சிலைகள் -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் பார்வையில் நாட்டில் ‘சிலை’ வைக்க தகுதி உடையவர்களின் பட்டியலை கண்டேன். அதில் நீங்கள் தெரிவு செய்து இருப்பவர்களில் ஒரு சிலரை பற்றி ஓரளவு தான் அறிந்து இருந்தாலும்,தங்களின் தேர்வில் முழு நம்பிக்கை உண்டு,ஆனால் இரண்டு விசயங்களில் தங்களிடம் இருந்து மேலும் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

ஓன்று திரு. ஈ.வே.ராமசாமி அவர்களை பற்றியது.அவரைப் பற்றிய தகவல்களை பல இடங்களில் இருந்து அறிந்தாலும்,உங்கள் மூலம் (உங்கள் வலைத்தளம்) தான் அவரைப் பற்றி மிகச் சரியாக அறிந்து கொண்டேன் என நினைக்கிறேன்.இருந்த போதிலும் நீங்கள் சிபாரிசு செய்து சிலை வைக்கும் அளவிற்கு அவர் தகுதி உள்ளவரா என்பதில் இன்னும் தயக்கம் உள்ளது.(அவரே அவர் ‘ கொள்கையின் ‘ படி சிலை வைப்பதை விரும்பமாட்டார் எனவும் நினைக்கிறேன்.)

இரண்டாவதாக ‘இதழியல்,பொது எழுத்து’ பிரிவில் தினமணி திரு.எ.என்.சிவராமன் அவர்களை சேர்த்து இருக்கலாம் என நினைக்கிறேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி

*
நல்ல கட்டுரை. ரசித்துப் படித்தேன். கல்கி, எஸ்.எஸ். வாசன், வ.ரா. ஆகியோரையும் இதழியலில் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ராமனையும் ராமானுஜனையும் தவிர வேறு யாருமே அறிவியலில் வரவில்லை என்பது நமது துரதிருஷ்டம்தான். ஈ.வெ.ரா.வை (ரொம்ப யோசனைக்குப் பிறகு) கழட்டிவிட வேண்டும் என்று தோன்றுகிறது – அவரால் தலையெடுத்தது ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே.

ஆர்வி

*

இயற்கை வேளாண்மையில் – அதை ஒரு சமூக இயக்கமாகக் கூடச் சொல்லலாம். – நம்மாழ்வார்.

பாலா

*
பெண்களுக்கு சிலைவைக்கும் வழக்கமில்லையா? ஜெ கொடுத்த 57 பேர் பட்டியலில் இருவர் மட்டுமே பெண்கள், அவர்களும் கணவரின் பெயரோடு சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் [கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன், சௌந்தரம் ராமச்சந்திரன்]. தமிழகத்தில் சமகாலப்பெண்கள் எவருக்கும் சிலை வைத்திருப்பதாக நினைவில்லை. கண்ணகி, ஔவையார் சிலைகள்தான் உண்டு. பெண்கள் சேர்க்கப்படலாம் என்றால் முத்துலட்சுமி ரெட்டி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரைக் கணக்கில் கொள்ளலாம். நண்பர்களுக்கு வேறு பெண்பிரபலங்கள் நினைவுக்கு வருகிறார்களா?

திருமூலநாதன்

நமக்குரிய சிலைகள்

முந்தைய கட்டுரைராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
அடுத்த கட்டுரைகடவுளின் மைந்தன்