பொருளியல் விபத்து:மேலும் கடிதங்கள்

ஒரு பொருளியல் விபத்து தை’ மிகவும் ரசித்தேன். வகுப்பரையில் செமினார் மிகவும் வறட்சியாக இருந்தமையால் தங்கள் இணையதளத்துக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். நான்கு பத்திகள் படித்தவுடனேயே “வேண்டாம்.. இதோட நிறுத்திக்கோ..  இல்லைன்னா சிரிப்ப அடக்க முடியாம விபரீதமாயிடும்’ என மூளை எச்சரிக்கை சிக்கல்களை அனுப்பியபடி இருந்தது. என் மீது இருந்த அதீத தன்னம்பிக்கையால் தொடர்ந்து படித்தபடியே இருந்தேன். “”என்ன சார்? உள்ள சுச்சு இருக்குமே…” என்று பிச்சைக்காரர் சொல்வதைக் கேட்டு, அதிலும் அந்த ‘சுச்சு’ என்ற வார்த்தையைப் படித்தவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன். “ஒடச்சிபுட்டாரு சாமி’க்குப் பிறகு நிலமை மிகவும் விபரீதமாகப் போகவே எப்படியோ இருமி, தும்மி மீண்டேன்.

வீட்டுக்குச் சென்று மீண்டும் படித்தேன். ஒரு எழுத்தாளனாக இருப்பதன் அத்தனை சுக துக்கங்களையும் இத்தனை அற்புதமாக, தேர்ந்த அங்கதத்துடன் சொல்லியுள்ளீர்கள். சொற்களைச் சுமப்பவன் அவன். சொல்லில் இருந்தே மௌனத்தை அடைபவன்.

அன்புடன்
அர்விந்த்

888

அன்பு ஜெ.எம்,குருவணக்கம். பொருளியல் விபத்து படித்த பிறகு,இனி  a.t.m.counter
பார்க்கும்போதெல்லாம் உங்கள் அனுபவம்தான் நினைவு வரப்ப்போகிறது.உங்கள்பிற
நகைச்சுவைக்கட்டுரைகளை விட எனக்கு உகப்பான கட்டுரை,இதுதான்.அறிவுஜீவிகள் லௌகீகவாழ்க்கையில் விசித்திரமாக நடந்து கொள்ளும்  தன்மைக்கு  இது நல்ல உதாரணம்.சுசீலா

888

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.,

 

 ஒரு பொருளியல் விபத்து – சோகச் சம்பவத்தை சிரி,சிரி யென்று படித்தேன்.பாதி படிக்கும்போதே எனக்கு அஜிதன்,சைதன்யா நினைவுதான் வந்தது.ஏற்கனவே உங்களை அவர்கள் ஒரு அசடு(ஒரு வகையில்) என்பதாக உணரமுடிகிறது.

போதாக்குறைக்கு இது வேறு அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது என எண்ணினேன்.அது குறித்தும் நீங்கள் பின்னால் எழுதிவிட்டிருந்தீர்கள்.

லௌகீகச் சிந்தனைகளிலிருந்து,வாழ்விலிருந்து மிகவும் அன்னியப்பட்டிருக்கிறார்கள் படைப்பாளிகள்.(பின் யாருக்காக எழுதுகிறார்கள்?).

ஒரு ஆகச்சிறந்த எழுத்தாளரின் மரியாதை என்பது சமூகத்தில் இதுதானா? இதே ஒரு வார்டு கவுன்சிலராகவோ,சின்னத்திரையின் சின்ன நடிகராகவோ இருந்திருந்தால் மக்கள் எவ்விதம் நடந்துகொண்டிருப்பார்கள் என்பது தெரிந்ததே.

கற்பனையில் எழுதும் நகைச்சுவையை விட, இது கூடுதலான நகைச்சுவை.

sa.muthuvel 

**

அன்புள்ள ஜெ

ஒரு பொருளியல் விபத்து அருமை. நான் சொந்த வாழ்க்கையில் அமெரிக்கப் பொருளியல் விபத்தில் சிக்கி நொந்து போய் இருந்த போதும் மனம் விட்டு சிரித்தேன். நாம் இம்மாதிரியான இக்கட்டுகளில் சிக்கும்போதுதான் எப்பேற்பட்ட கோமாளி நமக்குள் இருக்கிறான் என்பதை அறிகிறோம். நான் இதேபோல ஒரு சூதாட எந்திரத்திடம் சிக்கி கிட்டத்தட்ட அதை  கொலைசெய்யுமளவுக்குச் சென்றுவிட்டேன்
சிவராம்

***

அன்புள்ள ஜெ,

உங்கள் கட்டுரையில் நீங்கள் உங்கள் வீட்டில் ‘நகைச்சுவை விருந்து’ படைப்பது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். உங்களுக்கு அறிமுகமுள்ள என் நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பகடிசெய்து பேசுவீர்கள் என்றும் ஒரு சந்திப்பில் சிரித்துக்கொண்டே இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அதை நினைவுபடுத்திக்கொண்டேன். தெலுங்கு சினிமா பற்றி நீங்கள் நடித்துக்காட்டியதாக அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இபோது நம்புகிறேன்

 raajkannan@

ஒரு பொருளியல் விபத்து

முந்தைய கட்டுரைசுகுமாரன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்