‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 1

மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று… நிறைய நாகர்களை கொன்று…” என்று சொன்னபடி கையிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்துக்கொண்டு குறுங்காட்டை நோக்கி ஓடினான். மரநிழல் ஒன்று அவனுக்குக் குறுக்கே விழுந்து நெளிய திகைத்து நின்று உடல் நடுங்கியபின் பறவை ஒலி போல் அலறி வில்லை கீழே போட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து மாலினியின் மடியிலேறி அமர்ந்து கொண்டான்.

வீரர் என்ன சென்ற விரைவிலேயே திரும்பிவிட்டார்?” என்றாள் சுபகை. “போ, நீ கெட்டவள்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் மாலினியின் மார்பில் முகம் புதைத்தான். “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்று அவள் அவன் கன்னத்தை பற்றினாள். “என் மாவீரனல்லவா? அரசனுக்கு அரசனல்லவா? சொல்லுங்கள்!” அவன் கண்களை விழித்து “அங்கே அவ்வளவு பெரிய நாகம்! பாதாளத்திலிருந்து அது வந்து படுத்திருக்கிறது” என்றான். “யானை நாகம் அது.”

மாலினி அவன் தலையை தடவியபடி “நாம் சொல்வனவற்றில் அவன் எதை கேட்கிறான், அவை எங்கு சென்று எப்படி உருமாறுகின்றன என்று யார் அறிவார்!” என்றாள். சுபகை  “பாதியைத்தானே கேட்கிறார்? எஞ்சிய நேரம் துயில்” என்றாள். “அறிதுயில்“ என்றாள் மாலினி. “நாம் சொல்லாத கதைகள் அவன் துயிலுக்குள் வளர்கின்றன.” சுபகை “ஆம்… இவரைப் பார்க்கையில் ஒரு சிறிய விதை என்றே தோன்றுகிறது” என்றாள். “அல்லது ஒரு துளி நெருப்பு” என்று மாலினி சொன்னாள். “அவனுக்குள் இருக்கும் ஆத்மன் துயிலில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றுமடி.”

சுஜயனை வருடி “ஆத்மனுக்கு அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு அது அடைவதெல்லாம் நினைவூட்டல் மட்டுமே” என்றாள் மாலினி. சுபகை குனிந்து சுஜயனின் கண்களைப் பார்த்து “இக்கண்களுக்கு எல்லாமே தெரியும் என்றே தோன்றுகிறது” என்றாள். சுஜயன் “எனக்கு எல்லாமே தெரியும்” என்றான். “என்ன தெரியும்?” என்றாள் சுபகை. “அர்ஜுனரும் சித்ராங்கதையும் விளையாடினார்கள்” என்றான். அவள் “என்ன விளையாட்டு?” என்று சிரித்தபடி கேட்டாள். “பாம்பு விளையாட்டு” என்று அவன் சொன்னான்.

மாலினியின் கண்களைப் பார்த்தபின் “என்ன பாம்பு விளையாட்டு?” என்றாள். “இருவரும் பாம்பாக மாறினார்கள்” என்றபின் அவன் மூக்குக்குள் கையை விட்டு துழாவியபடி கண்களை உருட்டி தலையை அசைத்தான். சொற்களுக்காக அவன் முட்டித் ததும்பி பின்பு எழுந்து நின்று கைகளை விரித்து “அர்ஜுனர்! அவர் பெண்பாம்பு. சித்ராங்கதை ஆண்பாம்பு” என்றபின் கைகளைப் பிணைத்து “அப்படி விளையாடினார்கள்” என்றான். “அதன் பிறகு… அதன்பிறகு…” என்றபின் “அதன்பிறகு சித்ராங்கதை பெண்பாம்பு, அர்ஜுனர் ஆண்பாம்பு” என்றான்.

சுபகை வியந்து வாயில் கை வைத்து “அய்யோ!” என்றாள். “நாம் இவர் துயிலும்போது பேசுகிறோம். எங்கோ ஒரு செவி நம் குரலுக்காக வைத்திருக்கிறார்” என்றாள். “இல்லையடி, நாம் சொன்னவற்றிலிருந்து அவனது ஆத்மா நீட்டித்து கொள்கிறது. ஜாக்ரத் புறவுலகு என்றால் அதை அறியும் ஸ்வப்னம் ஆத்மாவின் உலகம். சுஷுப்தி ஆன்மாவை ஆளும் தெய்வங்களின் உலகம். துரியம் பிரம்மத்தின் உலகத்தை சார்ந்தது” என்றாள் மாலினி.

அவள் கன்னத்தை பற்றித் திருப்பி “நான் பார்த்தேன்” என்றான் சுஜயன். “என்ன பார்த்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “அர்ஜுனர் அவ்வளவு பெரிய வாள்… இல்லை… மூன்று வாளால் சித்ராங்கதையை வெட்டினார்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்றாள் சுபகை. “ஏனென்றால் அவள் பெரிய வாளால் அர்ஜுனரை வெட்டினாள். இருவரும்… ஒரே குருதி. அவ்வளவு குருதி… சிவப்பாக… ஏழு குருதி” என்றான். “சரி” என்றபோது சுபகையின் விழிகள் மாறியிருந்தன. “அந்தக்குருதியில் அவர்கள் பாம்பாகி…” என்றபின் அவன் வாயில் கட்டை விரலை விட்டு சுபகையை நோக்கி பேசாமலிருந்தான்.

“சொல்க இளவரசே” என்றாள் மாலினி. சுபகையை சுட்டிக்காட்டி “இவளை பார்க்க எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் சுஜயன். “ஏன்?” என்று மாலினி கேட்டாள். “இவள் கண்கள் பாம்புக் கண்கள் போல் உள்ளன” என்றான். “என் கண்களா?” என்று சுபகை அருகே வந்தாள். “அருகே வராதே. நீயும் பாம்பாகிவிட்டாய்” என்றான் சுஜயன். “வேறு யார் பாம்பாக இருந்தார்கள்?” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் இருவரும் பாம்பாக இருந்தார்கள். இருவர் விழிகளும் பாம்பு போல் இமைக்காதிருந்தன. இதோ உன் விழிகளும் அப்படித்தான் உள்ளன.”

“நீ அவளிடம் பேசவேண்டாம் என்னிடம் பேசு” என்று சொல்லி மாலினி சுஜயனை தூக்கி மடியில் வைத்து மார்புடன் அணைத்துக் கொண்டாள். “எனக்கு அவளை பிடிக்கவில்லை” என்றான் சுஜயன். “நீ அவளிடம் பேசவேண்டாம்” என்று மாலினி அவன் கன்னங்களை முத்தமிட்டாள். பின்பு “எதற்காக அவர்கள் வெட்டிக் கொண்டார்கள் இளவரசே?” என்றாள்.

“அவர்கள் பாம்பாக இருந்து தண்ணீரில் நீந்தி கரையேறியபோது மனிதர்களாகி விட்டார்கள். அப்போது இரண்டு தேவர்கள் வந்து அவர்களிடம்…” என்றபின் அவன் சிந்தனை செய்து தலையை சரித்து “தேவர்களில்லை… பேய்கள்” என்றான். “பேய்களா?” என்றாள் சுபகை. “நீ என்னிடம் பேசாதே. நீ பாம்புக் கண்களுடன் இருக்கிறாய்” என்றான். “சரி அவள் பேசவில்லை. நான் கேட்கிறேன், தேவர்களா பேய்களா?” என்றாள் மாலினி.

அவன் இரண்டு விரல்களை காட்டி “ஒரு பேய் ஒரு தேவர்” என்றான் சிரித்தபடி. “சரியாக சொல்கிறார்” என்றாள் சுபகை. “பேசாமல் இரடி” என்று அவளை கடிந்தபடி மாலினி அவன் தலையை தடவி “சொல்க இளவரசே” என்றாள். “பேய்… பிறகு ஒரு தேவன்… இருவரும் வந்தனர். பேய் பெண்ணாக இருந்தது. தேவன் ஆண். இருவரும் கையில் வாள் வைத்திருந்தார்கள். அந்த வாளை அவர்கள் அர்ஜுனருக்கும் சித்ராங்கதைக்கும் கொடுத்தார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்கள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டார்கள். இருவர் உடலிலும் குருதி வழிந்தது. பிறகு…”

அவன் நாணம் கொண்டு இரு கால்களையும் குறுக்கி கைகளை நடுவே வைத்துக் கொண்டு உடலை இறுக்கினான். “என்ன?” என்றாள் மாலினி. “சொல்லமாட்டேன்” என்று அவன் தலை அசைத்தான். “சொல், என் கண்ணல்லவா?” என்றாள் மாலினி. “ம்… சொல்லமாட்டேன்” என்று சொல்லி முகத்தை அவள் மார்பில் புதைத்துக் கொண்டான். ஆவல் தாளாமல் அருகே வந்த சுபகை “சொல்லுங்கள் இளவரசே’’ என்றாள். “நீ என் அருகே வராதே. நீ கெட்டவள்’’ என்றான் சுஜயன். “சொல்லுங்கள் இளவரசே, நான் உங்களுக்கு கார்த்தவீரியன் கதை சொல்கிறேன். என்ன பார்த்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

சுஜயன் எழுந்து அவள் கழுத்தை தன் கைகளால் வளைத்து காதுக்குள் “அவர்கள் நக்கிக் கொண்டார்கள்” என்றான். அவள் “ஏன்?” என்றாள். “அவள் உடலில் இருந்த குருதியை அர்ஜுனர் நக்கினார். அர்ஜுனர் உடலில் இருந்த குருதியை அவள் நக்கினாள். சிவந்த பெரிய நாக்கு… நாய் போல… இல்லை புலி போல.” சுபகை “எவ்வளவு நேரம் நக்கினார்கள்?” என்றாள். “நிறைய நேரம். ஏழு நேரம்” என்று அவன் சொன்னான். பின்பு ”நக்க நக்க குருதி வந்து கொண்டே இருந்தது” என்றான்.

“பிறகு?” என்றாள் சுபகை. அவன் அவளைப் பார்த்தபின் “இவள் அரக்கி. சிறிய குழந்தைகளை தின்பாள்” என்றான். “அவளை நுண் சொல் ஏவி கட்டிவிடலாம். நான் உன்னுடன் இருக்கிறேன் இளவரசே” என்று மாலினி சொன்னாள். சுஜயன் “நீ நல்லவள்” என்று அவள் கையைப்பற்றி தன் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டான். “அதன் பின் என்ன பார்த்தீர்கள்?” என்றாள் சுபகை. “அதன்பின்… அதன் பின்னும் அதே போல ஒரு பேய். இன்னொரு தெய்வம். அந்தப்பேய் ஆண். அதன் தலையில் மணிமுடி இருந்தது. அந்த தேவதை நீண்ட ஆடை அணிந்திருந்தாள். காற்றில் அந்த ஆடை நெடுந்தூரம் பறந்தது, முகில் போல. அவர்கள் கையிலிருந்த வாளை மீண்டும் கொடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் வாட்போர் புரிந்தனர்.”

”அதன்பிறகு குருதியை நக்கிக் கொண்டனர் அல்லவா?” என்றாள் மாலினி. “எந்த தெய்வம் உருவாக்குகிறது இக்கனவுகளை?” சற்றே பதறியவள் போல் மாலினியிடம் கேட்டாள் சுபகை. மாலினி “கனவுகளை கட்டுப்படுத்தும் சொற்கரைகள் அவனிடம் இல்லை” என்றாள். சுஜயன் “அதன் பிறகு அவர்கள் இருவரும் காட்டுக்குள் ஓடி ஒரு சுனையில் இறங்கினர். அதில் மீன்களைப்போல விளையாடினார்கள். பிறகு அவர்கள் காட்டுக்குள் சேற்றில் படுத்திருந்தார்கள்” என்றபின் கிளுகிளுத்து சிரித்து எழுந்து வந்து “அவள் இவ்வளவு சிறிய குழந்தை” என்றான். “யார்?” என்றாள் சுபகை. “அவள்தான் சித்ராங்கதை… இளவரசி” என்றான். “அர்ஜுனர் இவ்வளவு சிறிய குழந்தை” என்று கையால் மேலும் சிறிய அளவை காட்டினான்.

“இவ்வளவு சிறிய குழந்தைகளா? புழுக்கள் போல் இருப்பார்களே” என்றாள் மாலினி. “புழுக்களைப்போல” என்று சொன்னபின் அவன் விரலை நெளித்து “புழுக்களைப் போன்ற குழந்தைகள். அவர்கள் அருகருகே ஒட்டிக்கொண்டு படுத்து அழுதார்கள்” என்றான். “அழுதார்களா?” என்றாள் மாலினி. ”அழவில்லை” என்று அவன் தலை அசைத்தான். “அசையாமல் அப்படியே படுத்திருந்தார்கள்” என்றான்.

“அதன் பிறகு?” என்று சுபகை கேட்டாள். “அதன் பிறகு நான் அந்தக் காட்டை விட்டு வந்தேன். வானத்தில் மூன்று கழுகுகள்” என்றபின் அவன் அதை அழிப்பது போல சைகை காட்டி “ஏழு கழுகுகள்… யானைகளை தூக்கி வந்தன” என்றான். “அவ்வளவுதான். தெய்வம் மலைக்கு திரும்பிவிட்டது” என்றாள் சுபகை. “கழுகுகளை நான் துரத்திக் கொல்லும்போது அவை பாறைகளை தூக்கி வீசுகின்றன. அதோ அந்த மலை மேல் இருக்கும் பாறைகள் அளவுக்கு பெரிய பாறைகள்” என்றான் சுஜயன்.

சற்றே துள்ளி கைவிரித்து “அவற்றை நான் என்னுடைய வாளால் உடைத்தேன். இல்லை என்னுடைய கதாயுதத்தால் ஓங்கி அடித்தேன். ஆனால்…” என்று திக்கலும் விரைவுமாக சுஜயன் சொன்னான். “என்னுடைய கதாயுதம் மிகவும் பெரியது. கரிய இரும்பு அது. அதை வைத்து ஒரே அடியில் இந்தப்பாறைகளை உடைக்கமுடியும்.” ஓடிச்சென்று இருகைகளை விரித்து அங்கிருந்த மரத்தை காட்டி “அந்த மரத்தை நான் ஒரே அடியில் உடைப்பேன்” என்றான்.

மாலினி சுபகையிடம் “மிகச் சரியாகவே சென்றடைந்திருக்கிறான்” என்றாள். “எனக்கு புரியவில்லை” என்றாள் சுபகை. “ஏனெனில், நீ காதலையும் காமத்தையும் அறிந்திருக்கிறாய். நான் இளைய பாண்டவனை அன்றி பிறிதொரு ஆண்மகனை தொட்டதில்லை” என்றாள் மாலினி. சுபகை சிரித்து “நானும்தான்” என்றாள். “சீ போடி” என்று அவள் தொடையில் அடித்தாள் மாலினி.

“அப்படியென்றால் எப்படி அறிந்தீர்கள்?” என்று சுபகை கேட்டாள். “நதியில் இறங்குபவர்கள் அதை அறிவதில்லை. உயிர் காக்க மூச்சு குவித்து நீச்சலிடுவதை மட்டுமே செய்கிறார்கள். நான் நெடுங்காலமாக இதன் கரையில் இப்பாறைமேல் விழிகூர்த்து அமர்ந்திருக்கிறேன்” என்று மாலினி சொன்னாள்.

“இளைய பாண்டவன் இரண்டு வருடங்கள் அங்கிருந்ததாக காவியம் சொல்கிறது” என்றாள் மாலினி. சுபகை நகைத்து “இக்காவியங்களில் ஒவ்வொரு ஊரிலும் அவர் இருந்த வருடங்களை கூட்டி நோக்கினால் இதற்குள்ளாகவே அவருக்கு நூறு வயது கடந்திருக்கும்” என்றாள். மாலினி “காவிய நாயகர்கள் ஒருவரல்ல. ஓருடலில் திகழும் மானுடத்திரள். அவர்களை விராடர்கள் என்பது வழக்கம்” என்றாள். “காட்டிலிருந்து ஆணும் பெண்ணுமாக உருமாற்றம் அடைந்து அவர்கள் இருவரும் அரண்மனைக்கு வந்தபோது மணிபுரி நகரமே திகைத்தது. அவர்களுக்குப்பின்னால் நகரமக்கள் சொல்விக்கியவர்களாக ஆயிரம் படகுகளில் தொடர்ந்து சென்றனர்.’’

“அமைச்சரும் அரசியரும் அரசரும் உண்மை என்னவென்று அறிந்திருந்தனர். பிறருக்கு அது எண்ணிப் பார்க்க அகம் பதைக்கும் கனவு போல் இருந்தது. கொலை வாளும் கொடும் சினமும் கொண்ட இளவரசர் விழிகனிந்து உடல் குழைந்து இளவரசியென வந்தாள். சுடரென ஒளிகொண்டு உடல்நெளிந்த நடனப்பெண் இளங்களிறு போன்ற ஆண்மகனாகி உடன் வந்தான்” என்றாள் மாலினி. “அதற்கிணையான ஒன்று கதைகளிலேயே நிகழமுடியுமென்பதனால் ஒவ்வொருவரும் கதைகளுக்குள் புகுந்துகொண்ட உணர்வை அடைந்தனர்.”

சித்ரபாணனின் அவையில் இருவரும் சென்று நின்றபோது ஒற்றை மூச்சொலியாக முகங்கள் செறிந்த அவை ஒலித்தது. அங்கிருந்த குடிமூத்தார் சிலர் அதை நோக்கமுடியாதவர்களாக விழிகளை விலக்கிக்கொண்டனர். சித்ரபாணன் அவையினரை வணங்கி “மூத்தகுடியினர் என் பிழை பொறுக்கவேண்டும். என் அரசி பெற்றது ஒரு மகளையே. மீண்டும் பெண் என்று அறிந்ததும் உளம் சோர்ந்து சென்று அன்னை மணிபத்மையின் ஆலயத்து படியில் அமர்ந்து விட்டேன். என் கண்ணீர் துளிகள் அங்கே விழுந்தன.”

“என் சிறு நாட்டை சூழ்ந்திருந்த எதிரிகள் செய்தியறிந்து சிரித்து கொப்பளிப்பதை கண்டேன். உனக்கென எழுந்த இச்சிறு நாடு அழிவதே உன் சித்தமா என்று அன்னையிடம் கேட்டேன். என்றோ அழியுமென்றால் அது இன்றே அழிக! இப்படிகளிலிருந்து எழுந்து செல்லமாட்டேன். இனி உணவும் நீரும் அறிந்துவதில்லை என்று வஞ்சினம் உரைத்து அங்கு அமர்ந்தேன். உடல் சோர்ந்து அங்கேயே துயின்றபோது என் கனவில் அன்னை எழுந்தாள். எட்டு தடக்கைகளில் படைக்கலன்களும் செம்மணிவிழிகளும் தழற்சடைப் பெருக்கும் கொண்டு நின்றாள். திகைத்து விழித்துக் கொண்டபோது புரியாத வானொளி ஒன்றால் என் அரண்மனையும் ஆலயமுற்றமும் கருவறை சிலையும் ஒளி பெற்றிருப்பதை கண்டேன்.”

“அனைத்தும் மறைந்தபின்னரே அன்னை என்னிடம் சொன்னதை என் சொல்மனம் புரிந்து கொண்டது. திரும்பி வந்து என் பட்டத்தரசியை அழைத்து நமக்குப் பிறந்துள்ளது பெண்ணல்ல, ஆண் என்றேன். என்ன சொல்கிறீர்கள் என்று அவள் திகைத்தாள். இவள் பெயர் சித்ராங்கதன். இனி இவள் ஆண். அன்னை முடிவெடுக்கும் வரை இவள் நாம் விழையும் தோற்றத்தில் இருக்கட்டும். நாமன்றி பிறர் இவள் பெண்ணென்று அறிய வேண்டியதில்லை. அது எப்படி இயலும் என்று அவள் சொன்னாள். இது என் ஆணை. இனி இக்குழவியை கைதொட்டும் விழிதொட்டும் சொல்தொட்டும் அணுகும் எவரும் இவள் பெண்ணென உணர்த்தலாகாது என்றேன்.”

“ஆணென்றே எண்ணவும் ஆணென்றே பழகவும் பயின்றால் இவள் ஆணென்றே ஆவாள் என்று நான் வகுத்தேன். தானொரு பெண் என்று ஒரு போதும் இவள் அறியலாகாது என்றேன். சின்னாட்களிலேயே பெண்ணென இவள் பிறந்த செய்தி அரண்மனையின் ஒருசில உள்ளங்களுக்குள் ஆழ புதைந்து மறைந்தது. இவளில் எழுந்த பெண்மையை அழித்தேன். படைக்கலப்பயிற்சி அளித்தேன். நெறி நூல் கற்பித்தேன். இளவரசனென்றே வளர்ந்தெழச் செய்தேன். இவள் சென்ற களங்கள் எங்கும் ஆண்மையே வெளிப்பட்டது. இங்குள எவரும் இவளை பெண்ணென எண்ணியதில்லை” என்றார் சித்ரபாணன்.

குடி மூத்தார் ஒருவர் எழுந்து “பொறுத்தருள்க அரசே! எங்கள் அனைவரின் கனவிலும் எப்போதும் இளவரசர் பெண்ணென்றே தோன்றினார். எங்கள் குலதெய்வங்கள் சன்னதமெழுகையில் இளவரசரை பெண்ணென்றே குறிப்பிட்டன. உண்மையில் இங்குள்ள குடிகள் அனைத்தும் அறிந்திருந்தோம், அவர் பெண்ணென்று. அதை எங்கள் உள்ளத்தின் முற்றம் வரை கொண்டு வர நாங்கள் துணியவில்லை. பல்லாயிரம் சொற்களால் புனைந்து அவரை ஆணென உளம் கொண்டோம்” என்றார். புன்னகையுடன் “ஆம்” என்றார் அமைச்சர்.

திகைத்து தன் தேவியை நோக்கியபின் சித்ரபாணன் “நானும் என் கனவில் அவளை பெண் என்றே உணர்ந்தேன்” என்றார். சித்ராங்கதை இதழ்களில் நாணப்புன்னகை தவழ விழி சரித்து “என் கனவுகளிலும் எப்போதும் நான் பெண்ணாகவே இருந்தேன் தந்தையே” என்று இனிய மென் குரலில் சொன்னாள். பட்டத்தரசி நகைத்தாள்.

“பெண்ணென தன்னை உணராத இவள் உடல் பெண்ணுருக்கொண்டு வந்த இளைய பாண்டவரை அறிந்த விந்தையை தெய்வங்களே அறியும்” என்றார் சித்ரபாணன். “அன்று சிவதையின் கரையிலிருந்த எல்லைப்புற ஊரிலிருந்து திரும்பியபோது இளவரசியின் உடல் பெண்ணென தன்னை அறிவித்தது. அதை சேடியர் என்னிடம் சொன்னபோது சினத்துடன் அரண்மனை மருத்துவரை அறிந்து உசாவினேன். அவர்கள் பிழை புரிந்தனர் என்றால் அக்கணமே கழுவேற்றவும் சித்தமாக இருந்தேன்.”

“ஏனென்றால் இளவரசி பிறந்த நாள் முதல் ஒவ்வொரு வாரமும் மருத்துவர்கள் அவளுக்கு பெண்மையை தவிர்த்து ஆண்மையை ஊட்டும் மருந்துகளை அளித்து வந்தனர். ஆண் குதிரையின் வெண்துளியை உயிருள்ள சிப்பியின் உடலில் வைத்து வளர்த்தெடுக்கும் மருந்து அது. பதினெட்டு வயது வரை அவளை உடலெங்கும் பெண்ணெனும் பாவனையே இல்லாமலே நிறுத்தியது அம்மருந்துகளின் வல்லமைதான். உடல் அறியாததை அவள் உள்ளமும் அறியவில்லை. ஒவ்வொரு நாளும் புறச்சூழல் அவளை ஆணென்றே நடத்தியதால் ஆணென்றே இருந்தாள். இன்றென்ன நடந்தது என கூவினேன்.”

“மருந்துகளும் மந்தணச் சொற்களும் உடலையும் உள்ளத்தையுமே ஆள்கின்றன. ஆன்மாவை ஆளும் தெய்வங்களுக்கான தருணம் ஒன்று வந்திருக்கலாம் அரசே” என்றார் முதுமருத்துவர். ஒற்றர்களை அனுப்பி அங்கு என்ன நடந்தது என்று கேட்டு வரச் சொன்னேன். ஃபால்குனை என்னும் பேரழகி அங்கு வந்ததைப்பற்றி மட்டும் அறிந்தேன். அவள் உள்ளத்தின் மந்தணச் சுனையைத் தொட்டு ஊற்றெடுக்க வைக்கும் ஒரு ஆணழகன் அங்கு வந்திருக்கலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவ்வாறல்ல என்று உணர்ந்தபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. கந்தர்வர்களோ தேவர்களோ காட்டில் இறங்கி வந்திருக்கலாம் என்றனர் நிமித்திகர்.”

“என் பட்டத்தரசியிடம் சொல்லி தன் மகளிடம் உரையாடச் சொன்னேன். சேடியரையும் செவிலியரையும் அனுப்பி அவள் உள்ளத்தை அறிந்துவர ஆணையிட்டேன். அவளுக்கே என்ன நிகழ்கிறது என்று தெரியவில்லை என்றும், ஐயமும் அதிர்ச்சியும் கொண்டிருக்கிறாளென்றும் சொன்னார்கள். இருண்ட தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கையில் அவள் இமை கசிந்து விழிநீர் வடிவதைக் கண்டு என்னிடம் சொன்ன செவிலி ‘அரசே, என் ஐம்பதாண்டு வாழ்க்கையில் நூறு முறை நான் கண்டது இது. காதல் கொண்ட இளம் கன்னியின் கண்ணீரேதான், பிறிதொன்றுமில்லை’ என்றாள்.”

“அக்காதலன் யார் என்று அறிந்துவா என்றேன். கன்னியே அறியாத காதலர்கள் அவளுக்கு இருக்கக் கூடும். அவள் சித்தமும் புத்தியும் அறியாமல் ஆன்மாவுடன் விளையாடிச் செல்லும் கந்தர்வர்கள் உண்டு என்றாள் அவள். மீண்டும் ஒற்றர்களை அனுப்பி உசாவியபோது ஃபால்குனை என்னும் அப்பெண் சிவதையின் கரையிலிருந்த எல்லைச் சிற்றூரின் குடியினர் அத்தனை பேரையும் ஆண்மை கொள்ளச் செய்திருப்பதை அறிந்தேன். அவர்கள் தாங்களே படைக்கலம் ஏந்திச் சென்று கீழ்நாகர்களை வென்றார்கள். அவள்தான் என்றது என் உள்ளம். என் அரசுக்குள் நேற்றுவரை இன்றி இன்று வந்தவள் அவளே.”

“அவளை நேரில் காண வேண்டுமென்று இங்கு வரச்சொன்னேன். பெண்ணெழில் கொண்டு இங்கு வந்து நின்ற அவளைக் கண்டபோது அவள்தான் என்று உறுதியாக அறிந்தேன். என் மகளை பெண்ணாக்கியது இப்பெண்ணழகை தானும் அடையவேண்டுமென்ற பெண்ணுடல் விருப்பா என்று குழம்பினேன். நாள் முழுக்க அவை அமர்ந்து நிமித்திகருடனும் அமைச்சருடனும் மருத்துவருடனும் உரையாடினேன். அவர்கள் இணையட்டும். இங்கு எது நிகழ வேண்டுமோ அதை தெய்வங்கள் நிகழ்த்தட்டும் என்றாள் அரசி. அவ்வண்ணமே ஃபால்குனையை இளவரசியின் வில்தொழில் ஆசிரியையாக அமர்த்தினேன்.”

அமைச்சர் நகைத்து “இளவரசியின் பெண்மையை அவர் எழுப்பினார். அவரில் ஆண்மையை இளவரசி எழுப்பினாள். சிவனும் சக்தியும் ஒருவரை ஒருவர் நிகழத்திக் கொள்கிறார்கள் என்கின்றன நூல்கள்” என்றார். அர்ஜுனன் அவையை வணங்கி “பிறிதொரு கோலம் கொண்டு இந்த அவை புகுந்தமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் பெண்ணுருக்கொண்டு இங்கு வந்தமையாலேயே அன்னை மணிபத்மையின் மண்ணை முழுதறியும் தகைமை கொண்டேன். பெண்ணென்று ஆகாதவன் புவியை அறிவதில்லை. முலை கொள்ளாதவன் படைப்பை உணர்வதில்லை. அம்முழுமை இங்கெனக்கு நிகழ்ந்தது” என்றான்.

“இளைய பாண்டவரே, உங்கள் கதைகளைக் கேட்டு எங்கள் மைந்தர் வளர்கிறார்கள். நீங்களே இங்கெழுந்தருளியது அன்னை மணிபத்மையின் அருள். ஓர் ஊரை வெற்றிகொள்ளும் வீரர்களென ஆக்கியபோதே உங்களை நான் உய்த்தறிந்திருக்கவேண்டும்” என்றார் சித்ரபாணன். “உங்கள் குருதியில் எங்கள் குலம் காக்கும் மாவீரன் எழட்டும். அவன் பெயரால் மணிபுரி என்றும் நூலோர் சொல்லிலும் சூதர் இசையிலும் வாழ்வதாக!” அர்ஜுனன் தலைவணங்கி “தெய்வங்கள் அருள்க!” என்றான்.

வந்தவன் இளைய பாண்டவன் என்னும் செய்தி பரவியபோது வெளியே படகுகளிலும் புதர்த்தீவுகளிலும் நின்றிருந்த மணிபுரியின் மாந்தர் துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். ஏரிநீரின் மீது பிறிதொரு அலையென உவகை கடந்துசென்றது. “இளைய பாண்டவர் அவர். இந்திரப்பிரஸ்தத்தின் தலைவர்” என்றான் ஒருவன். “பெண்ணென்றாகி நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.”

குலப்பாடகன் ஒருவன் கைகளைத் தூக்கி “அங்கு நிகழ்ந்தது என்ன என்று நானறிவேன். கொலைவில்லும் கண்களில் கூர்மையுமாக இளைய பாண்டவர் நம் எல்லைக்குள் நுழைந்தபோது யானைகளை குண்டலமாகவும் கழுத்துமாலையின் மணிகளாகவும் கொண்டு அன்னை மணிபத்மை அவர் முன் பேருருக்கொண்டு எழுந்தாள். என் மைந்தரின் மண் இது. உள்ளே அயலவனாகிய உனக்கு இடமில்லை என்றாள்” என்றான்.

எல்லோரும் அவனைச் சூழ்ந்தனர். “படைக்கலமேந்திய போர்வீரர் எவர் இவ்வெல்லை கடந்தாலும் அழிப்பதென்று எண்ணம் கொண்டுள்ளேன் என்று அன்னை மணிபத்மை அவரிடம் சொன்னாள். குட்டிகளுக்கு அருகே கண் துஞ்சாது கிடக்கும் அன்னைப்பெரும்பன்றி நான். கண்கனிந்து அவர்களை நக்கிக்கொண்டே இருப்பவள். ஆனால் அயலவன் காலடியோசை கேட்டால் முள்விரித்து விழி எரிய சினந்து எழுவேன். குடல் இழுத்து நீட்டுவேன். அகல்க! என்றாள்.”

“அன்னையை நோக்கி புன்னககைத்து தானறிந்த புருஷ மந்திரத்தால் தன்னை பெண்ணென்று ஆக்கிக்கொண்டார் விஜயன். தன்னுருவை அன்னை மணிபத்மையின் உருவமென்றே பூண்டார். இனி எனக்கு தடைகளில்லையே அன்னையே என்றபடி எல்லைகடந்து உள்ளே வந்தாள். அவள் எழில்கண்டு அன்னை புன்னகைத்து நீயே நான், இனி உன் குருதி இம்மண்ணில் விளையும் என்று மொழியளித்தாள்” என்றான் பாணன். “அன்னை மணிபத்மையே ஃபால்குனை என்னும் பேரழகுத்தோற்றம் கொண்டு இம்மண்ணுக்கு வந்தாள்.”

“அன்னை வாழ்க! அவள் கால்பட்ட இம்மண் வாழ்க! அவள் விழிதொட்ட எங்கள் குடிவாழ்க!” என்று கூவினர் மணிபுரியின் மக்கள். “அன்னை எழுந்தாள். அவள் அன்னை வடிவம்” என்று ஒருவருக்கொருவர் கூவிக்கொண்டனர். அன்னை மணிபத்மையின் ஆலயங்கள் அனைத்திலும் அன்று சிறப்பு பூசெய்கையும் பலிக்கொடையும் நிகழ்ந்தன. அன்னையின் காலடியில் வலப்பக்கம் அவளுடைய மானுடவடிவான ஃபால்குனைக்கும் மரத்தாலும் களிமண்ணாலும் சுண்ணக்கல்லாலும் ஆன அழகிய சிறிய சிலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கும் பூவும் மலரும் அளிக்கப்பட்டன.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்
அடுத்த கட்டுரைஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு