வெட்டம் மாணி:கடிதங்கள்

வெட்டம் மாணி குறித்த கட்டுரைக்கு [ மரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி ] நன்றி ஜெயமோகன். மிகப்பெரிய அளவில் இந்த நாட்டு மக்களிடையே உருவாக்கப்படும் சுவர்களுக்கும் அந்த சுவர்களுக்கு அப்புறமும் இப்புறமும் அணிதிரளும் ஆயுதங்களுக்கும் அப்பால் பாலங்களை ஏற்படுத்தும் இத்தகையவர்களின் அர்ப்பணிப்புக்களும் அதனை குறித்து நம்முடைய இருள் சூழ்ந்த சூழலில் பேசப்படுவதுமே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கேரள – தமிழ்நாட்டு சூழல்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தமிழ்நாட்டைக் காட்டிலும் பன்மடங்கு மோசமான சாதிய சமுதாயமாக திகழ்ந்த கேரளத்தில் நாராயணகுரு எவ்வித வெறுப்பியல் கோட்பாட்டுக்கும் இரையாகாமல் ஒரு சீர்திருத்த/சமூக உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கத்தை உருவாக்கினார். 1927 களில் ஒரு சிரியன் கிறிஸ்தவர் சமஸ்கிருத ஆசிரியராகும் சாத்தியம் அங்கு நிலவியிருக்கிறது. நிச்சயமாக இந்த சூழலுக்கும் நாராயணகுருவுக்கும் தொடர்பிருந்திருக்கும் இல்லையா? வெட்டம் மாணிக்கும் குருவுக்கும் இருந்த தொடர்பு அல்லது குருவின் இயக்கத்தால் அவருக்கு ஏற்பட்ட தாக்கம் ஆகியவை குறித்து தாங்கள் ஏதாவது தரவுகள் தர இயலுமா?

சமஸ்கிருத வெறுப்பு என்றைக்கும் கேரளத்தில் புயலடித்தது கிடையாது. தமிழ்நாட்டில் சமுக சீர்திருத்தமல்ல ஒரு வெறுப்பியல் வளர்ப்பே இயக்கமானது. சமூக அவலங்களை முதலாக்கி அதன் மூலம் மரபினை ஐரோப்பியர் முன்வைத்த இனவாத அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்து பிரச்சாரம் செய்தது அது. எனவேதான் இன்றைக்கும் வெறுப்பு மட்டுமே இயக்கங்களாக இயங்கிவருகின்றன. பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்பது எந்த வன்முறையையும் நியாயப்படுத்திவிடும். பார்ப்பனியத்தை எதிர்ப்பதென்பது மரபினை மட்டையடியாக நிராகரிப்பதை நியாயப்படுத்திவிடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகாவிலும் அங்கங்குள்ள ஆதிகுடிகளையும் வந்தேறிகளையும் இனங்கண்டு ஒரு வெறுப்பியல் இயக்கத்தை நடத்தலாம். இங்கு மரபில் கிடைக்கும் சமூக விடுதலைக்கான வாய்ப்புகள் வேண்டுமென்றே நிராகரிக்கப்படும். அந்த வெற்றிடத்தில் வன்மமும் வெறிகொண்ட வெறுப்பும் வந்து அமர்ந்து கொள்ளும். அபிதான சிந்தாமணியை நாம் நிராகரித்தோம் என்றால் – அது காட்டும் சிக்கலான சமுதாய வரலாற்றின் செய்தி நமக்கு தேவை இல்லை. அது காட்டும் சமுதாய அமைப்பு சமூக நீதி கொண்ட அமைப்பல்ல. ஆனால் பார்ப்பனிய ஆரிய வந்தேறிகள் இங்கு வாழ்ந்த ஆதிகுடிகளை தந்திரமாக ஆட்சி செய்தது குறித்த ஒற்றைக் கோட்டு சித்திரமும் இல்லை. எனவேதான் இத்தகைய சிந்தனைகள் நமக்கு தேவையும் அல்ல. தெருவோர பழைய புத்தகக் கடையில் வையாபுரிபிள்ளையின் இலக்கிய உதயம் நான்காம் தொகுதி ஒன்றைப் பார்த்தேன். அதன் முன்னட்டையில் கிறுக்கியிருந்த வாசகங்கள் – ‘தமிழ் அறிஞர்களின் வரிசையில் இவ்வாசிரியன் ஒரு ஆரிய அடிவருடி’. வெட்டம் மாணியின் நூல்கள் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை அருகே இருக்கும் தெருவோர பழைய புத்தகக் கடைகளில் ‘கேரள ஆசிரியர்கள் வரிசையில் இவ்வாசிரியன் ஒரு இந்து/ஆரிய/கிறிஸ்தவ/பூர்ஷ்வா/ நிலவுடமையாள/மார்க்சிய இன்னபிற அடிவருடி’ எனக்கிறுக்கி கிடைக்காதென்றே நினைக்கிறேன்.  அபிதான சிந்தாமணியை புறக்கணித்தோம். நமக்கு ஒரு அய்யன்காளியோ நாராயணகுருவோ கிடைக்கவில்லை. நமது பிள்ளைகள் அம்பேத்கர் பெயராலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயராலும் தங்கள் மண்டைகளை கல்லூரி வாசல்களில் உடைத்துக்கொண்டு விழுந்து கிடக்க டிவிகளை பார்த்து தூர ஊர்களில் பெற்றோர் உறைந்து நிற்க சமூகநீதி பட்டொளி வீசி பறக்கிறது தமிழகமெங்கும்

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள ஜெயமோகன்,

வெட்டம் மாணி சொன்னவை என்னை மிகவும் பலமாகச் சிந்திக்க வைத்தன. மகாபாரதத்தை ஏன் நம்மால் உலக இலக்கியப் பரப்பில் கொண்டுசெல்ல முடியவில்லை? கப்ரியேல் கர்ஸியா மார்க்கேஸ் மகாபாரதத்தை ஆதர்ஸமாகக் கொண்டுதான் ‘நூறுவருடத் தனிமையை’ எழுதினார் என்று சொல்லியிருக்கிறார். ஏன் நம்மால் அப்படி எழுத முடியவில்லை? எழுதினாலும் சொல்ல ஏன் நாம் துணிவு கொள்வதில்லை?

வெட்டம் மாணி சொல்வது மிக மிக உண்மை. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் அதற்குரிய ஒரு இமேஜ் பேஸ் உள்ளது .அது ஒரு தனியான மொழி தான். அதை வைத்துத்தான் நாம் இலக்கியம் உருவாக்க முடியும். நம்முடைய இலக்கியங்களின் ஆழத்திலே அந்த மொழி இருக்கும். நாம் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்குள்ளே இருக்கும்.  ஐரோப்பிய இலக்கியங்களுக்குள் அவர்களின் பண்டைய இலக்கியங்கள் உள்ளன

நாம் மகாபாரதத்தை பள்ளிகளில் கற்பிக்கிறோமா? இளைய தலைமுறைக்கு மகாபாரதம் தெரியுமா? பிறகெப்படி நம்மால் உலக அளவில் அதை முன் வைக்க முடியும்? எப்படி நம்மால் அசலான இலக்கியம்  உருவாக்க முடியும்?

ஏராளமான கேள்விகள்

குமாரகுரு

அன்புள்ள குமாரகுரு

உங்கள் வினாக்கள் என்னுடையவையும் கூட. மகாபாரதம் ராமாயணம் புராணங்கள் போன்றவை மட்டுமல்ல இங்குள்ள இந்து, பௌத்த, சமண சிந்தனைகளும் அவை சார்ந்த சிற்ப மரபும் சேர்ந்துதான் நம்முடைய ஆழ்மனத்து மொழியை உருவாக்குகின்றன. அவற்றை நாம் பழங்குப்பை என்று நிராகரித்து ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களைப் படித்து அவற்றை ஒட்டி போலியாக இலக்கியம் செய்வதனால்தான்ந் அம்முடைய எழுத்துக்கள் இந்த அளவுக்கு அடிப்ப்பாஇ வலிமை இல்லாமல் இருக்கின்றன

தமிழ் புதுக்கவிதையில் சிஸிபஸ் பற்றி எத்தனையோபேர் எழுதியிருக்கிறார்கள். எங்காவது பகீரதன் பற்றி எழுதியிருபபர்களா என்றால் இல்லை

வெட்டம் மாணி கவலைபப்டுவதும் சொல்வதும் இதையே. இதற்காகத்தான் அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்

பிகு. கடிதங்களை பி டி எஃப் வடிவில் அனுப்பாதீர்கள். நான் அதை எழுத்துரு மாற்றம் செய்யும்போது ஏராளமான சிக்கல்கள். கிட்டத்தட்ட பல கடிதங்களை நானே திருப்பி தட்டச்சிட வேண்டியிருக்கிறது. கோப்பு இணைப்பாகவே அனுப்பலாம்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணையச்சிக்கல்