ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஊமைச்செந்நாய் கதையை பலமுறை படித்தேன். நான் தமிழில் அதிகம் படித்தது இல்லை. சொல்லப்போனால் நான் தமிழில் படிக்கும் முக்கியமான இதழே உங்கள் இணையதளம்தான். தமிழில் படிப்பது அற்றுப்போனதற்கு என்னுடைய படிப்புச்சூழலும் வெளிநாட்டு வாழ்க்கையும் முக்கியமான காரணங்கள். அதைவிட முக்கியமான காரணம் நான் இளம் வயதில் படித்த தமிழ் எழுத்துக்கள் எனது வாசிப்புக்கு முக்கியமானவையாக தோன்றவில்லை என்பதே. நான் ஒரு காலத்தில் சாண்டில்யனின் நல்ல வாசகன். அதன்பிறகு சுஜாதா. அவ்வளவுதான். ஆனால் சென்ற பதினைந்து வருடங்களாக தீவிரமான இலக்கியவாசகனாகவே நான் இருந்திருக்கிறேன்.

இந்தக்கதையைப் படித்தபோதுதான் இதைப்போன்ற கலைநுட்பம் கொண்ட படைப்புகள் தமிழில் வருகின்றனவா என்ற பிரமிப்பு ஏற்பட்டது. சென்ற சில வருடங்களில் நான் வாசித்த அபூர்வமான கதைகளில் இது ஒன்று என்று சொன்னால் புகழ்ச்சி என்று நினைக்க மாட்டீர்கள் அல்லவா? இது ஒருவன் தாய்மொழியிலும் தன்னுடைய வாசிப்பை மேற்கொண்டாகவேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் உருவாக்கியது. இதில் உள்ள ஏராளமான தகவல்கள் நம் மண்ணையும் வாழ்க்கையையும் அற்புதமாக காட்டுகின்றன. அதைவிட முக்கியமாக இந்த மனிதர்களை நாம் தமிழ்க் கதைகளில் மட்டும்தானே காண முடியும். பல உருவகங்களை வியப்புடன் படித்தேன். பூனைக்கால்கரண்டி,போர்க். வாத்துக்கழுத்துள்ள மதுக்குப்பி போன்ற சொற்கள் என்னை மிகவும் பரவசப்படுத்தின.

அதேபோல் யானையின் செயல்கள். வில்பர் ஸ்மித் போன்றவர்கள் யானையைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அவை ஆப்ரிக்க யானைகள். இது மேலும் புத்திசாலித்தனம் கொண்ட இந்திய யானை. உதாரணமாக அது வேட்டைக்காரர்களைப் பார்த்தபின் அவர்களை உதாசீனம்செய்வதில் உள்ள கம்பீரம் என்னை நெகிழச்செய்தது. அது கொல்லப்பட்டு ரத்தம் உறைந்து கிடப்பதை தாமரை இலைகள் போன்று என நீங்கள் வர்ணித்த முறை காட்சியை கண்ணிலேயே காட்டுகிறது.

தமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும். தமிழில் சிந்திப்பதுகூட கஷ்டமாகி விட்ட நிலையில் இந்தக்கதையை படித்தது திரும்பி வந்துசேர்ந்தது போல இருந்தது

ராம் சந்திரசேகர்
[தமிழாக்கம்]
அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் வீட்டுக்கு பத்து வருடங்கள் முன்பு வந்திருக்கிறேன். பத்மநாபபுரம் அரண்மனை அருகே குடியிருந்தீர்கள். நான் உங்கள் ஏழாம் உலகம் , காடு இரண்டு நாவல்களையும் சமீபத்தில் படித்தேன். நடுவே வாசிப்பு விடுபட்டு போய்விட்டது. உங்கள் ஊமைச்செந்நாய் என்ற கதையை இப்போதுதான் படித்தேன். உடனே எழுதவேண்டுமென்று தோன்றியது. அருமையான கதை. நண்பர்களிடம் அதைப்பற்றி நிறைய பேசினேன். என்னுடைய மனத்தில் ஊமைச்செந்நாய் மெக்காலே கல்வி கற்று உள்ளே வெள்ளையாகவும் வெளியே தவிட்டு நிறமாகவும் இருக்கும் நம்மைப்போன்ற நடுத்தர வற்கத்து ‘தேங்காய்’ களை சித்தரிக்கிறது என்று தோன்றுகிறது. ஊமைச்செந்நாய் கனவில் ஆங்கிலம் பேசுகிறான் என்பது முக்கியமான விஷயம். சோதி அந்த யானையைப்பற்றிச் சொல்லும்போது அதை தெய்வம்போலச் சொல்கிறாள். ஊமைச்செந்நாயால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் அவன் வெள்ளைக்காரன். அந்த விஷயம்தான் துரையை அவன்மீது நம்பிக்கையும் வெறுப்பும் கொள்ள வைக்கிறது. ஊமைச்செந்நாயை துரை பயப்படுகிறான்.  அவனுடைய அறிவை பயப்படுகிறான். அதேபோல துரைக்கு அடிமையாக இருக்கும்போதே துரையை தாண்டிச்சென்றுவிடவேண்டுமென்று ஊமைச்செந்நாயின் மனம் ஆசைபப்டுகிறது. அந்த உறவை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். உருவகமாக வாசிக்கும்போது இன்றைய இந்திய யதார்த்தத்தையே சொல்லக்கூடியதாக இருக்கிறது இந்தக்கதை. அப்படி உருவகமாகப் பார்த்தால் அந்த யானை எதைக்குறிக்கிறது?

எஸ்.எம்.கெ.குமார்
[தமிழாக்கம்]

**

அன்புள்ள ஜெயமோகன்

ஆம் ஆண்டான் அடிமை மன நிலையைத்தான் மிகவும் வேறுவிதமான பின்ணணியில் சொல்லியுள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த ஆண்டான் அடிமை மன நிலை அன்றிலிருந்து இன்று வரை ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. இந்த மனநிலையை மிக அதிகமாக காவல் துறை, கலெக்டர் ஆஃபீஸ் ஆகிய இடங்களில் காணலாம். நேற்று ட்யூட்டியில் ஜாய்ண் செய்த ஒரு எஸ் ஐ ரிட்டையர்டாகும் நிலையில் உள்ள கான்ஸ்டபிளை எவ்வளவு கேவலமாக நடத்த முடியும் என்பதை நம் காவல் நிலையங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.  ராணுவத்தில் இது இன்னும் மோசமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டானும் ஒரு அடிமையாகவும் ஒவ்வொரு அடிமையும் ஒரு ஆண்டானாகவும் இடத்துக்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்கள் என்பதையும் அந்த வெள்ளைக்காரனை அவன் ஊரில் எப்படி நடத்துவார்கள் என்பதைச் சொல்வதன் மூலம் சொல்லியுள்ளீர்கள். இங்கு ஆண்டான் அடிமை நிலை மாறி இருந்தாலும் வேறு தளங்களில் வேறு விதத்தில் நுட்பமான முறையில்  அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அன்புடன்ச.திருமலை**அன்புள்ள ஜெயமோகன்

நான் இரண்டு வருடங்களாக தமிழில் உள்ள சிற்றிதழ்கள் வெளியிடும் கதைகலைப் படித்துக் கொன்டிருக்கிறேன். பெரும்பாலான கதைகள் சுவாரஸியமில்லாமல் எழுதப்பட்டிருக்கின்றன. நுட்பமான கதைகள் சில இருக்கின்றன என்பது நிஜம். ஆனால் சுவாரஸியமாக இருக்க வேண்டுமே. படித்து முடிப்பதற்குள் அக்கடா என்று ஆகிவிடுகிறது. ஆனால் ஊமைச்செந்நாய் மிகச்சிறப்பான வாசிப்பாக அமைந்தது.நடுவே விடவே முடியவில்லை. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஒரு கனவுக்குள் சென்று வந்தது போல பரவசமாக இருந்தது. இலக்கியம் அளிக்க வேன்டிய முதல் சந்தோஷம் இதுதான். மற்றதெல்லாம் அப்புறந்தான் என்பதே என் கருத்தாகும்

ராமச்சந்திரன்

**

அன்புள்ள ஜெ,
ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்கள் இணையதளத்தின் தொடர் வாசகன். மேலும் உங்கள் கதைகளையும் நாவல்களையும் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்துத்திறனை வியப்பவர்களில் ஒருவன். தமிழர்கள் உங்களைப்போன்ற ஓர் எழுத்தாளரை அடைய அதிருஷ்டம்செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேந்- உங்கள் ஒரு நாவலையாவது அவர்கள் படிக்க வேண்டும் அதை உணர்வதற்கு

சென்ற வெள்ளிக்கிழமை நான் உங்கள் ஊமைச்செந்நாய் கதையை படித்தேன். அப்போது கதையின் சொற்கள் புரிந்ததே ஒழிய அதன் உள்ளர்த்தங்கள் எனக்குத் தெளிவாகவில்லை. இப்போது அதன் மீதான எதிர்வினைகளைப் படிக்கும்போதுதான் கதை எனக்கு தெளிவாகப்புரிகிறது. சொல்லப்போனால் திரு எக்ஸெல் குமார் முத்துநாயகம் அவர்களின் கடிதம் எனக்கு தெளிவை அளித்தது. அதன்பின் அக்கதையைப்படிக்க என் கண்கள் கண்ணிரால் நிறைந்தன. இது எனக்கு இரண்டாம் தடவை. ‘ஏழாம் உலகம்/ வாசித்து நான் மனம் கலங்கியிருக்கிறேன்

எளிமையான மக்கள் தங்கள் சுய அபிமானத்தை காக்கும்பொருட்டு சாவை அழைக்கும் நிலை பற்றி எண்ணிக்கொன்டிருந்தேன். தன் ஆத்மாவைக்காக்கும்பொருட்டே அவன் சாகிறான் என்பது எவ்வளவு சிறப்பானது!

இப்போதுதான் தாய்மொழி என்பது எத்தனை மகத்தானது என்ற எண்ணமும் எனக்குள் ஓடுகிறது உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிறந்த ஊடகம் தாய்மொழியே. நான் இப்போது என் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சொல்ல ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன். ஆங்கில வழிக்கல்வியானது அறிவியல் குறீடுகளைப் புரிந்துகொள்ள நமக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது.ஆனால் வாழ்க்கையின் குறியீடுகளைப் புரிந்துகொள்வதில் அது பரிதாபகரமாக தோல்வி அடைகிறது. அது நமக்கு வாழ்க்கை என்றால் என்ன என்றும் அதைப்புரிந்துகொள்வது எப்படி என்றும் சொல்லித்தருவதே இல்லை.

உங்களுடைய பல கதைகளில் இத்தகைய நுண்மையான அர்த்தங்கள் இருக்கலாம். நிச்சயமாக தெரிகிறது அது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாதபடி என்னுடைய மொழியறிவு பின் தங்கியிருக்கிறது.

இந்த இலக்கிய– வழ்க்கைக் குறியீடுகளை எப்படி புரிந்ந்து கொள்வது என்று எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா? அதை நீங்கள் ஒரு தனியான கட்டுரையாக இணையத்தில் போட்டீர்கள் என்றால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

நீளமான கடிதத்துக்கு மன்னிக்கவும்

அன்புடன்

வெங்கடேஸ்வரன்
அன்புள்ள வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு,

இலக்கியத்தின் முக்கியமான சிறப்பம்சமே அதன் ஆழ்மொழி- அல்லது குறியீட்டு மொழி- நிலையானது அல்ல என்பதுதான். ஒவ்வொரு கதையிலும் அதை எழுத்தாளன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். செந்நாய் அல்லது ஓநாய் என்பது ஒருகதையில் கொடூரமான வேட்டைத்தன்மைக்கு குறியீடாக இருக்கலாம். இன்னொரு கதையில் அது விடாப்பிடியான தன்மைக்கு உதாரணமாக இருக்கலாம். ‘ஸ்டெப்பன் வுல்·ப்’ என்ற நாவலில் ஹெர்மன் ஹெஸ் அதை தனிமைக்கு குறியீடாகக் காட்டுகிறார். எனது இந்தக் கதையில் செந்நாயின் மௌனமே குறியீடாக ஆகியிருக்கிறது.

ஆகவே இலக்கியத்தில் குறியீடுகளுக்கு ஒரு வழிகாட்டி போட முடியாது என்பதே உண்மை. அப்படியானால் இலக்கியத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இலக்கியப் படைப்பை ஒரு வகை வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வாழ்க்கையை நமது வாழ்க்கையைக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும்.  ஊமைச்செந்நாயின் இடத்தில் நம்மை நாமே கற்பனைசெய்துகொள்ள வேண்டும்

உண்மையில் இலக்கியத்திற்குள் வருவது ஒன்றும் சிரமமானது அல்ல. தொடர்ச்சியாக படித்து சற்று விவாதித்தால்போதும், இலக்கியம் தன்னை திறந்துகொள்ள ஆரம்பித்துவிடும். விவாதங்கள் முக்கியம். நாம் வாசித்த அதே கதையை பிறர் எப்படி வாசிக்கிறார்கள் என்ற கவனம்  மூலம் அதன் பல்வேறு வாசிப்பு நிலைகள் நமக்குக் கிடைக்கும். அடுத்து நாம் வாசிக்கும்போது நம்முடைய வாசிப்பு மேம்பட்டிருக்கும். அதை நீங்களே சொல்கிறீர்கள்

ஒருபோதும் செய்யக்கூடாத ஒன்றுண்டு. தனது வாழ்க்கையை வைத்து இலக்கியத்தை வாசிக்காமல் கோட்பாடுகளை, அரசியல் தரப்புகளை, வெறும் வம்புவழக்குகளை வைத்து இலக்கியத்தை வாசிக்கும் வழக்கத்தையே மேற்கொள்ளக் கூடாது. பல வருடங்களாக இலக்கியத்தை வாசிக்கக் கூடியவர்கள், நல்ல புத்திசாலிகள் ஒரு இலக்கியப்படைப்பைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதன் ரகசியம் இதுவே.

வாழ்க்கைதான் இலக்கியத்தின் வழிகாட்டி நூல்
ஜெ

&&

அன்பு ஜெயமோகன்,

ஊமைசெந்நாய் என்ற அருமையான கதையை படித்தேன்.. காடுகளின் ஊடாக அலைந்த அனுபவத்தையும், ஆண்டான் அடிமை உறவு முறையும் அடிமைகளாய் ஆனவர்கள் நடத்தப்படும் விதத்தையும் கதை  ஒருபக்கம் காட்டுகிறது என்றால் மறுபக்கம் அழகிய காடும், ஊமை செந்நாய் மற்றும் அவனது தொரை காட்டில் அலைந்தாலும் , அவர்களை அப்பும் கொசு நம்மளையும் கடிக்கிறது.. காட்டு விலங்கினங்களின் புத்தி கூர்மையைப் பற்றியும் தன்னை அவமதித்துக்கொண்டே இருக்கும் தொரையை கட்டுவிரியனின் விஷத்திலிருந்து காப்பாற்றும்  செந்நாயும் ஆனால் அந்த தொரையினால் காப்பாற்றப்பட விரும்பாமல் நரகத்திற்குப் போ என சபித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் செந்நாயும் மனதில் நிற்பர்.

கதையின் ஒவ்வொரு அங்குலமும் உங்களது அழகிய கதை சொல்லும் விதத்தால் மிளிருகிறது.. படிக்கும்போது நடக்கும் இடத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது கதை.. ஒவ்வொரு வாக்கியமும் உங்களது உவமை இன்றி இல்லை. படிக்கவே சுவாரசியமாக இருந்தது என்றால் அது மிகை இல்லை.

அருமையான வாசிப்பனுபவம் தரும் இந்த ஊமைசெந்நாய் படைத்திட்ட உங்களுக்கு எனது வாழ்த்து.

அன்புடன்,

ஜெயக்குமார், தோஹா, கத்தார்

**

திரு. ஜெயமோகன் வணக்கம். நான் உங்கள் ஊமை செந்நாய் கட்டுரை படித்தேன். வழக்கம் போலவே வன்முறை அதிகம். சரித்திரம் சொல்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்னால் நான் “எரியும் பனிக்கது”(ரெட் டீ) படித்தேன். அதுவும் ஒரு வரலாறு தான் ஆனால் அதை அந்த ஆசிரியர் கையாண்ட் விதம் அருமை. இனியாவது உங்கள் படைப்புகள் தரமான அளவில் வரும் என எதிர்பார்க்கிறேன். சுந்தர்அன்புள்ள சுந்தர்,

நன்றி. முயற்சி செய்கிறேன்.
ஜெ

888

உங்களுனைய உமைச்செந்நாய் நெடுங்கதை படித்தபொழுது என்னையே மறந்துவிட்டேன்.என்னைப் பிணைத்து விட்டது அருமை.
சே.கல்பனா

8888

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? மூன்று நாட்களுக்கு முன்புதான் ஊமைச் செந்நாய் படித்தேன். நான் வாசித்தவற்றில் சந்தேகமில்லாமல் மிகச் சிறந்த கதை இதுதான். தொலைக்காட்சி வேலைகளில் மூழ்கியிருந்தபோதும் உங்கள் கதையின் காட்சிகள் மனதுக்குள் ஓடியபடியே இருந்தன. மிகமிகச் சிறந்த ஒரு உலக சினிமாவைப் பார்த்தபிறகு எனக்கு இப்படி ஆனதுண்டு, ஆனால் படித்த கதை காட்சியாக ஓடுவது அதுவும் ஒழுங்கான படத்தொகுப்பாக (Editing Order) பார்க்க முடிந்தது புதிய அனுபவமாக இருந்தது. படிக்கிறபோதே படத்துளிகளாகப் பிரித்து மனம் உள்வாங்கியிருக்கிறது. காரணம் ஊமைச் செந்நாய் விரிவாக எழுதப்பட்ட விறுவிறுப்பான ஒரு சிறந்த திரைக்கதை போலவே இருக்கிறது.

 

மரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது. 

காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப் பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப் புரிந்து கொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.

நான் “நரகத்துக்குப் போ!” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

போன்ற வரிகள் அப்படியே படக்காட்சிகள்.

காடு நாவலை ஏற்கனவே படித்திருந்தபோதும், ஒரு சிறுகதைக்குள் மிகக் குறைவான சொற்களிலேயே அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு நேரத்துக் காட்டை விதவிதமாகக் கண்முன் கொண்டுவந்திருப்பது அற்புதமான வாசிப்பு அனுபவம். அடர்வனத்துக்குள் பொழிகிற ஒளிக்கற்றைகளின் பல்வேறு தோற்றங்கள் ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. காட்டுக்குள் நடந்துகொண்டே இருப்பவர்களின் களைப்பும் சோர்வும் பசியும் தாகமும் நெருக்கமாக உணரக்கூடியதாக இருந்தது. வேட்டைக் காட்சிகளைப் பதட்டப்படாமல் படிக்க முடியவில்லை. கதையில் வரும் விலங்குகளின் கண்கள் இப்போதும் முறைத்தபடியே இருக்கின்றன.

கதையின் ஆரம்பப் பகுதிகள் அடிமைத்தனத்தின் பல்வேறு சித்தரிப்புகளைக் கொடுத்து மொத்தக் கதைக்கும் அடித்தளமாக இருக்கிறது. யானையை முதலில் பார்ப்பது வரையிலான கதை மெல்லிய நீரோட்டத்தோடு ஓடும் அமைதியான நதி. யானை வந்ததிலிருந்து கடைசி வரி வரைக்குமே அருவியில் விழும் நதியாகப் பரபரப்பும் கொந்தளிப்பும் திருப்பங்களும் நிறைந்ததாய் இருக்கிறது. ஊமைச் செந்நாய் கதாபாத்திரம் விதேயன் படத்தில் மம்முட்டியிடமிருக்கும் அடிமையை முதலில் நினைவுபடுத்தினாலும், இதன் பரிமாணம் முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. துரையின் அறைக்குள்ளேயே வந்து அவனது மதுவைக் குடித்துவிட்டு துப்பாக்கியைத் தூக்கிப் பார்க்கிறபோதும், மானை வேட்டையாடுகிறபோதும், யானைக்கு எதிரில் ஓடி ஆர்ப்பரித்து அதைத் திசைதிருப்புகிறபோதும், பாம்பு விஷத்துக்கு அவசரமாக மருந்து தயாரித்துத் தருகிறபோதும், இறுதியில் துரையை நிரந்தர குற்றவுணர்வில் விட்டுவிட்டு விழுகிறபோதும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறது அந்தப் பாத்திரம்.

ஒரு நல்ல கதையைப் படைத்ததற்காக மனமார்ந்த பாராட்டுக்கள்.. நன்றிகள்..

 

சார்லஸ்.


 


 

ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைவிவிலியம், புதிய மொழியாக்கம்
அடுத்த கட்டுரைதமிழ் எழுத்துக்கள்:கடிதங்கள்