பகுதி மூன்று : முதல்நடம் – 3
ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து இரும்புக்குறடு மரப்படிகளில் ஒலிக்க மெதுவாக இறங்கி வந்து இடைவாள் பிடிக்குமிழில் கையை வைத்தபடி அவள் அருகே நின்றான். அப்பார்வையை உணர்ந்து தலைகுனிந்து, விழிசரித்து, இடை நெளிய கால்கட்டை விரலால் மண்ணை நெருடினாள் ஃபால்குனை.
மெல்லிய குரலில் “இவள் எங்கிருந்து வந்தாள்?” என்றான் சித்ராங்கதன். “மலையிலிருந்து என்கிறாள்” என்றார் படைத்தலைவர். “அத்தனை தொலைவுக்கு தனியாக எவரும் வரமுடியாது. ஒரு புரவிகூட இல்லாமல் இந்த மலையை ஏறி இறங்குவது மானுடரால் ஒண்ணாதது” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை “நான் மலைமகள் இளவரசே. மலைகள் நிலங்களைவிட எனக்குப் பழகியவை. வடக்கே எழுந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு அப்பால் சென்று மீண்டவள் நான்.”
அவளை சில கணங்கள் கூர்ந்து நோக்கிய பின் “அத்தனை தொலைவிறங்கி இந்நாட்டிற்கு ஏன் வந்தாய்?” என்றான். “நானறியேன். என்னுள் இருந்து என்னை விலக்கி எம்மண்ணிலும் நில்லாது அலையச் செய்யும் ஒன்று உள்ளது. அதை ஆராய்தலே என் உள்ளச் செயலென இதுகாறும் உள்ளது. நாகர்களின் உலகில் இருந்தேன். அங்கிருந்து எவரோ மணிபூரகம் என்று சொல்லக்கேட்டேன். அச்சொல்லில் ஈர்ப்புகொண்டு இங்கு வந்தேன். ஏனென்றால் நான் அன்னை மணிபத்மையை வணங்குபவள். மணிபத்மை ஆலயத்தின்முன் என்னுள் எழும் இந்தத் தவிப்பின் பொருள் என்ன என்று வினவலாம் என்று எண்ணினேன்.”
சித்ராங்கதன் அவளை நோக்கி மெல்ல புன்னகைத்து “அத்தவிப்பின் பொருள் என்ன என்று தெரிகிறது” என்றபடி அவளை அணுகிநோக்கி “ ஏனென்றால் நீ முற்றிலும் பெண்ணுமல்ல” என்றான். ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கினாள். “உன் உடல் அசைவுகளில் மொழியில் விழியில் பெண்மை நிறைந்துள்ளது. ஆனால் நீ பெண் மட்டுமல்ல. அதை நான் அறிவேன்” என்றான்.
ஃபால்குனை “என்னைப் பார்த்த அனைவரும் அதை சொல்லியிருக்கின்றார்கள்” என்றாள். “பொருள் விளங்காத சொல் என என் உடலை நான் உணர்வதும் அதனாலேயே.” சித்ராங்கதன் திரும்பி தன் காவலரை பார்த்து “இவளுக்கு உணவும் ஓய்விடமும் அளியுங்கள். ஆனால் இவள் யாரென முற்றிலும் தெரியும்வரை சிறையில் இருக்கட்டும். நான்கு வீரர்கள் இவளுக்கு எப்போதும் காவல் இருக்கவேண்டும்” என்றான். வீரன் தலைவணங்கி “ஆணை” என்றான்.
சித்ராங்கதன் ஃபால்குனையிடம் “ஓய்வெடு. இன்று இங்கு ஒரு போரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றான். “தாங்கள் போருக்கென வந்திருப்பதை புரவிகளைப் பார்க்கும்போதே உணர்ந்தேன். கொலைக்களத்திற்கு செல்லும் படைவாள்போல் புரவியின் மேல் அமர்ந்திருந்தீர்கள்” என்றாள் ஃபால்குனை. சித்ராங்கதன் புன்னகையுடன் திரும்பி நடந்தான். அவன் மெல்லிய உடலும், பொன் மஞ்சள் நிறமும் நீண்ட கண்களும் சிறிய செவ்வுதடுகளும் மீசை அரும்பாத இளைய மேல்உதடும் கொண்டிருந்தான். இரு கன்னங்கள் மேலும் மாதுளை முத்துக்கள்போல் பருக்கள் எழுந்திருந்தன.
”நமது படைவீரர்கள் ஓய்வெடுத்துவிட்டார்கள் என்றால் தங்கள் புரவியின் அருகிலேயே நின்றிருக்கட்டும்” என்றான் சித்ராங்கதன். படைத்தலைவர் “ஆணை” என்றார். “மடிப்புக்கத்தி விரியும் நேரத்தில் அவர்கள் படையென ஆகவேண்டும்” என்றபின் அவன் குலத்தலைவர் மாளிகைக்குள் நுழைந்தான். ஃபால்குனை அவ்வில்லத்தின் வாயில்களில் நீள்நிரையாகத் தொடுக்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்த மண்டையோட்டு மாலையைப் பார்த்து புன்னகைசெய்தாள்.
“என்ன?” என்றான் வீரன். “புன்னகைக்கும் மாலை. இதற்கு முன் முல்லை மலர் மாலைகளை மட்டுமே புன்னகை என்று உணர்ந்திருந்தேன்” என்று ஃபால்குனை சொன்னாள். முகம் மலர்ந்து “நீ பாடுவதுண்டா?” என்றான் வீரன். “அது என் தொழில்” என்றாள் ஃபால்குனை. “ஆடுவதும் உண்டு.” “இன்று வெற்றிக்குப்பின் உண்டாட்டு உண்டு. நீஅதில் பாடி ஆடலாம்” என்றான் வீரன். “ஏனென்றால் நீ கவிதையுடன் இருக்கிறாய்.” அவள் தலைவணங்கி “நற்சொற்களுக்கு நன்றி” என்றாள். “நான் கவிதையறிந்தவன். என் பெயர் கலிகன்” என்றான்.
அவளை அழைத்துச்சென்று குலத்தலைவன் இல்லத்துக்குப் பின்னால் மூங்கில் கூரையிட்டு கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த அடுமனைக்குள் நுழைந்தான். அங்கே மூங்கில் தூணின் அடியில் அவளை அமரச் செய்தான். காட்டுக்காய் கொப்பரையில் கொதிக்கும் அரிசிக்கஞ்சியையும் தீயில் வாட்டிய மானிறைச்சியையும் கொண்டுவந்து வைத்தான். கஞ்சியில் மஞ்சள்நிறமான பன்றிக்கொழுப்புக் கட்டிகளை போட்டான். வெம்மையில் அவை அதில் உருகி எண்ணெய்ப் படலம் என பரவின. மூங்கிலாலான கரண்டியை வைத்து “இங்குள்ள உணவு இது” என்றான். அடுமனைக்காரன் தேங்காய்த் துண்டுகளும், ஆட்டு இறைச்சித் துண்டுகளும் இடப்பட்ட கீரைக்கறியை கொண்டுவந்து வைத்தான். “இவை அரசர்களுக்கு மட்டும் இன்று அளிக்கப்பட்டவை. நீ பாடகி என்றாய். உனக்காக” என்றான்.
நன்றியுடன் தலைவணங்கி மெல்லிய நாணத்துடன் புன்னகைத்தாள் ஃபால்குனை. அவள் உணவருந்துவதை வீரர்கள் சூழ்ந்து நின்று நோக்கினர். “நீ நடனமணி என இவ்வசைவே சொல்கிறது” என்றான் ஒருவன். “ஆம். இசைக்கருவி என்பது காணக்கூடிய இசை” என்றான் ஒருவன். “அழகி, அழகொன்றையே அசைவெனக் கொண்டவள்” என்றான் சற்று அப்பால் அமர்ந்திருந்த முதியவன். அவள் உணவு உண்டதும் கொப்பரையை எடுத்துச் சென்று அருகே ஓடிய சிற்றோடையில் கழுவி எடுத்து வைத்தாள். தன் கைகளையும் வாயையும் கழுவி மேலாடையால் துடைத்துக்கொண்டாள். சிறிய மூங்கில் படிகளில் ஏறி அடுமனைக்கு அவள் வந்தபோது தொலைவில் நாய் குரைப்பதை கேட்டாள்.
அவள் விழிகளை அறிந்த வீரர்கள் “அவர்கள்தான். கீழ்நாகர்கள். இன்று அவர்கள் தாக்குவார்கள் என்று செய்தி வந்தது” என்றபடி தங்கள் படைக்கலன்களை நோக்கி ஓடினர். கலிகன் “ஃபால்குனை, இந்த மூங்கில்தூணின் அருகிலிருந்து விலகினால் அக்கணமே உன்னைக் கொல்லும் பொறுப்பு எனக்கு வந்துவிடுகிறது” என்றான். “விலகுவதில்லை” என்றாள் ஃபால்குனை. அதன் அருகிலேயே ஒற்றைக்கால் மடித்து சற்றே சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
நாய்க் குரைப்புகள் அலைகள் போல ஒன்றைவிட இன்னொன்று பெரிதாகி எழுந்து வந்தன. மூன்று திசைகளிலிருந்து அவ்வொலிகள் நெருங்கி வருவதை உணரமுடிந்தது. குலத்தலைவர் இல்லத்தின் உள்ளிருந்து இரும்புக் குறடுகளின் எடையொலியுடன் வெளியே வந்த சித்ராங்கதன் உரத்த குரலில் “படைகள் கிளம்பட்டும். இருபது கணங்களுக்குள் அத்தனை பேரும் புரவிகளில் ஏறியிருக்க வேண்டும். இது ஆணை!” என்று கூறியபடி தன் உடைவாளை உருவி தலைமேல் ஆட்டி “இன்று அவர்கள் தலைகொண்டு மீள்வோம்” என்றான்.
முற்றத்தில் கூடியிருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் உடைவாள்களை உலோகக் கிரீச்சிடல்களுடன் உருவி ”வெற்றிவேல் வீரவேல்” என குரல் எழுப்பினர். ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவர்களின் விற்களையும் அம்பறாத்தூணிகளையும் மூன்று வீரர்கள் ஓடிச்சென்று எடுத்து வீரர்களிடம் கொடுத்தனர். தோல்நாடாக்களை குறுக்கே மாட்டி அம்பறாத்தூணிகளை தோளில் அமைத்து இடக்கையில் வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக வீரர்கள் புரவியின் மேல் ஏறிக்கொண்டனர். அவர்களின் உடல் அசைவுகளிலிருந்தே போர் அழைப்பு என்று உணர்ந்த புரவிகள் கிளர்ச்சிகொண்டு உருளைக் கற்கள் போன்ற குளம்புகளை மண்ணில் தூக்கி வைத்து, வால் சுழற்றி, தலை அசைத்து, பிடரி சிலிர்த்து பாயத் தவிப்பதுபோல நிலையழிந்தன.
ஒரு புரவி திரும்பி அருகே சென்ற சித்ராங்கதனை நோக்கி மெல்ல கனைத்தது. மற்ற புரவிகளும் அவனை நோக்கின. அவனே ஆணை இடுபவன் என அவை அனைத்தும் அறிந்திருந்தன. சித்ராங்கதன் தன் வெண் புரவி மேல் ஒரே கால்சுழற்றலில் பாய்ந்து ஏறி கை நீட்ட முதியவீரன் அவன் கைகளில் வில்லையும், அம்பறாத்தூணியையும் இட்டான். அவற்றை அணிந்துகொண்டபின் அவன் தலைகுனிந்து கண்கள்மூடி ஒரு கணம் தன்னை குவித்துக்கொண்டான். பின்பு குதிமுள்ளால் குதிரையை மெல்லத் தட்ட அது பெருமூச்சுவிட்டபடி சீரான தாளத்துடன் சென்று போர்முகப்பில் நின்றது. அவனுக்குப் பின்னால் வேல்முனை வடிவில் புரவிகள் அணிவகுத்தன.
அப்பால் எழுந்த நாய்க்குரைப்புகளுக்குப் பின்னால் புரவிகளின் குளம்படி ஓசைகள் ஒலிக்கத் தொடங்கின. காடுகளிலிருந்து எழுந்து பறந்த பறவைகளின் ஒலிகள் வானில் குழம்பின. “அன்னை மணிபத்மையே, உடனிருப்பாயாக” என்று கூவியபின் கையாலேயே கிளம்ப ஆணையிட்ட சித்ராங்கதன் தன் புரவியில் பாய்ந்து மூங்கில் கோட்டையின் வாயில் வழியாக மறுபக்கம் சென்றான். பின்னால் அவனது படை அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது. குளம்போசைகள் அகல்வதுவரை அப்படைகள் சென்று முடியவில்லை என்று தோன்றியது. இறுதிக் குளம்படி ஓசையும் தேய்ந்து மறைந்த பிற்பாடு அவர்கள் அங்கிருந்த விழிச்சித்திரம் எஞ்சியது.
ஃபால்குனை பெருமூச்சுடன் கால்மாற்றி அமர்ந்தாள். கலிகன் “மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் பெற்று பெருகுவது போல அவர்கள் வளர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பல நூறுபேர் படையென எழுந்து வருகிறார்கள். இங்கு எங்கள் நாட்டிலோ நாற்புறமும் ஒவ்வொரு நாளும் இளையோர் இறந்துகொண்டேயிருக்கிறார்கள். எங்கள் பெண்கள் எத்தனை கருவறை திறந்தாலும் எங்கள் படைகளை பெருக்க முடியவில்லை” என்றான். “நெடுங்காலத்துப் பகைமையோ?” என்றாள் ஃபால்குனை. “வெள்ளாட்டுக்கு ஓநாய்களுடன் உள்ள பகைமை அளவிற்கே பழையது” என்று கலிகன் புன்னகைத்தான்.
கசப்பு நகைப்பான கண்சுருங்கலுடன் “நாங்கள் இங்கு மண்ணைக் கிண்டி உயிர் விளைவிக்கிறோம். அவர்களோ ஒரு செடி நட்டு காய் நோக்கும் கலை அறியாதவர்கள். வேட்டை ஒன்றே அவர்கள் அறிந்தது. நாங்கள் அவர்களுக்கு அஞ்சி வளைக்குள் திரண்டுள்ள வேட்டை விலங்குகள் மட்டுமே. உழைத்து உண்டு கொடுத்து ஊன் வளர்த்து இங்கிருப்பவர்கள். எங்கள் மூதாதையர்கள் அறிந்த காலம் முதலே நான்குபுறம் இருந்தும் எங்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் இளவரசர் பிறப்புக்குப்பின் இப்போதுதான் நாங்கள் திருப்பிப் போரிடுகிறோம்” என்றான்.
“முன்பு போரிட மாட்டீர்களா?” என்றாள் ஃபால்குனை. “போரிட்டிருக்கிறோம். ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று முன்பே அறிந்திருந்தோம். நாங்கள் மேழிக்குப்பழகியவர்கள். அவர்களோ கொலைப்படைக்கருவிகளை மட்டுமே அறிந்த கைகள் கொண்டவர்கள். அவர்கள் வருவது எங்கள் பொருட்களுக்காகவும், கால்நடைகளுக்காகவும்தான். ஆகவே அவர்கள் கொள்ளையிட்டுச் செல்ல போதுமான அளவுக்கு பொருளையும் கால்நடைகளையும் விட்டுவிட்டு விலகி ஓடி மறைந்துகொள்வோம்” என்றான் கலிகன். “அந்தக்கலையை நாங்கள் முயல்களிடருந்து கற்றுக்கொண்டோம். நாகர்கள் எங்களை குழிமுயல்கள் என்றே அழைக்கிறார்கள்.”
“நெடுங்காலமாகவே எங்கள் ஊரில் நாங்கள் மறைந்துகொள்ளும் அமைப்புகள் உருவாகி வந்துள்ளன. இந்த ஊரின் அனைத்து இல்லங்களுக்கு அடியிலும் மண்ணுக்குள் பல சுருள்களாக இறங்கிச் செல்லும் வளைபாதைகள் இருக்கின்றன. அவற்றின் மேல் பெரிய கருங்கல்லை இழுத்து மூடிவிட்டு உள்ளே சென்றார்கள் என்றால், அங்கு ஐந்துநாட்கள் ஒளிந்துகொள்ளும் அளவுக்கு உணவும் நீரும் வைத்திருப்பார்கள். இவ்வூரைச் சூறையாடி நெருப்பிட்டு சாம்பலாக்கியபின் அவர்கள் கிளம்பிச் செல்வார்கள். இறுதி நாகனும் சென்றபின் சாம்பல் குவியல்களுக்குள் இருந்து கருங்கல் மூடியை தூக்கி எழுந்து வருவார்கள். காட்டுத் தீ எரிந்த புல்வெளியில் வேரிலிருந்து புல் மீண்டும் முளைப்பதுபோல மீண்டும் இவ்வூர் எழும்.”
கலிகன் புன்னகைத்து ”ஒவ்வொருநாளும் கன்றுகளும் குதிரைகளும் மான்களும் காட்டெருமைகளும் மேயந்தபின்னும் காட்டில் புல் அழிவதே இல்லை. எங்கள் மக்களை திருணமூலர்கள் என்று அழைக்கிறார்கள். புல்வேரின் அழிவின்மை கொண்டவர்கள் நாங்கள்” என்றான். ஃபால்குனை “ஆம், பொறுத்திருப்பதும் காத்திருப்பதும்கூட ஒருவகையில் போர்தான்” என்றாள். “இவர்களின் கொள்ளைக்கும் சேர்த்தே விதைத்துக்கொய்யப் பழகிக்கொண்டோம். இவர்கள் கொண்டுசெல்வதற்கும் சேர்த்தே கன்றுவளர்க்க கற்றோம்” என்றான் கலிகன். “ஆனால் சென்ற சில ஆண்டுகளாக எங்கள் பெண்களையும் இவர்கள் கவர்ந்துகொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.”
“பிறகுலத்துப் பெண்களை நாகர்கள் ஏற்கலாகாது என்ற குலநெறி இருந்தது. விழிதொட்ட அனைவரையும் கொன்று மீள்வதே அவர்களின் வழக்கம். அங்கு நாகர்குலங்களில் எழுந்த ஒரு நோயால் கன்னியர் இறந்து கருவுறுதல் குறைந்தபோது, அவர்களிடம் பெண்கள் இல்லாமலானார்கள். முது பூசகர்களில் எழுந்த பாதாள நாகங்கள் இங்குவந்து பெண்கொண்டு சென்று நாகதெய்வங்களுக்குப் படைத்து ஏழுவகை தூய்மைச் சடங்குகளைச் செய்து அவர்களை நாகப்பெண்களாக்கி மணந்து கொள்ளலாம் என்று ஆணையிட்டார்கள். எனவே இப்போது அவர்கள் வருவது பெண்களுக்காகத்தான்.”
கலிகன் தொடர்ந்தான் “பெண்கள் கிடைக்கவில்லை என்றால் கடுஞ்சினம் கொண்டு மேலும் மேலும் என போர்களுக்கு வருகின்றனர். எனவே ஊர்களைக் கைவிட்டு மண் ஆழத்திற்குச் சென்று பதுங்குகையில் படைகொண்டு வரும் நாகர்கள் கைப்பற்றிச் செல்லவதெற்கென்றே செல்வங்களையும் கன்றுகளையும் கூடவே இளம்பெண்களையும் விட்டுச் செல்லும் வழக்கம் எங்களுக்குள் உருவாயிற்று.” ஃபால்குனை “அதை பல குடியினர் செய்வதை அறிந்துள்ளேன்” என்றாள்.
“கண்ணீருடன் உடல் குறுக்கி அமர்ந்து காத்திருக்கும் எங்கள் இளமகளிரின் விழிகளைப் பார்த்தபடியே வளைகளுக்குள் பதுங்குவதென்பது இறப்பைவிட நூறு மடங்கு கொடியது. மண்ணுக்குள் எத்தனை ஆழத்தில் அமர்ந்திருந்தாலும் அவர்களின் அழுகை ஓசையை கேட்கமுடியும். பிறகொருபோதும் பெற்றோரின் செவிகளில் இருந்து அவ்வொலி நீங்குவதில்லை” என்றான் கலிகன். “அதன் பின்னரே நாங்கள் எதிர்க்கவேண்டுமென எண்ணினோம். அன்னை மணிபத்மையை வணங்கினோம். எங்களுக்கு அன்னை அளித்த அருளென இளவரசர் வந்தார்.”
ஃபால்குனை “பெண் கவர்தல் என்பது பாரதவர்ஷம் முழுவதும் உள்ள நடைமுறை அல்லவா?” என்றாள். “ஆம். இங்கிருந்து செல்லும் பெண்களின் மைந்தர்களே மீண்டும் வில் கொண்டு புரவிகளுடன் எங்கள்மேல் படையெடுத்து வருகிறார்கள். இங்கிருந்து சென்ற சில நாளிலேயே அப்பெண்கள் அனைவரும் நாகினியர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு முந்தைய உறவோ நிலமோ குலமோ நினைவில் நிற்பதில்லை. நாக நஞ்சொன்றை அவர்களுக்குள் செலுத்தி அவர்களின் விழிகளை இமையாமல் நோக்கச்செய்கிறார்கள். பின்னர் அவர்களின் குருதிகளில் நச்சுநீலம் வழிந்தோடுகிறது” என்றான் கலிகன். ஃபால்குனை “பெண் கொண்டு செல்லும் அத்தனை குலத்திலும் அந்த நஞ்சு உள்ளது” என்று கூறி சிரித்தாள்.
மிகத்தொலைவில் பறவைகளின் ஒலி வானில் மேலும் மேலும் குழம்பி கலந்து ஒலித்தது. நாய்க் குரைப்புகளின் ஊடாக மனித அலறல்கள் எழுந்தன. குதிரைகள் கனைக்கும் ஒலிகள் பிறிதொரு இடத்திலிருந்து என கேட்டன. கலிகன் “இங்கிருந்து கேட்கையில் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு இடத்தில் என தெரிகின்றன. போரில் மகிழ்ந்து சூழ்ந்துகொள்ளும் தெய்வங்கள் அவ்வொலிகளை அள்ளி விளையாடுகின்றன என்பார்கள். மானுடர் போரிடுவதே அத்தெய்வங்கள் களியாடுவதற்காகத்தான். சித்தத்தில் குருதியில் படைக்கலக் கூர்மையில் அவை குடிகொண்டு போர் போர் என அறைகூவிக்கொண்டிருக்கின்றன.”
“ஆம், நான் போர்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு உயிரும் தனக்கான போரில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றும். புரவிகள் செய்யும் போர் மானுடர்களின் போர்தானா என்று ஐயம் எழும். யானைகளோ நாய்களோ தங்களுக்குரிய போரில்தான் ஈடுபட்டிருக்கின்றன என்று காணலாம். தொலைவில் இருந்து நோக்கினால் மானுடப்போருக்கு தொடர்பே அற்று, மேலும் வெறிகொண்டு படைக்கலன்கள் தங்கள் சமரை ஆற்றிக்கொண்டிருப்பதை காணலாம்” என்றாள் ஃஃபால்குனை. கலிகன் “குதிரைக்கும் யானைக்கும் நாய்களுக்கும் மனிதருக்கும் படைக்கலன்களுக்கும் வெவ்வேறு தெய்வங்கள்” என்றதும் ஃபால்குனை சிரித்து “குருதி ஒன்றே” என்றாள்.
கலிகன் “ஆம் எவ்வளவு குருதி! இந்த மணிபூரக மண்ணில் மனிதக் குருதி சிந்தாது ஒரு வாரம்கூட கடந்து சென்றதில்லை. இப்படி இத்தனை தலைமுறைகளாக இங்கே பொழிந்த குருதியை தேக்கினால் மணிபூர நகர் நடுவே ஒளிவிடும் மணிபத்மம் என்ற எங்கள் ஏரியைவிடப் பெரிதாக இருக்கும்” என்றான். “அவ்வண்ணமே மானுடம் இதுவரை பெருக்கிய குருதியைத் தேக்கினால் என்ன ஆகும்? செந்நிறம் கொண்ட பெரிதொரு கடலாகும்” என்றாள் ஃபால்குனை. “அதன்மேல் மும்முறை வளைந்த பெரிய அரவொன்றில் கால்நீட்டிப் படுத்திருப்பான் உலகளந்தவன். அவன் இதழில் பாற்கடலில் அவன் பள்ளிகொண்டிருக்கையில் நிறைந்து நின்ற அதே புன்னகையே தெரியும் என்று தோன்றுகிறது.”
மேலும் மேலும் போர் ஒசைகள் வலுத்தன. “அவர்கள் எண்ணிக்கையில் பலமடங்கு” என்றான் கலிகன். “ஓசைகள் அதையே காட்டுகின்றன. மேலோங்கிய பெருங்குரல்கள் நாகர்களின் போரொலிகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கள் இளவரசர் இதுவரை எப்போரிலும் தோற்றதில்லை. விற்தொழிலில் அவருக்கு நிகர் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர் மட்டுமே என்கிறார்கள். அவர் இருக்கும்வரை மணிபூரகம் பணியாது” என்றான் கலிகன். “மணிபூரகம் என்னும் நாகத்தின் நச்சுப் பல் என்று எங்கள் இளவரசரை நாகர்கள் சொல்கிறார்கள். எங்கள் கொடிமரத்தில் ஏறிய அனல்கொடி அவர்.”
“இப்போது அவருக்கு பதினெட்டு வயதே ஆகிறது” என்றான் கலிகன். “இன்னும் மீசை முளைக்கவில்லை. குரலில் ஆண்மை கூடவில்லை. விழிகளும் கன்னியருக்குரியவைபோல் கனவு நிறைந்துள்ளன” என்றாள் ஃபால்குனை. “ஆம்” என்றான் கலிகன். “ஆனால் தீராப்பெருஞ்சினம் கொண்டவர். உறையுருவப்பட்ட கொலைவாள் போன்றவர். அவர்மேல் இங்கு அனைவருக்கும் அன்பைவிட அச்சமே உள்ளது. வெறுப்பும் பலரிடமுண்டு. ஏனென்றால் இரக்கம் என்பதே அவர் அறியாதது. அயலாரைக் கண்டதுமே தலையை வெட்டுவது அவரது வழக்கம். இன்று உன் உயிர் எஞ்சியது ஏன் என்று எனக்கே புரியவில்லை.”
”அவர் ஒருவர்தான் இளவரசரா?” என்று ஃபால்குனை கேட்டாள். கலிகன் “நெடுங்காலம் எங்கள் அரசருக்கு மைந்தர் இல்லை. ஏழு துணைவியரை அவர் மணந்தார். எழுவரும் இளவரசிகளை பெற்றனர். மணிபூரகத்து அரசருக்கு மரபு உரிமை உள்ள மைந்தர் இல்லை என்ற செய்தி பரவியபோது, நாற்புறமும் நாகர் நாடுகளிலிருந்து இளிவரல் எழுந்தது” என்றான் கலிகன். “அன்னை மணிபத்மையின் ஆலயத்தின்முன் நாற்பத்தொரு நாட்கள் ஒருவேளை உணவுண்டு மன்னர் தவம் இருந்தார். நாடாள்வதற்கு ஒரு மைந்தனைத் தர வேண்டும் என்று கோரி கண்ணீர் உகுத்தார். வில்திறன் கொண்ட அவன் படைமுன் நின்று பகை வெல்லவும் மூதாதையர் நெறிகற்று முடிசூடி மணிபூரகத்தை காக்கவும் வேண்டுமென மன்றாடினார்.”
“நாற்பத்தொன்றாம் நாள் அவர் கனவில் சிற்றாடை கட்டி சிறுமியென வந்த அன்னை மணிபத்மை அவருக்கு ஒரு சிறு மலரை அளித்தாள். அது நற்குறி என நிமித்திகர் உரைத்தனர். முதிய பட்டத்தரசி கருவுற்று எங்கள் இளவரசரைப் பெற்றார். முதலில் இங்கு ஒரு சிறிய வதந்தி இருந்தது. இம்முறை அரசி பெற்றதும் பெண்ணே என்று. ஆனால் அது நாகர்கள் பரப்பிய வீண்செய்தியே என்று தெளிவாயிற்று. சில ஆண்டுகளிலேயே கையில் நாண் முழங்கும் வில்லும் ஒளிரும் வாளும் ஏந்தி இளவரசர் பொதுமேடையில் எழுந்தார். செண்டுவெளிப் பயிற்சியில் அவரது விற்தொழில் கண்டு மணிபூரகத்து மக்கள் விழிவிரித்தனர். தங்கள் குலதெய்வங்களை நோக்கி கைகூப்பி எங்கள் குடி காத்தீர்கள் தெய்வங்களே. இனி மணிபூரகம் வாழும் என்று கூவினர்.”
“சொற்களெல்லாம் ஆணை என்று ஒலிக்க இன்று எங்கள் இளவரசரே நாட்டை ஆளுகிறார். படைகொண்டு அவர் எழுகிறார் என்றாலே நாகர்கள் அஞ்சுகின்றனர். முன்புபோல் எங்கள் மைய நகரத்தை நோக்கி அவர்கள் படைகள் தொடுப்பதில்லை. இதுபோல ஒதுங்கிய எல்லைப்புற சிற்றூர்களையே தாக்குகின்றனர். அவர்கள் தாக்கும் செய்தியை முன்னரே அறிந்து படையுடன் வருகிறார் எங்கள் இளவரசர்” என்று கலிகன் சொன்னான். “அவர் வருவதற்குள் கொள்ளைப்பொருள்கொண்டு சென்றால் மட்டுமே அவர்களுக்கு தலைகள் எஞ்சுகின்றன.”
ஃபால்குனை “ஆகவேதான் இம்முறை அவர்கள் பெரும்படையுடன் வந்திருக்கிறார்கள்” என்றாள். ”உங்கள் இளவரசர். அவர் கண்டதிலேயே கடும் சமர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறார். அவர் வெல்வது எளிதல்ல” என்றாள். சினத்துடன் கலிகன் “எப்படி தெரியும்?” என்று கேட்டான். “புரவிகளின் ஒலி” என்றாள் ஃபால்குனை. “குளம்புகளின் ஒலியிலிருந்தே புரவிகளை கணக்கிட முடியும். ஒற்றைப்பெரும் ஒலியாக அவை ஆலங்கட்டி மழைபோல் ஒலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு குளம்பொலி ஓசையையும் தனித்தனியே கேட்டு எண்ணித் தொகுத்து அவற்றின் எண்ணிக்கையை அறிய முடியும். அங்கே ஐந்நூறு புரவிகள் உள்ளன. இங்கிருந்து சென்றவை எழுபத்தைந்து மட்டுமே” என்று ஃபால்குனை சொன்னாள்.
கலிகன் அச்சத்துடன் தூண் பற்றி எழுந்து நின்று தொலைவை நோக்கி செவிகூர்ந்தான். பதைப்புடன் திரும்பி “என்னாகும் இப்போரில்?” என்றான். “விற்தொழில் தெய்வங்களின் அருள். எப்போரும் தெய்வங்களின் பகடையாடலே. ஆயினும் போரில் முதன்மையான ஆற்றல் என்பது எண்ணிக்கைதான்” என்று ஃபால்குனை சொன்னாள். “இளவரசர் வீழ்ந்துவிடுவாரா?” என்றான் கலிகன். “அது தேவர்களின் விழைவு. இத்தருணத்தில் அவர் வீண்ஆணவத்தால் அவர்களை எதிர்கொண்டு போரிடாமல் இக்கோட்டைக்குள் தன்னைக் காத்துக்கொள்வதே உகந்ததாகும்.”
“இக்கோட்டை வலுவானது. புரவிகளால் இதைக் கடக்கமுடியாது இல்லையா?” என்றான் கலிகன். “தைலப்புல் கொண்டுவந்து இதை நெருப்பிட்டுவிட முடியும். மூங்கில் பற்றிக்கொண்டால் எளிதில் அணையாது” என்றாள் ஃபால்குனை. கலிகன் சோர்ந்து சற்றே வாய்திறந்து அவளை நோக்கினான். “ஆனால் இக்கோட்டைக்குள் இருப்பதில் நன்மை ஒன்றுள்ளது. அங்கே அவர்களால் சூழப்பட்டிருப்பவர் எத்தனைபேர் என்று அவர்களால் நன்கு கணிக்க முடியும். ஆனால் இக்கோட்டைக்குள் இருப்பவர்கள் எத்தனைபேர், படைக்கலன்கள் எவ்வளவு என்று அவர்களால் அறிய முடியாது. அந்த அச்சம் ஒரு துணைப்படை போல. நம்மைத் தொடர்ந்து வர நமக்கு உதவும்” என்றாள்.
கலிகன் “ஆனால் எங்கள் இளவரசர் தோற்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை தோற்றுவிட்டால், அவர் தோற்கக்கூடும் என்று அவர்கள் உணர்வார்கள். அதன்பின் இன்றிருக்கும் அச்சத்தை இழந்தவர்களாவர். இன்று தயங்கி கை நீட்டித் தொட்டெடுக்க முயலும் குரங்குபோல் இருக்கிறார்கள். எங்கோ ஒரு முனையிலே ஒரு சில சமயம் எப்போதோ தாக்குகிறார்கள். அச்சம் விலகி அத்தனை முனையிலும் ஒரு சமயம் தாக்குவார்கள் என்றால், மணிபூரகம் அதனை எதிர்த்து நிற்க முடியாது. மீண்டும் சாம்பல் குவியலாக அது மாறும்” என்றான்.
“இக்கோட்டைக்குள் பின்வாங்கினால், அவர்கள் விட்டுச் செல்ல மாட்டார்கள். அதைத் தோல்வி என்றே எடுத்துக்கொள்வார்கள். பின்தொடர்ந்து வருபவர்களை முற்றிலும் அழித்துக் குருதியாடினால் மட்டுமே அதை இறுதி வெற்றி என்று கொள்வார்கள்” என்றான் கலிகன். “இறுதி வெற்றி நம்முடையது என்றால் அது பின்வாங்கல் அல்ல பதுங்கல் என்றே பொருள்படும்” என்றாள் ஃபால்குனை. “ஆம். ஆனால் இத்தருணத்தில் எங்கள் இளவரசருக்கு அது தோன்றாதென்றே நினைக்கிறேன். அவர் வைரம்போல கடினமானவர். குருதியாடுகையில் கொற்றவை என்றே தோற்றமளிப்பார்.”
மேலும் மேலும் ஓசைகள் வலுத்துச் சென்றன. ”இத்தனை தொலைவில் இருந்து கேட்கையில் இறக்கும் வீரர்களின் ஓலம் வெறும் அழுகை என்றே ஒலிக்கிறது. அத்தனை உயிர்களும் இறப்பின் கணத்தில் கொள்ளும் வலியின் ஓசை ஒன்றே. அதில் வீரம் இல்லை. நாடோ, குலமோ, கொள்கையோ இல்லை” என்றான் கலிகன். “உம்மை எதற்கு இங்கு விட்டுச்சென்று இருக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. இத்தனை சொற்களுடன் உம்மால் களம் காணமுடியாது” என்றாள் ஃபால்குனை. புரவிகளின் ஓசை மலையிறங்கிவருவதைக் கேட்டு, “வருகிறார்கள்” என்று சொல்லி ஃபால்குனை எழுந்தாள். “யார்?” என்றான் கலிகன்.
ஃபால்குனை “இளவரசரும் அவரது படைகளும். இங்கிருந்து சென்ற அதே புரவிகளின் குளம்போசை” என்றாள். “குளம்புகள் ஓசையை ஒரு மொழியென அறிய முடியும் என்று நான் எண்ணியதே இல்லை” என்றான் கலிகன். “ஒவ்வொரு ஓசையையும் தனித்தனியாகக் கேட்பது போர்த்தொழிலின் கலை. என்னால் ஒவ்வொரு நாணோசையையும் கேட்க முடியும்” என்றாள் ஃபால்குனை. “என்னருகே பறந்து செல்லும் ஒவ்வொரு அம்பையும் வெவ்வேறெனக் கேட்க முடியும்.”
“நீ விற்தொழில் கற்றவளா?” என்றான் கலிகன். “ஆம். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரே என் ஆசிரியர். அவருக்கு இணையாக களம் நிற்கும் திறன் கொண்டவள் நான் என்றே சொல்லியிருக்கிறார்” என்றாள் ஃபால்குனை. தன்னருகே பறந்த ஈ ஒன்றை அக்கணமே கையில் எடுத்த சிறுதுரும்பால் குத்தி தூக்கிக்காட்டினாள். “என் விழிளும் கைகளும் முற்றிலும் ஒன்றென ஆனவை.” கலிகன் திகைப்புடன் “ஆம்” என்றான். ஃபால்குனை எழுந்து, “வீரரே, இப்போது ஓர் உறுதிச்சொல் அளிக்கிறேன். என் குலத்தெய்வங்களின் மேல் ஆணை. இங்கிருந்து நான் விலகுவதை ஒப்புக்கொள்ளுங்கள். என் வில்நாண் மணிபூரக நாட்டிற்கென்றே எழும்” என்றாள். “உன்னை என் தெய்வங்கள் இங்கே அனுப்பியதாகவே உணர்கிறேன்” என்றான் கலிகன்.