காந்தியும் கள்ளும் -கடிதங்கள்

gandhi


கள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள்

அன்பு ஜெமோ,

இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

காந்தி ஜெயந்தி என்றதும், காந்திக்கு அடுத்தபடியாக உங்கள் ஞாபகம் தான் வந்தது. காரணம், இன்றைய காந்தி நூல். காந்தி பற்றிய அத்தனை விமர்சனங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட அருமையான நூல். அதற்காக, மீண்டும் ஒரு நன்றி.

இன்றைய கள்ளுக்கடை காந்தி கட்டுரையில் ஒரு புள்ளியில் நான் மாறுபடுகிறேன்.

//இந்தக்கள்ளுக்கடை போன்ற ஒன்று எவ்வகையிலும் தீங்கல்ல என்றே எண்ணுகிறேன்.//

இந்த தலைமுறையில் குடிநோயாளிகளாக ஆகிவிட்ட பலரும், குடிக்க ஆரம்பித்தது பியரில் தான். ‘இது கூலிங் மச்சி..தண்ணி மாதிரி தான் ‘ என்று ஆரம்பித்தவர்களே அதிகம். மனக்கட்டுப்பாடற்ற சமூகம் நம்முடையது. பியரில் ஆரம்பித்து,’ இன்னும்..இன்னும்’ என போதை தேடி அழிந்தவர்களே இங்கே அதிகம்.

அதே போன்று முந்தைய தலைமுறையில், என் தந்தை உட்பட, கள்ளில் ஆரம்பித்தவர்கள் தான் பெரும்பாலான குடிகாரர்கள். கள்ளில் தீங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைக் குடிக்க ஆரம்பித்தால், அது அத்துடன் முடியாது.

கள் அல்லது பியர் தான் என்றாலும், குடிகாரர்கள் சமூகம் நம்மை இன்முகத்துடன் அவர்களில் ஒருவராகவே நம்மை எண்ணி, அவர்களைப் போன்றே நம்மையும் ஆக்கிமுடிப்பார்கள்.

காந்திக்கும் இது தெரிந்திருக்கலாம்!

அன்புடன்
செங்கோவி.

வணக்கம்,

அன்பில் திரு.ஜெவிற்க்கு,

கள்ளுக்கடையில் காந்தி என்ற தங்களின் பதிவு எனக்கு ஆச்சர்யத்தையே
உண்டாக்கியிருக்கிறது.காந்திய கிராமிய பொருளாதாரம் உண்மைதான் ஆனால்
காந்தி கள்,மதுவோடு சமரசம் செய்து கொள்வார் என்று எப்படி முடிவுக்கு
வந்தீர்கள்?சரி இந்த மதுவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு கள்ளை மட்டுமே
விற்பனை செய்ய வேண்டும் நிலைமை வரும் சுத்தமான கள்ளை விற்பது
சாத்தியமா?இன்றைய நிலையில் இரண்டு கோடி பேர் குடிக்கும் பழக்கம்
இருந்தால் கள் என்ற பின் இரண்டு மடங்காக ஆகலாம் அந்த தேவைக்கு உண்டான
மரங்கள் நம்மிடம் ஏது?அப்போது கள்ளையும் இவர்கள் கலப்படம் செய்து
மீண்டும் டாஸ்மாக் நிலையிலேயே கொண்டு சென்றுவிடுவார்களே.

மாட்டுக்கறிக்கு தடை வேண்டாம் என்றால் பன்றிக்கறிக்கும் வேண்டாம்தானே??

இப்படிக்கு
சுந்தர் ராஜன்.ஜோ
மயிலாடுதுறை.

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

நேற்று (2.10.2015) அன்று கலைஞர் தொலைக் காட்சியில் ‘காந்தி’ (தமிழ் ) பார்த்தேன். அர்த்தம்புரிந்து பார்த்ததில் பிரமித்து விட்டேன் . தங்களது ‘ காந்தி இன்று ‘ கட்டுரைகள் இப் படத்தை சரியாக பார்க்க உதவின . என் குழந்தைகள் இளமைக்கால காந்தியை, காந்தி என்றே ஒத்துகொள்ள மறுத்தனர் . என் மனைவி படம் முடிந்து அழுது கொண்டிருந்தாள். நான் படம் பார்க்கும் போது, சட்டென வரும் விளம்பர இடைவேளையில் உண்மைக்கும் போலிக்குமாக தூக்கி வீசப்பட்டு கொண்டிருந்தேன் . காந்தியின் கைகளில் இருந்து சுதந்திர போராட்டம் கை நழுவி செல்வதை அற்புதமாக படமாக்கி இருந்தார்கள் . (ஜின்னாவிடம் காந்தி கெஞ்சும் காட்சி சிறந்த உதாரணம் .) காந்தி நூறு ரூபாய் ஜாமீனை கூட மறுக்கும் காட்சியில் உண்மையிலேயே மெய் சிலிர்த்தது . என் பிள்ளைகள் என்னிடம், எப்போது ரிமோட்டை தருவாய், நாங்கள் ‘ அரண்மனை ‘ படம் பார்க்க வேண்டும் என்று நச்சரித்து கொண்டு இருந்தனர் . எவ்வளவு கூறியும் அவர்களுக்கு காந்தியை புரியவில்லை . ஒரு வேளை நாற்பது வயதில் இப்படம் அவர்களுக்கு புரியலாம் .

உங்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றியது , வேறொன்றுமில்லை .

நன்றி

அன்புடன்
பா. சரவணகுமார்

நண்பர் ஒருவர் என்னிடம் கள்ளுக்கடைக் காந்தி பதிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். காந்தியை நினைவுகூறும் போது கள்ளக்கடை, மாட்டுக்கறின்னு ஏன் பேசறாரு? அவர் தனிப்பட்ட முறைல என்ன வேனாலும் சாப்டட்டும். ஆனா அத காந்தி பற்றி சொல்லும் போது ஏன் பொது வெளியில் வைக்கிறார் என்றார்.

நான் சொன்னேன், மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனி உரிமை அதை பற்றி கருத்து சொல்ல மாட்டேன். ஆனால் கள்ளக்கடையை வைத்து காந்தியை பற்றி பேசியதை நாம் குறியீடாக புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் குடியும், பொழுதுபோக்கும் ஏராளமாக நிரம்பி இருக்கும் இந்த உலகத்தில் இவற்றின் அத்தனை லாபங்களும் பெரு முதலாளிகளுக்கும் அரரசாங்கங்களுக்கும் செல்கிறது. இவை இரண்டையும் இன்று மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத சூழ்நிலையில் இது போன்ற கடைகளில் இருந்து கிடைக்கும் லாபம் மீண்டும் அந்த கிராமத்து விவசாயிகளுக்கும் கலைஞர்களுக்கும் முதலாளிக்குமே செல்கிறது. காந்தியின் கிராமத்தை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றேன்.

அதே நேரம் இயற்கையான தரமான அளவான குடியும், உணவும், பொழுதுபோக்கும் இந்த கடைகளின் ஒரு முக்கியமான அம்சம். தனி மனிதர்களின் இச்சையை தீர்க்க முடியாதபடி தூண்டாமல் குறைந்த செலவில் நிறைவை அளிக்கும் ஒரு அம்சம் என்றேன்.அதே போல் காந்தி பெரு அமைப்புகளுக்கு எதிராக மக்களின் நடுவில் நின்று கொண்டு பேசும் தலைவர். அதை விளக்கும் விதமாக இந்த எடுத்துகாட்டு அமைகிறது என்றேன்.

ஆனால் என்ன சொன்னாலும் இவர்கள் சமாதானம் ஆகமாட்டார்கள். பேசுவதின் மூலம் நமக்குள் மேலும் தெளிவடைவதே நமக்கு கிடைக்கும் பயன். பிறகு சென்று மீண்டும் அந்த பதிவின் கடைசி பத்திகளை படித்து பார்த்தேன்.காந்தியின் கருத்துகளை அப்படியே வைத்துகொண்டு அதில் மாற்றங்கள் உண்டாவதை தடுத்து ஒரு மதநம்பிக்கையாக மாற்றி கொண்டு அதை இறுகி அழுகி அழியவிடாமல் காலத்திற்கு ஏற்ப மறுநிர்னயம் செய்து உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்றைய காந்தியர்களின், காந்தியின் அபிமானிகளின் கடமையாகிறது என்பது புரிந்தது.

ஹரீஷ்

‘காந்தியத்தை இறுக்கமான மதநம்பிக்கையாகக் கொள்ளாமல் இருந்தால் இன்றைய சூழலில் காந்தியவாதிகள் கள்ளை ஆதரிக்கவேண்டும் என்று தோன்றியது.’

இது தான் அந்த கள்ளுக்கடை காந்தி கட்டுரையின் மையம். காந்தியத்தின் தேவை முன்னெப்போதும் விடத் தற்போது தான் மிக அதிகம். காந்தி முன்வைத்த பொருளாதாரத்திற்கு நேரெதிரான திசையில் இந்தியப் பொருளாதாரம் சென்று விட்டது. அவர் முன்வைத்த ஜனநாயக விழுமியங்களுக்கு நேர் எதிர்த் திசையில் இந்திய ஜனநாயகம் சென்றுவிட்டது. போதுமான அளவிற்கு நம் சமூகக் கட்டுமானங்கள், நமது அற அளவுகோல்கள் அனைத்திலும் சேதாரம் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் காந்தியச் சிந்தனைகளில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டு இன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்த பொருளாதார, அரசியல், சூழியல் மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை முன்வைத்து, அவற்றை ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லும் காந்தியர்களே இன்றைய தலையாயத் தேவை. இக்கட்டுரை அந்தத் தேவையின் ஒரு எடுத்துக்காட்டான வரைவை முன்வைக்கிறது. மிகச் சரியாக காந்தி எதிர்த்த கள்ளிலிருந்தே அவர் கூறிய பொருளாதாரத்தை முன்வைப்பதன் மூலம் அவர் காந்திக்கு முற்றிலும் எதிர்த்திசையில் சென்றிருக்கும் இன்றைய இந்தியாவில் இன்னும் காந்தியத்தின் செல்லுபடித் தன்மையை வலியுறுத்தியிருக்கிறார். காந்தியர்கள் சோர்வுற்று, இந்தத் தேசத்தை இனித் திருத்த இயலாது என்று புலம்புவதை விட இருக்குமிடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதே இக்கட்டுரை வலியுறுத்தும் கருத்து. காந்தியே அப்படிப்பட்ட ஒரு இந்தியாவில் துவங்கியவர் தானே!! ‘ஆகவே செயல்புரியுங்கள் காந்தியர்களே’, என்று அறைகூவ காந்தி ஜெயந்தியை விடச் சிறந்த தினம் வேறேது!!! தைரியமான கட்டுரை.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20
அடுத்த கட்டுரைநான் கிறித்தவனா?