நான் கிறித்தவனா?

Baptism-59

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் விநாயக சதுர்த்தியும் ஈ.வெ.ராவின் பிறந்த நாளும் ஒருங்கே அமைந்தது irony. ஒரு இந்து உறவினர் (cousin) ஈ.வெ.ரா வின் கேள்வி பதில் என்று ஒரு பதிவினைப் போட்டார். அந்த மேற்கோள், சொல்லத் தேவையில்லை, ஈ.வெ.ராத்தனமாக இருந்தது. இதற்கு மற்ற இந்து உறவினர்கள் லைக் போட்டனர். நான் அவரைக் கூப்பிட்டுக் கேட்டேன் “உனக்கு இந்து மதத்தின் தத்துவங்கள், ஆறு தரிசனங்கள் குறித்து பரிச்சயமுண்டா?” of course அவருக்கு ஆறு தரிசனமென்ன அப்படி ஒன்றுண்டு என்பதே தெரியவில்லை. நான் மேலும் சொன்னேன் ‘இந்து மதம் என்றில்லை தத்துவங்களின் சிறு அறிமுகம் இருப்பவர் யாரும் ஈ.வெ.ராவின் இந்த பிதற்றல்களை புறங்கையால் ஒதுக்கி விடுவர்”. மேலும் சொன்னேன் “முதலில் இந்து மதத்தின் தத்துவங்களை பரிச்சயப் படுத்திக் கொள். ராதாகிருஷ்ணனோ, தாஸ்குப்தாவோ உனக்கு படிக்க கஷ்டம். உனக்கான நுழைவாயில் ஜெயமோகனின் புத்தகமே. என்னிடமிருக்கிறது அதை இரவல் வாங்கி படி’ சொல்லிவிட்டு நகைத்துக் கொண்டேன் “ஹ்ஹ்ஹ்ம்ம் ஈவெராவை இங்கே இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் கிறித்தவன் என்று கருதப்படும் நான் தான் இங்கே வந்து எதிர் கருத்துக் கூற வேண்டியிருக்கிறது”.

ஒரு மதத்தின் பெயரால் நிகழும் நல்லது கெட்டதுகளில் எவையவெற்றினுக்கு அம்மதம் பொறுப்பேற்க வேண்டும், எவை மதத்தின் பெயரால் வேறு வரலாற்று அல்லது சமூக காரணங்களுக்காக நிகழ்த்தப் பட்டது என்பது ஒரு பெரும் விவாதம். மொப்ளா வன்முறை, கீழ்வென்மனி போன்றவைகளை மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ எளிதாக விவாதம் செய்யலாம் ஆனால் அது முழுமையான விவாதமாக இராது.

இந்து மதத்தின் நெகிழ்வு தன்மை பற்றிய உங்கள் கருத்தை முழு முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதை இங்கே அடிக்கோடிட விழைகிறேன். உங்களோடு நான் வேறுபடும் ஒரு இடம் நீங்கள் (நீங்கள் மட்டுமல்ல, நிறையப் பேர்) கிறித்தவத்தை ஒரு இறுகிய நிறுவனமயமாக்கப் பட்ட, ஒரு மைய நூல் கொண்ட, நெகிழ்வுகளற்ற monolith போன்ற சித்தரிப்பு கொடுப்பதை தான். அந்த கூற்றில் உண்மையில்லையா என்றால் கட்டாயம் உண்மையுண்டு ஆனால் அது மட்டுமே உண்மையில்லை என்பதே என் தரப்பு.

சுருங்கச் சொன்னால் ‘the truth lies in between’ என்பார்களே அது தான். இந்து மதத்திற்கும் கட்டுமானங்களுண்டு கிறித்தவதிற்குள் நெகிழ்வுகளுமுண்டு. மீண்டும் சொல்கிறேன் நான் எந்த திருச்சபையிலும் உறுப்பினன் கிடையாது. ஆனால் நான் இன்று வாழும் சமூகம் ஒரு பெரும்பான்மை கிறித்தவ சமூகம் அதுவுமின்றி இங்கே அரசியலில் சில முக்கிய உரிமை சார்ந்த கேள்விகள் அரசியல் மற்றும் மத கோட்பாடுகளின் ஊடாக விவாதிக்கப் படுவதால் எனக்கு கிறித்தவ சமூகத்தினுள் நடக்கும் மோதல்கள் (அல்லது தத்துவ விசாரங்கள்) எனக்கு பரிச்சயம். உதாரணமாக கருக் கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான திருமண உரிமைகள் இங்கே அதி முக்கியமாக அலசப் படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் நான் கிறித்தவம் சார்ந்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்ததே உங்களைப் படித்த பின்பே. நான் கிறித்தவனாக அறியப்பட்டால் அதற்கான பெரும் பகுதி credit உங்களுக்கே சமர்ப்பனம். என் தந்தையால் செய்ய முடியாததை உங்களால் முடிந்தது. எள்ளலாக சொல்லவில்லை. சத்தியம்.

உங்கள் பதிலில் இருந்த கடைசி வரி தான் என்னை மீண்டும் எழுத தூண்டியது. “நீங்கள் கிறித்தவத்தை ஒரு படி மேலாக எண்ணுவதினால்தான் கிறித்தவராக இருக்கிறீர்கள் இல்லையா?” ஒன்று, உங்கள் வாக்கியத்திலிருந்து தெரிவது நான் கட்டாயம், சந்தேகமற, கிறித்தவன் என்கிற அடையாளம் தரித்தவன் என்பது. இரண்டு, சற்றே ஐயப்பாட்டோடு ஒருக் கேள்வியாக முன் வைக்கப் பட்டது, கிறித்தவத்தினை ‘ஒரு படி மேலாக’ எண்ணுவதாலேயே அந்நம்பிக்கையைக் கொண்டுள்ளேன் என்பது.

ஒருவன் ஒரு மதத்தை சார்ந்தவன் என்று எப்படி சொல்லுகிறோம்? என் வீட்டில் இயேசுவின் படம் இருப்பதாலா? விவிலியம் இருப்பதாலா? என் ஐபாடில் (ipod) கிறித்தவ கீதங்கள் இருப்பதாலா? வருடத்தில் இரண்டோ அல்லது பத்து முறையோ சர்ச்சுக்குப் போவதாலா? கிறித்தவம் பற்றிய விமர்சனங்களுக்கு எதிர் வினை எழுதுவதாலா? இந்தியாவை வெறுப்பவன் என்ற பிம்பத்தாலா? என் வீட்டில் பிள்ளையார் படமுண்டு, கீதையும் இந்து தத்துவங்கள் பற்றியும் அநேக புத்தகங்களுண்டு (திருவாசகம் உட்பட), ஸ்லோகங்களும் கர்நாடக சங்கீதமும் என் இசை சேகரிப்பிலுள்ளது. ஆக எது தீர்மானிக்கிறது நான் எதை சேர்ந்தவனென்று? அரசாங்கம் நான் முன்னேறிய வகுப்பினன் என்று என் இந்து மத ஜாதியை வைத்தே தீர்மானித்தது.

என் சகோதரி ஒருவர் (cousin), இந்து, என்னிடம் ஒரு முறை கேட்டார் “சரிடா உன் கண்ணை மூடி ஜெபம் செய்தால் எந்த கடவுளுக்கு உன் ஜெபத்தை அர்பணிக்கிறாய்?”. தயங்காமல் சொன்னேன் ‘யேசு’. அதற்கு வேறொன்றும் பெரிய காரணமில்லை. எங்கள் வீட்டில் என் தந்தை ஒரு காலத்தில் தினமும் ஐந்து நிமிடம் குடும்பமாக ஜெபம் செய்வார். என் அம்மாவிற்கோ (அவர் இந்து) பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்வதோடு சரி. இதற்கெல்லாம் காரணங்கள் வெவ்வேறு. என் தாய் வழி பாட்டி மிக இளம் விதவை, ஐந்து குழந்தைகளோடு, அவர் தெய்வ நம்பிக்கைகளை இழந்து, நாத்திகர் என்று சொல்லவியலாது, ஆனால் எந்த குல தெய்வ வழிபாடுகளமற்று தன் பிள்ளைகளை வளர்த்தார். அனைவரும், என் அம்மா தவிர, இந்துக்களையே மணந்தனர். ஆதலால் தான் எங்கள் வீட்டில் இந்து வழிபாடு என்பது இல்லாமற் போயிற்று ஆகவே தான் அப்படியொரு பதிலை சொன்னேன். அந்த சகோதரி கேட்காமல் விட்ட கேள்வி “உணக்கு கடவுள் நம்பிக்கையுண்டா” என்பது. நான் நாத்திகன் அல்ல. சரியாக சொன்னால் நாத்திகர்களைப் போல், குறிப்பாக திக வினர் போல், கடவுள் மறுப்பாளன் அல்ல. I am more of an agnostic.

ஈவெராவை விமர்சித்து, அவரை வெறுப்பின் பிரசாரகன் என்று, பதிவுகள் எழுதியுள்ளேன், பிராமண துவேஷத்தை என்னைக் காட்டிலும் அதிகமாக வேறு பிராமணல்லாதார் எழுதி நான் பார்த்ததில்லை. என் கிறித்தவ உறவுப் பையனொருவன் கத்தோலிக்கப் பள்ளியில் படிப்பவன் உலகம் உருவானதில் மகாவெடி தருணத்தை, தன் மத நம்பிக்கையினால், நிராகரிப்பதாக கூறிய போது, அதைப் பற்றிக் கவலையோடு எழுதியுள்ளேன். ஆனால் மீண்டும், மீண்டும், மீண்டும் என்னை நோக்கி “நீ கிறித்தவன்” என்பது வசையாகவும் (உங்களை சொல்லவில்லை), ஒரு factual statement ஆகவும் சொல்லப் படுகிறது. ஏன்? அக்கூற்றினை நான் மறுப்பது அப்படியொரு அடையாளத்தை நான் எவ்வகையிலும் அவமான சின்னமாக கருதவில்லை, அக்கூற்றினை நான் மறுப்பதோ கேள்விக் கேட்பதோ வேறு காரணங்களுக்காக.

ஒரு சமூகத்திலும் ஒரு குடும்ப அமைப்பிலும் இருக்கும் ஒருவன் மேம்போக்காக சில மத அடையாளங்களை கைக் கொள்வது சகஜம். என் திருமணம் மற்றும் என் குழந்தையின் ஞான ஸ்நானம் மற்றும் இரண்டு பண்டிகைகளுக்கு மட்டும் சாஸ்திரத்திற்காக சர்ச்சுக்குப் போவதாலேயே ஒருவன் கிறித்தவன் ஆகி விட முடியுமா? அதுவும் கிறித்தவத்தை மற்ற மதங்களைவிட “ஒருப் படி மேலாக” என்பதற்காக? கிறித்தவத்தை ஒருப் படி மேல் என்று நான் கருதினால் எதற்கு கோயிலுக்கு செல்ல வேண்டும், ஏன் இந்து மத தத்துவங்களை கற்க முனைய வேண்டும்? அப்படியெல்லாம் செய்தாலும் சில rituals-இல் ஈடுபடுவதால் மட்டுமே என்னைப் பற்றி ஆணித்தரமான பிம்பம் கட்டமைக்கப் படுமென்றால் நான் என்னவென்று சொல்வது.

உங்கள் கேள்வி வேறொரு கோணத்தை திறந்தது. இவ்வளவு தூரம் liberal-ஆக இருக்கும் எனக்கே இந்த மதம் மாற்றவியலாத அடையாளமாக வெளியாரால் பார்க்கப் படுமென்றால் பாவம் இந்த மதம் மாறியவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்க மூர்க்கமான மறுதலிப்புகளில் ஈடுபடுவதில் ஆச்சர்யமென்ன? இதை சற்றேத் தெளிவாக கூற விரும்புகிறேன்.My liberal attitudes not-withstanding I am seen only as a Christian, that too as one who believes in the superiority of Christianity by some Hindus. What that means is I can be nothing but a Christian to a Hindu. One can be bi-lingual but not bi-religious. By the same token, seen conversely, it becomes apparent as to why whoever gets converted seeks to actively and ferociously deny any antecedents that are not part of the converted religion lest they be seen as less Christian by their brethren. The inability to accept that a person can comfortably be at home in two religions cuts both ways.

நான் இன்னும் எதைச் செய்தால் மத சார்பற்றவனாகவும், இந்து மதத்தை மதிப்பவனாகவும் பார்க்கப் படுவேன்? யார் வேண்டுமானாலும், நாத்திகன் உட்பட, தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளலாமென்று இந்துத்வர்கள் பெருமைப் பொங்க கூறுவரே இரண்டு மரபுகளையும், இந்து மற்றும் கிறித்தவம், தன்னகத்தே கொண்டு, இரண்டு மரபு சார்ந்தவர்களிடமும் துவேஷிப்ப்பவர்களை விலக்கி, இரண்டு மரபுகளின் உயரிய தத்திவ சாரங்களுக்கு மதிப்புக் கொடுப்பவனை “என்ன இருந்தாலும் நீ இந்து இல்லை” என்று சொல்வது ஏமாற்றமளிக்கிறது.

இஸ்லாம் குறித்து அதிகம் எழுதுவதில்லை ஏனெனில் அம்மதம் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவ்வளவே. சரி அப்படி என்றால் “ஏன் வரிந்து வரிந்து கிறித்தவத்திற்கு எதிராக ஜெயமோகன் என்ன எழுதினாலும் மும்முரமாக எதிர்வினையாற்றுகிறாய்” என்று கேள்விக் கேட்டால் என் பதில் மிக எளிமையான ஒன்று. ‘இந்த விஷயமென்றில்லை, ஜெயமோகன் என்றில்லை, எனக்கு எப்போதுமே எந்த கருத்தியலோ, மனிதரோ தவறாக விமர்சிக்கப் படுவதாகப் பட்டால் ஒரு உள்ளுணர்வைப் பின்பற்றி மேலும் ஆழ தரவுகளைத் தேடுவேன் அவை நான் கொண்ட உணர்வினை மெய்பித்தால் எதிர் வினை எழுதிவேன்.’ அதனாலேயே என் பதிவுகளில் பல எதிர்வினைகளாகவே இருக்கும். ஒரு சமயம் என் உறவினரொருவர் கேட்டார் “அது ஏன் தமிழ் கிறித்தவர்கள் அதிகம் தமிழ் சங்க விழாக்களுக்கு வருவதில்லை” என்று. அதற்கும் பதில் கூறும் முகமாக எழுதினேன்.

உங்கள் அமெரிக்க பயணம் பற்றி எழுதிய போது என்னைக் குறித்து “அமெரிக்க வழி பாட்டாளர்” என்று எழுதினீர்கள். அது உண்மை ஆனால் அதை இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் நான் என்னை ‘அறிதலின் வழி பாட்டாளன்’, குறிப்பாக விஞ்ஞானத்தின் வழி பாட்டாளன், என்றே கருதப் பட விரும்புபவன். அதனாலேயே பலத் துறைகளை சார்ந்த நூல்களை படிப்பவன். அது மட்டுமின்றி எது குறித்தும் எழுதுவதற்கு முன் அதுப் பற்றி நன்கு அறிந்து கொள்ள சிறந்த புத்தகங்களை எப்போதும் நாடுபவன்.

என் மேற்கத்திய மோகம் எனக்கு கிறித்தவம் பற்றி “ஒரு படி மேல்” என்ற அபிமானம் கொண்டவன் என்ற ஒரு பிம்பத்தை ஒரு சாராரிடம் உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு செய்தி. நான் மேற்கத்திய சமூகங்களில் வியக்கும் பலவற்றினுக்கும், இன்னும் சொல்லப் போனால் நூறு சதம், கிறித்தவத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கத்திய சமூகங்களில் நான் வியக்கும் ஒன்று அவை எப்படி கிறித்தவ மத விழுமியத்தை தாண்டி சென்று சமூக விழுமியத்தை கட்டமைத்துக் கொண்டன என்பது தான்.

இன்னோரு நிதர்சனக் கோணம். என் திருமணத்திற்கு பெண் தேடிய போது இந்துக்கள் பலர் மறுத்து விட்டனர். இத்தனைக்கும் இந்து முறைப்படியே எல்லாம் நடக்குமென்று உத்தரவாதமளித்தும். வேத காலத்தில் வேண்டுமானால் கௌசிகன் விசுவாமித்திரனாகலாம் கலி காலத்தில் ஜெயகாந்தனைக் கூட யாரும் பிராமணர் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அன்புடன்,

அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைகாந்தியும் கள்ளும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுப்பிரியாவும் நூறுநாற்காலிகளும்