உருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன் அவன் நின்றுபேசும் சூழலின் மாற்றத்தையும் அறியமுடிகிறது
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகை கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ள்ளேன் என்று படுகிறது
புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது.அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை தமிழில் நிகழ்ந்தது இதுதான்.
இலக்கியமுன்னோடிகள் வரிசை என ஏழு நூல்களாக தமிழில் எனக்கு முன்னால் எழுதியவர்களை மதிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இந்நூல் அவ்வெழுத்துக்களின் தொடர்ச்சி. இதற்கு அடுத்த தலைமுறை இன்று எழுதவந்துள்ளது. அவர்களைப்பற்றியும் எழுதுவேன் என நினைக்கிறேன்
ஜெ
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் புதியகாலம் விமர்சனநூலின் மறுபதிப்புக்கான முன்னுரை