காந்தி உரை -கடிதங்கள்

IMG_20150920_181524_HDR

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று கோவையில் “இன்றைய காந்தி” என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரையை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்ச்சி. காந்திய சிந்தனைகளை நாம் புரிந்து கொண்டதை விட மேலை நாட்டினர் சரியாகப் புரிந்து கொண்டனர் என்றும், காந்திய சிந்தனைகள், வழிமுறைகள் இன்றைய காலகட்டத்துக்கும் அதற்குரிய மாற்றங்களுடன் adapt செய்து கொள்ளத்தக்கது என்றும் உங்கள் உரையில் குறிபிட்டிருந்தீர்கள். அத்தகைய காலமாற்றத்துடன் கூடிய காந்திய சிந்தனைகள் ஒரு சோதனை முயற்சியாக எங்காவது நடைமுறைப்படுத்தப்பட்டு அது ஏற்புடையது என்று அறியப்பட்டிருக்கிறதா ?

காந்தியினுடைய எந்த எந்த சிந்தனைகள் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாற்றங்களுடன் நடைமுறைப்படுதலாம் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதாக நீங்கள் பார்க்கிறீர்கள் ?

நன்றி
ஜானகிராமன்

அன்புள்ள ஜானகிராமன்

காந்தியப்பொருளியல் மற்றும் ஜனநாயகப்போராட்டங்களின் இன்றைய பொருத்தம் பற்றி மிக விரிவாகவே என்னுடைய இன்றைய காந்தி என்ற நூலில் எழுதியிருக்கிறேன். என் தளத்திலேயே காந்தி என அடித்து தேடினால் அனைத்துக்கட்டுரைகளையும் வாசிக்கமுடியும்

ஜெ

IMG_20150920_181606_HDR_1442753213972_1442753251349

அன்புள்ள ஜெயமோகன்,

பல வருடங்களுக்குப் பின் உங்கள் மேடைப் பேச்சை நேற்று கேட்டேன்.

நாட்டிற்குத் தேவையான பேச்சு.

அரசியால்வாதி யார், விஷனரி யார் என்கிற உங்கள் விளக்கமும், புனிதப் பசுவை (அல்லது நீங்கள் சொன்ன மாதிரி கழுதையை) தொடும் ஆத்ம பலம் பற்றி நீங்கள் கூறியவையும், சர்க்காவின் மெல்லிய பள்ளத்திலும், கதரின் முரட்டிலும் காந்தியை அடைத்து வைக்கப் பார்க்கும் காந்திய வாதிகளுக்கும், ஒரே திசையில் சொன்னதையே சிந்திக்கப் பயின்று விட்ட தமிழ் அறிவு சீவிகளுக்கும், குறிப்பாக மாணவர் உட்பட உள்ள இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமானவை.

மிகத் தெளிவான, தர்க்க ரீதியான, உணர்ச்சி மிகுதி இல்லாத, கவித்வம் குறையாத பேச்சு.

அதனாலேயே, இந்தப் பேச்சைக் கேட்கையில் ஒருகால் காந்திஜியின் அணுக்கத் தொண்டரான ராஜாஜி இன்று நம்மிடையே அவரது தலைவரைப் பற்றிப் பேசியிருந்தால் அவ்வுரை இப்படித்தான் இருந்திருக்குமோ என்கிற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உங்கள் பேச்சில் இடம் பெற்ற திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமமும், உப்பு சத்யாக்ரஹமும், மேலும் முக்கியமாக, இடம் பெற்றுக் கொண்டே இருந்த, காலத்தைத் தாண்டியும் தரிசிக்கும் ஆற்றலும்.

காந்திஜியைப் போலன்றி ராஜாஜிக்கு ஓர் அனுகூலம் இருந்தது. அவர் மேலை நாட்டில் படித்தவரல்ல. ஆனால் நீங்கள் உரையில் காந்தியைப் பற்றிச் சொன்ன மாதிரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து, சுண்டிப் பார்த்து அதன் பெறுமதியை சரியாகக் கணிக்கும் தன்மை இவரிடமும் இருந்தது. அதே போல் தாழ்வு மனப்பான்மை இல்லாத இந்தியராகவும் அவர் இருந்தார். மவுன்ட் பாட்டனிடமோ, ஜான். எஃப் கென்னடியிடமோ அவர் பேசிக் கொண்டிருக்கும் ஃபோட்டோக்களைப் பாருங்கள். அல்லது படேலுக்கோ, ஜவஹருக்கோ அவர் அறிவுரை வழங்கும் ஃபோட்டோக்களைப் பாருங்கள்.

உள்ளுணர்வு, அந்தராத்மா பற்றி நீங்கள் கூறியவற்றை சொல்ல இங்கு யாரும் இல்லை.

காந்திஜியின் அந்த உலகில் (Other worldiness) அவருடன் யார் இருக்கிறார்கள் என்பதை இந்த மிகச் சிறிய கடிதத்தில் படிக்கலாம்.

Mahatma Gandhi’s letter

My dear C.R.,

Somehow or other I need your letter to feel that all is well with you. My position is this. My body and mind are living a world by which I remain unaffected, but in which I am being tried. My soul is living in a world physically away from me and yet a world by which I am and want to be affected. You are a part of that world and perhaps the nearest to me.My innermost being wants your approbation of what I am doing and thinking.I may not always succeed in getting it, but it craves for your verdict…………
………………..
With love, yours
Bapu
16-7-1925

மிக்க அன்புடன்,

வ. ஸ்ரீநிவாசன்.

அன்புள்ள ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு

கோவையில் நீண்ட இடைவேளைக்குப்பின் உங்களைச் சந்தித்தது மனநிறைவை அளித்தது

அப்பேச்சில் நான் காந்தியை மட்டுமே கருத்தில்கொண்டேன். அன்றைய பொதுவான முற்போக்கு- ஜனநாயகச் சிந்தனைகளில் இருந்து காந்தி எப்படி ஒரு படி மேலே இருந்தார் என்று சுட்டிக்காட்டவே நேருவை உதாரணமாக எடுத்துக்கொண்டேன்

ஜெ

IMG_20150920_180556
அன்புள்ள ஜெமோ

கோவையில் உங்கள் காந்தி பற்றிய உரை நான் சென்ற பத்தாண்டுகளில் கேட்ட மிகச்சிறந்த மேடைப்பேச்சு என நினைக்கிறேன். இவ்வளவுக்கும் நான் கோவையில் எல்லா பேச்சாளர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பேச்சின் ஒரு வார்த்தையைக்கூட தவறவிடாமல் கேட்கவேண்டிய பேச்சு. ஒரு வகையான மோனநிலையில் இருந்தேன்

உங்கள் முந்தைய பேச்சுக்களைக்கேட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு மெருகேறியபடியே வருகிறது. தங்குதடையில்லாமல் பேசுகிறீர்கள். முன்பெல்லாம் சொற்களை விழுங்குவீர்கள். அதுவும் இல்லை.

அதைவிட கருத்துக்களில் அபாரமான ஒரு தெளிவு காணக்கிடைக்கிறது. அது உங்களை தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நின்று பேசவைக்கிறது. அற்புதமான உரை. இப்படிப்பட்ட உரைகள் இன்று மிகமிக அபூர்வமாக ஆகிவிட்டன

ஜெயராமன்

IMG_20150920_180440

ஜெ

கோவையில் உங்கள் உரையை நான் கேட்டமிகச்சிறந்த சில உரைகளில் ஒன்று என்று சொல்லுவேன். நீங்கள் ஆற்றிய மிகச்சிறந்த உரையும்கூட.

இப்போதெல்லாம் பேச்சுக்கு என சில டெம்பிளேட்டுகள் உருவாகிவந்துள்ளன. கூட்டத்துக்குத் தக்கவாறு பேசுவது காரணம். ஒரு கருத்தையே பலமுறை நீட்டிச்சொல்வது. சாதாரணமான கருத்துக்களையே ஆணித்தரமாக அறைந்து சொல்வது. நகைச்சுவைத்துணுக்குகளை நிறுத்தி நிதானமாகச் சொல்வது. சாதாரணமான குட்டிக்கதைகள், நிகழ்ச்சிகளை வித்தாரமாகச் சொல்வது. நான் மேடைப்பேச்சை விரும்பிக்கேட்பவன். ஆனால் எனக்கு இப்பேச்சுகள் எல்லாமே சலிப்பை ஊட்டுகின்றன. மிகச்சிறந்த பேச்சாளர்கள் என்று சொல்லப்படும் பேச்சுக்களில்கூட ஒருமணிநேரம் கேட்டால் பத்து நிமிடம்தான் தேறும்

உங்கள் பேச்சு நேரடியாகவே விஷயத்துக்கு வந்தது. மிகச்செறிவாக கருத்துக்களை மட்டும் சொல்லிக்கொண்டு சென்றீர்கள். எவரையும் மட்டம் தட்டவில்லை. கிண்டல் செய்யவில்லை. உதாரணம் சொல்கிறேன் என்று சம்பந்தமில்லாமல் செல்லவிலலி. குட்டிக்கதைகளும் வளவளப்புகளும் இல்லை. சமகால தத்துவ சிந்தனையை இப்படி உரையாக ஆக்க முடியும் என்பதே ஆச்சரியமான விஷயமாக ஆகிவிட்டது. வீடுதிரும்பும் வழியெல்லாம் சிந்தனைசெய்துகொண்டே வந்தேன். நன்றி

எஸ்.ராஜன்

ஜெ

மிகச்சிறப்பான பேச்சு. எதிர்பார்த்தே வந்திருந்தேன். ஆனாலும் ஆச்சரியம் அளித்த பேச்சு

பேச்சு மிகச்சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் அதிலிருந்த திட்டம்தான். அற்புதமான கட்டமைப்பு. வழக்கமான காந்திக்கும் நீங்கள் புரிந்துகொண்ட நாளைய காந்திக்குமான வேறுபாடில் தொடங்கி மரபு மதம் நிலப்பிரபுத்துவம் மூன்று விஷயங்களில் அன்றைய பொதுவான அறிவுஜீவிகள் அளித்த நிலைபாட்டிலிருந்து காந்தி எப்படி ஒரு படி மேலே சென்றார் என்பதை விளக்கினீர்கள். அதிலிருந்து காந்தியின் அறிதல்முறையின் தனித்தன்மை என்ன அது எப்படி அவரது பர்சனாலிட்டியுடன் சம்பந்தப்பட்டிருந்தது என்று காட்டினீர்கள். மிகச்சிறப்பாகத் திட்டமிட்ட பேச்சு

வாழ்த்துக்கள்

சிவக்குமார்

அன்புள்ள ஜெயமோகன்

காந்தி பற்றிய உரை அற்புதமாக அமைந்தது. உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசிப்பவன். பேச்சை மூன்றுமுறை கேட்டிருக்கிறேன். இதுதான் நான் கேட்டதில் சிறப்பானது. நான் இந்த அளவுக்கு செறிவான ஆணித்தரமான உரைகளைக் கேட்டதில்லை

ஆனால் பேச்சுக்குப்பின் கேள்விபதில் பேச்சின் உணர்ச்சிகளை நீர்த்துப்போக வைத்தது. பேச்சு ஒரு வடிவத்துடன் இருந்தது. ஆனால் கேள்விபதில்களுக்குப்பின் அந்த வடிவம் மனதில் கொஞ்சம் கலைந்துவிட்டது. நல்லவேளையாக நீங்கள் மீண்டும் உங்கள் பேச்சைத் தொகுத்து அளித்தீர்கள்

அதேபோல ஒருவர் பேசியபின்னர் இன்னொருவர், அவர் தலைவரோ நன்றி நவில்பவரோ ஆக இருக்கலாம், பேச்சைத் தொகுத்துச் சொல்வது தேவையே இல்லை. அது ஒருவகை அத்துமீறல். அவர் அவருக்குப்புரிந்ததைச் சொல்லி அதைத்தான் நீங்கள் சொன்னீர்கள் என்று சொல்லவேண்டியதேவையே இல்லை. அந்தப்பேச்சே மிகக்கச்சிதமாக இருந்தது.

பேச்சுக்குப்பின் கேள்விபதில், தொகுப்புரை எல்லாவற்றையும் தவிர்த்திருக்கலாம். நேற்றைய பேச்சிலே உங்கள் முத்தாய்ப்பு ஒரு சிறப்பு. அதை மேலே பேசி இல்லாமலாக்கிவிட்டனர்

சிவக்குமார்

அன்புள்ள ஜெ சார்

நீங்கள் காந்தியையும் நேருவையும் ஒப்பிட்டீர்கள். ஆனால் நேருவை விட்டுக்கொடுக்கவே இல்லை. அது எனக்குப்பிடித்திருந்தது

மணிகண்டன்

முந்தைய கட்டுரைராமு அய்யர்
அடுத்த கட்டுரைநமது கோட்டையின் கொடி