மாட்டிறைச்சித்தடை மற்றும் தாத்ரி படுகொலை பற்றி என்னிடம் வினவி பல கடிதங்கள் வந்தன. ஒட்டுமொத்தமாக பதில் இது. உடனடிநிகழ்வுகளில் எதிர்வினையாற்றுவதிலுள்ள இடர்களை எண்ணி நான் தயங்குவது வழக்கம். இதிலுள்ள சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கப்பட்டவை. என்பதுடன் வழக்கமான பொது எதிர்வினைக்கு அப்பால் சென்று விளக்கமும் கோருபவை என்பதனால் சுருக்கமாக.
ஆனால் இதைத்தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை. வெறுப்பின் மொழியில் பேசும் எதிர்வினைகளை வெளியிடவும் போவதில்லை—வெறுப்பின் இருபக்கங்களையும்.
பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணப்பட்டதா?
ஆம், இதை பண்டைய இந்தியாவை ஆராய்ந்து எழுதிய அனேகமாக அத்தனை ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் வேதங்கள் முதல் மகாபாரதம் வரை இதற்கான ஆதாரங்கள் ஏராளமான பதிவாகியிருக்கின்றன. பசு வேள்விகளில் பலியிடப்பட்டது. மானுடரின் சிறந்த உணவே தெய்வங்களுக்கு அளிக்கப்பட்டது. பசுவைப் பங்கிடுவதைப்பற்றிய வேதக்குறிப்புகள் உள்ளன. இளம்கன்றின் இறைச்சியே நல்ல சுவையான உணவு என்றுகூட சொல்லப்படுகின்றது.
வேதகால ஷத்ரியர் மட்டும் அல்ல பிராமணர்களே கூட மாட்டிறைச்சி உண்டவர்கள்தான். உபநிடத ரிஷிகளில் முதன்மையானவரும் வைதிகப் பிராமணருமான யாக்ஞவல்கியர் மாட்டிறைச்சி உண்டதை நாம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் காண்கிறோம்.
திரிசிரஸின் தலையை வெட்டிய தேவதச்சனுக்கு பலியாக அளிக்கப்படும் பசுவின் தலையை பரிசாக இந்திரன் அளிக்கும் கதை மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகிறது. வேதகாலத்தைச் சேர்ந்த தொன்மையான கதை அது. வேள்விப்பசுவின் ஊனை மிகச்சரியாக பங்கிடும் தேவபாக ஷ்ரௌதர் என்னும் ரிஷியைப்பற்றி மகாபாரதமும் அதற்கு முன்னரே உள்ள நூல்களும் சொல்கின்றன. அப்படி ஏராளமான கதைகளும் குறிப்புகளும் உள்ளன. .
விவேகானந்தர் மாட்டிறைச்சி உண்டாரா?
ஆம், உண்டார் என்பது மட்டும் அல்ல, இளைஞர்கள் உடல்வல்லமை பெற உண்ணவேண்டும் என வாதிடவும்செய்தார். கப்பல்பயணத்தில் கொத்திய மாட்டிறைச்சியை விவேகானந்தர் உண்பதைக்கண்டு திகைத்து அதைப்பற்றிக் கேட்ட ஒரு பிராமணருக்கு அவர் அளித்த விளக்கத்தை நாம் அவரது வரலாற்றிலே காணமுடியும்.
விவேகானந்தர் பிறந்த வங்கச்சூழலில் சாக்தம் வலுவான அமைப்பாக இருந்தது. மது, மாமிசம் இரண்டும் சாக்தபூஜையின் அம்சங்கள்.அங்கே பிராமணர்கள்கூட சாக்த பூசையில் படைக்கப்பட்ட ஊனுணவை உண்பதுண்டு. மிகப்பெரிய பூசைகளில் அதர்வவேதமுறைப்படி பசு பலியிடப்படுவதும் உண்டு. அவ்வூனை அவர்கள் உண்ணும் வழக்கம் இருந்தது.
பசுக்களைக் கொல்லக்கூடாது என்னும் எண்ணம் எப்படி உருவானது?
வேத- உபநிடத கால இந்தியாவில் நிலம் அளவற்று விரிந்துகிடந்தது. மிகச்சிலபகுதிகளிலேயே மக்கள் நிலைபெற்று வாழ்ந்து வேளாண்மை செய்யத்தொடங்கியிருந்தனர். இந்நிலையில் மிக லாபகரமான தொழில் என்பது மேய்ச்சலே. பல்லாயிரம் மாடுகளை மேய்க்க ஓரிரு மனிதர்களே போதும் என்பதனால் உபரி அதிகம்.
ஆகவேதான் பண்டைய இலக்கியங்கள் மேய்ச்சல்தொழில் செய்த மக்களையும் இடையர் கிராமங்களையும் பற்றி அதிகம் பேசுகின்றன. மாடுகளின் எண்ணிக்கையும் எப்போதும் ஆயிரங்களில்தான் சொல்லப்படுகின்றன.
ஆனால் அத்தனை மாடுகளின் பாலும் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது. ஏனென்றால் அன்று மாடுகள் அதிகமும் காடுகளின் ஓரங்களிலேயே மேய்க்கப்பட்டன.நகரங்கள் நதிக்கரைகளிலும் கடற்கரைகளிலும் அமைந்திருந்தன. பாலைச் சேமிக்கவோ வினியோகம்செய்யவோ முடியாது. நெய்யே மாடுகளிலிருந்து பெறப்படும் முக்கியமான வணிகப்பொருள். உணவாகவும் இல்லங்களில் எரிபொருளாகவும். கூடவே மாட்டிறைச்சி. அத்தனை மாடுகளையும் உண்ணாமல் எவரும் வளர்க்கமாட்டார்கள்.
பின்னர் வேளாண்மைச்சமூகம் வளர்ந்து விளைநிலம் பெருகியபோது மாடுகளின் எண்ணிக்கை குறைந்தபடியே வந்தது. ஆங்காங்கே வந்த பஞ்சங்களைப்பற்றி மகாபாரதத்திலேயே குறிப்புகள் உள்ளன. இந்தியப்பெருநிலம் என்றுமே மழையை நம்பி இருப்பது. மழை நிலையற்றது.
பஞ்சகாலங்களில் மக்கள் மாடுகளைக் கொன்று உண்பார்களென்றால் பஞ்சம் விலகி மீண்டும் மாடுகள் தேவையாகும்போது அவை இல்லாமலாகிவிடக்கூடும். ஆகவே பசுக்கொலை தடைசெய்யப்பட்டது. முன்னரே மாடுமேய்க்கும் சமூகங்களில் கன்றுபோடும் நிலையில் உள்ள பசுக்களைக் கொல்வதற்கு தடை இருந்திருக்கலாம். கன்றீன்று பாலூட்டும் பசு அன்னை என்ற நிலையில் பார்க்கப்பட்டிருக்கலாம். அந்த மனநிலை மேலும் நீட்டிக்கப்பட்டது.
அமெரிக்க மானுடவியலாளரான மார்வின் ஹாரீஸ் மாட்டிறைச்சி உண்பதற்கான இந்த ஆசாரத்தடை பற்றி எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலான ‘பசுக்கள் பன்றிகள் போர்கள்’ [மொழியாக்கம் துக்காராம் கோபால்ராவ்] தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. செ.திவான் எழுதிய ‘ஆரியப்பாதையில் பசுவதை’ என்ற நூல் பண்டைய இந்தியாவில் பசுக்கொலை இருந்ததைச் சுட்டும் அனைத்து மூலவரிகளையும் ஒரே நூலில் தொகுத்து அளிக்கிறது.
சங்ககாலப்பாடல்கள் தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்பது இயல்பான களியாட்டமாக இருந்ததைக் காட்டுகின்றன. ஆநிரை கவர்ந்து வந்து அவற்றை கொன்று உண்டு அந்த கொழுப்பை வில்லின் நாணிலேயே தேய்த்துவிட்டு உடனே மீண்டும் ஆநிரை கவரச்செல்லும் தலைவனைப்பற்றி சங்கப்பாடல் வியந்து பாடுகிறது.
பசுக்கொலைத்தடை பாகவதத்தில் கிருஷ்ணனின் வாயால் சொல்லப்படுகிறது. இந்திரனுக்கு பசுக்களை பலிகொடுத்து அவ்வூனை உண்டு மகிழ்வது யாதவர்களின் வழக்கமாக இருந்தது. அதை தடைசெய்யும் கிருஷ்ணன் இனிமேல் யாதவர் மந்தார மலையை வழிபட்டால்போதும் என்று ஆணையிடுகிறார். ஏறத்தாழ இந்தக்காலகட்டமே பசுக்கொலைக்கு எதிரான ஆசாரபூர்வமான தடை உருவாகிவந்த தருணம்.
நடைமுறை நோக்கம் கொண்ட இத்தகைய தடைகள் எந்த பண்டைய சமூகங்களிலும் குலஆசாரங்களாகவும், மதம்சார்ந்த தடைகளாகவும் மாற்றப்பட்டுதான் நிலைநிறுத்தப்படும். அவை காலப்போக்கில் மிகமிகக் கடுமையான நம்பிக்கைகளாக மாறிவிடும். மாடுகளைக் கொலைசெய்வதும் மாட்டிறைச்சி உண்பதும் அவ்வாறு ஆகியது.
ஆனால் இறந்த மாடுகள் எப்படியும் உண்ணப்பட்டிருக்கத்தான் வேண்டும். அவற்றின் தோல் பயன்படுத்தப்படாமலிருக்க முடியாது. ஏனென்றால் மாட்டின் தோல் என்பது அன்றும் மிகமிக அவசியமானது. குதிரைச்சேணம், காலணிகள், நீர் இறைக்கும் துலாக்கள், பலவகையான நாடாக்களுக்கு அது அவசியம். ஆகவே மாட்டை உண்ணக்கூடிய, தோலை உருவாக்கக்கூடிய ஒரு சமூகத்தட்டு நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இழிசினராக தரப்படுத்தப்பட்டனர்.
இவையெல்லாமே சமூகவியல் –பொருளியல் காரணங்களால் உருவாகிவந்த ஆசாரங்கள் மற்றும் மனநிலைகள். ஆனால் இவற்றை நிரந்தரமாக ஆக்க மதநெறியாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வலுவான நம்பிக்கையாக உணர்ச்சிகரமான நிலைப்பாடாக அவை நீடிக்கவேண்டியிருக்கிறது.
இந்துமதம் மட்டும் அல்ல சமண, பௌத்த, சீக்கிய மதங்களும் இந்த விலக்கையும் உணர்ச்சிநிலைகளையும் ஏற்றுக்கொண்டன. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், ஏனென்றால் அவை சமூகத்தில் வலுவாக வேரூன்றிய அவசியத்தேவையாக இருந்தன.
பின்னர் இந்தியாவைத் தாக்கிய பெரும்பஞ்சங்களில் இந்தியக்கால்நடைகள் கூட்டம் கூட்டமாகச் செத்தழிந்தபோதுகூட பசுக்கள் பிழைத்து இன்றியமையாத உயிர்நீட்சியை தக்கவைத்துக்கொண்டமைக்கு இந்த ஆசாரம் காரணமாக அமைந்தது என்று மெர்வின் ஹாரீஸ் குறிப்பிடுகிறார்
பசுவதை என்பது வலுவான குறியீட்டுச்செயல்பாடாக எப்படி ஆகியது?
வேளாண்மைசாராத பாலைவன, அரைப்பாலைவனப் பண்பாடு கொண்ட இஸ்லாம் பசுக்களைப்பற்றி இத்தகைய ஆசாரத்தடையோ தயக்கமோ கொண்டிருக்கவில்லை. ஆனால் பாலைவனத்தில் பன்றியை உண்ண தடை இருந்தது. அது இஸ்லாம் உருவாக்கிய தடை அல்ல என்கிறார் மார்வின் ஹாரீஸ். முன்னரே இருந்த தடையை இஸ்லாம் மதநெறியாக வகுத்து அளித்தது
ஏனென்றால் பன்றி மனிதனால் உண்ணப்படச் சாத்தியமான மாவுணவை உண்ணும் விலங்கு. பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டால் மனிதர் உண்ணும் உணவை அதற்கு அளித்து அதை வளர்ப்பார்கள். பல மனிதர் உண்ணும் உணவை உண்டு வளரும் பன்றி ஒருவருக்கு சுவையான உணவாக ஆகும். அது மனிதனை மனிதன் உண்பதற்கு நிகர். மாவுணவு மிக அரிதாக இருந்த பாலைவனங்களில் பன்றி தடைசெய்யப்பட்டது இதனால்தான். நாயும் இதனாலேயே விலக்கப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் உணவுக்காக மாடுகளைக் கொள்ளையடிப்பது சாதாரணமாக நிகழ்ந்தது. பசுக்களைக் கொன்று உண்பதும் அவர்களுக்கு தவறாக இருக்கவில்லை. இந்தியாவிலேயேகூட கொள்ளையை தொழிலாகக் கொண்ட வறண்டநிலத்தின் மக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பதை நாம் காண்கிறோம்.
அத்துடன் இந்தியாவுக்கு இஸ்லாம் வரும்போது மாட்டிறைச்சி உண்பது என்பது உயர்சாதி இந்துக்களுக்கு மிகமிகக் கடுமையாக விலக்கப்பட்டதாக இருந்தது. எவ்வகையில் ஆனாலும் மாட்டிறைச்சியை உண்ணநேர்ந்தவன் தன் சாதியை இழப்பான் என்று உறுதி இருந்தது.
ஆகவே இஸ்லாமியர் கட்டாய மதமாற்றத்திற்கான வழிமுறையாக மாட்டிறைச்சியை உண்ணச்செய்வதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். மாட்டிறைச்சியை ஒருகையிலும் வாளை மறுகையிலும் ஏந்தி மதமாற்றம் செய்தனர்.மறுத்தமைக்காக பல்லாயிரம்பேர் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். இது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வரலாற்றாசிரியர்களாலேயே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மதம் மாறியதுமே ஓர் அடையாளமாக மாட்டிறைச்சி உண்பது இன்றும் வழக்கமாக உள்ளது.
இறுதியாக போர்ச்சுக்கல்காரர்கள் கோவாவில் நிகழ்த்திய மதவிசாரணை என்னும் கட்டாயமதமாற்றத்திலும் 1941ல் கேரளத்தில் நிகழ்ந்த மாப்பிளைக் கலவரத்திலும் மாட்டிறைச்சி ஊட்டி மதத்தை அழிக்கும் செயல் நிகழ்ந்துள்ளது. ஏறத்தாழ ஐநூறாண்டுக்காலம் இந்த மத ஒடுக்குமுறையை வட இந்தியா அனுபவித்ததன் கசப்புகள் அங்கு வலுவாக உள்ளன.
விஜயநகரத்தால் காக்கப்பட்டு நேராக வெள்ளையர் ஆட்சிக்குள் சென்ற தென்னிந்தியர்களுக்கு அதன் வீச்சு புரியாது. எனவே அந்த உணர்வுநிலைகளும் இங்கே இல்லை.
ஆகவே வட இந்தியா முழுக்க மாட்டிறைச்சி என்பது இருகோணங்களிலும் வலுவான வெறுப்பை நிறைத்துள்ள ஒரு செயல்பாடாக இருக்கிறது. ஒன்று அது அவர்களின் சாதி –மத ஆசாரங்களால் தடுக்கப்பட்டுள்ளது. இரண்டு, அதை மதவன்முறையின் அடையாளமாகவே காண்கிறார்கள். இன்றும் மாட்டிறைச்சி என்பது அவர்களுக்கு ஓர் உணவு அல்ல, அடையாளம். ஆகவேதான் அங்குள்ள அத்தனை அரசியல்கட்சிகளும் மாட்டிறைச்சி விஷயத்தில் கருத்துத் தெரிவிக்காமல் பம்முகின்றன.
நவீன இந்தியாவில் மாட்டிறைச்சி என்னும் குறியீடு
இந்திய மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் மாட்டிறைச்சி முக்கியமான ஒரு குறியீடாக எழுந்து வந்தது. அன்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் அதிகாரத்தின் அடித்தளம் என்பது இந்தியாவின் உயர்சாதிகளான பிராமணர் மற்றும் வைசியர்களே. அவர்களுக்கு தங்கள் சுரண்டலில் பங்களித்து அவர்களின் மரபான அதிகாரத்தை தக்கவைக்க உதவி தங்கள் ஊர்தியாக பயன்படுத்திக்கொண்டனர் பிரிட்டிஷார்
அந்த உயர்குடிகளிலிருந்தே ஆங்கிலக்கல்வி மூலம் ஒரு புதியதலைமுறை உருவாகி வந்தது. ஜனநாயகம், சுதந்திரம் முதலிய கருத்துக்களை அறிந்தது. இந்தியா விடுதலைபெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய உயர்குடியினரை எழச்செய்யும் முக்கியமான ஆயுதமொன்றைக் கண்டடைந்தனர். அது மாட்டிறைச்சி.
முன்னரே 1857 ல் நிகழ்ந்த இந்தியாவின் முதல் தேசிய எதிர்ப்பு என்று சொல்லப்படும் சிப்பாய்க்கலவரத்தில் மாட்டிறைச்சியே முக்கியமான எதிர்ப்புக்காரணியாக அமைந்தது. துப்பாக்கிரவைகளில் மாட்டிறைச்சிக் கொழுப்பு பூசப்பட்டிருந்ததும் அதை வாயால் கடித்து சுடவேண்டும் என்ற கட்டாயமும்தான் அக்கிளர்ச்சியை உருவாக்கிய கோபத்திற்குக் காரணமாக அமைந்தன.
விந்தையான ஒன்றுண்டு. அதேபோல பன்றிக்கொழுப்பும் பூசப்பட்டிருந்தமையால் இஸ்லாமியரும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இந்துச் சிப்பாய்களும் இஸ்லாமியச் சிப்பாய்களும் இணைந்தே களத்தில் நின்றனர். ஆனால் பின்னர் இந்த முதல் ஆயுதக்கிளர்ச்சியை நுணுகி ஆராய்ந்த இந்திய ஆரம்பகட்ட சுதந்திரப்போராட்ட சித்தாந்திகள் இதிலிருந்த மாட்டிறைச்சிவெறுப்பு என்னும் வாய்ப்பான ஆயுதத்தை கண்டடைந்தனர்.
மாட்டிறைச்சி தின்பவர்களா உங்கள் அரசர்கள், அவர்களுக்கா அடிமைவேலை செய்கிறீர்கள்? – என்னும் கேள்வி உண்மையிலேயே மிகமிக வலுவானதாக இருந்தது. அதை முதன்மை ஆயுதமாக எடுக்கவேண்டிய ஒரு கட்டாயமும் அன்றிருந்தது
பிரிட்டிஷ் ஆட்சி தெய்வங்களின் ஆணையால் அமைந்தது என்னும் எண்ணம் வட இந்திய உயர்குடி இந்துக்களிடையே இருந்தது. அவர்கள் ஐநூறாண்டுக்காலமாக அஞ்சி வெறுத்த இஸ்லாமிய ஆட்சியிலிருந்தும் மத ஒடுக்குமுறைகளிலிருந்தும் அவர்களை விடுதலை செய்தது பிரிட்டிஷ் ஆட்சியே. அது அவர்களின் மதச்சுதந்திரத்தை உறுதிசெய்தது. ஆலயங்களை காப்பாற்றியது. அவர்களின் நடமாட்ட உரிமையை மீட்டளித்தது. நில உரிமையை உறுதிசெய்தது. புறவயமான நீதிமுறையை அளித்தது.
ஆகவே அதன் கடுமையான பொருளியல்சுரண்டல் அவர்களின் கண்களுக்குப்படவில்லை. அது உருவாக்கிய மாபெரும் பஞ்சங்களுக்கு அவர்களை மக்கள் பொறுப்பாக்கவுமில்லை.
ஆனால் மாட்டிறைச்சி தின்பவர்கள் என பிரிட்டிஷார் வரையறுக்கப்பட்டபோது உயர்சாதியினர் மனதில் இருந்த அவர்கள்மீதான ஏற்புநிலை இல்லாமலாகியது. தவிர்க்கமுடியாத அல்லது எதிர்க்கமுடியாத ஓர் ஆதிக்கமாக அவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைப் பார்க்கத் தொடங்கினர்.
பசுவதைக்கு எதிரான போராட்டமே இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முன்னோடியாக அமைந்த இந்துமறுமலர்ச்சி இயக்கத்தின் ஆதிவடிவம் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. ஆரியசமாஜம் அதை முன்னெடுத்தது. விவேகானந்தர் அதை சற்றுக் கசப்புடன் நிராகரிப்பதைக் காணலாம்.
ஆரம்பகால இந்தியச் சுதந்திரப்போராட்டவீரர்கள் அனைவரின் எழுத்துக்களிலும் பிரிட்டிஷாரை மிலேச்சர் என்று குறிப்பிடும் போக்கு இருந்தது. திலகரும் அரவிந்தரும் அவ்வாறே எழுதினர். பாரதியும் வாஞ்சிநாதனும் அவ்வாறு குறிப்பிட்டிருப்பதை நாம் காணலாம்.
காந்தியும் பசுவதையும்
காந்தி இருவகையில் பசுக்கொலையை எதிர்த்தார். ஒன்று அவரது சமண –வைணவப்பின்புலம் சைவ உணவை [அதை அங்கே வைஷ்ணவ உணவு என்கிறார்கள்] கொண்டது. கொல்லாமை அவர்களின் முக்கியமான நெறி. காந்தி அதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. ஆகவே பசுவைக்கொல்வதை பெரும்பாவம் என்றே அவரது மனம் எண்ணியது.
இரண்டாவதாக, அன்று இந்திய அரசியலில் அவர் நுழைந்தபோது பசுவதை முதன்மையான அரசியல்செயல்திட்டமாக இருந்தது. அதுதான் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலைகளை ஒன்றுதிரட்டியது.
ஆனால் அது திலகரின் அரசியல். அது கடுமையான பிரிட்டிஷ் இனஎதிர்ப்பை உள்ளடக்கமாகக் கொண்டது. காந்திக்கு அது உவப்பாக இருக்கவில்லை. எதிரியை இழிவாக எண்ணுவது, வெறுப்பது, பிறபண்பாடுகள் மேல் கசப்பை வளர்ப்பது அவரது வழி அல்ல. அவர் பிரிட்டிஷாரை வரலாற்றின் களத்தில் எதிர்பாத்திரம் வகிப்பவர்களாகவே நினைத்தார். அவர்களுடன் விவாதிக்க எப்போதும் முயன்றார்
ஆகவே பசுவதை பற்றிய அவரது கருத்துக்கள் படிப்படியான மாற்றங்கள் கொண்டவையாக இருந்தன. பசுவதையை அவர் கடுமையாக நிராகரித்தார். பசுவதையை இஸ்லாமியர் கைவிடவேண்டும் என்று அவர்களிடம் கோரினார். அதற்காக இஸ்லாமியரை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டை வந்தடைந்தார். சட்டபூர்வமாக பசுவதையைத் தடைசெய்வதை ஏற்கமாட்டேன் என்றார்.
மாட்டிறைச்சி சார்ந்து உருவான தேசிய உணர்ச்சி என்பது மெல்ல மெல்ல இந்துமதம் சார்ந்ததாகவும் இஸ்லாமியரை வெளியே தள்ளுவதாகவும் அமைவதை உணர்ந்தார் காந்தி. இஸ்லாமியரை உள்ளடக்காத ஒரு தேசிய உணர்ச்சி என்பது ஒருபோதும் முழுமையடையாது என எண்ணியே அவர் கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தார்.
காந்திய அரசியல் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை மிக நுணுக்கமாக பசுவதை போன்ற மதம் சார்ந்த விஷயங்களை விட்டு பொருளியல் சார்ந்து திருப்புவதை நாம் காணலாம். மாடுதின்பவர்கள் என்ற அடையாளத்தில் இருந்து பிரிட்டிஷாரை வெளியே கொண்டுசென்று பொருளியல் சுரண்டல் செய்பவர்கள் என்ற அடையாளத்தை அவர்களுக்கு அவரது போராட்டங்கள் அளித்தன.
அன்னியப்பொருள் மறுப்பு. உப்புசத்யாக்கிரகம் போன்றவை பிரிட்டிஷாரின் பொருளியல் சுரண்டலை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டவை. அதேசமயம் பிரிட்டிஷ் நிர்வாகம் மற்றும் நீதிமுறை பற்றிய மதிப்பை காந்தி துறக்கவுமில்லை. பிரிட்டிஷாரை வெறுப்புடன் அடையாளப்படுத்தும் அனைத்தையும் மெல்ல மெல்ல கரைத்து அழித்தார். அதுவே காந்திய வழிமுறை
மாட்டிறைச்சி இந்துக்களுக்கு விலக்கப்பட்டுள்ளதா?
இந்து என எவரை வகுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. நம் இந்துத்துவர்கள் தேசியம் பேசும்போது அனைத்து இந்துக்களையும் உள்ளடக்குவார்கள். ஆசாரம் பேசும்போது வைதிகமரபை ஏற்றுக்கொண்டவர்களை மட்டுமே இந்துக்கள் என்பார்கள், பிறரை அம்மரபை ஏற்றுக்கொள்ளவேண்டியவர்கள் என முத்திரையிடுவார்கள்.
பொதுவாக சமண,சைவ, வைணவ பெருமதங்களின் செல்வாக்கு மிகுந்த இடங்களிலேயே மாட்டிறைச்சி உண்பதற்கான விலக்கு வலுவாக உள்ளது. கேரளம், அஸ்ஸாம், வங்கம் போன்றவை சாக்தம் இருந்த இடங்கள். அங்கே மாட்டிறைச்சி கடுமையாக விலக்கப்பட்ட ஒன்று அல்ல. கேரளத்தில் ஊன் உண்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாடும் உண்பவர்களே.
பௌத்தம் அகிம்சையை வலியுறுத்திய மதம். ஆனால் அது மலைப்பகுதிகளில் ஊனுணவை ஏற்றுக்கொண்டது. ஆகவே இமயமலைப்பகுதிகளிலும் வடகிடக்கு மாகாணங்களிலும் ஊனுணவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே மாட்டிறைசியை புத்தபிக்ஷுக்களும் உண்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள போர்ச்சாதிகளில் பலர் மாடு உண்பவர்கள். அடித்தள மக்களான தலித்துக்கள் மற்றும் பழங்குடிகள் மாடு உண்பவர்கள். இவர்களை எல்லாம் இந்துக்கள் அல்ல என்று முழுமையாகத் தவிர்த்துவிட்டு வரையறுத்தால் மட்டுமே இந்துக்களுக்கு மாட்டிறைச்சி விலக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றை வாக்கியத்தைச் சென்றடைய முடியும்.
அவர்கள் மரபாக உண்டுவரும் உணவை விலக்கினால்தான் அவர்களை இந்துக்களாகக் கொள்ள முடியும் என்றால் அது மையமரபை அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக சுமத்துவதேயாகும்.
நேரடியாக முகலாயர் ஆட்சிக்குக் கீழே இருந்த இந்திய மையநிலத்தில் மாட்டிறைச்சிக்கு எதிராக உள்ள கடுமையான வெறுப்பும் மறுப்பும் பிறநிலங்களில் இல்லை. இங்கெல்லாம் மரபாக மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் சென்ற அரைநூற்றாண்டுக்காலத்தில் இயல்பாக மாட்டிறைச்சி உண்கிறார்கள்.
அத்துடன் இந்நாட்டின் குடிமக்களில் கணிசமானவர்களான இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் மாட்டிறைச்சி உண்கிறார்கள். இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள ஒரு வட்டம் இந்தியர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சியை அதிகாரம் மூலம் மறுப்பதென்பது அப்பட்டமான ஜனநாயக மீறல், ஃபாசிசம்.
ஆசாரங்களின் அரசியல்
சாமானிய இந்துக்களின் சாபக்கேடாக ஒன்றை விவேகானந்தர் சொல்கிறார். அவர்களின் மதம் என்பது வயிற்றில் உள்ளது. எதை உண்பது, எப்படி உண்பது, எங்கே உண்பது என்பதே அவர்களின் மதசிந்தனையாக எப்போதும் பேசப்படுகிறது. அந்த மனநோய்க்கூறிலிருந்து விடுபடாது இந்தியாவுக்கு மீட்பில்லை . சுவாமி விவேகானந்தர் மனம் கசந்து இதைச்சொல்லி நூறாண்டு ஆகப்போகிறது. நாம் இன்னும் கீழே சென்றுகொண்டிருக்கிறோம்.
ஆசாரங்கள் சென்றகாலத்திற்குரியவை. பெரும்பாலான சமூக வழக்கங்களும் நம்பிக்கைகளும் கடந்தகாலத்தின் நீட்சிகள். அவை அன்று தங்களை பிரித்து நிறுத்திக்கொள்ளவும் போராடவும் உதவியவை. இன்று நமக்கிருக்கும் தேவை நம்மைத் தொகுக்கும் இணைக்கும் முன்னே கொண்டுசெல்லும் நம்பிக்கைகளும் மனநிலைகளும்தான். இவை அவற்றுக்கு நேர் எதிரானவை
இந்த விரிந்த நிலப்பகுதியில் பல்வேறு ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள் ,நம்பிக்கைகள் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒரு சாரார் மேல் பிறிதொருசாரார் ஆதிக்கம் செலுத்துவதன் வழியாக இங்கு உறுதியான சமூகம் ஒன்று ஒருபோதும் உருவாகி வரமுடியாது. கசப்புகள் பெருகி மோதல்கள் வலுவாகும். அதன் இழப்பு அனைவருக்கும்தான்.
அத்துடன் இந்துமதம் என்பது ஆசாரங்களாலோ நம்பிக்கைகளாலோ ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை இந்து என்ற பெயரை பயன்படுத்துபவர்கள் அறியவேண்டும். இந்தியாவின் மையநிலத்தில் பக்தி இயக்கம் சார்ந்த பண்பாடே மேலோங்கி உள்ளது. பக்தி இயக்கத்தால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட பல்வேறுவகையான வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் கொண்டதுதான் இந்து மரபு
அச்சடங்குகளையும் வழக்கங்களையும் மையநிலத்து பக்திமரபைச்சேர்ந்த இந்துக்கள் அங்கீகரித்தாகவேண்டும் என்றால் அது இந்துமத்தை நொறுக்கும் வன்முறை. பல சடங்குகள் அவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியாதவையாக, அதிர்ச்சியூட்டக்கூடியவையாக இருக்கும். சாக்ஷி மகராஜும் சாத்வி பிரக்யாவும்தான் இனி அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்றால் அதைவிட கீழ்மை இந்துமதத்திற்கு வருவதற்கில்லை.
முற்றிலும் மாறுபட்ட ஆசாரங்களும் வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கொண்ட ஒரு பெரியவெளி இது. இணைத்திருப்பது இதன் மெய்ஞானத்தேடலின் ஊடுபாவு மட்டுமே. தத்துவம் மட்டுமே. இதை பெரும்பான்மையின் ஆசாரம் மற்றும் நம்பிக்கை என்று சுருக்கிக்கொண்டால் உண்மையில் இதை அழிக்கிறோம்.
இந்துமதத்தின் விரிவை, அதன் பன்முகத்தன்மையை உணராத மிகமிகக்குறுகலான மனம் கொண்ட வெறியர்களால் இந்துத்துவ அரசியல் இன்று பொதுவெளியில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் காண்பது அதன் வெளிப்பாடைத்தான்
இத்தனைக்கும்பின் நமது முற்போக்கினரின் தார்மீகத் தோல்வியைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். இன்று இத்தகைய அதிதீவிர நிலைப்பாடுகளை எடுக்கும் துணிவு எப்படி உருவாகிறது? இந்துப்பெரும்பான்மை மெல்லமெல்ல இந்த தீவிரநிலைப்பாட்டுக்காரர்களை பழைமைவாதிகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. அதை அப்படிச் செலுத்தியவர்கள் நம் முற்போக்கினர்
ஓர் இந்து தன் நம்பிக்கையுடன் ஒருபோதும் முற்போக்கினனாக இருக்கமுடியாது என்ற நிலையை இவர்கள் உருவாக்கினர். இந்துமதத்தை அழித்தேயாகவேண்டிய முதல்தீமை என பொதுவெளியில் மீளமீளச் சித்தரித்தனர். இந்தியாவின் அனைத்து வீழ்ச்சிகளுக்கும் இந்துமதமே காரணம் என பிரச்சாரம்செய்தனர்.
ஆகவே சாமானிய இந்துவின் மனதில் இவர்கள் ஒட்டுமொத்தமாக தன் பண்பாட்டுக்கும் மதத்துக்கும் எதிரானவர்கள் என்று ஆழமாகப் பதிந்துவருகிறது. இவர்கள் முன்வைக்கும் அறச்சீற்றமெல்லாம் தன் மதத்திற்கு எதிரானதாகவே அவனுக்குத்தெரிகிறது
கும்பமேளா நெரிசலில் இறந்தவர்களின் மதநம்பிக்கையைச் சுட்டிக்காட்டி கேலிசெய்யும் ஓர் இதழ் ஹஜ் விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது என்றால் அவ்விதழில் இந்து மதத்தின் ஆசாரங்களுக்கு எதிராக வரும் கண்டனம் எப்படிப் பார்க்கப்படும்?
கிருஷ்ணஜெயந்தி அன்று கிருஷ்ணனை மானுடவிரோதி என்று முற்போக்கினர் எழுதினார்கள். எழுதும் உரிமை அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் அவர்களே நபிதினத்தன்று நபியை விமர்சனமே இன்றி விதந்தோதுவார்கள் என்றால் அவர்களின் நடுநிலையை எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்?
கீதையை அவதூறுகளால் மட்டும் வசைபாடி, இஸ்லாமை புகழ்ந்து நாநூறு பக்க நூல் ஒன்றை எழுதி வெளியிடக்கூடிய முற்போக்கினர் [ஜமுனாலால் பஸால் எழுதிய கீதையின் மறுபக்கம்] இஸ்லாம் பற்றி நியாயமான விமர்சனம் கொண்ட ஒரு நூலையாவது வெளியிடுவார்களா என்றுதான் சராசரி இந்துவின் மனம் செல்லும்.
ஒவ்வொரு அரசியல் சந்தர்ப்பத்திலும் வியாசர் முதல் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வரை அத்தனை இந்து மெய்ஞானிகளையும் இந்து ஞானமரபையும் அவதூறு செய்து கேலிபேசி வசைபாடி இவர்கள் எழுதிய பக்கங்கள் நம் முன் உள்ளன. அவை இவர்களை வெறும் வெறுப்பரசியல்வாதிகளாக முத்திரைகுத்திவிட்டன. ஆகவேதான் இவர்களின் மனிதாபிமானப் பொங்குதல்கள், ஜனநாயக அறைகூவல்கள் வெறும் சொற்களாக வீரியமிழந்துள்ளன.
பல்வேறு சுயலாபங்களுக்காக சென்ற அரைநூற்றாண்டில் நம் முற்போக்கினர் இந்துமரபுக்கு எதிராக எடுத்த அநீதியான நிலைபாடே, இன்று ஜனநாயகம் மதச்சார்பின்மை அறிவுலகசுதந்திரம் என எதையும் பேசும் தகுதியற்றவர்களாக அவர்களைக் காட்டுகிறது. அவர்கள் பேசப்பேச சராசரி இந்துக்களை மறுபக்கம் நோக்கித் தள்ளுகின்றன அச்சொற்கள்.
ஜனநாயகம், கருத்துரிமை, மானுடசமத்துவம் என்று பேசும் அதேவாயால் மறுதருணத்திலேயெ இந்தியா ஒழிக என்றும்,அதன் நீண்ட மரபும் பண்பாடும் அழிக என்றும் அடிவயிற்றை எக்கி இவர்கள் ஓலமிடும்போது அந்தக்குரல் ஒட்டுமொத்தமாக வெறும் வெறுப்பொலியாக தெரிகிறது.
இந்தியாவின் இன்றைய அவலம் பழைமைவாதத்தின் எழுச்சி மட்டும் அல்ல நம் முற்போக்கினர் போலிகளாக மாறிப்போனதும்கூடத்தான். அவர்கள் என்று இந்நாட்டின்மேலும் பண்பாட்டின்மேலும் மதிப்பும் , பிளவுகளை உருவாக்குவதற்குப் பதில் நம்பிக்கையை உருவாக்கும் போக்கும், எதிர்காலம் குறித்த கனவும் கொண்டநேர்நிலைக்குரல்களாக ஒலிக்கிறார்களோ அன்றே அவர்களால் இங்குள்ள பெரும்பான்மையுடன் பேசமுடியும்.
இன்றைய சூழலில் தன்னை பகுத்தறிவாளராக நிறுத்திக்கொண்டபோதிலும் இந்துமெய்ஞானமரபின் மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டிருந்த, இந்தியாவின் பண்பாட்டு மரபை போற்றிய, அதன் பன்மையைப்புரிந்துகொண்ட ஜவகர்லால் நேருவே முற்போக்கின் முன்னுதாரண முகமாக எனக்கு நினைவில் எழுகிறார்.