சிலைகள், மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

ஞானமுத்து தேவநேயன் என்ற தேவநேயப்பாவாணருக்கு சிலை வைப்பது சரியாக இல்லை- அதாவது உங்கள் காரணங்களால் .

தேசநேயரின் எவ்வொரு பக்க எழுத்திலும் அபத்தங்களும், மொழி வெறியும், மற்ற மொழிகள் மீது காழ்ப்பும் , ஜாதிகாழ்ப்புகளும் தளும்பி நிற்கின்றன. மொழியியல் சார், அல்லது அறிவுசார் கருத்துக்களை காண முடியாது.
உதாரணமாக மொழியாராய்ச்சி என்ற கட்டுரையை ( http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=204&pno=1) எடுத்துக் கொள்வோம்.
” உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெருங் கவைகளா யடங்கும்” . இவர் 1950களில் இப்படி எழுதியுள்ளது ஒரு மொழியியல் நூல்களையும் படிக்கவில்லை என காட்டுகிறது.இதெல்லாம் 19ம் நூற்றாண்டு மொழியியல் வார்த்தைகள் . மேலும் எந்த மொழியியலாளரும் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் இப்படி 3 பகுதிக்குள் பிரிக்கவில்லை – 19ம், 20ம், 21ம் நுற்றாண்டுகளில் யாரும் அப்படி செய்யவில்லை. . தானாகவே பீலா விடுவதில் ஞானமுத்து தேவநேயன் வல்லவர் . மேலும் ஆங்கில வார்த்தைகளை ஏன் கொடுக்க வேண்டும் , அதை ஏன் தமிழில் சிந்திக்க முடியவில்லை? கட்டுரையின் முதல் வரியே அபத்தம்.

அப்புறம் ஒவ்வொரு வாக்கியமும் அபத்தம். அவர்கால புவியியல், மொழியியல் ஒன்றையும் படிக்கவில்லை, அல்லது கிணற்றுத்தவளையாக அவற்றை ஒதுக்கி தன் சொந்த கற்பனைகளையே முன் நிறுத்தியுள்ளார். இப்படி உளறுபவருக்கு சிலை வைத்து தமிழ‌ர்களின் அறிவும், அறிவு நாட்டமும் இம்மியும் அதிகரிக்கப் போவதில்லை. ஞானமுத்து தேவநேயனின் எல்லா உளறல்களையும் பற்றி எழுதினால் பல காலமாகும்.

ஞா.தே. திருப்பி திருப்பி இந்த கருத்துகளை கிளிப்பிள்ளை போல் சொல்லி வந்தார் : “உலகத்தின் மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் கி.மு. 2000 ஆண்டுகட்குமுன் இந்துமகா சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனதும் தலைச்சங்கமிருந்ததுமான குமரிநாடே. ஆத்திரேலியா, தென்னிந்தியா, தென்னாப்பிரிக்கா என்ற மூன்றும் ஆதியில் நிலத்தாலிசைந்திருந்தனவென்று மேனாட்டுப் பண்டிதர்கள் கண்ட வுண்மையே இதற்குப் போதிய சான்றாம். ஆகவே, மக்கள் முதன்முதற் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும். ”

தேவநேயனின் “வேர் ஆராய்ச்சி” எப்படி உலகமொழிகள், முக்கியமாக சமஸ்கிருதம் , தமிழில் இருந்து பிறந்தது என்பதை “நிரூபிக்கும்” முயற்சியாகும். தேவநேயரின் கருத்துகளை சரித்திரத்தின் குப்பையில் போடாமல் , தமிழர்களின் அறிவு, சிந்தனை தளம் கொஞ்சமும் முன்னேறாது.

மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்,

பாவாணரின் ஆய்வுகளைப் பற்றி எனக்கும் கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் வேர்ச்சொல் வழியாக தமிழின் தனித்துவம் நோக்கிச்செல்லும் ஓர் ஆய்வுமுறையின் தொடக்கப்புள்ளி அவர் என எண்ணுகிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ மோ.

உங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல்.

சிலை வைப்பவர்கள் வரிசையில் சிஸ்டர் சுப்புலக்ஷ்மி, ஸ்ரீனிவாச சாஸ்திரியார், சர் சி. பி ராமஸ்வாமி அய்யர் முதலியவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் அபிப்பிராயம்.

அன்புடன்

பிரசாத்.
ஹாங்காங்

அன்புள்ள பிரசாத்

சிஸ்டர் சுப்புலட்சுமியை நான் கேள்விப்பட்டதில்லை. சீனிவாச சாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர் போன்றவர்கள் சாதனையாளர்களோ ஒரு மரபைத் தொடங்கிவைத்தவர்களோ அல்ல. சீனிவாஸ சாஸ்திரி காங்கிரஸின் ராஜதந்திர [அதாவது பொருளற்ற] பேச்சாளர் என்றவகையில் சிறிது கவனத்தைக் கவர்ந்தவரே ஒழிய அவரது அறிவார்ந்த தகுதி என ஏதும் பெரிதாக இல்லை. சி.பி.ராமசாமி அய்யர் திருவிதாங்கூரின் திவானாக நேர்மையாகச் செயல்பட்டார், கல்வியாளர் அவ்வளவுதான். நான் சொல்லும் பட்டியலில் அவர்களைச் சேர்க்கமுடியாது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

“அறிவியலாளர் சி.வி.ராமனுக்குச் சிலை இல்லை. கணிதமேதை ராமானுஜத்திற்கு சிலை இல்லை “.

ஏன் வேண்டும் இவர்களுக்கு சிலை?

ராமன் விளைவின் நேரடி பயன் இயற்பியல் மற்றும் இரசாயன கட்டமைப்பு துறைக்கும், அது சம்பந்தப்பட்டவர்களுக்குமே. ராமானுஜத்தின் கணித சூத்திரமூம் அது போன்றதே. இவற்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் மாணவர்களின் கல்வி திட்டத்திலேயே இனைக்கப்பட்டு உள்ளது. இதைத்தவிர பொது வீதிகளில் அவர்களுக்கு சிலை எதற்கு? இவர்கள் இருவரும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்களை முன்மாதிரியாக வைத்து இந்த சமூகத்துக்கு நாம் என்ன சொல்ல போகிறோம்.

நீங்கள் சொல்வதை போன்று திராவிட இயக்க அரசியல், சாதி அரசியல் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்ட நோக்கம் அவர்களால் தங்களது சமுதாயம் உயர்ந்தது என்று இவர்கள் எண்ணிய காரணமே என்று நான் நினைக்கின்றேன். (தற்பொழுது காரணம் மாறுபட்டு இருக்களாம். அனைத்தும் வாக்குக்காக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.) இந்த தலைவர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் தொடர்புள்ளவர்கள், அவர்களாள் நேரடியான பலன் அடைந்தவர் இதை செய்கின்ற பொழுது நாம் ஏன் இதை தடுக்க வேண்டும். மேலும் இதை ஏன் அறிவியல் அறிஞர்களுடன் ஒப்புமை செய்ய வேண்டும். என்னுடைய கருத்து அறிவியல் அறிஞர்கள் முதன்மையான கோட்பாடு சமுதாய முன்னேற்றம் அல்ல, வாழ்க்கைக்கு துனை புரியும் செயலிகளை மேம்படுத்துவதே. ஆனால் சமுதாய அரசியல் தலைவர்களின் (சிலையாக உள்ள) முதன்மை நேக்கம் சமுதாய முன்னேற்றம் மட்டுமே (மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் அது செயல்பாடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்).

சாதாரண மனிதன் நேரடி தொடர்பில்லாத ஒரு விசயத்தை எப்படி கொண்டாட முடியும். இங்கு சாதாரண மனிதர்களே அதிகம்.

யார் யாரைக் கொண்டாட வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது, அது தனி மனிதன் சம்மந்தப் பட்டது அல்லவா?

அன்புடன்.

உமாசங்கர்.

அன்புள்ள உமாசங்கர்,

உங்கள் கடிதம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல நிலப்பாடுகளை ஒரே சமயம் முன்வைக்கிறது

முதல் நிலைப்பாடு, சிலைகள் தேவையில்லை என்பது.

சிலைகள் நினைவை நிரந்தரமாக நிறுத்துபவை. ஐன்ஸ்டீன் அவரது சார்பியல்கோட்பாடுக்காகவே நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவரது புகைப்படத்தை நினைவுகூராத அறிவியல் ஆர்வலர் எவரும் இருக்கமுடியாது. அவரை ஒவ்வொருநாளும் நினைவில் நிறுத்துபவை அப்படங்களும் சிலைகளும்தான். பிரின்ஸ்டன் பல்கலையில் அவரது பெரிய சிலைமுன் நின்றபோது நான் உணர்ந்த மனஎழுச்சி அவரை மிக அருகே உணர்வதற்கு நிகரானது.

அறிவியல்கொள்கைகளைக் கற்கத்தான் வேண்டும். ஆனால் ஓர் ஆளுமையை அன்றாட வாழ்க்கையின் பகுதியாக எப்போதும் நினைவுகூரவேண்டுமென்றால் அவர் சிலையாக, அடையாளங்களாக அன்றாட வாழ்க்கை நிகழும் களத்தில் நின்றுகொண்டிருக்க வேண்டும். அதற்குத்தான் சிலைகள் . அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் எங்கோ உள்ளவர்களாக இல்லாமல் நம்முடன் எப்போதும் உள்ளவர்களாக உணரப்படுகையிலேயே அவர்கள் முன்வைத்த விழுமியங்கள் ஒரு சமூகத்தின் இலக்குகளாக ஆகின்றன

இரண்டாவது நிலைப்பாடு சமூகத்தலைவர்களுக்குச் சிலைவைக்கலாம், சிந்தனையாளர்களுக்கு தேவையில்லை என்பது.

சிந்தனையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் சிலைவைப்பதென்பது சிந்தனையையும் அறிவியலையும் அடுத்த தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகக் காட்டவே.அந்த முன்னுதாரணம் தேவையில்லை என நீங்கள் கருதலாம், நான் கருதவில்லை.

சி.வி.ராமன் என்பவர் ‘ராமன்விளைவு’ மட்டும் அல்ல.அவரது தனியாளுமையும் முக்கியமானது. அவரது அர்ப்பணிப்பு, பிடிவாதம், சலிக்காது போரிடும்குணம், அத்தனைக்கும் மேலாக இன்றைய அறிவியலாளர்களிடம் இல்லாதிருந்த தேசபக்தி. அவற்றை அவரை தனிமனிதராக அணுகுவதன் மூலமே நாம் அறியமுடியும். அதற்குரியவை சிலைகள்.

மூன்றாம் நிலைப்பாடு, இதையெல்லாம் சொல்ல நாம் யார் என்பது

இந்த வரி எல்லா டீக்கடை விவாதங்களிலும் சொல்லப்படுவது. இதையெல்லாம் சொல்ல நீங்கள் ஒன்றும் அல்ல என்று உணர்வதில் பொருளிருக்கலாம். நான் இதையெல்லாம் சொல்லும் தகுதிபடைத்தவன், இந்நூற்றாண்டின் முக்கியமான தமிழ் எழுத்தாளன். உங்களுக்கு நான் முக்கியமானவனாகத் தோன்றாமலிருக்கலாம். எழுத்தாளனே முக்கியமானவனாகத் தோன்றாமலிருக்கலாம், நான் அப்படி எண்ணவில்லை.

இன்றுவரை வைக்கப்பட்ட சிலைகள் எவையும் தானாகவே முளைத்து வந்தவை அல்ல. அவை சிலரால் முன்வைக்கப்பட்ட எண்ணங்கள். அவ்வெண்ணம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை நிறுவப்பட்டன. அவ்வாறுதான் இச்சிலைகளை வைக்கவேண்டுமென்ற எண்ணமும் முன்வைக்கப்படுகிறது.

ஜெ

நமக்குரிய சிலைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11
அடுத்த கட்டுரைஇந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்