அனல் காற்று-இருகடிதங்கள்

அன்புள்ள மோகன்,

நீங்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகங்களில் ‘இன்றைய காந்தி’ பைபிள் மாதிரி ஆகிப் போனதால் மற்றொரு புத்தகமான ’அனல் காற்று’ என் பக்கத்திலேயே வரவில்லை. இத்தனைக்கும் இணையத்தில் வந்தபோது புத்தக வடிவில் படிக்கலாம் என்று விட்டு வைத்திருந்த ஒன்றுதான். மூன்று தினங்களுக்கு முன்தான் அனல் காற்றைப் படித்தேன். இன்று நான்காவது தினம். இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை.

‘அனல் காற்று’ குறித்த வாசகர்களின் கடிதங்களைப் போய்ப் படித்துப் பார்த்தேன். பலரும் பலமாதிரியான அபிப்பிராயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். ஒருசிலர் இது ஒரு திரைக்கதைக்காக எழுதப்பட்டது என்பதை மறந்து போய் பேசியிருந்தார்கள். இது போன்ற ஒரு கதையை சுவாரஸ்யமே இல்லாமல், படு சுவாரஸ்யமாக, கிளுகிளுப்பாக, உயிரே இல்லாமல், கொச்சையாக, குழப்பமாக எழுதும் சாத்தியங்களே அதிகம். ஆனால் உங்களது எழுத்து இந்தக் கதையை எங்கெங்கோ நகர்த்தி நகர்த்திக் கொண்டு செல்கிறது. பல கதாபாத்திரங்களின் மனதுக்குள் புகுந்து எழுதியிருக்கிறீர்கள். நான் அசந்து போன இடங்கள் பல. இது எப்படி சாத்தியம் என்று வியந்து போன இடங்களும் நிறைய. அந்த மாதிரி கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதப்பட்ட எழுத்து.

‘கண்களாலேயே என் கால்களைப் பற்றிக் கொண்டார்’ என்று ஒரு வரி வருகிறது. இதே தொனியில் ‘கண்களாலும் காறித் துப்ப முடியும்’ என்று என்னைக் கவர்ந்த ஒரு வரியை பி.ஏ.கிருஷ்ணன் ‘புலிநகக்கொன்றை’யில் எழுதியிருந்தார். ஆனால் அந்த வரி அந்த நாவலில் முற்றிலும் வேறான ஒரு இடத்தில் வருகிறது. ஆனால் உங்களின் இந்த வரி இடம் பெற்றிருக்கும் சூழல் என்னைச் சாய்த்தே விட்டது.

‘ஒருவரை நம் மனம் நுட்பமாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது என்றால் அவர்கள் போகும் இடத்துக்கெல்லாம் நம்மால் மானசீகமாகவே கூடப் போகமுடியும்’.

‘அவர் இருந்தபோது அந்தப் படம் அவரைப் போல இல்லை என்றே தோன்றியிருந்தது. இப்போது அது அவராகவே இருந்தது.’

‘கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள் என்று அப்போது புரிந்து கொண்டேன்.’

’ஏனென்றால் அவள் நெடுங்காலமாக நெஞ்சுக்குள் மிக ரகசியமாக ஆசைப்பட்ட ஒன்று நடந்துவிட்டது. பல்லாயிரம் முறை அவளுக்குள் அவள் சொல்லிப்பார்த்து நிகழ்த்திப்பார்த்து அஞ்சி அஞ்சிப் பின்பு ரகசியமாக ரசிக்க ஆரம்பித்து விட்ட தருணம் தாண்டி விட்டது. சந்திரா அம்மாவின் மீது தன் வெற்றியை நிகழ்த்திவிட்டாள்’.

‘தூக்கம் விழித்ததும் தூங்குவதற்கு முந்தைய கணம் ஏற்பட்டிருந்த அதே எண்ணம் காத்திருந்தது போல வந்து ஒட்டிக் கொண்டு நீட்சி பெறுவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.’

இவை என்னைக் கவர்ந்த பல வரிகளில் சில.

பெண்களின் மனம் பற்றி இத்தனை நுட்பமாக நான் வேறெதிலும் படித்திருக்கவில்லை. ஒருமுறை கமலஹாசன் சொன்னார். ‘யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை என்று நாம் உறுதியாக நம்பிச் செய்த சில காரியங்களை, வீட்டுக்குள் நுழையும் போதே நம் வீட்டிலிருக்கும் பெண்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். பெண்கள் என்றால் தாயார், சகோதரிகள், மனைவி எல்லோரும்தான்’.

மனச்சிக்கல்கள் பற்றி சிக்கலில்லாமல் எழுதப்பட்ட சிறப்பான ஒன்று ‘அனல் காற்று’.

நன்றி.

சுகா

ஜெ,

இன்று அலுவலகம் முடிந்து திரும்பும் பொழுது(ஒன்றில் இருந்து ஒன்னறை மணி நேரம் office cab பயணம் பெங்களுரில் எழுதபடத விதி) செய்ய வேண்டிய வேலைகள்

குறித்து யோசித்து கொண்டு,அடுத்த மாதம் எழுத வேண்டிய தேர்வு குறித்த புத்தகம் படிக்க மடிகணனி திறந்தேன்.

கடந்த சில நாட்களகவே ஒரே series புத்தகங்கள் படித்து படித்து வேறு ஏதொ ஒன்றை மனம் தேடி புத்தகதில் ஒன்ற முடியாமல், சட்டென்று உங்கள் அனல்காற்று படிக்க ஆரம்பிதேன்.

அனல் காற்று எனது மனதை ஆக்கிரமித்தது. இது என்னை பற்றிய கதையோ என நினைப்பது ஒருபுறம் இருக்க,

காமம்,காதலும் ஊடாடி நெய்த விதம்,

ஒரு திருமணம் நோக்கி காத்திருக்கும் இளைஞனின், ஆண் தலைமை இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கபட்ட ஆணின் மனம் பற்றி எழுதிய விதம்

Possesivness பற்றி அதிலும் தாயின்,மனைவியின் நிலைப்பாட்டை மாறி மாறி எடுக்கும் சந்திரவின் மனம்,

புத்துணர்வின் வடிவாய் சுசி,இளமை,புரிதலுணர்வுடன் ஒரு கனவுத் தோழி.

கட்டும் ஒழுக்கத்தில்,உணர்வின் உண்மையின் நெருப்பில்,காதலின் தேவையின் நடுவில், முன்று பெண்களின் நடுவே அருண்..

எதை பற்றி சொல்ல

கன்றின் குதித்தலும் புத்துணர்வின் ஒப்பிடலும்,அம்பும் அதன் நிழலும் ,

வீடு வந்து படித்து முடித்ததும் எழுதுகிறேன். அனல் காற்று இன்னமும் பல காலம் என்னை சுற்றி கொண்டு இருக்கும்.

Thanks and Regards

Senthilkumar

முந்தைய கட்டுரைஅங்காடித்தெரு கேரளத்தில் …
அடுத்த கட்டுரைகடிதங்கள்