தஞ்சை பிரகாஷ் – புனைவுகளும் மனிதரும்

1

தஞ்சை பிரகாஷ் தமிழ்விக்கி

ஜெ

சமீபகாலமாக நான் ஆர்வத்துடன் தேடி கண்டுபிடித்து வாசித்த எழுத்தாளர் தஞ்சைப்பிரகாஷ். மிகப்பெரிய ஏமாற்றம். இதுதான் இலக்கியம் என்றால் நான் வாசித்த உலக இலக்கியமெல்லாம் இலக்கியமே இல்லை. டஸ்டயேவ்ஸ்கியும் ஜேம்ஸ் ஜாய்ஸும் எல்லாம் எழுத்தாளர்களே இல்லை. மிகமிக அமெச்சூரான நடை. ஒரு சின்ன விஷயத்தைக்கூட காட்சியாக காட்டவோ நுண்மையாகச் சித்திரிக்கவோ தெரியவில்லை. சொல்லும்முறையில் ஒரு ஒழுங்கோ ஓட்டமோ இல்லை.சும்மா உட்காந்து திண்ணைப்பேச்சு பேசுவதுபோல பேசிக்கொண்டே போகிறது நடை.

உள்ளடக்கம் என்றுபார்த்தால் வெறும் daydreams மட்டும்தான். இந்தவகையான கற்பனை சஞ்சாரம் இல்லாத ஆணே இருக்கமாட்டான். அத்தனை பெண்களையும் ஒருவன் அனுபவிக்கிறான். எல்லாரும் மண்டுக்களைப்போல வந்து அவனிடம் படுத்துவிட்டுப்போகிறார்கள். எல்லா பெண்களும் ஒரேபோல இருக்கிறார்கள். ஒரேபோல மொக்கையாகப் பேசுகிறார்கள். தி.ஜானகிராமனை கலந்துகட்டி உருவாக்கிய ஒரு குணச்சித்திரம் எல்லாருக்கும் உள்ளது. மீனின் சிறகுகளில் கதாநாயகன் ஒரு கலைஞன். ஆனால் அவன் கலை பற்றி ஒன்றுமே இல்லை. அதற்கும் செக்ஸுக்குமான உறவுகூட சொல்லப்படவில்லை. அடிக்கடி அவன் கலைஞன் என்று ஆசிரியர் சொல்கிறார் .மற்றபடி சட்டையைக் கழற்றினான், படுத்தான்; அவ்வளவுதான். அதுவும் ஒரே வகையாக ஒரே மொழியிலே சொல்லப்பட்டுள்ளன.

அத்தனை சரோஜாதேவி புஸ்தகங்களுக்கும் உள்ளடக்கம் இதுதான்.இதை யார் வேண்டுமென்றாலும் எழுதிவிடவும் முடியும். செக்ஸ் விஷயமாக இருந்தாலும் அதில் ஆசிரியர் கண்டடையக்கூடிய ஏதாவது நுட்பம் இருக்கவேண்டும் இல்லையா? நான் வாசித்த மிகச்சிறந்த எரோடிக்கா என்றால் ஹென்றி மில்லர். அவர் எழுதிய ஒவ்வொரு சித்திரிப்பிலும் நாம் நம்முடைய sexual attitude ஐ நம்முடைய வேஷங்களையும் சூதாட்டங்களையும் பாத்துக்கொண்டே செல்வோம். அப்படி ஏதேனும் ஒரு இடம், ஒரு வரி இருந்தால்கூட ஏதோ எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.

ஆல்பர்ட்டோ மொராவியோவோ ,நான்சி ஃப்ரைடேவோ, எரிக்கா ஜங்கோ, ஹென்றி மில்லரோ எழுதிய எரோடிக்காவை வாசித்த ஒருவன் இவற்றை எப்படி எடுத்துக்கொள்வது. உண்மையில் எரோட்டிக் எழுத்தின் சாராம்சம் என்பதே காமத்தின் நேரத்தில் ஆணும் பெண்ணும் உண்மையாக எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதை காண்பதுதான். அது ஒரு உலோகத்தைச் சூடாக்கி ஆராய்வது போல. [இதை நீங்களே சொல்லியிருக்கிறீர்களோ?] செக்ஸின்போது அதிகமும் தங்களை விரிவாக்கி எக்ஸ்பிரஸ் செய்வது பெண்கள் என்பதனால் மேலே குறிப்பிட்ட ஆசிரியர்களின் நாவல்களில் எல்லாம் பெண்களின் நுட்பங்கள் மிக அற்புதமாக வெளிப்படுகின்றன. இவற்றை நாம் வாசிப்பதே இதற்காகத்தான்.

ஆனால் தஞ்சை பிரகாஷின் எழுத்து சுத்த அமெச்சூர்த்தனம். எப்படி திடீரென்று இதையெல்லாம் இலக்கியம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. நான் மதிக்கும் மூத்த வாசகர் ஒருவரிடம் கேட்டேன். இதேபோல அமெச்சூர் ஆக எழுதுபவர்கள் தங்கள் எழுத்தை நியாயப்படுத்த இவரைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். அல்லது அவர்களுடைய வாசிப்பும் ரசனையும் அவ்வளவுதான். தமிழில் உள்ள நுட்பமான வாசகர்களோ விமர்சகர்களோ இந்த நாவல்களை பொருட்படுத்தியதில்லை என்று சொன்னார்கள். நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று அறிய ஆவல் கொள்கிறேன். தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை

சண்முகம்

tanjoreprakash-1

அன்புள்ள சண்முகம்,

தஞ்சை பிரகாஷ் எனக்கு நன்குதெரிந்தவர். அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். கைப்பிரதியாக இருந்த கரமுண்டார்வீடு நாவலை கொஞ்சம் படித்திருக்கிறேன். அந்நூல்கள் வெளிவந்தபின் என் கருத்தை விரிவாக அவருக்கு எழுதி அனுப்பியிருக்கிறேன்

உங்கள் கருத்தே என்னுடையதும். தமிழகத்தில் இலக்கியத்தை வாசிக்கத்தெரிந்தவர்கள் என நான் யாரையெல்லாம் நினைக்கிறேனோ அவர்கள் அனைவருக்கும் ஏறத்தாழ இதே கருத்துதான்.

தஞ்சை பிரகாஷ் கொண்டாடப்படவில்லை. ஒருசிலர் அவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்கள் அவரைப்பற்றி பெரியதாகச் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. தமிழில் நுட்பமான வாசகர்களின் ஒரு வட்டம் எப்போதும் உண்டு

இது எப்போதும் இங்கே நிகழ்வதுதான். திடீரென்று ஒருவர் ஓர் எழுத்தாளரின் பெயரைச் சொல்வார். உடனே சிலர் சேர்ந்து கொள்வார்கள். கொஞ்சநாள் அந்த பேச்சு நீடிக்கும், மறைந்துவிடும். அப்படி வந்துபோன பலர் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் உண்டு

இது ஏன் என்றால் ‘மறைக்கப்பட்ட’ ஓர் எழுத்தாளரை கண்டுபிடித்துச் சொல்ல விழைகிறார்கள். கண்டுபிடிப்பவர் நுட்பமாக தேடித்தேடி வாசிப்பவராகத் தெரிவார்.

தான் அறியப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை என எண்ணும் சோட்டா எழுத்தாளர் சாதாரணமாக எழுதி மறைந்த ஒருவரை திடீரென்று கண்டுகொண்டு அவரைப் புகழ்ந்து கூடவே முக்கியமாக கருதப்படும் படைப்பாளிகளை வசைபாடுவார். அந்த அங்கலாய்ப்புக்கான முகாந்தரம்தான் அந்த மறைந்த எழுத்தாளர்.

மற்றபடி தஞ்சை பிரகாஷின் எழுத்தின் மதிப்பு என்ன? இலக்கிய வாசகனாக ஆகும் ஆசையுள்ள, ஆனால் இலக்கியபடைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் அறிவுத்திறனோ ரசனையோ பொறுமையோ இல்லாத பெரிய ஒரு வாசகர்வட்டம் ஒன்று எப்போதும் உள்ளது. அவர்களுக்கான ஆசிரியர் அவர். பழக்கமான பாலியல்சித்தரிப்பு, நுட்பங்களற்ற ஓட்டம் என்பதனால் தடையில்லாமல் வாசிக்க முடியும். இலக்கியம் வாசித்த பாவனையும் இருக்கும்

நம் சூழல் பாலியல் சார்ந்த ஒடுக்குமுறை கொண்டது. ஆகவே நமக்கு அதன் மேல் அச்சமும் குற்றவுணர்ச்சியும் கொண்ட ஒரு பதற்றம் இளமையில் உருவாகிவிடுகிறது. ஓர் எளிய பாலியல் சித்தரிப்பே நம்மை கிளரச்செய்கிறது. இலக்கியத்திற்குள் வரும் இளைஞர்கள் பலருக்கும் இந்த நரம்புத்தொய்வுநிலை இருக்கிறது. அவர்கள் இத்தகைய எழுத்துக்களை வாசித்து மனம் கிளரலாம்

இலக்கியவாசகன் இத்தகைய எளிய கிளர்ச்சிகளைக் கடந்தவனாகவே இருப்பான். மேலும் சொல்லப்போனால் மேல்தளத்தில் இத்தகைய பாலியல் – வன்முறைச் சித்தரிப்புகள் மிகையாக இருக்கும் என்றால் அது ஒரு தந்திரம் என்றே அவன் ஐயப்படுவான். ஆழத்தை அறியமுடியாமல் ஆக்கும் அலை என அதை மதிப்பிடுவான். ‘சரி, இருக்கட்டும், மேலே என்ன சொல்லு’ என்று அந்த ஆசிரியனிடம் கேட்பான். தஞ்சை பிரகாஷிடம் அப்படிக்கேட்டால் அவர் திகைத்து நின்றுவிடுவார்

பொதுவாக இத்தகைய நூல்களை மதிப்பிட்டு எழுதப்படும் மேலோட்டமான பாராட்டுரைகள் அனைத்திலும் உள்ள சாராம்சம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. அதாவது மற்றவர்கள் எழுதாததை இவர் எழுதிவிட்டார். மற்றவர்கள் தயங்குமிடத்தில் துணிந்து முன்னால்செல்கிறார், இவ்வளவுதான். இலக்கியத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. இந்த ஒப்பீடுகள் எல்லாமே அதிகபட்சம் பத்தாண்டுக்காலம் செல்லுபடியாகக்கூடியவை.

தன்னளவில் அந்நூல் வாழ்க்கையின் எப்பகுதியை எவ்விதம் விளக்குகிறது, எந்தவகையான அழகனுபவத்தை அளிக்கிறது என்பதே இலக்கியத்தின் வினா. தஞ்சை பிரகாஷ் அவ்வகையில் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்மதைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவை.

அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. அதுதான் முக்கியம். அவரது நாவல்களில் உள்ள பாலியல் சித்தரிப்புகள் பொய்யானவை. தன் வசதிக்கேற்ப நிகழ்த்திக்கொள்ளும் வெறும் சுயமைதுனக் கற்பனைகள் அவை. பாலுறவை உற்றுநோக்கும் எவரும் அவை பொய் என அறியமுடியும்.ஆணோ பெண்ணோ பாலுறவின் கணங்களில் அப்படி இருப்பதில்லை.பாலுறவை அவதானிக்காமல் பகல்கனவில் வாழும் இளைஞர்களுக்கு அது தெரிவதில்லை.

தஞ்சை பிரகாஷின் நாவல்களை, அல்லது இத்தகைய எழுத்துக்களை வாசிப்பவர்களுக்காக நான்சி ஃப்ரைடே தொகுத்த My Secret Garden: Women’s Sexual Fantasies, Forbidden Flowers: More Women’s Sexual Fantasies, Men in Love, Men’s Sexual Fantasies, Women on Top: How Real Life Has Changed Women’s Sexual Fantasies, Beyond My Control: Forbidden Fantasies in an Uncensored Age ஆகிய நூல்களை நான் சிபாரிசு செய்வேன்.

இவை வாசகர்களிடமிருந்தே தங்கள் அந்தரங்க பாலியல் பகற்கனவுகளை எழுதியனுப்பும்படி கோரி தேர்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டவை. மானுட கற்பனையின் சாத்தியங்கள் என்னென்ன என்றும் அடக்கப்பட்ட பாலுணர்வின் ரகசிய வழிகள் என்னென்ன என்றும் காட்டு அரிய தொகுப்புகள் அவை. தஞ்சை பிரகாஷ் போன்றவர்களின் எழுத்துக்கள் அவற்றின் பத்துபக்கங்களுக்கு நிகரல்ல.

ஆனால் அந்தத் தொகுதிகள் காட்டும் கற்பனைக்கு மேல் ஓர் அடியாவது எடுத்து வைத்திருந்தால்தான் அது இலக்கியம் என வகுத்துக்கொள்ளுங்கள்.

1

எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்த தஞ்சை பிரகாஷ் அற்புதமான மனிதர். அவரது வாழ்க்கை பலவகையான விசித்திரமான அனுபவங்களும் கொந்தளிப்புகளும் கொண்டது. மிகவசதியான குடும்பத்தில் பிறந்தவர். நிரந்தரமான தொழிலோ வாழ்க்கையோ இல்லாமல் அலைந்து திரிந்தார். நாடோடிவாழ்க்கையின் பல திகைப்பூட்டும் தருணங்கள் அவருக்குண்டு. காசியைப்பற்றியும் மதுராவைப்பற்றியும் நாங்கள் ஆர்வத்துடன் உரையாடிக்கொண்டதுண்டு. அவற்றின் அடித்தள உலகம் அவருக்கு என்னைவிடவும் தெரியும்.

இந்தியாவின் பல மூத்த எழுத்தாளர்களுடன் அவருக்கு நேரடி உறவிருந்தது. குறிப்பாக இந்தி, கன்னட எழுத்தாளர்களிடம். நல்ல வாசகர். ஜானகிராகனின் முதன்மை ரசிகர். என்னை ஜமுனா வாழ்ந்த இல்லத்திற்கு அழைத்துச்சென்று அவர் காட்டியதை நினைவுறுகிறேன்.பலவகையான வாழ்க்கைகள் வழியாகச் சென்றபோதிலும் அவரது ஆர்வம் இலக்கியத்திற்கென்றே குவிந்திருந்தது. தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது.

தஞ்சை பிரகாஷ் அடைந்த வாழ்வனுபவங்கள் பல சிலிர்க்க வைப்பவை. அவற்றை அவர் எளியமுறையில் பதிவுசெய்திருந்தாலே இலக்கியத்தகுதி கொண்டிருக்கும். இன்று அவர் சொன்னவற்றை நான் பதிவுசெய்யமுடியாது. என்றாவது அவரை மையமாக்கி ஒரு நாவலை எழுதலாம். பலமுறை அவற்றை எழுதும்படி அவரிடம் சொல்லியிருக்கிறேன். கடிதம் எழுதியிருக்கிறேன். அவருக்கு ஆர்வமிருக்கவில்லை

அவர் எழுத ஆர்வம் கொண்டது பாலியலை மட்டுமே என அவரது நாவல்கள் காட்டுகின்றன. ஆனால் அவ்வகையில் மிக ஒதுங்கிய ஒரு வாழ்க்கைமுறையையே அவர் கொண்டிருந்தார். அதனால்தான் போலும், அவரது பகற்கனவுகள் இவ்வகையில் பீறிட்டன.

தஞ்சை பிரகாஷின் இளமைப்பருவம் கடினமானது. அவருக்கு வளரிளம்பருவத்தில் எலும்புப்புற்றுநோய் வந்தது. எந்த வகையான சிகிழ்ச்சைகளுக்கும் அடங்காமல் அது முற்றியது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஒருமுறை சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தரின் உரையை கேட்கச்சென்றிருந்தார்.நீட்டிய கையிலிருந்து சீழ் ஒழுகி தரையில் தேங்கியது. சுவாமி சகஜானந்தர் ‘What is happening there?” என்று கேட்டார். பிரகாஷ் தன் நோயைப்பற்றிச் சொன்னார்

சுவாமி சகஜானந்தர் அப்போது இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருக்கே புற்றுநோய் இருந்தது. அவர் வழிகாட்ட இயற்கை மருத்துவத்திற்குச் சென்ற தஞ்சை பிரகாஷ் பிழைத்துக்கொண்டார். ஆனால் நோய் குணமாகி அவர் முற்றிலும் மீள பதினைந்தாண்டுக் காலம் ஆகியது. அவரது இளமையை முழுக்க அந்நோயே ஆக்ரமித்திருந்தது

ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஹெரால்ட் ராபின்ஸும் தஞ்சை பிரகாஷை நோயின் சோர்விலிருந்து காப்பாற்றியதாக ஒருமுறை சொன்னார். அவருக்கே உரிய நக்கலுடன் ’பத்துபக்கம் ஜேகே பத்துபக்கம் ஹெரால்ட் ராபின்ஸ். தெம்பாயிருவேன்’ என்றார்.

கரமுண்டார் வீடு வந்தபோது அவருக்கு நான் எழுதினேன். “இது பொய். பொய்யை விரும்பும் வாசகர்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் என் வரையில் அறுவைசிகிழ்ச்சைக் கத்தியின் இரக்கமின்மை கொண்டவனையே நல்ல வாசகன் என்பேன். இது வாழ்க்கையல்ல என்று இந்த நாவலின் எல்லா வரிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன’.

அதற்காக தஞ்சை பிரகாஷ் என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை. ஆனால் எம்.வி.வெங்கட்ராம் இறந்தபோது நான் தினமணியில் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் எம்.வி.வி.யின் இலக்கியப்பங்களிப்பை கறாராக மதிப்பிட்டிருந்ததை கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் போட்டிருந்தார். பெரும்பாலும் சுந்தர ராமசாமியை நோக்கியே அந்த வசைகள் அமைந்திருந்தமையால் நான் பதில்போடவில்லை. பின்னர் இன்னொரு நான்குவரி கடிதம் வந்தது, உடல்நிலை குறித்து. அதுவே கடைசி.

தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கைத்தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார். ஜானகிராமன் நெடி அதிகமிருந்தாலும் அவை வாசிக்கத்தக்கவை

ஜெ

ஸ்ரீரங்க : முதலில்லாததும் முடிவில்லாததும்

முந்தைய கட்டுரையானைமுகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28