அழியாத சாட்சி

Saatchi Mozhi

அரசியல் விவகாரங்களில் உடனடியாகக் கருத்து சொல்லக்கூடாது என்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி. ஏனென்றால் அவ்விவாதம் சூடாக இருக்கையில் கருத்துக்கள் பல்லாயிரம் எதிர்கருத்துக்களை மட்டுமே உருவாக்குகின்றன. பிற எதையும் பேசமுடியாமலாகிறது. நம்மூரில் அரசியல் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது நிகழ்கின்றன

​ஓர் அரசியல்நிகழ்வில் அதன் உடனடிப்பெறுமானத்திற்கும் அப்பால் சென்று எப்போதைக்குமென சொல்வதற்கு ஏதேனும் உள்ளது என்றால், எழுத்தாளனாக பிறர் குறிப்பிடாத எதையாவது என்னால் சொல்லமுடியும் என உணர்ந்தால் மட்டுமே நான் கருத்துச் சொல்லியிருக்கிறேன்

என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெருக்கமாகச் செல்பவனாக நிறுத்திக்கொள்ள முயல்கிறேன். அழகுணர்வும் நீதியுணர்வும் இலக்கியத்தின் இரு அடிப்படைகள். அந்நிலையில் நின்றபடி எதைச் சொல்லமுடியும் என பார்க்கிறேன். ஆகவே என்னை ஒரு சாட்சி மட்டுமாக நிறுத்திக்கொள்கிறேன்.

அந்த சாட்சியின் சொற்கள் இவை. அரசியல் என்றும் சமகாலத்தன்மை கொண்டது. ஆனால் எழுத்து காலம்கடந்தது. எழுத்தாளனும் காலம்கடந்தவனே. அவ்வகையில் இவை அழியாத சாட்சிமொழிகள் என உணர்கிறேன்

ஜெ
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சாட்சிமொழி நூலின் மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை