நாட்டார்கதைகள், பழமொழிகள்- கடிதங்கள்

இனிய ஜெயம்,

ஜன்னல் இதழில் நீர்மரமும் நிலைமரமும் வாசித்தேன். தலைப்பே கவித்துவம். இந்தப் படிமம் உள்ளே என்னென்னவோ செய்கிறது. விஷ்ணுபுரத்தில் ஒரு சித்திரம். சுடுகாட்டு சித்தனும் அவனது சீடனும் கோவிலின் ரகசிய ஆழத்தில் உறைந்து நிற்கும் நீர்த்தேக்கத்தில் கோவிலின் ராஜகோபுரத்தின் பிரதிபலிப்பை பார்ப்பார்கள். கோபுரம் என்பதின் அத்தனை வடிவ ஒழுங்குகளும் பின்னிக் கலைந்து வேறொரு கோபுரம் அங்கு தெரியும். மனித மன துரியத்தின் காட்சியாக..

நமது புராணமும்,நாட்டார் கதைகளும், வரலாறுகளும் வழியாக நம்மை வந்தடையும் மெய்ம்மை நதியில் தெரியும் ஆலமர பிரதிபலிப்பு போலத்தான் இல்லையா? கதையில் அனந்த சாமி என்ற ‘வஞ்சனையால் கொலை செயப்பட்ட’ பிராமணர்[அன்று பிராமணர்கள் படி நிலையில் கீழோர் என்றும் குறிப்பு வருகிறது] நாட்டார் தெய்வமாக மாறுகிறார். தலைகீழாக கிணற்றில் விழுந்து கபாலம் உடைந்து இறந்த ஐயருக்கு, தலைகீழாக அங்கு படிமை எழுப்பப்படுகிறது. சாந்திக்கொடைகள் நடக்கிறது.

ஒரு பிராமணர் நாட்டார் தெய்வமாக உருவெடுப்பதும், பாரதி எனும் பிராமணருக்கு முத்துமாரி குலதெய்வமாக விளங்குவதும் என இங்கு காணக்கிடைப்பதெல்லாம் அந்த நீர் மரம்தானே.

விடாதவை இன்றைய சூழலில் எனக்கு இன்னும் கூடுதலாக அர்த்தம் தருகிறது. திரு சகாயம் குவாரியில் இருந்து தொடர்ந்து பிணங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது ‘நரபலியா”என மாமாங்ககாலம் விசாரிக்கப்பட்டு , செத்தவர்கள் ஆவியாக வந்து அது நரபலிதான் என சாட்சி சொல்லி, ஆவிகள் சாட்சி தர்க்கப்படி செல்லாது என்று அத்தனை வழக்கும் வாபசகம் காலம் இது. கண்ணுக்குக் தெரியாமல் அந்தப் புய்யன் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறான்.

புய்யனை சிறுவன் ஜெயமோகன் சந்திக்கும் கட்டம் அற்ப்புதம். யதார்த்தமும் கனவும் எது எந்த எல்லைவரை என்று வகுத்துரைக்க இயலா வண்ணம் கச்சிதமாக முயங்கிய சித்திரம்.

கோவையில் மொட்டை வெயிலில் உலாவியபடி நானும் அஜிதனும் இந்தக் கதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தது சென்றவாரத்தின் இனிய தருணம்.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

ஜன்னல் இதழில் வெளிவரும் அந்தக்கட்டுரைகள் இணையத்தில் இல்லை. அவர்களே நூலாக ஆக்க விரும்புகிறார்கள் என்றார்கள். ஆகவே அவற்றைப்பற்றிய விரிவான விவாதங்களும் நிகழவில்லை.

மொத்த நூலாகவே அதற்கு ஒரு திட்டம் உள்ளது. பார்ப்போம்

ஜெ

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் தொலைக்காட்சியில் முதல் மரியாதை பார்த்துக் கொண்டிருந்தோம்.காட்சிக்கு காட்சி, வட்டார வழக்கில் பழமொழிகள் இயல்பாக வந்துகொண்டிருந்தன. பாட்டிகளின் பேச்சில் அதுபோல் பல பழமொழிகள் இருக்கும். சில இன்னும் நினைவில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சமையலோடு தொடர்புடையவை. (கீரை வைத்த சட்டியில் ரசம் வைத்த உறவு, மாவு இருக்கும் மணம் போல கூழ் இருக்கும் குணம், இன்னும் பல). உவமைகள் இயல்பானதால், தமிழ் இலக்கணம் பத்துக்கும் மேற்பட்ட அணிகளை வகுத்துள்ளது.

ஆங்கிலத்தில் புதிதாக idioms, figure of speech, வந்து கொண்டுதான் இருக்கின்றன. “Between rock and a hard place”, “drink from a fire-hose”, ‘coughed-up a hairball’ என்பதெல்லாம் அமெரிக்க பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

தமிழில், சமீப சில பத்தாண்டுகளில், இந்தப் பழமொழிகள் வழக்கொழிந்து வருகின்றனவோ என்று தோன்றுகிறது. புதிதாக எந்த உவமையும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை. அல்லது நான்தான் கவனிக்கவில்லையோ?

அன்புடன்
ஸ்ரீதர்

——————————————–
http://justexperience.blogspot.com

அன்புள்ள ஸ்ரீதர்,

நாட்டாரியல் தமிழகத்திலிருந்து விரைவாக மறைந்து வருகிறது. நாட்டார் சடங்குகள், கலைகள், விழாக்கள், சொலவடைகள். நாட்டார் பண்பாடு அமைந்துள்ள வட்டார வழக்கு அழிவதே காரணம். இனி அவை கடந்தகாலப் பண்பாட்டுப்பதிவாக எங்காவது எஞ்சலாம். காரணம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ச்சமூகம் ஒற்றை மொழிவெளியாக மாற்றப்பட்டுவருகிறது.

ஆகவே பழமொழிகள் மிகக்குறைவாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பழமொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு நகைச்சுவை உணர்ச்சி தேவை. figurative speech என்பது மொழிநுண்ணுணர்வு உடையவர்களாலேயே ரசிக்கவும் படும். தமிழகத்தில் பொதுமக்களின் பேச்சில் அது மிகக்குறைவு என்பதே என் மனப்பதிவு. மிகப்பெரும்பாலும் தட்டையான ஒரேவகையான சொற்றொடர்களையே பயன்படுத்துவார்கள். அதற்குமேலே செல்வார்களென்றால் அது சினிமாவிலிருந்து பெற்ற சொல்லாட்சியாக இருக்கும்

உண்மையில் இன்று டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை இவ்வளவு பெருகியபின் நவீனச்சொலவடைகள் ஏராளமாகப் பெருகியிருக்கவேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மிகமிகக்குறைவு. அங்கும் சினிமாச்சொற்றொடர்களை வைத்துத்தான் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சலிக்காமல் திரும்பத்திரும்ப ஒரேபோல.

ஆனால் குமரிமாவட்டம் எப்போதுமே விதிவிலக்கு. இங்கே ஒருநாளில் ஒரு புதிய சொலவடையாவது காதில் விழாமலிருக்காது [தமிழகத்து பழமொழிகள் என தொகுக்கப்பட்ட நூல்கள் அனைத்திலும் பாதிக்குமேல் பழமொழிகள் குமரிமாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவை]

மற்றபடி இங்குள்ள எல்லா சொலவடைகளும் சினிமாவிலிருந்து எடுக்கப்படுபவை. சினிமா வசனங்களை பகடிசெய்து உருவாக்கப்படுபவை. வேறெந்த துறைகளும் இங்கு பொதுவாகப் பேசப்படுவதேயில்லை என்பதே காரணம்.