காந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்

car1


கள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான
எதிர்வினைகள் இவை

அன்புள்ள ஜெ,

இப்பொழுது பரவலாக பேசப்படும் மது விலக்கு விவாதத்தில் காந்தியின் தரப்பு கள்ளை ஆதரிப்பதாக இருக்காது. மாறாக இன்று சாராயம் பெருக்கெடுத்தோடும் நிலைக்கு காரணமான இலவச பொருளாதாரத்தையும் அதனை ஒட்டிய வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கும். அதற்காக பெண்களை போரட்டங்களில் பெருமளவு ஈடுபடுத்தியிருக்கும். ஏனெனில் இவ்விஷயத்தில் அவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள். மாற்றமும் அவர்களாலேயே சாத்தியம். இலவசத்தை ஏற்கும் மனநிலையை எதிர்க்கும் செயல்பாடுகள் முன்னிறுத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட முயற்ச்சியே மது விலக்கை சாத்திய படுத்தும் என்பதை உள்ளார்ந்த்து உணர்ந்திருக்கும்.

மாட்டிறைச்சி விஷயத்திலும் அது நேராக பெரும்பான்மை சமூகத்தை நோக்கி அதனது நிலைப்பாட்டிலுருக்கும் சகிப்புத்தன்மையற்ற போக்கை சுட்டிக்காட்டி , அப்போக்கை மாற்ற முயற்ச்சித்திருக்கும்.

நீங்கள் கட்டுரையில் சொல்லியிருப்பது போன்ற எதிர்மறை உபாயங்களை காந்திய அரசியல் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.காந்தியை தாண்டிய காந்தியம் சாத்தியமே, உங்களுடன் உடன் படுகிறேன். அப்படி தாண்டி செல்லும் கந்தியத்தின் விழுமியங்கள் என்ன? செல்லும் பாதையே அடையும் இலக்கை விட முக்கியம் என்பதற்கு அதில் இடம் உண்டா?

ஆலை சாராயத்தை எதிர்ப்பதிலோ, மாற்று பொருளாதார சிந்தனைகளை முன்னெடுப்பதிலோ பிரச்சினை இல்லை. அதற்கான பாதையாக அது கள ஆதரிப்பு நிலையை எடுக்குமா என்பதே முக்கியமான கேள்வி. மேலும் இன்றுள்ள குடி பிரச்சினை என்பதே இல்வச அரசியலின் பின்விளைவு என்ற நிலையில் , காந்தியம் கள்ளை ஆதரிக்காது என்றே தோன்றுகிறது.

பாலாஜி என்.வி.

*

car2

பெங்களூர்கள்ளுக் கடை காந்தி பதிவைத்தொடர்ந்து, முகநூலில் அனைத்துப் பொங்கல்களையும் நண்பர் ஒருவர் சுட்டி அனுப்பி இருந்தார். விதி விலக்கின்றி எல்லா பதிவும் பசுவதை குறித்த காந்தியின் ”ஆதாரபூர்வமான” எழுத்தை முன் வைத்து ஜெயமோகன் காந்திக்கு இழைக்கும் பச்சை துரோகத்தை தோலுரித்திருந்தது. எதிர்வினையாற்றிய எவருக்கும் கட்டுரை மையம் கொள்ளும் புள்ளி எது? ”யார்” இந்தக் கட்டுரையை எழுதியது என்று எதை பற்றியும் அக்கறை இல்லை. ”ஆதாரம்” ஒன்றைக் கொண்டே காந்தியை புதைப்பதைத் தவிர…

கட்டுரையின் மையம். ”நடைமுறை காந்தியம்”. உதாரணமாக காந்தி மார்க்சியத்தை இந்த வினா வழியே இப்படி அனுகுகிகிறார். முதலாளி வர்க்க அதிகாரம் ஒழிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பிறந்தால், அந்த அதிகாரத்தை எது மாற்றும்? விடை மௌனம்.

இதே போன்ற ஒரு வினாவை இன்று புரையோடி இருக்கும் குடி கலாச்சாரத்தை நோக்கி காந்திவினவிக் கொண்டார் எனில் அவர் வந்து சேரும் நடைமுறை சமரசம் [தீர்வு அல்ல] இதுவாகவே இருக்கும்.

அதேபோல இறைச்சி பயன்பாட்டின் நிறுத்தத்தை, சமூக மனத்தின் பண்பாட்டு அசைவின் ஒரு அலகாகக் கண்டு, அங்கே அதை சுத்திகரிப்பு செய்ய முயலுவாறே அன்றி, அதிகாரம் வழியே ஒடுக்குமுறையாக இதை மக்களின் ,மீது கவிழ்த்தும் சட்டடத்தை எதிர்க்கவே செய்வார்.

இரண்டாவதாக இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு ரசிகர். இணையற்ற கலைஞர். கண் தொட மென்மை சொல்லி, கை தொட வன்மை காட்டும் பேலூர் சிற்பக் கன்னிகளின் மென் குழை கல் முலைகள். நியாயப்படி இக் கலைகளில் சில காலம் தோய்ந்து எழுந்த பின்னரே காந்தி தான் பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்ளலாமா கூடாதா என்று தன்னை தானே வினவி இருக்க வேண்டும். ஒரு ரசிகன் நடைமுறையில் காந்தியத்தை எந்த எல்லை வரை கைக் கொள்கிறானோ, அந்த எல்லை வரை காந்தியமும் கொஞ்சம் கலையை கைக் கொண்டு பார்க்கலாம்.

நாவு ருசியை, கலை ருசியை சேர்ந்து அமர்ந்து ரசிக்க ஜெயமோகனைக் காட்டிலும் சிறந்த தோழர் காந்திக்கு [ஒருக்கால் சரளா தேவி] வேறு யாரும் அமையக் கூடுமா என்ன?

கடலூர் சீனு

*
car3

நீங்கள் காந்தியோடு கூடிய காந்தியத்தை பார்க்கிறீர்கள். ஜெயமோகன் சொல்ல வருவது காந்தீயம் என்ற கருத்தாக்கம் மது குடிப்பவரிடையே எப்படி செயலாற்றும் என்பது. மது உருவாக்குவதும் குடிப்பதும் என இருக்கும் சமூகச் சூழலில் காந்தியம் எப்படி செயல்படும்? பலரின் வேலை வாய்ப்பை கெடுக்கும், பலரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெரிய ஆலைகளின் தயாரிப்பில் வரும் சாராயத்தை கண்டிப்பாக எதிர்க்கும். மேலும் அது மனிதனை போதையில் வீழ்த்தி நோயென ஆகி கொலவதை எதிர்க்கும். அதே நேரத்தில், மது போதையை விட முடியாமல் இருக்கும் ஒருவனுக்கு ஒரு சமரசமாக கள் குடியை ஏற்றுக்கொள்ளும். பின்னர் அவன் அதிலும் மூழ்கி அழிவை நோக்கி செல்வானென்றால் அப்போது அதையும் தடுக்கும். காராயத்தில் மூழ்கிய பெரு வாரியான மக்களை மேலேற்றும் முதல் படியாக அவர்களை கள்ளருந்துபவர்களாக மாற்றலாம்.
உதாரணத்திற்கு காந்தி பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க மக்களை வற்புறுத்துகிறார். ஆனால் அதன் முதல் படியாக ஒருவருக்கு ஒருத்தியென வாழும் திருமண உறவை ஆதரிக்கிறார். ஆனால் எனக்கு மாட்டுக்கறி உடன்பாடானது அல்ல. ஒரு விவசாயிக்கு ஒரு மாடு ஒரு உடன் பணிபுரியும் தோழன்.இருவரும் ஒன்றிணைந்து வயலில் வேலை செய்கிறார்கள். விவசாயி தாணியத்தை எடுத்துக்கொண்டும் மாருகள், வைக்கோல் மற்றூம் தவிடு ப்பொண்ரவற்றை எடுத்துக்கொண்டும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கின்றனர். மனிதனும் மாடுகளும் பங்காளிகள். ஆகவே வயலில் உழுத மாட்டை, நம் வீட்டோடு இருக்கும் பணிப்பெண் போன்ற பசுவை கொல்வது எனக்கு உடனபாடில்லை. மற்றபடி இறைச்சிக்கு என வளர்க்கப்பட்ட மாட்டுக் கறிக்கும் ஆட்டுககறிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என கருதுகிறேன்

தண்டபாணி துரைவேல்

*
car5

குடிப்பழக்கம் வேகமாக அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.இதில் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பவை முன்னாள் சோவியத் நாடுகள் , அச்சமூகங்களில் நிலவும் குடிக்கு சாதமாக மனநிலையில் இது ஆச்சரியமே இல்லை ஆனால் குடிப் பண்பாட்டு சமூக ரீதியாக இன்னும் ஒவ்வாமையுடனே நோக்கப்படும் இந்தியாவில் இந்த வேகமான குடி பரவலாக்கத்தை நாம் கவனத்துடன் நோக்க வேண்டும்.மேலும் ஆஸ்திரேலியா உட்பட பல மேலை நாடுகளில் கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் குறைந்து வருவதையும் நாம் கணக்கில் கொண்டு நோக்க வேண்டும்.( புகை பிடித்தலும் குறைந்து வருகிறது ) , இதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் பிரச்சாரமும் கட்டுப்பாடுகளும் (புகை , மது தொடர்பான கறாரான விளம்பர கட்டுப்பாடுகள் ) மற்றும் உடல்நலன் சார்ந்து பெருகி வரும் விழிப்புணர்வுமே என்று சொல்லலாம்.

நம்மிடம் மேலை நாடுகளில் அனைவரும் குடியை கேளிக்கைக்கு அளவாக பயன்படுத்துவதாகவும் , நம் நாட்டைப் போல் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பதில்லை, சலம்புவதில்லை என்று (பொதுவான) ஒரு எண்ணம் உள்ளது.மேலைச்சமூகங்களில் குடி எவ்விதம் நோக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வது நம் விவாதத்தை இன்னும் தெளிவாக்கும்.

மேற்கில் சமூக/ தனிமனித கேளிக்கைக்காக குடிப்பதை பொறுப்பான குடிப்பழக்கம் என்கிறார்கள் ( Responsible use ) பொறுப்பற்ற குடிப்பழக்கத்தை Alchohol Abuse என்கிறார்கள் , அதாவது மதுவை தவறாக /முறையற்று பாவிப்பது என்ற பொருளில் .இதையும் இருவகையாக பிரிக்கின்றனர் ஒன்று ஒரே அமர்வில் அதீத குடி (Binge Drinking) இன்னொன்று மதுவை சார்ந்து இருந்தல் ( Alchohol dependence ).

மேற்கில் பல நூறு வருடங்களாக குடிசார்ந்த ஒரு ஏற்பு உள்ளதால் அது சமூக / தனிமனித வாழ்வில் ஒரு குற்றமாகவோ இழிவாகவோ பார்க்கப்படாமல் அது சார்ந்த பதட்டங்களும் குற்ற உணர்வும் தவிர்த்து குடியின் சாதக பாதகங்களை உணர்ந்து தத்தமது சமூகத்தில் குடி சார்ந்த சிக்கல்களை இயன்ற அளவு நிர்வாகித்து வந்துள்ளன .

உ.ம் –

சிறார்களுக்கு மது விற்பது குற்றம்

நிதானமிழந்தவருக்கும் மேலும் மது விற்பனை செய்வது குற்றம்

குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் பெரும் குற்றம்

மது விற்பனையகங்கள் திறக்கும் நேரங்களில் கட்டுப்பாடு

விளம்பரங்கள் சார்ந்த கட்டுப்பாடு

இவையனைத்தும் மிகக் கறாராகவே அமல்படுத்தப்படுகின்றன.இவ்வளவு இருந்தும் குடி ஒரு சிக்கலா , என்றால் ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும் அதை Silent Shame என்கிறார்கள் .குறிப்பாக இளவயதினரிடம் அதீத குடி மற்றும் குடி சார்ந்த வன்முறை என்பது சர்வ சாதாரணம். குடி ஒரு நாட்டின் மருத்துவ அமைப்பின் மீதும், மதுவை கட்டுக்குள் வைத்திருக்கவும் ,கறாரான கட்டுப்பாடுகளை,அதை அமல்படுத்த கண்கானிக்க செய்யும் செலவுகள் என்று மறைமுகமான பொருளாதார இழப்பீடு மிக அதிகம்.

இந்திய சமூக /கலாச்சார அமைப்பில் பெரும்பாலும் குடி ஒதுக்கப்பட்டே வந்துள்ள சூழ்நிலையில் மதுவை பொறுப்பாக பயன்படுத்துவது , அது சார்ந்த முறைமைகள் என்று முறையான “குடிப்பண்பாடு” என்பது வளரவே வாய்ப்பே இருந்திருக்கவில்லை. எனவே தான் இந்தியாவில் குடி என்று சொல்லும்போது நாம் அதீத குடியையும் , குடிக்கு அடிமையாதலையும் சேர்ந்தே நினைத்துப் பார்க்கிறோம்.மேலும் குடி சார்ந்த எல்லா பொருளாதார இழப்பும் தனி மனிதன் சார்ந்ததே அரசாங்கம் குடியினால் நோயுற்ற தனது குடிமகனுக்கு வைத்திய செலவை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் அரசு , நிர்வாக தரப்பில் மேற்சொன்னது போல மது தயாரிக்கும் , விற்கும் நிறுவனங்கள் மீது பெரும் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை விதித்தாலும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை.

இது போன்ற குடிப்பண்பாடும் ,தடைகளும் , கட்டுப்பாடுகளும் இல்லாத சமூகத்தில் கொள்கை ரீதியாக மதுவை ஏற்றுக்கொள்வது தொலை நோக்கில் பெரும் சிக்கலையே கொண்டுவரும்.

குடியை சுத்தமாக கட்டுப்படுத்தமுடியாது , வேண்டியதும் இல்லை ஆனால் குடியை சமூக அங்கீகாரமாக , கொள்கைப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது அது சார்ந்த இயல்பான மனத்தடைகளை இல்லாமலாக்கும் அது இந்தியா போன்ற நாடுகளில் பெரும் தலைவலியைக் கொண்டு வரும்.இந்தியா போன்ற பெரும் குடும்பங்கள் சார்ந்த நெருக்கமான சமூகங்களில் குடியின் பாதிப்பு தனிமனிதனோடு நிற்பது மிகவும் அரிதே.கேளிக்கை என்றும் ஒரு கோணம் உள்ளது மனித வரலாற்றிலேயே வேறெப்போதையும் விட ஒரு சமூகமாக நாம் கேளிக்கைக்கு பயன்படுத்தும் நேரமும் பணமும் அதிகரித்து வருகிறது.ஒரு சராசரி இந்திய ஆணுக்கு இன்றைய நிலையில் சினிமா , குடி தவிர கேளிக்கை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை

எனவே குடியை மிதமாக , கேளிக்கையாக மட்டுமே வைத்திருக்கும் மனநிலை , சமூக அமைப்பு நம்மிடம் உள்ளது என்று சொல்வதற்கில்லை.

வேறு வகையில் சொல்லப் போனால் காந்தி இன்று இருந்திருந்தால் மதுவினால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை அகற்றுவதை தன் முக்கிய குறிக்கோளாக கொண்டிருப்பார் .டிவிட்டரில் இருந்திருப்பார் , மது அருந்தாமலிருப்பதை ஒரு மோஸ்தராக்கியிருப்பார் ,இடைக்கால வெற்றியாக அரசுடனும் , மது தயாரிக்கும் நிறுவனஙகளுடனும் போராடி தீவிரமான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்பார்.ஆனால் ரசாயன மதுவை அது சார்ந்த பொருளியல் சுரண்டலை புறந்தள்ள கள்ளை முன் வைத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

ஆனால் காந்தியர்கள் , குறிப்பாக நவ காந்தியர்கள் இதை ஒரு pragmatic approach ஆக முயற்சி செய்ய இடமிருப்பதாகவே தோன்றுகிறது.காந்தியம் தற்கால சமூக , தனி மனித , அரசியல் ,பொருளாதார , சூழலியல் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ளாலாம் என்பது ஒரு சுவாரசியமான விவாதமே.இதற்காக விரிவான ஒரு முன்வரைவை (Strategy & Framework ) நவ காந்தியர்கள் முதலில் உருவாக்க வேண்டும் ஏனெனில் காந்தியைப் போன்று சறிதாக முயன்று பின் விரிவாக்கும் தார்மீக வசதி (moral luxuary ) காந்தியர்களுக்கு கிடையாது.அதில் காந்தி எதிர்கொள்ள வேண்டியிராத 21 ஆம் நூற்றாண்டு சிக்கல்களை உள்ளிழுத்து காந்தியத்தை விரிவாக்க வேண்டும்.

ஆனால் ஒரு சாதாரணன் மாலை கள்ளுக்கடை சென்று நண்பர்களுடன் அளவளாவி , மிதமாக கள்ளுண்டு , நாடன் பாட்டுகளை கேட்டு மகிழ்ந்து பின் வீடு செல்வானெலில் அது எனக்கு உவப்பானதே.அதை நிகழ்த்திக்காட்டுபவர்களும் உவப்பானவர்களே. :)

கார்த்திக்

*

1

கள் குடிப்பதையும், கள் விற்பனையையும் காந்தியும் காந்தியமும் எக்காலத்திலும் எதிர்க்கும். காந்தியின் வாழ்வில் நடந்தவற்றிலிருந்து அவரது வழிமுறையை இதற்கும் போட்டுப் பார்க்கலாம்

1. லண்டனில் காக்ஸ்டன் ஹாலில் தேவாலய சபையின் நிகழ்ச்சிக்கு காந்தி சென்றபோது முதலில் அங்கிருந்த சமையற்கூடத்துக்குச் சென்று சமையக்காரருடன் பேசுகிறார். சைவத்தை வலியுறுத்தவில்லை – ஆனால் உடலுக்கும் மன இயல்புக்கும் பாதகம் தராத கச்சாப்பொருட்கள் உள்ளனவா எனக்கேட்கிறார். சாப்பிடும் உணவே நாம். உணவில் சேர்க்க்ப்படும் பொருட்கள் நம் உடலிலும் மனதிலும் உண்டாக்கும் சாத பாதகங்களைப் பற்றி பேசுகிறார். அது அசைவ உணவாக இருந்தாலும் அதீத உணர்வை ஊட்டும் உணவு மனதிற்கு கெடுதி என்கிறார். லாகிரி வஸ்துக்களை சேர்த்து சமைக்கும் ஸ்பானிய இத்தாலிய உணவை எதிர்க்கிறார். தனி மனிதனாக அவற்றை புசிக்க மறுப்பை தனது ஆளுமை உருவாகத்தொடங்கும் நாளிலிருந்து எதிர்த்தவர். உடலுக்குக் குளிர்ச்சி என்றாலும் கள் உருவாக்கும் மனக்கிளர்ச்சிக்கு காந்தியம் எதிரானது.

2. நமது ஒவ்வொரு செயலும் ஆன்மிக வளர்ச்சிக்கான படிகள் என ராட்டை சுற்றுவது முதல் தனிமனித சுகாதாரம் வரை செயல்பட்டவர். அப்படிப்பட்ட தனி மனித ஆன்மிக வளர்ச்சிக்கு எதிராக இருப்பவற்றை ஊக்குவிக்கவில்லை. உண்ணும் உணவு, செய்யும் வேலை என அனைத்திலும் ஆன்மிகத்தளத்தை முன்வைத்தவர்

3. எவ்வித சிறுதொழிலிலும் பெண்கள் சுதந்தரமாக ஈடுபட வலியுறுத்தியவர். எங்குமே பெண்கள் வேலைக்குப் போகத்தயங்கும் இடத்தை அவர் அடையாளம் காட்டியபடி இருந்தார். அரசியல், சம உரிமைன்போராட்டம் என. கள்ளுக்கடை வணிகத்தில் முதல் பலிகடா பெண்களே என்பதை அடையாளம் கண்டுகொண்டிருப்பார். இங்கிலாந்தில் சம உரிமை கோரிய WSP குழுவிலுள்ளோரப் பற்றி எழுதும்போது இப்படிபட்ட தயக்கத்தை குறிப்பிடுகிறார். அவர்கள் குடி வணிகத்தில் வேலை செய்தாலும் தினமும் எள்ளி நகையாடப்பட்டு ஊதியம் குறைவாகப் பெறுவார்கள். அவர்களுக்கு இடமில்லாமல் காந்தியம் செல்லுபடியாகாது. 1930 களில் லண்டன் பெண்கள் நடத்தும் ஆலையில் இதைப் பற்றி பேசுகிறார். இதே காரணத்துக்காகத்தான் சிறுதொழிலாய் நடந்த ஆப்ரிக்க விபசாரத்தையும் எதிர்த்தார். தனது பண்ணையில் நடந்ததை மறுமுறை அவர் நடத்தவிடவில்லை.

4. எத்தொழிலும் சந்ததி தாண்டி பெருமையோடு எடுத்துச் செல்லவேண்டிய சொத்து எனும் நம்பிக்கை ககொண்டவர். சுரண்டலும், ஆணாதிக்கமும் வழிவழியாக கைமாறும் தொழில்களை அவர் ஊக்குவிக்கமாட்டார். காந்திய வணிகத்தில் அதற்கான இடமில்லை.

கிரிதரன் ராஜகோபாலன்

*

1

ஒன்று காந்தி போதைகளற்ற சமூகத்தை கனவு கண்டவர். அதுவே அவரது இறுதி இலக்காக இருக்க முடியும். கள்ளுக்கு சிறப்பு மருத்துவ குணங்கள் இருப்பதாக எல்லாம் நான் நம்பவில்லை. ஆனால், ஜெ முன்வைப்பது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. காந்தி போதையை அரசே ஒரு வியாபாரமாக செய்வதை நிச்சயம் ஏற்பவர் அல்ல. அபார நடைமுறை பிரக்ஞை உடையவர். அவருடைய இறுதி இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அடி முன்நகர இதை அவர் தற்காலிக நடவடிக்கையாக ஏற்றிருக்க கூடும். ஆனால் அதற்கப்பால் உள்ள இலக்கில் அவருக்கு கவனம் இருக்கும். அதை நோக்கியே செல்வார். தீண்டாமை – சாதி பற்றி அவர் கொண்டிருந்த பார்வையின் பரிணாமத்தை கொண்டு புரிந்துகொள்ளலாம்.

மது போன்ற ஒன்றில் குவிமையமாக செயல்பட்டு தர கட்டுபாட்டை கவனிக்க வேண்டிய அரசாங்கமே இத்தகைய கலப்படம் செய்துகொண்டிருக்கும் போது, அது கள்ளுக்கடை போன்ற அமைப்பில் அது பரவலாக்க படும்போது ஏற்படும் மிக முக்கிய சவால்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கள்ளுக்கடைகளுக்கு இடையிலான போட்டியில் போதையேற்ற கள்ள சாராயங்கள் கலக்க வாய்ப்புண்டு. ஒருவேளை இது சாத்தியமானால் இதை கனகாநிக்கும் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.என்ன செய்ய! ‘மனிதர்கள் நல்லவர்கள்’ எனும் நம்பிக்கை மீண்டும் மீண்டும் சோதிக்கபடுகிறது.

சுநீல் கிருஷ்ணன்

*


கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள்

முந்தைய கட்டுரைமாசாவின் கரங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23