அன்புள்ள ஜெயமோகன்,
தங்களுடைய “கடவுளின் மைந்தன்” கவிதை 2009 கிறிஸ்துமஸ் அன்று முதலில் பிரசுரிக்கப் பட்டதாக இந்த மீள் பதிவில் குறிப்பிருந்தது. அக்கவிதையை விட சிறந்த கிறிஸ்துமஸ் நற்செய்தி நான் வாசித்தது கிடையாது. பல வருடங்களுக்கு முன் ஸர்வபள்ளி ராதாகிரிஷ்ணனின் “Recovery of Faith” படித்த போது அதில் அவர் உங்கள் கவிதையின் கருத்தை ஒத்து ஒரு கருத்தை முன் வைத்திருப்பார்.
“An avatara or incarnation could be of no use to mankind if he were not as other men are, learning as other men do through trial and suffering. If he were God, it would be impossible for us to imitate him. He must be a man like ourselves who has fought and failed and fought again”. “Take for example the story of Rama. Valmiki, the poet, makes him say that he is only a man, the son of Dasaratha, a man who, through suffering, obtained the divine status.” [“atmanam manusam manye ramam dasarathmajam]
அந்த வரிகளை நான் அடிக் கோடிட்டு வைத்தேன் என் புத்தகத்தில். நான் “வியாசர் விருந்தை” படித்த அளவு விவிலியத்தைப் படித்ததில்லை ஆயினும் என்னைக் கவர்ந்த இடங்கள் கிறிஸ்துவை மனிதனாக காணும் தருணங்கள். நேரப் போகும் பயங்கரத்தினின்று தன்னை விடுவிக்கும் படி அவர் கெத்ஸமேனில் ஜெபிக்கும் தருணம், சிலுவையில் ‘என்னை கை விட்டீரோ’ என்ற கையறு நிலை கதறல், எந்தப் பெற்றோரை “நான் என் தந்தையின் வேலையில் இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்’ என்று விரட்டினாரோ பின் அந்த தாயின் நிலை குறித்து உயிர் போகும் நிலையிலும் நினைத்து “இதோ உணக்கு ஒரு மகன்” என்று சொல்வது ஆகியன மிக நெகிழ்வான தருணங்கள்.
பஷீரின் ராமாயணம் குறித்த பதிவில் நீங்கள் ராமனை மனிதனாக பார்க்கும் மரபுகள் பற்றி சுட்டிவிட்டு அந்த சர்ச்சையினை உங்கள் கோணத்தில் அணுகி சில கருத்துகளை முன் வைக்கின்றீர்கள். “இந்துமதம் கீழான நிலையில் நிற்கிறது அதை இஸ்லாம் கிறித்தவம் போல மேம்படுத்தவேண்டும் என நான் எண்ணவில்லை. எனக்கு இந்து மரபின் பன்மைத்துவத்தில், அடிப்படையான விவாதத்தன்மையில், தத்துவச்செழுமையில் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இந்துமதம் நின்றிருக்கும் இடத்துக்கு அனைத்து மதங்களும் வரவேண்டும் என்றே நினைக்கிறேன்.’”
அந்தக் குறிப்பை பற்றி விவாதிப்பதற்கு முன் இரண்டு பதிவுகளுக்கும் பொதுவில் இருக்கும் ஒரு புத்தகம் பற்றி சில வார்த்தைகள். Philip Pullman என்பவர் எழுதிய “Good man Jesus. Scoundrel Christ” உங்கள் கவிதையின் கருவின் சாயல் கொண்டது. கடல் படத்தின் நாயகன் தன் கிறிஸ்துவை நிறுவன கிறித்தவத்திற்கு வெளியே கண்டு கொண்டான் என்று நீங்கள் எழுதியதாக நினைவு. நிறுவன கிறித்தவம் மீது உங்களுக்குள்ள தீவிரமான விமர்சனங்கள் உங்கள் எழுத்துகளைப் படிக்கும் யாவரும் அறிந்துக் கொள்ளக் கூடியதே. புல்மேன் நிறுவனமயமான கிறித்துவத் திருச்சபையை தயை தாட்சயன்மின்றி அங்கதத்தின் வாயிலாக கிழித்துத் தோரணம் கட்டியிருப்பார் அந்த நூலில். அந்த கருத்தியலுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு மேற்கத்திய சமூகத்தில்.
கிறித்தவத்திற்குள் தத்துவ விவாதங்கள் இதோ இன்று கூட அமெரிக்காவிலும் மற்ற மேற்கத்திய சமூகங்களிலும் நடக்கிறது. 15-ஆம், 18-ஆம் நூற்றாண்டு கிறித்தவம் மற்றும் புனிதப் போர்களை முன்னெடுத்த கிறித்தவம் பற்றிய வரலாற்றுக் கண்ணாடி கொண்டே இன்றைய கிறித்தவத்தை மதிப்பிடுவது தவறு. இஸ்லாமிய சமூகங்களிலும் பெரும் எழுச்சிகள் நடபெறுகின்றன உலகெங்கிலும். இஸ்லாமிய நாடுகள் ஏன் இந்தியா போன்றோ அமெரிக்கா போன்றோ பன்மை சமூக நிலைக்கு போகவில்லை என்பதை அவர்களின் மத கோட்பாடுகளை மட்டுமே கொண்டு பார்ப்பது தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும். இஸ்லாமியா நாடுகளின் எண்ணை வளம் அது உருவாக்கிய உலக அரசியல், அதை தொடர்ந்த உலகளாவிய சதுரங்க விளையாட்டு என்று ஒரு மிக சிக்கலான பின்னனையை நாம் (நான் உட்பட) பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை.
சிறு பான்மை சமூகங்கள் எப்போதும் தற்காப்பு உணர்ச்சியை அதிகம் கொண்டவை. தன் மரபுகள், தன் விழுமியங்கள் நீர்த்துப் போய் விடுமோ என்ற அச்சம் ஒரு வித பணையக் கைதியின் மனப் பாங்கை கொடுக்கும். அரசியல் அதிகார பீடத்திலிருந்து வீழ்ந்த இந்து சமூகம் எப்படி தன்னை fossilize செய்து கொண்டது என்பதை இங்கே நாம் ஒப்பு நோக்க வேண்டும். பின்னர் சுதந்திர போராட்டம் அச்சமூகத்தை முன்னிலைப் படுத்தவும் அது தன்னையே கேள்வி கேட்டு சீரமைத்துக் கொள்ள வழி வகுத்தது. இன்று மிக மேன்மையான பன்மை சமூகமான அமெரிக்காவில் சிறு பான்மையினரான இந்துக்களில் காணப் படும் ஒரு தற்காப்பு உணர்ச்சியும் அது தோற்றுவிக்கும் சில விளைவுகளையும் நாம் கவனத்தில் கொண்டால் இந்திய சிறு பான்மையினர் குறித்த விமர்சனங்களுக்கு வேறொரு கோணம் கிடைக்கும்.
கிறித்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கிறித்தவம் பற்றி மிகத் தீவிரமான எதிர் வினைகளும், விமர்சனங்களும் மட்டுமல்ல பகடிகளும் சர்வ சகஜம். சில பகடிகள் விரசத்தின் உச்சிக்கே செல்லும். அதை இங்கே எழுதி உங்கள் தளத்திற்கு பிரச்சினையுண்டாக்க விரும்பவில்லை. பெரும்பான்மையாக இருப்பது ஒரு குழுவிற்கு சவுகரியமான பலத்தை கொடுக்கும். அந்த பலம் அக்குழு தன்னையே சுய விமர்சனம் செய்வதற்கும் ஏன் கேலி செய்து கொள்ளக் கூட ஒரு வலுவான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.
உங்கள் வார்த்தைகளில் துரதிர்ஷ்டவசமாக தான் சார்ந்திருக்கும் மதம் பற்றி ஒரு மிதமிஞ்சிய கர்வம் தொனிக்கிறது. மேன்மைப் படுத்துவதற்கு இடமில்லாத எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதே என் எண்ணம். அதுவும் மற்ற மதங்களைப் பற்றியும் அவற்றின் தத்துவ செழுமை குறித்தும் ஒரு எள்ளளலாகவே உள்ளது உங்கள் சொற் தேர்வு. எல்லாவற்றினுக்கும் முத்தாய்ப்பாய் “இந்து மதம் நின்றிருக்கும் இடத்துக்கு அனைத்து மதங்களும் வர வேணும் என்றே நினைக்கிறேன்” என்று கூறுவதைப் படித்த போது எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் “அது எந்த இடம் சேஷ சமுத்திரமா இல்லை தர்ம புரியா இல்லை பாப்பாப்பட்டியா” என்பது தான்.
மீண்டும் மீண்டும் நீங்கள் ஹனுமன் சேனா போன்றவை போலி மத சார்பின்மை மற்றும் போலி அறிவு ஜீவிகள் இந்து மதத்தை பாரபட்சத்தோடு நடத்துவதாலேயே அவற்றுக்கான இடம் உருவாக்கப் படுகிறது என்று கூறுகிறீர்கள். இருக்கலாம். விநாயகர் சதுர்த்தியை கிண்டலடித்துவிட்டு ரம்ஜானுக்கு நோன்பு கஞ்சி குடிக்கப் போவதும் கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்லும் நாலாந்தர அரசியல் வாதிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அது மட்டுமா காரணம் ஹனுமான் சேனாவிற்கு? இந்து மஹாசபையும் கோல்வால்கரும் அப்படிப் பட்ட சூழலுக்கு எதிராகவா தோன்றின? உலகம் பார்க்க சூரிய வெளிச்சத்தில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கும் இந்து மரபிற்கும் சம்பந்தமேயில்லையா?
தாசிக்கு மேலாடை எதற்கு என்று கேட்ட கர்ணனின் வழி வந்தவர்கள் தானே கீழ் ஜாதியினர் மேலாடை அணியக் கூடாதென்று சட்டமே போட்டார்கள்? அதுவும் 19-ஆம் நூற்றாண்டில். சக மனிதன் துண்டை தோளில் அணியலாமா இல்லை கக்கத்தில் மடித்து வைத்துக் கொள்ள வேண்டுமா என்று வரையிருத்தது யார்? இதோ 21-ஆம் நூற்றாண்டில் சக மனிதன் சைக்கிளில் ஏறிப் போனாலே சில கிராமங்களில் கலவரம் வெடிக்கும்.
நீங்கள் அடிக்கடி பௌத்த மதத்தின் தத்துவ மரபை சிலாகித்து எழுதுகிறீர்கள். நல்லது. ஆனால் பௌத்தம் தழைத்த எந்த நாடும் இன்று அமைதியோடு இல்லை என்பதோடு அவை இன்று ரத்த பூமியாகவே இருக்கின்றன அதற்கு முக்கிய காரணம் நிறுவனமயமாக்கப் பட்ட பௌத்தமும் புத்த பிக்குகளுமே என்பது தெளிவு.
எல்லா மதங்களிலும் நல்லவையும், கொண்டாட தக்கதும், இன்றைய சமூகத்திற்கு ஒவ்வாததென ஒதுக்க தக்கதும் இருக்கிறது. மத சார்பின்மைக்கு இந்து மதத்தில் பல்லாயிர வருட மரபு இருப்பது உண்மையென்றால் அதை ஒருக் கொள்கையாக இன்று நிறுவுவதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டியதில்லை. நான் அப்படி சொன்னதற்காக அப்படி ஒரு மரபு இந்து மதத்தில் இல்லவே இல்லை என்று கூறியதாக அர்த்தமில்லை.
சமீபத்தில் வேறொரு பதிவில் கிறித்தவ மிஷனரிகள் பல பூர்வ குடிகளின் அழித்தொழிப்பை மேற்கொண்டதாகவும் அதுபற்றி இன்று மேற்கத்திய ஆய்வுகளே தரவுகளை அடுக்குவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மை. அது போல இந்தியாவில், பொது வெளியில், எத்தனை செறிவான ஆய்வுகள் இந்து மத மரபுகள் பற்றிக் கிடைக்கின்றன? அப்படி எழுதப்பட்ட புத்தங்கள் பெரும்பாலும் மார்க்ஸியர்களாலும் பெரியார் போன்ற லும்பன் எதிர்ப்பாளர்களாலும் மட்டுமே என்பது உண்மையில்லையா? கிறித்தவ திருச்சபயின் புனித போர்கள் குறித்து பல்கலைக் கழகங்களில் கறாரான ஆய்வுகள் புத்தகங்களாக வெளி வருகின்றன. நான் பெரியாரை விமர்சித்து எழுதும் போதெல்லாம் ஒரு சில பிராமணர்களாவது உவப்புடன் வந்து அதற்கு ‘லைக்’ போட்டுவிட்டு இந்தியாவில் தீண்டாமை என்ற ஒன்றே இல்லாதது போல் எழுதி விட்டு செல்வர்.
பெர்லின் நகரில் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது எனக்குத் தோன்றியது இது தான். எல்லா தேசங்களுக்கும், எல்லா கலாசாரத்திலும் கறுப்புப் பக்கங்களுண்டு வரலாற்றில் அவை நேர்மையோடும், ஆணித்தரத்தோடும் எதிர் கொள்ளப் பட வேண்டும். அப்படி செய்வதில் அருங்காட்சியகங்களுக்கு அளப்பரிய பங்குண்டு. இங்கே அமெரிக்காவில் எத்தனையோ அருமையான புத்தகங்களுண்டு இங்கே நிலவிய அடிமை முறை மற்றும் வெள்ளைக்கார எதேச்சாதிகாரம் பற்றி ஆனால் இன்றும் அச்சூழலைப் பற்றி பெர்லின் நகரில் நாஜிக் காலம் பற்றி இருக்கும் அருங்காட்சியகங்கள் போல் இல்லை. இது முக்கியமான குறை. அது இல்லாததாலேயே பல வெள்ளைக்காரர்களுக்கு அந்தக் கால கட்டம் பற்றி ஆழ்ந்த புரிதல் இல்லை. அது போல் இந்தியாவிலும் சில அருங்காட்சியகங்கள் இல்லாதது ஒரு குறை. ஒன்று, சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு செறிவான ஆய்வு கூடம் மற்றும் அருங்காட்சியகம் அத்தியாவசியம், கூடவே காலனியாதிக்கம் எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். அது போலவே தீண்டாமையின் பல கூறுகள் பற்றி ஒரு அருங்காட்சியகம் அத்தியாவசியம்.
அம்பேத்கர் கேரளம் வந்த போது (அல்லது ஏதோ ஒரு தெற்கு மாநிலம் என்று நினைக்கிறேன்) அவரே ஆச்சர்யப் பட்டது அங்கே தீண்டாமையை விட கொடிய பார்த்தாலே பாவம் என்ற நிலை இருந்தது.
இந்த இமெயில் ஒரு தீர்க்கமான ஆய்வோ அல்லது செறிவான தொகுப்போ அல்ல. ஒரு மாற்றுக் கருத்தின் ஒரு பகுதியை எடுத்து வைக்கும் ஒரு சின்ன முயற்சி அவ்வளவே.
அன்புடன்,
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்,
இவ்விஷயங்களைப்பற்றி நான் மிகவிரிவாகவே எழுதியிருக்கிறேன்
மதம் எப்போதுமே பல்வேறு அன்றாட வாழ்க்கைச்சடங்குகளை ,ஆசாரங்களை தன்னுள் இழுத்து தொகுத்துக்கொண்டிருக்கும். அவ்வப்போது காலகட்டத்திற்குரிய சமூக அமைப்பை உருவாக்க மதம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அவை மதம் அல்ல. மதம் என்பது அதன் மையமாகத் தொகுக்கப்பட்டிருக்கும் தரிசனம், தத்துவம், மற்றும் குறியீடுகள்தான்.
சாதி,தீண்டாமை போன்றவை இந்துமதத்தால் உருவாக்கப்பட்டவையோ நிலைநிறுத்தப்பட்டவையோ அல்ல. இந்துமதம் நிலவும் அனைத்து இடங்களிலும் சீராக இவையும் நிலைநிறுத்தப்பட்டிருந்தால்கூட அவ்வாறு சொல்லலாம். இந்துமதம் நிலவும் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் அப்பகுதிக்குரிய ஆசாரங்கள் ,சடங்குகள், சமூக அமைப்புகளாகவே சாதி தீண்டாமை முதலியவை உள்ளன. அவற்றை நிலைநிறுத்த சென்றகால நிலப்பிரபுத்துவ முறை இந்துமதத்தை பயன்படுத்திக்கொண்டது.
[இந்தக்கோணத்தில் அணுகுவதனால்தான் மத்தியகாலகட்ட கத்தோலிக்கர்களின் கொடூரமான சமூகச்சுரண்டல் அமைப்புகளை நான் கிறிஸ்தவமாக பார்ப்பதில்லை. பழங்குடிப்பண்பாடுகளை ஒடுக்கிய மிஷனரிகளை கிறிஸ்தவத்தின் நடைமுறைகள் என எடுத்துக்கொள்வதில்லை]
ஓர் இந்து இந்துமதத்தில் சென்றகாலகட்டத்தில் வந்தமைந்த மூடநம்பிக்கைகளை களையவும், அதன் வழியாக உருவான சமூக அடிமைமுறைகளை கண்டித்து உதறவும் முயன்றாகவேண்டும். அதன் பெயரால் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும், அப்போதுதான் அவன் உண்மையான இந்து. [அந்த அர்த்தத்தில்தான் காந்தி உண்மையான இந்து என எண்ணுகிறேன்.]
இந்தத்தளத்தில் பலமுறை எழுதியது போல ஓர் இந்து சாதிக்கொடுமைகளுக்காகவும் ஒரு கிறிஸ்தவன் மிஷனரிகள் செய்த மானுட அழிவுகளுக்காகவும் ஒரு முஸ்லீம் அதன் படையெடுப்பாளர்கள் நிகழ்த்திய மானுட அழிப்புக்காகவும் பண்பாட்டுஒறுப்புக்காகவும் நாணியாகவேண்டும். அவற்றை துறந்து முன்னகர்ந்தாகவேண்டும்.அப்போதுதான் அவனுடைய மதநம்பிக்கை என்பது ஏற்கத்தக்கது. இல்லையேல் அது ஒரு அடிமைநிலை மட்டுமே.
அதேசமயம் இந்துமதத்தின் பெரால் நிகழ்ந்த மேலேசொன்ன சமூகத்தீங்குகளை களையவும் இந்துமதமே அடித்தளம் அமைத்தது. இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த பெரும் சீர்திருத்தவாதிகள் பெரும்பாலும் அத்வைதம் போன்று இந்துமதத்தின் கொள்கைகளை ஆதாரமாகக் காட்டியவர்கள்தான்.அவர்களுக்கான சமத்துவக்கொள்கைகள் அனைத்தும் இந்து மதத்திலேயே இருந்தன. இந்துமதத்தின் நெகிழ்வுத்தன்மை அதை அனுமதித்தது.
இந்துமதத்தில் சமூக ஒழுங்குகளை, ஆசாரங்களை, சடங்குகளை முன்வைப்பவை எவையும் மாறாத முதல்நூல்கள் அல்ல. மெய்த்தரிசனங்களை முன்வைப்பவை மட்டுமே முதல்நூல்கள். சுருதி, ஸ்மிருதி என்னும் பிரிவினையை அதன் மிகச்சாதகமான அம்சமாகக் காண்கிறேன். இந்த வேறுபாடு இருக்கும்வரை இந்துமதம் அதன் பொருத்தமில்லாத எந்த சடங்குமுறையையும் ஆசாரத்தையும் தூக்கிவீசிவிட்டு முன்னால் செல்லமுடியும்.
ஓர் அத்வைதி இந்துமதத்தின் அனைத்து ஆசாரங்களையும் துறந்து முன்னகர எப்போதும் இடமிருந்தது. ‘நட்டகல்லை புஷ்பமென்று நாலுபுஷ்பம் சாத்துவதை’ எள்ளி நகையாடவும் ‘பறத்தியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா?’ என அறைகூவவும் இந்த மரபு அனுமதித்தது. சாதி இன்றும் உள்ளது. ஆனால் நாராயணகுருவின் காலடியிலும் அமிர்தானந்தமயியின் காலடியிலும் நம்பூதிரிகள் பணியும் நிலையும் இருந்தது.
இந்துமதத்தில் உள்விவாதத்துக்கும், கிளைகளாக விரிந்து அகல்வதற்கும், அமைப்புகளின் ஆதிக்கமில்லாமல் தனிமனிதனால ஆன்மமீட்பு நோக்கிச்செல்லவும் இடமுள்ளது. இன்றும் அந்த இடம் அழியவில்லை. [இன்று உருவாகிவரும் அரசியல்சார்ந்த அடிப்படைவாதம் அதைப்புரிந்துகொள்ளாமல் அதை இந்துமதத்தின் பலவீனமாக எண்ணி ஒற்றைப்படையான, அமைப்பு அதிகாரம் கொண்ட ஒன்றாக ஆக்க விழைகிறது.நான் நிராகரிப்பது அதையே]
இந்த உள்விவாதம், ஞானிகளின் மரபு தனிக்கிளைகளாக பிரிந்து விரியும் வாய்ப்பு, தனிப்பட்ட ஞானசாதனைக்கான வாய்ப்பு ஆகியவை இருப்பதனால்தான் நான் இந்துமதத்தை ஒருபடி மேலாக எண்ணுகிறேன். ஆகவேதான் இந்துவாக இருக்கிறேன். நீங்கள் கிறித்தவத்தை ஒருபடி மேலாக எண்ணுவதனால்தான் கிறித்தவராக இருக்கிறீர்கள் இல்லையா?
ஜெ