கள்ளுக்கடைக் காந்தி

1

சென்ற செப்டெம்பர் முப்பதாம் தேதி ஒரு சினிமா வேலையாக வைக்கம் சென்றிருந்தேன். நண்பர் மதுபாலும் தயாரிப்பாளர் சுகுமாரும் உடனிருந்தனர். திரும்பும் வழியில் மதிய உணவை எங்கே சாப்பிடுவது என்று எண்ணியபோது சுகுமார் ஃபோன் செய்து அவரது நண்பர் நந்தகுமாரிடம் விசாரித்தார். சேர்ப்பு என்ற ஊரில் உள்ள ஒரு கள்ளுக்கடை சிறந்தது என்றார் நந்தகுமார். சேர்ப்பு நடிகர் மம்மூட்டி பிறந்த ஊர்

கள்ளுக்கடையை விசாரித்துத் தெரிந்துகொண்டோம். வேம்பநாட்டுக்காயலின் கரையில் குடைப்பனையோலைகளால் கட்டப்பட்ட கள்ளுக்கடை. ஆனால் பல அறைகள் கொண்டது. தனியாக அமர்ந்து குடிப்பதற்கான சிறிய அறைகள். கூடங்கள். நாங்கள் செல்லும்போது பின்மதியம். ஆகவே கள் குடிப்பவர்கள் இல்லை. மதிய உணவுக்கு வந்தவர்களே அதிகம் இருந்தனர். மதுபால் பிரபல நடிகரும் கூட என்பதனால் அரசமரியாதை அளித்தனர்

மயக்கிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்பம் [அல்லது கள்ளப்பம்] . உடன் சாப்பிட மாட்டிறைச்சிச் பொரியல், வறுத்த பன்றி, அயக்கூற மீன்கறி, சாளைமீன் கறி வறுத்த கரிமீன், நண்டுப்பொரியல், சிப்பி பொரியல் என கொண்டுவந்து வைத்துக்கொண்டே இருந்தனர். சுகுமார் ஒரு சிறந்த சுவைஞர், சாப்பாட்டுக்கலைஞர் என்றே சொல்லலாம். கூடவே கள்.

சமீபத்தில் இத்தனை சுவையாக ஓர் உணவை உண்டதில்லை. ஒவ்வொன்றும் அதன் செவ்வியல் சுவையில் அமைந்திருந்தன. மாமிசங்கள் அனைத்துமே புதியவை, இளையவை. மீன் நேராக நீரிலிருந்தே எடுக்கப்பட்டதுபோல. மிதமான காரம். நல்ல தேங்காய் எண்ணை. எந்த உணவும் பழையதல்ல என்றார் சுகுமார். அங்கே குளிர்சாதனப்பெட்டியே இல்லை.

சமையற்காரரை அழைத்து கட்டித்தழுவி பாராட்டிவிட்டு கிளம்பினோம். மாட்டுக்கறி வறுவலை நல்ல நிபுணர் மட்டுமே சரியாகச்செய்ய முடியும். நன்றாகவெந்தால் கரி. வேகாவிட்டால் நார். பன்றிக்கறி வேறுவகையில் சிக்கலானது. வேகாவிட்டால் சாப்பிடவே முடியாது. வெந்து மிகையானால் உருகிவழியும். அவை தெய்வங்களுக்குப் படைக்கும் தரத்தில் இருந்தன

ஏனென்றால் சேர்ப்பில் இந்தக்கடைக்கு வருபவர்கள் அனைவரும் உள்ளூர்க்காரர்கள். கொஞ்சம் தரம் குறைந்தால்கூட மறுநாள் வரமாட்டார்கள். பெருங்கூட்டம் வரும் என்பதை கடையைப்பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும். ‘பாதிக்குமேல் பார்களை பூட்டிவிட்டார்கள் சார். ஆகவே இங்கே நல்ல கூட்டம். சாயங்காலம் வந்தால் நல்ல நாட்டுப்புறப்பாடல் பாடும் நாலைந்துபேர் இருப்பார்கள். கொஞ்சம் காத்திருப்பீர்கள் என்றால் இப்போதே வரச்சொல்கிறேன்’ என்றார் கடைக்காரர். ‘இல்லை கிளம்பவேண்டும்” என்றேன். “மிமிக்ரியும் காமெடியும் செய்வார்கள் சார்” கடை மிகச்சுத்தமாகவும் இருந்தது

அது அந்த ஊரின் ஒரு பண்பாட்டு மையம். நல்லகுடி, நல்ல உணவு, நல்ல கேளிக்கைகள். குடி என்பது கேளிக்கையுடன் தொடர்புகொண்டிருக்கையில்தான் ஏதேனும் பொருள் கொண்டதாக ஆகிறது. தமிழகத்தின் டாஸ்மாக் கடைகள் அருவருப்பான இடங்கள். அங்கே சலம்பல்கள்தான் எந்நேரமும். அங்கு விற்கப்படும் உணவை அந்தச் சாராயம் மட்டுமே எரிக்கமுடியும். அனேகமாக பிற இடங்களில் மிஞ்சும் பொருட்கள்தான் டாஸ்மாக் அருகே சூடுபண்ணி விற்கப்படுகின்றன.

குடி உயர்தரக்கேளிக்கையாக உள்ள இடங்கள் சென்னையில் உள்ளன. ஆனால் அமர்ந்து எழுந்தாலே ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் செலவாகிவிடும். ஏழைக்கு குடி என்பது ஒரு பெரிய வதையாக, அவன் சிக்கிக்கொண்ட நுகமாகவே உள்ளது. அவனை பிடித்துநிறுத்தி மடியை அவிழ்த்து பணத்தை பிடுங்கிக்கொள்கிறது அரசு. ரசாயனத்தை அவன் தலையில் கட்டுகிறது.

இந்தக்கள்ளுக்கடை போன்ற ஒன்று எவ்வகையிலும் தீங்கல்ல என்றே எண்ணுகிறேன். ஏழைகளுக்கும் கட்டுப்படியாகும் ஒரு கேளிக்கைமையம். கள் எத்தனை குடித்தாலும் ஒருவனை வேலைசெய்யமுடியாத அளவுக்கு நோயாளியாக்குவதில்லை. கண்மண் தெரியாத போதையை அளிப்பதில்லை. வயிறு நிறைந்தாலும் சட்டைப்பையைக் காலியாக்குவதில்லை. ஒரு குப்பிப் கள் 25 ரூபாய்தான். இரவெல்லாம் அமர்ந்திருந்தால்கூட இருநூறு ரூபாய்க்குக் குடிக்கமுடியாது.

கள்ளுக்கு அளிக்கப்படும் பணம் பெரும்பகுதி நேரடியாக விவசாயிக்குச் செல்கிறது. கேரளக் கிராமியப்பொருளியலின் அடிப்படை அது. ஆந்திரத்திலும் கேரளத்திலும் கள் முக்கியமான குடி. ஆனால் மும்மடங்கு பனைகள் கொண்ட , பனைப்பொருளியல் என்று சொல்லப்பட்ட ஓர் அமைப்பு நிலவிய தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கழிவு கொள்முதல்செய்யப்பட்டு சாராயமாக ஆக்கப்பட்டு அரசு முத்திரையுடன் விற்கப்படுகிறது. அந்தப்பெரும்பணம் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது.

வறண்ட நிலம் கொண்டதாகையால் தமிழகத்தின் பனைக்கள் மிகமிகத்தரமானது. அதற்கிணையான கள் ராயலசீமாவின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். கேரளத்தின் கள் தென்னையிலிருந்து எடுக்கப்படுவது. பனங்கள்ளின் மெல்லிய தித்திப்பும் மணமும் அதற்கில்லை. சென்ற பத்தாண்டுகளில் கேரளத்தின் தென்னைகளில் மண்டரி என்னும் வாடல்நோய் வந்து தேங்காய் உற்பத்தி அனேகமாக இல்லை என்னும் நிலை. கள் இல்லாமல் இருந்திருந்தால் கேரள விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். இப்போதைய பார் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு மேலும் உதவிகரமாக உள்ளன.

mahatma-gandhi

பேசிக்கொண்டே வந்தோம். காந்தியின் கள்ளுக்கடை மறியலைப் பற்றிச் சொன்னேன். காந்தியத்தை இறுக்கமான மதநம்பிக்கையாகக் கொள்ளாமல் இருந்தால் இன்றைய சூழலில் காந்தியவாதிகள் கள்ளை ஆதரிக்கவேண்டும் என்று தோன்றியது. அது கிராமிய உற்பத்தி. வட்டார நுகர்வு கொண்டது. சிறிய அலகுகளாகவே அந்த வணிகம் நிகழமுடியும். மையப்படுத்தப்பட்ட கொள்ளைலாப அமைப்புகளுக்கு எதிரானது அது. வேளாண்மைக்கு அணுக்கமானது. பெருந்தொழில் மூலம் உருவாக்கப்பட்டு கொள்ளைலாபத்திற்கு விற்கப்படும் ரசாயனத்திற்கு மிகச்சிறந்த மாற்று.

காந்தி மாட்டிறைச்சி உண்பதைப்பற்றி என்ன சொல்லியிருப்பார் என்றார் மதுபால். வாழ்நாளெல்லாம் பசுக்கொலைக்கு எதிராகப் பேசியவர் காந்தி. ஆனால் அதை பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீது செலுத்தும் ஆதிக்கமாக, அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளாக நடைமுறைக்குக் கொண்டுவருவதை அவர் ஒருதருணத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அத்தனை சிறுபான்மையினரும் தங்கள் முழுமையான சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஓர் அமைப்பையே அவர் முன்வைத்தார். அவரது ராமராஜ்யம் அதுதான்.

மாட்டிறைச்சிக்கு எதிராக இன்று சில மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள தடை என்பது அரசுவன்முறை, அதற்கு ஆதரவாக எழும் மனநிலைகள் ஃபாசிசம் என்றே நான் நினைக்கிறேன். இந்தியா என்னும் பலபண்பாட்டுநிலம் ஃபாசிசத்தை தூக்கி வீசும் என நம்புகிறேன்

ஆகவே காந்தி பிறந்த இந்த நாளை அற்புதமான அந்த கள்ளுக்கடைக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். காந்தியுடன் அங்கே ஓர் மதிய உணவை அருந்தியதாக எண்ணிக்கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைகாந்தியம் இன்று -உரை
அடுத்த கட்டுரைசிலைகள்: கடிதங்கள்