சாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி…

சச்சிதானந்தன்
சச்சிதானந்தன்

சாகித்ய அக்காதமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப அளித்திருக்கிறார்கள். அதைப்போல மற்ற எழுத்தாளர்களும் திரும்ப அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தி, அளிக்காதவர்களை அவமதித்து வசைபாடி ஒரு கும்பல் எழுதிக்கொண்டிருக்கிறது.

ஒரு சில எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருதை திரும்ப அளிப்பது ஒரு போராட்ட வடிவமாகத் தென்படுவதனால் அதை அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஜனநாயகத்தில் எந்தப்போராட்ட வடிவமும் மக்களிடம் ஒரு தரப்பை வலுவாக எடுத்துச்செல்வதேயாகும். இவ்வகையில் விருதுகளை திரும்ப அளிப்பதன் வழியாக அவர்கள் ஊடகங்களில் இடம்பெறுகிறார்கள், அச்செய்திவழியாக தங்கள் கருத்துநிலையை, எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். எல்லா வகையிலும் அது ஒரு ஏற்கத்தக்க போராட்ட வடிவமே

ஆனால் இதில் எந்த வகையான மனமயக்கங்களுக்கும் இடமிருக்கவேண்டியதில்லை. ஒன்று இது ஒன்றும் தியாகம் அல்ல. சாகித்ய அக்காதமி விருது பெறும்போது இவர்களுக்குக் கிடைத்தவை என்னென்ன? ஒன்று ஊடகக் கவனம் மற்றும் இலக்கிய முக்கியத்துவம். இரண்டு, இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் வாய்ப்பு. மூன்று பணம். இவற்றில் எவற்றையும் இப்போது இவ்விருதை துறப்பதனால் இவர்கள் இழக்கப்போவதில்லை.ஊடகக் கவனத்தைப்பொறுத்தவரை ஏற்றபோது அடைந்ததற்கு மேலாகவே அடைகிறார்கள்.

அத்துடன் அன்றுமுதல் இன்றுவரை சாகித்ய அக்காதமி அரசியல் சார்ந்ததாகவே இருந்தது, இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிவர். அன்றைய அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களே அதில் பதவிகளில் அமர்ந்தனர். இன்றுள்ள அதிகாரவர்க்கத்துக்கு நெருக்கமாகி பதவிகளில் அமரத்தவிக்கின்றார்கள்.

1

தங்கள் அதிகாரப்பின்புலம் இல்லாமலாகிப்போனதை நயனதாரா செகலும், சச்சிதானந்தனும் உணர்ந்தே இருப்பார்கள். இந்த அரசு வந்ததும் பழைய அதிகார அமைப்பைச் சார்ந்தவர்களை தொடர்ச்சியாக வெளியே தள்ளி தங்களவர்களை நியமித்துவருகிறார்கள். ஆகவே இந்த எதிர்ப்பு முற்றிலும் அரசியல் சார்ந்தது. பல்லாயிரம் சீக்கியர் டெல்லித் தெருக்களில் கொல்லப்பட்டபோது இவர்கள் ஏன் பரிசைத் துறக்கவில்லை என்ற கேள்விக்கே இடமிலை, இது இவர்களின் தெளிவான அரசியல். அதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இங்குள்ள முக்கியமான சிக்கல் இலக்கியவாதிகளை நோக்கி வரும் வசைகள்தான். இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் எந்த மதிப்பும் இல்லாதவர்கள், எவ்வகையிலேனும் அவர்களை அவமதிக்க வாய்ப்புதேடி அலைபவர்கள் இத்தருணத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பச்சோந்திகள் சுயநலவாதிகள் என்று வசைபாடுகிறார்கள். அதன் வழியாக தங்களைப் பெரும் போராட்டக்காரர்களாகச் சித்தரித்துக்கொள்கிறார்கள்.

எந்த ஒரு நூலையும் வாசித்து நாலுவரி எழுதும் தகுதி அற்றவர்கள் இலக்கியவாதிதான் கேடுகெட்ட சுயநலமி என்று கூவிக்குதிக்கிறார்கள். இதில் வெறும் சில்லறைபொறுக்கும் நோக்குடன் ஊழலில் மூழ்கிய அரசியல்கட்சிகளுக்கு அடியாளாகப்போன இலக்கியவாதிகளின் ‘தார்மீகக்’ கோபத்தைக் காண சிரிப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

இலக்கியவாதிகளில் பலவகையினர் உண்டு. அரசியலீடுபாடுள்ளவர்கள் உண்டு. அரசியலையே உள்வாங்காதவர்களும் உண்டு. எழுத்தாளர்களின் தேடல் அவர்களின் இயல்பு சார்ந்தது. முற்றிலும் தத்துவார்த்தமான அல்லது உணர்வுசார்ந்த உலகங்களில் மட்டும் வாழும் இலக்கியவாதிகள் உலகமெங்கும் உண்டு. அன்றாட அரசியலுக்கு அப்பால் ஆர்வமில்லாதவர்கள் நாலாபுறமும் சூழ்ந்து நின்று இலக்கியவாதிகளை தெருமுனை அரசியலுக்கு இழுத்து கூச்சலிடும் அவலம் வேறெங்கும் உண்டு என தோன்றவில்லை.

இங்குள்ள ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஒவ்வொரு பத்துநாளுக்கும் ஒருமுறை ஒரு புதிய விவாதத்தை கிளப்புகிறார்கள். இலக்கியவாதியின் தேடலும் உணர்வுநிலைகளும் அவற்றை மட்டுமே சார்ந்து இருந்தாகவேண்டும் என்பதில்லை. தன் கவனம் எங்கு குவியவேண்டும் என்பதை அவனே முடிவுசெய்யவேண்டும். அதற்காக முழு புறவுலகையும் அவன் முற்றாகத்தவிர்த்தால்கூட அது இயல்பே.

இன்று ஓர் இலக்கியவாதி இசைக்கும் மொழிக்குமான உறவைப்பற்றி மட்டும் இருபதாண்டுக்காலம் சிந்த்தித்து எழுத முடியும் என்றால், அதற்கான இடமும் வசதியும் அவனுக்குண்டு என்றால், அவனுக்குரிய அங்கீகாரம் அவனைத் தேடிவரும் என்றால் மட்டுமே இங்கே இலக்கியம் உள்ளது என்று பொருள். இலக்கியவாதியை சில்லறை ஆசாமிகளின் கட்சியரசியல் நோக்கங்கள்தான் வழிநடத்தவேண்டும் என துடிப்பது போல கேவலம் பிறிதொன்றில்லை.

இவர்கள் வாராவாரம் போடும் கூச்சல்களில் ஈடுபட்டு இவர்களின் அரசியலுக்கேற்ப உடனடியாக நிலைப்பாடு எடுத்து கருத்துச்சொல்லும் கட்டாயத்தை இலக்கியவாதிகள் மேல் சுமத்துவோம் என்றால் அதன்பின் இங்கே இலக்கியமே இல்லை. நயன்தாரா செகலோ சச்சிதானந்தனோ சாரா ஜோசப்போ அரசியல்வாதிகளும் கூட. அவர்கள் இதையெல்லாம் செய்யலாம். எழுத்தாளன் அவனை ஆட்கொண்டுள்ள சவாலிலேயே இருப்பான். சிலர் வெளியேவந்து பேச லாம். சிலர் மௌனமாக இருக்கலாம். அது அவர்களின் தெரிவு

நான் அறிந்த பல தமிழ் எழுத்தாளர்களால் மிகச்சிறிய விவாதங்களைக்கூட தாளமுடியாது. சாதாரணமான மறுகருத்துக்களைக்கூட அவர்கள் எண்ணி எண்ணி ஏங்குவதை, நிலைகுலைவதைக் கண்டிருக்கிறேன். விவாதங்களைத் தவிர்ப்பதற்காகவே எங்கும் குரலெழுப்பாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலெழுப்பும் முறை அவர்களின் எழுத்தே. பலசமயம் அதுவே பலசுவர்களில் முட்டி எதிரொலிகளாகவே எழுகிறது, அவர்களே அறியாமல். இதெல்லாம் கலையின் மாயவழிகள். எழுத்தின் இயல்புகளையும் சாத்தியங்களையும் அரசியல் சில்லுண்டிகளால் உணர முடியாது.

சாகித்ய அக்காதமி விருது என்பது அரசால் அளிக்கப்படுவதல்ல. அதைப்பெற்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளோ அவ்விருது அரசியலுக்காக அளிக்கப்பட்டதோ அல்ல.அவ்விருது ஒரு நடுவர் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு ஒரு காலகட்டத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது. அதை நிராகரிக்கையில் எவ்வகையிலோ அந்த நடுவர்களும் அவ்விருதை ஏற்றுப்பாராட்டியவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். அதை காங்கிரஸோ அன்றைய அரசோ அளித்தது என எண்ணுபவர்கள்தான் இன்று அதை நிராகரிக்கும் படி அறைகூவுகிறார்கள்.

இந்த அற்ப அரசியல்வாதிகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க இலக்கியவாசகனால் முடியவேண்டும். இலக்கியவாதிகள் அவர்களின் உலகில் வாழட்டும். அரசியலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. உங்கள் நிபந்தனைகளை அவர்கள்மேல் சுமத்தவேண்டாம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்-ஒரு மகத்தான கனவு