பகுதி மூன்று : முதல்நடம் – 4
மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர். முகப்பில் நின்ற மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல் பரணில் இருந்த இரு வீரர்களும் தங்கள் குறுமுழவுகளை விரைந்த தாளத்தில் ஒலிக்கத் தொடங்கினர். அந்த ஒலியில் ஊரின் அனைத்துக் குடில்களும் அதிர்ந்ததுபோல தோன்றியது. எக்குடியிலும் மானுடர் இருப்பதற்கான சான்றுகளே இல்லை என்பதுபோல அசைவின்மை இருந்தது.
ஃபால்குனை எழுந்து தன் அரையாடையை இறுகக் கட்டிக்கொண்டாள். அதன்மேல் தோற்கச்சையையும் இறுக்கி முடிந்தாள். “வில் ஒன்று எனக்கு அளியுங்கள்” என்றாள். வீரன் ஓடிச்சென்று வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்து வந்தான். “மூன்று அம்பறாத்தூணிகள் தேவை எனக்கு” என்றாள் ஃபால்குனை. மூன்று தூணிகளையும் இணைத்து தன் தோளில் போட்டபடி சிறுத்தை என காலெடுத்து வைத்து அவள் வெளியே சென்றாள்.
கலிகன் பின்னால் வந்தபடி “பெண்ணே, நான் சொன்னால் வாயிற்காவலர் கேட்கமாட்டார்கள். இங்குள்ள ஊர்க்காவலர்களும் என்னை ஒரு பொருட்டென எண்ணமாட்டார்கள். கட்டற்றுப் பேசுபவன் என்பதால் என்னை அவர்கள் அறிவிலி என்றே எண்ணுகிறார்கள். அவர்கள் உன்னை வெளியே விடப்போவதில்லை” என்றான். திரும்பாமல் “மீறும் வழி எனக்குத் தெரியும்” என்றாள் ஃபால்குனை.
முதல் புரவித்தொகை குளம்புகளின் பெருந்தாளத்துடன் ஆற்றங்கரையில் தோன்றியது. மரக்கிளைகளை அறைந்து வளைத்தபடி, கூழாங்கற்கள் உருண்டு தெறிக்க, கனைத்தபடி பாய்ந்துவந்த முதல் புரவி மூங்கில் பாலம் அதிர உள்ளே நுழைந்தது. அதைத் தொடர்ந்து வந்த புரவியில் சித்ராங்கதன் கால்களாலும் கைகளாலும் சேணத்தைப் பற்றியபடி குப்புறப் படுத்திருந்தான். அவன் உடலை புரவியுடன் சேர்த்து தோல்நாடாவால் கட்டியிருந்தனர். அதைத்தொடர்ந்து வந்த புரவிகளில் வீரர்கள் திரும்பி நோக்கி “விரைவு விரைவு” என்று கூவியபடி வந்தனர்.
படைத்தலைவன் “இறுதிப் புரவி நுழைந்ததும் கோட்டை வாயிலை மூடுங்கள். பாலத்தை எடுத்துவிடுங்கள். காவல் மேடைகளில் வீரர்களும் நிலைகொள்ளட்டும். அவர்கள் ஆயிரம்பேருக்குமேல் உள்ளனர். அணுக்கமாக நம்மைத் துரத்தி வருகிறார்கள்” என்று கூவியபடியே உள்ளே வந்து பாய்ந்திறங்கி “அத்தனை படைக்கலன்களும் எழட்டும்… ஆண்கள் அனைவரும் களம் காணட்டும்” என்று ஆணையொலித்தான். நாற்புறமும் வீரர்கள் அவ்வாணைகளை மறுபடியும் ஒலித்தபடி விரிந்தனர்.
“இளவரசர் காயம்பட்டிருக்கிறார்” என்று கூறியபடி அவன் குலத்தலைவர் மாளிகையின் முகப்பை நோக்கி ஓடி படிகளில் ஏறி உள்ளே நுழைந்தான். சித்ராங்கதன் படுத்திருந்த புரவியின் விலா வளைவில் குருதி கரிய சாட்டை நாக்குகளாக உறைந்திருந்தது. புதுக்குருதி செவ்வண்டுகள் போல முடிப்பரப்பில் உருண்டு சொட்டியது. குருதியீரத்தை உடல்சிலிர்த்துக் காட்டியது குதிரை. உள்ளிருந்து நான்கு முதிய வீரர்கள் வெளியே ஓடி வந்தனர். ஒரு வீரன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான். இன்னொருவன் குனிந்து இறுக்கமாக கட்டப்பட்டிருந்த தோல்நாடாவை அவிழ்த்தான்.
சித்ராங்கதனை அவர்கள் மெல்லப் பற்றி இறக்கினார்கள். அவன் கைகள் இருபுறமும் தழைந்து விழுந்தன. உடலில் மெல்லிய நெளிவு இருந்தது. அவன் இறக்கப்பட்டதும் அப்புரவி எடை எழுந்த கிளை என வளைந்த முதுகைத் தூக்கி புட்டம் சிலிர்த்தது. அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றதும் அது நிலைகொள்ளாது கால்களைத் தூக்கியபடி அவனைத் தொடர்ந்து செல்ல முயன்று படிகளின் அருகே சென்று தலைநீட்டியது. அவனை “மெல்ல… பார்த்து…” என்று ஆணையிட்டபடி உள்ளே கொண்டுசென்றனர். புரவி எட்டிப் பார்த்து காதுகளை முன்கோட்டி மூக்கைச்சுருக்கி மெல்ல கனைத்தது.
இறுதிப் புரவி கோட்டைக்குள் நுழைந்ததும் வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று பாலத்தை உள்ளே இழுத்தனர். வடங்களைப் பற்றி அந்தரத்தில் தொங்கி கால்களை ஊசலாட்டியபடி தாழ்த்தி இழுத்து படல்கதவை மூடினர். கோட்டைக்குள் இருந்த உயர்ந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த பரண்கள் நோக்கி விற்களுடன் வீரர்கள் நூல்ஏணியில் தொற்றி மேலேறினர். இலைத்தழைப்புக்குள் பறவைகள் போல மறைந்துகொண்டு தொலைவுசெல்லும் பெருவிற்களை நாணேற்றிக்கொண்டனர். ஆணைகளுடன் துணைப்படைத்தலைவர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடினர்.
“அவர்களிடம் நெடுந்தொலைவு செல்லும் அம்புகள் உள்ளன. நச்சு அம்புகள் அவை. எனவே மறைவின்றி எவரும் நிற்கவேண்டியதில்லை. எரியம்புகள் எழக்கூடும். எரியும் இல்லங்களுக்குள் செல்லாதீர்கள். இல்லங்களை மறைவென எண்ணாதீர். பச்சைமரங்களே சிறந்த மறைவு” என்று படைத்தலைவன் கூவினான். அப்பகுதி படைநிலமாக உருமாறிக்கொண்டிருந்தது. மெல்ல ஓசையடங்கி பாயக்காத்திருக்கும் சிறுத்தை என ஆகியது. அத்தனை தசைகளும் இறுகி அசைவிழந்தன.
ஃபால்குனை சீராடிகளுடன் வெளியே வந்தாள். கொட்டகையைத் தாங்கிநின்ற மூங்கில் தூணைப்பற்றி அணில் போல எளிதாக மேலேறி கூரை விளிம்பை எட்டி மேலே மறைந்தாள். கலிகன் ஓடிச்சென்று நோக்கியபோது அவள் நாணல்மேல் அணில் போல மரக்கிளைகளில் தொற்றி வளைந்து நின்ற மூங்கில் ஒன்றைப் பற்றி அதை அசைத்து வில் அம்பை என தன்னை ஏவச்செய்து தெறித்து பிறிதொரு மூங்கில் கழையைப் பற்றி ஆடி இலைத்தழைப்புகளுக்குள் முற்றிலும் மறைவதைக் கண்டான்.
அவள் பெண்ணல்ல அணங்கு என அவன் கொண்டிருந்த ஐயம் உறுதியானது. “அணங்கு அணங்கு” என்று கூவியபடி முற்றத்தை நோக்கி ஓடினான். பதறி “என்ன?” என்று கேட்டான் படைத்தலைவன். “அணங்கு…” என்றான் கலிகன். திகைத்து “யார்?” என்று கேட்டான் படைத்தலைவன். “ஃபால்குனை. அந்த நடனப்பெண். இங்கிருந்து வெறும் காற்றில் சிறகின்றி பறந்து எழுந்து மேலே செல்வதை என் விழிகளால் கண்டேன்.” படைத்தலைவன் மேலும் கேட்க வாயெடுத்து அக்கணம் எழுந்த ஓசையால் திரும்பிக்கொண்டான்.
கோட்டைக்கு அப்பால் புரவிப்படை குளம்போசைப்பெருக்காக அணுகுவது தெரிந்தது. ஒவ்வொரு குளம்படியும் தன் தலைமேல் விழும் கற்கள் போலத் தெரிய படைத்தலைவன் “எனக்கு எதையும் நோக்க நேரமில்லை. இன்னும் சற்று நேரத்தில் முற்றிலும் அழியப் போகிறோம்” என்றான். “தாக்குங்கள்!” என்று கூறியபடி இரு கைகளையும் விரித்துக்கொண்டு ஓடி விழுதுகள் தழுவி ஓங்கி நின்ற ஆலமரத்திற்குப் பின் மறைந்துகொண்டான். “தாக்குங்கள்… ஓர் அம்புகூட வீணாகலாகாது” என்று வீரிட்டான்.
வெளியே இருந்து காற்றில் எழுந்த நாணற்கூட்டம்போல் வந்த அம்புகள் வளைந்து இறங்கியபோது மழைக்கற்றையாயின. மரப்பரப்பில், மண்தரையில், தூண்களில் பாய்ந்து துளைத்து நின்று இறகுவால் நடுங்க அதிர்ந்தன. அசைவுகள் நிற்பதற்குள் அடுத்த அம்புத்தொகைகள் வந்து இறங்கின. சற்றும் இடைவெளி விடாது அப்பகுதி முழுக்க அம்புகள் நிறைந்தன.
அவை மெல்லிய சிறிய அம்புகள். நாகங்களின் தீண்டல் என அவற்றின் கூர்முனை தொட்டவீரர்கள் அலறியபடி விழுந்தனர். திகைத்து எழுந்து உடலை இழுத்து மறைவிடம் நோக்கிச் செல்லும்போதே உடல்தசைகள் இழுபட்டு வலிப்பு எழுந்து தளர்ந்து மண்ணில் கால்கள் இழுபட்டு அதிர வாய் கோணலாகி நுரைகசிய துடித்தனர். சிலகணங்களிலேயே அவர்களின் இமைகள் அசைவிழக்க விழிவெண்மைகள் வெள்ளாரங்கற்களென நிலைத்தன.
மூன்று கழைகளால் சுண்டிச் சுண்டி ஏவப்பட்டு வானில் தெறித்துச் சென்றாள் ஃபால்குனை. கால்களால் இரு மூங்கில்களை எட்டிப் பற்றியபடி அலைகளிலென நின்று நாண் பூட்டி அம்பெடுத்தாள். அப்பால் நாகர்களின் புரவிகள் ஒவ்வொன்றாக ஆற்றங்கரை மேட்டில் எழத்தொடங்கின. முதலில் வந்த நாகன் ஒரு கையில் நீள ஈட்டியை ஓங்கியபடி, வெறியுடன் இழுபட்ட திறந்த வாயுடன், சுருங்கிய கண்களுடன் காற்றில் மிதந்து நீர் நிழலென நெளிந்து அணுகினான். ஃபால்குனையின் அம்புபட்டு அவன் தெறித்து விழ அவன் புரவி அதே விரைவில் வந்து கோட்டை முகப்பை அடைந்து அஞ்சி வளைந்தது.
விழுந்தவன் மேல் மிதித்து வந்த அடுத்த புரவியின் வீரனும் தெறித்தான். அவன் புரவி முதல் புரவியை விசையுடன் முட்டி துள்ளிக்கனைத்து சரிந்து விலாவறைய விழுந்தது. அதற்கடுத்த புரவி அதில் கால்கள் சிக்கி வளைய அதன் மேலிருந்தவன் குப்புற விழுந்து கழுத்து உடைந்து துடித்தான். அம்புபட்டு விழுந்த நான்காவது வீரனின் புரவி முன்னால் விழுந்த இரு புரவிகளின் மேல் பாய்ந்து கடந்து மறுபக்கம் சென்று கால் அறைந்து விழுந்து புரண்டு நான்கு குளம்புகளும் காற்றில் அலைபாய துடித்து சுருண்டெழுந்தது.
அடுத்த வீரனும் தெறித்து விழ அவன் புரவியும் வந்து உருண்டு சென்றபோதுதான் நாகர்தலைவன் அம்புகள் தொலை தூரத்தில் இருந்து வருவதை அறிந்து கைகளைக் காட்டி தங்கள் வீரர்களை தடுத்தான். அதற்குள் அவனைச் சூழ்ந்து நின்ற ஒவ்வொருவராக புரவியில் இருந்து அலறி விழத் தொடங்கினர். அம்புகள் வரும் திசையை உய்த்து மூவர் வில்லெடுத்து தொடுத்த அம்புகள் மூங்கில்குவை அருகில் பறந்து வந்து வானிலேயே வளைந்து நிலம் நோக்கிச் சரிந்தன. அம்புகள் சென்றடையாததை கண்ட தலைவன் ஒருகணம் விழிகூர்ந்தபின் “பின்வாங்குக… அங்கே அவர்கள் நெடுந்தொலைவு விற்களுடன் இருக்கிறார்கள்” என்றான்.
அதற்குள் கைகளில் விற்களுடன் புரவிகளில் தோன்றி முன்னால் ஓடி வந்த மூன்று வீரர்களும் ஒரே கணத்தில் வந்த அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். என்ன நிகழ்கிறதென்று தலைவனாலும் உய்த்துணரக் கூடவில்லை. இத்தனை தொலைவில் இருந்து வந்து ஒருமுறைகூட குறி தவறாது தன் வீரர்களின் நெஞ்சில் கவசத்துக்கும் தலைக்கும் இடையேயான வெளியில் துளைத்துச் சென்ற அம்புகளை நம்பமுடியாதவன் போல் அவன் மாறிமாறி நோக்கினான். அவன் கண்ணில் பாய்ந்து தலைக்குள் சென்றது ஒரு அம்பு. ஒருக்களித்து நிலத்தில் விழுந்து ஒரே ஒரு முறை காலை உதைத்துக் கொண்டு அவன் இறந்தான்.
நாகர்படைகள் அஞ்சிக் குழம்பி கலைந்த தேனீக்கள் போல அக்குறுங்காட்டுக்குள் சுற்றி வந்தனர். கோட்டையை அவர்கள் அணுகாததனால் கோட்டைக்கு மேல் எழுந்த காவல்மாடங்களில் நின்ற வீரர்களும் அம்பு தொடுக்காது திகைத்து நோக்கி நின்றிருந்தனர். அவர்களுக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை. அங்கு இருந்த படைத்தலைவர்களில் ஒருவன் “என்ன நிகழ்கிறது? ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேட்பது ஃபால்குனைக்குத் தெரிந்தது. “அவர்கள் அங்கே அலறுவதைக் கேட்டேன்” என எவனோ மறுமொழி சொன்னான்.
துணைப் படைத்தலைவன் பொறுப்பேற்று முன்னால் வந்து தன் நாகர்களை உரக்க ஆணையிட்டு பின்னால் கொண்டு சென்றான். அவர்கள் மரங்களுக்குள் முழுக்க மறைந்து கொண்டனர். கோட்டைக்கும் மரக்கூட்டங்களுக்கும் நடுவே இருந்த திறந்த வெளியில் தனித்த குதிரைகள் மட்டும் திகைத்தபடி நின்று குரல் எழுப்பின. கால் ஒடிந்த குதிரைகளும் கழுத்து ஒடிந்த குதிரைகளும் மண்ணில் குளம்புகளை வீசி துடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் கனைப்பொலிகளை காவல் மாடங்களுக்குமேல் ஏறி நோக்கினர் மணிபுரியின் படையினர்.
ஃபால்குனை மூங்கில் கழைகளைப் பற்றி ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு என தாவி முற்றிலும் தன்னை மறைத்துக் கொண்டாள். புதர்களுக்குள் விழி கூர்ந்து தொலைவில் ஆடையின் அசைவை உணர்ந்து காதளவு நாணிழுத்து அம்பு தொடுத்தாள். பாம்பு போல இலைகளுக்கு மேல் இருந்து சீறி வந்த அம்பால் கொல்லப்பட்ட வீரனை நோக்கி கூச்சலிட்டனர் நாகர்கள். எவ்விடம் இருந்து வந்தது அம்பு என்று நோக்க புரவியின் கடிவாளத்தை இழுத்துத் திருப்பிய நாகன் நெஞ்சில் அம்புடன் அதன் மேலேயே விழுந்தான்.
“மேலும் பின்னால்… மேலும்” என்று கூவியபடி நாகர்கள் புதர்களுக்குள் ஆழ்ந்து சென்றனர். பிறிதொரு அம்பு மேலிருந்து செங்குத்தாக இறங்கிவந்து ஒருவனின் முதுகைத் தைத்து அவனை வீழ்த்தியது. மேலும் பின்னால் என்று படைத்தலைவன் கூச்சலிட நாகர்கள் ஆற்றங்கரையின் உருளைக்கல் சரிவு வரை பின்வாங்கிச் சென்றனர். அவர்களின் புரவிகளில் ஒன்று கால்தடுமாறிச் சரிய அதன் வீரன் அதை இழுத்து சீர்ப்படுத்தி சரிவில் நின்றான். “ஆற்றில் இறங்கவேண்டாம்… அது திறந்தவெளி” என்றான் தலைவன்.
ஒருவன் “அவர்கள் ஏதோ பூதத்தை ஏவி இருக்கிறார்கள்” என்றான். “அவை அம்புகளல்ல, பேய்கள். இத்தனை தொலைவுக்கு ஓர் அம்பு கூட குறி பிழைக்கவில்லை என்றால் அது மானுடர் தொடுப்பதே அல்ல” என்றான். “கூச்சலிடாதே” என்றான் தலைவன். “உயிர்குடிப்பதற்கென்றே வருகின்றன அவை” என்றான் இன்னொருவன். “அவற்றை தொடுக்கும் வில்லே விழிகளுக்குத்தெரியவில்லை.” தலைவன் “மேலும் கூச்சலிடுபவர்களின் தலை உடனே வெட்டப்படும்… ஆணை” என்றான்.
ஃபால்குனை மூங்கில் கோட்டையின் செங்குத்தான கழைகளின் வழியாக தழுவியபடி கீழிறங்கி தரையடைந்து செறிந்த முள்மூங்கிலுக்குள் நின்றாள். மெல்லிய சீழ்க்கை ஒலியால் அங்கிருந்த புரவி ஒன்றை அழைத்தாள். அது திடுக்கிட்டுத் திரும்பி செண்பக இலைபோன்ற சிறு செவிகளை முன்குவித்து நோக்கியது. மூக்கைச் சுளித்து பர்ர் என்று ஓசையிட்டது. மீண்டும் அழைப்பைக் கேட்டு விழிகளை உருட்டி மெல்ல கனைத்தது. இன்னொரு புரவி அதற்கு மறுமொழி சொன்னது. இருமுறை காலால் மண்ணை உதைத்தபின் நுண்சரடால் இழுக்கப்பட்டது போல் தலையை அசைத்தபடி அவளை நோக்கி வந்தது. அதன் மேல் சேணம் உறுதியாக இருக்க கடிவாளம் தரையில் இழுபட்டது.
அவள் அருகே வந்து நின்று தலையைக் குனிந்து பிடரியை அசைத்தது புரவி. ஃபால்குனை மெல்லிய சீழ்க்கை ஒலியில் ஆணையிட அது பிடரி சிலிர்க்க தலையாட்டியது. ஃபால்குனை மூங்கிலில் இருந்து மெல்ல வெளியில் வந்தாள். தரையில் இருந்து கடிவாளத்தை குனிந்து கையில் எடுத்துக் கொண்டு முழங்காலைத் தூக்கி அதன் விலாவில் குத்தினாள். ஆத்மாவில் படிந்த ஆணையால் தூண்டப்பட்டு கனைத்தபடி குளம்புகளைத் தூக்கி எழுந்து பாய்ந்த புரவியின் மேல் அவ்விரைவுடன் இணைந்தே எழுந்து ஓடி கால் சுழற்றி ஏறிக் கொண்டாள்.
சிட்டு போல குறுங்காட்டை நோக்கிப் பாய்ந்தது புரவி. செல்லும்போதே உதடுகளைக் குவித்து ஃபால்குனை ஆணையிட்டாள். அவ்வொலியைக் கேட்ட இரு புரவிகள் செவிதூக்கி நோக்கியபின் கனைத்தபடி பாய்ந்து அவளது புரவிக்கு முன்னால் ஒடின. அவற்றைத் தொடர்ந்து அங்கு நின்ற பிற புரவிகளும் கனைத்தபடி ஓடத் தொடங்கின. அவ்வொலியைக்கேட்டு காடுகளுக்குள் நின்ற நாகர்கள் கூச்சலிட்டனர். “புரவிகள்! புரவிகள் வருகின்றன” என்ற கூச்சலுடன் கை நீட்டிய வீரன் நெஞ்சில் தைத்த அம்புடன் திகைத்து குப்புற விழுந்தான்.
தலைவன் “கோட்டைக் கதவை திறந்து விட்டார்களா?” என்றான். “இல்லை நமது புரவிகள் நம்மை நோக்கி வருகின்றன” என்றான் வீரன். “நமது புரவிகளா?” என்று அவன் திகைப்புடன் திரும்பினான். “ஆம், அவற்றின் மேல் படைகள் இருப்பது போல் தோன்றுகிறது” என்றான் ஒருவன். “இல்லை, ஒழிந்த புரவிகள் அவை” என்றான் இன்னொருவன். “ஒரு புரவியில் ஒருவன் அமர்ந்திருக்கிறான்” என்று ஒருவன் கூவினான். “அது ஆணல்ல, பெண்” என்றான் இன்னொருவன். “பெண்ணா?” என்றபடி தலைவன் மரமொன்றில் ஏறி நெற்றிமேல் கை வைத்து நோக்கினான். “ஆம், மூங்கில்களுக்குமேல் ஒரு வண்ணமின்னல் போல் நான் ஒரு பெண்ணைக் கண்டேன். சிறகுகளின்றி பறந்தாள்.”
காற்றில் வந்த புரவிக்குமேல் வண்ண ஆடையுடன் பெண் ஒருத்தி முகம் அமைத்து படிந்திருப்பதை தலைவன் கண்டான். அச்சத்துடன் “அணங்கு!” என்றான் இன்னொரு வீரன். “கொல்லுங்கள்!” என்று தலைவன் கையை அசைத்துக் கூவினான். அம்புகள் சீறி எழுந்து காற்றைக் கிழித்து வந்தன. அம்பு பட்ட முதல் புரவி தரையை அறைந்து விழுந்து இழுபட்டுச் சென்று துடித்து எழுந்தது. தாவிவந்த அடுத்த புரவி அதில் கால் சிக்கி விழுந்தது. அதில் கால்பட்டு துடித்துச் சுழன்று விழுந்த மூன்றாவது புரவியைக் கடந்து வந்த புரவியில் இருந்து அறைந்த கிளையொன்றை பற்றித் தாவி ஃபால்குனை மேலே சென்றுவிட்டாள்.
அம்புபட்டு அவள் வந்த புரவி நிலம் அறைந்து விழுந்து மரம் ஒன்றில் மோதி மல்லாந்து கால் உதைத்து துடித்தது. தலைவன் அதைநோக்கி “வெறும் புரவிகள்! எதிலும் எவரும் இல்லை” என்றான். அதற்குள் அவன் நெஞ்சில் பாய்ந்த அம்பு அவனை புரவியில் இருந்து தூக்கி வீசியது. அவனை நோக்கி ஓடிவந்த வீரர்கள் ஒவ்வொருவராக புரவியில் இருந்து கீழே விழுந்தனர். கூச்சலிட்டபடி மேலும் பின்னால் சென்ற நாகர்கள் மேலே பார்க்க மரக்கிளையில் இருந்து பிறிதொரு மரக்கிளைக்கு காற்றில் பறந்துசென்ற பெண் உருவத்தைக் கண்டனர். மூன்றாம்நிலைத் தலைவன் “அணங்கு!” என்று கூவியபடி திரும்பி விரைந்து ஓட நாகர் படைகள் அவனை அனிச்சையாக தொடர்ந்தன.
இறுதியாகத் திரும்பி நின்ற நாகன் கழுத்தில் அம்பு தைத்து கீழே விழ “திரும்புங்கள்! திரும்புங்கள்” என்று மேலும் குரல் எழுந்தது. திரும்பியவர்களில் இறுதிநிரையினர் ஒவ்வொருவராக புரவியில் இருந்து தெறித்து மரங்களில் மோதி கீழே விழுந்தனர். அவர்களின் உடல்கள் பச்சைப்புதர்களை அலைவுறச்செய்தன. தலைக்குமேல் பறவைகள் எழுந்து பறந்து குழம்பி கூச்சலிட்டன.
இறுதியாக திரும்பியவன் மரக் கிளைகளின் நடுவே காற்றில் ஒரு கணம் தெரிந்து மறைந்த பெண் வடிவைக் கண்டு “கொலையணங்கு!” என்று கூவி நெஞ்சில் பட்ட அம்புடன் அவ்வெண்ணம் இறுதியாகத் தெரிந்த முகத்துடன் மல்லாந்து மண்ணில் அறைந்து விழுந்தான். குறுங்காடுகளுக்குள் குதிரைகள் துடித்துக் கொண்டிருந்தன. வீரர்களை இழந்த குதிரைகள் திகைத்து கடிவாளம் இழுபட சுற்றி வந்தன. நிலத்தில் நெளிந்த கைகள் புதர்களுக்குள் இலைகள் அசைய பாம்புகள் கடந்து செல்வதுபோல காட்டின. இலைகளில் விழுந்த குருதி நுனியில் திரண்டு தயங்கிச் சொட்டியது.
நாகர்கள் ஆற்றங்கரையை அடைந்து தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பி விரைந்தனர். குளம்படி பட்ட உருளைக்கற்கள் உருண்டு ஆற்றங்கரைச் சரிவில் இறங்கி பிற உருளைக் கற்களில் முட்டி நீர்ப்பரப்புக்குள் பொழிந்தன. ஒருபக்கம் சேறுபடிந்த சரிவில் தயங்கி நின்றன. பாறைகளில் முட்டி நுரை எழுப்பிச் சென்ற அருவியின் ஓசையின் மேல் புரவிக் குளம்புகள் ஒலித்து ஒவ்வொன்றாக தேய்ந்தன. குறுங்காடு முழுக்க வலிமுனகல்களும் தனித்த புரவிகளின் கனைப்புகளும் மட்டும் எஞ்சின.
மரக்கிளையின் மறைவில் நின்றபடி ஃபால்குனை அசையாது நோக்கிக் கொண்டிருந்தாள். ஓசைகள் அடங்கியபோது அஞ்சி மேல் எழுந்த பறவைகளில் ஒன்று மெல்ல சிறகொடுக்கி கிளையில் வந்தமர்ந்தது. பறவைக் குரல்கள் அவியத்தொடங்கின. ஒவ்வொரு பறவையாக சிறகமைத்து கீழே வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டது. வில்தாழ்த்தி ஃபால்குனை திரும்பி நடந்தாள்.
காட்டின் விளிம்புக்கு வந்து கோட்டைமுகப்பின் ஒளிபரவிய வெளியில் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்புமாக நிமிர்ந்து நடந்தாள். கோட்டைக்குள் காவல் மாடங்களில் இருந்த வீரர்கள் திகைத்து குரல் எழுப்பினர். “இன்று காலை வந்தவள்” என்று ஒருவன் கூவினான். “ஃபால்குனை அவள் பெயர்” என்றான் இன்னொருவன். “அவள் எதிரியா?” என்றான் வேறொருவன். “எதிரியா? அவள் அம்புக்கு முன் நிற்கமுடியாது நாகர்கள் ஓடிவிட்டார்கள்” என்று பிறிதொருவன் கூறினான்.
கலிகன் ஓடிச்சென்று மண்ணில் விழுந்து கைகளை நெஞ்சில் வைத்து “வீரர்களே, அவள் அணங்கு. நம்மைக் காக்க வந்த மலைத்தெய்வம். நாகர்களைத் துரத்தி நம் கொடைகொள்ள மீள்கிறாள்” என்றான். “அவள் வெறும் காற்றில் சிறகின்றிப் பறந்தெழுவதை என் விழிகளால் கண்டேன்” என்று ஒருவன் கூறினான். அவர்கள் அவளை நோக்கி சொல்லவிந்தனர். மேலும் மேலும் வீரர்கள் மூங்கில்மேல் ஏறி அவள் அணுகுவதை நோக்கினர்.
திகைத்து நோக்கிநின்ற விழிகள் முன் சீரான காலடிகளுடன் ஃபால்குனை நடந்து வந்தாள். கோட்டை மூங்கில் முகப்பை அடைந்ததும் வளைந்து நின்ற கழை ஒன்றைப் பற்றி வளைத்து ஒரு முறை எம்பி காற்றில் பறந்து பிறிதொன்றைப் பற்றி வளைந்து மீண்டும் பறந்து காவல் மாடத்துக்கு மேல் வந்தாள். அங்கு நின்ற வீரர்கள் அஞ்சி பின்னகர்ந்தனர். ஒருவன் படிகளில் விரைந்து இறங்கி “வந்துவிட்டாள்! மேலே வந்துவிட்டாள்” என்றான். முற்றத்தில் நின்றவர்கள் அஞ்சி இல்லங்களை நோக்கி ஓடத்தலைப்பட்டனர்.
ஃபால்குனை “நான் அணங்கு அல்ல. போர்த்தொழில் கற்றவள். கழிகளில் தாவும் கலை தெரிந்தவள். நாகர்களை துரத்தி விட்டேன்” என்றாள். முதியவீரன் ஒருவன் “தனந்தனியாக நாகர்களைத் துரத்தும் ஒருவரை இப்போதுதான் காண்கிறேன்” என்றான். “இப்புவியின் நிகரற்ற வீரர் என்று எங்கள் இளவரசரை எண்ணியிருந்தோம்” என்றான் பிறிதொருவன். “அவர் நிகரற்றவரே. நான் மேலும் பல களம் கண்டவள். அவ்வளவுதான்” என்றாள் ஃபால்குனை. “நீ அஸ்தினபுரியின் இளைய பாண்டவருக்கு இணையானவள்” என்றான் முதியவீரன். “நீ இளவரசி… பாடகியல்ல. ஐயமே இல்லை.”
ஃபால்குனை புன்னகைத்தாள். “என்னை அஞ்சவேண்டாம். அஞ்சும் விழிகளை அஞ்சியே நான் பெண்ணானேன்” என்றாள். அவர்கள் சிரித்தனர். “வாருங்கள்! இளவரசரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் ஒருவன். “உங்கள் இளவரசருக்கு புண்பட்டிருக்கிறது அல்லவா?” என்றாள் ஃபால்குனை. “ஆம். இங்கு குலமருத்துவர் எவரும் இல்லை. இவர்களுக்கு எளிய புண்களை நோக்கவே மருத்துவம் தெரிந்துள்ளது” என்றான் முதியவன். “நான் பார்க்கிறேன்” என்றபடி ஃபால்குனை முடிச்சுகள் போடப்பட்ட நூலேணியில் நீர்த்துளி வழிவதைப் போல் இறங்கி கீழே சென்றாள்.