யானைமுகன்

1

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்பது, கி, பி, 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம வர்மன் வாதாபியை வென்று அங்கிருந்து கொண்டுவந்த விநாயகர் சிலையை (வாதாபி கணபதி) பிரதிட்டை செய்ததிலிருந்து துவங்கியதாக ஒரு பொதுவான பார்வை உண்டு, ( இது அவரது தளபதியான பரஞ்சோதி, சிறுத்தொண்டர் அவர்களின் ஊர் திருச்செங்காட்டாங்குடி கோவிலில் உள்ளது என்றும் நம்பப்படுகிறது) ஆனால் ஜெயமோகன், தன் கொற்றவை நாவலில் யானை முகனை தமிழரின் தொன்மையான குலக் குறியாக வர்ணித்திருப்பார். அது பற்றி அவரிடம் ஒரு முறை பேசியதில்,இந்த வாதாபி கணபதி என்பதை தான் ஏற்கவில்லை என்றும் யானைமுகன் என்பது மிக ஆதி காலத்திலிருந்தே தமிழகத்தில் ஒரு குலக் குறி ஆக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது இந்தச் செய்தி அவர் கூறியதை உறுதிப் படுத்துவது போல் அமைந்துள்ளது.

http://epaper.dinamani.com/604608/Dinamani-Chennai/04102015

சுரேஷ் கோவை.

அன்புள்ள சுரேஷ்

நான் சொன்னதற்கு முதல் ஆதாரம் எளிய பொதுப்புத்திதான். தமிழகத்தில் வேதப்பண்பாட்டின் தடயங்கள் சங்க இலக்கியத்தின் மிகமிகத்தொன்மையான முதல்சிலபாடல்களிலேயே கிடைத்துவிட்டன. ஆனால் வினாயகர் மட்டும் மேலும் ஆயிரம் வருடம் கழித்து தமிழகத்துக்கு வந்தார், அதுவரை இங்கே அவர் இல்லை என்பதெல்லாம் கொஞ்சம் அதீதமானவர்களால் மட்டுமே யோசிக்கத்தக்க வழிகள்.

வினாயகர் மட்டுமல்ல ஆறுமதங்களில் ஒன்றான காணபத்தியமே தமிழகத்தில் வலுவாக இருந்தமைக்குச் சான்றுகளை இலக்கியங்களில் காணமுடியும். வினாயகர் பழங்குடி மரபிலிருந்து இந்துமதத்திற்குள் சென்றவர். அதற்கு ஆதாரமாக அசுரர்களிலேயே கஜமுகன் போன்றவர்கள் இருப்பதைக் காணலாம். சிவகணங்களில் யானைமுகன்கள் இருப்பதைக் கவனிக்கலாம். யானைமுகக்கடவுள்கள் பல இருந்திருக்கலாம். அதில் ஒன்று பெருந்தெய்வமாக ஆகி காணபத்தியத்தின் முதன்மைக்கடவுளாக ஆகியது.

இந்தியாவின் பழங்குடித்தெய்வங்கள் இந்துமதம் என ஒன்று உருவாவதற்கு முன்னரே இந்தியா முழுக்க ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப்படலமாக ஆகிவிட்டவை

ஜெ

முந்தைய கட்டுரைஉணவுப்படிநிலை
அடுத்த கட்டுரைதஞ்சை பிரகாஷ் – புனைவுகளும் மனிதரும்