‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18

பகுதி 3 : முதல்நடம் – 1

“கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள்.

“முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக விழிநீர்த் துளிகளாக பிறர் அறியா உவகைகளாக பொருள் கொள்ளா சொற்களாக எவரும் அறியா விழைவுகளாக. கதை முடிந்ததும் தன் ஆயிரம் கைகளை விரித்து பேருருவம் கொண்டு அவள் எழுகிறாள்” என்றாள் மாலினி. “எனவே ஒருபோதும் கதைகள் முடிந்ததும் விழி தூக்கி அவளை நோக்கலாகாது.”

“ஆம்” என்றாள் சுபகை. “கேளடி, அனைத்து கதைகளும் அவளை தவிர்ப்பதற்கான முயற்சிகளே. கங்கையைக் கடக்கும் ஒற்றைத் தோணிக்காரன் ஊன்துண்டுகளை எறிந்து பின்தொடரும் பசிகொண்ட முதலைகளை விலக்கிச் செல்வது போல சொற்களால் அவளை ஏமாற்றுகிறோம். மறுகரை அணைந்ததும் பாய்ந்தோடி விலகாதவர் தொடர்ந்து வரும் அவள் பசிக்கு இரையாக வேண்டியதுதான்.”

“இவ்வுலகில் சிம்மங்களால் உண்ணப்பட்டவர்களைவிட, நோயால் உண்ணப்பட்டவர்களைவிட, போர்களால் உண்ணப்பட்டவர்களை விட, ஊழால் உண்ணப்பட்டவர்களை விட கதைகளால் உண்ணப்பட்டவர்களே மிகுதி” என்று மாலினி தொடர்ந்தாள். “புராணிகை தன் முடிவிலா நீளம் கொண்ட மேலாடையால் இப்புவியை ஏழுமுறை சுற்றி வைத்திருக்கிறாள். பொருள் கைவிடா முதியவள் தன் முந்தானை முடிச்சில் இட்டு வைத்துள்ள சிறு பொன் நாணயமே இப்புவி என்கின்றனர் சூதர்.”

“அவள் என்றோ எதையோ தான் மறந்துவிடாமலிருக்க அம்முடிச்சை போட்டாள். பின்பு ஒவ்வொரு முறையும் அதை அவிழ்த்து எதன் பொருட்டு அது போடப்பட்டது என்று எண்ணி வியந்து திரும்ப முடிந்து கொள்கிறாள். மிக முதியவள். வெண்பட்டாடை அணிந்தவள். பழுத்து கனிந்த விழிகளும் பால் நுரையென அலையடிக்கும் கூந்தலும் மெலிந்து கூன் விழுந்த உடலும் நடுங்கும் கை விரல்களும் இறுக மூடிய உதடுகளும் கொண்டவள். இவ்வுலகில் அவளறியாதவை எதுவுமில்லை. எனவே இவ்வுலகில் உள்ள எவையும் அவளுக்கு ஒரு பொருட்டும் அல்ல.”

“தன் நீண்ட முதிய கைகளால் அவள் தொடும் கூழாங்கற்கள் விதை என வெடித்து முளையெழுந்து விழுதுகள் பரப்பி வான் நோக்கி பல்லாயிரம் நாவுகளை விரித்து படபடக்கின்றன. இம்மலைகளை அவள் தொட்டால் பாம்பு முட்டைகளென இவை உடைந்து பேருருவ நாகங்கள் விண்மீன்கள் என விழி சுடர, மழை முகில் என கரிய படம் விரிய எழும். வானளாவிய இப்புவியில் தன் நடுங்கும் கைகளால் ஒவ்வொரு கணமும் அவள் வருடிக் கொண்டிருக்கிறாள், தூங்கும் குழவியை தனித்த அன்னை என.”

“புராணிகையை மும்மூர்த்திகளும் அன்னையென எண்ணுகிறார்கள். அவள் அளிக்கும் இன்முலைப்பாலின்றி அவர்கள் ஆற்றல்கொண்டு ஆக்கி அளித்து அழிக்க முடியாது. அவள் கால்களைப் பணிந்து தேவர்கள் வழிபடுகிறார்கள். அவர்களின் பெருநிரை அவள் கொண்ட ஒற்றைச் சொல் முளைத்த காடே. அவள் வயிற்றில் பிறந்தவன் பிரம்மன். அவள் கருணை கொண்ட முலைகளில் எழுந்தவன் விஷ்ணு. சினம் கொண்டு சிவந்த அவள் விழிகளில் இருந்து வந்தவன் கனல்வண்ணன்.”
“புராணிகை நிகரற்ற பெருங்கருணை கொண்டவள். குனிந்து விழிநீர் சொட்டி இப்புவியில் தனித்து நெளியும் சிறு புழுவையும் தொட்டறிவாள். விண்ணுலாவும் கோள்களை களிப்பாவைகளென நோக்கி புன்னகைப்பாள். இங்குள ஒவ்வொன்றையும் குளிர்நீரெனத் தொட்டு ஏழுமுறை பெருக்குபவள் அவள். பொங்கும் பேரருவி என தான் தொட்ட அனைத்தையும் நுரை பெருகி எழுந்து நிறையச்செய்பவள். தளிரொடு மலர் கருக்கி பெருகிச்சூழும் காட்டுத்தீ போன்று பெருஞ்சினம் கொண்டவள். குளிர்ந்து பொழிந்து மூடும் பெருமழை அவள்.”

“புராணிகை ஒரு கையில் ஒரு போதும் வாடா தண்மலர் கொண்டவள். மறுகையில் விண்கொடி ஒளிவாள் ஏந்தி மலைகளை அரிந்து செல்பவள். புராணிகையை வணங்குபவனுக்கு துயரில்லை. சுவடிக் கட்டெடுத்து விரலோட்டி புரட்டுவதுபோல அவன் அறிந்து கடந்து செல்ல முடிவிலா உலகங்கள் உள்ளன. கடலடித் தளம் போல அவன் திறந்து நோக்குவதற்கு எண்ணிலடங்காத பொற்பேழைகள் காத்திருக்கின்றன. தன்னந்தனிமையில் நெஞ்சு தொட்டு விழி மயங்கி உவகை கொள்ள முதிரா இளங்கன்னிக்கு தீராபெருங்காதலன் நினைவு என இனியவை கோடி எழுகின்றன.”

“புராணிகையை அறிந்தவர்கள் இலையன்றி மலர் கொண்ட மரம் போன்றவர்கள். அவளைத் தொட்டவர்கள் புலரி படிந்த பனிமலைகள் போல் பொன்னாகிறார்கள். புராணிகையின் மைந்தர்களுக்கு மும்மூர்த்திகள் மூன்று இனிய சொற்களே. முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வெறும் எழுத்துகளே. மூவாயிரத்து முப்பத்து மூன்று கோடி பாதாள தெய்வங்கள் அவ்வெழுத்துகளின் நிழல் வடிவங்களே. புராணிகை தனித்தவள். அவளைச் சூழ்ந்து பணிந்திருக்கிறது இப்புவி. படைத்த தெய்வங்களின் பெருவிழி அவள்.”

மாலினி சொல்லி நிறுத்தியதும் எங்கிருந்தோ என சுபகை விழித்து நீள் மூச்செறிந்தாள். இருவரும் அங்கிலாதவர்கள் போல் நெடுநேரம் அமர்ந்திருந்தனர். காட்டின் ஒலிகள் எழுந்து சூழ்ந்த கரிய வானில் விண்மீன்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. நிலவு தொலைவில் எங்கோ முகில் குவையொன்றுக்குள் ஒளிக்கசிவென தெரிந்தது. பிடியானை ஒன்று தன் மைந்தனுக்கு இட்ட ஆணையை சுபகை கேட்டாள். மைந்தன் ஆம் என்று உரைத்தபடி அன்னையை நோக்கி ஓடுவது தெரிந்தது.

இளங்காற்று கடந்து வந்து அவள் குழலை அள்ளி முதுகில் தெளித்த பின்பு சுழன்று சென்றது. அவர்கள் இருந்த மூங்கில் குடில் காற்றில் மெல்ல அசைந்தது. இரவெனும் ஒழுக்கில் அப்பாறை ஒரு படகென மிதந்து செல்வது போல. இரவெனும் கரிய பெருஞ்சுழி அப்பாறையை மையமாக்கி மெல்லச்சுழல்வது போல. மீண்டும் சிந்தனை. மீண்டும் பொருள் மயங்கி ஒலியாகி அவிதல். மீண்டும் என்னென்ன எண்ணங்கள் என வியத்தல். மீண்டும் ஒரு சொல்லில் எழுதல்…

துயின்றோமா என்று சுபகை வியந்தாள். துயிலிலெழும் இச்சித்திரங்கள் எங்குள்ளன? துயிலில் என்னைச்சூழ இருக்குமா அவ்வுலகு? இங்குள்ள அனைத்தையும் துயிலென வருடிச் செல்லும் மாயப்பட்டு துகில்பீலி. ஒவ்வொரு முறையும் அது அவளை பிறிதொன்றென காட்டுகிறது. துகில் விலகியதுமே ஒவ்வொன்றும் உருமாறி வருகிறது.

சுஜயனின் அலறல் கேட்டு இருவரும் ஒரே கணத்தில் விழித்தெழுந்தனர். “ஆ! நாகம்! நாகம்!” என்றபடி அவன் எழுந்து உடல் விதிர்க்க தன் சிறு மஞ்சத்தில் அமர்ந்து கூவினான். வாய் ஒருபக்கமாக கோணி ஒரு கை துடித்தது. “இளவரசே” என்றபடி மாலினி அவன் இடுப்பைச் சுற்றி தூக்கினாள். “ஆயிரம் பாம்புகள்! ஏழு பாம்புகள்!” என்று அவன் கூவினான். அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து  “பாம்புகள்! பாம்புகள்! நாகங்கள்! நாகங்கள்!” என்று அலறி அவளை பற்றிக்கொண்டான்.

“இளவரசே… இதோ பாருங்கள் இளவரசே” என்று அழைத்து அவன் இரு கன்னங்களையும் மாறி மாறி தட்டினாள் சுபகை. பெருகி வழிந்த எச்சில் ஆடையிலும் மார்பிலும் பளபளக்க அவன் விழப்போவது போல் உடல் தளர்ந்தான். உடனே விழித்துக் கொண்டு பாய்ந்து சுபகையை கைகளாலும் கால்களாலும் இறுக்கிக் கொண்டு “பாம்புகள்!” என்றான். “எங்கே?” என்றாள் சுபகை. “ஏழு பாம்புகள்!” என்றான் சுஜயன். “தென்னை மரம் அளவுக்கு பெரியவை. அவை நெளிகின்றன.”

“இளவரசே, அவை கதைகளில் உள்ள பாம்புகள். இங்கு நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம்” என்றாள் சுபகை. “நீ இங்கிருந்தாயா?” என்றான் அவன். “ஆம்” என்றாள் சுபகை. “அங்கே பாம்புகளுக்குள் உன்னைப் பார்த்தேன்” என்றான் சுஜயன். “எங்கு?” என்றாள் சுபகை. “அங்கே நீ…” என்றபின் அவளை விட்டுவிட்டு தலையை விலக்கி அவள் முகத்தை பார்த்தான். “விடு, என்னை விடு… விடு என்னை” என்றான். “இளவரசே” என அவள் கைநீட்ட “விடுடீ என்னை” என்று அவன் கால்களை உதறி அவள் தோள்களில் மாறி மாறி அடித்தான்.

அவள் இறக்கிவிட தரையில் நழுவி ஓடி மாலினிக்கு அருகே சென்று அவள் மடியில் அமர்ந்துகொண்டு தன் கையை வாயில் வைத்து ஏறிட்டு நோக்கினான். அவனது சிறு விழிகள் உருண்டு கொண்டிருப்பதை அவள் கண்டாள். குனிந்து “இளவரசே” என்றாள். “போ, என்னை தொடாதே” என்றான் அவன். “ஏன் இளவரசே? அஞ்சிவிட்டீர்களா?” என்றாள். “அருகில் வராதே” என்றான் சுஜயன். “ஏன்?” என்றாள். “நீ கெட்டவள்” என்றான்.

சுபகை கையை ஊன்றி மெல்ல அமர்ந்தபின் சிரிப்புடன் “இப்போதுதான் என்னை கண்டு கொண்டீர்களா?” என்றாள். சுஜயன் “நான் உன்னை அங்கே பார்த்தேன்” என்றான். “எங்கே?” என்றாள் அவள். “காட்டில்… உன்னைச்சுற்றி நிறைய பாம்புகள் இருந்தன.” மாலினியின் விழிகளை சுபகை சந்தித்து மீண்டாள். “அந்தக்காட்டில் உன்னுடன் அர்ஜுனர் இருந்தார்” என்றான்.

சுபகை திகைத்து மாலினியை நோக்கினாள். சுஜயன் கைநீட்டி “நீ ஏன் ஆடை அணியவில்லை அப்போது?” என்றான். மாலினி வாய்பொத்தி சிரித்தாள். சுபகை நெஞ்சு படபடத்து “என்ன கண்டீர்கள்?” என்றாள். “நீ ஆடை அணியவில்லை” என்றபின் சுஜயன் கை சுட்டி “உன்னுடைய மார்பில் இரண்டு சின்னக் குழந்தைகள்… மிகவும் சிறிய குழந்தைகள்…” என்றான். சற்றுத்திணறியபின் “பெரிய செம்புக்குடங்கள் போல” என்றான்.

“பார்த்திருக்கிறான்” என்றாள் மாலினி. சுஜயன் சுபகையிடம் “நீ கெட்டவள்” என்றான். மாலினி அவனைத் தூக்கி தன் மடியில் நீள படுக்க வைத்துக் கொண்டாள். அவன் தலை மயிரை மெல்ல நீவியபடி “நாம் அவளுடன் பேச வேண்டியதில்லை இளவரசே. நீ என்னிடம் எல்லாவற்றையும் சொல்” என்றாள். அவன் “ஏழு பாம்புகள்” என்றான். “அவை ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு நெளிந்தன. அதன்பிறகு நான் அவற்றை வாளால் வாளால்…” என்று சொல்லி கையூன்றி எழுந்து “வாளால் அர்ஜுனரை ஒரே வெட்டு… நான்கு துண்டுகள்… அவை துடிதுடித்து…” என்றபின் திகைத்து திரும்பிப் படுத்து கால்களை முறுக்கிக் கொண்டு “நிறைய பாம்புகள். மால்யவான்! அந்தப்பாம்பை நான் பார்த்தேன். யானைப் பாம்பு” என்றான்.

அவன் தலையை வருடிக் கொண்டே மாலினி “ஏழாம் உலகிலிருந்து இன்னும் மீள்வதற்கு இயலவில்லை” என்றாள். உரக்க “உலூபி!” என்று சொன்ன சுஜயன் இரு முறை சப்புக் கொட்டி “பாம்புகள் வந்தன. நான் அவற்றின் முன்னால்… நான் என் கழுத்தை அறுத்துக் கொண்டேன். அவை என்னை விழுங்கின. உள்ளே இருட்டாக இருந்தது. இருட்டுக்குள் நான் ஏழு மனிதர்களை பார்த்தேன். அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்” என்றான். “ஏன்?” என்றாள் மாலினி. “அவர்களைத்தான் பாம்பு விழுங்கி விட்டதே, அதனால்தான்” என்றான் சுஜயன்.

மெல்ல அவன் உடல்தசைகள் தளர்ந்தன. கைகள் பக்கவாட்டில் விழ தொண்டையொலியுடன் மூச்சு சீராக ஒலிக்கத்தொடங்கியது. புரியாத குழறலாக அவன் ஓரிரு சொற்களை சொன்னான். பின்பு கைகளை வாய்க்குள் செலுத்தி சப்பிக் கொண்டான். அவனை நோக்கியபின் “உடலை ஒடுக்கி புரளும் குழந்தை கருவறைக்குள் திரும்ப விழைகிறது. இப்புவியில் தன் இடத்தை அது கண்டடையவில்லை” என்றாள் மாலினி. “உடல் நிமிர்த்தி கைநீட்டி துயிலும் குழந்தை தன் இடத்தை அடையாளம் கண்டுவிட்டது. அது முளைத்து விட்ட விதை போல. மேலும் மேலும் என விரிந்து வளர்ந்து இப்புவியை நிறைத்து விட விழைகிறது.”

மாலினி குனிந்து அவன் தலையை மெல்ல எடுத்து தரையில் தன்னருகே வைத்தாள். “இங்கேயே துயிலட்டும். மஞ்சத்தில் துயில்வது மட்டும் இளவரசர்களுக்குத் தெரிந்திருந்தால் போதாது. மண் தரையில் துயில்வதற்கும் தெரிந்தவனே அரசாள முடியும்” என்றாள். சுபகை “இளைய பாண்டவர் மஞ்சத்தில் துயின்றதைவிட மண்ணில் துயின்ற நாட்களே மிகுதி என்பார்கள் சூதர்” என்றாள். “ஆம், அவன் தீராப்பயணி. பயணிக்கு படுக்கை அமையாது என்பது முதுசொல்” என்றாள் மாலினி.

“நாகர் உலகிலிருந்து அவர் மணிபூரக உலகிற்குச் சென்றதாக கதை கூறுகிறது” என சுபகை சொன்னாள். “ஆம், தசபதரின் காவியத்தின் அடுத்த பகுதி அவனது மணிபூரக பயணத்தைப் பற்றித்தான்” என்றாள் மாலினி. “அரவான் பிறக்கும் காலம் வரை அவன் நாகர் உலகில் இருந்ததாக சொல்கிறார்கள். அரவான் பிறக்கும்போது ஆணென்றும் பெண்ணென்றும் ஆன உடல் கொண்டிருந்தான். அவனுக்கு அரவான் என்றும் அரவினி என்றும் இரு பெயர்களை அர்ஜுனன் சூட்டினான்.”

“மைந்தன் பிறந்து இருபத்தெட்டாவது நாளில் முதல் நாகவிஷத்துளி அவன் நாவில் வைக்கப்பட்டது. அன்று தன்துணைவியிடம் விடைபெற்று அக்காட்டிலிருந்து கிளம்பினான். கங்கைக் கரையோரமாக எழுந்து சென்ற பாதையில் நடந்து இமயப்பனிமலை நோக்கி சென்றான். அப்பயணத்தில் தன்னை ஒரு பெண்ணென அவன் ஆக்கிக் கொண்டான். மலைப்பெண்களின் ஆடையணிந்து நீள்கூந்தல் கொண்டையிட்டு மலர் சூடி பெண்ணென்று சில நாட்கள் சென்றான். பின்பு தோலாடை அணிந்து வில்லேந்தி ஆணென்று சில காலம்.”

“இமயமலை அடுக்குகளினூடாக அங்கு சந்தித்த மலைப்பயணிகளுடன் அவன் சென்றதாக சொல்லப்படுகிறது. இமய உச்சியில் வாழும் கின்னரருடனும் கிம்புருடருடனும் அவன் வாழ்ந்தான். விழியறியாமல் மறையும் கலையை கின்னரரிடம் கற்றான். சிறகிலாது பறக்கும் கலையை கிம்புருடரிடம் கற்றான். ஆனால் தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.”

“பாரதவர்ஷத்தின் வடக்கே இமயத்தை படிகளென ஆக்கி ஏறிச்சென்றால் முகில்களுக்குள் அமைந்த நாடுகள் உள்ளன. அங்கு பொன்னிற உடல் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். இறப்பற்றவர்கள். காலம் அவர்களை குறுகவே வைக்கிறது. வற்றி உலர்ந்து பருந்துபோலாகி பின் சிட்டுக்குருவியென்றாகி பின்னர் சிறகுள்ள பூச்சிகளாகி அங்கேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மலைசரிவுகளில் நிழல் இழுபட பறந்திறங்கிச் செல்லும் கீழ்த்திசை நாடுகள் பல உள்ளன. அவை புராணங்களும் அறியாத நிலங்கள்.”

“கிழக்கத்திய மலை நாடுகளில் காமரூபத்துடன் பாரதவர்ஷம் முடிவடைகிறது என்பது சூதர் கணக்கு. காமரூபத்துக்கு மறுபக்கம் நீரும் நெருப்பும் ஒன்றேயான கீழைப்பெருங்காடுகள் உள்ளன. கால்களால் அணுகப்பட முடியாதவை அவை என்கின்றனர் சூதர். பறந்து செல்லும் கின்னரரும் கிம்புருடரும் மண்ணுக்குள் செல்லும் பெருநாகங்களும் மட்டுமே அணுகக் கூடியவை அந்நாடுகள் என சூதர்நூல்கள் பாடுகின்றன. ஆனால் வணிகர்கள் காமரூபத்துக்கு அப்பால் உள்ள நாடுகளுடன் இமயமலைமுடிகளின் பொன்னிற மக்கள் வணிகம் செய்வதாக சொல்கிறார்கள்.”

“அவர்களுடன் இணைந்து மலைச்சரிவுகளில் தோற்கூடாரங்களில் தங்கி நாட்கள் மாதங்களாக உருண்டு மறைய நாள்தோறும் நடந்து அர்ஜுனன் காமரூபத்தை அடைந்தான். காமரூபத்திற்கு அப்பால் இருபத்துநான்கு கீழ்நாகர் உலகங்கள். மணிபூரகம் நாகருலகிற்கு அப்பால் அமைந்திருந்தது” என்று மாலினி சொன்னாள். “இளைய பாண்டவன் அங்கே சென்றுவந்தபின் இன்று அது அஸ்தினபுரியுடன் அணுக்கமான நாடாக உள்ளது. அங்கு அஸ்தினபுரியின் வணிகத்தூதர்களும் சொற்தூதர்களும் சென்று மீள்கிறார்கள்.”

“காமரூபத்துக்கு கிழக்கே எழுந்து செல்லும் பெருநிலத்தை சப்த சக்ர மகாதலம் என்று தாந்த்ரீக நூல்கள் வகுக்கின்றன. கரிய காட்டுமனிதர்கள் வாழும் நிலம் ஸ்ரீமூலம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கப்பால் பொன்னிற முகமும் பாம்பு விழிகளும் கொண்ட இருபத்துநான்கு குலத்து நாகர் வாழும் நாடு சுவாதிஷ்டானம். அதற்கப்பால் உள்ளது மணிபூரகம். அதற்கப்பால் அனாகதமும் விசுத்தியும் ஆக்ஞையும் உள்ளன.”

“அணுக முடியாத மலை உச்சியான ஸ்ரீசகஸ்ரம் தேவர்கள் மட்டுமே செல்லமுடிவது. பாரதவர்ஷத்தின் மீது எழும் சூரியன் முதலில் காலடி வைக்கும் இடம் அது என்கின்றன புராணங்கள். அதை கிழக்கு மேரு என்று நூல்கள் அழைக்கின்றன. சூரியனின் தோழரான அருணர் தன் பொன்னொளிர் பார்வையால் முதலில் தொட்டு பொற்குவையாக ஆக்கும் மலை அது. முன்பு ஸ்ரீசகஸ்ரத்தில் சூரியன் எழுவதைக் காண தேவர்கள் இருபுறமும் ஒவ்வொரு நாளும் கூடி அமர்வதுண்டு.”

“மணிபூரகம் அன்னை துர்க்கையின் நிலம். முன்பொரு நாள் கைலாயத்தில் தன் இல்லம் விட்டு எழுந்து கதவைத் திறந்த அன்னை காலையின் முதற்கதிர் பட்டு மரகதமணி என ஒளிர்ந்த பச்சைப் பெரும் பரப்பை கண்டாள். நந்தியிடம் “எவ்விடம் இது?” என்றாள். அது காலையொளி படும் பாரதவர்ஷத்தின் முடிமுனை என்று அறிந்தாள். மணிப்பச்சை செறிந்த அதற்கு மணிபூரகம் என்று பெயரிட்டிருந்தார்கள் முனிவர். மணிபத்மையாகிய அன்னை அங்கே எழ விழைவுகொண்டாள்.”

“இல்லாள் என்றும் அன்னை என்றும் ஆன எந்தப் பெண்ணும் இளமைக்கு மீளும் நுண்கனவொன்றை உள்ளத்தில் மீட்டியிருப்பாள். அன்று காலை அந்த மண்ணில் ஒரு சிறு மகவென எழுந்து வாழ்ந்து மீள வேண்டுமென்று விழைவை அடைந்தாள் அம்பிகை. அவ்வண்ணமே முகில்களில் இறங்கி அம்மண்ணை அடைந்து அங்கு சிறு குழந்தையென கிடந்து அழுதாள்.”

“அப்பால் தன் வேட்டைத்துணைவருடன் யானை மீதேறி கானாடலுக்கு வந்த அரசன் சித்ரகர்ணன் அவ்வழுகையை கேட்டான். ஒளி முத்து போல் இலைக் குவை ஒன்றில் கிடந்து அழுத மகளை பாய்ந்து வந்து எடுத்து நெஞ்சோடணைத்துக் கொண்டான். தொப்புள் கொடியற்ற அக்குழவி தெய்வம் மானுட உருக்கொண்டதே என்றார் அமைச்சர். நம் இல்லத்தில் இவள் வளரட்டும், இவள் பேரருளால் இந்த மண் ஒளி கொள்ளட்டும் என்றான் அரசன்.”

“சித்ரகர்ணன் அரண்மனையில் தந்தையின் கைகளிலிருந்து ஒரு கணமும் இறங்காதவளாக துர்க்கை வளர்ந்தாள். வேதியரென வந்த நாரதர் அவளுக்கு ஜாதகர்மங்கள் செய்து மணிபத்மை என்று பெயரிட்டார். அவள் காணும் கண்களிலெல்லாம் கனவை நிறைத்தாள். பேரழகன்றி பிறிதொன்றிலாது வளர்ந்தாள். பொன்பூத்து கன்னியென்றானாள். அவளுக்கு மணவினை முதிர்ந்தபோது வெள்விடை ஒன்றின் மேலேறி, புலித்தோல் ஆடை அணிந்து வந்த வடபுலத்து மலைமகன் ஒருவன் அவளை மணம் கொண்டு சென்றான்.”

“தெய்வநிகர் உருக்கொண்டு தன் இல்லத்தில் எழுந்த மகளை மானுடர் எவரும் மணக்கலாகாது என்பதற்காக பன்னிரு பயிற்சிகளை அளித்திருந்தான் சித்ரகர்ணன். நீர்த்துளி மண்ணை தொடுமுன் ஒற்றை அம்பால் அதை ஏழு துளிகளாக்குதல். நீரிலாடும் அல்லி மலரிதழை நெடுக்காக வாளால் பிரித்தல். நிலவொளியை கதாயுதத்தால் சிதறடித்தல் என அவன் வகுத்த அத்தனை படைத்தொழில்களையும் வென்று குலமக்கள் அனைவரும் கூடி நின்று வாழ்த்த அவளை இடை வளைத்து தூக்கி தன் விடை மேல் ஏற்றி மலை மேல் எழுந்து மறைந்தான் மலைமகன்.”

“அந்திச்செம்மை மேல் ஏறி சூரியன் அணைந்ததுபோல் அவள் சென்றாள். அவள் இருந்த இடமெங்கும் பின்னர் பொன் பூத்தது. அவள் தொட்ட செடிகளெல்லாம் மலர் நிறைந்தன. அவளை நோக்கியவர் அனைவரும் தீராமங்கலம் கொண்டனர். அவள் வாழ்ந்த மண் பின்னர் செல்வம் ஒழியா கருவூலமாகியது. சித்ரகர்ணன் அவள் உருவை பொற்சிற்பமொன்றில் அமைத்து தன் அரண்மனை முகப்பில் ஆலயமொன்றை எழுப்பினான். அவளே அரசகுடியின் குலதெய்வமானாள். அன்றுமுதல் மணிபூரகம் அன்னை மணிபத்மையின் நிலமென்றே அறியப்படலாயிற்று.”

முந்தைய கட்டுரைசகோதரி சுப்புலட்சுமி
அடுத்த கட்டுரைஇயற்கைக் கடலைமிட்டாய்