பஷீரும் ராமாயணமும்- கடிதம்

M-M-Basheer1

அன்புள்ள ஜெ,

இந்த விவகாரம் பற்றிய உங்கள் பதிவு அடிப்படையில் சிந்தனை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எப்படி இந்துமதம் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களை விட இந்த விஷயத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது என்பதையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது. நல்ல விஷயம். பாராட்டுகிறேன்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் வாதங்களில் உள்ள உள்முரண்களையும் கவனித்தாக வேண்டியிருக்கிறது.

// ‘இஸ்லாம் அனுமதிக்காது. பஷீரால் அதைச் செய்யமுடியாது. ஆனால் இந்துமதம் அனுமதிக்கும். பஷீர் உட்பட எவரும் விமர்சனம் செய்யலாம். அதுவே இந்துமதத்தின் தனித்தன்மை, அதன் ஆன்மீக ஆற்றல். அவ்வியல்பு அழிந்தால் இந்துமதம் என ஒன்று இருப்பதற்கே பொருளில்லை //

என்று எழுதுகிறீர்கள். இந்துமதத்தின் ஆன்மீக ஆற்றல் உயிர்வாழ, முதலில் அதன் ஸ்தூல வடிவம் உயிருடனும் ஆற்றலுடனும் இருந்தாக வேண்டும். எவ்வளவு மகத்தான தத்துவமும், ஆன்மிகமுமானலும், அதைக் கட்டிக் காக்கும் எண்ணிக்கையும், வலிமையும், அரசியல் சக்தியும் கொண்ட சமூகம் இல்லையென்றால் தேய்ந்து மறைந்து அழியும். உலகின் எத்தனையோ பண்பாட்டுச் செல்வங்கள் அவ்வாறு அழிந்துள்ளன. இந்துமதம் அவ்வாறு அழியாததற்குக் காரணம் அதன் ஆன்மீக ஆற்றலால் ஏதோ மாயம் நிகழ்ந்ததால் அல்ல. அந்த ஆன்மீக ஆற்றலால் உந்தப் பெற்ற விஜயநகர சாம்ராஜ்யமும், வீர சிவாஜியும், ராஜபுத்திரர்களும் மற்றும் எண்ணற்ற சாமானிய மக்களும் தங்கள் ரத்தம் சிந்தி செய்த போர்களாலும், தியாகங்களாலும் தான். இதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில், போர் என்பது ஆயுதங்களால் மட்டுமல்ல, கருத்தளவிலும், ஊடகங்களாலும் அரசியல் ரீதியாகவும் தான் பெருமளவில் நடத்தப் படுகிறது. இந்தப் போரில், இஸ்லாம் என்ற மதம் அதன் அராஜக விதிகளின் படி அனைவராலும் “மதித்து” நடத்தப் படுவதும், இந்துமதம் அதன் சுதந்திர விதிகளின் படி எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் கட்டற்று விமர்சித்துத் தள்ளப் படுவதும் தான் இந்து மதத்தின் தனித்தன்மையைக் காப்பாற்றூம் என்று நீங்கள் கருதினால் அது அநியாயம் மட்டுமல்ல, நடைமுறையிலும் இந்துமதத்திற்குப் பெரும் கேட்டைக் கொண்டு வரும் தவறான கருத்து.

வால்மீகியையே தடைசெய்வார்களா என்றெல்லாம் நீங்கள் குமுறுவதின் அர்த்தமின்மை உங்களுக்கே புரியவில்லையா ஜெ? வால்மீகியின் அமரத்தன்மை கொண்ட ரிஷி வாக்கியத்திற்கும், பஷீர் போன்ற கட்டுடடைப்பு எழுத்தாளரின் கோணல் பேனா எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல இந்துக்கள். சொல்லப் போனால், இதுவரை கேரளத்தில் இடதுசாரிகள் எழுதித் தள்ளிய பல இந்துவிரோத விமர்சனங்களுக்கும் கூட இல்லாத எதிர்ப்பு இந்தத் தொடருக்கு ஏன் உருவாகியுள்ளது என்பது தான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

// இனி இந்த மடையர்களின் கருத்துக்களைக் கேட்டுத்தான் எழுத்தாளர்கள் சிந்திக்கவேண்டுமா? //
// இனி இந்த தெருப்பொறுக்கிகள் ஃபத்வாக்கள் விதிக்கத் தொடங்குவார்களா? //
// தெருமுனைக் கூச்சல்போடும் பொறுக்கிகள் அதை தங்கள் உடைமை எனக்கருதுவார்கள் என்றால் அது ராமாயணத்தின் அழிவின் தொடக்கம்.//
// சாமானிய இந்துவின் குரலாக ஒலிக்கும் பலர் கேட்கும் ஒற்றைவினா ‘பஷீர் இந்த விவாதத்தை இஸ்லாம் பற்றியும் நபி பற்றியும் செய்வாரா?” என்பதுதான். அந்த ஒற்றைவரியே இந்துத்துவ உதிரிகளின் குரலுக்கு வலு சேர்க்கிறது.//
// இந்துஞானமரபு இனி தெருக்குண்டர்களிடம்தான் வாழவேண்டுமா //

உங்கள் கட்டுரையில், பஷீரின் ராமாயணக் கட்டுடைப்புகளை எதிர்ப்பவர்களை ஒட்டுமொத்தமாக மேற்கண்டபடி, விதவிதமாக வசைபாடித் தள்ளியிருக்கிறீர்கள். அதே சமயம், கணிசமான சாமானிய இந்துக்களும் இதே கருத்தைத்தான் எதிரொலிக்கிறார்கள் என்றும் கூறுகிறீர்கள். அதாவது, உங்களது கண்ணோட்டத்தில், எந்த வன்முறையிலும் இறங்காமல், மிகவும் அமைதியாக, ஜனநாயக ரீதியாக, பஷீரின் ராமாயணக் கட்டுரைகளை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான சாதாரண குடும்பத் தலைவிகள், ,கோயிலுக்குப் போய்க் கும்பிடும் பக்தர்கள் எல்லாருமே “மடையர்களாகவும்” “தெருப் பொறுக்கிகளாகவும்” ஆகி விடுகிறார்கள். நல்ல நியாயம்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

உங்கள் தரப்புகள் ஒருமுகப்பட்டவை, அவை விவாதத்திற்குரியவை அல்ல. இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, ராமாயணத்தையோ ராமனையோ கட்டுடைக்கக்கூடாது என எந்தச்சட்டமும் இல்லை. இங்குள்ள சில பக்தர்களின் தனிச்சொத்துக்கள் அல்ல அவை.

அதேசமயம் எம்.எம்.பஷீர் நீங்கள் சொல்லும் எந்தக்கட்டுடைப்பையும் நிகழ்த்தவில்லை. வான்மீகியைப்பற்றிய ஆய்வுகளில் இதுவரை பேசப்பட்டவற்றை மட்டுமே தொகுத்தளிக்கிறார். அதுவும் ராமனை அவதாரம் என்னும் நிலையில் நிறுத்தி ‘பகவான்’ என்ற சொல்லை பயன்படுத்தியபடி. பேரறிஞராகிய அவரை நீங்கள் ‘கோணல்பேனா’ என்று சொல்வதுதான் உண்மையில் வசை

ஆனால் வான்மீகி எழுதிய ராமாயணத்தின் எளிய கதைவடிவைக்கூட தெரிந்துகொள்ளாமல் முச்சந்தியில் வந்து நின்று முஸ்லீம் எப்படி ராமனைப் பேசலாம் என்று கூச்சலிடும் கும்பலை பொறுக்கிகள் என்று சொல்வது மிகமிக கௌரவமான வார்த்தை. உண்மையில் நான் நண்பர்கள் சந்திப்பில் என்றால் இன்னும் கேவலமான சொற்களையே சொல்வேன். அச்சில் எதற்கு என்ற நாகரீகம்தான்.

பக்தர்கள், சாமானிய இந்துக்கள் எவரை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்பதே என் கேள்வி. இந்த தெருப்பொறுக்கிகள் திரும்பத்திரும்பச்சொல்லும் ஒன்று ஊடகம் வழியாக வருகையில் அது சரிதான் என்றே அவர்கள் என்ணுகிறார்கள். இந்துமெய்யியலை அறிந்தவர்களின் குரல் எழவேண்டும் என நான் சொல்கிறேன். நீங்கள் எந்தப்பக்கத்தை சார்ந்து பேசுகிறீர்கள் என உங்கள் கடிதம் காட்டுகிறது

இந்துமதத்தின் அனைத்துத் தனித்தன்மைகளையும் அழித்து, அதன் ஆன்மீகசாரத்தை ஒழித்து, அதை தெருமுனைப்பொறுக்கிகளால் நடத்தப்படும் ஓர் அமைப்பாக ஆக்கி மூடபக்தர்களும் வெறியர்களும் நிறைந்ததாக மாற்றுவதே அதை அழிவிலிருந்து காப்பாற்றும் ஒரே வழி என நினைக்கிறீர்கள். நான் அப்படி எண்ணவில்லை. அதன் மெய்ஞானமரபே அதன் ஆற்றல் என இப்போதும் நம்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24
அடுத்த கட்டுரைபுன்னகைக்கும் பெருவெளி