமணக்குடும்பங்களில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வதையைச் சித்தரிக்கும் வலுவான நாவல் இது. சிறுமியை பணத்திற்காகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவளை பாலுறவுக்கு தயாராக்கும்பொருட்டு வன்முறையால் வயதுக்குவரச்செய்யும் சித்தரிப்பே தமிழின் முதல் நேரடியான பாலியல் சித்தரிப்பு

தமிழின் எல்லா போக்குகளுக்கும் புதுமைப்பித்தனிடம் முன்னுதாரணம் இருக்கும் என்பார்கள். அவரது விபரீத ஆசை தமிழ் பாலியல்சித்தரிப்பு எழுத்தின் முக்கியமான முன்னுதாரணம். நண்பனின் பிணத்தருகே அவன் மனைவியுடன் உறவுகொள்வதன் விசித்திரமான சித்தரிப்பு இக்கதையை ஆழ்ந்த மனக்கொந்தளிப்பை நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆனால் இவையிரண்டுமே இருவகை தொடக்கங்கள் மட்டுமே.

5 [சு வேணுகோபால்]

சமூக அவலங்களை சித்தரிப்பதில் மாதவையாவும் பாலுறவின் முனையில் மானுட உளநிகழ்வை ஆராய்வதில் புதுமைப்பித்தனும் இரு வழிகளைக் காட்டினர். ஆனால் அவை பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழில் மென்மையான ஆண்பெண் சல்லாபத்திற்கு இருந்த வரவேற்பு இப்படி உடைத்து உட்சென்று நோக்கும் இரக்கமற்ற அணுகுமுறைக்கு இருக்கவில்லை. காமச்சித்தரிப்பின் மிகப்பெரிய பிரச்சினையே அது கற்பனாவாதமாக இருக்கமுடியாது என்பதுதான். அந்தக் கறார்தன்மை எளிய வாசகர்களுக்கு எப்போதும் உவப்பானது அல்ல.

எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’அவ்வகையில் தமிழில் நிகழ்ந்த அபூர்வமான ஒரு முன்னெடுப்பு. மிகச்சரியாக பாலியல்சித்தரிப்பு கலையாவதன் சிறந்த உதாரணம் அது. மு.தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை போன்ற கதைகளையும் குறிப்பிடலாம்.

spo87988784654 [எஸ். பொன்னுத்துரை]

ஜானகிராமனின் அம்மாவந்தாளில் நுட்பமான பாலுறவுச்சித்தரிப்பு உள்ளது என்றாலும் அவரது மரப்பசுதான் அதில் அவர் குறிப்பிடும்படி முன்னகர்ந்த படைப்பு என்று சொல்லமுடியும். அதிலுள்ள பாலியல்சித்தரிப்பு பெண்ணின் நோக்கில் அமைந்திருப்பதும் முக்கியமானது. ஆனால் ஜானகிராமன் பெரும்பாலும் கிழித்து உட்புக விழைவதில்லை. மென்மையாக சுற்றிச்செல்லவே முயல்கிறார். அவரது எழுத்திலுள்ளது பெரும்பாலும் ஆண்பெண் சல்லாபத்தின் சித்தரிப்பே. அது தமிழில் முக்கியமான முன்னுதாரணம்.

ஜி.நாகராஜைன் அடுத்த கட்டத்தைத் தொடங்கி வைத்த படைப்பாளி என்று சொல்லலாம். அவரது இரு படைப்புகள், குறத்திமுடுக்கு , நாளை மற்றுமொரு நாளே பாலியல் சித்தரிப்பை நுண்ணிய அகவெளிப்பாடாக ஆக்கியவை. அவரது ‘நான்செய்த நற்செயல்கள்’ போன்ற சிறுகதைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மெல்லிய அங்கதத்துடன் பாலுறவுச்சிக்கலை, ஒழுக்கமற்ற வாழ்வுச்சூழலைச் சொன்ன நாகராஜன் அக்காரணத்தாலேயே ஒரு முக்கியமான முன்னுதாரணமாக ஆனார்

அவ்வகையைச் சேர்ந்த ‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’ போன்ற சில கதைகளை ஜெயகாந்தனும் எழுதியிருக்கிறார்.

தமிழில் பாலியல்சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும் சிறகுகள் முளைத்து…  என்னும் சிறிய நாவலையும் [இது அஸ்வகோஷ் என்னும் பெயரில் அவர் எழுதியது] சுட்டிக்காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்கநெறிகளுக்கு அப்பால் பாலுறவுத்தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள்.

ஆனால் அவருடைய பாலியல் புரிதல் அகம்சார்ந்தது அல்ல. சமூகச்சித்திரத்தின் ஒரு பகுதி அது. அச்சமூகச்சித்திரம் ஏற்கனவே அவர் புரிந்து வைத்திருக்கும் மார்க்ஸிய கொள்கைகளால் ஆனது. ஆகவே நுண்மைகள் அற்ற, சற்று துணிவான பாலியலெழுத்தாகவே அவருடைய கதைகள் நிலைகொள்கின்றன

ஜே.பி.சாணக்யா
ஜே.பி.சாணக்யா
கே. என் செந்தில்
கே. என் செந்தில்
எஸ் செந்தில்குமார்
எஸ் செந்தில்குமார்
வா மு கோமு
வா மு கோமு

அடுத்த கட்ட நகர்வு என்று நான் சு.வேணுகோபாலைத்தான் சுட்டிக்காட்டுவேன். ஒருவகையில் தமிழிலக்கியத்தில் பாலுறவின் நுண்ணிய சிடுக்குகளுக்குள் தயக்கமே இன்றி நுழைந்த முதல் கலைஞர் என்றே அவரைச் சொல்ல முடியும். அவருக்கு அடிப்படையில் மானுட நல்லியல்பு மேல் நம்பிக்கையே இல்லையோ என்று தோன்றும். காமம் தேரும் விலங்குகள் என மக்களை பார்க்கும் அவரது பார்வையில் இருட்டின் ஒரு துளிகூட தப்புவதில்லை.

இன்றைய இளைஞர்கள் உடல்சித்தரிப்பை மேலும் விரிவாக எழுதுகிறார்கள். எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,கே.என்.செந்தில், வா.மு.கோமு போன்றவர்களின் கதைகள் இன்னும் நேரடியான சித்தரிப்பை முன்வைப்பவை. அந்த நேரடித்தன்மையால் அவ்வப்போது நுட்பங்கள் இல்லாமலாவதையும் காண்கிறேன். காமத்தை எழுதுவது என்பது காமத்தைத் தூண்டுவது அல்ல, அது கலைஞனின் வேலை அல்ல. காமத்தை மானுடனின் முதன்மையான வெளிப்பாட்டுக்களங்களில் ஒன்று என்று காண்பவனே கலைஞன்

*

நான் பாலுணர்வெழுத்தை கூர்ந்து வாசிப்பதில்லை. பேசப்படும் பெரும்பாலான எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் எண்பதுகளின் தொடக்கத்திலேயே ஆல்பர்ட்டோ மொரோவியாவை வாசித்தேன். அந்நாட்களில் அவர் ஒரு பேரிலக்கியவாதியாகக் கருதப்பட்டவர். அதன்பின் ஹென்றி மில்லர், எரிக்கா யங், கேத்தி ஆக்கர்…

எனக்கு இந்த எழுத்துக்கள் மேல் ஆர்வமின்மை வர முதன்மைக்காரணம், இவற்றை முதிரா இளமையிலேயே ஆவலாக வாசிக்கமுடியும். அதன் பின் எஞ்சிய வாழ்நாளில் வாசிப்பது அந்த முதல் வாசிப்பின் நினைவை மீட்டிக்கொள்ளுதல் மட்டுமே. நான் அந்த வயதில் அரசியல் அலைச்சல்கள், சாவுகள், அதன் விளைவான கொந்தளிப்புகள் வழியாகச்சென்றுகொண்டிருந்தேன். எனக்கு அவை உருவாக்கிய வினாக்களை எதிர்கொள்ளும் படைப்புகளே பிடித்திருந்தன.

இன்று வாசிக்கையில் புகழ்பெற்ற பாலுணர்வெழுத்துக்கள் கூட சலிப்பூட்டுகின்றன. அவரவர் குறிகளை குதிரையாக்கி கற்பனை வெளியில் பயணம் செய்வதுபோல தோன்றுகிறது. அதிலும் மொழிவளமோ கற்பனைவளமோ இல்லாத, உளவியல்நுட்பங்களுக்குள்ளேயே செல்லாத தஞ்சை பிரகாஷை வாசிக்கையில் பாவம் என்றுதான் எண்ணமுடிகிறது

ஜெ

 Oct 13, 2015 

பாலுணர்வெழுத்தும் தமிழும்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி

கு.ப.ராஜகோபாலன் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைசூல்கொண்ட அருள்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 13