அகக்காடு- கடிதம்

kadu2

அன்புள்ள ஜெயமோகன்,

‘காடு’ நாவல் வாசிப்பின் அனுபவத்தை நான் பின்வருமாறு தொகுத்துள்ளேன்.

‘காடு’ நாவல் படிக்க ஆரம்பித்ததுமே மிளா என்ற பெயர் என்னை வசீகரித்து உள் இழுத்தது. மிளா என்ற ஒரு விலங்கின் பெயரை முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்கப் படிக்க காடு எனக்குள் விரிந்து கொண்டே சென்றது. காட்டிற்குள் என்னை இழுத்துச் சென்று வீசியது காஞ்சிர மரம் மற்றும் அதில் வாழ்ந்த வன நீலியின் கதை. அந்த அத்தியாயம் ஒரு அடர்த்தியான, கனமான நிகழ்வாக என்னுள் நீடித்திருக்கிறது.

கிரிதரன் ஒவ்வொரு முறை காட்டிற்குள் செல்லும் போதும் நானும் கூடவே பயணித்தேன். மலையத்தியைப் பார்த்த பிறகு, காடு எனக்குள் தீவிரமாகவும், நெருக்கமாகவும், அழகாகவும் ஆகத் தொடங்கியது. ஒவ்வொரு மரங்களையும், புதர்களையும், மலையையும், அங்கிருந்து வரும் காற்றின் குளிரையும், உஷ்னத்தையும் மெதுவாகக் கவனித்து உணர்ந்த படியே இருந்தேன்.

முதன் முதலாக மலையத்தியைப் பார்க்கச் செல்லும் போது வந்த யானைக்கூட்டம், இடையில் வரும் பாறைகள், சுற்றி இருந்த மரங்கள், பறவைகளின் சத்தங்கள், பாறைகளின் ஊடாக வழியும் அருவி, அதனை ஒட்டிய காட்டின் உள் இருந்த பலா மரம், பலாச்சுளைகள் இவை பெரும் மன எழுச்சியை, குதூகலத்தைத் தந்தன.

மலையத்தியின் அழகு என்னை மயக்கி விட்டது. அவளின் கருமை நிறம் என்னை ஆட்கொண்டு விட்டது. அந்தக் காட்டில் அவள் பேரழகியாகத் தெரிந்தாள். அவள் வாழும் சந்தனக் காடு, மரத்தின் மேலிருக்கும் அவளின் குடிசை, அதன் மேல் முளைத்திருக்கும் சிறு செடிகள் ஒரு குளிர்ச்சியைத் தந்தன. மறைந்திருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், தண்ணீர் எடுக்க அவள் வெளியே வரும் போதும், அவளை அங்கே காணும் போதும் உச்ச கட்ட உற்சாகம் பெருகியது.

அவள் பெயர் நீலி என்று அறிந்ததும், வன நீலியின் உக்கிரத்தை ஏற்கனவே அறிந்திருந்ததால் ஒரு விலகல் ஏற்பட்டது. அவள் நெருங்கி வர வர அந்த விலகல் மெதுவாக மறைந்தது. வேங்கை மரத்தின் அருகே உள்ள பாறையில் அவளை தினமும் சந்திக்கலாம் என்று அவள் சொல்லிய பின், தினமும் அந்தப் பாறைக்கு வந்து காத்திருந்து, அங்கே அவளை ஒரு நாள் கூட பார்க்க முடியாமல் போன பிறகு, மீண்டும் அவளை அவள் வீட்டின் அருகில் சந்தித்த நிகழ்வு காதலை மேலும் அதிகப்படுத்தியது. கிரிதரனும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் இருவர் கண்களிலும் காதல் கண்ணீராகப் பொங்கி வழிந்த அந்தத் தருணத்தில் காடு காதலில் மிதந்தது. அங்கே காதல் துளிர் விட்ட பிறகு, காடு மிகவும் அழகாகவும், மனதிற்கு மிக நெருக்கமாகவும் தெரிய ஆரம்பித்தது. அந்தக் காதல் காடு முழுவதும் பரந்து பரவியது. அடர்ந்த மரங்களையும், உயர்ந்த மலைகளையும், புல் வெளிகளையும், புதர்களையும், பற்பல விலங்குகளையும், பறவைகளையும் கொண்ட அந்தக் காடு மற்றும் அங்கே துள்ளி ஓடி வாழ்ந்து கொண்டிருந்த மலையத்தி நீலியையும் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியவில்லை.

அப்போது அவள் “கொந்ந ஞாக்கு இஷ்டம், ஞிங்ஙக்கு இஷ்டமா?” என்று கேட்கிறாள். அவள் காதலை முதன் முதலாக வார்த்தையில் வெளிப்படுத்திய தருணமாக உணர்ந்தேன். அவளுக்கு அந்தரங்கமாகப் பிடிக்கும் விஷயத்தை அவள் அவனிடம் சொல்லி அவனுக்கும் அது இஷ்டமா என்று கேட்கிறாள். அதை அவள் யாரிடமும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் மட்டுமே அதைச் சொல்லத் தோன்றும். அந்தக் கேள்வி கிரிதரனுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவளுடைய காதலை அவள் அந்தத் தருணத்தில் மிக அழகாக வெளிப்படுத்துகிறாள்.

சில அத்தியாயங்கள் என்னை மிகவும் வேகமாகவும், படபடப்பாகவும் உள்ளே இழுத்துச் சென்றன. படித்து முடித்ததும் அவை ஒரு வித மலைப்பையும், ஒரு ஈர்ப்பையும் கொண்டிருந்தன. அந்த அத்தியாயங்களை இரண்டாவது முறை வாசிக்கும் போது அந்த ஈர்ப்பு முழுவதும் மறைந்து சாதாரணமாக ஆகியது.

அவளின் குறும்பும், துள்ளலும், சிறு பதட்டமும் ஒவ்வொரு நாளும் அவளைச் சந்தித்து அவளின் இருப்பை அனுபவிக்கத் தூண்டியது. அவளின் மலையாளம் கலந்த மொழி அவளைப் பற்றிய கற்பனையை மேலும் அழகாக்கியது. அந்தக் காலங்களில் காடு ஒரு தோரணமாகக் குளிர்ந்து வரவேற்றுக் காத்திருந்தது.

காட்டின் மழைக்காலம் மாபெரும் அனுபவமாக இருந்தது. மழைத்தாரைகள் காட்டிற்கு மேல் ஒரு காடு போல வளர்ந்து நின்று கொண்டிருக்கும் காட்சி ஆனந்த அனுபவம். அங்கே நீலி கிரிதரனைத் தேடி குடிலுக்கு வந்தது அந்த ஆனந்தத்தின் உச்சம். ஓடி வந்து அருகில் அவள் நிற்கும் தருணத்தில் அவள் மேலான என் காதல் உச்சத்தை அடைந்தது. மழையில், காட்டாற்றையும், சாய்ந்து விழுந்து கிடக்கும் பெரு மரங்களையும் கடந்து அவள் அவனைக் கூட்டிச் செல்லும் நிகழ்வு அவனுக்குக் கிடைத்த மாபெரும் வரம். அவள் வாழும் இடத்தில் அவள் அனுபவங்களை கிரிதரனுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். குறிஞ்சி மலர்களைக் காணும் வரை ஒவ்வொரு காட்சியும் மனக் கிளர்ச்சியை அளித்தன. அங்கே மலை உச்சியில் ஏழம்மைகளை அவள் வழிபடும் காட்சியில் அவளுடைய அதிகபட்ச அழகைக் கண்டேன். முடிகள் காற்றில் ஆட வெண்ணிற உடையில் அவள் நிற்கும் காட்சி என்னுள் என்றும் மறையாது.

காடு மற்றும் அங்கு வாழும் வாழ்க்கை ஒரு கனவாகவும், நகர வாழ்க்கை நிகழ் எதார்த்தமாகவும் தெரிந்தது. நகர வாழ்க்கையில் நுழையும் போது ஒரு வித சலிப்பு ஏற்பட்டது. மீண்டும் கிரிதரன் காட்டிற்கு வரும் போது கனவு மீண்டு மனம் உற்சாகம் கொண்டது. காட்டின் பிரம்மாண்டத்தையும், சிறு இலைகளையும், மரத்தின் நிழல்களையும், நீலியையும் தேடி ஏக்கம் கொண்டது.

அய்யர் பங்களாவில் நீலியும், அவள் தந்தையும் பூஜை செய்யும் போது, ஒரு வித பதட்டமும், உற்சாகமும் கலந்த மன நிலையில் கிரிதரனுடன் சேர்ந்து நானும் அமர்ந்திருந்தேன். இலை வெட்ட அவளுடன் செல்லும் போது அவள் இருப்பைத் தவிர எதையும் அறியவில்லை.

பல இடங்களில் உங்கள் எழுத்தாளுமையைக் கண்டு வியந்தேன். நீங்கள் பயன்படுத்தும் உவமைகள் காட்டின் காட்சியை நுணுக்கமாகக் மனக்கண் முன் விரித்து வைத்தன. காட்டின் இயல்பை உங்கள் மொழியில் உணர்ந்தேன். பாறையில் கிரிதரன் அமர்ந்து அதன் மேல் கிடந்த சில கொட்டைகளை நீரில் எறிவான். அந்தக் கொட்டைகள் நீரில் செல்லும் காட்சி. “மூழ்கி எழுந்து மிதந்து அருவியில் விழுந்து அப்பால் எழுந்து சென்றன”. இந்த வாக்கியம் காட்சியை உள்ளபடியே கண் முன்னால் நிறுத்துகிறது. “மூழ்கி எழுந்து மிதந்து” மற்றும் “அருவியில் விழுந்து அப்பால் எழுந்து”. இந்த வார்த்தைகளையும் அது கண் முன் நிறுத்திய காட்சியையும் பல முறை நினைத்து நினைத்துக் களிப்புற்றேன்.

நீலியின் பின்னால் குறிஞ்சி மலர் தேடிச் சென்ற பயணம், காதல் நிரம்பிய உற்சாகப் பயணம்.

அவள் பாதங்களுக்கு சிலம்பணிவித்த நீர்ச்சுழிப்பெருக்கு. நான் ரசித்து அனுபவித்த காட்சி.

காடும் நீலியின் காதலும் கனவாக விரிந்து செல்கையில் இந்தக் கனவு ஒரு எல்லையில் முடிந்து விடும். ஆனால் முடிவில் நீலியின் காதல் சோகத்தில் முடிந்து விடுமோ என்ற அச்சத்தை கிரிதரனின் நிகழ் நகர வாழ்க்கை ஏற்படுத்தியது. அந்தக் கனவு ஒரு அழியா ஆனந்தமும் இனிய நினைவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று மனம் தவித்தது. விஷக் காய்ச்சலில் அவள் இறந்த செய்தியால் நான் நிம்மதி அடைந்தேன் வருத்தம் வரவில்லை. அவள் காதலுடன் இறந்து விட்டாள். அவள் காதல் அழியவில்லை.

அவளுடைய இருப்பிடமும், சந்தனக்காடும் தீ வைத்து அழிக்கப்பட்ட பின் கிரிதரனுக்கு அவள் பழைய காட்சிகளின் ஒரு பகுதியாக மாறிப்போனாள். ஆனால் எனக்குள் அந்த அழிக்கப்படாத காடும், பெரு மரங்களும், காட்டின் தொடர் மழையும், இலைகள் விழும் காட்சிகளும், உயர்ந்த மலைகளும், பாறையில் விழும் அருவிகளும், நீலியின் அழகும், அவளின் நிறமும், காதலும், துள்ளலும், அவள் உச்சரிப்பின் ஒலிகளும் மறையாமல் நீடித்திருக்கின்றன.

“காடு” நாவலில் எனக்குத் தேவையானதை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன். நான் கண்டவை காடும், நீலியின் அழகும், அவள் காதலும் மட்டுமே. படிக்கும் போது நான் அனுபவித்ததில் நூறில் ஒரு பங்கை மட்டுமே என்னால் இங்கு எழுத்துக்களில் தொகுக்க முடிந்தது.

நன்றி.

அன்புடன்,

சக்தி பிரகாஷ்,

கோபிசெட்டிபாளையம்.

அன்புள்ள சக்தி பிரகாஷ்

காடு வாசிப்பனுபவம் கண்டேன்.

காடு எழுதும்போது என் முன் இருந்த எண்ணம் ஒன்றே. அகக்காட்டை புறக்காடு வழியாகச் சொல்ல முடியுமா என்பது. சங்கப்பாடல்கள் அடைந்த அந்த ஒருமை. அடைந்தேன் என முடிந்தபோது தோன்றியது

கடிதங்கள் மீண்டும் மீண்டும் அதை உறுதிப்படுத்துகின்றன

ஜெ

காடு அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16
அடுத்த கட்டுரைஅரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்