அழியா ஓவியங்கள் -கடலூர் சீனு

1

இனிய ஜெயம்,

முன்பு ஒரு சமயம் ஒரு ருஷ்ய காமிரா ஒன்று [சல்லிசா கிடைத்தது] வாங்கினேன். என் தங்கையை புகைப்படம் எடுப்பதற்காக. அந்த காமிராவில் பிலிம் மாட்டும் வேலையில் இறங்கினேன். அந்த கேமராவின் கேட்லாக் துவங்கி, கேமராவின் அனைத்து செயலிகளும் ருஷ்ய மொழியில் இருந்ததால், குத்து மதிப்பாக பிலிமை மாட்டி, அனைத்து செயல்களையும் குத்து மதிப்பாகவே செய்து தங்கையை வித விதமாக புகைப்படம் எடுத்தேன்.

கூர்ந்து இதை நோக்கிக்கொண்டிருந்த என் அண்ணன் திடீரென ஆவேசம் கொண்டு குடுடா நான் எடுக்கிறேன் என்று சொல்லிகாமிராவை வாங்கினார், முன்நாள் நீண்டிருந்த ஆடிக் குழாயை கரக் முரக்என்று இடம் வலமாக ஒரு முறை திருகிவிட்டு அவர் ஒரு படம் எடுத்தார். அந்த ஒரு படம் பிலிமின் கடைசி என்பதால் கேமெரா அத்துடன் மௌனம் சாத்தித்தது. அண்ணன் என்னை இவன் என்னமோ சதி பண்றான் என்ற ரேஞ்சுக்கு பார்த்துவிட்டு கேமராவை என்னிடம் ஒப்படைத்தார்.

அதில் முப்பத்தியாறு புகைப்படம் மட்டுமே எடுக்க இயலும் என்று எனக்கும் அப்போது தெரியாததால், கேமராவை விதவிதமாக பிதுக்கினேன். அது ஒரு மாதிரி கிர்ர் புர்ர் என ஓசை எழுப்பிவிட்டு பாட்டரி தீர்ந்ததும் மொத்தமாக ஓய்ந்தது. அடிவயிற்றில் அய்யய்யோ கௌவ அருகிலிருந்த லேபுக்கு ஓடினேன் [ அந்த காலத்துல பிலிம் ப்ராசசிங் லாப்னு ஒண்ணு உண்டு அப்டின்னு இன்னும் சில வருஷத்துல பேசப் போறோம்] . கடைக்காரர் என் பீதியை விலக்கி, நெகட்டிவ்களை படமாக மாற்ற மூன்று நாள் ஆகும் என்றார். மூன்று நாள் கழித்து படங்களை வாங்கிப் பார்த்தேன் .அத்தனையும் பிளாப். அண்ணன் எடுத்த ஒரே ஒரு படம் தவிர.

சற்றே குவிமையம் தவறிய அந்தப் புகைப்படத்தில் தங்கை உள்ளங்கையில் ஒரு கோழிக் குஞ்சை ஏந்தி முத்தம் கொடுப்பாள். கழுத்து வரையிலான அண்மைக் காட்சி. அடர் கேசம் கொழு,கொழு கன்னம். துன்பம் என்றால் என்ன என்று கருத்தளவில் கூட அறியாத பரிசுத்த இளமை.

சில தினங்கள் முன்பு, நள்ளிரவு மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதேதோ நினைவுகள். இரவுகள் துயரத்தின் தோழன் எங்கோ வாசித்த வரி. தங்கை தேநீர் போட்டு எடுத்து வந்தாள். ”என்னத்தயாவது நினைச்சுக்கிட்டு கிடக்காம வந்து படு” என்றுவிட்டு போனாள். கதிர்வீச்சு சிகிச்சையால் கேசத்தை இழந்து, பற்கள் சிதைந்து, முன்னழகு பின்னழகு என்ற பெண்மையை சமைக்கும் செழுமைகள் முற்றிலும் கரைந்து, யாரோ போல இறங்கிப் போனாள். ப்ருஷ்டமும் மார்பகங்களும் மனித குலம் இங்கே தங்கி வாழ, தாக்குப் பிடிக்க இயற்கை பெண்களுக்கு அளித்த வரம். எந்த ஆணும் பெண்ணை முதலில் முலையாகவும் இடையாகவும் நோக்குவது , இங்கே தங்கி வாழ இயற்கை இட்ட விதியின் ஒரு அலகே. கொலை பஞ்சம் நிகழ்ந்தாலும் பெண் உடல் தன் வனப்புகளில் கொண்ட கொழுப்பைக் கொண்டு இரண்டு மாதம் தாக்குப் பிடிக்கும். இவை எல்லாம் மானிடவியலாளர்கள் கூற்று. ஆக ஒரு பெண் இங்கே வளத்தை இழக்கிறாள் எனில், அவள் இழப்பது அழகை மட்டுமல்ல.. ஏதேதோ நினைவுகள். பிம்பங்கள். படிமங்கள்.

அதிகாலை சட்டென கிளம்பி கும்பகோணம் சென்றேன். ஆம் தலைக்கோலி சிலை முன் நெடுநேரம் நின்றிருந்தேன். வழியில் மயிலாடுதுறை இறங்கினேன். மயூர நாதர் கோவில் போய்விட்டு , அருகிலிருந்த காசி விஸ்வநாதர் கோவில் சென்றேன். காவிரி நீர் அங்கு வர ஒரு இடை வெட்டு உண்டு. கடை முழுக்கு என்றொரு விழா வரும். ஆயிரக் கணக்கில் மக்கள் அன்று அந்த படித் துறையில் மூழ்கி எழுவார்கள். அன்று அந்த படித்துறை வறண்டு வெறும் பாலித்தீன் குப்பைகளால் நிறைந்து கிடந்தது.

அங்கிருந்து சீர்காழி சட்டைநாதர் கோவில் வந்தேன். சீர்காழி திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் என்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் கோவில். ஆதீனங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது . தமிழ்நாட்டில் பதினெட்டு ஆதீனங்கள் உண்டு, அனைவரும் பெரும்பாலும் அறிந்தது திருவாவடுதுறை ஆதீனமே. ஆதீன சொத்து பல வகையிலும் முறைகேடுகளின் கையில் கிடக்கிறது. கோவில் யானை பாகனுக்கு ஆதீனம் தரும் சம்பளம் ஆயிரத்து நானூறு ரூபாய். [ அரநிலயத்துறை வழியே அரசு பணியாக சேரும் பாகனுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம்] தமிழகம் எங்கும் கோவிலில் பெண் யானைகளே இருப்பதால், சிதம்பரம் கோவிலுக்கு கொம்பன் ஒருவர் வரப் போகிறார். கேரளாவில் இருந்து யானைகள் கிடைப்பத்தில் எதோ சிக்கல். ஆகவே கொம்பன் அசாமில் இருந்து வருகிறார். இவை எல்லாம் கோவிலில் கைக்குழந்தையுடன் சுற்றி வந்துகொண்டிருந்த குருக்கள் சொன்னது.

கோவில் குளத்தருகே அம்மன் சன்னதியில், கந்த சஷ்டி கவசம் ஒப்பிக்கும் போட்டி நடத்தி எதோ ஒரு அமைப்பு எவர்சில்வர் கிண்ணி பரிசளித்துக் கொண்டிருந்தது. குழந்தை முதல் கிழவி வரை அடுத்தடுத்து திரும்ப திரும்ப கவசத்தை மைக்கில் பிளிறி குளத்து மீன்களை பதறவைத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலின் மையத்தில், படியேறி கோபுரத்தின் உச்சிக்கு செல்ல பாதை உண்டு. மேலே தோணியப்பர் என்று அழைக்கப்படும் உமா மகேஸ்வரர் சிலை. அமர்ந்த நிலையில் இடது மடியில் உமாவை அமரவைத்த பத்து அடி உயர மகேஸ்வரர் சிலை. ஊழிக் காலத்தின் போது, சிவன் பிரணவத்தை நாதவடிவமாக்கி ஒரு கும்பத்தில் இடுகிறார். ஊழியின் இறுதியில் கும்பம், கும்பகோணத்தில் கரை சேருகிறது. அந்த கும்பத்திலிருக்கும் பிரணவத்தைக் கொண்டு உமையும் சிவனும் ஆடல் நிகழ்த்தி மீண்டும் இந்த பூமியை இயங்க செய்ததாக புராணம். [எந்த புராணம் என்று அர்ச்சகர் சொல்லவில்லை] . உயர்ந்த கிரீடம், புத்தருக்கு உடையதே போன்ற நீண்ட காதுகள், பின்னால் இரு கரங்களிலும் வெற்றி என்பது போல முத்திரை. முன் வலது கை அபய முத்திரை. இடது கையில் பாசம் இருப்பது போல முத்திரை. மடியில் தாயார். தலைக்கு மேல் சாமரம் வீசும் தேவியர்கள். மார்பில் தாமரை அகற்றப்பட்டு உத்ராக்ஷம், பின் கைகளில் சங்கும் சக்கரமும் அகற்றப்பட்டு, நெற்றியில் பலவந்தமாக செய்து மாட்டப்பட்ட முப்பட்டை, என விஷ்ணுவை ரொம்ப கஷ்டப்பட்டு சிவனாக காட்ட முயன்று, அதில் பரிதாபமாக தோற்றிருக்கிறார்கள். ஆனாலும் இந்த படிமை பேரழகு. பேரழகு என்றால் மூச்சை நிறுத்தும் அழகு. சொல்லை அவிக்கும் அழகு. சித்தம் உறையும் அழகு. நிதர்சனத்தில் இதைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு அழகு கூடிய படிமைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறு. சொல்லத் தெரியவில்லை அழகு அழகு அறற்ற வைக்கும் அழகு அது மட்டுமே சொல்லமுடியும். சாளரத்திலிருந்து எழுந்து சிறகடித்த பறவை ஒலியே என்னை மீட்டது. சஷ்டி உளறல் ஓய்ந்திருந்தது அப்போதுதான் உரைத்தது. காக்கும் கடவுளை , அழிக்கும் கடவுளாக மாற்றி, அழிக்கும் கடவுளுக்கு ”ஆக்கும்” புராண பின்னணியை அளித்து ..ரகளையான மரபுதான் நமது. சும்மா யோசித்துப் பார்த்தேன் .ஒரு மார்க்கம் மதமாக முதிர்ந்துவிட்டது என்பதை அதில் இலங்கும் சொர்க்கம் எனும் கோட்பாட்டைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சைவத்துக்கு கைலாயம். வைணவத்துக்கு வைகுந்தம். மாறாக காணபத்யம், கௌமாரம்,சௌரம்,சாக்தம், இவை எல்லாம் மார்க்கம் என்னும் நிலையில் இருந்து மதம் என்னும் நிலைக்கு உயர்வதற்குள், சைவத்தாலும் வைணவத்தாலும் உள்ளிழுக்கப் பட்டு விட்டது. இவற்றுக்கு சொர்க்கம் எனும் கருத்தியல் வழியே ஒரு முழுமை கிடைத்திருந்தால். எளிதாக சைவத்தாலோ வைனவத்தாலோ கரைக்கப்பட்டிருக்காது. இந்த சொர்க்கம் எனும் கருத்தியலே இன்றும் முழுமையாக சைவ வைணவ இணைப்பு நிகழ தடையாக இருக்கிறது என எண்ணுகிறேன். நான் பார்த்த வரையில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இருக்கும் எந்தக் கோவிலிலும் அதன் அர்ச்சகர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டுதான் திரிகிறார்கள். ஒரு முறை சிதம்பரம் கோவிலில் இப்படி முறைத்துக் கொண்டு விலகிய அர்ச்சகர்களை [நடராஜருக்கு தீட்சிதர்] கண்ட என் நண்பர், அங்க சைவம் இருக்கு, இங்க வைணவம் இருக்கு இந்த இந்துமதம் எங்கப்பா இருக்கு என்றார். அய்யா வைகுண்டர் துவங்கி நாராயண குரு வரை ஒரு மாதிரி மூர்க்கமாகத்தான் சைவ வைணவ இணைப்புக்கு செயல் புரிந்திருக்கிறார்கள். தங்களது தனித்தன்மையை பேணிக் கொண்டு, முற்றிலும் ஒன்று கலக்க இவர்களுக்குள் என்னதான் தடை?

இரவெல்லாம் தோணியப்பரே நினைவின் நதியில் மிதந்தார், எண்ணங்கள் வளர்ந்து சொல்லோடு சொல் பிறந்து போதம் ஆர்த்தப் பூண்முலை அம்மன் எனும் சொல்லில் அகம் முட்டி திகைத்து நின்றது. போதம் ஆர்த்தப் பூண்முலைகள் உன்மத்தம் மீற மீண்டும் பேருந்து ஏறினேன். மனம் போன போக்கு சென்று சேர்த்த இடம் பவானி சாகர்அணை. ஏன் இங்கு வந்தோம் என்று புரியாமல் கொஞ்சநேரம் நின்றிருந்தேன். நகரப் பேருந்து வர, பன்னாரி கோவில் வந்து இறங்கினேன். மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருப்பணியால் புத்தம் புதிதாக இருந்தது கோவில். வீரப்பன் வழிபட்ட கோவில் என்றனர். பிறந்த குழந்தையின் கண் போல குளிர்ந்து கிடந்த வானிலிருந்து , பொழிந்த சாரல், சருமத்தை வைர முனைகள் போல வந்து தொட்டது. அங்கிருந்து காளி திம்பம் என்ற பெயர் நோக்கி பேருந்து ஏற்னேன். நான் பயணித்த பாதைகளில் மிக அழகான பாதைகளில் ஒன்று அது. கனவென விரிந்த பாதாள பசுமை சரிவு, தொட்டு நினைவென எழுந்த மலைத்தொடர் வளைவு. கரும்பச்சை தொடருக்குப் பின், அடர்நீலத் தொடர், அதற்குப் பின் நிழலாய் ஒரு மலைத் தொடர், அதற்குப் பின் தொடுவானின் மாண்பில் புதைந்த மௌனத் தொடர். இருபத்து ஏழு கொண்டைஊசி வளைவுகள் உயர்ந்து காளி திம்பம் அடைந்தேன். பசுமையான சிறிய கிராமம். ஆங்காங்கே காட்டு யானை நுழையா வண்ணம் வேலிகள் அமைத்திருந்தார்கள்.

அங்கிருந்து கல்லேகால் என்ற ஊருக்கு பேருந்து சென்றது. எழுபது கிலோமீட்டர் சத்தியமங்கலம் காட்டுக்குள் மட்டுமே செல்லும் பாதை. கேர்வளம் எனும் ஊர் அருகே[தமிழக எல்லையில்] புலிகள் காப்பகம் ஒன்று இருக்கிறது . வாய்க்கு நுழையாத கன்னட பெயர் கொண்ட ஊரில் அருவி ஒன்று இருக்கிறது. அதைக் கடந்த கிராமம் ஒன்றினில் முழுக்க முழுக்க [மைசூர் பெங்களூரில்] பணிபுரியும் நாகலாந்து,அருணாச்சல பிரதேச மக்கள் மட்டுமே நிறைந்திருந்தனர். சரிவில் இருக்கும் கிராமத்தை வன விலங்குகள் அணுகாமல் கண்காணிக்க மர உச்சிகளில் காவல் வீடுகள். அனைத்தையும் கடந்து முடிவே அற்ற பச்சை குகைக்குள் சென்றுகொண்டே இருந்தது பேருந்து. வழியில் ஒரு மிளா செருக்கடித்தபடி மெல்ல நடந்து புதருக்குள் மறைந்தது. முதன் முதலாக காட்டுப் பன்றி ஒன்றினைக் கண்டேன். போடா புல்லே என்ற தோரணையில் நின்றிருந்தாள் வராகி. அத்தனை பெரிய பேருந்தின் உறுமலும் வருகையும் அதற்க்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

மருத்துவ வேலைகளை பார்க்க வேண்டும் மீண்டும் வீடு வந்தேன். இரவெல்லாம் உறக்கமின்றி மனமெல்லாம் உன்மத்தம் கொண்டு எழுந்து நின்றது. ஆம் இது காமம். தசையின் வெம்மை கொண்டு ஆறும் காமம் அல்ல இது. இந்த உலகையே அள்ளி உண்ட பின்னும் நிறையாமல் எஞ்சி நிற்கப்போவது. எதுவும் அமையாமல் எழுந்து லாப்டாப்பை இயக்கி ஜெயமோகன் தளம் வந்து கைக்கு கிடைத்த பதிவுகளை வாசித்தேன்.

கனி பதிவு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இணையத்தில் துளாவினேன். அந்த ஓவியத்தை வரைந்தவர் பெயர் வில்லியம் அடால்ப் போக்வா. அந்த ஓவியத்தின் பெயர் டென்டேஷன். கிட்டத்தட்ட ஐநூறு ஓவியங்கள் வரை வரைந்திருக்கிறார். ஒரு நூறு ஓவியங்களாவது அதை ரசிக்க ஒரு முழு இரவைக் கோரும்.

தாகம் என்றொரு ஓவியம், சூரிய ஒளி அந்தப் பெண் அருந்தும் பீங்கான் குவளையில் பிரதிபலிக்கும் விதமும், அந்தக் கோப்பை நிற்கும் கருங்கல்லில் பிரதிபலிக்கும் விதமும், அதே ஒளி அந்தப் பெண்ணின் உள்ளங்காலிலும், புரந்கையிலும், அவளது உடைகளில் பிரதிபலிக்கும் விதமும் என அற்ப்புதமான ஓவியம்.

கும்பகோண தலைக்கோலி சிற்பம் சாமுத்ரிக்கா லட்சனங்களின் சிகரம் எனில், அதைக் காட்டிலும் அழகு கூடிய தத்ரூப சிலைகளை அருகர்களின் பாதை பயணத்தில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக குறுநகையுடன் திரிசூலம் ஏந்தி நிற்கும் மகிஷா சுரமர்த்தினி. உயர்ந்த வலது கையின் காரணமாக வலது முலை உயர்ர்ந்து, இடது முலை தாழ்ந்து, இடை ஒசிந்து, சுண்டு விரல் கூட அத்தனை அழகு. நான் உங்களிடம் கேட்டேன் இதை செதுக்கியவன் எத்தனை பெண்களை பார்த்திருப்பான்? உங்களது பதில் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் எழுத அவர் பிள்ளை பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஆம் முற்றிலும் உண்மை, நமது அக ஆழம் நம்முடன் முடிந்து விடும் ஒன்றல்ல. என்றோ மண் மறைந்த நமது நியண்டர்தால் மூதாதாதை கண்டதை ஒரு தியான கணத்தில் நம்மால் கண்டுவிட முடியும்.

வில்லியமும் தன் அக ஆழத்திலிருந்து கனவுகளை தூரிகையால் தொட்டெடுத்த கலைஞன்தான். சொல்வதில் வெட்கமென்ன எனக்கு பெண்களின் வடிவ அழகுகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கருவுற்ற மாதம் துவங்கி, அமுதூட்டும் காலம் நிறையும் வரை பெண்மையின் ஸ்தனங்கள் ,இளமை குவிந்து, தாய்மை கனிந்து,உன்னித்து உயர்ந்து, உவந்து ஈந்து, தாழ்ந்து பணியும் கோலம், கோடி கோடி ஜென்மம் எடுத்து மானுடம் கண்டு கரைய வேண்டிய பேருவகை அது.

குழந்தை என்று துவங்கி, பேதை பெதும்பை மங்கை மடந்தை அறிவை தெரிவை என அனைத்து பருவங்களின் பெண்மையின் பேரெழிலை இறவாநிலையில் நிறுத்தி இருக்கிறார். ஒளி ஒன்றை கொண்டே கன்னம், ஸ்தனம், புறங்கை, புயம், இவற்றின் மென்மையில் இலங்கும் வகை பேதங்களை வடித்திருக்கிறார். இவர் தூரிகையில் வண்ணங்களை அள்ளவில்லை. ஒளியே அள்ளுகிறார்.

குறிப்பாக டென் டேஷன் ஓவியத்தின் குழந்தையின் உடலில் இருக்கும் தளும்பல், குளிக்கும் சிறுமி ஓவியத்தில் இருக்கும் மார்பின் அழகு, பூச்செண்டு வைத்திருக்கும் சிறுமி ஓவியத்தில் உள்ள முன்னழகின் தோற்றம் [பிறந்த குழந்தையின் மொக்கு உதடு போல] குளிக்கும் இளம் பெண் ஓவியத்தில் மதர்த்துப் பொங்கும் இளமை, குடும்ப நேரம் ஓவியத்தில் தாய்மையில் கனியும் ஸ்தனம் என்று, வித விதமான கொங்கை அழகுகள்.

அனைத்துக்கும் மேல் இவர் உருவாக்கும் கன்னிகள். பரிசுத்தம் என்ற வார்த்தை அன்றி வேறெதுவும் தோன்றவில்லை. the nymphaeum என்றொரு ஓவியம், கன்னியராகி நிலவினிலாடி என்ற வார்த்தையே திரும்ப திரும்ப காதில் ஒலித்தது. நிர்வாணக் கன்னியுடன், தேவதைகுழந்தை ஒன்று தனது அம்பால் குத்தி விளையாடும் ஓவியம் இணையற்ற அழகென்பேன். தேவதைகளுடன் விளையாடும் பருவம் கன்னிமைப்பருவம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பிடித்தது nymphs and satyr ஓவியம். இடுப்புக்கு கீழே குதிரை உடல் கொண்ட மனிதன் கன்னியர் இடையே சிக்கிக் கொள்கிறான். அவனது கண்களின் மிரட்சி, அவனது கால்களில் உள்ள வெருட்சி, அவனை இழுக்கும் கன்னியின் உடலின் வனப்பு, குதிரை மனிதனின் உடல் திணிவு, அப்பால் அனைத்துக்கும் மேல் அந்தப் பெண்களில் துலங்கும் சுதந்திரம்.

ஓவியர்களில் மகத்தானன்வன் இந்த வில்லியம் அடால்ப் போக்வா.

நூறு நூறு ஆண்டுகள் வாழ்ந்து முடித்த உவகையுடனும் ஆயாசத்துடனும் அவனது உலகை எனது அகத்தில் நிறைத்து கணிப்பொறியை அணைத்தேன். தங்கை சோபாவில் கிடந்தது உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள். அவளுடன் வானின் கீழிருக்கும் அனைத்தையும் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கும் இந்த ஓவியனின் உலகை அறிமுகம் செய்ய வேண்டும்.

இவரது ஓவியங்கள் அனைத்தும் இணையத்தில் உயர் தர ஒளிப்படமாக காணக் கிடைக்கிறது.

அறிமுகத்துக்காக இந்த சுட்டி

http://www.the-athenaeum.org/art/list.php?m=a&s=tu&aid=380.

காண்டீபம் காத்திருக்கிறது .மிச்ச பிலாக்கணத்தை அடுத்த மடலில் தொடர்கிறேன்…

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
அடுத்த கட்டுரைஜி.நாகராஜன் என்னும் கலைஞன்