செய்தி பிபிஸி : உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன?
நேற்று எனக்கு அனுப்பப்பட்ட ஒரு காணொளித்துணுக்கு உண்மையில் ஒரு கணம் கொந்தளிக்கச்செய்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை நோக்கியபோது அது போலீஸாரின் தாக்குதல் அல்ல என்பது கண்கூடாகவே தெரிந்தது. நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் தனியாக நின்று கூச்சலிடுகிறாள். தன் ஆடையை அணியவோ நிர்வாணத்தை மறைக்கவோ அவள் முற்படவில்லை. அவளை ஒருவன் பற்றியிருக்க அவனை இழுத்துச்செல்கிறார்கள் போலீஸார்
ஆனால் அதற்குள் அதே காணொளியுடன் எனக்கு கடிதங்கள் வரத்தொடங்கின. ஃபேஸ்புக்கில் ‘இந்தியா நாசமாகப்போகட்டும்’ ‘இந்த தேசம் உலகிலேயே அழுகிய தேசம்’ ‘இந்த தேசத்தின் முகத்தில் காறி உமிழ்கிறேன்’ என்றெல்லாம் வெறுப்பைக் கக்கி எழுதிக்குவிக்கிறார்கள் என்று அறிந்தேன். தனித்தமிழ்நாடு கிடைக்கும்வரை இந்தக்கொடுமை இருக்கும் என ஒரு தரப்பு கூத்தாடியது
அதற்குள் அந்த முழு காணொளியையும் ஒருவர் அனுப்பினார். அதில் அந்த ஆண் நிர்வாணமாக நின்றபடி தன்னுடன் வந்த பெண்களின் ஆடைகளை இழுத்து உருவுகிறான். ஒருபெண் உடையைப்பிடித்து இழுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முயல அவளை நிர்வாணப்படுத்துகிறான். இன்னொருத்தியை நிர்வாணப்படுத்தும்போது அவள் அலறியபடி தரையில் அமர்ந்து தடுக்கிறாள். ஆனால் அவன் அவளை நிர்வாணப்படுத்திவிடுகிறான்.
போலீஸார் அவனைத் தடுக்கமுயல்கிறார்கள். போலீஸார் அவனை அடித்து இழுத்துச்செல்ல நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணையும் இழுத்தபடி அவன் நகர்கிறான். அவர்களை போலீஸ் இழுத்துச்செல்ல முதலில் நிர்வாணமாக்கப்பட்ட பெண் குறுக்கே புகுந்து கூச்சலிடுகிறாள்.
உண்மையில் சுனில் கௌதம் என்பவர் தன் பைக் காணாமல் போய்விட்டது என்று காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சினம் கொண்ட அவர் காவல் நிலையம் முன்னால் தன் வீட்டுப்பெண்களை இழுத்துவந்து நிர்வாணமாக்கி கூச்சலிட அவரை காவலர் பிடித்து அகற்றினார்கள். அவர்மேல் வழக்கும் போடப்பட்டது. இது நிகழ்ந்து சிலகாலம் ஆகிறது.
இக்காணொளியின் சிறுதுண்டை வெட்டி அதை தலித்துக்களை நிர்வாணமாக்கி காவல்துறை கொடுமை செய்வதாக குறிப்பு அளித்து எவரோ இணையத்தில் விட்டிருக்கிறார்கள். இந்தியவெறுப்பைக் கக்க, ஒட்டுமொத்த இந்திய சமூகமே சீழ்பிடித்தது என்று கத்த அதை ஒரு தருணமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது இணையத்தில் உள்ள இந்திய எதிர்ப்புக் கும்பல்.
அந்தக் காணொளியை இன்னொருமுறை கூர்ந்து நோக்கக்கூட எவரும் முற்படவில்லை. அச்செய்தி உண்மையா என உறுதிசெய்ய முயலவில்லை. அச்செய்திக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கவில்லை. ஒரு தருணம் தேவைப்பட்டது, அவ்வளவுதான். அத்தகைய தருணங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். இங்கு முற்போக்கினர் என்பவர்கள் இவர்களே
நல்லவேளையாக முழு காணொளியும் உள்ளது, இணையத்திலேயே கிடைக்கிறது. இது உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிற்றூரில் நடந்திருந்தால் , நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால்கூட , இந்த இந்தியவெறுப்பாளர்கள் சொல்வதே உண்மை என்றாகியிருக்கும். அதற்கு எதிராகப்பேசுவதே தலித் எதிர்ப்பு உயர்சாதி மனநிலை என்றாகியிருக்கும்.
பிபிஸி ஆதாரபூர்வமாக செய்தி வெளியிட்டதும் உடனே தட்டை மாற்றி ‘ஒரு தலித் போலீஸில் புகார் கொடுக்கவே நிர்வாணப்போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் உள்ள கேடுகெட்ட நாடு’ என ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் எங்கும் காவல்துறை நடவடிக்கையின் போக்கு ஒன்றே. எவர் புகார் கொடுத்தாலும் உடனடியாக கைதுசெய்துவிடமாட்டார்கள். மகாதேவ் தலித்தா இல்லையா என்று தெரியவில்லை. அவர் இதே போராட்டத்தை நடத்தினால் அப்போதும் போலீஸார்தான் பதில் சொல்லவேண்டும்.
சுனில் கௌதம் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகவில்லை. கொத்தடிமையாக இருக்கவில்லை. எவ்வகையிலும் எவருக்கும் அடிமையாகவும் இல்லை. அவரை தலித் போராளி என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அப்படிப்போகும் வெறுப்புப்பிரச்சாரம்.
இந்தியாவெங்கும் குற்றவாளிகள் போலீஸை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறை உண்டு, தங்கள் வீட்டு ஆண்களை போலீஸ் கைதுசெய்யவந்தால் பெண்கள் தங்களை நிர்வாணமாக்கிக் கொள்வார்கள். போலீஸுக்கு எதிராக வந்து நின்று தடுப்பார்கள். கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டு எழும் என்பதனால் போலீஸ் பின்வாங்கிவிடும்.
தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் உண்டு. எப்போதுமே பெண்போலீஸுடன் மட்டுமே போலீஸ் அங்கே நுழையமுடியும். ஒருமுறை நிர்வாணமாக நின்றபடி போலீஸ் மேல் கல்வீசும் பெண்களை நானே கண்டிருக்கிறேன். திருச்சி ராம்ஜி நகர் போன்ற ஊர்களிலும் இவ்வழக்கம் உண்டு. தென்காசி அருகே கூட ஒரு கிராமம் உண்டு என்று கேட்டிருக்கிறேன்.
உண்மையோ யதார்த்தமோ எவருக்கும் பொருட்டல்ல. மிகையுணர்ச்சிக்கொந்தளிப்பாக தேசத்தையும் இந்து மதத்தையும் வசைபாடுவதற்கு ஒரு தருணம் தேவை, அவ்வளவுதான். கேடுகெட்ட இந்தியா என்பவர்கள் அந்த மண்ணில்தான் பிறந்திருக்கிறார்கள். அதன் சோற்றைத்தான் உண்கிறார்கள். அதன் அனைத்து கீழ்மைகளிலும் அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் பங்குண்டு.
அவர்களின் முன்னோர் சேர்த்தவற்றின் மேலே வசதியாக அமர்ந்துகொண்டுதான் அவர்கள் இன்று பேசுகிறார்கள். உண்மையில் ரத்தம் கொதிக்கிறதென்றால் , இத்தேசம் அருவருப்பூட்டுகிறது என்றால் இதில்வாழ்ந்து உங்கள் முன்னோர் தேடிச்சேர்த்து அளித்த அனைத்தையும், இத்தேசம் உங்களுக்கு அளித்த அனைத்தையும் துறந்து அவர்களை நோக்கி இறங்கிச்செல்லுங்கள். உடன்நின்று போராடிக்காட்டுங்கள்.
இந்நாட்டில் கீழ்மைகள் உண்டுதான். எந்நாட்டிலும் அவை உண்டு. இவர்கள் அக்கீழ்மைகளைக் களைய ஒரு சிறு செயலைக்கூட அவர்கள் செய்வதில்லை. ஒரு சிறிய தியாகத்தைக்கூட செய்ததும் இல்லை. அநீதி கண்டு உண்மையில் மனம் கொதிப்பவர்கள் அதற்கு எதிராக எவ்வகையிலேனும் செயல்படுவார்கள். தங்கள் சொந்தக்காழ்ப்புகளை அதன்மேல் ஏற்றி வசைபாடமாட்டார்கள்
நம் இடதுசாரிகள், முற்போக்கினர் வெளிப்படுத்தும் எந்த உணர்ச்சியையும் நம்பமுடியாமல் அவர்களே நம்மை ஆக்குகிறார்கள்.