சகோதரி சுப்புலட்சுமி

Sister_Subbalakshmi_with_some_ladies_of_Madrasஅன்பின் ஜெ எம்,

சிஸ்டர் சுப்புலட்சுமியின் ஆளுமை பற்றி மேலும் சில

சிஸ்டர் சுப்புலட்சுமி என்று பின்னாளில் அறியப்பட்ட [சகோதரி சுப்புலட்சுமி ] ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலிய மணக்கொடுமைக்குப்பலியான பல்லாயிரம் அந்தணப்பெண்களில் ஒருவர். மிக இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு மணமான ஒரு சில வாரங்களிலேயே கணவனை இழந்தவர். கல்வி நாட்டமும் முற்போக்குச்சிந்தனையும் கொண்ட தந்தை சுப்பிரமணிய ஐயரின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்து உயர் கல்வி பெற்ற இவர், அதன் பின்னர் குழந்தைமணக் கொடுமையால் விதவைகளான பெண்களுக்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டார். தானும் ஒரு விதவையான அவரது சித்தியும் சுப்புலட்சுமி அவர்களின் பணிகளுக்குத் துணையாகக் கூடவே இருந்தார்.

விதவையருக்கான விடுதி ஒன்றை சிஸ்டர் தன் எழும்பூர் இல்லத்திலேயே[1912இல்] முதலில் தொடங்கினார் . பின்பு அது விவேகானந்தர் இல்லம் என இப்போது கூறப்படும் ஐஸ்ஹவுஸுக்குப்பெயர்ந்தது.

[சென்ற ஆண்டு தங்களை முன் வைத்து வெளிவந்த என் ’யாதுமாகி’ நாவலில் சிஸ்டர் பற்றிய பல விரிவான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன;நாவலின் கதைத்தலைவி தேவிக்கு உதவி செய்யும் ஒரு பாத்திரமாகவே அதில் அவர் இடம் பெற்றிருந்ததைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்]

சாரதா மகளிர் சங்கம்,சாரதா வித்தியாலயம்,லேடி விலிங்டன் பள்ளி மற்றும் லேடி விலிங்டன் ஆசிரியப்பயிற்சிக்கல்லூரி ஆகிய பல நிறுவனங்களின் வழியே பெண்கல்விக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய இவர் , ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை ‘ A CHILD WIDOW’S STORY’ என்ற தலைப்பில் மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; ‘சேவைக்கு ஒரு சகோதரி’என்ற பெயருடன் எழுத்தாளர் அநுத்தமா அதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
[உண்மையில் என்னுடைய நாவல் எழுதும்போது சிஸ்டர் பற்றிய அந்த வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம்-அல்லயன்ஸ் வெளியீடு-கிடைக்காமல் நான் தேடிக்கொண்டிருந்தபோது நம் குழுமநண்பரும் பெங்களூர்வாசியுமான திரு தேவராஜ்தான் அதை எனக்கு அனுப்பி உதவினார்]

இன்னும் ஒன்று, பல தலைமுறைகளாக செவிவழிப்பாடலாக வழங்கி வருவதும்,சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் தீரத்தை முதன்மைப்படுத்துவதுமான ’சாவித்திரி பாடம்’என்னும் சிறு நூல், பொதுவாகக் கணவனின் ஆயுள்நீட்சிக்காகப் பாடப்படுவது. இந்தக்கதைப்பாடலைத்- தான் நடத்திய விடுதியில் தங்கிப்படித்த இளம் விதவைப் பெண்களைப் பாட வைத்து ஒரு சமூகப்புரட்சியை நிகழ்த்தியதோடு அந்தச்சிறு நூலைத் தானே ப‌திப்பித்தும் இருக்கிறார் சகோதரி சுப்புலட்சுமி. அதை எனக்கு அனுப்பி உதவியவர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் அவர்கள்.

முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் சமகாலத்தைச் சேர்ந்தவராயினும் சிஸ்டர் அவர்கள் பற்றியும் அவரது பணிகளின் மகத்துவங்கள் பற்றியும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருப்பதன் காரணம், அவர் [ பாரதி போல சாதி கடந்தவராக இருந்தாலும்] , சாதிச்சிமிழுக்குள் வைத்து மட்டுமே அவர் பார்க்கப்படுவதாகக் கூட இருக்கலாம். காலத்தின் குரல் என்று இருபதாம் நூற்றாண்டின் முன்னோடிப்பெண்கள் பட்டியலிடப்படுகையில், அவர்களின் செயல்பாடுகள் நிகழ்த்துகலையாக நாடகமாக ஆக்கப்படுகையில் இவரது பெயர் இடம் பெறாமல் போனதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.இவர் நடத்தி வந்த விதவையர் விடுதியில் அந்தண இனப்பெண்களே பெரும்பாலும் இருந்தனர் என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், என்ன செய்வது? குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் அந்த சாதிப்பெண்களைத்தான் பாலிய விவாகமும் அதன் உடனிகழ்வான விதவைநிலையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி வந்தன. ஆசாரம் என்ற பெயரில்- அந்த ஒரு அற்பக்காரணத்துக்காகப்போய் அவர்களின் கல்வி தடைப்படலாகாது என்ற காரணத்தாலேயே அவர்களுக்கென்று பிரத்தியேகமான விடுதிகள் நடத்த அவர் முற்பட்டிருக்கக்கூடும். மற்றபடி அவருக்கு சாதி சார்ந்த மேலாதிக்க உணர்வுகள் இருந்ததாகத் தெரியவில்லை

ஐஸ் ஹவுஸ் விடுதி நடத்தி வந்தபோது அருகிலிருந்த மீனவர் குப்பங்களுக்குச் சென்று அந்தக்குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பத்தையும் அவர் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

எம் ஏ சுசீலா

பி கு; என் தாய், சிஸ்டரின் நிழலில் வளர்ந்து ஆளானவர்.

*

அன்புள்ள சுசீலா,

உங்கள் நூலில் அந்தக் கதாபாத்திரத்தை கவனித்திருந்தேன். இந்த விவாதம் வந்தபின் நான் சென்று விரிவாகவே சுப்புலட்சுமியின் சேவைகளை பார்த்தேன். அவர் தன்னலமில்லாது சேவைசெய்தவர், ஆகவே ஒரு அரிய ஆளுமை என்பதில் ஐயமில்லை.

ஆனால் அவருக்கு தமிழ்ச்சமூகம் வைக்கவேண்டிய சிலைகளின் சிறிய பட்டியலில் இடமில்லை என்றே நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் மதத்திற்குள் சேவை செய்தவர்களை பொதுச்சமூகம் தங்களவர் என எண்ணவேண்டியதில்லை. அவ்வாறு கொண்டாடுவதாக இருந்தால் கிறித்தவத்துறவியரும் கன்னியருமென பலரைச் சொல்லவேண்டியிருக்கும். இஸ்லாமிய யத்தீம்கானாக்களை நிறுவியபலரைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும். அப்பட்டியல் மிகப்பெரியது. அவர்களை அந்தந்த சாதியோ மதமோ கொண்டாடுவதே சரியானது.

ஒரு சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமையவேண்டியவர்கள் சாதி மத எல்லைகளை கடக்கும் மனவிரிவு கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக சேவைத்தளங்களில் இது முக்கியமான அளவுகோல். காலம்கடந்து நிற்கும் விழுமியங்களை கொண்டவர்கள், காலம் கடந்து நிற்கும் சாதனைகளைச் செய்தவர்கள் மட்டுமே முன்னுதாரண முதல்வடிவங்களாக நீடிக்கவேண்டும். சுப்புலட்சுமி பிராமண சாதிக்காக உழைத்த தன்னலமற்ற ஒரு பெண்மணி, அவ்வளவுதான்.

ஜெ