‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13

பகுதி இரண்டு : அலையுலகு – 5

அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி போல் சொட்டி நின்றிருந்தது.

அப்பால் மீண்டும் அப்பால் என அதை நோக்கி அணுகலோ விலகலோ இன்றி நின்றிருந்த இறுதிக் கணத்தை உணர்ந்தபின் அவன் விழித்துக் கொண்டபோது ஒரு காட்டின் சேற்று மண்ணில் மல்லாந்து படுத்திருந்தான். தலைக்கு மேல் மரக்கிளைகளின் இலையடர்வினூடாக வந்த ஒளி வெள்ளிச் சரடுகளென நீண்டு இளம்பச்சை வட்டங்களென புல்லிலும் இலையிலும் விழுந்து ஊன்றி நின்றிருந்தது. ஒளிக்கு கூசிய கண்கள் நீர்வழிய, எங்கிருக்கிறோம் என தேடித் தவிக்கும் மேல் மனம் ஒன்றன் மேல் ஒன்றென அலையடித்த ஆழ்மனத்து கனவுகளின் மீது தத்தளித்து தத்தளித்து பிடியொன்றை அடைந்து இங்கே இக்கணம் என்று தன்னை உணர்ந்தது.

அருகே ஓர் இருப்பை தன் உடலால் உணர்ந்தவனாக கை நீட்டி தன் வில்லுக்காகத் துழாவி அது இல்லையென்று அறிந்த கணமே நிகழ்ந்ததனைத்தையும் உணர்ந்து புரண்டெழுந்து கால் மடித்து அமர்ந்து எதிரே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த பெண்ணை நோக்கினான். மான்தோல் ஆடையை உடல் சுற்றி, கழுத்தில் கல்மணி மாலையும் காதுகளில் நாகபடத் தோடும் அணிந்து சிறிய கூரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த அவள் அவ்வசைவில் சற்றும் திடுக்கிடவில்லை. பழுத்த மாவிலையின் பொன்னிறம் கொண்ட அவள் தோள்களில் நாக படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. நாகச்சுருள்கள் புயங்களில் வளைந்து முழங்கையில் வால்நெளித்தன. நெற்றியில் நீள்பொட்டு என நாநீட்டி படம் விரித்த சிறு நாகம்.

“அஞ்சவேண்டியதில்லை இளவரசே” என்றாள் அவள். “யார் நீ?” என கேட்டபடி கை நீட்டி தரையில் கிடந்த சப்பையான கல்லொன்றை தொட்டான். “படைக்கலங்கள் தேவையில்லை. நான் உங்கள் எதிரி அல்ல” என்று அவள் சொன்னாள். “இக்காட்டை ஆளும் நாகர் குலத்தலைவன் கௌரவ்யரின் மகள் உலூபி நான்.” அர்ஜுனன் “நீருக்குள் வந்து என் கால் பற்றியவள் நீயா?” என்றான். “ஆம், தங்களை இங்கு கொண்டுவந்தேன்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஏன்?” என்றான். “நான் விழையும் ஆண்மகன் என உங்களை உணர்ந்தேன்” என்றாள் உலூபி.

“பெண்களால் சிறைபிடிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் புன்னகைக்க சற்றே சினம்கொண்டு “நான் யார் என்று அறிவாயா?” என்றான். அவள் “நீங்கள் இக்காட்டிற்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர். எங்கள் குலப்பாடகரும் உங்கள் புகழை பாடுவதுண்டு. என் நெடுந்தவம் கனிந்தே இக்காட்டிற்குள் நீங்கள் கால் வைத்தீர்கள் என்றுணர்கிறேன்” என்றாள். அர்ஜுனன் திரும்பி அடர்காட்டை நோக்கினான். “இக்காட்டிற்குள் மானுடர் எவரும் இல்லை என்றல்லவா சொன்னார்கள்?”

அவள் “நாங்கள் மானுடரல்ல. பாரத வர்ஷம் என்று நீங்கள் சொல்லும் நிலத்தை நிறைத்துள்ள மானுடர் எவருடனும் நாங்கள் இல்லை” என்றாள். “இளையவளே, உன் விழைவை போற்றுகிறேன். ஆனால் இங்கு மணம் கொள்வதற்காக நான் வரவில்லை. என் உள்ளம் நிறைந்த பிறிதொருத்தி இருக்கிறாள்” என்றான். உலூபியின் கண்கள் சற்று மாறுபட்டன. “ஆம், அதையும் அறிவேன். ஐந்தில் ஒரு பங்கு” என்றாள். அர்ஜுனன் அக்கணம் தன்னுள் எழுந்த எரிசினம் எதற்காக என்று தானே வியந்தான். “நன்று! அரசியல் அறிந்துள்ளாய். என்றேனும் ஒரு நாள் இக்காட்டிற்குள் நாகர்கள் அரசமைப்பார்கள் என்றால் முடி சூடி அமரும் தகுதி கொண்டுள்ளாய். வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தான்.

அவள் அவன் பின்னால் வந்தாள். “நில்லுங்கள்! இக்காட்டிலிருந்து எனது துணையின்றி நீங்கள் மீள முடியாது. நீங்கள் வழியறியாதிருக்கவேண்டும் என்றே நீருள் வந்து கால் பற்றி இழுத்துக் கொண்டு வந்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “எவ்விடத்திலேனும் சென்றடைய எண்ணுபவனே வழி பற்றி துயர் கொள்வான். சென்று கொண்டே இருப்பதை மட்டும் இலக்காகக் கொண்டவன் நான். என் கால்கள் செல்லுமிடமே என் வழி” என்றான். அவளை நோக்கி தலையசைத்தபின் இலைசெறிந்த கிளைகளை மெல்ல விலக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் மீண்டும் வந்து இணைந்துகொண்டன அவை. அவன் காலடியோசை காட்டில் நாடித்துடிப்பு போல ஒலித்தது.

“இளைய பாண்டவரே, காதல் என்ற ஒன்றை இவ்வாழ்வில் நீங்கள் அறியவே போவதில்லையா என்ன?” என்று உலூபி கேட்டாள். எளிய காட்டுமகளின் கேள்வி அது என்று சித்தம் உணர்ந்த அக்கணமே தன் ஆழம் கோல் கொண்ட பெருமுரசென அதிர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். திரும்பி “என்ன சொன்னாய்?” என்றான். “இப்புவியில் அல்லது அவ்விண்ணில் பிறிதெவரையும் உங்களுக்கு நான் நிகர் வைக்கவில்லை. உடல் கொண்டு இங்கு வாழும்கணம் வரை நீரன்றி பிறிதெதுவும் என் உடல் நோக்கப்போவதில்லை. உயிர் நீத்தபின் நெருப்பு மட்டுமே அதை அறியும். உங்களுக்கு மட்டுமே என பூத்த ஓர் உள்ளத்தின் காதலை இதுவரை நீங்கள் அறிந்ததில்லை. இன்று உங்கள் முன் அது நின்றிருக்கையில் உதறி மேற்செல்ல முடியுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!”

கனிவும் உறுதியும் ஒருங்கே தெரிந்த அவ்விழிகளை நோக்கி சில கணங்கள் நின்றபின் ஏதோ சொல்ல வந்து அச்சொல் தன்னுள் அப்போதும் திரளாமையை உணர்ந்து தலையை அசைத்து அர்ஜுனன் திரும்பி நடந்தான். செறிந்த புதர்களை கைகளால் விலக்கி தலை தொட்ட விழுதுகளைப்பற்றி ஊசலாடி கிளைகளில் கால்களால் தொற்றி மறுபக்கம் தாவி சென்றான். பறவைகளின் ஓசையிலிருந்து பொழுதறிந்தான். ஒளி சாய்ந்த கோணத்தில் திசை தேர்ந்தான். கங்கை மேற்கே இருக்கும் என்று நிலம் சரியும் விதம் நோக்கி உய்த்தான். பொழுது இருளும்போது கங்கையின் கரைச்சதுப்பை அடைந்திருந்தான்.

கங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றோடைகளின் நீர் இருண்டிருந்தது. பல்லாயிரம் தவளைக் குரல்களாக அந்தி எழுந்து வந்து சூழ்ந்தது. அவன் உடல் வெக்கை கொண்டு எரிந்தது. கழுத்திலும் விலாவிலும் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சேற்று விளிம்பில் வந்து நின்றான். தெப்பமொன்றைக் கட்டி கங்கையில் இறங்கி கிளம்பிச் செல்வதென்று முடிவெடுத்தான். மரக்கிளைகளை வெட்டுதற்கோ கொடிகளை அறுத்து வடமாக்குவதற்கோ அவனிடம் உலோகம் ஏதும் இருக்கவில்லை என்றறிந்து நீர்க்கரையில் செயலற்று நின்றான்.

விடிந்தபின்பன்றி அங்கிருந்து செல்லமுடியாது என்று எண்ணியதுமே துரோணரின் குரல் நினைவிலெழுந்தது. ஒவ்வொருநாளும் விடியும் முதற்கணத்தில் அருகே வரும் தினி என்னும் தெய்வம் முடிவெடுக்கிறது ஒருவன் எங்கு மாலையில் உறங்கவேண்டும் என்று. நிசி என்னும் தெய்வத்திடம் அவனை கையளித்துவிட்டு மறைகிறது. தினி அறிவின் தெய்வம். நிசி உணர்வுகளுக்குரியவள். தினி வெண்மயில்மேல் ஏறியவள். நிசி கருநிறப் பருந்தில் அமர்ந்தவள். தினி மண்ணில் நடப்பவள். நிசி இருண்ட முகில்களின் மேல் ஏறி வான் முடிவின்மையை அளப்பவள்.

நீர் இருண்டபடியே வந்தது. காடு விழியில் இருந்து மறைந்து பல்லாயிரம் ஓசைகளின் பெருக்கென அவனை சூழ்ந்தது. கரையோரத்து ஆலமரமொன்றின் விழுதில் தொற்றி ஏறி கவண்கிளையொன்றில் கால் நீட்டி அமர்ந்தான். அவ்வழி நீள எதையும் உண்டிருக்கவில்லை என்று பசித்தபோதே உணர்ந்தான். கங்கையில் இறங்கி விடாய் தீர்க்கவும் மறந்திருந்தான். அருகிலேயே பலாப்பழம் பழுத்திருப்பதை நறுமணம் சொல்லியது. இறங்கிச்சென்று பசியாறவும், விடாய் தீர்க்கவும் உடல் விழைந்ததென்றாலும் உள்ளம் சலித்து விலகி நின்றது. தன் விடாயை பசியை பிறிதெவருடையதோ என நோக்கியபடி உடலருகே நின்றிருந்தான்.

எண்ணங்கள் பிசிறுகளென சுழன்று அமைந்து ஏதோ காற்றில் திகைத்து எழுந்து ஆறுதல் கொண்டு மீண்டும் அமைந்து எழுந்தன. நெடுந்தூரம் வந்துவிட்டதை உடற்களைப்பு காட்டியது. ஆனால் வந்த வழி ஒரு காட்சியெனக்கூட நினைவில் எஞ்சவில்லை என்றுணர்ந்தான். ஒரு கணத்திற்கு அப்பால் இருந்தது அவன் தொடங்கிய இடம். அங்கே அவள் நின்றிருந்தாள். ஒரு கணம். அங்கிருந்து இங்கு வரை அவனைக் கொண்டு வந்தது ஓர் எண்ணம் மட்டுமே. ஓர் எண்ணம் என்பது ஒரு கணம். என்ன எண்ணம்? விலகு விலகு என்னும் ஒற்றைச் சொல்லால் அன்றி அவ்வெண்ணத்தை மீட்க முடியவில்லை. நூறு நூறாயிரம் சொற்களில் இடைவிடாது பகலெங்கும் அலையடித்தது அவ்வொற்றைச் சொல் மட்டுமே.

உடல் சலித்து புரண்டு அமர்ந்தான். கண்களை மூடி தன் உள்ளத்தின் ஒவ்வொரு மூடிய கதவாக திறந்து நோக்கினான். எதை அஞ்சி ஓடி வந்தேன்? அஞ்சவில்லை. இங்கெனக்கு ஏதுமில்லை என்றுணர்ந்து திரும்பினேன். இல்லை, அஞ்சி ஓடினேன். புண்பட்ட விலங்கின் விரைவு கொண்டிருந்தேன். எதை அஞ்சினேன்? அஞ்சுவது நானா? அச்சமின்மை என்பதே முதல் மறை எனக்கொண்ட அஸ்தினபுரத்து பார்த்தன் நான். அஞ்சினேன் அஞ்சினேன் என்று அவனுள் பிறிதொருவன் சொல்லிக் கொண்டிருந்தான். சினந்து திரும்பி அவன் தோள்பற்றி “சொல்! எதை அஞ்சினாய்” என்றான் பிறிதொருவன். “நீ நன்கறிந்த ஒன்றையன்றி பிறிது எதை அஞ்ச முடியும்?” என்றான் பிறிதொருவன். நன்கறிந்த ஒன்றை, சொற்களில் நீ புதைத்து விட்ட ஒன்றை…

அவன் எழுந்து ஆலமரக்கிளையில் நின்றான். திமிறும் எண்ணங்களுடன் அமர்ந்திருக்கலாகாது. இக்கணம் தேவை ஒரு புரவி. மரக்கிளைகள் அறைந்து விலக, கூழாங்கற்கள் தெறித்து பின்னால் பாய, காற்று கிழிபட்டு இருபக்கமும் விலக, திசையற்ற வெளி ஒன்றை நோக்கி விரையவேண்டும். அல்லது ஒழியாத அம்பறாத்தூணியொன்று, நாணொலிக்கும் வில்லொன்று, விழிமுதல் கால்பெருவிரல் வரை உடல்விசை அனைத்தையும் ஒருங்கு குவிக்கும் இயலாஇலக்கு ஒன்று வேண்டும். எத்தனை ஆயிரம் இலக்குகளின் ஊடாக என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன்! சிதறிப்பரவும் சித்தம். வெண்பளிங்கில் விழுந்த நீர்த்துளி. குவித்து ஒன்றாக்கி மீண்டும் குவித்து துளியாக்கி அதை நோக்கி நின்றிருக்கிறேன்.

விண்மீன்களை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. கண் மூடி அமர்ந்தபோது இடைவெளியின்றி விண்மீன் செறிந்த வான் நினைவில் எழுந்தது. சில கணங்களுக்குள்ளேயே விண்மீனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று தோன்றியது. விழுதுகளை பற்றிக்கொண்டு மரத்தின்மேல் ஏறினான். கிளைகளில் கூடணைந்த பறவைகள் கலைந்து எழுந்து இலைகளினூடாக சிறகுரச பறந்து குரலெழுப்பின. உச்சி மரக்கிளை ஒன்றை அடைந்து வானை ஏறிட்டு நோக்கினான். முற்றிலும் இருண்டிருந்தது. விழிகளை சுழற்றி இருளின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் விழியோட்டினான். வெறும் இருள்.

அது வானல்ல என்று தோன்றியது. பல்லாயிரம் நாகங்கள் தலைகீழாக தொங்கும் ஒரு பெருவெளிநெளிவு இக்காடு. அவை உதிர்ந்து சென்றடையும் அடியிலா இருள் அவ்வானம். அவ்வெண்ணமே அவனை மூச்சுத்திணற வைத்தது. பிடி நழுவி கிளைகளிலிருந்து கீழே விழுந்துவிடுவோம் என்று எண்ணினான். விழுதொன்றை எடுத்து தன் உடலுடன் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். தொலைவில் என எழுந்து கொண்டிருந்த தவளையின் இரைச்சலை நினைவு கூர்ந்தான். வானம் முகில்மூடி இருக்கும். தவளைக் குரலை வைத்துப்பார்த்தால் பெருமழை பொழியப்போகிறது. பெருங்கடல்கள் எழுந்து வானமாகி அலையின்மையாகி அசைவின்மையாகி நின்றிருக்கின்றன.

அங்கு அமர்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு மேலே நோக்கிக் கொண்டிருந்தான். எந்தையே, அங்கிருக்கிறீர்களா? நினைவறிந்த நாள் முதல் உங்களை என் தந்தை என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் கைவிரல் தொட்டு கண்மலர்ந்திருக்கிறேன். வெண்முகில்களிறு மேல் மின்னல் படைக்கலம் ஏந்தி செஞ்சுடர் மணிமுடி சூடி எழுகிறீர்களா? உங்கள் பெருமுரச முழக்கத்தை கேட்க விழைகிறேன். வான் கிழித்தொரு கணம் உங்கள் ஒளிர்படைக்கலம் எழக்காண வேண்டும் நான். எந்தையே எங்குளீர்?

இந்தத் தனிமையில் நான் எதை எண்ணி இங்கு காத்திருக்கிறேன்? எண்ணங்கள் ஊறி நிறைந்து உடல் எடை கொண்டது. அவ்வெடை தாளாது அமர்ந்திருந்த கிளை கூட தழைவதாக உளமயக்கெழுந்தது. நீர்வீங்கி உடையும் அணைக்கட்டை இரு கைகளாலும் உந்திப்பற்றி உடல் நெருக்கி நின்றிருக்கிறேன். ஒவ்வொரு கல்லாக பிளவுண்டு நெறிந்து இளகும் ஒலியை கேட்கிறேன். கணம் கணம் என அத்தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் செய்யக்கூடுவதொன்றே. என் கையை விலக்குவது. நிகழ்க என்றொரு ஒற்றைச்சொல்லுடன் நின்றிருப்பது. என் ஆணவம் என்னை தடுக்கிறது. அல்லது அச்சமா? இரண்டுமில்லை. உருவழிந்து இல்லாமல் ஆவதை எண்ணி அடையும் பதற்றம் அது.

இப்புவியில் உள்ளவை அனைத்தும் வானை அஞ்சுகின்றன. இவ்வனைத்தையும் அள்ளிப்பற்றி விளிம்புகளை கரைத்தழித்து தன்னுள் கரந்துகொள்ள விழையும் பேராற்றலுடன் கவிந்திருக்கிறது வானம். நான் நான் நான் என்று இங்குள்ள ஒவ்வொன்றும் ஓலமிடுகின்றன, அவ்வொற்றைச் சொல்லில் அனைத்தையும் அள்ளி இழுத்துக் குவித்து தானென்றாக்கி நின்றிருக்கின்றன. அச்சொல் பல்லாயிரம் சரடுகளின் ஒரு முடிச்சு. அது அவிழும் கணம் உருவழிகிறது. வான் விளிம்பென எழுந்த மெல்லிய கோடு கலைகிறது. குடவானம் மடவானம் என்றாகிறது.

இரு கைகளாலும் கண்களை அழுத்தி குனிந்து அமர்ந்திருந்தான். சில கணங்கள் மை நிற இருளை கைகளால் அள்ளி வழித்து விலக்கியபடி எங்கோ செல்வது போல் இருந்தது. எவரோ ஒருவர் தோள்தொட்டு அழைப்பது போல. பல்லாயிரம் கைகள் அவனை அள்ளித்தூக்கிக் காற்றில் வீசிப்பிடித்தன. மானுடக் குரல்களின் பேரோசை. அலையடிக்கும் கைகளின் காடு. எழுந்தமைந்து அதன்மேல் அலைக்கழிந்தான். விழித்தபோது கீழே காட்டுக்குள் கிளைகளை உலைத்து இலையோசை எழுப்பியபடி காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான்.

மீண்டும் அக்கனவை நனவில் கண்டான். மதலையென சிறுகையில் வில்லெடுத்து அடைந்த முதல் இலக்கு. புகழ் என்னும் வெண்களிறு மீது ஏறி அமர்ந்த நாள். பின்பு ஒரு போதும் அவன் இறங்கியதில்லை. அன்று அரண்மனைக்கு மீளும்போது தேரில் தனித்து அமர்ந்து தலை குனிந்து எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். அருகே மாலினி அமர்ந்திருந்தாள். “வென்றீர் இளவரசே! இந்நகரை. இப்பாரதப் பெருநிலத்தை” என்றாள். “இந்திரனின் மைந்தர் நீங்கள். இப்புவியில் இன்று வில்லெடுத்து உங்கள் நிகர் நிற்க எவருமில்லை.”

அவன் தலைநிமிரவில்லை. குனிந்து அவனை நோக்கி “ஏன் துயருற்றிருக்கிறீர்கள்?” என்றாள். “விலகு” என்று சொல்லி அவள் கையை எடுத்து வீசினான். “ஏன் இளவரசே?” என்றாள். “என்னைத் தொடாதே” என்றான். “ஏன்?” என்றாள். “தொடாதே” என்று கூவியபடி எழுந்தான். “சரி, தொடவில்லை” என்று சொல்லி அவள் கையை விலக்கி தேரின் மறு எல்லைக்கு நகர்ந்தாள். சினத்துடன் அவளை நோக்கியபடி தேர்த்தூணைப்பற்றியபடி நின்றான். சகடங்களின் நகர்வில் அவன் உடல் அசைந்தது. கல்லொன்றில் ஆழி ஏறி ததும்ப சற்று நிலைதடுமாறினான். “அமருங்கள் இளவரசே” என்றாள். அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அமருங்கள் என் அரசே” என்றாள். மெல்ல அமர்ந்து கொண்டு தலை குனிந்தான். அவளுடைய நோக்கை தன்னுடலில் உணர்ந்தான். பின்பு “நீ வேறு எவரையாவது பெரிதென நினைப்பாயா?” என்றான். “என்ன கேட்கிறீர்கள்?” என்றாள் மாலினி. “எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு?” என்றான். “இளவரசே, நான் உங்கள் செவிலி. உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள்.” அவன் தலைதூக்கி “நான் வளர்ந்தால்?” என்றான். அவ்வினாவை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை. “சொல்! நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய்? வேறொரு குழந்தையை வளர்ப்பாயா?”

மாலினியின் முகம் மாறியது. “இல்லை வளர்க்கமாட்டேன்” என்றாள். “வேறு எவரையாவது…” என்று சொன்னபின் அவன் சொல் சிக்கிக் கொண்டு நிறுத்தினான். “இல்லை இளவரசே” என்று சொன்னாள். இருவிழிகளும் தொட்டுக் கொண்டபோது அவன் எண்ணிய அனைத்தையும் அவள் பெற்றுக் கொண்டாள். “இளவரசே, இப்புவியில் நான் வாழும் காலம்வரை எவ்வடிவிலும் பிறிதொரு ஆண்மகன் எனக்கில்லை” என்றாள். அச்சொற்கள் மேலும் சினத்தை அவனுக்கு ஊட்டின. தலை திருப்பி பந்தங்கள் எரிந்த அஸ்தினபுரித் தெருக்களை நோக்கினான். அவள் கை நீண்டு வந்து அவன் தோளைத் தொட்டது. அப்போது அதை எதிர்க்கத் தோன்றவில்லை. மெல்ல அவனை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

நீள்தொலைவில் மெல்லிய செருமலோசை போல் இடி முழங்கியது. முகில் சரிவுகளில் உருண்டுருண்டு மேலும் நெடுந்தொலைவில் எங்கோ விழுந்து மறைந்தது. தன்னருகே இலைப்பரப்புகள் மெல்லிய ஒளி கொண்டு மறைந்ததை அர்ஜுனன் கண்டான். மான்விழிகள். மதலைஇதழ்கள். மீன்கள். குறுவாட்கள். அரவுச்சுருள்கள். மீண்டும் ஒருமுறை அவை மின்னி அணைந்தன. கன்றின் நாக்குகள். கனல்பட்ட வேல்முனைகள். திரும்பி கீழ்த்திசையை நோக்கினான். இருள்வெளி அசைவின்றி காத்திருந்தது. கணங்கள் ஒவ்வொன்றாக கடந்துசெல்ல ஒரு முகில்குவை ஒளிர சுடர் ஒன்றை எவரோ சுழற்றி அணைத்தனர். அப்பால் இடியோசை ஒன்று பிறிதொன்று என தொட்டு திசைச்சரிவில் இறங்கிச்செனறது.

‘பிறிதொன்றிலாத’ என்ற சொல்லை அவன் அடைந்தான். யார் சொன்னது? மிக அண்மையில் எவரோ அவனிடம் சொன்னார்கள். பிறிதொன்றிலாத, பிறிதொன்றிலாமை, பிறிதொன்று, பிறிது… பிறன் என்பதைப்போல் நச்சு நிறைந்த கோப்பை உண்டா என்ன? பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது? பிறிதொன்றிலாமை, பிறிதொன்றிலாமை. அவன் உடல் நடுங்கத்தொடங்கியது. கண்களை மூடிக் கொண்டான். இமைக்குள் செங்குருதி அனலென பற்றி ஒளிவிட்டு அணைந்தது. குருதி ஒளிரும் குளம் ஒன்றில் முழுகி எழுந்தது போல் இமைக்குள் ஒளிக் கொப்பளங்கள் மின்னிச் சுழன்று பறந்தன.

மறுகணம் அவன் தலைக்கு மேல் பேரொலியுடன் வானம் வெடித்துக் கொண்டது. ஒலியில் மரங்கள் அதிர முடியுமென்று அன்றறிந்தான். சிலிர்த்து அதிர்ந்த அவன் உடல் அடங்குவதற்குள் மொத்தக் காடும் ஒருகணம் ஓசையின்றி அவன்முன் தெரிந்தது. பின் முகிற்குவைகளனைத்தும் பெரும்பாறைகளென மாறி மண்ணுக்கு வந்து மண்ணை அறைந்து உருண்டு செல்வதைப் போல் இடியோசைகளால் அவன் சூழப்பட்டான். தன்னுணர்வு மீண்டபோது நெஞ்சில் கைவைத்து “எந்தையே!” என்று அவன் கூவினான். “எந்தையே! எந்தையே!” என்று அரற்றிக் கொண்டிருந்தான்.

அப்பால் இருளுக்குள் இலைகளின் மீது மழைத்துளிகள் அறையும் ஓசை கேட்டது. பறவைகள் உடல் இறுக்கி குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும் குறுகல்கள். மழை கொண்ட காடு ஓலமிட்டது. சூடுஏறும் அடுப்புக்கலத்து நீர் போல. பின்பு அம்புகளென அவனைச் சூழ்ந்து இலைகளனைத்தையும் தைத்து அதிரவைத்தபடி மழை கடந்து சென்றது. ஒரு கணத்தில் முற்றிலும் குளிர்ந்துவிட்டான். தாடியிலும் தலை முடியிலும் வழிந்த நீர் சொட்டுகளாகி பின்பு முறியாச் சரடுகளாகியது. வானம் கரிய பசுவென்று உருக்கொண்டு குனிந்து தன் கருணை நிறைந்த நாவால் நக்குவதுபோல் மழை காட்டை நீவியது. பின்பு அக்காட்டின் மேல் பற்றி ஏறி தண்தழல் விட்டு நின்றாடியது.

நீர் வடங்களாக உடலை வளைத்து ஒழுகி ஒழுகி கரைக்க முயன்றது. எண்ணங்களையும் நீர் கரைக்குமென்று அறிந்தான். இறுகிக் கொதித்துச் சிதைந்து கொப்பளித்து நின்ற அனைத்தும் அடங்கி மறைந்தன. உடல் நடுங்கத்தொடங்கியபோது அகம் விழித்துக் கிடந்தது. ஒரு சொல் மிச்சமில்லை. இப்புவியிலுள்ள அனைத்தையும் சொற்களென மாற்றி அள்ளி அங்கே நிறைக்கலாம். ஏதோ எண்ணம் எழுந்து அவன் கிளையில் எழுந்து நின்றான். பின்பு விழுதைத் தொற்றி கீழிறங்கினான். தரைக்கு வந்து இடையில் கைவைத்து நின்றான். கண்மூடி ஒரு கணம் தான் வந்த வழியை நினைவிலிருந்து மீட்க முயன்றான். ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு வேர்ப்பின்னலும் உள்ளே பதிந்திருப்பதை உணர்ந்தான்.

எங்கு செல்கிறோம்? அவள் அவனை கொண்டுசென்ற அத்திசையில் எங்கோதான் நாகர்களின் சிற்றூர் இருக்க வேண்டும். அங்கு செல்வது எளிது. அவ்விடத்தை முதலில் சென்றடைய வேண்டும். அங்கு நின்றிருக்கவேண்டும். அவளைத்தேடிச் செல்லலாகாது. அங்கு பாதையிருக்கும், அதை தொடரலாகாது. அவள் வருவதற்கான பாதை அது. இன்றிரவு தன் சிறு குடிலில் அவளும் ஒரு கணமும் துயின்றிருக்கப்போவதில்லை. அவன் விட்டுச் சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாகாது. ஆம், விலகி விட்டான் என்று அவள் ஒரு கணமேனும் நம்பினாள் என்றால் அவள் அவனுக்குரியவள் அல்ல. பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளல்ல.

அவனை அறிந்திருந்தால் இரவு துயின்றிருக்கமாட்டாள். முதற்காலையில் மயங்கும் விழிகளும் நடுங்கும் உடலுமாக கால்பதற ஓடி அங்கு வருவாள். கண்ணீருடன் நெஞ்சில் கை சேர்த்து விம்மும் உதடுகளுடன் அவள் அங்கு வரும்போது விடியா இரவென்றே ஆகி நின்றிருக்கும் மழையில் சொட்டிச் சொட்டிக் கரைந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் மரங்களின் நடுவே அவனும் நின்றிருக்கக் காண்பாள். ஒரு சொல் தேவையிருக்காது ஓடி வந்து அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்ளுகையில அவளை அவன் அறிவான். பிறிதொன்றிலாமை என்ற சொல்லை இதழ்களில் வைத்த தேவியை.

மழை பிறிதொரு காடு போல் காட்டினூடாக படர்ந்து நின்றிருந்தது. தழைசெறிந்து, கிளைவிரித்து, தடிநிறுத்தி, அடிபெருத்து, வேர்பரப்பி. நூறு நூறாயிரம் முறை சென்ற வழியென அவன் கால்கள் திசை அறிந்திருந்தன. தழைக்கூரைக்கு மேல் மின்னல்கள் அதிர்ந்தபோது மழைச்சரடுகள் வழியாக அவ்வொளி இறங்கி வந்து அதிர்ந்தது. இலைப்பரப்புகளின்மேல் வழிந்த நீர் பளபளத்தது. துளிகள் மணிகளாகி மறைந்தன. இடியோசை மேல் பல்லாயிரம் பட்டுக்குவைகளை அள்ளிக்குவித்தது மழை.

அவன் மீண்டும் அவ்விடத்தை அடைந்தான். அதற்கு முன்னரே அறிந்திருந்தான் என்பதனால் மழையின் இளநீலத் திரைக்கு அப்பால் கரையும் மைத்தீற்றலென அவள் உருவம் அங்கு நின்றிருப்பதைக் கண்டபோது நெஞ்சு அதிரவில்லை. அவளல்ல அவளல்ல என்று சொல்லி அக்கணத்தின் பேருவகையை மேலும் சற்று ஒத்திப்போடவே அவன் உள்ளம் எழுந்தது. ஆனால் தொட்டுத் தொட்டு அறிமுகமான அனைத்தையும் கொண்டு அம்மைத்தீற்றலை அவளென வரைந்தெடுத்தது விழிகளில் உறைந்த சித்தம்.

நெஞ்சில் கை கோத்து நின்ற அவளுடைய தோள்களின் குறுகலை, புயங்களின் மேல் கோடுகளென பரவி இருந்த கூந்தலை, சற்றே குனிந்து நின்ற முகத்தில் இமை தழைந்திருந்த விழிகளை, ஒன்றோடொன்று ஒட்டிக் குவிந்திருந்த சிற்றுதடுகளை, கன்னப் பூமயிர்ப் பரவலை மணல்வரிகளென்றாக்கி வழிந்த நீரை, வாழைவளைவுகளிலென நீர்த்தாரைகள் வழுக்கி இறங்கிய மார்புக்குழியை அருகில் நின்றவன் போல் கண்டான்.

மிக அருகே அவன் அணைவது வரை அவள் அவனை அறியவில்லை. அவன் நின்றபிறகே உடலால் உணர்ந்து விழிதூக்கினாள். மார்பில் குவிந்த கைகள் உயிரற்றவை என இருபக்கமும் இழிந்தன. முலைகள் எழுந்தமைந்தன. உதடுகள் மெல்ல பிரிந்தன, மீண்டும் ஒட்டிக் கொண்டன. அதுவரை தனித்து பிரிந்து பறந்து தொடர்ந்து வந்தது போல் உடனிருந்த அச்சொல் சென்று கிளையமர்ந்து சிறகு கூப்பியது. பிறிதொன்றிலாமை.

முந்தைய கட்டுரைசேலம் பகடால நரசிம்மலு நாயுடு
அடுத்த கட்டுரைபாலக்காட்டில் பேசுகிறேன்