பகுதி இரண்டு : அலையுலகு – 4
அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் ஏழாம் உலகத்து நாகங்கள் தொற்றியும் பற்றியும் நழுவியும் வளைந்து கவ்வியும் அடிநுனியென தவித்துக் கொண்டிருந்தன.
மேலே அமைந்த ஆறு உலகங்களின் கருணையால் அமைந்திருந்தது ஏழாம் உலகு. அங்கு அவ்வப்போது இறுதிப் பற்றும் விடுபட்டு உருகும் அரக்கின் துளியென இழுபட்டு நீண்டு பின் அறுந்து இருளாழம் நோக்கி விழுந்து மறைந்தன நாகங்கள். அவற்றின் இறுதிச்சீறல்களாலான அப்பேரிருளை நாகங்கள் அனைத்துமே அஞ்சின. தலைகீழ் கருந்தழல் விரிவென ஏழு நாக அடுக்குகளான பரப்பு நெளிந்தாடிக் கொண்டிருந்தது.
முதல் உலகிலிருந்து நழுவி அள்ளிப் பற்றி உதறப்பட்டு மீண்டும் நழுவி, மீண்டும் பற்றி ஏழாமுலகத்து எல்லைக்கு வந்த அர்ஜுனன் தன் நீண்ட அரவுடலால் மேலே தொங்கிய அரவொன்றின் இடையை வளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியபடி விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் இறுதிக் கண சுருங்கலை நோக்கினான். அவன் பற்றியிருந்த நாகம் தன்னுடலை நெளித்து உருவிக் கொண்டு அவனை வீழ்த்த முயன்றது. கைகளை வீசி வளைந்தாடி எழுந்து பிறிதொரு நாகத்தையும் பற்றிக் கொண்டான். இரண்டு அரவுடல்களும் அலையிளகித் திமிறி அவனை உதற முயன்றன.
அவனருகே உடல் வளைத்து வந்த நாகம் அவன் விழிகளை நோக்கி “இங்கு நீ வாழ இயலாது மானுடனே. இங்கு உன்னை வாழவிடவும் மாட்டோம். உனக்குரியது அதலத்தின் பேரிருளே” என்றது. அர்ஜுனன் சிரித்து “கரியவனே, அங்கு மானுட உலகத்திலும் என்னிடம் இதையே சொன்னார்கள். நினைவறிந்த நாள் முதல் எனக்குரியதல்ல என்று உணரும் உலகிலேயே நான் வாழ்ந்துள்ளேன். இங்கு இருக்கும் பொருட்டல்ல, வெல்லும் பொருட்டும் கடந்து செல்லும் பொருட்டுமே ஒவ்வொரு கணமும் போர் புரிகிறேன்” என்றபடி தன் வாலை வளைத்து அவனை அறைந்தான்.
அலறியபடி தன் சுருள் பிடியிலிருந்து விலகி கீழே விழப்போன அந்நாகம் வால் சொடுக்கித் தாவி பிறிதொரு நாகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. இரு நாகங்களும் நெளிந்து ஆடி விலகிச்சென்றன. “என் பெயர் காலகன்” என்றது துணைக்கு வந்த நாகம். “என் இளமை முதலே நான் விரும்பி வந்தவள் உலூபி. இன்று எங்கள் எல்லைக்கு அப்பால் சென்று மானுடன் ஒருவனை தன்னவன் என்று கொணர்ந்திருக்கிறாள்.” வஞ்சம் ஒளிவிட்ட அவன் கண்களை நோக்கி “அது என் பிழையல்ல” என்றான் அர்ஜுனன்.
“நோக்கு, இங்கு நெளியும் பல்லாயிரம் நாகங்களில் இளையோர் அனைவராலும் விரும்பப்படுபவள் அவள். அவளை நீ கொண்டுசெல்ல இங்கு எவரும் விழையார். உன் பாதைக்கு குறுக்காக பல்லாயிரம் நச்சுப்பற்கள் எழும் என்பதை உணர்க!” அர்ஜுனன் “காலகரே, இங்கு வருகையில் உங்கள் இளவரசியைக் கொள்ளும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஆனால் இவ்வறைகூவலுக்குப்பின் அவளை மணம் கொளாது இங்கிருந்து மீள என்னால் முடியாது” என்றான்.
சினந்து வாய் திறந்து நச்சுப்பற்களைக் காட்டி சீறிய காலகன் உடல் வளைத்து தன்னை ஓர் அம்பென ஏவி அர்ஜுனன் மேல் பாய்ந்தான். தசை மோதும் பேரோசையுடன் இரு உடல்களும் முட்டிக்கொண்டன. காலகனின் கரிய உடல் தன் உடலுடன் ஆயிரம் புரிகளாக இறுக முறுக்கிக் கொண்டதை அர்ஜுனன் உணர்ந்தான். விழித்த இமையா விழிகளுடன் சீறும் நச்சு வாயுடன் அவனைக் கவ்வ வந்தான் காலகன். இருகைகளாலும் அவன் தலையைப் பற்றி விலக்கியபடி அக்கணத்தின் முடிவின்மையின் விளிம்பில் நின்று அதிர்ந்தான்.
உடல் இறுகி ஒன்றை ஒன்று முறுக்கி அசைவின்மையின் இறுதிப்புள்ளியை அடைந்தபோது அவ்விழிகளைக் கூர்ந்து நோக்கி அங்கிருந்த விழைவைக் கண்டு அர்ஜுனன் சொன்னான். “நாமிருவரும் இணைந்து அவ்விருளை சென்றடைவோம் காலகரே, மீளமுடியாமையின் பெருவெளி. அது ஒரு பெண்ணுக்காகவா?”
அச்சொல்லில் அரைக்கணம் காலகனின் பிடி நெகிழ்ந்ததும் தன்னை உருவி மீட்டுக்கொண்டு அர்ஜுனன் அவனை அள்ளி தூக்கி வீசினான். சீறியபடி இருள் நோக்கி விழுந்த காலகனை அவனது தோழன் வீசப்பட்ட பாசச்சரடென நீண்டு சென்று சுழன்று பற்றிக் கொண்டான். தோழனின் உடலில் சுற்றிக் கொண்டு சுழன்று மேலேறி வந்த காலகன் “ஒரு கணம்” என்றான். “ஆம், ஒருகணம்! அந்த ஒரு கணத்தை தன்னுள்ளில் கொண்டவன் வெல்வதே இல்லை” என்று சொல்லி அர்ஜுனன் தனக்கு மேலிருந்த நாகத்தை நோக்கி சுழன்றேறினான்.
நீரலைகள் என கருநாக உடல்கள் அங்கே நெளிந்தன. ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு பெருங்கருஞ்சுழியென அவன் தலைக்கு மேல் அவை குவிந்தன. அவற்றின் வால் நுனிகள் அவனை அறைந்து கீழே தள்ள முயன்றன. அச்சுழியின் மையத்தில் தன் தலையால் ஓங்கி முட்டினான். அத்துளைக்குள் தன்னை செலுத்திக் கொண்டபோது அது அவனை அள்ளிச் சுழற்றி மேலே உறிஞ்சிக்கொண்டது. பெருஞ்சுழலென சுற்றிக் கொண்டிருந்த நாகப்பேருடல்களுடன் முற்றிலும் தன்னை பிணைத்துக் கொண்டான்.
அவனருகே இருந்த நாகம் “என் பெயர் சந்திரகன். இத்தனை எளிதாக ஏழாம் உலகிலிருந்து ஒருவர் எங்கள் உலகுக்கு வந்ததில்லை” என்றான். அவன் உடலுடன் தன்னை பிணைத்துக் கொண்டு “நான் எப்போதும் முதல்வன்” என்றான் அர்ஜுனன். “முதல் உலகிலிருந்து உதிர்பவர்களால் ஆனது இரண்டாம் உலகு. அனைத்துலகிலிருந்தும் உதிர்ந்தவர்கள் ஏழாம் உலகை சமைக்கிறார்கள். அந்தகாரம் என்னும் அந்த உலகம் உக்ரமாலின்யம் என்றும் அழைக்கப்படுகிறது.”
“கீழிறங்குவது எளிது, மிக எளிது. மேல் வருவதற்கு பெரும் தவம் தேவை. ஏனெனில் இங்கு ஒவ்வொரு நாகமும் பிறிதொன்றை கீழே வீழ்த்தும் பொருட்டே நெளிந்து கொண்டிருக்கிறது. மேலேறி வரும் தனிநாகத்தை முந்தைய உலகின் நாகங்கள் அனைத்தும் கோட்டைச் சுவரென, ஆற்றல் மிக்க சுழியென மாறி தடுப்பது வழக்கம். இளையோனே, இங்கு ஒவ்வொரு நாகத்திற்கும் பிற அனைத்து நாகங்களும் எதிரியென ஆகும் அமைப்பே உள்ளது” என்றது பிறிதொரு நாகம். “என் பெயர் ஃபும்சலன். இங்கு நீ காணும் முடிவிலா நெளிதல்கள் அனைத்தும் இங்கிருக்கவும் மேலெழவும் பிறனை வீழ்த்தவும் உன்னும் அலைகளே.”
அவனருகே வந்த பிறிதொரு நாகம் “என் பெயர் சதயன். நீ ஆற்றல் மிக்கவன் என்றறிந்தேன். கீழே காலகனை நீ தூக்கி வீசியதை கண்டோம். ஆகவேதான் இவ்வல்லமை மிக்க பெருஞ்சுழியால் உன்னை தடுத்தோம். இதன் விளிம்பை நீ தொட்டிருந்தால் அக்கணமே தூக்கி பல்லாயிரம் யோசனை தூரத்திற்கு வீசப்பட்டிருப்பாய். ஆனால் அதன் மையப்புள்ளியை தொட்டாய். அது உன்னை உள்ளுக்கு இழுத்தது. எச்சரிக்கைகொண்டு அப்புள்ளியில் உன் வால்நுனியை வைத்து ஆழத்தை நோக்கியிருந்தால் அவ்விழு விசையில் அரைக்கப்பட்டு அணுவென்றாகி இருப்பாய். துணிந்து உன் தலையை இதனுள் நுழைத்ததனால் இவ்வுலகுக்குள் வந்து எங்களுடன் சுழல்கிறாய்” என்றது.
“என் வழி அது. எப்போதும் மையங்களையே நாடுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவனைச் சூழந்து பறந்து கொண்டிருந்த நாகங்களின் உடல்களின் அலை நெளிவுகள் வழியாக தன்னுடலை ஒழுகச்செய்து எழுந்து மேலே சென்றான். “இவ்வுலகம் தரளம் என அழைக்கப்படுகிறது. இங்கு நீ எதை அறிந்தாய்?” என்றது அவனைத் தொடர்ந்த நாகம். “எவ்வண்ணம் எங்களால் கடக்கமுடியாத இப்புரிப்பாதையை கடக்கிறாய்?” அர்ஜுனன் திரும்பி நோக்காமல் “பிறன் என ஏதுமற்றவனே பயணியாக முடியும்” என்றான்.
ஐந்தாம் உலகமான காளகம் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு மரவுரிப் பரப்பென மாறிய கருநாகங்களின் உடலால் ஆனதாக இருந்தது. அதன் இடுக்கு ஒன்றில் தன் வாலை நுழைத்து பற்றிக் கொண்டான். ஆடி வளைந்து சென்று அதை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த நாகங்கள் வால்சுழற்றி அவனை அறைந்து தெறிக்கச்செய்தன. பிடிவிட்டு அவன் ஆடியபோது ஏளன நகைப்புகள் மேலே ஒலித்தன.
அர்ஜுனன் ஏழுமுறை உடலை வீசி இருளில் நெளிந்தாடி வந்தான். ஒரு போதும் அவர்களை பற்ற முடியாதென்ற எண்ணம் எழுந்தபோது அவர்கள் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். ஒரு விழியில் அவனுக்கான தனிநோக்கு ஒன்று இருந்தது. அவ்விழியை தன் விழிகளால் கூர்ந்தபடி மீண்டும் அதை நோக்கித்தாவினான். எழுந்து விசையென தன்னை ஆக்கி தாவி அதை பற்ற முயன்றான். பன்னிரண்டாவது முறை அந்த நாகம் அவனை பற்றிக் கொண்டது. அக்கணமே அதன் உடலுடன் தன் உடலைச்சுற்றி பற்றி இறுக்கிக் கொண்டான்.
அது நெளிந்து மேலேறுவதற்குள் முந்திச்சென்று இறுகிக் கொண்டான். அவனருகே பத்தி எழுந்து வந்த அந்த நாகம் “என் பெயர் ஜலஜன். இத்தனை ஆயிரம் நாகங்கள் பின்னிப் பரப்பென மாறி உன்னைத் தடுத்தபோது பற்றுவதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய், ஏன்?” என்றது. “உன் விழிகளை நோக்கினேன். என்னை அகலாது நோக்கி நிலைத்திருந்தன அவை. என்னை எதிரியென எண்ணுகிறாய். நம்மை ஒரு கணமும் மறக்காதவனே நம் எதிரி. முற்றெதிரி ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் அவன் தன்னை வகுத்தமைக்கவும் பொருள்கொள்ளவும் நாமின்றி இயலாது.”
தழுவுதலுக்கென்று சமைக்கப்பட்டவை அரவுடல்கள். இரண்டின்மை உடலென உணரப்படுவதை அங்குதான் அர்ஜுனன் அறிந்தான். முட்டித் தழுவி இறுக்கி மேலும் இறுக்கி மேலும் இறுக்குவதற்காக மெல்ல நெகிழ்ந்து மீண்டும் இறுகி நடந்த அப்போரின் முடிவில் தன் வால் நுனியால் ஜலஜனின் வால் நுனியை ஊசி முனையை ஊசி முனையென குத்தி நின்று அசைவிழந்தான். முற்றிலும் நிகர் நிலை கொண்டபின் இரு உள்ளங்களும் ஒன்றாயின. எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தன. நதியொடு நதியென பொருந்தி முடிவிலா காலத்தில் அங்கிருந்தன.
இருள் வானில் பறந்து செல்லும் வௌவாலின் ஓசையென ஓர் எண்ணம் அவனுள்ளில் எழுந்து அடங்கியது. இவன் எனக்கு நிகரானவன், ஆயினும் அவள் என்னையே தேர்வு செய்தாள். அவ்வெண்ணம் அளித்த சோர்வில் ஜலஜனின் உள்ளம் அலை சுருண்டு ஒரு கணம் பின்னடைந்தது. அக்கணத்தில் ஊன்றிய வால் நுனி நழுவ உடல் வலு தளர அவன் தொய்ந்தான். மற்போரில் ஒரு கணம் என்பது ஒரு பிறப்பு, ஒரு முழு வாழ்வு. அதில் ஆயிரம் திட்டங்களுடன் விரிந்து பல்லாயிரம் கரங்களுடன் எழுந்த அர்ஜுனன் அவனை உடலால் சுழற்றி தூக்கி வீசினான். நீரில் பாறை விழும் ஓசையுடன் விழுந்த ஜலஜன் மரப்பட்டை பிளக்கும் ஒலியுடன் உரசி கீழே சரிய அவன் இரு தோழர்கள் நீண்டுசென்று பற்றிக் கொண்டனர்.
“வென்றேன்” என அர்ஜுனன் எண்ணியதை அங்கிருந்த அத்தனை நாகங்களும் கேட்டன. ஒவ்வொரு விழியாக நோக்கி “வென்றேன்! வென்றேன்! வென்றேன்!” என உரைத்தபடி விண்ணிலிருந்து இறங்கிய கரும்பனைக்கூட்டங்கள் போல் நின்ற நாகங்கள் உடலில் தொற்றி சுழன்று மேலேறினான்.
நான்காம் உலகமான தாம்ரம் குளிர்ந்திருந்தது. உடலை விரைக்கவைக்கும் அமைதி அங்கே நிலவியது. அசையா வளைவுகளென கிடந்த அரவுடல்களின்மேல் தவழ்ந்து அவன் அங்கே நுழைந்தபோது இழுபட்டு அதிர்ந்து உடற்தசைகளை அசைவிழக்கச்செய்யும் கடுங்குளிரை உணர்ந்தான். ஒவ்வொரு தசையாக எண்ணத்தால் தொட்டுத் தொட்டு உந்தி முன் செல்ல வேண்டியிருந்தது.
“இது உரகங்களின் உலகம்” என்றது அங்கே உறைந்ததெனக் கிடந்த பாம்பு. “நாங்கள் படம் எடுப்பதில்லை, நெளிவதுமில்லை. எங்களுக்குள் ஆலகாலத்தின் துளி ஒன்று உறைகிறது. அதன் தண்மையால் விரைத்து உடல் இறுகச்சுருட்டி எங்கள் உடல்களால் ஆன புதர்களுக்குள் நாங்களே ஒண்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு காலமில்லை. ஊழிகள் கணங்களென சொட்டி செல்கின்றன. இங்கு வந்தடைந்த நீ உன் மாற்றுலகங்களில் யுகயுகங்களை இழந்து கொண்டிருக்கிறாய். அங்கு நகரங்கள் நீர்க்குமிழிகள் போல் வெடித்து மறைகின்றன. பெருங்கடல்கள் நீர்ப்படலங்கள் போல் உலர்ந்து மறைகின்றன. கரைந்து மறைந்து வான்பனித்து துளித்து மீண்டும் பெருகிக் கொண்டிருக்கின்றன மாமலைகள். இங்கிருந்து நீ தப்ப முடியாது.”
ஒவ்வொரு தசையாக அசைத்து தன் உடலை நகர்த்தி உரகங்களின் உடல் சுற்றி மெல்ல வழிந்து மேலேறினான் அர்ஜுனன். “உன் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? உன் உடல் இயங்கும் வெம்மையை எங்கிருந்து பெறுகிறாய்?” என்றது அவன் மேலெழுந்த குகன் என்னும் நாகம். “உடல் குளிர்ந்து அசைவின்மைக்குச் சென்றவையென்றாலும் அனல் கொண்டவை உங்கள் கண்கள். அவற்றை அன்றி பிறிதெதையும் பார்க்காமலானேன். அக்கனலை தொட்டுத் தொட்டு என் வெம்மையை எடுத்துக் கொண்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “எச்சொல்லால் எங்களை கடந்துசெல்கிறாய்?” என்றான் குகன். “அசைவின்மையில் பெருகுகின்றது அகம்” என்றான் அர்ஜுனன்.
பனியலைகளின் மீதேறி மூன்றாவது அரவுலகத்தை அடைந்தான். பொன்னிற நாகங்களின் பரப்பாக இருந்தது சுவர்ணம். செம்மண் நீர்வழிந்தோடும் மழைக்காலச் சிற்றோடைகள் போல அங்கு அசைந்தன நாகங்கள். “இங்கு பொன்னுடல் கொண்டவர்களுக்கு மட்டுமே நுழைவு ஒப்புதல் உண்டு” என்று அவன் பற்றி ஏறிய பொன்னாகம் சொன்னது. “இழிவுடல் கொண்டு இங்கு வாழ்பவன் ஒளியணைந்து அழிவான்.” அந்நாக உடலைப் பற்றி உறுதியுடன் மேலேறியபடி அர்ஜுனன் சொன்னான் “நான் சென்றடையும் உலகம் இது அல்ல. நான் காண்பவை அனைத்தும் என் வழியம்பலங்கள் மட்டுமே. ஏழு விண்ணகங்களே ஆனாலும் அவை இறுதியாக நான் தங்குமிடங்களல்ல.”
புன்னகைத்து ரிஷபன் என்னும் அப்பெருநாகம் தன் உடல் வளைத்து அவனை மேலேற்றிக் கொண்டது. “நன்று சொன்னாய். இவ்வரவுவெளியை கடந்து செல். அதற்கு உன் உடலை பொன்மயமாக்கிக் கொள்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளையோனே, உன்னை பொன்னாக்குவது எது? அதை எண்ணமென்றாக்கி உன்னில் நிறை.” .அவனருகே புன்னகையுடன் வளைந்து வந்த சுரபி என்னும் நாகம் சிரித்தபடி கேட்டது “உன் அருங்காதல்களா இளவரசே?”
அர்ஜுனன் “ஆம், அவை என்னை பொன்னாக்குகின்றன. அந்திச் செம்மையில் ஒளி கொள்ளும் மாடங்கள் போல்” என்றான். கிருதை என்னும் பிறிதொரு நாகம் அவனருகே நெளிந்து வந்து “உன் உள் கரந்த அன்னை என்னும் விழைவா?” என்றது. அர்ஜுனன் “ஆம். புலரி என என்னை பொன்னாக்குகிறது அது” என்றான். பொன் வெளிச்சம் கொண்டு அவன் துலங்கத் தொடங்கினான். அவனருகில் சூழ்ந்திருந்த நாகங்கள் அனைத்தும் ஒளி கொண்டன. “சொல், உன்னை பொன் ஆக்குவது எது? விழைந்ததெல்லாம் பெறும் உன் வெற்றியா? அவ்வெற்றியினால் உன்னுள் நிறைந்த ஆணவமா?” என்றது ஜாதன் என்னும் பொன்னிறப் பெருநாகம்.
அள்ளி அதன் கழுத்தைச் சுற்றி அதன் உடலின் ஊடாக சுழன்றேறி மேலே சென்ற அர்ஜுனன் திரும்பி “உச்சி வானில் நின்றெரியும் கதிரென என்னை பொன்னாக்குவது அதுவே” என்றான். அவனுடலைப் பற்றி சுற்றி மேலேறி அவனருகே வந்து இளைய பொன்னாகம் ஒன்று கேட்டது “பாண்டவரே சொல்லுங்கள், உங்களை அழியா பொன்னொளி கொள்ளச்செய்யும் அவ்வெண்ணம் எது?”
இரண்டாம் உலகின் எல்லையென மேலே வந்த வெண்ணிறமான அரவுடல்களின் பின்னல் நோக்கிச் சென்று அதன் உடல் வளையமொன்றில் தன் உடலை நுழைத்து சுற்றிக் கொண்டு தன்னை மேலிழுத்த அர்ஜுனன் இளையவன் கண்களை நோக்கி சொன்னான் “எனது விழைவு. அறிதல் அறிதல் என்று ஒவ்வொரு கணமும் என்னுள் இருக்கும் விடாய். இளையோனே, எங்கும் நில்லாதவன் என்பதால் ஒருபோதும் அழியா ஒளி கொண்டேன்.” பின்பு தன்னை வளைத்து மேலே சென்றான்.
சுஃப்ரம் என்றழைக்கப்பட்ட இரண்டாவது அரவுலகு வெண்முகில் வெளியென பரவிக்கிடந்தது. அங்கே பாற்கடல் அலையென நெளிந்து கொண்டிருந்தன வெண்ணிறப் பெருநாகங்கள். பொன்னுடல் கொண்டு எழுந்த அர்ஜுனன் கொண்ட ஒளி சென்ற பகுதியை சிவக்க வைக்க சினந்தவை போல நாகங்கள் அவனை நோக்கின. சீறி அருகே வந்த பெரு நாகம் ஒன்று “யார் நீ? இங்கு எவ்வண்ணம் வந்தாய்?” என்றது. “ஏழாவது அரவுலகில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன். என் பெயர் இளைய பாண்டவன்” என்றான் அர்ஜுனன்.
“என்னை மால்யவான் என்று அழைக்கிறார்கள்” என்றது அப்பெரு நாகம். பளிங்கு நிலப்பரப்பில் விழுந்த கொன்றைமலர்மொட்டு என தன்னை அர்ஜுனன் உணர்ந்தான். அவனைச்சுற்றி வெண்ணிய மலைமுடிகள் போல எழுந்தமைந்தன நாகங்களின் படங்கள். அலைகள் மேல் துரும்பென எழுந்து விழுந்து சென்ற அர்ஜுனன் பெருநாகத்தின் விழியருகே எழுந்து “இங்கு அனைவரும் இப்பேருடல் கொண்டிருக்கிறீர்களே, எங்ஙனம்?”என்றான்.
மால்யவான் “இளையோனே, ஏழாவது அரவுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஆறாவது உலகின் ஆயிரத்தில் ஒரு பங்குள்ளதே. ஆறாவது உலகில் ஐந்தாவது உலகின் ஆயிரத்தில் ஒன்று. ஏழாம் உலகிலிருந்து முந்தைய உலகங்களுக்கு இதுவரை எவரும் வந்ததில்லை. வந்தவர் உடல் சிறுத்து அணுவென ஆகி மறைவதே வழக்கம். முதல் முறையாக நீ இங்கு வந்திருக்கிறாய். இதை ஊழ் காட்டும் மாயம் என்றே கொள்கிறேன். இங்கு இச்சிறு உடலுடன் நீ வாழமுடியாது. உன் முந்தைய உலகிற்கே திரும்பு” என்றான்.
அர்ஜுனன் “இங்கு தங்க நான் விழையவில்லை. இவ்வுலகைக் கடந்து மறுபக்கம் செல்லவிருக்கிறேன்” என்றான். “உன்னைவிட பலலட்சம் மடங்கு பெரிய உடல்கள் நிறைந்த இங்கு நீ அசைவதும் உறைவதும் பறப்பதும் நிகரே. இப்பெருந்தொலைவு உன் சிற்றுடலுக்கெட்டாது” என்றது மால்யவான். “என் பெயர் பிரபாதரன்” என்று இடி முழங்க ஒலித்தபடி அவன் தலைக்கு மேல் எழுந்தது வெண்பெருநாகம் ஒன்று. அதன் சொற்களின் அதிர்வில் பறந்து சென்று மால்யவானின் வெண்பரப்பில் ஒட்டிக் கொண்டான் அர்ஜுனன். “உன் சிற்றுடல் நெளித்து எத்தனை தொலைவுதான் செல்வாய்? மூடா, விலகு” என்றான்.
“இப்பேருலகில் உங்கள் உடல் பேருருவம் கொள்வது எதனால்?” என்று அர்ஜுனன் கேட்டான். “எண்ணங்களால்” என்றான் மால்யவான். “இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் உலகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”
“இங்கு உன்னில் மெய்யறிதல் ஒன்று எழுமென்றால் நீயும் வெண்ணிறப் பேருடல் பெறுவாய்” என்றது பிரபாதரன். “நானறிந்த மெய்மை ஒன்றை சூடுக என்னுடல். பல்லாயிரம் குறி பிழைக்காத அம்புகளால் நானறிந்த ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். தன் நெஞ்சில் கை வைத்து விழி மூடி “வெற்றி என ஒன்றில்லை எங்கும்” என்றான். விழி திறந்தபோது மால்யவான் அவனுக்கு நிகரான உடல் கொண்டு எதிரே நின்றான்.
“நீ சொன்ன சொற்களை நான் உணரவில்லை” என்றான் மால்யவான். “ஆனால் அதை உண்மை என எதிரொலிக்கின்றன இங்கு சூழ்ந்துள்ள வெண்முகில்வடிவ நாகப்பேருடல்கள். நீ அறிந்தது உனக்குத்துணையாகுக!” அவனைச்சூழ்ந்து “ஆம் அவ்வாறே ஆகுக!” என்று இடியோசை என எழுந்தது சுற்றத்தின் வாழ்த்து. திசை தொட்டு மறுதிசைவரை வளர்ந்த தன்பேருடலை அலைஅலையென நெளித்து எழுந்து அதற்கு மேலிருந்த ஒளியுலகின் முதல் நாகத்தின் வால் நுனியைப் பற்றி சுருண்டு மேலேறினான் அர்ஜுனன்.
சுதார்யம் என்றழைக்கப்பட்ட முதல் அரவுலகின் உள்ளே தான் பற்றிக் கவ்விய புருஷன் என்னும் பெருநாகத்தின் உடலில் சுற்றி மேலேறிச்சென்றான் அர்ஜுனன். ஒளிபட்ட நீரால் ஆனதென தோன்றியது அங்கிருந்த அரவுலகம். ஆடிப்பாவைகளென ஒன்றையொன்று எதிரொளித்துப் பெருகி நெளிந்து கொண்டிருந்தன அரவங்கள். ஏழுவண்ண ஒளிக்கீற்றுகளாக சிறகுகளை கொண்டிருந்த நாகங்கள் மைநாகம் மின்னும் படங்களை விரித்து அவனை திரும்பி நோக்கின. ஒளி பறக்கும் நாவுகளுடன் கூரிய பற்களைக் காட்டி அணுகின.
சிறகோசையுடன் அவனருகே வந்து நெளிந்தமைந்த ஹ்ருஸ்வன் என்னும் நாகம் “இங்கு ஒளியுடல் கொள்ளாத எவரும் அமைய முடியாது. மானுடனே திரும்பிச் செல்க! இல்லையேல் இவ்வுலகின் ஒளியால் உன் உடல் கரைந்தழியும்” என்றது. “சொல்லுங்கள் அரவங்களே, உங்களை ஒளியுடல் கொள்ளச்செய்வது எது?” என்றான் அர்ஜுனன். “ஊழ்கம்” என்றது தாம்ரை என்னும் பெரு நாகம். ஒலிவடிவெனச்சுருண்டு அவனருகே வந்தெழுந்து விழி நோக்கி புன்னகைத்து “அறிதல் கடந்த முதல் மெய்மையால் தீண்டப்பட்டவர்கள் மட்டுமே இங்குளோம். உன் மெய்மை ஒன்றால் உன்னை நிறைக்க முடிந்தால் இங்கிருப்பாய்.”
அர்ஜுனன் குனிந்து தன் காலடிக்குக் கீழே இருள்வானம் வரை நிறைந்த ஆறுலகங்களை நோக்கினான். மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான். “சொல், நீ அறிந்த மெய்மை எது?” என்றான் ஜ்வாலன் என்னும் பெருநாகம். நெஞ்சில் கை வைத்து விழி மூடி அர்ஜுனன் சொன்னான் “ஆவது என்றொன்றில்லை.”
விழிதிறந்தபோது தன் உடல் ஒளி வடிவாகி அங்கிருந்த பிற உடல்களின் ஒளி எதிரொளித்துக் கொண்டிருப்பதை கண்டான். “அரவு ஏகும் முழுமை இது மானுடனே. எய்தற்கரிய உச்சமொன்றை அடைந்தாய், இங்கிருப்பாய்” என்றது ஒளிப்பெரு நாகமான ஸ்ருதன். “கடந்து செல்வதற்கே இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எங்கும் அமர்வதற்கு எனக்கு ஊழ் அமையவில்லை.”
“இங்கிருந்து செல்வதற்கு பிறிதொரு உலகம் இல்லை” என்றான் ஜாதன் என்னும் ஒளிநாகம். “இருக்கிறேன் என்னும் உணர்விருக்கும் எங்கும் இல்லையென்றாவதற்கு வாயிலிருக்கும்” என்றான் அர்ஜுனன். நெளிந்து அருகே வந்த பகன் என்னும் நாகம் “அதோ, எங்கள் ஒளியுலகின் நடுவே கரிய புள்ளி ஒன்றுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக அதை சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். ஒருவரும் அதை தொட்டதில்லை” என்றது.
“ஏன்?” என்றான் அர்ஜுனன். “அது கருமை கொண்டிருக்கிறது. முதல் உலகில் எஞ்சும் ஏழாம் உலகின் ஒரு துளி என்று அதை சொல்கின்றனர். இவ்வேழுலகங்களையும் முடிவிலா சுழலாக ஆக்குவது தலையை வந்து தொடும் நாகத்தின் வாலென இங்கிருக்கும் அதுதான்” என்றது பகன். “அதை அஞ்சியே அணுகாது சுற்றி வருகிறோம். இவ்வொளியுலகுநடுவே பிறிதொன்றிலாது நிற்கும் அதுவே வெளியேறுவதற்கான வழியாகும்.”
அர்ஜுனன் “ஆம்” என்றான். அரவுடல்களைத் தழுவி நெளிந்து அதை நோக்கி சென்றான். செல்லும் தோறும் விரிந்து பன்னிரு பேரிதழ் கொண்டு அலர்ந்து நூறிதழ் ஆயிரம் இதழ் கருந்தாமரை என விரிந்து வாயைத் திறந்து இருள் காட்டியது அச்சுருள். அதை அணுகி “இங்குளேன்” என்றான் அர்ஜுனன். உள்ளிருந்து மெல்லிய சிரிப்பொலி ஒன்று கேட்டது. காமத்தில் வென்று அல்லது கழுத்தறுத்துக் குருதியுண்டு வென்று சிரிக்கும் பெண்குரல் நகைப்பு. தன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.