ஜெ
தமிழ் ஹிந்துவில் இந்த கட்டுரையை வாசித்தேன். கேரளத்தில் உருவாகிவரும் இந்தக் கெடுபிடிநிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவற்றைப்பற்றி நீங்கள் கருத்துக்களைச் சொல்லவேண்டுமென நினைக்கிறேன்
அன்புள்ள சாமிநாதன்,
எம் எம் பஷீர் மலையாள இலக்கியத்தின் முக்கியமான இலக்கிய விமர்சகர்களில் ஒருவர். சமநிலையும் நுட்பமும் கொண்ட பார்வை அவருடையது. நான் மதிக்கும் விமர்சகர். அவரது இந்த ராமாயணத் தொடர் ராமாயணத்தை இலக்கியநோக்கில் ஆராய்வது. நான் வாசித்தவரை அது ஒரு நல்ல தொடர். மலையாள இலக்கியத்திற்கு அத்தகைய ஆய்வுமுறை புதியதும் அல்ல.
இதற்கு எதிராக போராடிய ஹனுமான்சேனை பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் கேரள வடிவம். ஓரிரு வருடங்களுக்கு முன் உருவான சிறிய அமைப்பு இது. அவர்களுக்கு கேரளம் முழுக்க விளம்பரத்தை இப்போராட்டம் அளித்தது. முதலில் இச்சிறிய அமைப்பின் போராட்டங்களை புறக்கணித்த நாளிதழும் எழுத்தாளரும் பின்னர் தொடரை நிறுத்திக்கொண்டனர்.
கேரளத்திலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்களும் கலைஞர்களும் இந்த கலாச்சார வன்முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.நானும் எதிர்ப்பை பதிவுசெய்திருந்தேன். ஆனால் நடைமுறையில் கேரள இந்துக்களில் கணிசமானவர்கள் இந்த விஷயத்தில் ஹனுமான்சேனாவின் கருத்தையே எதிரொலிக்கிறார்கள். அதை நாளிதழும் உணர்ந்ததே தொடர் நிறுத்தப்படுவதற்கான காரணம்
ஹனுமான்சேனாக்காரர்களின் மிரட்டல் சட்டவிரோதமானது. இந்து மதத்துக்கும் எதிரானது. இவர்களை இந்துக்களின் பிரதிநிதிகள் என எவர் நியமித்திருக்கிறார்கள்? இனி இந்த மடையர்களின் கருத்துக்களைக் கேட்டுத்தான் எழுத்தாளர்கள் சிந்திக்கவேண்டுமா? இனி இந்த தெருப்பொறுக்கிகள் ஃபத்வாக்கள் விதிக்கத் தொடங்குவார்களா?
ராமாயணம் இந்துக்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்தியாவின் ஆதிதொன்மம். இலியட், ஒடிஸி போல அது உலகம் முழுமைக்கும் உரியது.பஷீருக்கும் அதில் பிற எவருக்கும் குறையாத உரிமை உண்டு. உலகமெங்கும் பல்வேறு வடிவங்கள் அதற்குண்டு. இனிமேலும் பல்வேறு கோணங்கள் வெளிப்படும். தெருமுனைக் கூச்சல்போடும் பொறுக்கிகள் அதை தங்கள் உடைமை எனக்கருதுவார்கள் என்றால் அது ராமாயணத்தின் அழிவின் தொடக்கம்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இவர்களை வளர்த்து விடவேண்டாமென எண்ணுகிறது. அரசியல்கட்சிகள் பொதுமக்களின் எண்ண ஓட்டம் என்ன என்று அறியாது மௌனம் காக்கின்றன. கட்டக்கடைசியில் எழுத்தாளன் பொறுக்கிகளுக்கு முன்னால் தனித்துவிடப்பட்டிருக்கிறான்.
[ஆனால் ஒரு சின்ன ஆறுதல். பெருமாள் முருகன் விவகாரம் வெடித்தபோது கேரளத்தில் எழுத்தாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழகம் ‘பின்தங்கி’ இருப்பதாகவும் பேசிய கேரள ஊடகவாதிகளிடம் திருப்பிக்கேட்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது அமைந்தது]
ராமாயணம் இந்தியாவெங்கும் ஒற்றைப்படையாக வாசிக்கப்பட்ட வரலாறே இல்லை. இந்தியாவின் மையத்தொன்மங்களில் ஒன்றாகிய ராமாயணம் முன்வைக்கும் விழுமியங்களை இந்தியாவின் அனைத்துப் பண்பாட்டுப் போக்குகளும் தங்கள் நோக்கில் விமர்சித்தும், விளக்கியும், மாற்றியமைத்தும்தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவேதான் ராமாயணத்திற்கு இத்தனை வடிவபேதங்கள் உள்ளன.
உத்தர ராமாயணம் என்னும் பிற்காலச் சேர்க்கையேகூட ராமாயணத்தின் மீதான மறுவாசிப்பே. வால்மீகி ராமாயணத்தில் இருக்கும் ராவணனைவிட பலமடங்கும் பிரம்மாண்டமான வீரநாயகனாக ராவணன் எழுந்துவரும் காட்சியை, அரக்ககுலத்து மாண்பின் சித்திரத்தை நாம் உத்தர ராமாயணத்தில் காண்கிறோம். கம்பராமாயணம் உட்பட இந்தியாவில் உள்ள அத்தனை ராமாயணங்களும் மூலராமாயணம் மீதான மறுவாசிப்புகள்தான்.
அவ்வாறு செய்யப்பட்ட மறுவாசிப்புகளில் தென்னகம் சார்ந்த ஒரு பொதுப்போக்கு சீதையின் கோணத்தில் ராமாயணத்தை வாசிப்பது. பெண்வழிச்சமூகங்கள் இருந்த, அந்தப் பண்பாட்டுமனநிலை நீடிக்கும் தென்னகத்தில் இப்பார்வை எழுந்ததை புரிந்துகொள்ளமுடியும். சீதை கண்ணகியின் நிரையில் தமிழகத்தில் வைக்கப்படுவது இவ்வாறுதான். கன்னடத்தில் குவெம்புவின் ராமாயணதர்சன் நூல் ராமாயணத்தைப்பற்றிய மாற்றுப்பார்வைகள் கொண்ட பேரிலக்கியம்.
மலையாளத்தில் தொடர்ந்து ராமாயண வடிவங்கள் எழுந்தபடியே இருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் சீராமன் என்னும் கவிஞர் எழுதிய ராமசரிதம் என்னும் பாட்டுவடிவம் மலையாளமாக அப்போதும் உருவாகியிராத அரைத்தமிழில் எழுதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கண்ணச்ச பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணம் கம்பராமாயணத்தின் நகல்வடிவம்போன்றது.
சம்ஸ்கிருத ராமாயணங்களுக்கு நெருக்கமான ராமாயண வடிவமான ராமாயணம் சம்பு [சம்பு ஓரு செய்யுள்வகை] புனம் நம்பூதிரியால் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடையில் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது மலையாளமொழி சம்ஸ்கிருதக் கலப்பால் இன்றைய வடிவத்தை அடைவதையும் காட்டுகிறது
கதகளிக்காக கொட்டாரக்கர தம்புரான் இயற்றிய ராமாயண ஆட்டக்கதை என்னும் காவியவடிவம் பெரும்பாலும் உத்தர ராமாயணத்திற்கு நெருக்கமான நாடக உருவாக்கம். ராமாயணத்தின் கதகளி வடிவங்களுக்கான முன்வடிவம். கதகளியில் ராமனைவிட ராவணனே பெரிய கதாபாத்திரம். பதினாறாம் நூற்றாண்டில் இது உருவானது
பதினேழாம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் எழுந்தது. மலையாளமொழியின் பிதாவாகவும் எழுத்தச்சன் கருதப்படுகிறார். சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தை விட்டு விலகி மக்கள்மொழியில் எழுதப்பட்ட இந்த ராமாயணம் மிகப்புகழ்பெற்றது. இன்றும் கேரளத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப்படுகிறது.
இதுவன்றி கேரளத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டார் ராமாயண வடிவங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வாய்மொழியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மாப்பிள ராமாயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் கடற்பயணிகளால் பாடப்பட்டது. அரபுச்சொற்களும் முஸ்லீம் வழக்காறுகளும் கொண்டது இது.
இந்த ராமாயண வடிவங்களை ஒப்பிட்டு ஆராய்வதென்பது ஒரு பெரிய பண்பாட்டுப்புரிதலை உருவாக்கும். இந்தியாவின் பன்மைத்துவத்தை நேரில்காணும் தரிசனம் அது. நாட்டார் ராமாயணங்களில் ஹனுமான் பக்தராக அன்றி ராமனுக்கு வழிகாட்டும் வீரனாகவும் ,ராமனைக் கடிந்துகொள்பவராகவும் இருக்கிறார். கணிசமான வடிவங்களில் ராவணன் மானுட மாண்பும் நிமிர்வும் கொண்ட சக்கரவர்த்தி.தன் ஆணவத்தால் அல்லது காமத்தால் வீழ்ச்சி அடைந்தவர். சில நாட்டார் வடிவங்களில் சீதையைக் கவர்ந்துவந்ததேகூட நியாயப்படுத்தப்படுகிறது.
எம்.எம்.பஷீர் எழுதிய கட்டுரையில் ‘ராமனின் கோபம்’ என்ற தலைப்பிடப்பட்ட முதல் கட்டுரையே முச்சந்தி அரசியல்வாதிகளின் கசப்பை ஈட்டியது. அது ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பிய தருணத்தை விவாதிக்கிறது. அதை எதிர்த்தவர்களில் எதையாவது படிப்பவர்கள் எவரும் இல்லை. அவர்கள் அறிந்த ராமாயணம் பாட்டிகள் சொல்லிக்கேட்ட ஒற்றைப்படையான பக்திக்கதை. இன்று வட இந்தியாவிலிருந்து இந்தியா முழுக்க ஒற்றைப்படையாகச் செலுத்தப்படும் ஒரு ராமன் உருவம். அதற்கு மாறாக எழுதியவர் ஒரு முஸ்லீம், போதாதா?
பேட்டியில் ஹனுமான்சேனாவின் தலைவர் சொல்கிறார். ராமன் தெய்வம். அவர் தெய்வம் அல்ல, மானுடனே என்று சொல்லும் எவரையும் விட்டுவைக்கப்போவதில்லை. அதாவது அவர்கள் ராமாயணத்துக்கு ஒரு ‘அதிகாரபூர்வ’ வடிவத்தை வைத்திருக்கிறார்கள். அதை மீறுபவர்களைத் தண்டிக்க விரும்புகிறார்கள்.
எழுத்தச்சன் சீதையை காட்டுக்கு அனுப்பிய தருணத்தை சீதையின் நோக்கில் ராமனை குறைகூறும் தொனியில்தான் எழுதியிருக்கிறார். ஏனென்றால் அது வான்மீகிராமாயணத்தில் உள்ள அதே சித்தரிப்பு. கேரளத்தின் ராமாயண வாசகர்கள் நடுவே அறியப்பட்ட சித்தரிப்பு அதுவே.நவீனகால மகாகவி குமாரன் ஆசான் ‘சிந்தாவிஷ்டயாய சீதை’ என்னும் நீள்கவிதையை இயற்றினார். அது ராமனை பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், பெண்மையை மதிக்காமல் அரசியலையும் அறத்தையும் மட்டுமே அறிந்த ஆணாக மட்டும் நிறுத்தி கடுமையாகக் குற்றம்சாட்டுகிறது. பள்ளிப்பாடத்திட்டத்திலேயே இருக்கும் பாடல் அது
எம்.எம்.பஷீர் அவரது கட்டுரையில் தன்னுடைய கருத்து என எதையும் சொல்லவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இருந்து சீதையை ராமன் காட்டுக்கு அனுப்பும் அந்தத் தருணத்தை அப்படியே சொல்லுக்குச்சொல் எடுத்தளிக்கிறார். ஆசானின் வரிகளை நினைவுகூர்கிறார். ராமன் மிகக்கடுமையான சொற்களைப் பயன்படுத்த சீதை துயரடைந்து அழுவதை வால்மீகி சித்தரிக்கிறார். அதை விவரிக்கிறார் பஷீர்.
பஷீர் ‘கண்நோய் வந்தவனுக்கு தீபம் போல நீ எனக்கு துன்பம் தருகிறாய்’ என ராமன் சீதையை நோக்கிச் சொல்லும் வரியை சுட்டிக்காட்டி வால்மீகியே ராமனைத்தான் குற்றம்சாட்டுகிறார் என்று விளக்குகிறார். சீதை தீபம்தான் ,நோயிருப்பது ராமனிடம். ராமனை பேரறத்தானாக சித்தரிக்கும் வால்மீகி அவனை எதிர்மறையாகக் காட்டும் இந்தத்தருணத்தை ஏன் எழுதினார்? ராமன் தெய்வமாக ஆனபின்னரும்கூட இதை இத்தனைகாலம் ஏன் இந்தப்பெரும் காவியத்தில் அனைவரும் நீடிக்கவிட்டனர் என வினவுகிறார்
அதற்கு விடையாக வால்மீகி ராமாயணம் ஒரு மகத்தான காவியம், அது ஒற்றைப்படையாக வாழ்க்கையைச் சொல்லவில்லை, மானுட மனத்தின் விளக்கமுடியாத ரகசியங்களையே அது தேடிச்செல்கிறது என்கிறார் பஷீர். ஆண் அரசியலில் புறவாழ்க்கையில் பேரறத்தான் என்றாலும் அகவாழ்க்கையில் அவன் உள்ளப்போக்குகளே வேறு என கொள்ளலாம் என்கிறார். தன் மனைவியை பிறன் விழிதொட்டு நோக்கினாலே அவனால் தாளமுடியவில்லை. அவனுடன் இருந்தாள் என்பதே எரியச்செய்கிறது என விளக்குகிறார்.
ராமன் அப்படி அவள் மேல் சினம் கொள்வது பிழையா சரியா என்பது இங்கே கேள்வியே அல்ல, அது ஆணின் உள்ளத்து இயல்பு என்பது மட்டும்தான் உண்மை. அதை முழுதாக விளக்கவே முடியாது என்பதே உண்மை. ராமன் அவளையன்றி பிறபெண்ணை எண்ணாதவன் என்பதனாலேயே அந்தச் சினம் உருவானதா என்பதும் முக்கியமான கேள்வியே. காவியங்கள் அப்படித்தான், வாசிக்க வாசிக்க விரியக்கூடியவை. பேசி விளக்கி முடித்துவிடமுடியாத வாழ்க்கைப்புதிர்களை, உளச்சிக்கல்களைத் தொட்டுக்காட்டுபவை. ஆகவேதான் அவை பல்லாயிரமாண்டுக்காலம் இலக்கியங்கள் எழுதப்பட்டபின்னரும் புதியவையாக நீடிக்கின்றன.
பஷீர் ஒரு சிறந்த இலக்கிய விமர்சகர், அற்புதமான பேராசிரியர். எம்.குட்டிக்கிருஷ்ண மாரார், எம்.பி.பால், ஜோசப் முண்டச்சேரி என தொடங்கி நீளும் விமர்சகர் வரிசையில் நின்று கேரளத்தின் அறிவார்ந்த மையத்துடன் உரையாடுகிறார். மகாபாரதத்தைப்பற்றி குட்டிக்கிருஷ்ண மாரார் எழுதிய ‘பாரத தரிசனம்’ கிருஷ்ணனை தெய்வமாக அன்றி அதிகாரத்தின் இயங்கியலைச் சொலும் கதாபாத்திரமாக காட்டுவது. இதெல்லாம் எப்போதும் நிகழும் பண்பாட்டு – இலக்கிய ஆய்வுகள். துரதிருஷ்டவசமாக அது வாசிப்போ சிந்தனையோ அடிப்படைச் சமநிலையோ இல்லாத தெருக்கும்பலின் செவிகளுக்கும் செல்லும் ஒரு காலம் வந்துவிட்டிருக்கிறது.அவர்கள் அறிவுஜீவிகளுக்கு ஆணையிட முடிகிறது.
இனி பஷீரிலிருந்து தொடங்கி ஆசானின் பாடலை தடைசெய்யக் கோரலாம். உத்தர ராமாயணத்தை தடைசெய்யலாம். கடைசியில் வால்மீகி ராமாயணத்தையே வெட்டிச்சுருக்க ஆணையிடலாம். இந்த எதிர்ப்பு என்பது இந்துப்பண்பாட்டை, மதத்தை அழிவை நோக்கிக்கொண்டுசெல்லும் கீழ்த்தரக் காழ்ப்பின் வெளிப்பாடு மட்டுமே. இந்து என தன்னை சாராம்சத்தில் உணரும் எவரும் இதை எவ்வகையிலும் ஏற்கமுடியாது.
இந்த மூடத்தனம் ஏன் அடிப்படையான மக்களாதரவை பெறுகிறது? நேற்றுவரை இல்லாத இந்த மனநிலை ஏன் உருவாகியிருக்கிறது? மிக எளிமையானது விடை. அதை நோக்காமல் இந்தவிஷயத்தில் ஒரு நியாயமான புரிதலை அடையவே முடியாது. பெரும்பாலான அறிவுஜீவிகள் அங்கு செல்வதில்லை என்பதனாலேயே அவர்களின் அனைத்து நியாயங்களும் அடிபட்டுப்போகின்றன.
இதைப்பற்றிய பொதுவிவாதங்களில் சாமானிய இந்துவின் குரலாக ஒலிக்கும் பலர் கேட்கும் ஒற்றைவினா ‘பஷீர் இந்த விவாதத்தை இஸ்லாம் பற்றியும் நபி பற்றியும் செய்வாரா?” என்பதுதான். அந்த ஒற்றைவரியே இந்துத்துவ உதிரிகளின் குரலுக்கு வலு சேர்க்கிறது.
இங்குள்ள மதப்பிரச்சார மேடைகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மானுடம் இதுவரை கண்டதிலேயே முழுமையான மானுடர் முகமது நபியே என பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்திகளின் அடிப்படையில் முகமது நபியின் வாழ்க்கையை முன்வைத்து அந்தக்கூற்றை பரிசீலனை செய்ய, விவாதிக்க எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அது மத உணர்வுகளைப் புண்படுத்தல் ஆகிவிடுகிறது. சட்டம் தடைசெய்கிறது. சட்டத்தை கையிலெடுப்பவர்களால் கடுமையாக ஒறுக்கப்படுகிறது. இஸ்லாமியரே பேசமுடியாது என்னும் நிலையில் பிற அறிஞர்கள் வீட்டுக்குள்கூட பேசமுடியாத நிலை.
இந்தக்கெடுபிடியை இங்குள்ள அத்தனை முற்போக்கினரும் நியாயப்படுத்துகிறார்கள். பாடத்திட்டத்தில் இருந்து ஒருவினாவை, இருநூறாண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர் ஒருவரால் எழுதப்பட்ட ஒரு கவிதையை, தேர்வில் கேள்வியாக கேட்டபோது இஸ்லாமிய வெறியர்களால் கேரளத்தில் பேராசிரியர் ஒருவரின் கை வெட்டப்பட்டது. பிழை அவர் பெயரில்தான் என இஸ்லாமிய மிதவாதிகள் கூட தொலைக்காட்சிகளில் அமர்ந்து வாதிட்டனர். முற்போக்காளர் அவர்களை நியாயப்படுத்தினர். அவருக்கு இன்றும் நியாயம் கிடைக்கவில்லை.சாமானியர் அதை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்
‘எவரை நாம் எதிர்க்கிறோமோ அவர்களைப்போலவே ஆகிவிடுவோம் , அவ்வாறு ஆகாமல் எதிர்ப்பதற்குப் பெயரே சத்யாக்கிரகம்’ என்று காந்தி சொன்னார். அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இஸ்லாமியத் அடிப்படைவாதத்தை எதிர்ப்பவர்கள் அவர்களின் அதே மனநிலைகளை தாங்களும் அடைகிறார்கள். அதே சொற்களை அவர்களை மேற்கோள்காட்டியே சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ‘நீ அவங்கள கேப்பியா? அவங்க மட்டும் அப்டி இருக்கலாமா?” என்பதற்கு அப்பால் அவர்களிடம் தர்க்கமே இல்லை
என்னிடமும் இதையே கேட்டனர் ‘பஷீர் இதேபோல நபியை விமர்சனநோக்கில் பார்ப்பாரா? இந்துக்கள் இஸ்லாமை இப்படி நோக்க இஸ்லாம் அனுமதிக்குமா?” என் பதில் இதுவே. ‘இஸ்லாம் அனுமதிக்காது. பஷீரால் அதைச் செய்யமுடியாது. ஆனால் இந்துமதம் அனுமதிக்கும். பஷீர் உட்பட எவரும் விமர்சனம் செய்யலாம். அதுவே இந்துமதத்தின் தனித்தன்மை, அதன் ஆன்மீக ஆற்றல். அவ்வியல்பு அழிந்தால் இந்துமதம் என ஒன்று இருப்பதற்கே பொருளில்லை. இந்துமதம் கீழான நிலையில் நிற்கிறது அதை இஸ்லாம் கிறித்தவம் போல மேம்படுத்தவேண்டும் என நான் எண்ணவில்லை. எனக்கு இந்து மரபின் பன்மைத்துவத்தில், அடிப்படையான விவாதத்தன்மையில், தத்துவச்செழுமையில் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இந்துமதம் நின்றிருக்கும் இடத்துக்கு அனைத்து மதங்களும் வரவேண்டும் என்றே நினைக்கிறேன்.’
அந்த அறிதல் இந்தக்கும்பலுக்கு இல்லை.ஆகவேதான் ராமன் ஒரு நபி போல ஆக்கப்பட்டிருக்கிறார். ‘ராமன் அப்பழுக்கற்ற அவதாரம். அவர் மேல் எந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் தாக்குவோம்’ என்கிறார் ஹனுமான் சேனா தலைவர், அதாவது வால்மீகியே அதைச் சொன்னாலும் ஏற்கமாட்டோம். என்ன ஒரு தெளிவு!
இந்த இடரை, வீழ்ச்சியை சுட்டிக்காட்டும் தகுதி நம் முற்போக்காளர்களுக்கு இல்லை. ஒற்றைச் சொல்லில் ‘நீ இதையே குர்ஆனுக்குச் சொல்வாயா?’ என்று கேட்டு அவர்களின் வாயைமூடிக்கொள்ளச் செய்கிறார்கள் சாமானியர்கள். நம் முற்போக்காளர்கள் எம்பிக்குதிப்பதெல்லாம் இந்த நேர்மைக்குறைவாலேயே வெறும் அரசியல்கூச்சல்களாக மாறிவிடுகிறது.
அத்துடன் மானுடத்தீமைகள் அனைத்துக்கும் உறைவிடமாக இந்து மதத்தைச் சித்தரிக்கும் நம் முற்போக்காளர்கள், இந்துமதம் அழியவேண்டுமென பொதுமேடைகளில் வாதிடுபவர்கள் , இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் குலவுபவர்கள் எப்படி இந்துக்களிடம் உரையாட முடியும்? ராமனை மானுடத்துக்கு விரோதி என முற்போக்கினர் சொல்லும்போது,சராசரி இந்து ஹனுமான்சேனையை நோக்கி அல்லவா தள்ளப்படுகிறான்?
இன்று எழுந்து வரவேண்டிய குரல் இந்து அறிஞர்களிடமிருந்து. இந்து ஞானிகளிடமிருந்து. பன்முகத்தன்மையும் உள்விவாதத்தன்மையும் கொண்ட இந்து மெய்யியலை, பண்பாட்டை அவர்கள் முன்வைக்கவேண்டியிருக்கிறது. அவர்களே இந்தத் தெருமுனைக் கூச்சல்களை எதிர்கொள்ளமுடியும். பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்துஞானமரபு இனி தெருக்குண்டர்களிடம்தான் வாழவேண்டுமா என்ற வினாவுக்கு பதில் சொல்லமுடியும்
இருபதாண்டுகளுக்கு முன் இத்தகைய சில குரல்கள் எழுந்தபோது நித்ய சைதன்ய யதி எழுதிய கறாரான கட்டுரைகளை நினைத்துக்கொள்கிறேன். நூல்வடிவில் தொகுக்கப்பட்ட அக்கட்டுரைகளின் அடிப்படையான ஆன்மீக உறுதியே இன்று நமக்குத்தேவை
ஜெ
பழைய கட்டுரைகள்
எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்
எம் எஃப் ஹூசேய்ன்
ஹூசேய்ன் கடிதங்கள்
=================