அன்புள்ள ஜெ,
ஒரு செயல்பாடு தொன்றுதொட்டு வழக்கில் இருக்குமாயின் அதை மரபு என்கிறோம். மரபு நம்மிடம் முதல் மரியாதை பெறுகிறது; புனிதம் அடைகிறது; பெரும் மக்கள்திரளின் மவுன அங்கீகாரத்தைத் தின்று செறித்து வலிமையாக வளர்கிறது. ஒரு காலத்தில் யாரோ தொடங்கி வைத்த வழக்கம், ஒரு காலகட்டத்தில் யாரும் முடிவுக்குக் கொண்டு வரவும் அஞ்சுகிற சடங்குப் படித்தரத்தை அடைந்துகொள்கிறது.
சிலை மரபு இந்தப் படித்தரத்தை எட்டிவிட்டதாகவே நம்புகிறேன். இச்சமயம் சிவாஜிகணேசனின் சிலை நோக்கி வினாவெழுப்பும் நீங்கள் மட்டுமல்ல, மொத்தமாகவே அம்மரபை நோக்கி வினாவெழுப்புகிற யாரும் ஒவ்வாமையை முன்வைப்பவர்களாய் அறியப்படுவார்கள். ஒரு நாள் உங்களின் சிலை நோக்கியும் இவ்வினா நீளும். அப்போது விஷ்ணுபுர வட்டத்தினர் எரிச்சலடைவர்.
இப்படி நான் துவங்குவதின் காரணம், இம்மரபு அறிவுத்தளத்தில் செயல்படுவோரையும் ஒன்றிணைய விடாது என்பதற்கு உதாரணம் காட்டத்தான். நீங்கள் ‘நமக்குரிய சிலைகள்’ என்று ஒரு பட்டியல் எழுதினீர்கள். துறைசார் மேதைகளைப் பட்டியலிட்டீர்கள். சிக்கல் அதுவல்ல, அவர்களைச் சமூகத்தில் சிலைகளாக நிற்க வைப்பதே சிக்கல். அதாவது, உங்கள் எதிர்த்தரப்பினர் அவர்களின் பார்வையில் சிலரைத் தகுதியற்றவர்களாகக் கண்டால் என்ன செய்வார்கள்? இன்று பெரியார், அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் சிலைகளுக்கு என்ன நடக்கிறதோ அதையே செய்வார்கள் என நான் சொன்னால் சிரிப்பு வரலாம்.
அதே சமயம் அத்தகுதியற்றவர்களை, அதாவது உங்கள் மாற்றுத் தரப்பினரின் பார்வையில் தகுதியற்றவர்களை, சிலைகள் எனும் பருவடிவில்லாமல் எதிர்கொண்டால் விமர்சனமும் உரையாடலுமே மிஞ்சும். அது ஆக்கபூர்வமாக அமைவதுடன் அறிவுத்தளத்தை வலுப்படுத்தும். சிலைப் பட்டியலோ அறிவுஜீவிகளையும் பாமரப் பொதுப்புத்தியில் தள்ளி திசைதிருப்பிவிடும். இது நடக்காது என்கிறீர்களா?
முதலில் இம்மரபுக்குத் தீவிர நெறி வரையறை இல்லை. உங்கள் அளவுகோலும் பட்டியல் அமைப்புமே முரண்படுவதைப் பார்க்கிறேன். சிவாஜிக்கு சிலை வேண்டாம் எனும்போது சமூகத்தில் யாரை முன்னுதாரணமாக்குகிறோம் எனக் கறாரான மதிப்பீடு தேவை என்றீர்கள். அவ்வகையில் சிவாஜி போன்ற திரைப் பிரமுகருக்கு, அதுவும் பிரபலமாகிவிட்டவருக்குச் சிலை தேவையில்லை என்று எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் பட்டியல் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட அளவுகோல்களைக் குறிப்பிடும்போது, “அரசியல், சினிமா இரண்டையும் தவிர்த்துவிடுகிறேன். ஏனென்றால் அத்துறைகளில் ஏறத்தாழ அத்தனை பேருக்குமே சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன” என்பதையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறீர்கள். அரசியல், சினிமா துறையினருக்குச் சிலைகளே தேவையில்லையெனில், இங்கு அத்தனை பேருக்குமே சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன என்று கூறி அவற்றைத் தவிர்ப்பதாகச் சொல்வதில் பொருளில்லை. இவ்வளவுகோலின்படி சிந்தித்தால் சிவாஜிக்கு சிலை வைக்கப்படாமல் போயிருந்தால், அவரையும் நீங்கள் பட்டியலில் சேர்ப்பீர்களோ? அதுவே உங்கள் நிலைப்பாடு எனில், சமூகத்திற்கு யாரை முன்னுதாரணமாக்குகிறோம் என்ற சமூக அக்கறையுடன் விவாதிப்பது உள் முரண்பாடாகிவிடும். இன்னொன்றையும் குறிப்பிடுகிறேன். பட்டியலின் பின்குறிப்பில், “இசை, ஓவியம் ஆகிய தளங்களில் எனக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கறாராக மதிப்பிட்டுத் தெரிவு செய்யும் அளவுக்கு எனக்கு அத்துறைகளில் அறிமுகம் இல்லை. நண்பர்கள் எழுதலாம்” என்று வாசல் திறந்து வைக்கிறீர்கள். இசைத்துறைக்கும் ஓவியத்துறைக்கும் சில சிவாஜிகள் இருப்பார்கள். அவர்களுக்குச் சிலை வைப்பது மட்டும் உங்களுக்கு உவப்பா? எந்தவிதத்தில் அவர்கள் மட்டும் சமூகத்திற்கு முன்னுதாரணப் புருஷர்களாகிறார்கள் என்று கேட்கிறேன். இந்த முரண்பாடு உங்களுடையது என்பதல்ல என் கருத்து; இதுதான் ஓர் நெறி வரையறையற்ற, தத்துவப் பின்புலமற்ற மரபின் உள்ளமை என மதிப்பிடுகிறேன். இது குறித்து விளக்கமாக எழுதுங்கள். ஏனெனில், சிலைகள் யாருக்கு எனும் பட்டியலின் உள்குழப்பம் ஒரு சமூகத்தையே காவு வாங்கும் வல்லமை கொண்டது என்பதை எதார்த்தத்தில் கண்டுவருகிறோம்.
சிலைகள் யாருக்கு, யாருக்கில்லை என்பதே சமூகத்தைப் பிளக்கும் பொதுப்புத்திக்குச் சார்பாக உள்ளது. சமூகத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளும் இதனுள் உறிஞ்சப்பட்டு உழன்று அவர்களும் பிளவில் வீழ்கின்றனர். ஆனானப்பட்ட வள்ளுவரின் சிலைக்கு கர்நாடகத்தில் உள்ள நிலை நீங்கள் பட்டியலிட்ட தமிழர்கள் சிலருக்குத் தமிழ்நாட்டிலேயே உருவாகும். உங்கள் பட்டியலில் உயிருள்ளவர்களைத் தவிர்த்துவிட்டீர்கள். இல்லையெனில், நீங்களும் அதில் இடம்பெறக்கூடும். என் கேள்வி என்ன தெரியுமா? உங்கள் எழுத்துகளால் கொந்தளித்ததை விட பன்மடங்கு கொந்தளிப்பை உங்கள் எதிரிகள் வெளிப்படுத்துவர். உங்களின் ஒரே ஒரு சிலை போதும். அது அறிவுஜீவிகளையும் மடையர்களாக்கி சமூகத்தில் வன்முறைக்கு வித்திடலாம். சமூக அமைதியைக் குலைக்கலாம். தன் சிலை மானுடத்தைக் குதறுவதை ஜெயமோகன் சகித்துக்கொள்வாரா என்று கேட்கிறேன். அவர் நல்லவரா, கெட்டவரா என்கிற விவாதம் அல்ல இங்கு விசயம். அவரது சிலை எழுந்தபோது எழுந்த ஒரு குழப்பம் எப்படி சமூக விரோதிகளின் அரசியலில் பங்கு வகித்து பொது அமைதியைச் சீர்குலைக்கிறது என்பதே விசயம். அப்போது ஜெயமோகனை ஒரு மதவாதியாகப் பார்ப்பார்களா, அல்லது ஒரு சாதியின் குறியீடாகப் பார்ப்பார்களா, அல்லது ஒரு மொழியின் இலக்கியச் சின்னமாகப் பார்ப்பார்களா, வேதாந்தியாகவா, அவரே வெறுக்கும் இந்துத்துவ அரசியல் லேபிளாகவா, ஒரு மரபின் அறிவுஜீவியாகவா? சிலை இதற்கான உரையாடலைத் தோற்றுவித்து சமூகத்தை அறிவுலகில் நுழைக்குமா என்று கனவு காணத் தேவையில்லை. அதற்கும் முன்பு பதற்றத்தின் அலை வீசத் தொடங்கி அது அறிவுத்தளச் செயல்பாடுகளை அரித்துக்கொண்டே போகும். சிலை மரபை இந்தச் சமூகப் பொறுப்புணர்வுடன் ஏன் ஆராய மறுக்கிறோம் என்பதே எனது முதல் கடிதத்தின் சாரம்.
நினைவுகூர்தலுக்கு எவ்வளவோ சாத்தியமான, அறிவார்ந்த, தாக்கம் நிரம்பிய வழிமுறைகள் இருந்தும், இந்தச் சிலைகள், உருவப்படங்கள், மணிமண்டபங்கள் முதலியவை வழியாக சமூகத்தைக் கூறுபோடலாமா? குறித்துக்கொள்ளுங்கள், உங்கள் பட்டியலில் இருப்போரின் பெயரில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறுவ வேண்டும் என நீங்கள் கோரியிருந்தால், நான் வினாவெழுப்ப ஒன்றுமே இல்லை. உங்கள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தால், உங்கள் எதிரிகள் கூட இடம்கேட்டு விண்ணப்பிப்பார்கள். ஆனால் அது வேறு, இது வேறு. சிலைகள் சமூகத்தை எப்போதும் வழிகெடுத்தவாறே உள்ளன. சிலை வைக்கப்பட்டவர் நல்லவராக இருந்தாலும், அவரது சிலை சமூகத்தைச் சீர்குலைக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடச் செய்து உதாசீனம் செய்கிறது. தனிமனித வழிபாடுகளை உண்டுபண்ணி மீள மீள போதை ஏற்றுகிறது. அந்தப் போதை எவ்விதத்திலும் சமூகத்திற்கு நன்மை பயப்பதில்லை. பிரிவினைகளையும் கோஷ்டி மனப்பான்மையையும் ஏற்படுத்தி காழ்ப்புகளை நிலைப்படுத்துகிறது. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு சிலையை இடமாற்றம் செய்வது கூட பதற்றத்தை உருவாக்குகிறது.
இங்கு என்று அல்ல, அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும் பிரச்சினை. உள்நாட்டுப் போரின்போது அதிபராக இருந்த ஜெஃபர்சன் டேவிசின் சிலை அடிமைத்தளையின் குறியீடாக இருப்பதை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடிக்கிறது. 82 வருடங்களாய் வீற்றிருந்த டேவிஸ், பிறகு அங்கிருந்து அருங்காட்சியத்திற்கு மாற்றப்படுகிறார். ஒரு மாதம் முன்பு நடந்த செய்தி.
சில நாட்கள் முன்பு அமெரிக்காவில் டெர்போன் நகர மேயர் ஆர்வெலி ஹப்பார்டின் பத்தடி உயர வெண்கலச் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது சிலை சமூகத்தை இனவெறியால் பிளப்பதாகக் குற்றச்சாட்டு.
ஒர்லாண்டா நகரில் வால்ட் டிஸ்னி ரிசார்ட்டில் வைக்கப்பட்ட பில் காஸ்பியின் மார்பளவு சிலை சர்ச்சையைக் கிளப்ப வால்ட் டிஸ்னி நிர்வாகம் இரண்டு மாதங்கள் முன்பு அதை நீக்கியிருக்கிறது. பில் காஸ்பி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கற்பழித்துள்ளதாகக் குற்றச்சாட்டு. அவருக்கும் ஒரு சிலை. பிறகு அது நீக்கப்படுகிறது.
ஒரு சிலையை அகற்றுவதற்காக 80 வருடப் போராட்டம் கேள்விப்பட்டுள்ளீர்களா? தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் அது நடந்துள்ளது. சீசில் ரோட்ஸ் உடைய சிலையை அகற்ற அங்கு வெடித்த போராட்டம் கடந்த மார்ச்சில் ரோட்ஸ் மஸ்ட் ஃபால் (ரோட்ஸ் வீழ்ந்தே ஆகவேண்டும்) எனும் பெயரில் இயக்கமாக திரண்டது. சுமானி மாக்ஸ்வெலி எனும் கலக மாணவன் அச்சிலையின் மீது மலத்தை வீசி அவ்வியக்கத்தை வழிநடத்தினான். பல்கலைக்கழகம் அவனை நீக்கியது. பிறகு அதே பல்கலைக்கழகம் ரோட்ஸ் சிலைக்கெதிரான கொந்தளிப்பு கண்டு சிலையையும் ஏப்ரல் 9இல் நீக்கிவிட்டு, அச்சிலையை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தேசியப் பாரம்பரியச் சபைக்கு விண்ணப்பம் அளித்துள்ளது. இரகசிய இடத்தில் சிலை பாதுகாப்பாக உள்ளதென அறிவித்துள்ளது. சிலை நீக்கத்துடன் மறுநுழைவு பெற்ற சுமானி மாக்ஸ்வெலி, இது ஒரு தொடக்கம்தான். பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியில் கருப்பர்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வேண்டிப் போராடப் போவதாக அறிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சிலை ஊன்றல், அகற்றல் போராட்டங்கள் அயல்நாடுகளில் ஒரு போர்ன் நடிகை, பாடகிக்காகவும் நடந்து வருகிறது.
வள்ளுவருக்காக கடல்மட்டத்தில் மாபெரும் சிலை நடுவதை விட அப்பணத்தில் அவரது பெயரில் ஒரு மருத்துவமனை கட்டி விட்டிருக்கலாம். சமூகம் பலனடைவதுடன் அவரும் நினைவுகூரப்படுவார்தானே? கர்நாடகத்தில் வள்ளுவரின் சிலைக்கெதிராக கடப்பாறை உயர்த்தியவனும் அவனது நோய் ஒன்றுக்கு வள்ளுவர் மருத்துவமனைக்கு வந்துபோயிருப்பான்.
கடிதம் எழுதிய நண்பர்களிடம் கேட்கிறேன். பருப்பொருளாகக் கண்முன் நிற்பவற்றையே மனம் மறக்காமல் நினைவுகூர்கிறது என்ற திருமூலநாதனிடம் கேட்கிறேன், ஒரு சிலையின் உயரத்தையும் அகலத்தையும் விட பெரும் பருப்பொருள் ஒரு சின்னஞ்சிறு மருத்துவமனை அல்லவா? ஒரு சிறிய மருத்துவ முகாம் கூட உங்கள் ஆதர்ச மனிதரின் பெயரைப் பிரபலப்படுத்திவிடும்தானே? மக்கள் கண்முன் காண்பதோடு பலனும் அடைந்து மனங்குளிர்ந்து நினைவுகூர்வார்கள். நினைவுகூரல் சின்னங்கள் வழியாக நீங்கள் நம்பும் விழுமியங்களைக் காப்பாற்ற விரும்பினால், அதற்குப் பக்கவிளைவுகளற்ற வழியைத் தேடலாமே? ஏன் ஒரு சிலையை முச்சந்தியில் நிறுத்தி சமூகத்தை முச்சந்திக்குக் கொண்டு வர வேண்டும்? அதுவும் பழங்குடி மனத்தோடு?
கார்த்திக் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கிறார். சிலை வைப்பது மட்டுமே ஒரு கருத்தை, விழுமியத்தை மக்களிடையே முழுமையாக எடுத்துச்சென்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார். ஆனால் விழுமியங்களுக்கு ஒரு பருவடிவை அளிப்பவை என்று திருமூலநாதனின் கருத்தையே கூறியுள்ளார். விழுமியங்களுக்குப் பருவடிவம் தரக்கூடாது என்பதல்ல என் கருத்து. என்ன வடிவத்தில் முன்வைத்தால் சமூகம் பலனடையும் என்பதையே சிந்திக்கச் சொல்கிறேன். சிலை எனும் பருவடிவம் விழுமியங்களைக் காக்கவில்லை என்பதுடன், பல தளங்களில் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்குக் காரணமாக உள்ளது என்பதற்குக் குறிப்புகளே நான் கொடுப்பது.
உணர்வுகளை தீண்டுவதின் மூலமாக மனித மனதை அணுகுவதே/அடைவதே மிகவும் லகுவானது, நேரடியானது என்ற கார்த்திக்கின் கருத்தை சமூக விரோத சக்திகள் வெற்றிகரமாக நிறுவி வருகின்றனர். அங்கிருந்து சிலை அரசியல் இயங்குகிறது. அறிவுஜீவிகளிடம் இதற்கு மதிப்பில்லாமல் போய்விட்டால் பொதுப்புத்தியினர் சிலைகளால் ஏமாற்றப்படுவது கணிசமாக குறையும். நிலைமை என்னவெனில், அறிவுஜீவிகளும் இம்மரபை இச்சித்து மாற்றுச் சிந்தனைக்கு வராது பின்தொடர்கின்றனர்.
பகுத்தறிவு, அரசியல், ஆன்மிகம், பொருளாதார, சமூகப் பார்வையில் இந்த மரபைப் பரிசோதனைக்குட்படுத்துவதே அறிவுத்தளத்தில் அணுகுவதாக அமைய முடியும். பாமரப் பொதுப்புத்தியுடன் அறிவுஜீவிகளும் சிலைகள் பின்னே போவது எனக்கு உண்மையாகவே வேடிக்கைதான். மேதகு, மாண்புமிகு, உயர்திரு பதவிகளை மனிதர்களைக் காட்டிலும் சிலைகள் அவர்களிடம் அடைகின்றனவே? நேற்று அந்தக் கல் மூலையிலோ சாலையிலோ கிடக்க, அதன் மீது மனிதனோ மிருகங்களோ சிறுநீர் மலம் கழித்துவிட்ட நகர, அதன் இன்றைய பதவி மனிதனையும் கைகட்டி வளைந்து நிற்கச் செய்கிறதெனில், மனிதனாகப் பிறந்த என்னால் கொஞ்சமும் ஏற்கமுடியவில்லை. மாலை அணிவித்து வணங்குகிறார்கள். என்னால் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியவில்லை. எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் ஆறறிவுள்ள மனிதன் ஒரு சிலைக்கு மாலை அணிவிப்பதை ‘மரியாதையின் குறியீடு’ என நியாயப்படுத்துவதைப் புரியவே முடியவில்லை. என் பகுத்தறிவுக்கும் எட்டாத தீவிர சடங்குசார் நம்பிக்கைதான் இதன் பின்னணியாக உள்ளதென்ற முடிவுக்கு வருகிறேன்.
அரசியலிலும் ஆன்மிகத் தளத்திலும் இந்த மரபு ஒரு மிகப் பெரிய மாயையை உருவாக்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் இரண்டுமே மனம் மடங்கிப் பணிவது ஒரு சிலைக்கு முன்பு. சரிதான், சிலை ஒரு குறியீடு, சந்தேகமில்லை. எதற்குக் குறியீடு என்பதே இங்கு கேள்வி. எந்தத் தலைவனுக்கும் ஆன்மிகவாதிக்கும் அது அடிமைப்படுத்துகிறது? யாருக்குப் பிரதிநிதியாக நின்றுகொண்டு ஆறறிவு கொண்ட மனிதனைப் பயபக்தியுடன் தலைகுனிய வைக்கிறது? மனிதன் இன்னொரு மனிதனுக்கு மனம் ஒடுங்கி அடிமைப்படுகிறான். சிந்தனைச் சுதந்தரத்தை ஒடுக்கிவிடும் வலிமை ஒருவன் இறந்துவிட்டாலும் அவனது சிலைக்கு உண்டு என்றாகிறது. இந்தப் பழங்குடி மனம் அறிவால் மேம்பட்ட மக்களுக்கு எந்தவிதத்தில் கொண்டாட்டத்தைக் கொடுக்கிறது என்று முருகவேலன் அவர்களிடம் கேட்கிறேன். என்னால் அப்படியொரு பழங்குடியினரின் அறிவை ஏற்கவே முடியவில்லை. அவர்களது அறியாமையைக் கண்டு பரிதாபம் கொண்டு அவர்கள் மேம்பட வழிநடத்துபவனாகவே நான் இருக்க முடியும்.
பயன்கருதித்தான் சிலைகள் வைக்க வேண்டும் என்பதான பார்வையில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் முருகவேலன். நல்லது. சிலைகள் வைத்து சமூகம் பல்வேறு தளங்களில் – ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? மானுட நலனை விட நீங்கள் கொண்டாடும் சிலைகள் முக்கியமா? பழங்குடியினரின் வாழ்வு மீதான தீராக் காமத்தைவிட நாம் வாழும் சமூகத்தின் நலனே முக்கியம் என்று எனக்குப் படுகிறது. மதிப்பீடு என்பது மனிதர்களைவிடப்பெரியது, ஏனென்றால் அது காலம் இடம் சூழல் கடந்தது என நானே எனக்குச் சொல்லிக்கொள்கிறேன் என்ற ஜெமோவின் எழுத்தை அப்படியே வழிமொழிகிறேன். நமது கொண்டாட்டத்திற்காக சமூகத் தீமைகளைப் பொருட்படுத்தாதிருப்பது, பட்டாசுத் தொழிற்சாலைகளில் அனுதினமும் அபாயக்கட்டத்தில் இருப்போர் முன்பு குதூகலமாய் பட்டாசு வெடிப்பதை நினைவுபடுத்துகிறது. நம் இனத்தின் நிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிய வீரர்களின் நினைவாக நீங்கள் நடுகிற நடுகல்லை, இக்காலச் சிலையைக் காட்டிலும் ஒரு மரத்தை நட்டு வளர்ப்பது மகா செய்ந்நன்றிப் பண்பாக இருக்கும். ஒரு சிலை நடப்படுகிற இடத்தைவிடக் குறைந்த இடமே மரத்திற்கு போதும். சிலையின் தலையில் காக்கைகளும் புறாக்களும் எச்சத்தைக் கக்கியும் ஒழுக்குவிட்டும் பறந்துவிடுவதால் சிலையை இரும்புக்கூண்டுகளுள் வைக்கின்றனர். மரமாக இருந்தால் அந்த வாயில்லா ஜீவன்கள் கூடுகட்டி வாழும். வாயுள்ள ஜீவன்களாகிய நாம் நிழல் பெற்று நகருவோம். இரண்டு ஜீவன்களுக்கும் காய் கனிகள் கிட்டும். ஒரு மரத்தை நட்டு இறந்தவர் சார்பாக செய்ந்நன்றி கொண்டாட முடியாதா இப்படி? சிலையை உடைப்பது போல் மரத்தை வெட்டி சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கமாட்டார்களா என்று என்னிடம் கேட்டால், சிலைகள் பெற்றுள்ள கெட்ட பெயர்களை மரங்கள் பெறவில்லை; சிலைகள் தங்கள் எதிரிகளைத் தொடர்ந்து இம்சித்துக்கொண்டிருக்கும். மரங்கள் மனங்களில் ஒரு தென்றல் கடந்த உணர்வைத் தொடர்ந்து கொடுக்கும். பிழைத்துக்கொள்ளும். கல்லடி படுகிற சிலையை விட கல்லடி படுகிற மரம்தான் சமூகத்திற்குத் தேவை என்கிறேன்.
எனக்கு ரமேஷ் தியாகராஜனின் கடிதத்தில் ஆச்சரியம் இருந்தது. சிலை வைப்பது ஓர் அங்கீகாரம், முதல் புள்ளி என்கிறார். இவ்வளவு எளிய புள்ளிக்கும் அங்கீகாரத்திற்கும் செய்கிற செலவை மிகப் பெரிய அங்கீகாரத்திற்கும் அறிவுத்தளத்திலான இயக்கத்திற்கும் கூட நாம் செய்வதில்லை ஏன்? முதல் புள்ளி ஏற்படுத்தும் அதிர்வுகள் தொடர்ச்சியாக சமூகத்தைத் தடம்புரளச் செய்துகொண்டிருக்கிறது. அதாவது, அடுத்த புள்ளிகளுக்கே வழியில்லாமல் செய்துவிடுகின்றன. உழலும் நிலையில் உட்கார வைத்துவிடுகின்றன என்பதை நாம் உணர்ந்தோமா? என்னைப் பொறுத்த வரை சிலையால் ஓர் அங்கீகாரம் என்பதும், அதை முதல் புள்ளி என்று வார்த்துக்கொள்வதும் நமது சமூகச் செயல்பாட்டிலுள்ள ஊனம் என்றே கருதுகிறேன். இதற்காக ஆகும் செலவை எல்லாம் திருமூலநாதன் தன் கூற்றில் சட்டென இலேசாக்கிவிடுகிறார். “நினைவுகூரல் அத்தனை எளிய பணியோ தேவையற்ற ஒன்றோ அல்லவே!…எல்லாக் காலங்களிலும் இதுதானே நடைமுறையாக இருந்துவந்துள்ளது?” என்கிற அவரின் கூற்று என்னை திகைப்புறச் செய்தன. சிலைகள் வாயிலாக நடக்கும் நினைவுகூரல் எந்த நிலையைச் சமூகத்தில் எட்டியுள்ளது என்பதையும் அந்த முதல் புள்ளிக்காகச் செய்யப்பட்டு வரும் செலவுகளையும் மேலோட்டமாகக் கணக்கிட்டால் கூட மனம் பாரமாகிவிடுகிறது. ரொம்பவே கடினமான பணியைத்தான் சமூகம் செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை மனதளவில் ஏற்று அங்கீகரிக்க திருமூலநாதனின் பரந்த மனம் எனக்கில்லை.
· மதுரையில் தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் சிலை நட முதல் புள்ளி வைத்து வாக்குறுதி வழங்கினார் செல்வி ஜெயலலிதா.
· லக்னோவில் அமைந்துள்ள ரூ. 2600 கோடி அம்பேத்கர் நினைவிடத்தைப் பராமரிக்கும் பணியைத் தொடர உ.பி. அரசு சுப்ரீம் கோர்ட்டிடம் கோரியது. கோர்ட் அதைத் திட்டவட்டமாக நிராகரித்த செய்தி சில ஆண்டுகள் முன்பு நடந்தது.
· 80 கோடி சிலை திருட்டில் சப் இன்ஸ்பெக்டரும் திரை இயக்குநரும் கைதாகிறார்கள்.
· பலப்பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கடத்தல். கோயில்களிலிருந்தும் அருங்காட்சியத்திலிருந்தும்.
· அப்துல் கலாம் சிலைக்கு ரூ.1500 முதல் 20,000 வரை விலை வைக்கிறார் சாதாரண சிற்பி.
இன்னும் இன்னும் எவ்வளவோ செலவழித்தே சிலைகள் நடப்படுகின்றன; ஆராதிக்கப்படுகின்றன. நாத்திகர்களோ ஆத்திகர்களோ அனைவரின் சிலைகளையும் பலத்த பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது காவல்துறையின் கடமை. காணாமல் போய்விட்ட பெருங்கோடி மதிப்புள்ள சிலைகள் குறித்து புலன்விசாரணை செய்ய வேண்டியது உளவுத்துறையின் கடமை. தோண்டி எடுக்கப்பட்ட பழங்காலச் சிலைகளையும் புதிதாய் கிடைக்கவுள்ள சிலைகளையும் கண்காணித்து அருங்காட்சியத்தில் பத்திரப்படுத்துவது தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கடமை.
இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக சிவாஜி சிலையை காந்தி சிலைக்கு எதிரே நிறுத்துவதும், அதை அகற்றுவதற்காக மணிமண்டபம் கட்டித்தருவதும் அரசின் கடமை. இம்மாதிரியான தருணங்களில் சிலைகளால் தூண்டப்படும் கலவரங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கருணைத்தொகை வழங்குவதும், காயம்பட்டோருக்கு மருத்துவம் பார்ப்பதும் அரசு மற்றும் சாதிக்கட்சிகளின் கடமை.
சாதிச் சிலைகள், மொழி வெறியூட்டும் சிலைகள், நிறவெறியூட்டும் சிலைகள், ரசிகர்மன்ற மோதல்களைக் கொண்டுவரும் நட்சத்திரங்களின் சிலைகள். இதனிடையே அரசியல் தலைவர்களின் சோளக்காட்டு உருவ பொம்மைகளை எரிப்பதற்காக உருவாக்கப்படும் தற்காலிகச் சிலைகள். அறிந்தோ அறியாமலோ இத்தனைக்கும் செலவழித்து நினைவுகூரல் கொண்டாட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. சிலை மரபு இத்தனைக்கும் முதல் புள்ளி என்றால் நான் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவையும் கேட்டுவிட்ட பிறகும் “எல்லாக் காலங்களிலும் இதுதானே நடைமுறையாக இருந்துவந்துள்ளது?” என்று யாராவது சொன்னால் நான் என்ன சொல்வது சொல்லுங்கள்.
அப்போது நானும் இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் சாதிச்சிலை உடைப்புகளின் போது, “சாதி மோதல்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளின் ஆத்திரமூட்டும் செயலுக்கு இரையாகாமல் அமைதி காத்திடுங்கள்” என்று பத்திரிகைகளில் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதைப் போல் அறிக்கை தருவதா?
ஜெ, உங்களிடம் கேட்கிறேன் உங்களின் பின்வரும் வரிகளை முன்வைத்து: “நாம் நம் சிந்தனை என்றும் தர்க்கம் என்றும் நினைப்பவை எல்லாமே சமகாலம் சார்ந்தவை. கல்வி மூலமும் புறச்சூழல் மூலமும் அடையப்பெற்றவை. அவற்றுக்கு அடியில் உள்ள நம் ஆழ்மனம் நம் சமூகச்சூழலால், நம் மொழியால் உருவாகி வந்திருக்கிறது. அந்த ஆழ்மனம் நம் பழங்குடிக்காலம் முதலே கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு உருவானது. அதன்மேல் நம் தர்க்கபுத்திக்குப் பெரிய கட்டுப்பாடு ஏதுமில்லை. ஆகவே நாம் தர்க்கத்தால் விலக்கும் பல சடங்குகள் நமக்கு பல இக்கட்டுகளில் தேவையாகவும் ஆகின்றன” என்று எழுதுகிறீர்கள்.
சிலை மரபு ஆன்மிகத் தளத்தில் சடங்காகவும் வேறு தளங்களில் அரசியலாகவும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எந்தக் காலத்தில் இவை சரித்திரத்தை மேம்பட்ட கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளது, சொல்லுங்கள்?
மரபானது சடங்குப் படித்தரத்தை அடைந்துவிட்டால் அதில் மூதாதையர் மீதான பற்றுறுதி பின்னிக்கொள்கிறது. அச்சமயம் அது ஒரு சமயமாகிவிடுகிறது. பின்பு அங்கு அறிவுத்தளம் இடிந்து வீழ்கிறது. விவாதக் களம் இல்லாமலாகிறது. நான் நம்புகிறேன், நான் சிலை மரபை அறிவுத்தளத்தில் அணுகும்வரையே என்னிடம் ஒருவர் விவாதிக்க முடியும். ஒரு மரபை, நடைமுறையை மூர்க்கமாக நிராகரிக்க வேண்டியது தேவையா என்ற கேள்வியில் இறங்கிவிட்டேன் என்றால் பிறகு என்னிடம் அது குறித்து மட்டுமல்ல, எது குறித்தும் விவாதிக்க முடியாது. புறக்கணிக்கப்பட மிகத் தகுதியானவனாய் ஆகிவிடுவேன். ஏனெனில், எந்தச் சடங்காக இருப்பினும் அது தனிமனிதனோடும், அவன் சார்ந்துள்ள சமூகத்தோடும் உறைந்து கிடக்கிறது. ஒரு நடைமுறையை மூர்க்கமாக நிராகரிக்க வேண்டுமா என்கிற ஒற்றைக் கேள்வியைக்கொண்டே அச்சடங்கை உயிர்வாழச் செய்வார்கள் அதனில் உறைந்தவர்கள். மூதாதையர் எப்போதோ தங்கள் சுயபுத்தியில் தொடங்கி வைத்த ஒன்று, பிற்காலத்தில் தொன்மம், குறியீடு, கொண்டாட்டம் என்கிற பொருளில் நிலைகொள்கிறது. அதை அறிவியல்பூர்வமான நெறிமுறையோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் அணுகி சுவீகரித்துக்கொண்டால் ஆட்சேபணை வராது. அவ்வாறு இல்லையெனில் அது ஒரு சாராரின் சுயஇன்பமாகவே இருக்க முடியும். அதைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு வழிகளே சாத்தியம் என நினைக்கிறேன். ஒன்று, மதக்கட்டுப்பாடு. இன்னொன்று, அரசுக்கட்டுப்பாடு.
மக்களாட்சிக் காலத்தில் வாழ்கிற நாம் இன்று அரசுக்கட்டுப்பாடுகளால் சிலதைச் சாதிக்கிறோம். சமூகச் செயல்பாடு ஒன்று மக்களுக்குப் பெருந்தீமைகளைக் கொண்டு வருகிறதெனில், அப்போது விவாதிப்பின்றி ஒரு சட்டத்தின் மூலம் அமைதியை நிலைநாட்ட முடிகிறது. காலத்தின் தேவை கருதி எடுக்கப்படும் முடிவு அது. உதாரணத்திற்கு லாட்டரிச் சீட்டின் தீமைகளால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கின்றன என்பதை அறிந்து அச்சூதாட்டத்திற்கு அரசு தடைவிதித்தது. இப்போது மதுவின் கொடுமைகள் தடையுத்தரவைக் கோருகின்றன. பொதுவிடங்களில் சர்ச்சைகளையும் சாதி மோதல்களையும் உண்டாக்குகின்றன சிலைகள். சிலை அகற்றும் போராட்டங்கள் ஒருவிதத்தில் சிலை மரபே தவறு எனும் கருத்தை பகுதியளவில் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஒரேயடியாக யாருக்கும் சிலை வேண்டாமென அரசு கட்டுப்படுத்தினால் அதற்கு அறிவுஜீவிகளிடம் ஆதரவு இருக்குமா என்பதே என் கேள்வி. அவர்கள் ஆதரிக்கமாட்டார்கள் எனில், அவர்களின் ஆழ்மனதில் அவர்களுக்கும் ஒரு சிலை வேண்டுமென்ற கனவு தங்கியுள்ளது என்றே பொருள். அல்லது பழங்குடி மனம் இன்னும் பக்குவப்படவில்லை என்றே பொருள்.
ஓர் உண்மையை மறுக்க முடியாது என நம்புகிறேன். இந்த மரபின் ஏகபோகத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அரசியல் புள்ளிகள்தான். தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள். கையில் லேடீஸ் பேக்குடன் மாயாவதி தனக்குத் தானே சிலை திறப்பு செய்ததை மறந்திருக்கமாட்டோம். இதுதான் எதார்த்த நிலை எனில், ஏன் அறிவுஜீவிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லா ஒரு மரபை மேலும் ஸ்திரப்படுத்துகிற கனவில் இருக்கிறார்கள்? அரசு விரும்புகிற சிலைதான் ஆதிக்கம் செய்யும் எனும்போது ஏன் தங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் நேரத்தை விரயம் செய்கின்றனர்? அதுவும் சிலை போல உயிரற்ற மரபிடம் மயங்கிக் கிடக்கிறார்கள்? சிலையாகி செருப்புமாலை அணியப்பட்டு பருவடிவில் அவமானப்பட்டு மனம் நோவதை விட தாங்களே சிலை வேண்டாமென சமர்த்தாக இயங்குவது புத்திசாலித்தனம் அல்லவா?
மத்திய அய்ரோப்பாவின் ஸ்லோவாக்கியா நகரின் சிற்பக் கலைக்கூடம் முன்பு சாலையில் போவோர் வருவோரெல்லாம் காணும்விதத்தில் ஒரு நிர்வாணச் சிலையை நிறுத்தினார்கள். அந்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மரெக் ஒர்மன்டிக் வடித்த சிலை அது. மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அனுமதியின்றி அதை நிறுத்தியதற்காக 24 ஈரோக்கள் தண்டம் கட்டியது கலைக்கூடம். ரோமன் டர்சூல் எனும் அதன் மேலாளர், “கலையின் அருமை தெரியவில்லை மக்களுக்கு. கலையை கலையாகப் பார்க்க மறுக்கிறார்கள்” என்று புலம்புகிறார். சமீபத்தில் மே மாதம் நடந்த செய்தி.
சிலைகள் கொண்டாட்டத்துக்குரியவை என்பதில் ஏதேனும் இந்த மரபுசார் அறிவுஜீவிகளிடம் நெறிமுறைகள் உள்ளனவா என்று நான் கேட்கிறேன். பண்பாட்டுப் பின்புலத்திற்கு ஏற்ப அவற்றைத் திருத்தங்களுடன் உள்வாங்கிக்கொள்ளலாம் என்ற பதில் கிடைக்குமா? அப்படிப் பார்த்தாலும் பொதுவிடத்தில் அதைக் கொண்டாடாத மக்களுக்கு எரிச்சலையும் இடையூறையும் காழ்ப்பையும் பரப்பாதா? ஒரு நிர்வாணச் சிலையை விட ஒவ்வாமையான தலைவர்களின் சிலைகளால் வரும் சமூகக் கொந்தளிப்பை எப்படி அணுகுவது?
நிர்வாணச் சிலையை மறுக்கவாவது நம்மிடம் தணிக்கை நெறி உள்ளதா? கலைரசனையின் அதிகபட்சத் தாவல் அடல்ட்ஸ் ஒன்லி என்பதுடன் நிற்குமா அல்லது அதையும் தாண்டியதா? சில ஆண்டுகள் முன் சென்னையில் அரசு ஓவியக் கல்லூரி முதல்வர், நிர்வாணமாக வரைய எந்தப் பெண்ணும் தமிழ்நாட்டில் போஸ் கொடுக்க முன்வருவதில்லை. கலையை கலையாகப் பார்க்க மறுக்கிறார்கள் என்று மாணவர் மத்தியில் புலம்பியதை சிலை மரபும் ஓவிய மரபும் எப்படிப் பார்க்கிறது?
ரோமாபுரியின் அழிவுண்ட நகரம் பொம்பெயி மக்கள் சிலை வடிக்கும் மரபில் சிகரம் தொட்டவர்களாக அறியப்படுகிறார்கள். கிமு 78இல் வெசுவியஸ் எரிமலைகளால் சாம்பலான அந்நகரத்தின் சொச்சங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில் கண்டடையப்பட்டன. கிபி 1819இல் மன்னர் முதலாம் ஃப்ரான்சிஸ் பொம்பெயி நகரத்துச் சிலைகளைக் கண்டு அதிர்ந்து பூட்டி வைக்க ஆணையிடுகிறார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் யாரும் அவற்றைப் பார்த்துவிடக் கூடாது என்கிறார். ஏன்? தோண்டி எடுக்கப்பட்டவை பல இன்றைய பாலியல் வக்கிரப் படங்களையும் மிஞ்சுபவை. ஓவியத்தை விட சிலை வடிவு என்பது 3டி எஃபெக்ட் அல்லவா? பொம்பெயி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று, அதிர்ஷ்டம் நாடி ஆண்குறிகளைக் களிமண்ணில் செய்து வணங்குவது. இன்னும் கஜுரஹோ ஓவியங்களையும் தோற்கடிக்கிற ஆபாசச் சிலை வடிவுகள் கிடைத்துள்ளன. பொம்பெயி மக்களின் கடவுள் பான், ஓர் ஆட்டைப் புணரும் சிலை இன்றும் இணையத்தில் உலவிக்கொண்டிருப்பதைக் காணலாம். எனது கேள்வி என்னவெனில், சிலை மரபும் இன்றைய ஃபோர்ன் தளங்கள் போல பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவர்களை அழைக்குமா?
என் கடிதத்தை முடித்துக்கொள்கிற இத்தருணத்தில் இறைத்தூதர்கள் ஏசாயாவும் தாவீதும் சொல்லிச் சென்ற வாக்குகள் சங்கீதமாய் ரிங்காரமிடுகின்றன என் மனதில். பைபிளில் அவை பதிவாகியுள்ளன:
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். (ஏசாயா 44:9)
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். (சங்கீதம் 115:3-8)
அன்புடன்
அபூநசீபா எம்.எஃப்.அலீ