‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29

பகுதி மூன்று : முதல்நடம் – 12

கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால் வளைக்கப்பட்ட அந்நிலத்தில் மண்தோன்றிய காலம் முதலாக மானுடர் காலடி பட்டதில்லை. எனவே விண்வாழும் தேவர்களும் இருள் வாழும் பெருநாகங்களும் வந்து விளையாடி மீளும் களியாட்டுச் சோலை என அது திகழ்ந்தது.

பளிங்கு ஊசிகள் போல் இறங்கி மண் தொட்டு நின்று அதிரும் பல்லாயிரம் கால்களுடன் சூரியன் அக்காட்டை கடந்து செல்லும்போது ஒவ்வொரு சாய்வுக்கும் ஒரு நற்தருணமென வகுத்து விண்ணவரும் பிறரும் அங்கிறங்கி களித்து மீண்டனர். அங்கு கனிகள் அனைத்தும் மதநீரின் இனிய நறுமணம் கொண்டிருந்தன. வெயில் பட்ட இலைப்பரப்புகள் வேட்கையில் சிவந்த பெண் உடலென மிளிர்ந்தன. அவர்களின் வெம்மை மிக்க மூச்சென காற்று அங்கு உலாவியது. ஈரமண்ணில் பட்ட கதிரவனின் ஒளி விந்துவின் நறுமணமென ஆவியெழச் செய்தது. தேவர்களின் விந்துத் துளிகள் விழுந்து முளைத்தெழுந்த வெண்காளான்களால் நிறைந்திருந்தது அக்காடு.

மகரராசியில் கதிரவன் புகும் முதற்தருணத்தை காண விழைந்த அம்மையுடன் கயிலை நின்றாடும் ஐயன் கீழ்த்திசை காண வந்தான். மேருவுக்கு மேல் செவ்வொளியும் நீலப்பேரொளியுமென எழுந்து இருவரும் மணிநீலவட்டம் சுடர்ந்தெரிய செம்மை சூழ்ந்து திளைத்தாட ஏழுவண்ண புரவிகள் இழுத்த ஒளித்தேரிலேறிச் சென்ற வெய்யோனை கண்டனர். “நலம் வாழ்க!” என்று வாழ்த்தி மீளும்போது அம்மை தன் ஓர விழியால் காமிதத்தை கண்டாள். அங்கிருந்து எழுந்த காமத்தின் நறுமணத்தால் ஏதென்றறியாது நாணி முகம் சிவந்தாள்.

அவளில் எழுந்த நறுமணத்தை அறிந்து விழி திருப்பி புன்னகைத்த சிவன் “அதன் பெயர் காமிதம். அங்கு தேவரும் தெய்வங்களும் நாகங்களும் வந்து காமம் கொண்டாடி மகிழ்கின்றனர்” என்றார். சினந்து விழி தூக்கி “நான் ஒன்றும் அதை குறித்து எண்ணவில்லை” என்றாள் அவள். நகைத்து “ஆம், நீ எண்ணவில்லை என்று நானும் அறிவேன். எண்ணியது நான்” என்றபடி சிவன் அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்து “ஆகவே நாம் மண்ணிறங்கி அங்கு சென்று ஆடி மீள்வோம்” என்றார். அவர் கையைப்பிடித்து உதறி சினந்து “நான் சொல்வதென்ன? நீங்கள் புரிந்து கொண்டதென்ன? மைந்தரைப்பெற்று இவ்வுலகாக்கி விழிமூடாமல் இதை ஆளும் எனக்கு காமம் கொண்டாடுவதற்கு நேரமும் இல்லை. மனமும் இல்லை. நான் இங்குள அனைத்திற்கும் அன்னை” என்றாள்.

“நல்ல காமத்தை அறிந்தவரே நல்ல அன்னையராகிறார்கள். எனவே நல்ல அன்னையர் நல்ல காமத்திற்குரியவர்” என்றார் சிவன். “என்னை சினம் கொள்ளச் செய்வதற்கென்றே வீண்பேச்சு பேசுகிறீர்கள். இனி ஒரு கணம் இங்கிருந்தால் நான் நாணற்றவள் என்றே பொருள்” என்று சீறி அவர் நெஞ்சில் கை வைத்து உந்தித் தள்ளி அவ்விரைவில் குழல் பறந்து முதுகில் சரிய நூபுரங்கள் ஒலிக்க மணிமேகலைகள் குலுங்க அன்னை நடந்து சென்றாள். பின்னால் சென்று நழுவிய அவள் மேலாடையின் நுனியைப்பற்றி கையில் சுழற்றி தன் உதடுகளில் ஒற்றி “என்ன சினம் இது? ஈரேழு உலகங்களை ஈன்றாலும் என் கண்ணுக்கு நீ கன்னியல்லவா? உன்னிடம் காமம் கொள்ளாது இருப்பதெங்ஙனம்?” என்றார்.

சிவந்த முகத்தை குனித்து இதழ் கடித்து நகையடக்கி “போதும் வீண்பேச்சு. இன்னும் இளையோன் என நினைப்பு. ஈன்ற மைந்தர் தோளுக்குமேல் எழுந்துவிட்டனர்” என்றாள் சக்தி. சிவன் “இக்காமிதக் காட்டை கடந்து என்னால் வரமுடியவில்லை. இவையனைத்தும் பிறப்பதற்குமுன் இளம் கன்னியென நீ இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் மீள்கின்றன. பிறிதொருமுறை உன்னை அப்படி பார்க்க மாட்டேனா என்று அகம் ஏங்குகிறது” என்றார். கனிவு எழுந்த விழிகளால் அவரை நோக்கி “அவ்விழைவு தங்களுக்கு உண்டென்றால் அதை தீர்க்கும் பொறுப்புள்ளவள் அல்லவா நான்?” என்றாள் சக்தி.

“அதைத்தான் உன் இடை வளைத்து கேட்டேன்” என்றார் சிவன். “இல்லை, அதை கேட்கவில்லை. நீங்கள் பேசியதே வேறு” என்றாள் அன்னை. “எடுப்பது தங்கள் உரிமை. கொடுப்பது என் கடமை. அதை மட்டும் சொல்லியிருந்தால் போதுமே” என்றாள். “இப்போது சொல்கின்றேன், போதுமா?” என்று சிவன் அவள் கைகளை பற்றினார். காமம் நிறைந்த அவர் விழிகளை நோக்கி “நெடுங்காலம் நுரைத்த காமம் போலும்… தொல்மது என மயக்கு அளிக்கிறது” என்றாள் அன்னை. அவள் குறும்புச் சிரிப்பை நோக்கி “ஆயிரம் யுகங்கள்” என்று சிவன் சொன்னார். “வா, நமக்காக காத்திருக்கிறது காமிதம்.”

முகிலலைகளை படிகளாக்கி இருவரும் இறங்கி காமிதத்திற்கு வந்தனர். இரு சிறு வெண்புழுக்களாக மாறி புரியென ஒருவரையொருவர் தழுவி சுருண்டதிர்ந்து சித்தமற்ற பெருங்காமத்தை நுகர்ந்தனர். சிறு வண்டுருவாக மண் துளைத்துச் சென்று ஒருவரை ஒருவர் துரத்தி பற்றி ஆறு கால்களால் பின்னி ஒருவரை ஒருவர் கடித்து இறுக்கி ஓருடலாகி ரீங்கரித்து பறந்தெழுந்தனர். நா பறக்க சீறி பல்லாயிரம் முறை முத்தமிட்டு உடல் பிணைத்து நாகங்களாயினர். மான்கள் என துள்ளி குறுங்காடுகளை புதர்களைக் கடந்து பாய்ந்து மகிழ்ந்தனர்.

விழி மருண்டு நின்ற மடமான் இணை அருகணையும் வரை காத்து பின் தாவி கடந்து சென்றது. பெண்மையின் மென்மையே அவளுக்கு துள்ளலின் ஆற்றலாகியது. ஆண்மையின் தவிப்போ உடல் எடை மிகச்செய்து மூச்சிரைக்க வைத்தது. காடெங்கும் துரத்தி பற்றி தழுவிக் கொண்ட அக்கணமே அவரை உதைத்துத் தள்ளி நகைத்து மீண்டும் பாய்ந்தாள். நடை தளர்ந்து நுரை வாயில் ததும்ப விடாது தொடர்ந்தது மான்களிறு. தெளிந்த காட்டுச் சுனையருகே சென்றதும் அதில் எழுந்த நீர்ப் பாவையைக் கண்டு மயங்கி அருகே சென்று மூச்சு எழுப்பிய சிற்றலைகளில் நெளிந்த தன் முகம் கண்டு உடல் விதிர்த்து அசையாது நின்ற பிடியை புன்னகையுடன் மெல்ல பின்னால் அணைந்து தழுவி ஒன்றானது ஏறு.

தோகை மயிலென ஆகி மரக்கிளையிலிருந்து இறங்கி பீலி விரித்து ஓராயிரம் விழிகளைத் திறந்து அவளை நோக்கி அதிர்ந்தார். ஒரு நோக்கில் நாணுபவள் போல ஒசிந்தாள். மறு நோக்கில் ஊதப்பட்ட செங்கனல் போல் சிவந்து சீறினாள். பிறிதொரு நோக்கில் சரடு இழுத்த பாவையென அருகணைந்து அவரை தழுவிக் கொண்டாள்.

மத்தகம் குலுக்கி வெண்தந்தம் தூக்கி வந்த பெருங்களிறாக வந்தார். கருமுகிலென இடியொலி எழுப்பி அருகணைந்து அவருடன் மத்தகம் முட்டி அதிர்ந்து அசைவிழந்து நின்றாள். துதிக்கை பிணைத்து சுற்றி வந்தனர். பெருமரங்கள் குடை சரிய பாறைகள் உருண்டு சரிந்தோட காட்டை கலக்கி நிகர்வலு கொண்டு அசைவிழந்து ஒருவரை ஒருவர் அறிந்தனர்.

சிறகடித்து மரக்கிளையிலிருந்து எழுந்து இணைச்சிறகு விரித்து ஒளி நிறைந்த காட்டை சுற்றி வந்தனர். காற்றிலாடும் சிறுசில்லையில் அமர்ந்து ஐயன் வசந்தத்தின் காதல் பாடலை மீட்ட புள்ளிச்சிறகு குவித்து குமிண் சிரிப்புடன் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அன்னை கேட்டிருந்தாள்.

செம்பருந்தென எழுந்து சூரியனை எதிர்கொண்டு பொன்னாகி அவன் சுற்றி வர மண்ணிலிருந்து எழுந்து அவன் அருகே சென்று அந்நிழலை தன் முதுகில் வாங்கி கீழே சுற்றி வந்தாள் அன்னை. மேலிலாத கீழிலாத வெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். நான்கு சிறகுகளால் காற்றைத் துழாவி பறந்து அமைந்தது புதிய பறவை.

நூறு உடல் கொண்டு முயங்கி விலகி நிறைவின்மையை உணர்ந்து மீண்டும் பொங்கி மீண்டும் முயங்கி உச்சம் கண்டு அவ்வுச்சத்தில் கால் வைத்தேறி மறு உச்சம் அடைந்து இன்னும் இன்னுமெனத் தவிக்கும் அகத்தை உணர்ந்து இதுவோ இதுவோ என்று வியந்தனர்.

பருகும் தோறும் விடாய்மிகும் நீர். எரிந்தெழுந்தாலும் கருகி அணைக்காத அனல். உண்டு தீராத தேன். முடிவற்ற பேரிசை. ஆயிரம் காலங்கள் கடந்திருந்தன. அவர்கள் காமம் கொண்டாடிய காடு பல்லாயிரம்முறை பூத்து தழைத்து செறிந்து பொலிந்தது. அவர்கள் காமம் காண்பதற்கென்று விண்ணிலும் மண்ணிலும் வியனுருக்கள் விழி என்றாகி வந்து நிறைந்தன.

இரு நுண்ணணுக்களாக மாறி நீரில் நொடித்து காமம் களித்தனர். பெரும் பசி கொண்டு ஒன்றை ஒன்று விழுங்கின கையற்ற காலற்ற விழியற்ற செவியற்ற வாயும் வயிறும் பசியும் மட்டுமேயான வெற்றுடல்கள். ஒன்றை ஒன்று உண்டு பசி தீர்த்தன. முற்றிலும் நிகர் நிலையில் காலம் மறைந்து சமைந்தன. விலகி விடிந்த வெறும்வெளி காலப்பொழுதில் தன்னை உணர்ந்த அன்னை நீள் மூச்சுடன் “ஆம், இது காம முழுமை” என்றாள். நகைத்தபடி அவளருகே எழுந்த சிவன் “ஆம், இனி ஒன்றில்லை” என்றார்.

“பிரம்மனை அழைத்து இக்கணமே அவனெண்ணிய முழுமையா என்று கேட்போம்” என்றார். கயிலைக்கு வந்து வணங்கி நின்ற பிரம்மன் “தங்கள் ஐயத்தை அறிந்தேன். இறைவா, தாங்கள் இருவரும் அறிந்தது மாமலையின் ஒரு பக்கத்தை மட்டுமே” என்றார். “மண்ணிலுள்ள அத்தனை உயிர்களாகவும் காமம் களியாடி மீண்டிருக்கிறோம். இனி பிறிதெது?” என்று சினந்தார் சிவன். “அத்தனை உயிர்களிலும் ஆணில் நின்றாடியிருக்கிறீர்கள் ஐயனே. ஆணறியும் காமமன்றி பிறிதெதை அறிந்தீர்கள்?” என்றார் பிரம்மன்.

தேவியை நோக்கி “பெண் அறியும் காமத்தை மட்டுமே தாங்களும் அறிந்துள்ளீர்கள் தேவி” என்றார். சிவன் சினந்து “அவ்வண்ணமெனில் அதுவே அறிதலின் எல்லை என்று கொள்க! செல்” என்றார். தலை வணங்கி பிரம்மன் சென்றதும் தேவி தலைகுனிந்து அசைவற்று நிற்கக் கண்ட சிவன் “சினந்தாயா? மூவரில் சிறியோன் அவன். அவன் சொல்லை பொருட்டாக எண்ணாதே. விடு” என்றார். “இல்லை, அவர் சொன்னது சரியென்று உணர்கிறேன்” என்றாள் அன்னை.

“என்ன சொல்கிறாய்? சக்தியென்றும் சிவமென்றும் நீயும் நானும் கொள்ளும் இருமையால் ஆக்கப்பட்டுள்ளது புடவி எனும் பெரும் படைப்பு. ஊடு பாவு அவிழ்வதென்றால் இந்நெசவு அழிவதென்றே பொருள்.” சினத்துடன் விழி தூக்கிய அன்னை “எச்சொற்களையும் நான் வேண்டேன். நான் விழைவது முழுக்காமம்” என்றாள். “எழுந்தபின் கனியாது அணைவதல்ல பெண்ணின் காமம் என்று அறியாதவரா நீங்கள்?”

“தேவி” என்று சொல்லெடுத்த இறைவனை நோக்கி கை நீட்டி “பேச வேண்டாம். என் விழைவு அது மட்டுமே” என்றாள். அழகிய வனமுலைகள் எழுந்தமைந்தன. குளிர் வியர்வை கொண்டது கழுத்து. மூச்சில் முகம் ஊதப்படும் பொன்னுருக்கு உலையென சுடர்ந்தணைந்தது. “உலகு புரக்கும் அன்னை நீ. அதை மறவாதே. ஆணென்றாகி நீ அக்கருணையை அழித்தால் என்னாகும் இப்புடவிப்பெருவெளி?” என்றார் சிவன். “அன்னையென்றானதால்தான் இப்பெரும் காமம் கொள்கிறேன். இனி இது கடக்காது ஒரு கணமும் இல்லை” என்றாள். அவள் தோளைத்தொட வந்த சிவனின் கையை தட்டி மாற்றி “இக்கணமே” என்றாள். பெரு மூச்சுடன் “எனில் அவ்வாறே ஆகுக!” என்றார் சிவன்.

காமிதவனத்தில் சிவன் நுதல்விழியும் செஞ்சடையும் குழல் கற்றைகளும் மகர நெடுங்குழை ஆடும் செவிகளும் மானும் மழுவும் சூலமும் துடியும் எனக்கொண்டு வந்து நின்றார். அவர் காலின் கட்டைவிரல் நெளிந்து தரையில் சுழன்றது. கணுக்கால்கள் குழைந்து மென்மை கொண்டன. தொடை பெருத்து, இடை சிறுத்து, பின்னழகு விரிந்து, முலைகள் எழுந்து குவிந்து, தோள்கள் அகன்று வில்லென வளைந்து, மென்புயங்கள் தழைந்து, தளிர் விரல்கள் மலர்மொக்குகளென நெளிந்து, கழுத்தின் நஞ்சுண்ட நீலக்கறை மணியொளி கொண்டு கன்னங்கள் நாணச்செம்மை பூண்டு, குறுநகை எழுந்த இதழ்கள் குவிந்து, நாணம் கொண்ட கண்களின் இமைசரிந்து சிவை எனும் பெண்ணாகி நின்றார்.

அருகே நீலஒளி கொண்ட உடலும் இமையா நீள்விழிகளும் பாசமும் அங்குசமும் சூலமும் விழிமணி மாலையும் கொண்டு நின்ற மலைமகள் விழிகளில் நாணம் மறைந்து மிடுக்கு கொண்டாள். கூர் மூக்கு நீள அதற்கு அடியில் கரிய குறுவாளென மீசை எழுந்தது. குறும்பு நகைப்பெழுந்த இதழ்கள். கல்லென இறுகி விம்மி புடைத்தெழுந்தன தோள்கள். முலை மறைந்து மென்மயிர் பரவல் கொண்டு புல்முளைத்த மலைப்பாறை என்றாயிற்று மார்பு. அடிமரங்களென நிலத்தில் ஊன்றின கால்கள். சக்தன் என்று அவன் தன்னை உணர்ந்தான்.

சிவையை நோக்கி சக்தன் கை நீட்ட நாணி அக்கையை தட்டிவிட்டு விழி விலக்கி துள்ளி பாய்ந்தோடினாள் சிவை. இரும்புச் சங்கிலிகள் குலுங்கும் ஒலியில் நகைத்தபடி அவளைத் தொடர்ந்து ஓடினான் சக்தன். பாய்ந்து நீரில் இறங்கி மூழ்கி விலாங்குமீனாக மாறி நெளிந்து அவள் மறைய தொடர்ந்து வந்து குதித்து பிறிதொரு மீனாக மாறி அவளை தொடர்ந்தான். நீர் நெளிந்து அவர்களை சூழ்ந்தது. கவ்வித்தழுவி புல்கி ஒருவர் பிறரை உணர்ந்தனர். புல்லாக, புழுவாக, வண்டாக, பாம்பாக, மானாக, மயிலாக, களிறாக, சிம்புள்ளாக, செங்கழுகாக காமம் ஆடினர்.

பின்பு இளஞ்சேறு படிந்த சுனைக்கரையில் காமத்தில் கனிந்த சிவையின் உடலை விழைவு நிமிர்த்த தன்னுடலால் அறிந்து இறுகி புதைந்து கரைந்து மறைந்தான் சக்தன். ஒன்றை ஒன்று விழுங்கி உச்ச கணத்தில் அசைவிழந்தன இரு அணுக்கள். ஒன்றான அவ்வணுவை தன் சுட்டு விரலால் தொட்டெடுத்து கண் முன் நோக்கி பிரம்மன் சொன்னான் “இது முழுமை.”

சக்தனும் சிவையும் இணைந்து அடைந்த காமத்தில் பிறந்தவள் காணபத்யை என்னும் பெண் தெய்வம். செவிகள் விரிந்த யானைமுகமும் பண்டி பெருத்த குற்றுடலும் கொண்டவள். மழுவும் பாசமும் ஏந்தி அவள் காமிதத்தின் நடுவே மலை ஒன்றில் கோவில் கொண்டாள். அவளுக்கு இளையவள் கௌமாரி. நீள்விழியும் மென்னகையும் பொன்னொளிர் திருமுகமும் கொண்ட சிறுமி. வேலேந்தி மயிலமர்ந்து தன் தமக்கை அருகே அவள் கோயில் கொண்டாள். காணபத்யையும் கௌமாரியும் காமிதத்தின் தனித்தெய்வங்களென்று அங்கிருந்த உயிர்கள் வழிபட்டன.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நதி கடந்து அக்காட்டில் கால் வைத்த முதல் முனிவர் அத்தெய்வங்களை கண்டுகொண்டார். அவர்களை கொண்டுவந்து மணிபுரி நாட்டின் வடகிழக்கு எல்லையில் இருந்த கௌமாரவனத்திலும் காணபத்யவனத்திலும் பதிட்டை செய்தார். மணிபுரத்தின் வசந்தமெழும் வனங்களில் எல்லாம் அவ்விரு பெண்தெய்வங்களும் கோவில் கொண்டிருந்தன.

பெருமழை காடு மூடி பெய்யும் காலத்திலும், பனி இறங்கி காடு திரையிடப்பட்டிருக்கும் போதும் அத்தெய்வங்களை எவரும் எண்ணுவதில்லை. இளவேனில் எழுந்து இலையுதிர்த்த மரங்கள் தளிர்கொள்ளும்போது சிறு துடி எடுக்கும் பாணனின் முதற் சொல்லில் இருந்து முளைவிட்டெழுந்து வருவார்கள் அவர்கள். களிமண்ணிலும் மென் மரத்திலும் அவர்கள் உருவங்களை அமைத்து ஏழு வண்ணங்களில் அணிசெய்து களித்தேரில் அமர்த்தி தெருக்களில் இழுத்து வந்து கொண்டாடுவார்கள். இளையோரும் மகளிரும் அதை சுற்றி கோலாடியும் வண்ணத் துணி வீசி நடனமாடியும் மகிழ்வார்கள்.

பாணர் சொல்லில் காமநோயுற்றெழும் காலம். வயல்களில் உறைந்த விதைகள் உயிர் கொண்டு உறைபிளந்து புன்னகைக்கும் காலம். வசந்தம் மணிபூரக நாடெங்கும் காமனும் தேவியும் இறங்கி களி கொண்டாடும் பருவம். அன்று ஒவ்வொரு உயிரும் சிவையும் சக்தனுமென ஆகும். காதலின் உச்சத்தில் சிவசக்தியென உருமாறும்.

லோகதடாகத்தின் வடக்கு எல்லையில், கரைச்சதுப்பு ஏறிச்சென்று இணைந்த நாணல் சரிவுக்கு அப்பால், குறுங்காடு எழுந்து பரவி வளைந்து முகில்சூடி நின்ற மலைகளின் அடிவாரத்தை அணுகியது. நீலப்பச்சை இலைத்தழைப்பு கொண்ட தேவதாரு செறிவாக மாறியது. குறுங்காட்டின் நடுவே நிரைவகுத்து நின்ற ஏழு தொன்மையான தேவதாருக்களின் கீழே காணபத்யையும் கௌமாரியும் இருபக்கமும் நின்றிருக்க நடுவே சக்தனும் சிவையும் அமர்ந்து அருள் செய்த சிற்றாலயம் இருந்தது.

மலைக்கற்களை அடுக்கிக் கட்டி மேலே மூங்கில் கூரையிட்ட ஆலயத்தின் உள்ளே கருங்கல் பீடத்தின்மேல் அமர்ந்திருந்த சிலைகள் முன்பு எப்போதோ சுண்ணமென்கல்லில் செதுக்கப்பட்டவை. காற்றும் நீரும் வழிந்தோடி உருவம் கரைந்திருந்தாலும் அவற்றின் விழிகளில் உயிர் இருந்தது. சருகை மிதித்து எவரோ வரும் ஒலியை கேட்ட சக்தன் சிவையிடம் புன்னகைத்து “அவர்கள்தாம்” என்றார். “முழுமை” என்று அவள் சொல்லி நாணினாள்.

ஆடையற்ற உடலுடன் அர்ஜுனன் சித்ராங்கதையை இடைசுற்றி அணைத்துக் கொண்டு அங்கே வந்தான். காய் பெருத்த கொடி என அவன் தோளில் குழல் சரித்து தலைசாய்த்து உடன் நடந்து வந்தாள் அவள். குறுங்காட்டின் சருகு மெத்தையில் அர்ஜுனனில் இருந்த ஃபால்குனையை அவள் அறிந்தாள். சித்ராங்கதையை அவன் அணைந்தான். பொழுது நிறைந்த மணல் கடிகை தன்னை தலைகீழாக்கிக்கொள்வது போல காமநிறைவின் கணத்தில் மீண்டும் அவர்கள் உருமாறினர். சித்ராங்கதையுடன் இருந்த அர்ஜுனன் ஃபால்குனையை அவளில் உணர்ந்தான். அவனில் எழுந்த சித்ராங்கதனில் திளைத்தாள் அவள்.

பெண்ணென திகழ்ந்தும் ஆணென எழுந்தும் உருமாறினர். தன் வாலை தானுண்டது நாகத்தின் செவ்வாய். ஒன்று மென்மை ஒன்று கடினம். ஒன்று நீர் ஒன்று தழல். ஒன்று வான் ஒன்று மண். ஒன்று கொடை ஒன்று நிறைவு. ஒன்று பெரிது. ஒன்று சிறிது அது பெரிது பிறிது சிறிது.இரண்டும் என்றான ஒன்று. இரண்டென எழுந்து இங்கு நடிப்பது. இரண்டுக்கும் அப்பால் நின்று துடிப்பது. ஒன்றுளது. இரண்டுளது. ஒன்றில் எழுந்த இரண்டு. இரண்டறியும் ஒன்று. அதை சிவசக்தி என்றனர். சக்தசிவை என்றனர். ஆம் என்றனர். அதுவே என்றனர்.

முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு விவாதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் முன்னுரை பற்றி