ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

உங்களின் “ஊமைச்செந்நாய் ” மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யதார்தமாக இருந்தாலும் இந்த கதையில் இவ்வளவு வன்முறையா? இரண்டு நாட்களுக்கு நான் தூங்கவே இல்லை. சரித்திரம் என்பதைவிட இந்த கதையை உளவியல் ரீதியாக அணுகி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.மிக சோகமான கதையாக இருந்தாலும் தங்களின் கதைகளில் இருக்கும் மெல்லிய நகைசுவை இதில் இல்லை. மனதை மிகவும் பாதித்தது.

அன்புடன்

 நெடு நாள் வாசகி
சுஜா

**

அன்புள்ள ஜெயமோகன்

நேற்று ஒரே மூச்சில் படிக்க வைத்து என்னைப் பிரமிக்க வைத்த ஒரு கதை. அபாரம், உக்கிரம். தமிழில் காடுகளைப் பற்றி வேறு யாராவது இவ்வளவு ஆழமாக புதின வடிவில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தியோடர்பாஸ்கரன் புனைக்கதைகள் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். உங்களது காடு இன்னமும் நான் படிக்கவில்லை.

ஊமைச் செந்நாயைப் படிக்கும் பொழுதே எனக்கு வியர்த்தது, முட்செடிகள் உடல் முழுக்க கீச்சிய எரிச்சல் ஏற்பட்டது, உடம்பு சில்லிட்டது,சுருட்டுப் புகையும், ரத்த வாடையும் மூக்கில் ஏறியது, மலையில் ஏறியது போல  மூச்சிரைத்தது. நானும் அவர்களுடன் பயணித்த உணர்வை எழுப்பியது.  நான் கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் சென்றிருந்த ஒரு சில அடர் வனங்கள் கண் முன்னே விரிந்தன. படிக்கும் வாசகனைக் காட்டிற்குள் இழுத்துச் சென்று பிரமிக்க வைத்த நடை. காட்டைப் பற்றிய உங்கள் வர்ணனைகளை படுகை போன்ற கதைகளில் படித்திருந்தாலும் ஒவ்வொரு கதையும் காட்டுக்குள் போகும் அனுபவம் மிகந்த மனக்கிளர்ச்சியைத் தருவதாகவே உள்ளது. காடுகள் அலுப்பதேயில்லை. நம் அடர்வனங்களிலும், கருங்காடுகளிலும் உள்ள மர்மங்கள், சுவாரசியங்கள், பல்லுயிர் வேற்றுமைகள் அமெரிக்கக் காடுகளில் காணக் கிடைப்பவை அல்ல. யானை நம் காடுகளின் ஜீவன்.  காடு, மலை, யானை, கடல் இவை யாவும் எப்பொழுதும் அலுக்காத காட்சிகள். அவற்றின் நினைவே மனதில் அலைகளை ஏற்படுத்துபவை. அந்தக் காட்சிகளை எனக்குள் விரிவாகத் தந்ததது உங்கள் கதை. 

வரிக்கு வரி அற்புதமான உவமைகள் வந்து விழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அந்த உவமைகளே வாசகனைக் காட்டின் கருமையினை உணரச் செய்கிறது.  

அந்த தடி ராஜநாகம் போலிருந்தது

அடியில்சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும்

சுருட்டுக்கறை அடுப்புக்கல் போல பழுத்திருந்தது

அவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன.

எரியும் கயிறு போல முறுகியது.

என்று கதையெங்கும் நிரம்பிய உவமானங்கள் அற்புதமான வாசிப்பனபவத்தை அளிக்கின்றன. காட்டின் அடர்த்தியின் ஊடே விழும் வெயிலைத்தான் எவ்வளவு கவித்துமாகக் காட்டுகிறீர்கள். அப்படியே அந்த ஒளிக் கற்றைகள் வெயில் அருவியாகவும், குழலாகவும், படர்ந்த சுவராகவும் மனக் கண் முன் ஓடி பரவசப் படுத்தின.  காடு தன்னுள் ஒளித்து வைத்துள்ள சுவாரசியங்களை உங்கள் உவமைகள் உணர்வு ரீதியான நெருக்கத்தை வாசகனுக்கு அளிக்கின்றன.  வெள்ளைக்காரத் துரையின் பரந்த பெரிய ஜன்னல்கள் நிறைந்த பங்களா கண்முன்னே காட்சி ரூபமாக விரிகின்றது. நான் நமது காடுகளுக்குள் சென்று வருடங்கள் பல ஆகின்றன. ஒரு முறை தேக்கடியை ஒட்டிய கானகத்திற்குள் சென்று விட்டு யானையொன்று எதிர் வந்த படியால் சில மணி நேரங்கள் ஒரு பள்ளத்திற்குள் ஒதுங்கிக் கிடந்தோம். மீண்டும் எப்பொழுது செல்லப் போகிறோம் என்ற ஏக்கத்தை உங்கள் எழுத்துக்கள் கொழுந்து விட்டு எரியச் செய்கின்றன.

நாம் எல்லோரும் ஒரு விதத்தில் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறோம். சுதந்திரம் அச்சம் தருபவையாகவும் பொறுப்புகள் நிரம்பியவையாகவும் இருப்பதனால் அடிமைத்தனமே சுகமாக இருக்கின்றது. ஒரு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு மீண்டால் மற்றொரு அடிமைத்தன நுகத்தடியில் நம்மை நாமே விருப்பப் பட்டு பூட்டிக் கொள்கிறோம். அடிமைத்தனம் சொகுசானதாகவும் பாதுகாப்பனதாகவும் நமக்குத் தோன்றி விடுகிறது. மக்கள் நாடுகள் என்று எவையும் இந்த மீளா விட்டான் ஜ்ங்ஷனிலேயே சுற்றி சுற்றி வருகின்றன. தன் அடிமை நிலையை விட சுகமானதாக தன்னைத் தழுவும் மரணத்தைக் கதை சொல்லி எண்ணியது போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு அடிமைக்கும் கீழே மற்றொரு அடிமை வேண்டியே கிடக்கிறது.

கதை முழுவதும் நிரம்பியுள்ள குறியீடுகள், பூடகமான உருவகங்களை பொருட்படுத்தாமல் வெறுமனே படித்தாலும் கூட அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நெடுங்கதை இது. 

நீங்கள் வில்பர் ஸ்மித் என்ற ஆங்கில நாவலாசிரியரைப் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அவரது எலிஃபண்ட் சாங்க் மிகவும் பிரபலமான ஒரு ஆப்பிரிக்க நாவல். ஆப்பிரிக்கக் காடுகளை விவரிப்பதிலும் யானைகள் மிருகங்கள் பழங்குடியினரைப் பற்றி மிகவும் நுணுக்கமான தகவல்களுடன் மிக ஆழமாக எழுதும்  நாவலாசிரியர் வில்பர் ஸ்மித். அவரது எலிஃபண்ட் சாங் நாவல் தந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளைக் கொல்லும் வில்லன்களைத் துரத்தும் ஒரு மசாலா நாவல் என்றாலும் கூட ஆப்பிரிக்கக் காடுகளையும் யானைகளையும் மிக விரிவாக நமக்கு அறிமுகப் படுத்தும் அற்புதமான நாவல் அது. யானைகள் தங்களுக்குள் டெலிபதி மூலமாகவே தொடர்பு கொள்கின்றன என்பார்.  அதில் கதை நாயகன் காட்டில் உள்ள விஷக் காளானை உண்டு சாகக் கிடக்கும் பொழுது உங்கள் கதை சொல்லியைப் போலவே அங்கிருக்கும் பிக்மிக்கள் பச்சிலைச் சாறால் அவனைக் குணப் படுத்துவார்கள். ஆங்கிலத்தில் அவை போன்ற காடு சார்ந்த எழுத்துக்கள் அனுபவங்கள் வரும் பொழுது பல மில்லியன் கணக்கில் விற்பனையையும் வரவேற்பையும் பெறுகின்றன. 

என்னை மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.  

அன்புடன்

ச.திருமலை

அன்புள்ள ஜெ,
அன்புடன் மகேஷ் எழுவது,
ஊமை செந்நாய் கதை படித்தேன்.  கதை நன்றாக இருந்தது. ஆனால் முடிவு எனக்கு புரியவில்லை. மதிய உணவு இடைவேளையில் ஒரே சிந்தனையாக இருந்தது.

உண்மையில் கதை, நாவல் இவற்றில் வரும் காட்சிகள் ஒரு வெளிப்புற தோற்றமே. அவற்றிக்கும் கதையில் உயிருக்கும் உறவு இல்லை.   கதையின் உயிர் என்பது நானே.  என்னையே எல்லா கதையிலும் காண்கிறேன்.  கொஞ்சம் அகன்ற பார்வையில் நோக்கினால், உலகில் எல்லாமே வெளிப்புற தோற்றமே. அவற்றில் ஊடுருவினால் நானே இருக்கிறேன். நான் படிக்க முடியாமல் இருந்தபோது,  நண்பர்கள் என்னிடம் எனக்கு பிடித்ததை  படிக்க சொன்னார்கள். இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தது நானே. என்னை எல்லாவற்றிலும் காணும்போது, எல்லாமே பிடித்துள்ளது.

 “பாட்டி வடை சுட்ட கதை” ஸுத்ரதில் “படம் பார்த்து கதை சொல்லும்” அளவிலேயே என் கலை ரசனை இருந்தது (சிறுவயதில் படகதைகளை குழந்தைகளுக்கு கொடுத்து கதையை சொல்ல சொல்வேன். அவர்களால் படிக்கமுடியாது. எனவே படத்தை வைத்து அவர்களாகவே கதை சொல்லுவார்கள். அந்த கதைகள் உயிர் உள்ளவை.)   முடிவை குறித்துவிட்டு கதையை அதை நோக்கி செலுத்துவதில் பிணத்தின் அடையாளமே உள்ளது.   ஆனால் கதை பாய்ந்து செல்லும் வேகத்தில் ஒரு மனிதனின் வாழ்வின் வேகமே உள்ளது.

நேற்று எனது யோகா குருவிடம் “ஏழாவது உலகம்”    பற்றி பேசினேன். அவர்கள் ஆங்கில பதிப்பு உள்ளதா என கேட்டார்கள். இருக்கிறதா?

உங்களை எழுத்தாளர் என்று கூறி “மொழி” டப்பாவில் அடைக்க விருப்பமில்லை.
நீங்கள் ஒரு மெய்ஞானthதேடி.

தங்கள் எழுத்து, என் மெய்ஞான தேடுதலுக்கு உதவுகிறது.

நன்றி.
மகேஷ்

அண்ணன்!
ஊமைச்செந்நாய், கொம்பன் யானை, வில்சன் துரை, தோமா, சோதி  ஏன் நானும் கூட சிந்திக்கிறேன். அனைவருமே தனித்தன்மை மிக்க ஆழுமைகள் எனினும் அடிமைத்தனத்தையும் அடக்குமுறைகளையும் அனுபவிப்பவர்கள்.  நாயகனை நாயென அழைப்பது, தன்னையே துரை அடிமையாக்கும் தருணம் என்பதை அவன் வெதனையினூடே ஒத்துக்கொள்ளுகிறான். துரையின் வாழ்வு ஊமைச்செந்நாய் இட்ட பிச்சை. இதை உணரும் தருணாத்தில் அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறான். உயிரை அழிக்கும்  துப்பக்கியை அவன் பெண்ணாகப் பாவிப்பது, துணிவு கொண்ட பெண்களிடம் ஆண்கள் குழைவது போல் இருக்கின்றது.
கதை ஊமைச்செந்நாயின் மர்ம பிறப்பிற்கு பின்னோக்கி சென்று துரையின் எஞ்சிய அர்த்தமற்ற வாழ்வினை மவுனமாக சாட்சி பகருகின்றது. ‘சப்பாத்து’, எனது இறந்த பாட்டி, காலணியக்குறிக்கும் வார்த்தை.
கதையின் வேகம் மின்னலைபோல கடந்து செல்வதாக அமைக்கப்பட்டிருகிறது. காடு எப்பொழுதுமே அப்படித்தான், நம்மை ஏங்க வைக்கும் நிகழ்வுகளை கணப்பொழுதில் காட்சிப்படுத்தி மறைந்துபோகின்றது. பல நாட்களுக்கு பின்பு காட்டில் அலைந்து திரிந்த உணர்வு ஏற்பட்டது!
மிக்க நன்றி.
காட்சன் சாமுவேல்

**

அன்புள்ள ஜெ

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று, ஊமைச்செந்நாய். உங்களின் சிறுகதை மாஸ்டர்பீஸ் இது என்றுகூடச் சொல்வேன். இந்தக் கதையளவுக்கு அற்புதமான சிறுகதைகளை உலகப்புகழ்பெற்ற ஆசிரியர்கள் கூட ஒரு சிலவே எழுதியிருக்கிறார்கள். வடிவ நேர்த்தி, கூறும் விஷயத்தின் சமநிலை, காட்சிகளை கவித்துவமாக ஆக்குவது என்று எல்லா விஷயங்களும் சரியாக அமைந்து வந்த கதை இது. படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உள்ளே இழுத்துக்கொள்கிறது. அந்த சூழலிலேயே நம்மை இருத்தி வைக்கிறது. அதன் ஒவ்வொரு இடமும் காட்சியும் நம் கண்களுக்கு தெரிகின்றன. அந்த மூன்று மையக்கதாபாத்திரங்களுடன் நம்மை இணைத்து அவர்களுடன் நாம் நேரடியாகப் பழகிய அனுபவத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு வரியிலும் உருவாகும் நுட்பமான குறியீட்டு அர்த்தங்களை பலமுறை வாசித்துதான் உள்வாங்கவேண்டும். உதாரணமாக அந்தப் பச்சைப்பாம்பு .அதன் வடிவில் துரையின் கையில் கிடந்து நெளிவது ஊமைச்செந்நாயின் ஆன்மாவேதான் என்று தோன்றும்.

ஆதிக்கம் என்ற கருத்தை இந்த அளவுக்கு நுட்பமாக விவாதித்த தமிழ் கதைகள் இல்லை — என் வாசிப்பில். ஆதிக்கத்துக்கு எதிராக மௌனம் மூலம் அடிமை எதிர்வினை ஆற்றுகிறான். மௌனமே அவனது மொழி. அந்த மௌனத்துக்கு அடியில் குமுறும் லாவா போல கோபம் கொதித்துக்கொண்டிருக்கிறது. ஊமைச்செந்நாய் துரையின் துப்பாக்கியை எடுத்துப்பார்ப்பது  அடிமையின் மீறல் அல்லது சவாலுக்கு உதாரணம் என்றால் சோதி தன்னை ஊமைச்செந்நாய்க்கு வழங்குவது அதே மீறலின் இன்னொரு வடிவம்.

தன் கடமையை ஊமைசெந்நாய் செய்கிறான். அவன் துரையைக் காப்பாற்றுவது வெறும் கடமை உணர்ச்சியினாலேயே. தன்னை அடிக்கவும் உதைக்கவும் அவன் துரையை அனுமதிக்கிறான். துரையின் எச்சிலை தின்கிறான். ஆனால் தன் ஆத்மாவை துரை தொடவே அவன் அனுமதிக்கவில்லை. துரை மிஞ்சிய வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே வெறுத்து , தன்னிரக்கம் கொண்டு நரக வாழ்க்கை வாழும் தண்டனையை அளித்துவிடுகிறான். ஆண்டான் அடிமையின் உடலை அடிக்கிறான். அடிமை ஆண்டானின் ஆத்மாவை அடித்துவிடுகிறான்

மிகச்சிறந்த கதை ஜெ. சொல்லிச் சொல்லி தீராது. இந்த மின்னஞ்சலை என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியிருக்கிறேன்.

எக்ஸெல்- குமார் முத்துநாயகம்

***

அன்புள்ள ஜெ,

ஊமைச்செந்நாய் கதையில் வரும் யானையின் சித்திரம் மிக அற்புதமாக இருந்தது. அதன் ஒவ்வொரு அசைவும் அப்படி நுட்பமாகச் சொல்லபப்ட்டிருந்தது. யானை எப்போதுமே பாறையை ஒட்டித்தான் மறைந்து நிற்கும். அதன் Camouflage   அப்படிப்பட்டது. அதன் செவியாட்டல்களை வைத்துத்தான் அதன் மொழியை புரிந்துகொள்ல முடியும். ‘பொறுமையில் மனிதன் மிருகத்துடன் போட்டி போட முடியாது’ காட்டை நன்றாக அறிந்தவன் சொல்லக்கூடிய வரி அது. யானை ஆறுநாட்கள் வரை அப்படி ஒருவனுக்காக ஒரே இடத்தில் காத்து நின்றதை நான் அறிவேன். யானையின் மூர்க்கமும் தந்திரமும் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. என் வாழ்த்துக்கள்

அதேபோல ‘கொல்லப்பட்ட மிருகம் தெய்வீகமானதாக தோன்றிவிடுகிறது’ என்ற வரி அற்புதமானது. வேட்டைக்குச் சென்றவர்களுக்கு அது தெரியும். மிருகத்தைக் கொன்றதுமே ஒரு பெரிய மனச்சோர்வும் துக்கமும் வந்துவிடும். நான் வேட்டையை விட்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது காட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்கிறேன். ஆனாலும் அந்த நாட்களை உங்கள் வரிகள் வழியாக தெளிவாக உணர்கிறேன். கொல்லப்பட்ட மிருகம் நம்மை விட்டு போவதே கிடையாது. நம்முடைய கனவில் நாம் கொன்ற மிருகங்கள்தான் அதிகமும் வரும்.

அந்த யானை கொல்லப்பட்டு கொம்புகுத்தி விழும் காட்சி ஒரு பெரிய சினிமாக்காட்சி போல் இருக்கிறது. அந்தக் காட்சியை எழுதுவதற்கு மிகச்சிறந்த எழுத்தாளனால்தான் முடியும்.

வாழ்த்துக்கள்

அருணாச்சலம்
[தமிழாக்கம்]

அன்புள்ள ஜெ,

செந்நாய் என்றால் எந்த மிருகம்? ஓநாயா? இல்லை காட்டு நாய் என்று சொல்வார்களே அதுவா?

அருண்

அன்புள்ள அருண்

சரியான உயிரியல் பேர் என்ன தெரியவிலை. இங்குள்ள காடுகளில் ஓநாய் கிடையாது. செந்நிறமும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு வகை நாய்தான் உண்டு. பெரிய காது. கிட்டத்தட்ட நாட்டுநாய்க்கும் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் நடுவே உள்ள விலங்கு. மனிதர்களுடன் பழகாது. அபாயகரமனது. பெரும்பாலும் கூட்டங்களாகவே நடமாடும். சில சமயம் தனியாகவும் தென்படும். மனிதர்களை தாக்கும். ஆனால் பொதுவாக குரைக்கவே குரைக்காது. மிகமிக அமைதியானது. மங் மங் என்று முனகும் என்றும் ஊளை போடும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த செந்நாயை சமீபத்தில் அவலாஞ்சி சென்றபோது அங்கே பார்த்தோம். தனியாக அணைக்கட்டுக்குள் ஓடி காட்டுள் நுழைந்தது
ஜெ

ஊமைச்செந்நாய்

முந்தைய கட்டுரைபொருளியல் விபத்து:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2