நான்கு அடிப்படை பேசுபொருட்கள்…

Mural_22238

இந்திய சிந்தனை மரபை அறிவதற்கு நான்கு மையமான பேசுபொருட்களை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். அவற்றில் இருந்து இந்திய தத்துவ சிந்தனையின் தரப்புகளுக்குள் செல்வது ஒரு கயிறைப்பற்றிக் கொண்டு காட்டுக்குள் செல்வதுபோன்றது.

1. விடுதலை

இந்திய சிந்தனையின் தரப்புகள் அனைத்திலுமே அடிப்படையான முதல் வினாவாக உள்ளது இதுதான், இச்சிந்தனையின் பயன் என்ன? இதை ஏன் நான் படிக்கவேண்டும், ஏன் இதன்படி வாழவேண்டும்? எல்லா சிந்தனைகளும் இதற்கான ஒரு பதிலை நமக்கு அளித்தபின்னரே ஆரம்பிக்கின்றன. அவை அளிக்கும் பதிலை ஒட்டுமொத்தமாக ஒரே சொல்லில் விடுதலை என்று சொல்லலாம். முக்தி, மோட்சம்,வீடுபேறு என்றெல்லாம் பல சொற்களில் இது குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு சிந்தனைக்கும் இச்சொற்கள் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கின்றன. ஆனால் சிந்தனை என்பது விடுதலை என்ற பயனை அளிப்பதாக இருக்கவேண்டும் என்பது எல்லா தத்துவத்தரப்புகளுக்கும் பொதுவாக உள்ளது.

விடுதலை என்ற கருத்து முன்வைக்கப்படவேண்டும் என்றால் ஒரு விஷயம் முன்னரே உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது மனிதன் கட்டுண்டிருக்கிறான். இந்திய சிந்தனைகளை பொறுத்தவரை மனிதன் அறியாமையில் கட்டுண்டிருக்கிறான் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட விதி. அறியாமையே துக்கமாக ஆகிறது. அந்த கட்டுண்டிருத்தலின் துயரத்தில் இருந்து தத்துவஞானம் ஒருவரை மீட்க வேண்டும்.

ஆகவே தத்துவசிந்தனை எதை அளிக்கும் என்பது எப்போதுமே தெளிவாக உள்ளது. அறியாமையின் துயரை அழிக்கும் ஒரு வழியை அது காட்டியாக வேண்டும். அதன் பணி பிறிது ஒன்று அல்ல. அது உடனடியாக உலகியல் பயன் எதையும் அளித்தாகவேண்டும் என்றில்லை.

மனிதன் பிறந்து வெளிவந்ததும் முழுக்கமுழுக்க இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். கருப்பை குழந்தையை பொத்தியிருப்பது போல அறியாமை மனிதனை பொத்தியிருக்கிறது என்கிறது கீதை. ஆழமான படிமம் இது. கருப்பையில்தான் அவன் உருவானான், ஆனால் கீறி வெளிவந்தால்தான் அவனுக்கு பிறப்பு. அதேபோல இயற்கையால்தான் அவன் உருவானான். ஆனால் அது அளிக்கும் அறியாமையின் பிடியில் இருந்து வெளிவந்தால்தான் அவனுக்கு மனிதன் என்ற பிறப்பு நிகழ்கிறது.

அதற்குத்தான் அறிதல் தேவைப்படுகிறது. தன்னைச்சுற்றி உள்ள ஒவ்வொன்றையும் மனிதன் அறிய ஆரம்பிக்கிறான். அந்த அறிதல் அவனை மேலும் மேலும் விடுதலை கொண்டவனாக ஆக்குகிறது. நீரை அறிந்ததும் ஒரு விடுதலை. நெருப்பை அறிந்ததும் இன்னும் ஒரு விடுதலை. மின்சாரத்தை அறிந்ததும் அடுத்த விடுதலை. இயல்பாக அவன் ஒரு கட்டத்தில் தன்னை அறியவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ‘நான் யார்’ என்று கேட்கிறான்.

இந்தக் கேள்வி மூன்று நடைமுறைக் கேள்விகளாக அவனை தாக்குகிறது. 1. நான் எங்கிருந்து வந்தேன், இறந்தபின் என்ன ஆகிறேன் 2. இந்த பிரபஞ்சத்தை நான் எவ்வாறு அறிகிறேன். நான் அறிவது உண்மைதானா? 2. இந்தபிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் என் இடம் என்ன? என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

இவற்றுக்கான பதில் அவனிடம் இல்லையேல் அவனால் வாழ்க்கையை சந்திக்க முடிவதில்லை. ஒவ்வொரு தருணத்திலும் அவனுக்கு மனச்சோர்வும் துயரமும் ஏற்படுகிறது. அதுவே ‘துக்கம்’ என்று தத்துவத்தால் சொல்லப்படுகிறது. தத்துவம் அந்த வினாக்களுக்கு பதில் அளித்து அவனை துக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

சொல்லப்போனால் இன்றைய அறிவியலும் சரி, தத்துவமும் சரி, அதன் கிளைகளான பலநூறு அறிவுத்துறைகளும் சரி இதே கடமையைத்தான் செய்கின்றன என்பதைக் காணலாம். அவை மேலே சொன்ன கேள்விகளுக்கு தங்களுக்கான விளக்கங்களை அளிக்கின்றன.

விடுதலை என்பதற்கு ஒவ்வொரு இந்திய தத்துவமும் அளிக்கும் பதில் ஒன்று. உலகியல் சிந்தனையாகிய சாங்கியம் என்ன பதிலை அளிக்கிறது? இந்த பிரபஞ்சம் ஒருபெரிய ஆதி இயற்கையில் இருந்து உருவானது. ஆதி இயற்கையில் இருந்த பருப்பொருளில் நிலை, எதிர்நிலை,செயல் ஆகிய மூன்று இயல்புகளும் சமநிலையில் இருந்தன. அந்த சமநிலை குலைந்தபோது ஒற்றைப்பருப்பொருளாக இருந்த அது பலவாக ஆகியது. அதுவே இந்த பிரபஞ்சம். அதை நாம் எதிர்கொள்ளும்போது அதை புரிந்துகொள்ளமுடியாமையால் துயரம் ஏற்படுகிறது. நம்முடைய மனத்தில் உள்ள நிலை, எதிர்நிலை,செயல் ஆகிய மூன்றையும் நாம் வென்று ஒருமையை அடைந்தோம் என்றால் நம்மால் பிரபஞ்சத்தையும் ஒரே அமைப்பாக பார்க்கமுடியும். அந்த மெய்யறிவு இந்த பிரபஞ்சம் பற்றிய பதற்றத்தை அழித்து நம்மை துயரத்தில் இருந்து விடுதலை செய்யும்.

ஒரு வேதாந்திக்கு என்ன பதில் இருக்க முடியும்? இந்த பிரபஞ்சத்தோற்றம் என்பது உண்மை அல்ல, இந்த தோற்றம் எனக்கு என் இயல்பால் நான் உருவாக்கிக்கொள்வதன்மூலம் கிடைப்பது மட்டுமே. இதற்கு அப்பால் உள்ளது பிரபஞ்சத்துக்கு ஒட்டுமொத்தமான சாரமாக உள்ள ஒன்று. அதை அறியவே முடியாது. ஆனால் என்னைச்சுற்றி உள்ள ஒவ்வொன்றிலும் அதை நான் உணர முடியும். அதுவே இவை அனைத்தும். அதுவே நான். இப்படியெல்லாம் யோசிக்கும் என் பிரக்ஞையும் அதுவே. அது மட்டுமே உள்ளது, நான் என்பது அதில் இருந்து என்னை என் தன்னுணர்வால் நான் பிரித்துப்பார்ப்பதனால் உருவாகும் மாயத்தோற்றம்தான். என்னுடைய துயரங்கள் எல்லாமே இவ்வாறு என்னை நான் பிரித்துப்பாத்துக்கொள்வதன் மூலம் உருவாகக்கூடியவை. இந்த பிரித்துப்பார்த்தலை நான் கைவிட்டு அதுவே நான் என்ற முழுமை உணர்வை அடையும்போது எனக்கு துயரங்கள் இல்லாமலாகின்றன.

பௌத்தம் சொல்லும் விடுதலை என்ன? இந்தப்பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதை எனக்கு சுற்றும் நான் காண்கிறேன். ஆகவே நான் காண்பது பொருட்களை அல்ல, மாற்றம் என்ற நிகழ்வைத்தான். அந்த மாற்றத்துக்கு அடிப்படையான ஒரு விதி இருக்கிறது. அந்த விதிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு பெருவிதி என்று கூறலாம். அதுவே மகாதர்மம். அந்த மகாதர்மமே என்னையும் என் சிந்தனையையும் கூட இயக்கும் விசை. அந்த மகாதர்மத்துடன் முழுமையான இணைவை நான் அடைந்தால் எனக்கு துயரம் இல்லை. அதில் இருந்து விலகி நிற்பதனால்தான் துயரம்.

இந்த மூன்று பதில்களையும் ஒரே உதாரணம் மூலம் விளக்கலாம். கடலில் ஒரு மீன் தன்னை நான் என்றும் தான் இருப்பதை கடல் என்றும் உணர்கிறது என்று வைத்துக்கொள்வோம். நானும் கடலும் என்று யோசித்தால் அதனால் என்றாவது கடலை புரிந்துகொள்ள முடியுமா? அப்படி புரிந்துகொள்ள முடியாத கடலால்தான் தன் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் தீர்மானிக்கப்படுகிறது என்று நினைத்தால் அதற்கு எவ்வளவு பதற்றம் உருவாகும்? ஆனால் கடல் என்பதே அந்த மீனையும் அதேபோன்ற கோடானுகோடி மீன்களையும் சேர்த்த ஒன்றே என அது உணர்ந்தால் அதற்கு அந்த பதற்றம் தணிகிறது. நானும் கடல்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த எண்ணமே விடுதலை.

இந்த விவாதத்தில் ஒன்றை புரிந்துகொள்ளலாம். இங்கே தேடலும் சரி பதிலும் சரி தத்துவார்த்தமானவை. உலகில் அன்றாடவாழ்க்கையில் போராடுவதற்கு உரியன அல்ல. அரசையோ அதிகாரத்தையோ சார்ந்தவை அல்ல. அவை வேறு தளம் சார்ந்தவை. இங்கே உள்ள கேள்வி பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் மனிதனுக்கு உருவாகும் தத்துவம் சம்பந்தமான தத்தளிப்பு சார்ந்தது. பதில் அதைக் களைவதற்கான வழியாகவே உள்ளது.

அந்த வினா இருந்தால் நாம் தத்துவத்தை பயிலலாம். இல்லையேல் தேவையில்லை. இதில் அன்றாட வாழ்க்கை அல்லது அரசியலை போட்டுப்பார்ப்பது காற்றை நாழியால் அளப்பது போல

2. பிரபஞ்ச சாரம்.

இந்திய சிந்தனைகளில் பலவற்றில் பிரபஞ்சத்தின் சாராம்சமாக எது உள்ளது என்ற கேள்வி உள்ளது. நம்மைச்சுற்றி நாம் பிரபஞ்சத்தை ஒவ்வொருநாளும் உணர்கிறோம். அதில் நாம் ஒரு ஒழுங்கை உணர்கிறோம். ஒரு நோக்கத்தை உணர்கிறோம். அப்படியானால் முடிவில்லாத இந்த பிரபஞ்சத்துக்கு அதன் சாராம்சமான ஒரு ஒழுங்கும் நோக்கமும் இருக்கலாம். அது என்ன?

ஆதிவேதமான ரிக்வேதமே மிகப்பிரம்மாண்டமான ஒரு பிரபஞ்ச சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முடிவே இல்லாத பெருவெளியை அது குறிப்பிடுகிறது. அந்த முடிவிலாத விண்ணகத்தில் உள்ளன எண்ணிக்கையே இல்லாத பிரபஞ்சங்கள். அவை எவ்வாறு உருவாயின, எவ்வாறு நிகழ்கின்றன, எவ்வாறு அழிகின்றன?

அந்த சாராம்சமானதை ‘தத்’ அது என்று வேதங்கள் சொல்கின்றன. அதை அறியமுடியாதது சொல்லமுடியாதது என்கின்றன.[அநிர்வசனீயம்] அந்த அறிய முடியாத ஒன்றை பிரம்மம் என்று குறிக்கின்றன. அந்த அறியமுடியாமையின் இருப்பை நம் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் சாதாரணமாக அறியவும் முடிகிறது. அந்த அறிதலில் இருந்து அதை நாம் உருவகித்துக்கொள்ளலாம்.

அதையே வேதாந்தம் பிரம்மம் என்று சொன்னது. பௌத்தம் அதை மகாதர்மம் என்று சொன்னது. வேதாந்தத்தை பொறுத்தவரை அறியமுடியாத அந்த ஒன்றுதான் தன்னை இந்தபிரபஞ்சமாக காட்டுகிறது. பௌத்ததை பொறுத்தவரை அந்த அறியமுடியாத ஒன்று ஒரு இயக்கவிதிமட்டுமே. அந்த விதி பிரபஞ்சத்தின் செயலை நிர்ணயம்செய்கிறது.

ஒளி வேகமாகச் சுழல்கிறது. அப்போது ஒரு வட்டம் நம் கண்ணுக்கு படுகிறது. சுழற்சி நின்றால் வட்டமும் இல்லாமல் ஆகும். ஒளிதான் இருக்கிறது, வட்டம் நம் பாவனை. இதுதான் வேதாந்தம் சொல்லும் பிரம்மம். ஒரு இசைத்தட்டு வேகமாகச் சுற்றுகிறது. அப்போது அதற்கு ஒரு சுழற்சிவடிவமும் மையமும் உருவாகிறது. அந்த இசைத்தட்டு பிரபஞ்சம் என்றால் அந்த சுழற்சி என்ற விதிதான் பௌத்தர்கள் சொல்லும் மகாதர்மம்

இப்படி ஒரு மையம் இருக்கிறது என்று சொல்பவர்கள் ஆன்மீகவாதிகள். இல்லை என்பவர்கள் பௌதிகவாதிகள். இவர்களுக்குள் பலவிதமான விவாதங்கள் என்றும் உள்ளன. இருதரப்பும் எப்போதுமே வலுவாக இருந்துள்ளது.

3 ஊழ்

இந்திய சிந்தனைகள் அனைத்திலும் ஊழ் என்ற கருதுகோள் உள்ளது. இங்கு நாம் அறியும் ஒவ்வொன்றுக்கும் அதற்கான செயல்விதிகள் உள்ளன. அவை முன்னரே தீர்மானிக்கபப்ட்டுள்ளன. அதேபோல மனித வாழ்க்கைக்கும் செயல்விதி உண்டு. அதுவே ஊழ் என பொதுவாகச் சொல்லப்படுகிறது.

ஊழை இப்படி ஓர் உவமை மூலம் விளக்கலாம். ஆப்ரிக்காவில் மாபெரும் எறும்பு புற்றுகள் உள்ளன. ஓர் எறும்புப்புற்று பல ஆயிரம் வருட வரலாறு உள்ளதாக இருக்கும். பலநூறு அடி உயரம் இருக்கும். மிகமிக நுட்பமான மிகச்சிக்கலான பொறியியல் அமைப்பு அதற்கு இருக்கும். ஆனால் அதைக் கட்டும் எறும்புக்கூட்டத்தில் ஒரு தனி எறும்புக்கு சிலநாட்களே ஆயுள். அதன் மூளையும் மிகச்சிறிது. அப்படியானால் அந்த மாபெரும் எறும்புக்கூடு எந்த மனத்தில் உள்ளது?

அது அந்த எறும்புக்கூட்டின் ஒட்டுமொத்த மனதில் உள்ளது என்பதே பதில். அதில் ஓரு தனி எறும்பு பிறக்கிறது.நாலைந்துநாள் கொஞ்சம் மண்ணைக் கொண்டு சென்று உள்ளே எதையோ கட்டுகிறது. சாகிறது. ஆனால் அது அதனால் கொஞ்சம்கூட கற்பனைசெய்ய முடியாத ஒரு மாபெரும் கூட்டை கட்டிக்கொண்டிருக்கிறது. அபப்டிச் செய்வதே அதன் ஊழ்.

அதேபோன்றதே மானுட வாழ்க்கையும். மனிதன் தன் வாழ்நாளில் செய்ய வெண்டிய விஷயம் அடிப்படையில் முன்னரெ முடிவாகி இருக்கிறது. அவன் ஒரு ஒட்டுமொத்தமான இயக்கத்தின் சிறு பகுதியாகவே செயல்படுகிறான். அவன் தன் செயலின் விளைவை ஒருபோதும் ஊகிக்க முடியாது. ஆகவே அவன் செய்யக்கூடியது தன் செயலை சிறப்பாகச் செய்வதே. இதுவே ஊழ்க்கோட்பாட்டின் சாரம்

அந்த ஊழை ஒவ்வொரு மதமும் ஒருவாறாக விளக்குகிறது. முன்னால் உள்ள பிறவியில் செய்த செயலின் விளைவே இந்த பிறவியில் ஊழாக ஆகிறது என்பது இந்துமதத்தின் பல தரப்புகளுக்கு உரிய விளக்கம். சமண பௌத்த மதங்களும் இதை ஏற்றுக்கொள்கின்றன

4 வாழ்க்கைச்சுழல்

நாம் வாழும் வாழ்க்கையின் அன்றாடச் சுழற்சியில் இந்த தத்துவத்துக்கு என்ன பொருள்.இந்திய சிந்தனை மரபில் ஞானத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறார்கள் .ஒன்று சாமானியம். இன்னொன்று விசேஷம். சாமானிய தளம் என்பது நடைமுறை சார்ந்தது. விசேஷ தளம் என்பது நாம் நம் தர்க்க புத்தியால் உருவாக்கிக் கொண்டு அறிவது. எல்லாம் பிரம்மமே என்பது விசேஷ ஞானம். ஆனால் எட்டிப்பழம் வேறு மாம்பழம் வேறு என்பது சாமானிய ஞானம். இரண்டுமே ஒரே உண்மையின் இரு பக்கங்கள்.

விசேஷ தளத்தில் நாம் அடையும் தத்துவம் சாமானிய தளத்தில் நடைமுறையில் நமக்கு பயன்படவேண்டும். அதற்காகவே அவற்றை நடைமுறை நெறிகளாக ஆக்க முயல்கிறார்கள். இந்திய சிந்தனை மரபுகளை பொறுத்தவரை அறம், ஒழுக்கம் என்பவை சாமானிய தளத்தைச் சேர்ந்தவை மட்டுமே. அவற்றை அடிப்படையான தத்துவ விவாதத்துக்குள் அவை கோண்டுசெல்வதில்லை. பிரபஞ்சமளாவிய வினாக்களுக்கே அங்கே இடம். அவ்வாறு பெறப்பட்ட விடைகளை வாழ்க்கைக்கு பொருத்தும்போதே அறமும் ஒழுக்கமும் உருவாகின்றன. பௌத்தம் கொல்லாமை உட்பட உள்ள நெறிகளைச் சொல்வது அதனாலேயே.

ஒவ்வொரு மெய்ஞானத்தரப்பும் அறத்தையும் ஒழுக்கத்தையும் நுட்பமான வேறுபாடுகளுடன் விளக்குகிறது. இந்து மரபைப் பொறுத்தவரை அறம் மாறாதது. ஒழுக்கம் காலம்தோறும் மாறக்கூடியது. இவ்வாறு தத்துவ ஞானம் அன்றாட வாழ்க்கையை வந்தடையும்போதுதான் மதங்கள் உருவாகின்றன. மதம் வாழ்க்கை நெறிகளாகவும் நம்பிக்கைகளாகவும் தத்துவத்தை மாற்றி நமக்கு அளிக்கிறது.

அன்றாட வாழ்க்கைசுழலை சம்சாரம் என்பது நம் மரபு. சம்சாரத்தின் துயரில் இருந்து கரைசேர்ப்பதாகவும் தத்துவஞானம் இருக்கவேண்டும் என்பது நம்பிக்கை.

*

இந்திய சிந்தனை மரபு பல ஆயிரம் வருட வரலாறு உள்ளது. அதை அணுகும்போது நாம் ஒவ்வொரு சிந்தனைத்தரப்பும் மேற்கண்ட நான்கு அடிப்படைப்பேசுபொருட்களை எவ்வாறு வகுத்துரைக்கின்றன என்பதை கவனிக்கவேண்டும். அதை வைத்தே அவற்றை ஒப்பிடவும் வகுத்துக்கொள்ளவும் முயலவேண்டும்.

[ 27-080-10 அன்று நடந்த ஊட்டி நண்பர் சந்திப்பில் உரையாடலுக்காக அளிக்கப்பட்ட முன்னுரை]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 28, 2010

முந்தைய கட்டுரைஅந்த மாபெரும் வெள்ளம் – குறித்து…
அடுத்த கட்டுரைதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே