கள்ளுக்கடை காந்தி கட்டுரை க்கான எதிர்வினைகளைத் தொகுத்து அனுப்பியமைக்கு நன்றி. எதிர்வினைகள் இருவகை. கூகிளாண்டிகள் அங்கே இங்கே பீராய்ந்து கைக்குக் கிடைத்த மேற்கோள்களை எடுத்துவைத்து எல்லாம் தெரிந்தவர்கள்போல எழுதிய ஃபேஸ்புக் குறிப்புகளை புறக்கணிக்கவே விழைகிறேன். அவர்கள் ஏற்கனவே மேதைகளாக பாவனைசெய்கிறார்கள், ஒரு சொல்லையும் உள்ளே கடத்தமுடியாது.
நண்பர் ஜடாயு அப்படி அல்ல. அவருக்கு விஷயம்தெரியும். ஆனால் அவர் எடுக்கும் நிலைப்பாடு சாதகமான மேற்கோள் நோக்கிச் செல்லவைக்கிறது. அத்தகைய மேற்கோளரசியலை 21 வயதில் அவர்களின் இதழிலேயே தொடங்கியவன் நான்.அதன் எல்லா நுட்பங்களும் எனக்குத்தெரியும். ஆகவே அதுவும் விவாதத்திற்குரிய தரப்பு அல்ல.என் கருத்துரை என் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களுக்காக .
காந்தி தன் நிலைப்பாடுகளை மொத்தமாக எழுதித்தொகுத்து வைத்துவிட்டுப் போன கோட்பாட்டளர் அல்ல. ஒரு குறுகியகாலகட்டம் மட்டும் மேடைகளில் முழங்கி மறைந்தவரும் அல்ல. அவர் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். முப்பதாண்டுக்காலம் உலக மக்கள்தொகையின் நாலில் ஒருபகுதி வாழ்ந்த ஒரு நாட்டையே வழிநடத்தியிருக்கிறார். பல்வேறு அரசியல் போராட்டங்கள், சமரசங்கள், புரிந்துணர்வுகள் வழியாக முன்சென்றிருக்கிறார்
அவர் வழிநடத்திய தேசம் நூற்றுக்கணக்கான இனக்குழுக்களும், மதங்களும் கொண்ட பெருந்தொகை. ஆசாரங்களாலும் வாழ்க்கை நோக்குகளாலும் முற்றிலும் முரண்பட்ட சமூகங்களின் வெளி. அப்போதும் அதன் பெரும்பகுதியில் பதினைந்தாம் நூற்றாண்டு வாழ்க்கைமுறை நிலவியது. பல்லாயிரமாண்டுக்காலம் ஒன்றையொன்று தாக்கி அழிப்பதே அரசியல்செயல்பாடாக அதன் நிலத்தில் நடந்து வந்தது.
அந்த முரண்பாடுகளை தொடர்ந்து சமரசம் செய்யும் அறிவியக்கங்கள் இங்கே நிகழ்ந்து வந்தன. அவ்வறிவியக்கங்களான சமணம், புஷ்டிமார்க்க வைணவம் ஆகியவற்றிலிருந்து எழுந்தவர் காந்தி. ஐரோப்பிய நவீன ஜனநாயகசிந்தனைகளை அவற்றைக்கொண்டு புரிந்து உள்வாங்கியவர். அந்த மெய்யறிதலில் இருந்து அனைத்து மக்களும் முற்றுரிமையுடன் வாழக்கூடியதும், மிகக்குறைவான அரசுநிர்வாகம் கொண்டதும், மையமற்ற தன்னாட்சியமைப்புகளின் பெருந்தொகுதியும் ஆன அதிநவீன ஜனநாயக அரசமைப்பு ஒன்றை கனவு கண்டவர். அதற்கு ராமராஜ்யம் என அவர் பெயரிட்டார். நடைமுறையில் அதற்கு கிராமராஜ்யம் என்று பொருள்.
அந்த இலக்கை நோக்கி தன்னைச்சுற்றி முரண்பட்டுக் கொந்தளித்த சமூகத்தை நகர்த்திக்கொண்டுசெல்ல முயன்றவர். சமரசங்கள் வழியாக, பேச்சுவார்த்தை வழியாக, மனசாட்சியுடன் உரையாடுவது வழியாக, முற்றிலும் வன்முறையின்றி அதை அவர் செய்தார். தொடர்ச்சியாக பொறுமையுடன் அதற்காக முயன்றார். தன் கொள்கையில் உறுதியுடன் அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதனால் தன் தரப்பை மூர்க்கமாக வலியுறுத்தவில்லை. ஒவ்வொரு தருணத்திலும் எதிர்தரப்புடன் சாத்தியமான சமரசத்தைச் செய்துகொண்டே முன்னகர்ந்தார்.
காந்தியின் சிந்தனைகளை இந்தப்பின்புலத்தில், அந்த சூழலில் வைத்துப் பார்க்காமலிருந்தால் காந்தியை வழிபடலாம், வசைபாடலாம். அறியமுடியாது. இங்கு பெரும்பாலும் நிகழ்வது அதுதான்.
காந்தியத்தை இந்தியாவில் ஜே.சி.குமரப்பா தவிர எவருமே அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லவில்லை. ஏன் என்று சிந்தித்தால் எளிதில் புரியும் ஒரு விடை உண்டு. நாம் சிந்தனையாளர்களை வெறும் வழிகாட்டிகளாக மட்டுமே கொள்கிறோம். ‘நமக்குத்தேவையானவற்றை காந்தி சிந்திச்சு சொல்லியிருக்கிறார்’ என்பதே நம் மனநிலை. ஆகவே காந்தி சரியாக என்ன சொல்லியிருக்கிறார் என்று மட்டுமே பார்க்கிறோம். மேற்கோள்தாகம் அங்கிருந்து கிளம்புவதே.
காந்தி சர்க்கா சுற்றினார், மாமிச உணவை மறுத்தார், எளிய வாழ்க்கையை வலியுறுத்தினார், புலனடக்கத்தை முன்வைத்தார். இதெல்லாம் நாம் காந்தியிலிருந்து பின்பற்றவேண்டியவை– நம் காந்தியப்புரிதல் இவ்வளவுதான். காந்தியை வழிபடுவோம், நாம் அவரை நம் தெய்வமாகக் கண்டால். நாம் ஏற்கனவே வழிபடும் தெய்வங்களுக்கு எதிரானவராக கண்டால் வசைபாடுவோம். இவ்வளவே நமக்கும் காந்திக்குமான உறவு
காந்தியை முன்னெடுத்தவர்கள் மது உண்டு மாடும் உண்ட மேலைநாட்டினரே. இவான் இலியிச் பற்றி ஒருமுறை கல்லுப்பட்டி குருகுலத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். ‘மதுரைக்குப்போயி மாடு தின்னுட்டு வருவான். இங்கதான் இருந்தான். நல்லா குடிப்பான்’ அவ்வளவுதான்.காந்தியை அறிய மதுரைமாவட்ட எரிவெயிலில் வந்து தங்கிய அமெரிக்கனின் அர்ப்பணிப்போ உழைப்போ சிந்தனையோ, அவர் காந்தியில் என்ன கண்டடைந்தார் என்பதோ அந்த காந்தியவாதிக்குத்தெரியாது.
நான் சுட்டிக்காட்டவிரும்பியது இதையே. காந்தியை நாம் வழிபடவேண்டம், பின்பற்றவேண்டாம். அவர் நமக்கு ஒரு சிந்தனை முறையை சுட்டிக்காட்டியவர். அதை நம் படிப்பை, அனுபவங்களை, நாம் வாழும் காலச்சூழலைக்கொண்டு விவாதிப்போம். புரிந்துகொள்வோம். மேலெடுப்போம். காந்தியை ‘பின்பற்ற’ நினைத்தால் முதலில் தடைப்படுவது அந்தச்சுதந்திரம்தான். எப்போதுமே நான் தக்கவைத்துக்கொள்ள விரும்புவது அந்தச்சுதந்திரம் .காந்தியை ஏற்றும் மறுத்தும் என் சிந்தனையை மேலெடுக்கவே நான் விரும்புகிறேன்.
காந்தி புலாலையும் மதுவையும் முழுமையாக நிராகரித்தார் என்பது ஒன்றும் ஆராய்ச்சி செய்து நுணுகிக் கண்டுபிடிக்கவேண்டியவை அல்ல. அவற்றை அறியாமல் அக்கட்டுரை எழுதப்படவும் இல்லை. புலால்மறுப்பு, கள்ளுண்ணாமை, புலனடக்கம் போன்றவை காந்திய ஒழுக்கங்கள். காந்திய ஒழுக்கவியலை முற்றிலும் மறுத்தேகூட காந்திய தரிசனங்களை ஒருவன் ஏற்று முன்னெடுக்கமுடியும். காந்திய அறத்தையும் காந்தியப்பொருளியலையும் காந்திய சமூகவியலையும் அவன் விரிவாக்க முடியும்.
நான் மீளமீளச் சொல்லும் ஒன்று உண்டு. இந்தியச்சூழலில் அன்றிருந்த அத்தனை தலைவர்களும் நிலப்பிரபுத்துவகால ஆசாரங்களும் நம்பிக்கைகளும் கொண்ட சூழலில் வளர்ந்து வந்தவர்கள்தான். ஆனால் ஆங்கிலக்கல்வியை அடைந்ததும் அவர்கள் பொதுவெளியில் அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சொல்லக்கூடாது என்ற அரசியல்சரியை மட்டும் கற்றுக்கொண்டனர். அவற்றை தங்கள் சொந்தவாழ்க்கையாக வைத்துக்கொண்டனர். சாதி, உணவு ஆசாரங்கள் போன்றவற்றில் அன்றும் இன்றும் படித்த இந்தியர்களின் இரட்டைவேடம் இது.
காந்தி அந்த இரட்டைவேடம் இல்லாதவர். ஆகவே பொதுவெளியில் சாதி, ஆசாரம் அனைத்தைப்ப்பற்றியும் தன் நம்பிக்கைகளை அப்பட்டமாக முன்வைத்தார். அவற்றை மாற்றிக்கொள்ளவேண்டுமென்றால் தன்னை நிறைவுறச்செய்யும் வாதங்கள் வரவேண்டும் என கோரினார். அவ்வாறு வந்தபோது அவர் முழுமையாக மாறுவதற்கும் சித்தமாக இருந்தார். சாதி குறித்த அவரது எண்ணங்கள் தலைகீழாக மாறின. உணவு குறித்த எண்ணங்கள் மேலும் வலிமை அடைந்தன.பிரம்மசரியம் பற்றிய எண்ணங்கள் தட்டழிந்து குழம்பின.
காந்திவெறுப்பாளர்கள் 1947ல் காந்தி சாதியை முற்றாக ஒழிப்பது குறித்து சொன்னவற்றை தெரியாததுபோல் நடித்து 1918ல் அவர் சாதி தேவை என்று சொன்னவற்றை எடுத்துப்போட்டு அவர் சாதிவெறியர் என்று பிரச்சாரம் செய்வதை காணலாம். காந்திபற்றிய பெரும்பாலான அவதூறுகள் இத்தகையவை. இவற்றுடன் பேசிச் சலித்துவிட்டமையால் நான் பெரும்பாலும் அமைதிகாக்கவே விரும்புகிறேன்.
நான் காந்தியின் நூல்களை முழுமையாகவே வாசித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை காலம்தோறும் அவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்று பார்ப்பது என் வழக்கம். ஆகவே எவரும் மேற்கோள் எடுத்துக்காட்டி எனக்கு வழிகாட்டவேண்டிய தேவை இப்போதுள்ள நிலையில் இல்லை. மாட்டிறைச்சியை அரசே தடைசெய்வதைப்பற்றிய காந்தியின் தரப்பு எப்படி மாறிவந்தது எந்த இடத்தை இறுதியாக வந்தடைந்தது என நான் அறிவேன். ஆனால் மேற்கோள்சண்டையில் எனக்கு ஆர்வமில்லை. சொல்லப்போனால் மேற்கோள்களைக் கடந்து யோசிப்பதற்கான அழைப்பே அந்தக் கட்டுரை [ஆனால் காந்தி பசுவதைத்தடை பற்றி இறுதியாகச் சொன்ன அந்த மேற்கோள்களை பின்னர் இணையத்திலேயே எடுத்துக்கொடுத்துவிட்டார்கள் என அறிந்தேன்]
மாட்டிறைச்சி என்றல்ல எந்த இறைச்சியும் உண்ணலாகாது என்பதே காந்தியின் தரப்பு. உணவுக்காக மிருகங்களைக் கொல்வது பாவம் என்ற நம்பிக்கை கொண்டவர். ஊனுணவை விலக்க முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்யவும் தேவையென்றால் அதற்கென உயிர்துறக்கவும்கூட சித்தமான நிலையிலேயே அவர் இருந்தார். ஆனால் நான் காந்தியை என் முன்னோடிச் சிந்தனையாளனாக எண்ணுவதனால் நான் மாமிச உணவை மறுக்கவேண்டும் என்றோ , இயற்கை மருத்துவம் செய்யவேண்டும் என்றோ அவசியமில்லை. என்னிடம் நேரில் காந்தி சொல்லியிருந்தால்கூட ‘மன்னிக்கவும் காந்தி, நான் இந்த விஷயத்தை ஏற்கவில்லை’ என்றுதான் சொல்லியிருப்பேன்.
ஒட்டுமொத்தமாக காந்தியம் என்பது பெரும்பான்மைவாதம், மையப்படுத்தப்பட்ட அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரானது. அனைவருக்கும் என்றில்லாத அதிகாரத்தை அவர் மீண்டும் மீண்டும் நிராகரிக்கிறார். கருத்தியல் மாற்றம் மூலம் உருவாகும் மாற்றத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறார். பலநூறு பக்கங்களில் காந்தி இதை எழுதியிருக்கிறார். அந்நிலையில் மாட்டிறைச்சித்தடையை அரசு சட்டமாக கொண்டு வருவதையோ பெரும்பான்மையினரின் நம்பிக்கையை சிறுபான்மையினர் அமீது திணிப்பதையோ காந்தியம் எப்படி அணுகும் என்பதை ஊகிக்க காந்தியின் மேற்கோள்களைத் துழாவவேண்டிய அவசியமில்லை. நான் உத்தேசிக்கும் அணுகுமுறை காந்தி சொன்னது என்ன என்பது அல்ல. காந்தியை சாராம்சமாக அணுகுவதைப்பற்றி மட்டுமே நான் பேசுகிறேன்.
காந்தி மதுவை நிராகரித்தார் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் நான் காந்தியை வாசிக்கவில்லை. ஆனால் காந்தி அன்றைய சூழலில் முன்வைத்த வழிகள், தீர்வுகள் எவற்றையும் நாம் மதநிறுவனரின் ஆணைகளாகக் கொள்ளவேண்டியதில்லை என்றே சொல்கிறேன். காந்தி முன்வைத்த கைத்தறி இயக்கம் அன்று கிராமியப்பொருளியலில் பெரிய அலையாக இருந்தது. என் அம்மாவே கதர்நூற்று தன் கைச்செலவுக்கு பணமீட்டியதை நினைவுகூர்கிறேன்.
ஆனால் இன்று அது வெறும் குறியீட்டுச் சடங்காக மட்டுமே செயல்படமுடியும். அதற்கு நடைமுறைப்பொருளே இன்று இல்லை.ஆனால் அதை நாம் புரிந்துகொண்டால் உற்பத்தியின் பரவலாக்கம் பற்றிய சிந்தனை நோக்கிச் செல்லமுடியும். பொருளுற்பத்தியில் போக்குவரத்துச்செலவை, நடுவே உள்ள லாபங்களை இல்லாமலாக்குவதைப்பற்றி சிந்திக்கமுடியும். உற்பத்தியும் நுகர்வும் ஒரே இடத்தில் ஒரே அமைப்பின் இரு பக்கங்களாக இருப்பதைப்பற்றி திட்டமிட முடியும். மாஞ்செஸ்டரின் மில்களுக்கு எதிராக காந்தியின் கைராட்டை சுழன்றதை புரிந்துகொண்டால் இன்றைய சுதந்திர மென்பொருள் இயக்கமும் காந்தியமே என்று புரிந்துகொள்ளமுடியும். கள்ளைப்பற்றி நான் சொன்னதன் பொருள் இதுவே.
எனக்குத்தெரியும், நம்மவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என. நான் உத்தேசித்ததே அந்தச்சீண்டலைத்தான். நான் கவனத்தை ஈர்க்கவிரும்பியது இங்கேதான். காந்தியம் என்பது காந்தி செய்தவற்றை திரும்பச்செய்வதோ காந்தி சொன்னவற்றை கடைப்பிடிப்பதோ அல்ல. காந்தி அரைநூற்றாண்டுக்காலம் அன்றிருந்த சூழலில் செயல்படுவது வழியாக சென்றடைந்த சில தரிசனங்களை இன்றிருக்கும் சூழலுக்கு ஏற்ப விரிவாக்கம்செய்துகொள்வது மட்டுமே.
ஜெ
கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள்
கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும்