‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17

பகுதி இரண்டு : அலையுலகு – 9

ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது இவ்வில்லங்களில் மாநாகங்கள் வாழ்ந்திருந்தன. மூதாதையருக்கும் அவர்களுக்குமான ஆயிரம் ஆண்டு சமரில் நாங்கள் வென்றோம். இங்கு திரும்பி வருவதில்லை என்று மண்தொட்டு மும்முறை ஆணையிட்டு காட்டைக் கடந்து மலைக்குகைகளின் ஊடாகச் சென்று உள்ளே விரிந்த ஆயிரம் கிளைகொண்ட பிலத்தில் வாழத் தொடங்கினர்” என்றார் கர்க்கர்.

“இன்று பெருநாகங்களின் அரசு ஒன்று அங்கு உள்ளது. அவர்கள் வாழ்ந்த புற்றில்லங்கள் ஆயிரத்தி எட்டு. அவற்றில் நானூற்றி இருபத்தொன்று புற்றில்லங்களில் மட்டுமே நாங்கள் வாழ்கிறோம். மற்ற புற்றில்லங்கள் பல இன்னும் எவரும் குடியேறாதவை” என்றாள் முதுநாகினி. விழிகள் திறக்காது இருளில் நின்ற ஒரு புற்றில்லத்தைச் சுட்டி “புதுமணம் கொண்டு வரும் இணை இல்லம் அமைக்க புதிய புற்றில்லம் ஒன்றை அவர்களுக்கு வழங்கும் வழக்கம் உள்ளது. தங்கள் முதற்கூடலை அவர்கள் அதற்குள் நிகழ்த்திக் கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் என அரசரால் அளிக்கப்பெற்றது இப்புற்றில்லம்” என்றாள் நாகினி.

அர்ஜுனன் உலூபியின் கைபற்றி அவளுடன் நடந்து அந்தப் புற்றில்லத்தின் வாயிலை அடைந்தான். “இதற்குள் மானுடர் நுழைய இயலாது. ஏனென்றால் மானுட இல்லங்களைப்போல் வாயிலும் அறைகளும் கொண்டவை அல்ல இவை. எங்கள் மூதன்னையர் உங்களை எங்கள் குடிப்பிறந்தவர் என்று காட்டியிருப்பதனால் உங்களுக்கு இது அளிக்கப்படுகிறது” என்றாள் நாகினி. அர்ஜுனன் தலைவணங்கினான். அகல்சுடர் ஒன்றை உலூபியிடம் அளித்து “இன்பம் விளைக!” என்று வாழ்த்தி அவள் விலகிச்சென்றாள்.

கையில் அகல்சுடரின் ஒளியுடன் நாகினியர் விலகிச் செல்வதைக் கண்ட உலூபி திரும்பி அவனை நோக்கி புன்னகைத்து “வருக!” என்றாள். அர்ஜுனன் “பாம்புடல் கொள்ளாது இவ்வில்லத்திற்குள் நுழைய முடியாது என்றே எண்ணுகிறேன்” என்றான். “ஆம்” என்று உலூபி சொன்னாள். சுடர் விரித்த செவ்வொளியில் அவள் கன்னங்களும் கழுத்தும் பொன் என சுடர்ந்தன. “ஆனால் காமம் கொண்ட அனைத்து உயிர்களுமே நாகமாக மாறுகின்றன என்று எங்கள் குலக்கதைகள் சொல்கின்றன.”

தொலைதூரத்து மின்னல் ஒன்று அவள் முகத்தை ஒளியென அதிரச்செய்தது. அர்ஜுனன். “இதை நானே எண்ணியிருக்கிறேன். காமம் கொள்கையில் மானுடக்கைகள் பாம்புகளாக மாறி தழுவிக் கொள்கின்றன. காமம் ஆடும் இருவரை தொலைவிலிருந்து நோக்கினால் அரவுகள் பின்னி நெளிவது போல் தோன்றும்” என்றான். “மானுடர் முழுமையான காமத்தை அறிவதில்லை என்று எங்கள் குலப்பாடகர் சொல்வதுண்டு. தங்கள் காம விரைவின் உச்ச கணங்களில் ஓரிரு முறை அவர்கள் நாகமென ஆகி மீள்கிறார்கள். முற்றிலும் நாகமென்றாகி காமத்தை அறிவதற்கு நாக குலத்தில் பிறந்திருக்கவேண்டும்.”

அர்ஜுனன் “அல்லது நாகர் மகளை கொண்டிருக்க வேண்டும் அல்லவா?” என்றான். சிரித்தபடி அவள் அந்தப் புற்றில்லத்தின் அருகே சென்று அதன் கூம்பு வடிவ மடம்புகளில் ஒன்றில் கால் வைத்து மேலேறினாள். பின்பு அதன் வாய்க்குள் அகல்சுடரை இறக்கிவைத்தாள்.

நீரோசையுடன் மழைப்பெருக்கு வந்து அறைந்தபின்னர்தான் அர்ஜுனன் அதை மழை என்று அறிந்தான். அதற்குள் அவன் முற்றிலும் நனைந்து தாடியும் தலைமயிரும் நீர்த்தாரைகளில் பின்னி சொட்டிக்கொண்டிருக்கக் கண்டான். அர்ஜுனன் தயக்கத்துடன் அதை தொட்டான். எளிதில் உடைந்துவிடும் என்று விழிக்குச் சொன்ன அப்புற்று சுட்ட களிமண்ணால் ஆனது போல் அத்தனை உறுதியாக இருப்பதை கண்டான். “உறுதியானவை” என்றான்.

உலூபி “இவ்வில்லங்கள் உருவாகி யுகங்கள் கடந்துள்ளன என்கிறார்கள். இப்புவியில் நாகங்கள் உருவாவதற்கு முன்னரே சிதல்களால் இவை கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அன்று இப்புவியை ஆண்டவை சிதல்கள். இந்த ஒவ்வொரு இல்லமும் சிதல்களின் ஒவ்வொரு நகரம். சிதல்களை வென்று பெருநாகங்கள் இவற்றில் குடியேறி வாழ்ந்தன. அந்த யுகம் முடிந்த பின்பு எங்கள் மூதாதையர் இங்கு குடியேறினர். நாகர் குலத்திலேயே பன்னிரண்டாவது குடி மரபைச் சார்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு முன் பதினொரு குடி முறைகள் இங்கு பெற்று பெருகி வாழ்ந்து மறைந்துள்ளன” என்றாள்.

புற்றின் மடிப்புகளில் கைவைத்து ஏறியபோது தன் உடலின் மூட்டுக்கள் அனைத்தும் பொருத்து விட்டு விலகி நெகிழ்ந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். கால்கள் அச்சாணி கழன்ற தேர்ச்சகடங்கள் போல் தனியாக அசைந்தன. கைகள் சாட்டைகள் போல வளைந்தன. பிடிநழுவி விழுந்துவிடுவோம் என்று தோன்றியபோது இரு கைகளாலும் புற்றுகளின் சிறிய மடம்புகளை இறுகப்பற்றிக் கொண்டான். “அந்த நாகமது என் உடலின் ஆற்றலை அழித்துவிட்டது” என்றான். “இல்லை. உங்கள் உடலை அது நெகிழ வைத்துள்ளது” என்றாள் உலூபி. அவளுடைய நீட்டிய கையைப் பற்றி உடலை புற்றுச் சுவருடன் ஒட்டி கால்களை உதைத்து நெளிந்து மேலேறினான். குழந்தையைப்போல் அவள் அவனை தூக்கிக் கொண்டாள்.

அகல்சுடரின் செவ்வொளி தூண்போல எழுந்த வாயில் வழியாக அவள் குனிந்து உள்ளே நோக்கி “இது நம் இல்லம்” என்றாள். அர்ஜுனன் அக்குரல் உள்ளிருந்து பலவாகப்பெருகி முழக்கம் சூழ்ந்து திரும்பி வருவதை கேட்டான். குனிந்து “இதுவா?” என கேட்டான். இதுவா இதுவா இதுவா எனக்கேட்டது புற்று. “இது உருவானபின் இதற்குள் எங்கள் குலத்தவர் எவரும் இதுவரை சென்றிருக்கவில்லை. நம் இல்லத்தை நாமே கண்டடைய வேண்டும் என்று குலம் ஆணையிட்டுள்ளது. இதற்குள் நம் மைந்தர்கள் பிறக்கும் அறைகளை நாம் அமைக்க வேண்டும். மழைக்காலத்தில் அவர்கள் உண்பதற்கான உணவை சேர்த்து வைக்கவேண்டும்.”

அர்ஜுனன் அதை நோக்கி “இதற்குள் எப்படி இறங்குவது?” என்றான். நூலேணியும் அதற்குள் செல்ல முடியுமென்று தோன்றவில்லை. ஒரு மனிதனின் உடலளவுக்கே இருந்த அத்துளை உள்ளிறங்கியபோதே புரியென்றாகி வளைந்து இருளுக்குள் சென்றது. உலூபி அவன் உள்ளத்தை அறிந்தது போல் “சரடோ நூலேணியோ இதற்குள் செல்வதற்கு உதவாது இளவரசே. அரவென்று ஆவதொன்றே வழி” என்றாள். பின்பு தன் கைகளை நீட்டி தலைகீழாக உள்ளே வழிந்திறங்கி அகல் விளக்கை தன் வாயால் கவ்வியபடி உள்ளே சென்றாள்.

அரவென்றே அவள் மாறிய விந்தையை நோக்கி புற்றின் விளிம்பைப் பற்றியபடி அவன் நின்றான். ஒளி உள்ளே சென்றதும் அப்பாதையின் வளைவை காணமுடிந்தது. ஓர் இடத்தில் கூட உடலை நேராக வைத்திருக்க அங்கு இடமில்லை என்று தெரிந்தது. செங்குத்தாக சுழன்றிறங்கிச்சென்ற அப்பாதையில் அவள் நீரோட்டமென சென்று முற்றிலும் மறைந்தாள். அவளுடன் சென்ற ஒளி பாதையின் வட்டத்திற்கு அப்பால் இருந்து மெல்ல கசிந்து தெரிந்தது. அவள் செல்லச் செல்ல அது தேய்ந்து மறைந்தது. “உலூபி!” என்று அவன் அழைத்தான். அக்குரல் உள்ளே எங்கெங்கோ தொட்டு ஒன்று பத்து நூறென பெருகி அவனை நோக்கி வந்தது.

வட்ட ஒளி முற்றிலும் மறைந்தது. அவள் உள்ளே எங்கோ விழுந்துவிட்டாள் என அவன் எண்ணினான். “உலூபி…” என்று உரக்க அழைத்தான். அந்த அச்சத்தையும் துயரையும் பன்மடங்கு பெருக்கி உலூபி உலூபி என்று வீரிட்டது புற்றில்லம். அதன் புரிப் பாதைகள் முற்றிலும் இருண்டன. அர்ஜுனன் “உலூபி” என மீண்டும் அழைத்தான். புற்று அவனை ஏளனம் செய்வது போல் உலூபி உலூபி உலூபி என்றது. இரு கைகளையும் நீட்டியபடி அப்புற்றுப் பாதைக்குள் தலைகீழாக அவன் இறங்கினான். கால்களை நெளித்து உடல் வளைத்து அதற்குள் தவழ்ந்து சென்றான்.

தன் உடல் முற்றிலும் நெகிழ்வு கொண்டிருப்பதை அப்போது உணர்ந்தான். இடையை தோள்களை முன்னெப்போதும் அறியாத அளவுக்கு வளைத்து செல்ல முடிந்தது. அந்நெளிவையே விசையென்றாக்கி முன்னால் சென்றான். அரவென உருக்கொண்டு ஏதோ ஆழ்கனவொன்றில் ஊழிக்காலங்கள் வாழ்ந்ததென ஒரு நினைவெழுந்தது. உடலெங்கும் ஆயிரம் கால்கள் எழுந்தது போல் தோன்றியது. கால்களையும் கைகளையும் இயக்காமல் உடல் நெளிவுகளின் ஊடாகவே செல்ல முடிந்தது. புரிவட்டப்பாதை சுழன்று சுழன்று மேலும் ஆழம் நோக்கி சென்றது. அது மூன்று கவர்களாக பிரிந்து சென்ற முனையை அடைந்ததும் அவன் தயங்கினான். வலப்பக்க வளை பாதையின் மறு எல்லையில் பொன்னிற ஒளி தெரிந்தது. காலை சூரியன் போல் அழகிய பொன்வட்டமாக அது துலக்கம் கொண்டது. அங்குதான் அவள் இருக்கிறாளெனறு அவன் உணர்ந்தான். அதை நோக்கி சென்றான்.

துளைப்பாதை முழுக்க பொன்னொளி ஊறிப்பரந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென பிரிந்து சென்ற அத்தனை வளைவுகளும் ஒளி ததும்பின. விழிகளை கூசாத மென்மிளிர்வு. மண்ணுக்குள் நெடுந்தூரம் இறங்கிவிட்டதை உணர்ந்தான். நெருங்க நெருங்க அவ்வொளி அகலாது அணுகாது எங்குமென நிறைந்திருந்தது. ஏழு கவர்களாக பிரிந்த சுழல்பாதையின் விளிம்பின் தொடக்கத்தில் அவன் நின்றிருந்தபோது மேலிருந்து விழுது போல் தொங்கி இறங்கி கை நீட்டி வந்த உலூபியை கண்டான். அவள் விழிகள் இமைப்பின்மை கொண்டு வெறித்திருந்தன. “உலூபி” என்று அவன் அழைத்தான். அவள் கைகள் நெளிந்து வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டன. “வருக!” என்று சீறும் ஒலியில் அவள் அழைத்தாள்.

“இந்த ஒளி எது?” என்று அவன் கேட்டான். “பொன்னொளி” என்றாள் உலூபி. “நாமிருக்கும் இது ஆடகப் பசும்பொன்னில் எழுந்த வளை.” கைகளால் வளையின் சுவர்களை தொட்டுப்பார்த்தான். உலோகத்தின் மென்மையும் தண்மையும் கொண்டிருந்தது. கை நகத்தால் கீறி எடுக்கும் அளவுக்கு மென்மையானதாக. “பொன்னா?” என்றான். “ஆம் எங்கள் புற்றில்லங்கள் அனைத்துமே ஆழத்தில் பொற்பரப்பில் சென்று முடிகின்றன” என்றாள் உலூபி. பொற்சிரிப்புடன் “இவை பொன் என்பதும் அங்கே மானுடரின் பெருநகரங்களில் இப்பசும்பொன் தெய்வங்களுக்கு நிகர் வைக்கப்படுகிறது என்பதும் சில காலம் முன்புதான் குலப்பாடகர் வழியாக எங்களுக்கு தெரியவந்தது” என்றாள்.

“எங்கு வைத்தாய் அச்சுடரை?” என்றான். “அனைத்து துளைப்பாதைகளுக்கும் ஒளி பரவும் இடம் என ஒன்றுள்ளது, அங்கு” என்றாள் உலூபி. “வருக!” என்று அவன் கைகளைப்பற்றி அழைத்துச் சென்றாள். அவள் உடல் நூறு நெளிவுகள் கொண்ட அரவென ஆவதைக் கண்டான். என் உடல் முற்றிலும் அரவென ஆகவில்லை. இயல்பான மூச்சுடன் நீரில் மீனென அவள் செல்லும்போது களைத்தும் உயிர்த்தும் நான் இடர்கொள்கிறேன். அரவுக்கு நெளிவு என்பது நீருக்கும் நெருப்புக்கும் அலையே இருத்தலென்பது போல. “அதோ…” என்று அவள் சொன்னாள். அங்கே துளைவழிகள் சென்று இணைந்து ஓர் அரைவட்டக் கூடத்தை அடைந்தன. ஒரு பொற்கலத்தின் உட்குடைவு போலிருந்தது அது. பொற்குமிழி ஒன்றின் உள் போல. அதன் வளைவுமையத்தில் இருந்த சிறு பிறையில் அந்த அகலை அவள் வைத்திருந்தாள். குழியாடியென அவ்வொளியை எதிரொளித்து அனைத்து சுழிப்பாதைகளுக்குள்ளும் செலுத்திக் கொண்டிருந்தது அவ்வறை.

உலூபி பளிங்குவளைவில் எண்ணைத்துளியென வழிந்து அங்கே சென்று அமர்ந்து திரும்பி கை நீட்டினாள். அவன் அவளைத்தொடர்ந்து சென்று அமர்ந்தான். பொன் உருகி துளித்த சொட்டு என இன்னமும் உலோகமாகாதவளாக அவள் அங்கு இருந்தாள். அவன் அணுக இரு கைகளையும் விரித்து அரவின் விழிகளுடன் புன்னகைத்தாள். தன் விழிகளும் அரவு விழிகளாக இமைப்பழிந்திருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்தான். அவளை அணுகி அவள் மேல் படர்ந்தான். இருவர் உடல்களும் ஒன்றோடொன்று தழுவி ஏழு முறுக்குகளாக இறுகப்பின்னிக் கொண்டன. சீறி அவள் முகத்தருகே எழுந்தான். அவளது மூச்சுச் சீறலை தன் முகத்தில் உணர்ந்தான். வாய் திறந்து சீறி வளைந்த நச்சுப்பற்களைக் காட்டி அவனைக் கவ்வ வந்தாள். அவன் அச்சம்கொண்டு விலகுவதற்குள் அவன் இதழ்களைக் கவ்வி நச்சுப்பற்களால் அவள் அவனை தீண்டினாள்.

குருதிக்குள் இரு கொதிக்கும் அமிலத்துளிகளென அந்நஞ்சு கலப்பதை அவன் உணர்ந்தான். உடலெங்கும் ஓடிய குருதி வெம்மை கொண்டு கொப்புளங்களாயிற்று. விழிகளுக்குள் செந்நிறக் குமிழிகள் வெடித்தன. உடலெங்கும் குமிழிகள் இணைந்த நுரை பரவிச்சென்றது. அவன் காதுகளில் அவள் “நாகமாகிவிட்டீர்கள்” என்றாள். “ஆம், நான் உன் நாகன்” என்று அவன் சொன்னான். உடலெங்கும் பல்லாயிரம் விற்களை இழுத்து ஏற்றபட்டிருந்த நாண்கள் ஒவ்வொன்றும் மெல்ல தளர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். கைவிரல்கள் மலர்களாயின. கொடிகளாயின கைகள். காற்றில் நெளியும் நீர்த்தாரையாயிற்று உடல். அவனுடன் சேர்ந்து நெளிந்தன அவள் உடல் கொண்ட மென்மைகள்.

தன் விரிநெஞ்சின் பாறைபரப்பு களிமண்ணாகி உருகும் அரக்கென்றாகி, கதுப்பு நுரைத்து குமிழி என்றாகி, முலைகளென உன்னுவதை உணர்ந்தான். அலையும் பொன்னிற நீர்வெளியில் சிறகு விரித்து நடனமிடும் மீனென்றானான். உள்ளுணர்ந்த மென்மைகள் அனைத்தும் நாணேறின. அம்பெனத்திரண்டு கூர் கொண்டன. எங்கோ பெருமுழக்கமென மணியோசை ஒன்று ஆம் ஆம் என்று உரைத்தது. பிறிதெங்கோ ஏன் ஏன் என்று ஏங்கியது மணிச்சங்கம். அப்பால் எங்கோ இனி இனி என தவித்தது குறுமுழவொன்று. தன் உடலுக்குள் நுழைந்து நெளிந்தாடும் அலைவென அவளை உணர்ந்தான். நீரலைகளை விழுங்குவதனால்தான் மீன் உடல் நெளிகிறது போலும். இது அவள் கொண்ட நடனம்.

பொன்னொளி பரவிய துளைப்பாதைகளுக்குள் புரியெனப்பின்னிய ஒற்றையுடலுடன் சென்றுகொண்டே இருந்தனர். உடல் கரத்தல், உடல் நீளல், உடல் மறத்தல், உடல் என இருத்தல், உடல் உதறி எழுதல் என அலையலையென நிகழ்ந்து நினைவாகின நெளிகணங்கள். பெண்ணுடல் கொண்ட ஆண் காமம். கரையிலாக் காமம் என்பது பெண்ணுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. இங்கு உடல்நெகிழ்ந்து பெண்ணென்றாகி ஆணென எழுந்த காமத்தை அறிகிறேன். சூழ்ந்த ஆவுடை மேல் சிவக்குறி. ஆற்றல் சுழியில் நின்ற ஆதன். தன்னை அவள் கைகள் சூழ்ந்து இறுக்குவதை உணர்ந்தான். கொழு கொம்பு மீது பசுங்கொடி. மூழ்கிய கட்டுமரத்தின் மேல் அலைநிழல் ஒளி.

அவனைச் சூழ்ந்து தன் அலை வடிவை அவனில் பதியவைத்து உட்கரந்தாள். பின்பு அவளின்றி தான் மட்டும் வட்டச்சுழல் பாதையில் நெளிந்து உருகி ஓடிக் கொண்டிருந்தான். ஒளிரும் பொன்னிறக் குருதியென அப்பாதைகளை நிறைத்தான். பின்பு அவ்வழிதலை நோக்கியபடி அப்பால் இருந்தான். எப்போதோ அங்கிருப்பதை அறியாதவனானான். மீண்டபோது இருக்கிறேன் எனும் முதற் தன்னுணர்வாக எழுந்தான். அக்குமிழிக்கு உள்ளே புன்னகையுடன் அவள் மிதந்தாள். பொன்னிற ஒளி சூழ்ந்த புரிசுழிப்பாதையின் ஒரு வளைவில் அலைகொண்டு படியச் செய்த நுரைப் படலமென வளைந்து கிடப்பதை உணர்ந்தான்.

வெண்பளிங்கில் ஒரு மயிரிழையென அவள் அருகே வந்தாள். கையூன்றி புரண்டு அவள் அருகே சென்று குனிந்து கவிந்தான். குழல் முகம் சரிய தாழ்ந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். “நான் அறிந்ததை அள்ளவும் நினைவில் தேக்கவும் என்னிடம் சொற்களில்லை” என்றான். மயக்கு நிறைந்த விழிகளை அவனை நோக்கித்திருப்பி வெண்முத்து எயிற்றுநிரை தெரிந்த புன்னகை விரிய “என்ன?” என்று கேட்டாள். “என் உடல் பெண்ணாகியது. என் காமம் மும்மடங்கு ஆணாகியது. இரு திசைகளிலும் என் திகிரி முறுகி நிலைக்க ஓர் உச்சத்தில் அசைவிழந்தேன். அங்கு காலம் என ஒன்றிலாததை உணர்ந்தேன்” என்றான். அச்சொற்களை வாங்காதவளென அவள் புன்னகைத்தாள்.

அவன் அவள்மேல் எடை கவிந்து மென்தோள் வளைவில் முகம் புதைத்து “நீரென நெருப்பென நெளியாது இவ்வுலகை எவரும் அறிய இயலாது. வளைவுகளால் வட்டங்களால் புடவி சமைத்த கலைஞனின் ஆணை. நேர் என அகமும் ஆகமும் கொண்ட எவையும் இங்குள பேரழகை தொடுவதில்லை” என்றான். “உம்” என்று அவள் சொன்னாள். அவள் கைகள் அவன் முதுகை அணைத்து வருடின. அவன் கன்னத்தில் வியர்வை நனைந்த தாடியில் தன் முகத்தைப் புதைத்து மெல்ல அசைத்தபடி “நிறைவடைந்தீர்களா?” என்றாள். “ஆம், என் உள்ளறைகள் நிறையும்போது இறுதிக் காற்றும் வெளியேறியது, பிறிதொன்றிலாமை நிகழ்ந்தது. நிறைந்தபின் நான் ஒரு கலம் மட்டும் என்றானேன்” என்றான்.

“எத்தனை நெளிவுகள்!” என்றான். தன் உடல் தசைகளனைத்தையும் முடிச்சவிழச்செய்து தசைகளென மாறி அவள் மேல் எடையானான். “சுவை உணரும் நாக்கு நெளிந்தாக வேண்டும்.” அவள் “என்ன? என்று கேட்டாள். “தெரியவில்லை. பொருளற்ற சொற்கள். ஆனால் அவை எங்கிருந்தோ என்னில் நிகழ்கின்றன” என்றான். ஆழ்ந்த அன்னைக்குரலில் “துயிலுங்கள்” என்றாள் உலூபி. அவன் முதுகை நீவியபடி “துயில்க என் இனியவனே!” என்றாள்.

சுரங்கப் பாதைகளில் நீர் நிறைவது போல் அவன் சித்தமெங்கும் துயில் வந்து பெருகிக் கொண்டிருந்தது. எஞ்சிய பகுதிகளில் ஓடி தஞ்சம் கொண்ட மொழி இறுகி குமிழிகளென வெடித்தது. “ஆணென்றும் பெண்ணென்றும் ஆகி அறிவதென்ன? மெய்யறிதல் என்பது இரண்டுமாகி நின்றறிவதே. காமமோ ஞானமோ மாதொரு பாகனாக நில்லாமல் எதையும் அறியக்கூடுவதில்லை” என்றான். அவள் கை அவன் குழலுக்குள் நுழைந்து அளைந்தது. “துயில்க என் மைந்தா!” என்றாள்.

அர்ஜுனன் துயிலில் பேசுவதுபோல குழறல்மொழி கொண்டிருந்தான். “இன்றே அறிந்தேன், பெண்ணென இருப்பதன் பெருங்களியாட்டத்தை. இனி ஆணிலி வடிவெடுக்காது என்னால் உவகையை அடைய முடியாதென்று தோன்றுகிறது” என்றான். “மொழியறிவதற்கு முன்பே என்னிடம் நான் ஆணென்று உரைத்தனர். படைக்கலமெடுத்து என் கையில் அளித்தனர். வில்லோ வாளோ கதாயுதமோ இம்மண்ணில் உள்ள படைக்கலன்கள் அனைத்தும் ஆண்மை கொண்டவை. வெறும் ஆண்குறிகள் அவை. என் தசைகளை ஒவ்வொரு நாளும் இறுகச்செய்தேன். ஒவ்வொரு கணமும் பயின்று என் உடலை இறுக்கி ஆணென்றாக்கிக் கொண்டேன். இன்று இளகி முலைக்குமிழ்களைச் சூடி நெளிந்து வழிந்தபோது அறிந்தேன் நான் இழந்துவிட்டு வந்ததென்ன என்று. ஆணென்றும் பெண்ணென்றும் ஆகி ஆடும் களியாட்டுகளை நாடுகிறது என் உள்ளம். இனி இவ்வுடல் எனக்குரியதல்ல.”

அவன் சொற்களை அவள் கேட்டதாக தெரியவில்லை. இளந்தோள்களிலும் கழுத்தின் குழிகளிலும் குளிர்வியர்வை வழிய இமைகள் சரிந்து பாதி மூடிய விழிகளுடன் உடல் தளர்ந்து கிடந்தாள். தன் எடை அவளை அழுத்துவதாக உணர்ந்து மெல்ல சரிந்தபோது “ம்ம்” என முனகியபடி அவனை அணைத்துக் கொண்டாள். “என் எடை” என்று அவன் சொன்னபோது “எனக்கு வேண்டும்” என்றாள். “ஆம்” என்றான். அவள் கனவில் என கண்மூடி புன்னகைத்தாள். “நீ ஆணென உணர்ந்தாயா?” என்றான். பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். “உன் உடல் இறுகியதா? தசைகள் நாணேறினவா?” என்றான். அவள் விழிகளைத்திறந்தபோது அச்சொற்களை அவள் அப்போதுதான் பொருள் கொள்கிறாள் என்று தெரிந்தது. “என்ன?” என்றாள். “நீ ஆணென உணர்ந்தாயா?” என்றான்.

“ஆம்” என்றாள். “எங்கு?” என்று அவன் கேட்டான். “நினைவறிந்த நாள் முதல் பெண்ணென்று சொல்லி வளர்க்கப்பட்டேன். பெறுபவளென்று என்னை உணர்ந்தேன். இன்று இம்முயங்கலின் அலைகளில் எங்கோ புடைத்தெழுந்து அளிப்பவள் என நின்றேன்” என்றாள். அர்ஜுனன் “நான் அதை உணர்ந்தேன், பெற்றதனால் மட்டுமே நான் முழுமைகொண்டேன்” என்றான். “அதைப்பெற்று நான் பெண்ணானேன்.” இனிய பெருமூச்சுடன் சரிந்து அவளருகே மல்லாந்து படுத்து இருகைகளையும் தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டான். புரண்டு அவன் மேல் ஒரு கையையும் காலையும் வைத்து தலைசரித்தாள். அவள் குழல் அவன் முகத்திலும் கழுத்திலும் பரவியது. அவன் மார்பில் முடிகளில் தன் முகம் அமர்த்தி உதடுகளால் அம்மென்மயிர்ப் பரவலை கவ்வி இழுத்தாள்.

“ஆணென்பதும் பெண்ணென்பதும் என்ன?” என்றான். “சக்தி சிவம் இப்புடவியென ஆகும்போது இரண்டாகின்றதா? அல்லது நாம் உணரும் மாயைதானா அது?” அவள் “நாகங்கள் பிறக்கையில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பார்கள். நாகமகவு வளர்ந்து தன்னை ஆணென்றோ பெண்ணென்றோ ஆக்கிக் கொள்கின்றது. ஆண் பெண்ணாவதோ பெண் ஆணாவதோ நாகங்களில் இயல்பே.” வான்நோக்கி தொடுக்கப்பட்ட அம்புகள் போல அவன் உள்ளத்தில் எழுந்த சொற்கள் விசை தீரும்வரை பரந்து பொருளின்மையை, பொருள்கொள்ளும் முடிவின்மையை, முடிவின்மையின் முதல் எல்லையைத் தொட்டு திரும்பி வந்து அவன் மீதே விழுந்து கொண்டிருந்தன.

“இரண்டின்மை” என்று அவன் சொன்னான். “இரண்டின்மையன்றி எதுவும் அதை தொட முடியாது என்று யாதவன் என்னிடம் சொன்னான். இரண்டும் என யோகத்தில் அமர முடியுமா? இரண்டிலியாகும் வழி ஒன்றுண்டா? இரண்டென ஆகி மானுடன் கொள்ளும் மாயங்கள். இரண்டழிந்து அவன் தன்னுள் உணரும் தடையின்மைகள் தெய்வங்களுக்குரியவை போலும். இரண்டுக்கும் நடுவே அசைவற்ற துலாமுள் அது. எழும் விரல் எஞ்சாத்தொலைவில் எட்டித் தொடும் புள்ளி. முடிவிலாக்காலமென அசையும் துலா. அசைவின்மைகொள்ளும்போது அதில் இன்மையென நின்றிருக்கிறது காலம்…”

தான் முன்னரே துயின்று விட்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஒன்றுடன் ஒன்று இணையாத தனிச் சொற்களாக இருந்தது அகம். “நாகம் இரண்டின்மை. இரண்டுமானது. அதன் வால் ஆண்மை, சிவக்கத்திறந்த வாயோ பெண்மை. தன் வாலை தான் விழுங்கி தன்னுள் முழுமை கொள்கிறது. முற்றுச் சுழல். சுழிமைய வெறுமை. உண்டு தீரா விருந்து. தன்னை உண்பதைப்போல் தீராச் சுவை என்ன? தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன? தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும்?” துயிலில் புதைந்து புதைந்து சென்ற இறுதிக் கணத்தில் விரிந்தோடி வந்து மண்டியிட்டு சிறு கத்தியால் கழுத்தறுத்து குப்புற விழுந்த இளைஞன் ஒருவனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்து உடல் நடுங்கினான்.

அவள் கைகள் விலக விழித்து “என்ன?” என்றாள். “ஓர் இளையோன். அவனை நான் மிக அருகிலென கண்டேன். தன் கழுத்தை தான் அறுத்து உடல் துடித்து விழும்போது அவன் விழிகள் என்னை நோக்கின.” உலூபி “இன்று மூதாதையர்களுக்கு பலியானவர்களை சொல்கிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றான். “அது இங்கு வழக்கம்தான்” என்றாள். “இல்லை அதிலொருவன் என்னை உற்று நோக்கினான். அவன் விழிகளில் ஒரு சொல் இருந்தது.”

அவள் “படுத்துக் கொள்ளுங்கள்” என்றாள். அர்ஜுனன் உடலில் எஞ்சிய மெல்லிய அதிர்வுடன் அவளருகே படுத்துக் கொண்டான். “அவன் விழிகளை மிக அருகே என இப்போது கண்டேன். அவனை நான் முன்பே அறிவேன். முன்பெங்கோ கண்டிருக்கிறேன்” என்றான். “நாகர்களை நீங்கள் எங்கு கண்டிருக்க முடியும்?” என்றாள். “இல்லை, எங்கோ கண்டிருக்கிறேன். கழுத்து அறுபடுவதற்கு முந்தைய கணம் அவன் விழிகளில் வந்தது ஓர் அழைப்பு. அல்லது ஒரு விடை.” அர்ஜுனன் அக்கணத்தை அஞ்சி மீண்டும் அஞ்சி அஞ்சி அணுகி அவ்விழிகளை மிக அருகிலென கண்டான். “அல்லது விடைபெறல்” என்றான்.

பின்பு அதற்கு முந்தைய கணத்தை அவ்விழிகளில் இருந்து மீட்டெடுத்தான். “ஆம், அதுதான்” என்று வியந்தான். “அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான்.” புருவம் சுருக்கி “யார்?” என்று உலூபி கேட்டாள். “அவ்விளையோன். முந்தையநாள் முதலே என்னை அவன் கண்டிருக்கிறான். ஆனால் அக்கணத்திற்கு முந்தைய கணத்தில் அவன் என்னை அடையாளம் கண்டான். நான் யாரென அறிந்தான்.” உலூபி “யாரென?” என்று கேட்டாள். “அவன் அறிந்ததென்ன என்று தெய்வங்களே அறியும்” என்றான் அர்ஜுனன். “ஆனால் அதில் ஐயமில்லை, அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். நான் இன்னமும் அவனை அறியவில்லை. எங்கோ… காலமடிப்புகளில் எங்கோ, எனக்காக அவன் காத்திருக்கிறான் போலும்.”

அவள் மெல்ல மேலெழுந்து அவனருகே வந்தாள். அவன் குழலுக்குள் கை செலுத்தி நீவி பின்னால் சென்று தலையைப் பற்றி தன் முலைக்கோடுகளுக்குள் வைத்தாள். அவன் காதுகளுக்குள் “துயிலுங்கள் காலை விழித்தெழுகையில் பிறிதொருவராக இருப்பீர்கள்” என்றாள். “இந்தப் பொற்கணம்… இது மீளாது. பிறிதொரு முறை இதை நான் அறியவும் போவதில்லை” என்றான் அர்ஜுனன். அவள் அவன் காதில் “ஆம், இத்தருணம் என்னுள் மைந்தனென முளைக்கும்” என்றாள். அவன் தலை தூக்கி நோக்கி “என்ன?” என்றான்.

“என் குலத்து நிமித்திகர் முன்பே சொல்லி இருக்கின்றனர், பொற்கணத்தில் துளிர்க்கும் மைந்தன் ஒருவனுக்கு அன்னையாவேன் என. நாகமணி போல் என்னுள் அவன் உறைந்திருக்கிறான். எண்கவர் களம் அமைத்து கல்லுருட்டிக் கணித்து அவன் பெயரையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.” மெல்லிய இதயதுடிப்புடன் அர்ஜுனன் அவள் கையை பற்றினான். முகம் தூக்கி அவள் விழிகளை நோக்கினான். அதில் அந்த இமையா நோக்கு மறைந்திருந்தது. அன்னையெனக் கனிந்த கண்கள் சிறு குருவிச்சிறகுகளென சரிந்தன. அவனருகே குனிந்து “அவன் பெயர் அரவான்” என்றாள்.

முந்தைய கட்டுரைஅரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்
அடுத்த கட்டுரைஇந்து மதம்- ஒரு கடிதம்