சடங்குகள் தேவையா?

imagesizer

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் திருவேங்கடம், சென்னையில் இருந்து எழுதுகிறேன். இதுதான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

எனது வாசிப்பை உங்களின் அறம் சிறுகதைத் தொகுப்பில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறேன். மிக நல்ல தொடக்கமாக அது அமைந்தது. எளிய வாசகனான என்னை அக்கதைகள் மிகவும் பாதித்தன. குறிப்பாக, யானை டாக்டர், நூறு நாற்காலிகள் மற்றும் சோற்றுக்கணக்கு போன்ற கதைகள் என்னை மிரட்டிவிட்டன. தொடர்ந்து வாசிக்கிறேன். வாசிப்பனுபவம் மிகச்சாதாரண வாழ்வையும் ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. இத்தகைய அனுபவத்தை வாசிப்பின் ஆரம்பத்திலேயே அளித்தமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி.

நான் தற்போதுதான் இளம் பருவத்தை கடந்து வருகிறேன். அதிலும் உலகின் இளம் துறையான மென்பொருள் துறையில் இருக்கிறேன். இவ்வயதில் பொதுவாக தோன்றும் எல்லா அவநம்பிக்கைகளும் என்னை தற்போது ஆட்டி படைக்கின்றன. மதம் மற்றும்சடங்குகளில் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. அதிலும் மிக முக்கியமாக வாஸ்து மற்றும் ஜாதகம். என் குடும்பம் இவை எல்லாவற்றிலும் மிக அதிகமான நம்பிக்கை கொண்டிருக்கிறது. இதனால் எனக்கு அதிக குழப்பம். விளக்கம் கேட்டு அணுகினால் இதுவரை நடுநிலையான விளக்கம் கிடைக்கவில்லை. இந்த வயதில் இப்படித்தான் தோன்றும், போக போக சரியாகிவிடும் என்றும், அப்படி ஒன்று இல்லை, வெறும் வியாபாரத்திற்காக இவற்றை திணிக்கிறார்கள் என்றும் பதில் கிடைக்கிறது. உங்களின் அறிவுரை வேண்டி எழுதுகிறேன்.

அன்புடன்,

திருவேங்கடம் ச.

koodalmanikyam irinjalakuda [கூடல்மாணிக்க ஆலயம்]

அன்புள்ள திருவேங்கடம்,

நம்சூழலில் வளரிளம் பருவம் முதல் எழுந்துவரும் கேள்விகளும் குழப்பங்களும்தான் இவை. மரபு உங்களுக்கு சிலவற்றை அளிக்கிறது. நீங்கள் அவற்றை உங்கள் பகுத்தறிவால், அனுபவ அறிவால் பரிசீலிக்கிறீர்கள். முற்றிலும் மறுக்குமளவு தர்க்கம் வலுவாக இல்லை. ஏற்க தர்க்கம் விடுவதுமில்லை. ஆகவே ஏற்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது.

உண்மையில் இங்குள்ள சிக்கல் என்னவென்றல் அனுபவங்கள் வளர்ந்திராத, தர்க்க அறிவு வலுப்படாத இவ்வயதில் இறுதியான நிலைப்பாடுகளை எதைப்பற்றியும் எடுக்கமுடியாது என்பதுதான். வாழ்க்கை நீள நீள அனுபவங்கள் நம் எளிய நிலைபாடுகளை மோதி உடைக்கின்றன. ஆகவேதான் இருபதுகளில் நாத்திகம் பேசி நாற்பதுகளில் தலைகீழாக ஆத்திகம் பேசுபவர்களாக இருக்கிறோம்.

இந்த இரு எல்லைகளுமே தேவையில்லை. இன்று கறாரான நாத்திகவாதியாக உங்களை உருவகித்துக் கொள்ளவேண்டியதில்லை. அப்படி இருந்தால் நேர் எதிர்நிலைக்குச் சென்று மூடநம்பிக்கையாளனாக ஆகவும் நேராது. ‘இன்று எனக்கிருக்கும் அனுபவம் மற்றும் அறிவைக்கொண்டு இன்று என்னைச்சூழ்ந்திருக்கும் வாழ்க்கையை இன்றையத்தேவைக்கு ஏற்க தற்காலிகமாக வகுத்துக்கொள்கிறேன். வருவதை அப்போது சந்திப்போம்’ என்னும் நிலைபாடே சரியானது.

சிலதெளிவுகள் தேவை. ஒன்று, மதம் வேறு ஆசாரங்களும் சடங்குகளும் வேறு. மதத்திற்குள் அவை தொகுக்கப்பட்டுள்ளன. மதம் அவற்றுக்கு சில ஆன்மீகமான விளக்கங்களை அளிக்கிறது. ஆனால் அவை மதத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. மதத்தால் நிலைநிறுத்தப்படுபவையும் அல்ல.

மதம் என்பது ஒரு பிரபஞ்ச தரிசனம் [முழுமை நோக்கு], அதையொட்டிய தத்துவஅமைப்பு, அவற்றை நிலைநிறுத்தும் குறியீடுகள் மற்றும் குறியீட்டுச்செயல்பாடுகள் கொண்ட அமைப்பு. அது ஒரு மக்கள்திரளுக்குள் பரவி அவர்களின் சிறிய நம்பிக்கைகளை எல்லாம் இணைத்து வாழ்க்கைக்கூறுகளை ஒன்றாக்கிக்கொண்டு நெடுங்கால அளவில் ஒட்டுமொத்தமான ஓர் அமைப்பாக ஆகிறது.

ஆசாரங்கள் சடங்குகள் ஆகிய எவற்றுக்கும் நம் உள்ளத்திற்கு வெளியே எந்த மதிப்பும் இல்லை. அவை பொருண்மையான ஆற்றல்கள் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் எந்த ஆசாரங்களையும் சடங்குகளையும் செய்வதில்லை. என் பெற்றோருக்குரிய நீத்தார்கடன்களைக்கூட நான் செய்யவில்லை. என் இல்லத்தை வாஸ்து நோக்கி கட்டவில்லை. இன்றுவரை ஜாதகம், சோதிடம் பார்த்ததில்லை. ஓர் அத்வைதியாக எனக்கு அவை தேவை இல்லை.

ஆனால் ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பெரும்பாலும் தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து எழுந்தவை. நடைமுறை வசதிக்காக உருவாக்கப்பட்டவை அவற்றில் உண்டு. குறியீட்டு ரீதியானவை உண்டு. அவை நம்மை நம்முடைய தொன்மையான இறந்த காலத்துடன் இணைக்கின்றன.

நாம் நம் சிந்தனை என்றும் தர்க்கம் என்றும் நினைப்பவை எல்லாமே சமகாலம் சார்ந்தவை. கல்வி மூலமும் புறச்சூழல் மூலமும் அடையப்பெற்றவை. அவற்றுக்கு அடியில் உள்ள நம் ஆழ்மனம் நம் சமூகச்சூழலால், நம் மொழியால் உருவாகி வந்திருக்கிறது. அந்த ஆழ்மனம் நம் பழங்குடிக்காலம் முதலே கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு உருவானது. அதன்மேல் நம் தர்க்கபுத்திக்குப் பெரிய கட்டுப்பாடு ஏதுமில்லை.

ஆகவே நாம் தர்க்கத்தால் விலக்கும் பல சடங்குகள் நமக்கு பல இக்கட்டுகளில் தேவையாகவும் ஆகின்றன. சில சடங்குகள் நம்முடைய பழைய வேளாண் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. உதாரணமாக சித்திரை மாதத்தில் நெற்கதிர்களையும் மாவிலைகளையும் இல்லத்தில் கட்டித்தொங்கவிடும் ‘வீடு நிறைத்தல்’ என்னும் சடங்கு இங்குண்டு. அழகான இனிய சடங்கு. இயற்கையுடன் நம்மை இணைப்பது. இத்தகைய பல மங்கலச்சடங்குகளை அவை குறியீட்டுச்செயல்பாடுகள் என உணர்ந்து செய்வது நம் உள்ளத்தை மலரச்செய்கிறது. வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கின்றது. அவை இல்லையேல் வாழ்க்கை வெறும் அன்றாடநிகழ்வுகளால் ஆனதாக மட்டும் எஞ்சிவிடும்.

நீத்தார்சடங்குகள் போன்றவை பல்லாயிரம் வருடங்களாக இங்கே இருந்து வருபவை. அவையும் குறியீட்டுநிகழ்வுகளே. அக்குறியீடுகளில் இருந்து நம்மால் சாதாரணமாகத் தப்ப முடியாது. என் திரைநண்பர் ஒருவரின் தந்தை நோய் முற்றி உயிர்ப்பிணமாக நெடுநாள் படுக்கையில் இருந்தார். டாக்டர்கள் வேறுவழியில்லை ஆக்ஸிஜன் குழாயை நீக்கலாம், அது அவரை வலியின் வதையிலிருந்து காக்கும் என்று ஆலோசனை சொன்னார்கள். இவர் தர்க்கபூர்வமாக சிந்தனைசெய்தபின் அதற்கு ஒத்துக்கொண்டார். தந்தை இறந்தார்.

ஆனால் அதன்பின் கனவுகளில் தந்தை வரத்தொடங்கினார். குற்றவுணர்வில் தூக்கம் இல்லாமலாகியது. பல உளவியலாளர்களை நாடி ஆலோசனைகள் பெற்றார். பலனில்லை. என்னிடம் அதை அவர் சொன்னபோது கேரளத்தில் இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்கம் ஆலயத்தின் அருகே ஆற்றின் படிக்கட்டில் ‘சமஸ்தாபராத பூசை’ [அனைத்து பிராயச்சித்த பூசை] ஒன்றைச் செய்வார்கள், இறந்தவர்களுக்கு நாம் ஏதாவது பிழை செய்திருந்தால் மன்னிப்பு கோரும் சடங்கு அது, அதைச்செய்யுங்கள் என்றேன். அதைச்செய்தபோது அவர் ஆச்சரியகரமான விடுதலையை அடைந்தார். குறியீடுகளின் வல்லமை அத்தகையது.

வாழ்க்கை பலவிதமான இடர்கள் நெருக்கடிகள் வழியாக செல்லவேண்டிய ஒன்று. எதையும் நிரூபிப்பதற்காக நாம் இங்கில்லை. நலமாக மகிழ்ச்சியாக பயனுள்ளவர்களாக வாழ்வதற்கே இருக்கிறோம். அதற்கு இக்குறியீடுகள், குறியீட்டுச் செயல்பாடுகள் உதவும் என்றால் பிழையில்லை. ஆனால் இயல்பாக இவற்றைக் கடந்துசெல்ல உங்களால் முடிந்தால் எவற்றையும் செய்யவேண்டியதில்லை.

இவற்றை கண்மூடித்தனமான நம்பிக்கைகளாக கொண்டு வாழ்க்கையை அவற்றின் அடிப்படையிலேயே முற்றிலும் அமைத்துக்கொள்ள முயல்வது படித்தவர்களால் இயலாது. அது அறிவுக்கு இடமில்லாத வெற்றுநம்பிக்கையின் வாழ்க்கை. ஆனால் எல்லாவற்றையும் எளிய தர்க்கங்களால் விளக்கிக்கொள்ள முயல்வதும் நடைமுறை சாத்தியமல்ல.

சடங்குகள் ஆசாரங்களை வெறுமே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றை செய்பவர்கள் விளக்குவார்கள். தர்க்கபூர்வமான விளக்கம் நம் சொந்த தேடலால் வரலாற்றில், பண்பாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டியது. அது எளிதில் நிகழாது. ஏனென்றால் அதன் வழியாக நாம் நம் ஒட்டுமொத்த கடந்தகாலத்தையே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லா சடங்குகளுக்கும் ஒரே வகை விளக்கம் உதவாது. உதாரணமாக பூசையிடத்தை சாணியால் மெழுகுவது ஒரு நடைமுறைச்செயல் ஆசாரமாக ஆனது. சாணி ஒரு நல்ல நுண்ணுயிர்க்கொல்லி. மாக்கோலமிடுவது ஓர் அழகியல் செயல்பாடு. சித்திரை ஒன்றாம் தேதி அழகிய பொருட்களை கண்டு கண்விழிப்பது ஒரு மங்கலச்செயல்பாடு. திருமணத்தில் தாலிகட்டிக்கொள்வது குறியீட்டுச்செயல்பாடு. அவற்றின் தேவையை அவை அளிக்கும் பயன்களைக்கொண்டு மட்டும் மதிப்பிட்டால்போதும்

ஆனால் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றில் ஒரு கவனம் தேவை. பல ஆசாரங்களும் சடங்குகளும் சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டம் சார்ந்தவை. ஆகவே அவற்றில் இன்று மானுடசமத்துவம் மனித உரிமை போன்றவற்றுக்குச் எதிரான பல இருக்கலாம். அத்தகையவற்றை முழுமையாக நிராகரிப்பது அவசியம். எதிர்மறைக் கூறுகள் இல்லாத சடங்குகளை அவை எவ்வகையிலேனும் நமக்கு நம்பிக்கையை, உற்சாகத்தை அளிக்கின்றன என்றால் ஏற்பதும் பிழையில்லை.

நடைமுறைச்சடங்குகளும் மங்கலச்சடங்குகளும் அழகியல் சடங்குகளும் குறியீட்டுச்சடங்குகளும் இல்லாமல் மனிதன் வாழமுடியாது. பழைய சடங்குகளை தவிர்த்தாலும் கூட புதியவற்றை உருவாக்கிக்கொள்கிறோம். மலர்ச்செண்டுகளை அளிப்பது, நாடாவெட்டி திறந்துவைப்பது, படத்திறப்பு செய்வது போன்ற எத்தனை நவீனச்சடங்குகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம்Sep 29, 2015

முந்தைய கட்டுரைசுமந்திரன் கதை
அடுத்த கட்டுரைஅமெரிக்கா, கடிதம்