‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 8

பகுதி ஒன்று – கனவுத்திரை – 8

ஒரு கையில் குருதியும் மறு கையில் தழலுமென தன் எல்லை கடந்து வந்த இளைய வீரனை சித்ரரதன் தன் உடல்விழியால் அக்கணமே கண்டான். விழிமணி போல் இருளுக்குள் ஒளிவிட்ட அவன் உடல் அதிர்ந்தது. அவனுடன் பொன்னுடல் பொலிய காமக் களியாட்டிலிருந்த துணைவி கும்பீநசியும் கந்தர்வ கன்னியரும் அக்கணமே வண்ணச் சிறகுள்ள மீன்களாக மாறி நீருக்குள் மூழ்கி மறைந்தனர். அவர்களின் அச்சமும் நாணமும் நிறைந்த பதறும் சொற்கள் அவனைச் சுற்றி குமிழிகளென எழுந்து வெடித்தன.

சினம் நெய்யில் எரியென பற்றிக்கொள்ள தன் உடல் பெருக்கி நீருக்கு மேலெழுந்தான் சித்ரரதன். அவன் இரு தோள்களிலிருந்து நூறு கைகள் முளைத்தெழுந்து விரிந்தன. அவற்றில் மண்ணில் உள்ள படைக்கலங்கள் அனைத்தும் தழல்கள் ஒன்றில் பிறிதென பற்றிக்கொண்டு எழுவதுபோல தோன்றின. ஆயிரம் சிம்மங்களின் அறைதல் என ஒலியெழுப்பி நீர் மேல் நடந்து கரைக்கு வந்தான்.

“நில். நில். மானுடா! யார் நீ?” என்று கூவியபடி அவன் வந்தபோது மலை உருண்டு வரும் எடையதிர்வில் மரங்கள் நடுங்கின. அவற்றின் கூடுகளில் கண் துயின்ற குஞ்சுப் பறவைகள் எழுந்து கூவிய அன்னையின் தூவி வெம்மைக்குள் புகுந்து கொண்டன. காட்டுக்குள் மடம்புகளிலும் குகைகளிலும் புதர்களிலும் பதுங்கி விழிமூடித் துயின்றிருந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் கனவுகளுக்குள் அத்தருணத்தை கண்டன. பேருருக் கொண்டு அர்ஜுனன் முன்பு வந்து நின்ற சித்ரரதன் “ஏன் இங்கு வந்தாய்? அறியா மானுடனா நீ? கந்தர்வ வேளையில் இவ்வெல்லை கடக்கக் கூடாதென்றறியாத மானுடன் ஒருவனும் இருக்க முடியுமா?” என்றான்.

அர்ஜுனன் அஞ்சாத விழிகளுடன் நிமிர்ந்து நோக்கி, “அறிந்தே வந்தேன்” என்றான். மண்ணுக்கு வந்த பல நூறு யுகங்களில் முதன் முறையாக முற்றிலும் அச்சமற்ற விழியொன்றைக் கண்ட கந்தர்வன் திகைத்து “என்னை யாரென்று அறிவாயா?” என்றான். “நீர் கந்தர்வன், சித்ரரதன் என்று உமக்குப்பெயர்” என்றான் அர்ஜுனன்.

நூறு கைகளையும் நிலத்தில் ஓங்கியறைந்து ஊன்றி குனிந்து கன்னங்கரிய உடல் கொண்டு விந்தையான பெரிய பூச்சியைப் போல் சித்ரரதன் ஆனான். அவன் இடையிலிருந்து வௌவால்களைப்போல் இருபெரும் தோல் சிறகுகள் விரிந்தன. கடற்கலத்தின் பாய் காற்றில் படபடப்பது போல அவற்றை அடித்து பாறை உருளும் ஒலியில் “நான் மானுடரை விரும்புவதில்லை. என்னை விழிதொட்டு நோக்கிய மானுடர் எவரையும் கொல்லாது விட்டதும் இல்லை” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம். கந்தர்வர்களின் முறை அது. அவர்களுக்கு மானுடர் ஒரு பொருட்டல்ல” என்றான். “மூடா, என் எல்லைக்குள் வந்த நீ இப்போதே இறந்தவனுக்கு நிகரே” என்றான் கந்தர்வன். அர்ஜுனன் “இங்கு நான் வந்தது உம்மை அறைகூவ மட்டுமே” என்றான். தன் முதல் வலக்கையால் நிலத்தை ஓங்கி அறைந்து வெடித்து நகைத்து “என்னையா? போருக்கா?” என்றான் சித்ரரதன்.

கருவறைச் சுடர்விளக்கின் அசைவின்மை தெரிய “ஆம்” என்றான் அர்ஜுனன். “நான் எளிய மானுடன். அதை அறிவேன். ஆனால் முழுக்குருதியையும் உண்டபின் படையல் விலங்கை தானென்றே உணர்கிறது தெய்வம். என் கையில் அமர்ந்த வில்லின் தெய்வம் விண்ணளந்தவன் எடுத்த காலுக்கு நிகரானது. அது ஏறி வரும் ஊர்தி மட்டுமே நான். இதை எதிர்கொள்ள மும்மூர்த்தியரும் திசைவெளியை வில்லென வளைத்து எழுந்து வந்தால் மட்டுமே முடியும்.”

நூறு நூறு யுகங்களின் களிம்பு படிந்த உள்ளத்திற்கு அப்பால் சென்று சித்ரரதனின் விண்ணகர் வாழ்வின் நினைவை அர்ஜுனனின் சொல்லோ தோற்றமோ தொடவில்லை. அந்த அச்சமின்மை மட்டுமே சினம் கொள்ளச் செய்தது. நூறு கைகளையும் அசைத்து படைக்கலங்களைச் சுழற்றி சிறகுகளை அடித்து காற்றில் எழுந்து அவனை சூழ்ந்து பறந்தான். “மூடா, எடு உன் படைக்கலத்தை. இக்கணமே பார்ப்போம், வெல்வது எவரென்று” என்றான்.

அர்ஜுனன் “அறைக்கூவியவன் நான். எனவே படைக்கலன் தேர்வது உன் உரிமை” என்றான். சித்ரரதன் சினமும் ஏளனமும் கலக்க நகைத்து “எனக்கு போரறம் கற்பிக்க வந்துளாயா? உன் படைக்கலத்தை நீயே எடு. அறைகூவல் விடுத்தவன் நான். என் விழி என நான் அமைத்த எல்லைக் காவல் ஆந்தை என் அறைகூவலாக அங்கே அமர்ந்திருந்தது” என்றான். “ஆம். அவ்வண்ணமெனில் அதுவே”” என்றான் அர்ஜுனன். தன் எரிசுள்ளியை வீசி அங்கிருந்த எண்ணெய் முட்புதர் ஒன்றை பற்றி எரிய வைத்தான். வெடித்து தழல் தெறித்து எழுந்து நிழல்களுடன் ஆடிய சுடரின் ஒளியில் தன் வில்லை எடுத்து நாணேற்றி கால் பரப்பி சமபாத நிலையில் நின்றான்.

“வில் எனில் வில்” என்று உரைத்த சித்ரரதன் ஒளிரும் உடல்கொண்ட மானுடனானான். படநாகம் போல் வளைந்தெழுந்த பெருவில்லொன்றை இடக்கையில் ஏந்தி மான்விழிபோல் ஒளிர்ந்த முனை கொண்ட அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியை தோளிலேந்தி நின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொடுத்தபடி பக்கச்சுவடு வைத்து மெல்ல சுற்றி வந்தனர். அர்ஜுனனின் கைகள் அவன் ஆவநாழியை தொடவில்லை. வில்லின் நாண் மட்டும் முட்டி முட்டி துளை தேடும் வண்டு போல் இமிழ்ந்து கொண்டிருந்தது.

கந்தர்வனின் பத்து விரல் நகங்களிலும் கருவிழிகள் எழுவதை அர்ஜுனன் கண்டான். பத்து கால்நகங்களும் நோக்கு கொண்டன. அம்பெனப்படுவது பருவுருக்கொண்டு காற்றிலெழும் விழியே என துரோணர் சொன்ன சொற்களை நினைவு கூர்ந்தான். சுற்றிவரும் கந்தர்வனின் உடலசைவை விழி சலிக்காது நோக்கியபடி தான் சுற்றி வந்தான். விழி கோத்து மெல்ல சுழலும் அம்முடிவற்ற கணத்தில் அவன் அதைக்கடக்கும் வழியை கண்டான். புதர்களில் பூத்து நீட்டி நின்ற மலர்கள் தொடும்போது மட்டும் சித்ரரதன் உடல் உதிர்வறிந்த சுனைநீர்ப் பரப்பென மெல்ல அதிர்ந்தது. கணத்தின் ஒரு துளிநேரம் அசைவிழந்து உறைந்து மீண்டது.

அர்ஜுனன் புன்னகைத்தான். கால் பின்னெடுத்து வைத்து அங்கே இலையின்றி கிளை செறிந்து பூத்து நின்ற கொன்றை ஒன்றை அடைந்தான். அவன் இயற்றப் போவதென்ன என்று சித்ரரதன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே பார்த்தனின் வலக்கை நீண்டு மலரொன்றைக் கொய்து நாணிலேற்றி அம்பெனத் தொடுத்து சித்ரரதன் உடலை அடித்தது. மலர்பட்டு செயலிழந்து விழுந்த அவன் உடல் மீள்வதற்குள் அடுத்த மலர் வந்து விழுந்தது. மலர் மேல் மலர் வந்து விழ முடிவற்ற நீளம் கொண்ட மலர்ச்சரடென ஆயிற்று அந்த ஆவத்தொடர்.

எழுந்த பெருங்கையில் வில்லும் மறுகையில் அம்புமாக பனிச்சிலையென நின்றான் சித்ரரதன். அம்புகளை என மலர்களை தொடுத்தபடி அவனைச் சுற்றி வந்த அர்ஜுனன் புரிவட்டப்பாதையில் மெல்ல அணுகி அவன் கையிலிருந்த வில்லை தன் காலால் உதைத்து வீசினான். மறுகையில் இருந்த அம்பைத் தட்டி நிலத்தில் இட்டான். இமையசைவும் இன்றி நின்றிருந்த சித்ரரதனின் மேல் பாய்ந்து அவன் குளிர்ந்த கைகளைப் பற்றி முறுக்கி பின்னால் பதித்தான். கால்களுக்கு நடுவே கால் செலுத்தி நிலையழியச்செய்து மண்ணில் வீழ்த்தி தன் உடலால் இறுகப் பற்றிக் கொண்டான். “வென்றேன் கந்தர்வரே” என்றான்.

முதல் மலரிலிருந்து இறுதி மலர் வரைக்குமான அம்புப் பெருக்கை ஒரு கணமென உணர்ந்து சிந்தை அழிந்திருந்த சித்ரரதன் விழித்து உடல் புதைத்து தலை திருப்பி “என்ன நிகழ்ந்தது?” என்றான். “உங்களை வென்றுளேன் கந்தர்வரே” என்றான். “எங்ஙனம் இது நிகழ்ந்தது? எங்ஙனம்?” என்று குரல் இறுகித் தெறிக்க கந்தர்வன் கேட்டான். “மானுடன் கந்தர்வரை வென்றது இதுவரை நிகழ்ந்ததில்லை. நீ திருமால் உருவமா? முக்கண்ணன் படையினனா?”

“கந்தர்வரே, எண்வகை நுண்திறன் பெற்றவர் நீங்கள். அங்கே உங்கள் கந்தர்வ கன்னியருடன் நீராடுகையில் உருவழிந்து இலகிமை கொண்டு காற்றென ஆகியிருந்தீர். காதல் கொண்டு கனிந்திருந்த அகமோ நுண்ணிய அணிமையில் இருந்தது. காமம் கலைந்து எழுந்து சினம் பெருகி என்னுடன் போர்புரிய வருகையில் மலையென வளர்ந்து மகிமைக்கு மாறியது உங்கள் உடல். அப்போதும் காதலின் நினைவில் அணிமையில் நீடித்திருந்தது உள்ளம். உங்கள் மகிமையுடன் போரிடலாகாது என்றுணர்ந்தேன். இம்மென்மலர்களால் உங்கள் அணிமையைத் தாக்கி வென்றேன்” என்றான் அர்ஜுனன்.

தசைகள் தளர உடல் தொய்ந்து மண்ணில் அமிழ்ந்து சித்ரரதன் கண்ணீர் விட்டான். “ஆம், என்னுள் இரண்டெனப் பிளந்து வலுவிழந்தேன். எனவே நீ என்னை வென்றாய்.” அர்ஜுனன் “கந்தர்வரே, வெல்லப்படுபவர் அனைவரும் பிளவுண்டவர்களே. ஒன்றென நின்றவன் தோற்றதில்லை” என்றான்.

“என் கந்தர்வத்தன்மையே என் படைக்கலங்களை பொருளற்றதாக்கியது…” என்று சொல்லி நிலத்தில் முகம் புதைத்தான் சித்ரரதன். “தனிவல்லமையை அளிப்பது எதுவோ அதுவே வீழ்த்தும் பொறியும் ஆகும் என்பது போர்நூல் கூற்று” என்றான் அர்ஜுனன். “இனி நான் எப்படி விண்ணேகலாகும்? மானுடரிடம் தோற்ற கந்தர்வன் அங்கே இழிமகன் எனப்படுவான். யுகயுகங்களாக இக்காட்டில் இன்பங்கள் அனைத்தையும் அடைந்து திளைத்தேன். என்னுள் எங்கோ இவையனைத்தும் கந்தர்வபுரியின் இன்பங்களின் ஆடிநிழல்கள் மட்டுமே என்று அகக்குரல் சொல்லிக் கொண்டிருந்தது. என்றோ ஒரு நாள் இப்பொய்வெளியிலிருந்து எழுந்து மெய் நிலையை அடைவேன் என்று எண்ணியிருந்தேன். இனி அது நடவாது. ஊழி முடிவு வரை இந்த மாயக்கனவின் பொய் இன்பங்களில் ஆடி இங்கு உறைவதே என் ஊழ் போலும்” என்றான்.

அர்ஜுனன் தன் ஆடையை சீர்படுத்தி வில்லை தோளில் அமைத்தான். “என் பிழையன்று இது கந்தர்வரே” என்றான். “அறைகூவல்களை ஏற்பதும் களம் நின்று வெல்வதும் இயலாதபோது அங்கே மாய்வதும் வீரனுக்குரிய நெறிகள். வணங்குமிடத்தில் வணங்கவும் பிற இடங்களில் நிமிரவும் அவன் கடமைப்பட்டிருக்கிறான். என் தமையனின் ஆணை ஏற்று இங்கு வந்தேன். உம்மை வென்று மீள்வதன்றி வேறு வழியில்லை எனக்கு. உமக்கு இழைத்த பிழைக்காக என்னை பொறுத்தருள்க!”

எரிந்து அகன்று சென்றிருந்த புதர்த் தீயை அணுகி அங்கு உள்ளெண்ணெய் பற்றிக் கொள்ள நீலச்சுடர் எழுந்து சீறிக்கொண்டிருந்த எரிசுள்ளி ஒன்றை எடுத்தான். அதைச் சுழற்றியபடி “விடையருள்க!” என்று சொல்லி தலைவணங்கி திரும்பினான். திடுக்கிட்டு கையூன்றி எழுந்தமர்ந்து “நில்” என்றான் சித்ரரதன். “இவ்வண்ணம்தான் நீ இவ்வனத்திற்குள் புகுந்தாயா?” “ஆம்” என்றான் அர்ஜுனன். “எதற்கு அதை வினவுகிறீர்?”

சித்ரரதன் எழுந்து கைநீட்டி “உனது வலக்கையில் குருதி…” என்றான். “நான் கொன்ற அவ்வாந்தையின் குருதி அது” என்றான் அர்ஜுனன். சித்ரரதன் இருகைகளும் தளர தலை குனிந்து “எப்படி மறந்தேன்? அச்சொற்களை எப்படி மறந்தேன்?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “யுகங்கள் சருகென விழுந்து என் அனலை அணைத்துவிட்டன. எப்படி இதை மறந்தேன்?” நிமிர்ந்து அர்ஜுனனை நோக்கி “இளையோனே, இங்கு நான் இத்தனை யுகங்கள் காத்திருந்ததே ஒருகையில் தழலும் மறுகையில் குருதியும் என இங்கு நுழையும் ஒருவனுக்காகவே” என்றான்.

அர்ஜுனன் “இது வெறும் தற்செயல்” என்றான். “மானுடனே, புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்றுணர்க!” என்றான் சித்ரரதன். “நான் காத்திருந்த மானுடன் நீயே.” அர்ஜுனன் வியந்து நின்றான்.

சித்ரரதன் கைநீட்டி “இளையவரே, தாங்கள் எவரென்று நான் அறியலாமா? எளிய மலைவேடரல்ல என்று தோற்றத்தால் அறிவேன். அரசகுடிப் பிறந்து முதன்மையான கல்வியைப் பெற்றவரென்று இங்கு கைத்திறனால் காட்டினீர். மணிக்குண்டலங்களும் பொற்கச்சையும் ஏவலும் அகம்படியும் கொம்பும் குழலும் இன்றி வந்திருப்பதனால் எவரென்று அறியக்கூடவில்லை” என்றான். அர்ஜுனன் “கந்தர்வரே, என் பெயர் பார்த்தன். அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் இளைய மைந்தன். இளவரசர் தருமரின் அடிபணியும் இளையோன்” என்றான்.

சித்ரரதன் வியந்து “ஆம். இதை எப்படி தவற விட்டேன்? தாங்கள் இளைய பாண்டவராக மட்டுமே இருக்க முடியும். அன்றேல் துவாரகை ஆளும் இளைய யாதவன். ஆனால் அவன் முகில்நீல நிறத்தவன். அல்லது வில்திறன் மிக்க கர்ணன், அவனோ இன்னும் உயரமானவன். பிறிதெவரும் தாங்கள் இங்கு காட்டிய இவ்வில்திறனை எய்தவில்லை” என்றான். “ஆனால் கள்வரைப்போல் இவ்விரவில் இவ்வண்ணம் காடு புகுவது ஏன்? என்னைப் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எவரென அடையாளம் காணக்கூடவில்லை”.

அர்ஜுனன் புன்னகைத்து “அது நன்று. இன்னும் சில காலம் நாங்கள் எவரென்றறியாமல் வாழ விழைகிறோம்” என்றான். நீரிலிருந்து மீன்வடிவில் எம்பி சேற்றில் விழுந்து மும்முறை துள்ளி மானுடப்பெண் வடிவில் எழுந்த சித்ரரதனின் துணைவி கும்பீநசி நீர் வழியும் உடலுடன் புதர்களை விலக்கி அவன் அருகே வந்து நின்றாள். அவளைத்தொடர்ந்த கந்தர்வப்பெண்கள் புதர்களுக்குள் நின்றனர். சித்ரரதன் “இங்கு தங்களால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே என் பெண்டிருடன் தங்களுக்கு தொழும்பர் பணி எடுக்க கடமைப் பட்டுள்ளேன். நாங்கள் உங்களை உடன் தொடர ஒப்புங்கள்” என்றான்.

அர்ஜுனன் திரும்பி கும்பீநசியின் விழிகளை நோக்கி புன்னகைத்தான். “கந்தர்வரே, போர்முறைப்படி நீர் என் தொழும்பரே. ஆனால் மண்ணில் மானுடருக்குள்ள மணவினையோ மங்கலத்தாலியோ கந்தர்வருக்கில்லை. எனவே இவள் என் தொழும்பியல்ல. இக்காட்டில் எனக்கென தங்கை ஒருத்தியை பெற்றேன். அவளுக்கு என் மூத்தோன் பரிசென உம்மை அளிக்கிறேன்” என்றான். விழிகளில் நீர் நிறைய இதழ்கள் புன்னகைக்க கும்பீநசி கைகூப்பினாள்.

கந்தர்வன் “பாண்டவரே, எய்துமிடத்தை நிறைக்கும் நீரென ஒவ்வொரு வாழ்க்கைத் தருணத்திலும் இடைவெளியின்றி நிறைபவனே வாழ்க்கையைக் கடந்து மெய்மையை அறிய முடிபவன். அத்தகைய ஒருவனை இங்கு கண்டேன். என் தலை தாழ்வதாக!” என்று வணங்கினான். மீளத் தலைவணங்கி “என் மூத்தவரும் அன்னையும் காத்திருக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன்.

“பாண்டவரே, இங்கு நான் செய்த நெடுந்தவம் தங்களால் முடியும் என்ற சொல்லிருக்கிறது. விண்ணில் யுக யுகங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு புதிரை இங்குரைக்கிறேன். அதற்கான விடையை தாங்கள் அளித்தால் மெய்யறிந்து இப்பொய்யுலகை விடுத்து விண்ணேகுவேன்” என்றான் சித்ரரதன். “சொல்க!” என்றான் அர்ஜுனன்.

தான் மண்ணில் இழிந்த கதையை சித்ரரதன் விரித்துரைத்தான். “சொல்லுங்கள் இளைய பாண்டவரே, நான் பிழை செய்தவனா? நான் உரைத்தவற்றில் அறவிலகல் ஏதுள்ளது? இலக்கு நோக்கும் வீரன் பாதையின் சிற்றுயிர்களை கருத்தில் கொள்ளலாகுமா?” என்றான்.

அர்ஜுனன் எண்ணம் முழுத்த முகத்துடன் மெல்ல நடந்து கங்கையை அணுகி அதன் நீர்ப்பரப்பில் தன் வில்லை வைத்தான். கங்கை கொதிநீரென இளகி அலைவு கொண்டது. ஒவ்வொரு அலை வளைவும் சென்று கரையை நாவால் தொட்டு சுருண்டு மீண்டது. இறுதி அலையும் ஓய்ந்து நீர்ப்பரப்பு பளிங்குத் தகடென ஆனபோது விழிமூடி தன்னுள் ஆழ்ந்து சென்று சொல்லெடுத்து திரும்பினான். கூரிய சிறு முகத்தில் படர்ந்த மெல்லிய தாடியை கையால் நீவியபடி “கந்தர்வரே, நீர் செய்தது பிழை” என்றான்.

சித்ரரதன் “ஏன்?” என்றான். “இலக்கை நோக்கிச் செல்லும்போது எவ்வண்ணம் பாதையை நோக்க முடியும்? இப்பாதையில் செல்லும் சகடங்கள் எவையும் சிற்றுயிர்களை கொல்வதில்லையா? சொல்லுங்கள் இளைய பாண்டவரே, உங்கள் அம்புகளால் எளியவர் கொல்லப்பட்டதே இல்லையா? சிற்றுயிர்கள் அழிந்ததில்லையா?”

அர்ஜுனன் “ஆம், சிற்றுயிர்களை சகடங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த இலக்கு அச்சிற்றுயிர்களின் நலனுக்காக அமைந்திருக்கவேண்டும். அனைத்துயிரும் மண்ணில் காலூன்றி அறத்தில் உயிரூன்றி இங்கு வாழ்கின்றன. அவ்வறத்தை இலக்காக்கியவன் செல்லும் பயணம் தெய்வங்கள் நிகழ்த்துவது. அவன் அதன் கருவி மட்டுமே” என்றான்.

“ஆம், எளியோர் கொல்லப்படாது போர் நிகழமுடியாது. ஆனால் அப்போர் அன்னோரன்ன எளியோர் அச்சமின்றி சிறந்து வாழ்வதற்காக அமைந்திருக்க வேண்டும் கந்தர்வரே. அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே. அன்று நீர் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்திற்காகவும் அகமகிழ்வுக்காகவும் இலக்குகொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்.”

அவன் வில் தொட்டிருந்த கங்கை பளிங்கு வெளிக்குள் சுடர் ஏற்றப்பட்டதைப்போல ஒளி கொள்வதை சித்ரரதன் நோக்கினான். அவ்வொளியில் சைத்ரிகம் என்னும் அக்காடே மின்னத்தொடங்கியது. இலைகள் பளபளத்தன. மலர்கள் வண்ணம் கொண்டன. மென்தூவிகள் ஒளி துழாவ பறவைகள் எழுந்து காற்றில் மிதந்தன.

ஒளி பெருகி கண் நிறைத்தபோது கை கூப்பி சித்ரரதன் சொன்னான் “தீட்டப்படும் எதைவிடவும் அறம் கூரியது என்றுணர்ந்தேன். ஏனெனில் ஒவ்வொரு கணமும் குருதியால் கூர்மையாக்கப்படுவது அது.” முழந்தாளிட்டு அர்ஜுனனை வணங்கினான்.

தானும் கைகூப்பி “குருவருள் கிடைக்கட்டும்! மெய்மை துணை நிற்கட்டும்!” என்று அர்ஜுனன் அவனை வாழ்த்தினான். “தங்களுக்கு குருகாணிக்கை என நான் எதை அளிக்கலாகும்?” என்றான் சித்ரரதன். “இந்த அறிவு என்னில் விளையவேண்டுமென்றால் நான் காணிக்கை அளித்தாகவேண்டும். ஏற்றருள்க!”

அர்ஜுனன் புன்னகைத்து “தங்களிடம் உள்ளவை என்னென்ன?” என்றான். சித்ரரதன் “ஒருபோதும் களைப்புறாத வெண்புரவிகள், எந்நிலையிலும் அச்சிறாத தேர்கள், மலைமுட்டினாலும் உடையாத கதாயுதங்கள், அம்பு ஒழியா ஆவநாழிகள், அறாநாண் கொண்ட விற்கள், திசை வளைக்கும் பாசக்கயிறுகள், வான் கொளுத்தி இழுக்கும் அங்குசங்கள்… படைக்கலன்களில் வல்லமைகொண்டவை அனைத்தும் என்னிடமுள்ளன. கொள்க!” என்றான்.

அர்ஜுனன் “இப்படைக்கலன்களைவிட வலிமையானது எது?” என்றான். கந்தர்வன் “படைக்கலன்களில் முதன்மையானது விழியே. படைக்கலன்கள் அனைத்தும் நெருப்பு போன்றவை. காற்றென வந்து அவற்றை உயிர்கொள்ளச்செய்வது விழிநோக்கே. படைக்கலம் பரு. விழி அதில் சிவம்” என்றான்.

“அப்படைக்கலங்களை ஆளும் கந்தர்வ விழிகளை எனக்கு அளியுங்கள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, விண்ணுக்கு மேலுள்ளவர்களால் மட்டுமே ஆளத்தக்கது இந்த விழி. ஆம், மண்ணில் அது பெரும்சுமை என்றேயாகும்” என்றான். “அதையன்றி பிறிதை வேண்டேன்” என்று சொல்லி அர்ஜுனன் திரும்பிக்கொண்டான். “நில்லுங்கள்! கந்தர்வவிழிகளை அடையும் மந்தணச்சொல் ஒன்றை உங்களுக்கு அளிப்பேன். அதற்கு சாக்ஷுஷி என்று பெயர். அதை மும்முறை சொல்லும்போது மட்டும் அவ்விழிகளை அடைவீர்” என்றான் சித்ரரதன்.

“உங்கள் விழிகளை மூன்று வண்ணங்களில் ஒளிவிடச்செய்யும் அது. ஹிரண்யாக்ஷம் என்னும் முதல் நிலையில் நீங்கள் தெய்வங்களையும், தேவர்களையும், மூதாதையரையும் ஊன்விழிகளால் பார்க்கமுடியும்” என்றான் சித்ரரதன். “நீலாக்ஷம் என்னும் விழியால் இப்புவியில் உள்ள அனைத்தையும் பார்ப்பீர்கள். புழுவின் விழிகொண்டு அசைவுகளையும் ஈயின் விழிகொண்டு அசைவின்மைகளையும் கழுகின் விழிகொண்டு மண்ணையும் தவளைவிழிகொண்டு வானையும் பார்க்க முடியும். இப்புவியில் மானுட விழிக்கு எட்டாதவையே பெரும்பகுதி என்றறிக! நீலாக்ஷத்தால் நீங்கள் பார்க்க முடியாத எதுவும் இப்புவியில் எஞ்சாது.”

“சாரதாக்ஷம் என்னும் இருள்மணி விழியால் ஒளியென எதுவும் எட்டியிராத ஏழு ஆழுலகங்களையும் உங்களால் பார்க்க முடியும். பாதாள நாகங்களை, இருள் வடிவ தெய்வங்களை, பழி கொண்ட ஆன்மாக்களை” என்றான். “பாண்டவரே, விழிகளால் ஆக்கப்பட்டது உலகம். மண்ணில் ஒளியறியாதவற்றை நோக்கும் திறன் வௌவால்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொழியறியாதவற்றை நோக்க நாய்கள் அருளப்பட்டுள்ளன. எண்ணம் அறியாதவற்றையும் நோக்கும் திறனை இச்சொல் அளிக்கும் உங்களுக்கு. இவ்விழி காட்டில் கொளுத்தப்பட்ட எரி என உங்கள் உடலில் இருக்கும். விழைவுகளின் காற்று அதைத் தொடாமலிருக்கட்டும். உங்கள் அறிவின் குளிரோடைகளால் அது கட்டுப்படுத்தப்படட்டும்.”

“அம்மந்தணச் சொல்லை அறிய விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “அறம் உணர்ந்து அதில் அமைந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு அறிவிழி என்றும் அணிநகையே” என்றான் சித்ரரதன். அர்ஜுனன் அவன் முன் முழங்காலிட அவன் செவியை தன் வாயருகே கொணர்ந்து தன் மேலாடையால் இரு தலைகளையும் மூடி மும்முறை சாக்ஷுஷி மந்திரத்தை சித்ரரதன் உரைத்தான்.

மும்முறை அதை தனக்குள் ஓதி எழுந்த அர்ஜுனன் தலை வணங்கி “இம்மந்திரத்தை அளித்து நீங்கள் எனக்கு ஆசிரியரானீர். குரு காணிக்கை என நான் அளிப்பது எதை?” என்றான். சித்ரரதன் “நான் மண்ணில் வந்து விழுந்தபோது எந்தை காசியபர் எனக்கு அளித்த அழகிய தேர் விண்ணில் சிதைந்துவிட்டது. அதை மீட்டு அளியுங்கள்” என்றான்.

அர்ஜுனன் தன் வில்குலைத்து அம்புகளைத் தொடுத்து காட்டில் மலர்ந்திருந்த பவளமல்லிமலர்களை கொய்தான். அம்புகளாலேயே அவற்றை ஓரிடத்தில் குவித்து விஸ்வகர்ம மந்திரத்தை சொன்னான். நூற்றெட்டு முறை உரைக்கப்பட்ட அம்மந்திரம் நிறைவுற்றபோது சித்ரரதனின் மலர்த்தேர் மீண்டும் ஒருங்கி நின்றது. “தங்கள் துணைவியுடன் விண்ணேகுக கந்தர்வரே!” என்றான் அர்ஜுனன்.

சித்ரரதன் கை நீட்டி அர்ஜுனனை ஆரத்தழுவிக் கொண்டான். “நாம் மீண்டும் சந்திக்கும் களங்கள் அமையும். அவைகள் நிகழும்” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றான் அர்ஜுனன். “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்று கும்பீநசி தலைவணங்கினாள். “என் தங்கையின் கைகள் உங்கள் கைகளில் இனிதமரட்டும்” என்றான் அர்ஜுனன். கும்பீநசியின் கைபற்றி மலர்த்தேரில் ஏறிக் கொண்டான் சித்ரரதன். மணியொலி எழ சிரித்தபடி கந்தர்வ கன்னியர் எழுந்து வந்து தேரிலேறிக் கொண்டனர்.

“நலம்திகழ்க!” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணமே” என்றான் சித்ரரதன். தேர்ச்சக்கரங்கள் சுழன்று ஒளிவட்டங்களாயின. விரைவு மிக அவை விழிவிட்டு மறைந்தன. கண்ணுக்குத் தெரியாத சரடொன்றால் விண்ணுக்கு சுண்டி இழுக்கப்பட்டது போல தேர் எழுந்து முகில்களில் மறைந்தது. அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கியபோது விண்பரப்பு பல்லாயிரம் கந்தர்வர்களின் புன்னகை முகங்களால் நிறைந்திருப்பதை கண்டான். மெல்ல கரைந்து ஒற்றைப்படலமாகி அவர்கள் மறைந்தனர். அலையடிக்காத ஒற்றைச்சரடென நீளும் கந்தர்வப் பேரிசையாக வானம் மேலும் சற்று நீடித்தது.

முந்தைய கட்டுரைஹொய்ச்சாள பயணம் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைராமு அய்யர்