பகுதி இரண்டு : அலையுலகு – 7
நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளை முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும் அருந்தி அர்ஜுனன் எழுந்தான். நிழல் மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்ட காட்டெருதுத்தோல் தூளியில் அவனுக்கு படுக்கை ஒருக்கப்பட்டிருந்தது. அருகே புல் கனலும் புகை எழுந்து பூச்சிகளை அகற்றியது. அவன் படுத்துக் கொண்டபோது நாகர் குலக்குழந்தைகள் அவனைச்சூழ்ந்து நின்று விழி விரித்து நோக்கின
ஒரு சிறு மகவை நோக்கி அவன் புன்னகை புரிந்தான் அது கை நீட்டி சிவந்த வாயில் நீர்வழிய தொடைகளை ஆட்டியபடி அக்கையின் இடையிலிருந்து எம்பியது. ‘அருகே வா’ என்றான் அர்ஜுனன். அவள் அக்குழந்தையை அருகே கொண்டு வர அப்பால் இரண்டு முதியவர்களில் ஒருவர் ’இளவரசே குழந்தைகளை தொட வேண்டியதில்லை’ என்றார் அர்ஜுனன் அவரை திரும்பி நோக்கினான் ’அவர்களின் வாய்நீரும் நகங்களும் உங்களுக்கு நஞ்சு’ என்றார் அர்ஜுனன் திரும்பி அக்குழந்தைகளின் விழிகளை நோக்கினான். அழகிய வெண்ணிறக்கற்கள் போல அவை தெரிந்தன. நடுவே நீல மையவிழிகள் அசைவின்றி நின்றன. இமையா விழிகள் உயிரற்ற பொருளென மாறிவிட்டிருந்தன.
ஒவ்வொரு விழிகளாக நோக்குகையில் அவை கொள்ளும் கூர்மை அவனை அச்சுறச்செய்தது நீள்மூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான். கால்களை நீட்டியபடி நெடுந்தொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணினான் அவ்வெண்ணம் அளித்த ஆறுதலை அவனே வியந்து சற்று புரண்டு படுத்தான். அந்த மரங்களின் வேர்கள் இறங்கிப்போய் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரும் படலமாக ஆன ஆழத்தை நினைத்தான் அவன் விழிகளுக்குள் வேர்களும் பாம்புகளும் என பெரும் நெளிவு வெளி ஒன்று எழுந்தது, ஒவ்வொரு நெளிவையாக தொட்டுச் சென்று எப்போதோ துயிலில் ஆழ்ந்தான்
முழவொலி கொட்ட விழித்துக் கொண்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சில கணங்களுக்குப் பின்புதான் அவன் மேல் ஏறிக் கொண்டது எழுந்து நின்று இடைக்கச்சையை சீர் செய்து சுற்றும் நோக்கினான் அவிழ்ந்த தோல்நாடாவை எடுத்து கூந்தலை பின்னுக்குத்தள்ளி முடிந்து கொண்டான் .காடு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நாகர்களின் புற்றில்லங்களுக்குள் இருந்து மெல்மையான பொன்னிற ஒளி அவற்றின் சிறுவட்ட வாயில் வழியாக தெரிந்தது. இருளில் அது பூம்பொடித் தீற்றல்கள் போல் எழுந்திருந்தது. அங்கு பெண்டிரும் குழந்தைகளும் முதியவர்களும் விரைவு கொண்ட உடல்களுடன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
கர்க்கன் அவன் அருகே வந்து ”இளவரசே தாங்கள் சித்தமாகலாம்” என்றான் அர்ஜுனன் அங்கு நிகழ்ந்தவற்றை விழிகளால் நோக்கி ”அனைவரும் எங்கு செல்கிறார்கள்?” என்றான் /”மூதன்னையரின் ஆலயத்திற்கு. இன்று அங்கு சொல்லீடு கேட்கும் பூசனை நிகழ்கிறது அல்லவா ?”என்றார் கர்க்கர். ”எங்குளது அவ்வாலயம்?” என்றான் அர்ஜுனன். ”மும்முக மலையின் அடியில். அங்குதான் எங்கள் மூதன்னையர் வாழும் ஆழுலகுக்கு செல்லும் ஏழு குகை வாயில்கள் உள்ளன” என்றார் கர்க்கர்.
வானம் இரும்புப் பீப்பாயை அசைத்து வைத்தது போல் ஆழ்ந்த உறுமலை எழுப்பியது .சூழ்ந்திருந்த இலைத்தகடுகள் மிளிர்ந்து அணைந்தன. .”இன்றும் மழை வரும் போலும்” என்றான். “இங்கு அனைத்து இரவுகளிலும் மழை உண்டு” என்று கர்க்கர் சொன்னார் குழந்தைகளை இடையில் தூக்கியபடி பெண்கள் காட்டுக்குள் சென்ற பாதையில் நடந்தனர். மெல்லிய மூச்சுசீறும் குரலில் உரையாடிக் கொண்டனர். கைகளில் சிறிய மூட்டைகளுடன் முதியவர்களும் அவர்களுடன் தொடர்ந்து செல்ல அந்த நிரை நிழலுருவாக காடெனும் நிழல்குவைக்குள் மறைந்தது
”நான் நீராட விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். ”இங்குள்ள ஓடையில் இரவில் எவரும் நீராடுவதில்லை ”என்று கர்க்கர் சொன்னார் .”நீர் மிகவும் குளிர்ந்திருக்கும் .தாங்கள் காலையில் நீராடி இருப்பீர்களல்லவா?” அர்ஜுனன் “மூதன்னையரை நீராடாது சென்று காண்பது என் குடி நெறிகளுக்கு உகந்ததல்ல ”என்றான் .”அவ்வண்ணமே ”என்று தலைவணங்கினார் கர்க்கர். புற்றுகளுக்குள் இருந்து எழுந்த பொன்னொளி அன்றி அப்பகுதியில் விளக்கென ஏதும் இருக்கவில்லை. விலகிச் செல்லும் தோறும் புற்றுகள் பொன்விழிகளைத் திறந்தது போல அத்துளைகள் தெரிந்தன. அவற்றிலிருந்து கண் விலக்கி காட்டை நோக்கியபோது பரு என ஏதுமெஞ்சாத மைக்குழம்பென இருள் தெரிந்தது
பாதையைக் கூர்ந்து நடந்தான் ”இங்கு பாம்புகள் கடிப்பதில்லை ஆனால் நீங்கள் மிதிப்பது அவற்றின் பத்தியை என்றால் தீண்டாமல் விலகிச்செல்ல அவற்றுக்கு நெறியில்லை” என்றார் கர்க்கர்.அர்ஜுனன் தன் இரு கால்களிலுமே கண்களை ஊன்றி அடி மேல் அடி என நடந்தான். மரங்கள் சூழ்ந்த இருளுக்குள் பாறைகள் மேல் அலைசரியும் ஒலியுடன் சிற்றாறு சென்று கொண்டிருந்தது .அதன் நுரைத்தீற்றல்களை இருளுக்குள் தனிச்சிரிப்புகள் என காண முடிந்தது..”இங்கு நீங்கள் நீராடலாம்” என்றார் கர்க்கர்.
அர்ஜுனன் தன் தோலாடைகளை கழற்றி வெற்றுடலுடன் நடந்து நீர் விளிம்பை அடைந்தான் நூற்றுக் கணக்கான பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னி செறிந்து நதியின் அலை விளிம்புக்கு கரை அமைத்திருந்ததைக் கண்டான். காற்றிலாடும் திரைச் சீலையின் கீழ்நுனித் தொங்கல்கள் என நெளிந்து கொண்டிருந்தன அவை. ஒரு கணம் தயங்கியபின் தாவி நீருக்குள் நின்ற பாறை ஒன்றின் மேல் ஏறிக் கொண்டான் பின்பு கால்களை நீட்டி நீரைத்தொட்டான் பனி உருகியதென உடலை நடுங்க வைத்தது நீர். ஒரு கணத் தயக்கத்திற்கு பின் அதில் கை நீட்டி தாவி மூழ்கினான். ஒரு முறை மூழ்கி எழுந்து தலை மயிரைச் சிலுப்பி முடிந்து மீண்டும் மூழ்கியபோதுதான் நீருக்குள் மீன்களுக்கு நிகராக பாம்புடல்களும் நெளிவதைக் கண்டான் .அவன் உடல் மேல் வழுக்கிச் சென்றன நெளிவுகள் .
எழுந்து பாறையில் தொற்றி ஏறி கையில் அள்ளி வந்த மணலால் உடலைத் தேய்த்து மீண்டும் நீரில் இறங்கி துழாவி ஆடினான். பாறையிலிருந்து கரை நோக்கி தாவி வந்து தனது ஆடைகளை ஈர உடல் மேல் அணிந்து கொண்டிருந்தபோது கர்க்கர் புன்னகைத்து ”தாங்கள் அரண்மனையில் வாழ்ந்தவரென்று தோன்றவில்லை இளவரசே” என்றார். ”அரண்மனையிலும் வாழ்ந்திருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான் கர்க்கர் ”நான் காம்பில்யத்தின் அரண்மனையைக் கண்டிருக்கிறேன். அதற்குள் எப்படிமானுடர் வாழ முடியும் என்று எனக்கு புரிந்ததேயில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து ”ஆம், அங்கு மானுடர் வாழ்வதில்லைதான்” என்றான் .“தாங்கள் உணவருந்தலாகாது அங்கே மூதன்னையரின் பூசனை முடிந்து கிடைக்கும் பலியுணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று முறைமை ”என்றார் கர்க்கர் ”ஆம் அவ்வாறே” என்றான் .
அர்ஜுனன் கர்க்கருடன் இருண்ட காட்டுக்குள் சென்ற சிறு பாதையில் நடந்தான் சற்று நேரத்திலேயே புதர்களால் ஆன குகை ஒன்றுக்குள் செல்வது போல் உணர்ந்தான் வானம் அதிர்ந்து ஒளி உள்ளே சிதறியபோதுதான் தன்னைச் சூழ்ந்திருந்த இலைத்தழைப்பின் வடிவைக்காண முடிந்தது. சுழன்று இறங்கி பின்பு மேலேறி மீண்டும் வளைந்து சென்ற அப்பாதையில் முடிவே இன்றி சென்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டான் பல்லாயிரம் முறை அப்பாதைகளில் சென்றிருந்ததாகத் தோன்றியது. எங்கு என வினவிக்கொண்டான் அறியா இளமையிலேயே இத்தகைய பாதையொன்றில் தனித்து உளம் பதைத்து ஓடி இருக்கிறான். அது கனவில். ஆனால் நினைவில் என்று பார்க்கையில் கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடென்ன?
எங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக் கொள்ள துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன ?எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது.. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா? இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா? என்னென்ன எண்ணங்கள்! இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப் பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும். இதன் மறு எல்லையில் உள்ளது இங்கு முடிவாகும் என் ஊழின் ஒரு கணம். குலமகளா நஞ்சா?அர்ஜுனன் புன்னகைத்தான். இவர்களின் குலமகள் நஞ்சு நிறைந்த ஒரு கோப்பை என்கிறார்கள் .வென்றால் இன்றிரவு காதல் கொண்ட பொற்கோப்பையில் நஞ்சருந்துவேன். .தோற்றால் நஞ்சுண்டு அழிவேன்.
தொலைவில் முழவுகளின் ஓசையைக் கேட்கத் தொடங்கினான் மறுகணமே அவனுக்கு பின்னால் இருந்து அந்த ஒலி வந்தது மரங்கள் அவ்வொலியை அவனை சூழப் பரப்பின வானிலிருந்து இலைகளின் வழியாக ஒலி வழிந்தது. மீள மீள ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது அது. முழவொலிகளை கேட்டுக்கொண்டு சென்ற போது வானில் எழுந்த இடிமுழக்கம் அவ்வொலியுடன் இயல்பாக ஒன்று கலந்ததை உணர்ந்தான். மின்னல் எழாது இடி ஓசை மட்டும் எழுந்தது. வியந்தபோது சூழ்ந்திருந்த மொத்தக் காடும் ஒரே கணமென தன்னைக் காட்டி இரு முறை அதிர்ந்து இருளாகியது .கண்களுக்குள் வெடித்த ஒளி நீலமாகி செம்மையாகி பொன்னிறமாகி சிறு குமிழ்களாக சிதறி சுருண்டு பரந்து அமைந்தது.
இலைத் தழைப்புகளுக்கு அப்பால் பந்தங்களின் ஒளியைக் காணத் தொடங்கினான் குருதி தீட்டிய வேல்நுனிகள் போல் இலைகளை கண்டான். நிழல்கள் எழுந்து இருளாகி நின்ற மரங்களின் மேல் அசைந்தன. அணுக அணுக இலைப்பரப்புகளின் பளபளப்பை, பாதியுடல் ஒளி கொண்டு நின்ற அடிமரங்களை, ஒளி வழிந்த பாறை வளைவுகளைக் கண்டான். பின்பு காடு பின்னகர்ந்து நாணல் வெளியொன்று அவர்களுக்குமுன் விரிந்தது. வானம் மின்னலொன்றால் கிழிபட்ட ஒளியில் அப்புல்வெளிக்கு அப்பால் மும்முகப்பெருமலை எழுந்து தெரிவதை அவன் கண்டான்
“கர்க்கர் இப்புல்வெளி பாம்புகளின் ஈற்றறை எனப்படுகிறது. பகலில் பல்லாயிரம் பாம்புகள் இங்கு நெளிவதைக் காண முடியும். ஒவ்வொரு புல் நுனிக்கும் ஐந்து வீதம் இங்கு பாம்புக் குட்டிகள் விரிகின்றன என்பார்கள்” என்றார் .பாம்பு என்னும் சொல்லை செவிக்கு முன்னரே கால்கள் அறியும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகைத்தான் .கர்க்கர் ”இதை நான் கடந்து செல்கிறேன். என் கால்கள் படும் மண்ணில் மட்டும் தங்கள் கால்கள் பட வேண்டும் .விழிகூர்ந்து வருக” என்றபடி தன் கைக்கோலுடன் முன்னால் நடந்தார். அவர் காலடி எழுந்ததுமே அங்கே தன் காலை வைத்து அர்ஜுனன் தொடர்ந்து சென்றான்.
மின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களைக் கண்டான் அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை ,பூசனம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு ,புளித்த கோதுமை மாவு ….பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.
நாணல் வெளிக்கு அப்பால் பந்தங்கள் காட்டுத்தீ போல் எரிவதைக் கண்டான் அவ்வொளியை சூழ்ந்து நின்ற மனித உடல்களில் நிழல் உருவங்கள் எழுந்து மரக்கிளைகள் செறிந்த இலைத்திரைகள் மேல் ஆடின. அவர்களின் மூதாதையர் சூழ்ந்து பேருருவம் கொண்டு நடமிடுவது போல அணுக அணுக மூச்சொலி என எழுந்த அவர்களின் கூர்குரல்கள் முட்புதர்களை கடந்து செல்லும் காற்று போல பல்லாயிரம் கிழிதல்களாக ஒலித்ததை கேட்டான். அவன் வருவதை அங்கு எவரோ அறிவித்தனர் .பெருமுழவம் ஒன்று பிடியானை என ஒலி எழுப்பத் தொடங்கியது. சேர்ந்து நடமிடுவது போல் குறுமுழவுகள் வந்து இணைந்து கொண்டன. அவ்வோசைக்கு இயைப அங்கிருந்தவர்களின் உடல்கள் இணைந்து அலையாகி அசைந்தன
அவன் அணுகியபோது ஒற்றைப்பெருங்குரலில் அவனை வரவேற்று கூச்சல் எழுப்பினர். அர்ஜுனனை நோக்கி வந்த நான்கு முதுமகள்கள் கைகளில் அனல் சட்டிகளை வைத்திருந்தனர். அதிலிருந்த புகையை அவனை சுற்றிப் பரப்பினர் அதில் சிவமூலிகை போடப்பட்டிருக்குமோ என அவன் ஐயுற்றான். ஆனால் அதற்குரிய மணம் ஏதும் தென்படவில்லை, அனல் சட்டிகளை ஏழுமுறை அவனைச் சுற்றி உழிந்தபின் முதுமகள் ”வருக” என்றாள் .நடந்து அக்கூட்டத்தை அணுகி உடல்களால் ஆன வேலி மெல்ல விலகி விட்ட வழியினூடாக உள்ளே சென்றபோது தன் உடலெங்கும் மெல்லிய மிதப்பு ஒன்று ஏற்படுவதை அர்ஜுனன் உணர்ந்தான். ஒழுகிச்செல்லும் ஆற்றில் மணல் பறிந்து விலகும் கால்களுடன் நிற்பது போல் இருந்தது. விழாமல் இருக்க உடலை சற்று முன்னால் வளைத்து கைகளை விரித்துக் கொண்டான்.
மனித உடல்களால் ஆன அந்த வளையத்திற்கு நடுவே கற்களை அடுக்கி உருவாக்கிய வட்ட வடிவமான நெருப்புக்குழி இருந்தது. அதில் அரக்கும் விலங்குக் கொழுப்பும் விறகுகளுடன் போடப்பட்டு ஆளுயரத்திற்கு நெருப்பு எழுந்து கொழுந்து விட்டு ஆடியது. நெருப்புக் குழியிலிருந்து நிரையாக நூறு பந்தங்கள் மூங்கில் கழிகளில் நாட்டப்பட்டு ஊன்கொழுப்பு உருகி எரிய, ஊடே நீலச்சுடர் வெடிக்க தழலாடிக் கொண்டிருந்தன, அப்பந்தங்களுக்கு இருபக்கமும் பிரிக்கப்பட்ட இலைகளில் ஊனும் கிழங்குகளும் கனிகளும் பரப்பப்பட்டிருந்தன.
பந்தநிரை சென்றுசேர்ந்த மறுமுனையில் மேலிருந்து வளைந்திறங்கி வந்த பாறைப்பரப்பில் மூன்று கரிய குகைகள் திறந்திருந்தன. ஒரு மனிதர் தவழ்ந்து உள்ளே செல்லுமளவுக்கே பெரியவை அவன் புருவங்களை தூக்கி மேலும் கூர்ந்தபோது அப்பாறைகளுக்கு மேல் முதல் மடம்பில் மீண்டும் இரு குகைகளைப்பார்த்தான். அடுத்த மடம்பில் மீண்டும் இரு குகைகள் தெரிந்தன. முதுமகள்களில் ஒருத்தி ”வருக இளவரசே” என்று அழைத்துச் சென்று அந்த எரிகுளம் அருகே நிறுத்தினாள் .அங்கிருந்த பிறிதொரு முதுமகள் எரி குளத்திலிருந்து கொழுந்து எரியும் விறகுக் கொள்ளி ஒன்றை எடுத்து அவனை மும்முறை உழிந்து அதைச்சுற்றி வரும்படி கைகாட்டினான்
கூப்பிய கைகளுடன் அர்ஜுனன் அவ்வெரிகுளத்தை மும்முறை சுற்றி வந்தான். அவன் இடையிலிருந்த தோலாடையை முதுமகள் கழற்றி எரிகுளத்து நெருப்பு தழலில் எரிந்தாள். ஒருத்தி அவன் தலையில் கட்டியிருந்த தோல் நாடாவை அவிழ்த்து தீயிலிட்டாள் .அவன் உடலில் இருந்த அனைத்து அணிகலன்களையும் அறுத்து நெருப்பிலிட்டனர். கையிலிருந்த கணையாழியை ஒருத்தி கழற்றியபோது அறியாது ஒருகணம் அர்ஜுனன் கையை பின்னிழுத்தான் .அவள் விழி தூக்கி ”உம்’ என்று ஒலி எழுப்பினான் .கணையாழி எளிதில் கழன்று வரவில்லை அவள் தன் இடையிலிருந்த குறுவாளொன்றை எடுத்து அதை வெட்டி விலக்கி நெருப்பிலிட்டாள்
வெற்றுடலுடன் பந்தங்கள் வழியாக நடந்து அர்ஜுனன் அந்த குகைகளுக்கு அருகே சென்றான் அங்கே தரையில் போடப்பட்ட மணைப்பலகைகளின் மேல் ஏழு முதுமகள்கள அமர்ந்திருந்தனர் .அவர்களை நாகர்களின் குடியில் முன்பு பார்த்ததில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். விழுதுகளென தரை தொட்ட பெரிய சடைத்திரிகள். உலர்ந்து பாம்புச்செதில் கொண்டிருந்த மெல்லிய உடல்கள். இமையா பழுத்த விழிகள். கால்களை மடித்து முழங்கால் மடிப்பின் மேல் கைகளை வைத்து யோக அமர்வில் எழுவரும் அசையாதிருந்தனர்.
அவர்களுக்கு முன் போடப்பட்டிருந்த மரப்பீடத்தில் கௌரவ்யர் அமர்ந்திருந்தார். பொன்னாலான நாகபட முடி மேல் பந்தங்களின் ஒளி செம்புள்ளிகளாக அசைந்தது. அவருக்குப்பின்னால் அக்குடியின் பெண்கள் நின்றனர். மறுபக்கம் குடிமூத்தோர் கைக்கோல்களுடன் நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஏழன்னையருக்கு நேர்முன்பில் போடப்பட்டிருந்த பெரிய மரப்பீடத்தில் அர்ஜுனனை முதுமகள் அமரச்செய்தாள் அவன் கையை மடிமீது விரிக்க வைத்து அதில் ஓர் இலையை வைத்தாள் பிறிதொரு முதுமகள் சிறிய கொப்பரைப் பேழை ஒன்றைக் கொண்டு வந்தாள் .அதை திறந்து அதிலிருந்து மூன்று சிறிய வெண்ணிற உருளைகளை எடுத்து அதன் மேல் வைத்தனர்.
அர்ஜுனன் சில கணங்களுக்குப்பிறகே அவை பாம்பு முட்டைகள் என்று அறிந்தான் வழக்கமான முட்டைகளைவிட அவை பெரிதாக இருந்தன. அவற்றில் ஒன்று உள்ளிருந்து அழுத்தப்பட்டு சற்று புடைத்து அசைந்தது. புகை மூடிய அவன் சித்தத்தில் அதற்கு பின்னரே அவை அரசப்பெரு நாகத்தின் முட்டைகள் என்பது உறைத்தது .ஓடுவிலக்கி எக்கணமும் வெளிவரும் நிலையில் இருந்தன அவை .கர்க்கர் ஏழன்னையரை நோக்கித் தலைவணங்கி ”அன்னையர் அருளவெண்டும்” என்றார் .சற்று அப்பால் பாறை ஒன்றுக்கு மேல் கட்டப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்து தன் முன் பக்கவாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரு முரசை ஒருவன் அறைந்து கொண்டிருந்தான் .அவ்வொலியில் மலைப்பாறைகள் தோல்பரப்புகளென அதிர்ந்தன. குறு முழவுகளுடன் நாகர்கள் வந்து அன்னையரை சூழ்ந்து கொண்டனர்.
பெரு முரசத்தின் சீரான இழைதாளத்தை குறு முழவுகளின் துடிதாளங்கள்ள் ஊடறுத்தன.ஒரு சொல் பல நூறு துண்டுகளாக்கப்பட்டது. ஒவ்வொரு துண்டும் துடிதுடித்தது .உடல்த்துண்டுகள் அதிர்ந்து எம்பிக் குதித்தன. குமிழிகளென வெடித்து எழுந்தன தாளத்தை விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்ஜுனன் உணர்ந்தான் .அவ்வுணர்வை அறிந்த ஒருவன் அப்பால் நின்று நோக்க தாளம் குருதி கொப்புளங்களாக வெடித்து சிதறி விழுந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தாளத்துடிப்பையும் கை நீட்டி தொட்டுவிடலாம் போலிருந்தது. வெட்டுண்ட சதை விதிர்ப்புகள் .அனலில் விழுந்த புழுவின் உடற் சொடுக்குகள். உருகி விழுந்த அரக்கின் உறைவுகள் .தாளம் அவன் உடலில் பல இடங்களில் தொட்டுச் சென்றது முதுகில் குளிர்ந்த கற்களென. கன்னங்களில் கூரிய அனல் துளிகளென .உள்ளங்கால்களில் பிரம்பு வீச்சுகளென .
அர்ஜுனன் தன் முன் எழுந்த அரவு விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான் ஏழு கல்முகங்கள். அவற்றில் ஏழு வெண்கல் விழிகள். பாம்பின் விழிகளைப் போல பொருளின்மையால் ஆன நோக்கு கொண்ட ஏதுமில்லை .சுட்டுவிரல் தொட்டெடுக்கும் சிறு புழுவின் விழிகளில் கூட இருத்தலின் பெரும் பதைப்பு உள்ளது. யானையின் கண்களில் விலகு என்னும் ஆணை .விண்ணளந்து பறக்கும் கழுகின் கண்களில் மண்ணெனும் விழைவு. முற்றிலும் பொருளின்மை கொண்டவை பாம்பின் விழிகள் .இங்கிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நோக்குபவை. அவை விழிகளே அல்ல, வெண் கூழாங்கற்கள்.
பாம்பு விழிகளால் நோக்குவதில்லை, நோக்குவதற்கு பிறிதொரு புலனை அது கொண்டுள்ளது. ஒவ்வொரு அசைவையும் தன்னுடலால் அது எதிர்கொள்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் உடலால் எதிர்வினையாற்றுகிறது. அந்த நீள்உடல் தான் அதன் விழியா? அவ்வெண்ணங்களே ஓங்கி வெட்டி அறுத்து இரு துண்டாக்கி செல்வது போல் வீரிடல் எழுந்தது. ஏழன்னையரில் இறுதியில் இருந்தவள் எழுந்து இருகைகளையும் விரித்து உடல் துடித்து நின்றாள். அவ்வசைவு தொட்டு எழுந்தது போல அடுத்தவள் எழுந்தாள். எழுவரும் நிரையென எழுந்து கைகளை நீட்டி உடல் விதிர்க்கச்செய்யும் கூரொலியுடன் அலறியபடி உடல் அதிர்ந்து துடிதுடித்தனர். முதுமையில் தளர்ந்த அனைத்து தசைகளும் இழுபட்டு தெறித்து நின்றன. கழுத்துச் சரடுகள் ,புயத்தசைகள், இடைநரம்புகள் உச்ச விசையில் எக்கணமும் அறுந்து துடித்துவிடும்போல் தெரிந்தன.
அர்ஜுனன் அறியாது தன் கையை பின்னிழுக்க இலையிலிருந்த பாம்பு முட்டைகளில் ஒன்று உருண்டது கர்க்கர் கை நீட்டி ”அசையாதே” என்று ஆணையிட்டார். அலறிய முதுமகள்களில் ஒருத்தி கண்ணுக்குத்தெரியாத கையொன்றால் தூக்கி வீசப்பட்டவள் போல் மண்ணில் விழுந்தாள். அவள் உடல் பாம்பு போல் நெளியத்தொடங்கியது. மானுட உடலில் அத்தகைய முழுநெளிவுகள் கூடுமென்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. இரு கைகளையும் அரவுப்படம்போல் நீட்டி தரையில் இருந்து எழுந்து சொடுக்கி திரும்பி அதிர்ந்து பின் வளைந்து சினந்து சீறி முன் நீண்டு புரண்டெழுந்து நெளிந்து சுழன்றாள் ஏழன்னையரும் நிலத்தில் விழுந்து பாம்புகளாகி ஒருவரோடொருவர் பின்னி புரண்டனர். சீறி முத்தமிட்டு வளைந்து விலகினர். முழவோசை கேட்டு திரும்பி வாய் திறந்து சீறினர்.
சற்று நேரத்தில் விழியறிந்த அவர்களின் மானுட உடல்கள் மறைந்து அரவு நெளிவுகள் அன்றி பிறிதெதையும் காண முடியாமல் ஆயிற்று. பீடத்தில் அமர்ந்திருந்த கௌரவ்யர் எழுந்து இருகைகளையும் கூப்பி ”மூதன்னையரே அருள்க ஆணை இடுக” என்றார் அச்சொற்கள் அவர்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. நெளியும் அரவுகளில் ஒன்று பிறிதொன்றின்மேல் எழுந்து பத்தி விரித்து திரும்பி அவர்களை நோக்கியது .ஓங்கி தரையை மும்முறை கொத்தி அது வாழ்த்தியபோது கூடி நின்ற நாகர் குடியினர் கைகூப்பி இணைந்த குரலெழுப்பி நாகங்களை வாழ்த்தினர் .திறந்த இருட் குகைகளுக்குள் அக்குரல்கள் புகுந்து சென்று எங்கோ முழங்குவது போல் அர்ஜுனன் உணர்ந்தான்
அரவுடல்களில் ஒன்று நெளிந்து அவனருகே வந்தது அர்ஜுனன் அவ்விழிகளை நோக்க அவற்றின் மையத்தில் இருந்த ஊசி முனை ஒளி விரிந்து ஒரு வாயிலாவது போல் இருண்மை கொண்டது .”இங்குளீரா இளையவரே?” சீறல்மொழியில் அம்முதியவள் கேட்டான். அர்ஜுனன் வியந்து ”சந்திரகரே தாங்களா?” என்றான். மெல்ல நெளிந்து அவனருகே வந்து ”இங்கும் நீர் பயணியா?” என்றார் சந்திரகர்.” ஆம் நான் மூழ்கும் நதியொன்றில்லை” என்றான் அர்ஜுனன் அவரைத்தொடர்ந்து வந்த இரண்டாவது நாகம் முதல் நாகத்தின் உடல் மேல் நெளிந்து வளைந்தெழுந்தது .அதன் விழியை நோக்கி புன்னகைத்து அர்ஜுனன் கேட்டான் ”ஜலஜரே தங்களை நான் அறிவேன்”.. சீறல் ஒலியாக “நான் இன்னும் அவ்வொரு கணத்தை கடக்கவில்லை ”என்றான் ஜலஜன்
மூன்றாவது நாகம் அவனது வலப்பக்கமாக வந்து எழுந்தது. அதன் உடலில் இருந்த குளிரை அர்ஜுனன் அறிந்தான் தலை தூக்காது மண்ணில் நெளிந்து விழிதூக்கியது அது. ”அசைவின்மை” என்றது. “ஆம்,பதினாறு கால்களில் விரையும் புரவி மீது நான் ரசத்துளி போல் அசைவற்றிருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். அவனுக்கு பின்னால் வந்து பத்தி தூக்கியது நான்காவது நாகம் ”நான் உஷமன் என்னை நீ அறிவாய் இங்கு நீ வெல்லப்போவது எதை?” அர்ஜுனன் புன்னகைத்து ”இங்கு முற்றிலும் வெற்றி கொள்ளப்படுகிறேன் .அவ்வெற்றியில் திளைக்கிறேன்” என்றான்
ஐந்தாவது நாகம் அருகணைந்தது மால்யவானை நோக்கி அர்ஜுனன் சொன்னான் ”மூத்தவரே, பொன்னொளி இல்லாத உலகம் இது”. மால்யவான் “கடந்து செல்ல முடியாத ஒன்றை இக்கணம் உணர்கின்றாயா?” என்றான். அர்ஜுனன் ”ஆம் பிறிதொன்றிலாத ஒன்று எவரையும் விலகச்செய்வதில்லை. அது முழுமுதல் தெய்வத்திற்கு நிகரானது ”என்றான் ”இனி உன்னில் எஞ்சும் சொல் என்ன?” என்றான் மால்யவான். ”இன்மை ”என்றான்
நாகங்கள் காற்றிலாடும் நாணல் நுனிகள் போல் மெல்ல அவனைச்சூழ்ந்து நடனமிட்டன அவன் தன் உள்ளங்கையின் அசைவை உணர்ந்து திரும்பி நோக்கினான். முட்டைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது .உள்ளிருந்து அதை கொத்தி உடைத்து மலர் அல்லி போல் செந்நிற பாம்புக் குஞ்சு ஒன்று வெளிவந்தது நெளிந்து உடல் இறுக்கி அசைந்து உள்திரவத்திலிருந்து வழுக்கி அவிழுதை வாலால் இழுத்தபடி வெளியே வழிந்தது. பின்பு தன் வாலை முற்றிலும் உருவிக் கொண்டது.
அவன் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அது அவன் கையிலிருந்த இலை மேல் விழுந்து சற்று புரண்டு தலை தூக்கி பத்தியை விரித்தது. எண்ணெய் வழிவது போல் வழிந்து அவன் முழங்கையை அடைந்தது அதன் உடலில் இருந்த கொழும் திரவத்தால் வழுக்கி அவன் தொடையில் விழுந்தது. தொடை மடிப்புக்குள் முகம் புதைத்து உள்ளே சென்று வால் நெளிய உன்னி மறைந்தது. இரண்டாவது முட்டை உருள்வதை அர்ஜுனன் கண்டான் அதன் ஓட்டுப்பரப்பின் ஒரு துண்டு உடைந்து மேலெழ உள்ளிருந்து விதை முளைத்து தளிரெழுவது போல் வெளிவந்ததது அரசநாகக் குஞ்சு. வெளியே விழுந்த அதிர்வில் வால் நெளிய உடல் சுருட்டி சீறி பத்திவிரித்தது. அதன் சிறு செந்நா பறந்தது
அதை நோக்கி இருக்கையிலே மூன்றாவது முட்டைக்குள்ளிருந்து ஓசையின்றி வழிந்து வெளிவந்து மெல்ல எழுந்து தலை தூக்கி அவனை நோக்கியது சிறு நாகம் இரண்டாவது நாகம் அவன் கட்டை விரலைச்சுற்றி மேலேறியது மூன்றாவது நாகம் அவன் உள்ளங்கையை அடைந்து மடிந்து மறுபக்கம் விழுந்து கால்களின் இடுக்குக்குள் புகுந்தது
சுழன்றாடி இருந்த ஏழன்னையரில் ஒருத்தி மும்முறை வளைந்து கைக்குவை நுனியால் நிலத்தை கொத்தியபின் பின்னால் தூக்கி வீசப்பட்டாள். சரடுகள் அறுந்தது போல் ஒவ்வொருவராக மண்ணைக் கொத்தியபின் மல்லாந்து விழுந்தனர் அவர்களின் கால்கள் விரைத்து மண்ணை உதைத்து கைகள் விரல் சொடுக்கி அதிர்ந்து பின்பு மெல்லத் தளர்ந்தன சூழ்ந்திருந்த முழவோசைகள் ஓய்ந்தன. பெருமுழவின் விம்மல் மட்டும் காற்றில் அஞ்சி கரைந்து அமைதியாகியது கர்க்கர் அருகே வந்து தன் சுட்டுவிரலால் அந்த சிறு நாகக் குஞ்சுகளை எடுத்து சிறிய மரக்கொப்பரைக்குள் போட்டார். கௌரவ்யர் எழுந்து ”மூதன்னையர் அருள் உரைத்துவிட்டனர் பாண்டவரே இனி தாங்கள் எங்கள் குலம்” என்றார்