அஞ்சலி : கவிஞர் திருமாவளவன்

1

நண்பர் திருமாவளவன் இன்று டொரொண்டோவில் காலமானார் என்று செய்தி வந்திருக்கிறது. திருமாவளவன் டொரொண்டோவில் என் நட்புக்குழுமத்தில் நெருக்கமானவராக இருந்தார். 2001ல் நான் முதல்முறையாக கனடா சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். அதற்குமுன்னர் அவருடைய கவிதை ஒன்றைப்பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். தமிழில் நான் விரும்பும் அரிய கவிஞர்களில் ஒருவராக இருந்தார்

திருமாவளவன் ஈழ அகதியாக இந்தியாவில் சிலகாலம் இருந்தார். அப்போது கேரளத்துடன் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது. கேரளம் பற்றிய நினைவே அவர்முகத்தை மலரச்செய்வதைக் கண்டிருக்கிறேன். பலமுறை அவர் பெருவிருப்புடன் தன் கேரள நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். 2001 ல் அவர் இல்லத்திற்குச் சென்றேன்.

டொரெண்டோவில் அவர் மிகக்கடுமையான உடலுழைப்பு வேலையைச் செய்துகொண்டிருந்தார். டொரெண்டோ கணக்குக்கு குறைவான ஊதியம். பேருந்தில் உறைபனிக்காலத்தில் வேலைக்குச் செல்லும் அனுபவம் பற்றி மெல்லிய புன்னகையுடன் சொன்னார். அவருக்கு சுந்தர ராமசாமியுடனும் ராஜமார்த்தாண்டனுடனும் நெருக்கமான தொடர்பு இருந்தது.

இரண்டாம்முறை கனடா சென்றபோது முதல்நாள் அவரைச்சந்திக்க முடியவில்லை. நான் விசாரித்ததை அறிந்து அவர் உஷா மதிவாணன் இல்லத்திற்கு வந்தார். அம்முறை கனடா இலக்கியத்தோட்ட விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது. விருதை ஏற்றுக்கொண்டு அவர் ஆற்றிய உரை ஈழநினைவுகளில் இருந்து கவிதைக்கான உருவகங்களை நோக்கிச் சென்ற அடக்கமான அரிய வெளிப்பாடாக இருந்தது

1

இம்முறை செல்லும்போது சங்கடமான ஒரு நிலை. முன்னரே உஷா மதிவாணன் எனக்கு திருமாவளவனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் மனமுடைந்த நிலையில் இருப்பதாகவும் என்னிடமிருந்து ஆறுதலாக எதையாவது எதிர்பார்ப்பதாகவும் எழுதியிருந்தார். என்ன எழுதுவதென்று தெரியவில்லை. பேசுவது சங்கடமானது. ஆகவே நான் என் கேரளப் பயண அனுபவங்கள் பற்றி சில மின்னஞ்சல்கள் எழுதினேன். அவர் ஒருமுறை கூப்பிட்டார். கேரளம் பற்றி மட்டும் பேசிக்கொண்டோம்

இம்முறை ஜூனில் கனடா சென்றபோது திருமாவளவன் என்னைப்பார்க்க எழுத்தாளர் சுமதி ரூபனுடன் உஷா மதிவாணன் இல்லம் வந்திருந்தார். இறுகத்தழுவிக்கொண்டோம். ஒரு கணம் மனம் தளர்ந்து விம்மினார். ‘நன்றாக இருக்கிறீர்கள்’ என்றேன். நானாக நான் நோய் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. மருத்துவசிகிழ்ச்சைக்காக வேலைக்கு போகாமலிருந்தமையால் தடித்திருந்தார். முகம் மிகவும் கறுத்திருந்தது. ஆரம்பகட்ட் கொந்தளிப்பில் இருந்து விடுபட்டுவிட்டதாகவும் நோய் கட்டுக்குள் இருப்பதாகவும் சொன்னார். ஆனால் நொய் முற்றிக்கொண்டிருப்பதை உடல் காட்டியது

ஓரிரு சொற்களுக்குமேல் நோய் பற்றி ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. முழுக்கமுழுக்க கேலியும் கிண்டலுமாக சிரித்துப்பேசிக்கொண்டிருந்தோம்.அவரது மகள் பற்றி, வெங்கட் சாமிநாதன் பற்றி. சிரிப்பு மட்டுமேயான மூன்றுமணிநேரம். அவர் கிளம்பிச்ச்செல்லும்போது மீண்டும் இறுகத்தழுவி ‘மீண்டும் பாப்பமெண்டு தோணவில்லை’ என்றார். ‘பாப்பம்’ என்றேன்.

தெரிந்திருந்தது, அது அணுகிவருகிறது என்று. ஆனாலும் இந்த நேரத்தில் மனம் கொந்தளிக்கிறது. புலம்பெயர்ந்து, நாடுகள் வழியாக, இடர்கள் வழியாக, சித்திரவதையென்றே ஆன உழைப்பு வழியாக அலைந்து திரிந்து ஒரு மரணம். இந்த புயல்பட்ட பாதையில் கைவிளக்கு போல கவிதையை ஏந்தியிருந்தார். ஒருவகையில் அவரது இறப்பு அவருக்கிழைக்கப்பட்ட அநீதி. கனடா போன்றநாடுகளில் கடுமையான தட்பவெப்பநிலையில் நோயூட்டும் பணிகளையே புலம்பெயர்ந்தோர் செய்யவேண்டியிருக்கிறது. 2001 ல் நான் அறிந்த பல நண்பர்கள் மோசமாக நோயுற்றிருக்கிறார்கள்.

நண்பரை எண்ணி கண்ணீர் விடுகிறேன்.

அமைதிப்படை – திருமாவளவன் கடிதம்

முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு விவாதச் சந்திப்பு: அக்டோபர்
அடுத்த கட்டுரைமாசாவின் கரங்கள்