காந்தியும் கலையும்

ஜெ சார் ,

காந்தியவாதியா என்ற கட்டுரை படித்தேன். நீங்கள் சொல்வதை ஏற்கமுடியவில்லை. அழகின் உச்சம் காந்தியத்திற்கு நெருக்கமானது என்றே நினைக்கிறேன் . மிக சிறந்த கலை அல்லது அழகு என்பது இயற்கைக்கு நெருக்கமான , அதை சிதைத்து மறுவுருவாக்கம் செய்யாமல் , அதில் ( இயற்கையில் ) சீர்மை கொண்டுவருவது தான் .

லாரிபேக்கரின் வழியும் அதுதான் , காந்தி கைவினை உற்பத்தியும் கிட்டத்தட்ட அதுதான் .இப்படி சொல்லலாம் , வெண்மை நிற உடை ஆரம்ப நிலை எளிய உடை ..ஆனால் மிக உயர்ந்த கிளாசிக் , வெள்ளைநிற உடைதான் .

கலையும் அவ்வாறுதான் .இயற்கையை நெருங்கும்போதுதான் அழகே உருவாகும் , மரப் பொருட்களுக்கு இருக்கும் உயர்மதிப்பு அதனால்தான்.

ராதாகிருஷ்ணன் கோவை

அன்புள்ள ராதா,

நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மை. எளிமை தன் இயல்பான நிலையில் இயற்கையை நெருங்குவது வழியாக அடையும் அழகு என்பது காந்தியத்திற்கு உவப்பானதே.

ஒரு கருவி அல்லது கைவினைப்பொருள் அதன் சிறந்த செயல்பாட்டை செய்வதாக ஆகும்போது அதற்குரிய இயல்பான சிறந்த அழகுடனும் இருக்கும் என்பதும் காந்தியத்திற்கு ஏற்புடையதே. பழங்குடிகளின் மீன்பிடிக்கூடைகளைப்பார்க்கையில் அதை கண்கூடாக உணரவும் முடிகிறது

ஆனால் கலை என்பது அது மட்டும் அல்ல. கலை இயற்கையில் உள்ள ஒத்திசைவை, அழகை திரும்பக்கொண்டுவருவது மட்டுமல்ல. அது அக்கலைஞனின் அகம்கொள்ளும் வெளிப்பாடும்கூடத்தான். பழங்குடியின் மீன்பிடிக் கூடைக்கும் பின்னல் அலங்காரம் செய்யப்பட்ட மேல்சட்டைக்கும் இடையே உள்ள வேறுபாடு இது.

காந்தியின் பொருளியல் இந்த இரண்டாவது கலையை ஏற்காது. ஒருபொருளை அக்கலைஞனின் தனிப்பட்ட அகத்தின் வெளிப்பாடாக ஆக்கும்பொருட்டு அதன்மேல் செலுத்தப்படும் உழைப்பை அது தேவையற்றது என்றே நினைக்கும். சமூக அளவில் அது மிகப்பெரிய ஊதாரித்தனம் என மதிப்பிடும்

காஷ்மீர் சால்வை குளிருக்குப் போர்த்த உதவவேண்டும். அந்த ஊடுபாவு அமைப்பையே நேர்த்தியாக அமைத்தால் அது அழகிய பரப்பாக ஆகி கலைப்படைப்பும் ஆகும். ஆனால் அதில் செய்யப்படும் நுணுக்கமான பூவேலைப்பாடுகள் ஆடம்பரங்கள் என்றே காந்தி சொல்வார்

ஆனால் அந்தத் தன்வெளிப்பாடே கலையின் சாராம்சமான அம்சம் என்று நான் சொல்வேன். அது இல்லையேல் அதில் உருவாகும் அழகை கலை என்றல்ல, வெறும் கைவினைத்திறன் என்று மதிப்பிடுவேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள பயணம் -ஒரு கடிதம்