அன்புள்ள ஜெமோ
கடவுளின் மைந்தன் கவிதை வாசித்தேன். நீங்கள் கவிதைகளை குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் உணர்ச்சிகரமான அழகிய கவிதைகள் அவை. இந்தக்கவிதையும் நன்றாகவே இருந்தது.
நீங்கள் கிறிஸ்தவம் பற்றிப்பேசிக்கொண்டிருப்பது ஒரு அரசியல் சமநிலைக்காகத்தான் என்பதே என்னுடைய நினைப்பாக இருந்தது. இந்துமதம் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். இந்தக்கவிதையின் உணர்ச்சி உண்மையாக இருந்தது
ஜான் பிரின்ஸ்
அன்புள்ள பிரின்ஸ்,
1987ல் நான் எழுதவந்த காலத்தில் பூமியின் முத்திரைகள் என்னும் கதை வெளிவந்தது. என் முதல் நாவல் ரப்பர் தொடர்ந்து வந்தது. அன்று முதல் இன்றுவரை என்னுடைய படைப்புகளில் கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது முதன்மையான உள்ளடக்கம். எந்த விவாதத்திற்காகவும் அது சேர்க்கப்படவில்லை. பின் தொடரும் நிழலின் குரலில் கிறிஸ்து வரும் பகுதி என் எழுத்தின் உச்சகணங்களில் ஒன்று.
நான் மிக அணுக்கமாக கிறிஸ்துவை அறிந்திருக்கிறேன் என்று சொல்ல எனக்கு தயக்கமில்லை. கிறிஸ்து இன்றி எனக்கு ஆன்மீகம் முழுமை கூடவில்லை. கிருஷ்ணனை நிரப்பும் ஒன்றாகவே கிறிஸ்து எனக்கு இருக்கிறார். விளக்கமுடியாத ஓர் இருப்பு. ஓர் அறிதல். ஒரு முழுமைநிலை, அவ்வளவே சொல்லமுடியும்
சமநிலைக்காக என்றால் இதை நான் இஸ்லாம் பற்றிச் சொல்லியிருக்கலாம் அல்லவா? இஸ்லாமிய வழிபாட்டு முறைமேல் ஒரு இந்து கொள்ளவேண்டிய மதிப்பு எனக்குண்டு. மிக அபூர்வமாக தொலைதூரத்தில் கேட்ட அல்லாஹூ அக்பர் என்னும் அழைப்பு ஆழ்ந்த உள்ளக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. தக்கலையிலும், ஏர்வாடியிலும், நாகூரிலும் உள்ள தர்க்காக்களில் ஓர் அக இசைவை அடைந்துள்ளேன். ஆனால் ஒரு மசூதியிலும் தொழுகை செய்யவேண்டுமென எண்ணியதில்லை. அது என்னால் முடியாதென்றே உணர்கிறேன்.
அதேசமயம் நான் சென்ற எந்த கிறித்தவ தேவாலயத்திலும் ஜெபம் செய்யாமல் வந்ததில்லை. ஏனென்றால் தேவாலயங்களில் நான் சொல்வதைக் கேட்க மறுபக்கம் ஒரு தரப்பு இருப்பதை உறுதியாக உணர்கிறேன். என் நண்பர்களான பல போதகர்கள் நான்கோரியதற்கு ஏற்ப எனக்கான ஜெபங்களைச் செய்திருக்கிறார்கள். சங்கடமான நேரங்களில் மிகச்சிறந்த தருணங்களை எனக்கு அளித்திருக்கிறார்கள். பைபிள் வாசிக்காத நாட்களே என் வாழ்க்கையில் குறைவு.
இளமை முதலே நான் வேண்டுதல்கள், பூசைகள் செய்வதில்லை. ஆனால் இயல்பாக சில பிரார்த்தனைகள் என்னுள் ஓடும். இப்போது யோசித்தால் அவை பெரும்பாலும் என் நண்பர்களுக்காக. பல ஆண்டுகளாக எனக்கு எந்த வாழ்க்கைப்பிரச்சினைகளும் இருந்ததில்லை.இன்று ஒரு சர்ச்சுக்குப்போனேன், எர்ணாகுளத்தில். இயல்பாக என் உள்ளத்தில் எழுந்தது நோயுற்றிருக்கும் ஷண்முகவேல் குணமடையவேண்டும் என்ற எண்ணம்தான்
சமீபகாலமாக என் மனைவி குழந்தைகளுக்கான வேண்டுதல் என்னுள் எழுகிறது. இது சுயநலமா என்றால் ஆம் என்றே சொல்வேன். நான் கொண்ட தத்துவ நம்பிக்கை அதை பயனற்றது என்றே சொல்லும். ஆனாலும் அப்படி வேண்டிக்கொள்வது ஒரு நிறைவை, அல்லது விலகிக்கொள்ளும் விடுதலையை அளிக்கிறது.
அத்துடன் ஒரு அந்தரங்கமான வேண்டுதல், அது எனக்கு இனியுள்ள இருப்பைப்பற்றி. இந்தக்கொந்தளிப்புகள் சமநிலையழிவுகள், அலைக்கழிப்புகள் அழிந்த ஒரு நிலைக்கான விழைவு அது. குறைந்தபட்சம் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பெருந்துன்பம் அளிப்பவனாக ஆகாமல் பறவை போல இயல்பாக இல்லாமலாவதைப்பற்றியது. அதை கிறிஸ்து கேட்டிருப்பார் என நினைக்கிறேன்.
எந்த ஐயமும் தேவையில்லை, என் இந்துமதம், எனது அத்வைதம், கிறிஸ்துவும் இணைந்த ஒன்றே.
ஜெ