பகுதி மூன்று : முதல்நடம் – 7
நாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி ஆடினாள். “எங்களுக்குள்ளும் எழுவான் பார்த்தன். கதைகொண்ட பீமன்” என்று முதியவர் ஒருவர் கூவினார். “மண்ணில் இதுவரை ஒளிந்துகிடந்த குலம் நாங்கள். இதோ உறைகீறி முளைத்தெழுந்துள்ளோம்.”
ஓர் இளைஞன் எழுந்து ஃபால்குனை அருகே வந்து “இன்றுவரை எங்களுக்கென பெயரில்லை. எல்லையூர் என்றே அழைத்தோம். இனி எங்களுக்கு பெயர் வேண்டும். கொடியும் அடையாளமும் வேண்டும். நீங்களே ஒரு பெயரைச் சொல்லுங்கள்” என்றான். “இந்த ஆற்றால் உருவான ஊர் இது. அதுவே பெயராக இருக்கட்டும்…” என்றாள் ஃபால்குனை. “இது சிவதாவின் கொடை. உங்களை சிவதர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள். சிவதம் என இவ்வூர் அழைக்கப்படட்டும்.”
“சிவதையின் மைந்தர் நாம்! ஆம்!” என்று ஊர்த்தலைவர் கூவினார். “சிவதர்களே!” என்று கைவிரித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அதை ஏற்று கூச்சலிட்டனர். “சிவதர்கள் எவருக்கும் அடிமைகளில்லை. சிவதர்கள் எவருக்கும் பணிவதில்லை” என்று ஒருவன் கைநீட்டி அறைகூவினான். “எங்களுக்குள்ளும் எழுக இளைய பாண்டவர்கள். எங்கள் குடிப்பெயரையும் பாடட்டும் அமரகவிஞனான மகாவியாசன்.” “ஆம் ஆம் ஆம்” என்று கூட்டம் ஆராவாரமிட்டது.
மணிபுரியின் வீரர்கள் அந்த எழுச்சியைக் கண்டு ஒதுங்கி அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் மதுக்குவளைகளை நீட்டிய ஊர்த்தலைவர் “இனிமேல் நீங்கள் இங்கு வரவேண்டியதில்லை வீரர்களே. உங்கள் அரசரிடம் சொல்லுங்கள்” என்றார். ஒரு பெண் “எங்கள் விழவுகளுக்கு வாருங்கள். கள்ளுண்டு களிநடமிட்டு மீளுங்கள். உங்களுக்கு வாளும் தோளும் தேவையென்றால் சொல்லுங்கள். எங்கள் மைந்தர் எழுந்து வருவார்கள்” என்றாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர்.
மறுநாள் மணிபுரியின் புரவிப்படை கிளம்பியபோது ஃபால்குனையும் உடன் செல்லப்போகிறாள் என்ற எண்ணமே அவர்களுக்கு எழவில்லை. அவள் என்றும் அங்கிருந்தாள் என்றும் எப்போதும் இருப்பாள் என்றும் எண்ணியிருந்தனர் போல் தோன்றியது. “சிவதர்களின் குலதெய்வம் அணங்குவடிவம் கொண்டு வந்த கொற்றவை. இங்கு எங்கள் மன்றில் அவள் என்றுமிருந்து பலிகொண்டு அருள்புரிவாள்” என்றான் குலப்பாடகன். “அவளுக்குரியது எரியின் நிழல். அவள் முற்றத்தில் தீமூட்டுவோம். அதன் எரிநிழல் அவள் மேல் விழச்செய்து வணங்குவோம்.”
ஃபால்குனை காலையில் தன் ஆடைகளை தோல் மூட்டையில் கட்டிக்கொண்டிருக்கும்போது அவள் குடிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் “எங்கு செல்கிறாய் ஃபால்குனை?” என்றான். “மணிபுரிக்கு” என்றாள். “நானும் உடன் செல்லும்படி இளவரசரின் ஆணை இருந்ததல்லவா?” அவன் திகைத்து நின்று பெரிய விழிகளை உருட்டி சற்றே தலைசரித்து “நீயா? நீ ஏன் செல்ல வேண்டும்?” என்றான். அவன் தலை உடலுக்குப் பெரிதாக இருந்தமையால் எப்போதும் தலை சரிந்தே இருக்கும். ஃபால்குனை “இளவரசரின் ஆணை” என்றாள்.
அவன் ஓடிவந்து அவள் ஆடையைப் பற்றி “செல்ல வேண்டாம்” என்றான். “இல்லை மைந்தா, நான் சென்றாக வேண்டும்” என்றாள். “இல்லை, செல்ல வேண்டாம். செல்ல வேண்டாம்” என்று அவன் அவள் ஆடையைப் பற்றி இழுத்து நாவுடைந்து அழுதான். அவள் அவன் பெரிய தலையை மெல்ல வருடி “ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்களுக்கு ஆணையிடும் சொல் என ஒன்று எப்போதும் உள்ளது மைந்தா. நான் சென்றாகவேண்டும்” என்றாள்.
அவன் அழுதபடியே வெளியே ஓடி “ஃபால்குனை இன்று செல்கிறாள். புரவி வீரர்களுடன் அவளும் மணிபுரிக்குச் செல்கிறாள்” என்றான். கூவியபடி அவன் ஓடி அணுக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் அதிர்ந்து அசையாமல் நின்றனர். ஒருவன் “ஃபால்குனையா? ஏன்?” என்றான். “அரசாணை என்கிறாள்.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிய பின்னர் ஓடி ஃபால்குனையின் அறைக்கு வெளியே கூடி திகைப்புடன் நோக்கி நின்றனர். ஒரு சிறுவன் உள்ளே சென்று “விடமாட்டோம்… நீ போக நாங்கள் விடமாட்டோம்” என்று கூவினான்.
அவள் இறங்கி வெளியே வந்ததும் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் முதியவரும் அனைவரும் கூடிநிற்கக் கண்டாள். ஒவ்வொருவரின் விழிகளிலும் அவளுக்கான மன்றாட்டு இருந்தது. பெண்களில் சிலர் கண்ணீர் வழிய உதடுகள் அதிர அழுதுகொண்டிருந்தனர். அவள் ஆடையைப் பற்றிய சிறுவர்கள் அழுதபடி “வேண்டாம். போகாதே” என்றனர். இரு சிறுவர்களை அள்ளி தன் இடையில் இரு பக்கமும் வைத்தபடி அவர்கள் நடுவே வந்து அவள் புன்னகை புரிந்தாள்.
கலிகன் சினத்துடன் “இத்தனைபேரும் விழிநீர் சிந்துகிறார்கள். நீ ஒரு கணமும் உளம் கலங்கவில்லை. உன் கண்களில் துயரமே இல்லை” என்றான். அவள் “இல்லை. நான் பிரிவில் கலங்குவதில்லை” என்றாள். “ஏனெனில் நான் சென்ற அனைத்து திசைகளையும் பிரிந்தே வந்திருக்கிறேன்.” முதியவன் சினத்துடன் “ஏனென்றால் நீ பெண்ணல்ல. அணங்கு. மானுட உணர்வுகளற்ற அணங்கு” என்றான். ஃபால்குனை “நான் எளியவள் முதியவரே” என்றாள். “ஆகவேதான் உறவுகளெனும் கட்டிலாப் பெருக்கை உணர்ந்திருக்கிறேன்.”
முதியவர் “பிரிவில் துயருறவில்லை என்றால் நீ அன்பை அறிந்தவளே அல்ல” என்றார். “இதுவரை இங்கே எங்களுடன் விளையாடினாய். எங்களை உன் களத்தின் காய்களென மட்டுமே கண்டாய். ஆடிமுடிந்ததும் களம் கலைத்து கிளம்புகிறாய்.” ஃபால்குனை “ஆம், ஒருவகையில் அது உண்மை” என்றாள். “இதோ, இந்த ஆற்றுவழி கடந்து நீ சென்றதும் எங்களை மறந்துவிடுவாய்” என்றார். “ஆம், பெரும்பாலும் அவ்வாறே. இங்கிருக்கையில் நான் நேற்றிருந்த ஊர்களை எண்ணவில்லை அல்லவா?” என்றாள். “அப்படியென்றால் நாங்கள் உன் மேல் கொண்ட அன்பிற்கு பொருள்தான் என்ன?” என்றான்.
ஃபால்குனையின் விழிகள் மாறின. “அன்பெனப் படுவதை குறித்து எந்நேரமும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அது என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இக்குழந்தைகளைக் காண்கையில் என் உள்ளம் நெகிழ்கிறது. இப்பெண்குழந்தைகள் கவர்ந்துசெல்லப்படுவதைப் பற்றி சொன்னீர்கள். நான் வில் பூண்டதும் உயிர்கொண்டதும் இவர்களுக்காக மட்டுமே” என்றாள். பின்பு பெருமூச்சுடன் “இவர்களுக்காக உயிர் துறக்கவும் என்னால் சித்தமாக முடிகிறது. ஆனால் இங்கு கட்டுண்டு இருக்க இயலவில்லை” என்றாள்.
“அன்பென்பது அதுதான்” என்றான் கலிகன். “என்றுமென என்னைப் பிணைக்காத அன்பென்று ஒன்று உண்டா என்று வினவி அலைகிறேன். எங்கோ அது இருக்கலாம். அதுவரையிலும் தேடிச் செல்வதே என் பயணமாக இருக்கலாம். அங்கு செல்லும் பொருட்டு எங்கும் தடைகளை கடந்து செல்லவே நான் விழைகிறேன்” என்றாள். “அப்படியொரு அன்பு இல்லை. அன்பென்பதே பிணைப்புதான்” என்றான் கலிகன். “அளிப்பதும் பெறுவதுமான முடிவிலா விளையாட்டு அது.” ஃபால்குனை “நான் பெறும் அன்பு எங்காவது கணக்கு வைக்கப்படும் என்றால் அது எனக்குத் தளையே. நான் கட்டுண்டிருக்க விரும்பவில்லை” என்றாள்.
ஒரு முதியவள் தளர்ந்தாடிய குரலில் “அன்பின் பொருட்டு தளைகளை போட்டுக்கொள்வதன்றி மானுட வாழ்க்கைக்கு பொருள் ஏது? இளையவளே, நீ பிழையான வழியில் செல்கிறாய்” என்றாள். “கேள், இப்புவியில் அனைத்து மரங்களும் வேர்களால் மண்ணைப் பற்றிக்கொண்டுதான் நின்றிருக்கின்றன. அவ்வேர்கள் தங்களை மண்ணில் தளையிட்டிருக்கின்றன என்று மரங்கள் எண்ணினால் என்ன ஆகும்? அவை நீர்ப்பாசியைப் போன்று அலையடித்து திசையின்றி ஒழுகிச்செல்லும். ஒருநாளும் நிலைகொள்ளாத அவை விண்ணையும் மண்ணையும் அறிவதில்லை.”
“நீர்ப்பாசிகளின் வேர்களை நீரில் மூழ்கிச்சென்று பார்த்திருக்கிறாயா? பற்று தேடித் தவிக்கும் ஒருகோடி கண்ணிகள் மட்டும்தான் அவை” என்று சொன்னபடி முதியவள் அருகே வந்தாள். “அன்பு எனும் தளைபூட்டி இம்மண்ணில் நிலைகொள்ளவே மானுடன் பிறக்கிறான். நீ அறிந்திருக்கமாட்டாய். இதோ என் மைந்தன். இவன் என் கருவறைவிட்டு வெளியே வந்தபோது அவனையும் என்னையும் இணைக்கும் அழியாத் தளையை என் ஊன்விழிகளால் கண்டேன். அதை வெட்டி அவனை விடுவித்தபோது அப்புண்ணின் எச்சம் இங்கே என் வயிற்றில் அலையலையெனப் பதிந்தது. அதோ அவன் வயிற்றில் அது தெய்வங்கள் அளித்த அடையாளமாக நின்றுள்ளது…”
அவள் கைகளை விரித்தாள். “உன் உடலில் தொப்புள் இருக்கும் வரை நீ தளையற்றவள் ஆவதில்லை.” ஃபால்குனை “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால்…” என்றாள். முதியவள் “அதோ நம் தலைமீது வானத்தின் முடிவிலி இருப்பதை காண்கிறாயா? வானம் என்றால் என்னவென்று அறிவாயா? அது நம் மீது நிறைந்திருக்கும் பொருளின்மையின் பெருவெளி. பேராற்றல் மிக்க விசையுடன் இங்குள்ள ஒவ்வொன்றையும் உறிஞ்சி தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் அப்பெருவெளியை அஞ்சி உருவாக்கப்பட்டவையே. வேர்களால், உறவுகளால், விழைவுகளால், கடமைகளால், இங்கு தன்னைப் பிணைத்துக்கொள்ளாத அனைத்தும் அதை நோக்கி வீசப்படுகின்றன” என்றாள். “தெய்வங்களும் அவியால் மண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிக!”
முதியவளின் முகத்தை நோக்கி ஃபால்குனை உடல் சற்றே அதிர்ந்து “உண்மை அன்னையே, முற்றிலும் உண்மை” என்றாள். “ஆனால் என்னை பொறுத்தருள்க! அறிந்துகொள்வதினால் எவரும் அதை கடைப்பிடிப்பதில்லை. எது அவர்களுக்கு இயல்பானதோ அதையே ஆற்றுகிறார்கள். நானறிவேன், மானுடனுக்கு கட்டிலா விடுதலை என்று ஒன்றில்லை என. ஆனால் கட்டின்றி பறந்தலைவதும் எங்கும் நிலைகொள்ளாமல் இருப்பதுமே என் இயல்பு. இப்பயணம் என்னை எங்கு கொண்டு செல்கிறது என்பதை என்னுள் உறையும் தெய்வங்களே அறியும். அவை என்னை வழிநடத்தட்டும்.”
“இங்கு நீ நிறைந்திரு இனியவளே” என்று முதியவர் தழுதழுத்த குரலில் சொன்னார். “உனக்காக நாங்கள் வாழ்கிறோம். இச்சிற்றூர் உன் கால்பட்டு ஒரு பெருநகராகட்டும். முடியும் கோலும் கொண்ட நாடென்று எழட்டும்…” ஃபால்குனை “எப்பொருளும் தன் எடையைவிட மிகுதியான அழுத்தத்தை மண்மேல் அளிக்க முடியாது என்பார்கள். நான் எண்ணமெனும் வெண்பஞ்சு சூடிய விதை. என்னை காற்று அள்ளிக்கொண்டு செல்கிறது” என்றாள். அவர் கால்களைத் தொட்டு தன் தலைமேல் சூடியபின் திரும்பி புரவியை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் விம்மல்கள் ஒலித்தன. சிறுமைந்தர் கதறி அழுதபடி அன்னையரின் ஆடைகளில் முகம் மறைத்துக்கொண்டனர்.
புரவிகளின்மேல் வீரர்கள் ஏறிக்கொண்டனர். ஃபால்குனை இறுதியாக அவ்வூரை நோக்கியபின் தன்புரவி மீது ஏறிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். அவர்கள் கண்ணீருடன் நோக்கியபடி தோள்கள் முட்டித்ததும்ப தங்கள் ஊர் வாயிலில் குழுமினர். குழந்தைகள் வீறிட்டு அழுதபடியே கைநீட்டி கூவியபடி புரவிகளுக்குப் பின்னால் சற்று தூரம் ஓடின. புரவிகள் ஊர்ச்சாலையைக் கடந்து ஆற்றங்கரையின் பாதையை அடைந்தன. அவற்றின் குளம்படியோசை தேய்வது வரை அவர்கள் அங்கேயே விழிகளென நின்றனர். ஃபால்குனை ஒருகணமும் திரும்பிப் பார்க்கவில்லை.
சிவதா பாறைகளில் சரிந்து நுரைபொங்கி சிதறி மீண்டும் இணைந்து மலைச்சரிவிறங்கி தாழ்வரையை அடைந்து அங்கே அசைவற்றதென கிடந்த வராகநதியை அடைந்தது. ஆற்றங்கரைச் சாலையில் நின்று நோக்கியபோது வராகநதியின் மீது தக்கைமரத்தாலான தோணிகள் ஒற்றைப்பாய் விரித்து முதலைகள்மேல் அமர்ந்த நாரைகள் போல சென்றுகொண்டிருந்தன. தோணிக்காரர்களின் பாடல்கள் தொலைவிலிருந்து வண்டு முரள்வதுபோல கேட்டன. நீரொளி கண்களை நிறைத்தது.
நதிக்கரையை அடைந்தபோது அங்கே கரையில் நின்றிருந்த படகுகளின் அடியில் மூங்கிலால் பின்னப்பட்ட பெரிய தெப்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஃபால்குனை கண்டாள். “இப்பெரிய ஆறு சீரான ஒழுக்குள்ளது அல்ல. சரிந்திறங்கும் மலைப்பாறைப்பரப்புகள் அவ்வப்போது வரும். படகுகளின் அடிப்பகுதி பாறைகளில் முட்டி உடைந்துவிடக்கூடும் என்பதனால் இவ்வமைப்பு” என்றான் அவளுடன் வந்த வீரன். ஒளிவிட்ட நதி மூன்று இழைகளாக பிரிய அவற்றில் படகுகள் விரிந்தன. நதியொழுக்குகள் சிலந்திவலைச்சரடுகள் என்றும் அவை சிறிய சிலந்திகள் என்றும் ஃபால்குனை எண்ணினாள்.
வராகநதியின் ஓரமாகவே ஆறுநாட்கள் அவர்கள் சென்றனர். செம்மண்நொதிப்பின் மேல் பெரிய மரங்களைப் போட்டு அவற்றின்மேல் மரப்பலகைகளை அடுக்கி உருவாக்கப்பட்டிருந்த சாலை புரவிக்குளம்புகளால் அதிர்ந்து ஓசையிட்டு மரக்கூட்டங்களில் இருந்த பறவைகளை கலைந்தெழச் செய்தது. பொதிசுமந்த கழுதைகளும் அத்திரிகளும் எருமைகள் இழுத்த வண்டிகளுமாக மலைவணிகர் சென்றுகொண்டிருந்தனர். அவ்வண்டிகளின் சகடங்கள் சிறியனவாகவும் ஒருமுழத்துக்குமேல் அகலம் கொண்டவையாகவும் இருந்தன. வணிகர்கள் அவர்களை வாழ்த்த மறுமொழி உரைத்து கடந்துசென்றனர்.
மிக அரிதாகவே ஊர்கள் இருந்தன. மையச்சாலையிலிருந்து ஊர்களுக்குப்பிரியும் வண்டிப்பாதைகளில் வணிகர்களுக்காக நாட்டப்பட்ட கொடிகள் பறந்தன. அவ்வூர்களில் விற்கப்படும் பொருட்களைச் சுட்டும் சிவந்த கொடிகளில் பன்றி, மாடு வடிவங்களும் நெற்கதிரும் வரையப்பட்டிருந்தன. வாங்க விழையும் பொருட்களைச் சுட்டும் மஞ்சள்நிறக் கொடிகளில் கத்திகள், கலங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன. வைரம்போல ஒரு வடிவைக் கண்டு ஃபால்குனை அது என்ன என்றாள். “உப்பு” என்றான் ஒருவீரன். “மலையூர்களில் அவர்கள் உப்புக்காக எதையும் அளிப்பார்கள்.”
தொலைவில் தென்பட்ட ஊர்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தன. மூங்கில்செறிவால் கோட்டையாக சூழப்பட்டவை. மூங்கில் கால்களில் செங்குத்தான கூம்புகளாக எழுந்து மூங்கிலாலும் மரப்பட்டைகளாலும் கூரையிடப்பட்டவை. அங்கே எழுந்த அடுமனைப்புகையின் இன்மணம் வீரர்களை மயக்கியது. “அடுமனை போல் இனியவை ஏதுமில்லை இவ்வுலகில். அடுமனையில் ஊண்புகை சூழ நின்றிருக்கும் பெண்ணே அழகி” என்றான் ஒருவன். “அடுமனைகள் அல்ல அவை, வேள்விக்களங்கள். விண்ணாளும் தெய்வங்களின் தோழி நம் வயிற்றில் எழும் பசி” என்றான் கூடவே வந்த பாணன்.
ஏழாவதுநாள் அவர்கள் மணிபுரத்தை சென்றடைந்தனர். சாலைகளில் வணிகர்களின் குழுக்கள் கூடியபடியே சென்றன. தொலைவில் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்பதை அறிந்த ஃபால்குனை “மணிபுரம் சதுப்பில் அமைந்துள்ளதா?” என்றாள். அவள் கேட்டதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மிகப்பெரியது” என்று ஒருவன் சொன்னான். சதுப்பு என்றால் அதைச்சூழ்ந்து மூங்கில்காடே கோட்டையென ஆகியிருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். எரியம்புகளை தடுக்கமுடியும் என்றால் அது வலுவான அரண்தான் என்று தோன்றியது.
ஆனால் புரவிகள் அணுகியபோது அது ஒரு பெரிய ஏரியின் கரை என்று அறிந்தாள். “லோகதடாகம் என்று இதற்குப் பெயர். எங்கள் மொழியில் ஆறுகளின் தொகை என்று பொருள்” என்றான் உடன்வந்த முதியவீரன். அந்த ஏரி விழிதொடும் தொலைவுவரை ஒளிகொண்ட நீர்ப்பரப்பாக தெரிந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான சிறிய பசுந்தீவுகள் இருந்தன. அவற்றிலெல்லாம் வெண்நாரைகளும் கொக்குகளும் கூழைக்கடாக்களும் செறிந்திருந்தன. முகிலென கூட்டமாக வானில் எழுந்து தங்கள் நீர்நிழல்களுடன் இணைந்து சுழன்று மீண்டும் அமைந்தன. அவற்றின் ஒலி அங்கே நிறைந்திருந்தது.
கரையோரத்து மண்குன்று ஒன்றின்மேல் மூங்கில்கால்களில் எழுந்த காவல்மாடம் நின்றது. அதிலிருந்த வீரர்களின் வேல்முனைகளின் ஒளிமின்னல்கள் கண்ணில்பட்டன. ஏரிக்கரை கரியவண்டல்படிவாக இறங்கிச்சென்று அலைவளைவுகளாக தளும்பிய நீர்விளிம்பை சென்றடைந்தது. மெல்லிய உலர்களியில் பறவைக்கால்தடங்களின் நுண்ணிய எழுத்துக்கள் செறிந்து பரவியிருந்தன. நூற்றுக்கணக்கான மென்மரக்குடைவுப் படகுகள் முதலைக்கூட்டங்கள் போல கரைகளில் கிடந்தன.
ஏரிக்கரையோரமாகவே பெரிய பொதிமுற்றமும் அங்காடியும் அமைந்திருந்தது. அத்திரிகளிலும் கழுதைகளிலும் வண்டிகளிலும் வந்த பொதிகளை சுமைதூக்கிகள் இறக்கி அங்கே மூங்கில்கால்களில் எழுந்த பொதிமாடங்களில் அடுக்கினர். பூத்தகாடு போல கொடிகள் பறந்த அங்காடிவெளி இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. அங்காடிக்கூரைகளின் மீது பெரிய வெண்நாரைகள் கழுத்து வளைத்து அலகுகளை மார்பின்மேல் புதைத்து அமர்ந்திருந்தன. பெருஞ்சிறை முறங்களை விரித்து காற்றோசையுடன் வானில் எழுந்து நிழல் தொடர சுற்றிவந்தன. நாணோசை போல கூவி பறந்து ஏரியை நோக்கி சென்றன.
பொதிகளை ஏற்றிக்கொண்ட படகுகளை பெரிய கழிகளால் உந்தி ஏரிக்குள் கொண்டுசென்றனர். சிறியபச்சைத்தீவுகளில் மூங்கிலால் ஆன மாடங்கள் அமைந்திருந்தன. சில சிறுதீவுகளில் ஒரே ஒரு குடிலுக்கே இடமிருந்தது. ஃபால்குனை “மணிபுரி எங்குள்ளது?” என்றாள். கூடவந்த வீரன் “இதுதான் மணிபுரி” என்றான். “எது?” என்றாள் ஃபால்குனை. “இந்த ஏரிதான் நகரம். அதோ அங்குள்ளது அரண்மனை” என்று சுட்டிக்காட்டினான் ஒருவன்.
ஏரிக்கு நடுவே எழுந்த குன்றின்மேல் முடிசூடியதுபோல பொன்மூங்கில்களால் கட்டப்பட்ட பெரிய மாளிகை தெரிந்தது. ஏழு கூம்புக்கோபுரங்கள் கொண்டிருந்தது அது. குன்றின் சரிவில் சிறிய கூம்புவடிவக் கூரைகொண்ட மூங்கில்வீடுகள் இருந்தன. மணிபுரியின் சிம்மக்குருளைச் சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடிகள் காற்றில் பறந்தன. குன்றின் முகப்பில் காவல்மாடத்திலிருந்த பெருமுரசின் தோல்வட்டப்பரப்பு வெயிலில் மின்னியது.
“கோட்டை என ஏதும் இல்லையா?” என்று கேட்டதுமே தன் வினாவின் பொருளின்மையை ஃபால்குனை உணர்ந்தாள். “இந்த ஏரியே பெரும் கோட்டை” என்றான் வீரன். “அயலவர் இதை கடக்க முடியாது” என்றான் வீரன். ஃபால்குனை அந்த ஏரியின் சிறுதீவுகளை நோக்கினாள். பெரிய தீவு ஒன்றில் ஐம்பது இல்லங்கள் கொண்ட தெருவே இருந்தது. எதிலும் மரங்கள் இல்லை. இடையளவு உயரமான நாணல்கள் அன்றி எந்த செடியும் தென்படவில்லை.
“இந்த ஏரிமுழுக்க நகரம்தான்” என்றான் வீரன். படகுகள் அணுகியதும் புரவிகள் கால்களை உதறியபடி அணுகி குனிந்து முகர்ந்து மூச்சுசீற மெல்ல காலெடுத்துவைத்து ஏறி சமன்கொண்டு நின்றன. ஃபால்குனை ஒரு படகில் ஏறியதும் படகுகள் நீரில் சென்றன. அருகே இருந்த சிறுதீவு அந்தப்படகளவுக்கே இருந்தது. அதில் கூடுகட்டியிருந்த நாரை ஒன்று சிறகடித்து மேலெழுந்தது. அக்கணம் ஃபால்குனை அறிந்தாள், அது தீவல்ல, மிதக்கும் நீர்நாணல்கள் பின்னி உருவான மிதவை என்று. வியப்புடன் அவள் எழுந்துவிட்டாள். “இவை மிதந்தலைகின்றன” என்றாள்.
“ஆம், இங்குள்ள எல்லா தீவுகளும் மிதந்தலைபவைதான்” என்று வீரன் சொன்னான். “இங்கு வரும் வணிகர்கள் இதைப்போல எங்குமே இல்லை என்கிறார்கள்.” ஃபால்குனை மெல்ல அமர்ந்தாள். விழிகளை விலக்கவே முடியவில்லை. சற்று அப்பால் இருபது மாளிகைகள் எழுந்த தீவை நோக்கினாள். “அதுவும் மிதந்து நிற்பதே. இந்த ஏரியின் நீர் ஒவ்வொருநாளும் ஏறியிறங்குகிறது. நீரோட்டம் இரவுக்கு ஒருமுறை திசைமாறுகிறது. ஆகவே மாளிகைகள் இடம்பெயர்ந்தபடியே இருக்கின்றன. அந்தப் பெரிய மாளிகை படைத்தலைவர் சத்ரபானுவுடையது. அவரது தீவை அரசரின் குன்றுடன் பெரிய வடத்தால் இழுத்துக் கட்டியிருக்கிறார்கள்.”
ஒரு சிறிய தீவை அணுகியதும் ஃபால்குனை பாய்ந்து அதன் மேல் ஏறிக்கொண்டாள். அவள் கால்கீழே அது மெத்தைபோல அழுந்தியது. நீரில் மிதக்கும் குழல்கள் போன்ற தண்டுகொண்ட பச்சைநீர்நாணல்களும் ஆம்பல்தண்டுபோன்ற நீர்ப்பாசிகளும் இணைந்து உடல்பின்னி செறிந்த அடித்தளம். அவள் எம்பி எம்பி அசைந்தபோது மெல்ல விரிசலிட்டு நீர் ஊறியது. புல்போல முளைவிட்டு எழுந்து நின்ற நாணல்முனைகளுக்கு நடுவே உலர்புல்லைச் சுருட்டிவைத்து வெண்முட்டையிட்டிருந்தன நாரைகள். அவள் தலைக்குமேல் நாரையிணை ஒன்று தவிப்புடன் சுற்றிவந்தது.
அவள் படகுக்குள் திரும்பியதும் நாரைகள் சிறகுமடித்து வந்தமர்ந்தன. ஒன்று கழுத்தை நீட்டி கேவல் ஒலி எழுப்பியது. திரும்பித்திரும்பி அந்தத் தீவுகளையே நோக்கினாள். விழிகள் ஏமாற்றுகின்றனவா? “தீவுகளை கரையணையச்செய்து பொதிகளை ஏற்றிக்கொண்டபின் நீருக்குள் செல்வார்கள்” என்றான் வீரன். மிதக்கும் நாணல்தீவின் விளிம்பில் தேரட்டையின் கால்களென வெளிறிய செந்நிறநிரையாகத் தெரிந்தன வேர்கள்.
ஃபால்குனை உடைகளை சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தாள். “என்ன செய்கிறாய்?” என்றான் வீரன். “இவற்றின் வேர்களைப் பார்க்கிறேன்” என்றாள். மூழ்கி நீந்திச்சென்றாள். அந்தச் சிறு தீவின் வேர்கள் பல்லாயிரம் மெல்விரல் நுனிகளாக நீரை பிசைந்துகொண்டிருப்பதைக் கண்டாள். உந்தி நீந்தி தீவுகளின் அடியினூடாகச் சென்று காலை உதைத்து மல்லாந்தபோது மேலே இருந்து நீர்ப்படலம் வழியாகக் கசிந்த ஒளியில் வேர்வெளியின் பெருந்தவிப்பைக் கண்டாள்.