பகுதி ஒன்று : கனவுத்திரை – 7
காசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பிறந்தான் சித்ரரதன். அன்னை அவனை ஈன்று தன்னருகே முகில் படுக்கையில் படுக்கவைத்து இனிய கனவில் துயின்றபோது விண் நிறைத்த பெருமுகில் குவையென குழல் அலைய இருவிண்மீன்களென விழிகள் கனிய குனிந்து மைந்தனை நோக்கினார் காசியபர். அவன் ஒளி ஊடுருவும் உடல் கொண்டிருந்தான். நீர்த்துளியென ததும்பிக் கொண்டிருந்த அவனை தன் சுட்டுவிரல் நீட்டி ஒற்றி எடுத்து தன் முகத்தருகே கொண்டு வந்து நோக்கி புன்னகைத்தார். அவர் புன்னகையின் ஒளியை எதிரொளித்து அவன் அசைந்தான். ‘வாழ்த்தப்படுவாய்’ என்று நற்சொல் உரைத்து அவனை அன்னையருகே விட்டார்.
சித்ரரதன் கந்தர்வபுரியின் பொற்புழுதியில் ஆடி வளர்ந்தான். குப்புறக்கவிழ்ந்து சிறுகைகளை அடித்து முழங்கால் ஊன்றி அவன் தவழத்தொடங்கியபோது தந்தை விண்ணகத்தின் இரு மரமல்லி மலர்களைக் கொய்து அவற்றின் செங்காம்புகளை ஒன்றுடனொன்று இணைத்து இரு சக்கரங்களாக்கி மலர்த்தேர் ஒன்றை செய்தார். அதை அவனுக்களித்து சிரித்தார். அத்தேரை தன் கைகளால் மெல்ல தொட்ட சித்ரரதன் அண்ணாந்து இதழ்நீர் வழியும் சிவந்த வாய் திறந்து மின்னும் கண்களுடன் தந்தையை நோக்கி சிரித்தான். அவர் அவனை “சித்ரரதா, என் மகனே” என்று அழைத்தார்.
அம்மலர்த்தேர் வாடாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் உருட்டி விளையாட அவனுடன் அது வளர்ந்தது. அதை நடைவண்டியாக ஆக்கி அவன் கால் பயின்றான். களிவண்டியாக ஆக்கி அதிலேறி தன் மாளிகை இடைநாழிகளில் சுற்றிவந்தான். சிறுபுரவியைக் கட்டி கந்தர்வ நகரியின் புழுதித்தெருக்களில் விரைந்தான். தோள் முதிர்ந்து இளைஞனானபோது கந்தர்வநகரியின் நிகரற்ற மலர்த்தேரென அது ஆயிற்று. வெண்பளிங்கில் செதுக்கப்பட்டதென ஒளிவிட்ட மலர்ச்சக்கரங்களும் இளம்செந்நிற தூண்களும் கொண்ட அந்தத் தேரை வெண்முகில் வடிவான ஏழு புரவிகள் இழுத்தன. கந்தர்வப் பெண்கள் ஒவ்வொருவரும் அதில் ஒரு முறையேனும் ஏறி விண்ணைச்சுற்றிவர விழைந்தனர்.
வெண்பனி போல் ஒளி ஊடுருவும் உடல் கொண்டிருந்த சித்ரரதன் புலரியின் செம்மையில் பொன்னென ஆனான். அந்தியில் அனலென பொலிந்து அணைந்தான். இருளில் விண்மீன்களின் ஒளியை வாங்கி உருக்கொண்டான். கந்தர்வபுரியின் பேரழகன் அவனே என்றனர் முனிவர். அவன் முகத்தைக் கனவுகண்டு கன்னியர் புன்னகை புரிந்தனர். நிகரற்ற காசியபரின் மைந்தனென்றும் பேராற்றல் கொண்ட முனியின் புதல்வனென்றும் முன்பிலாத பேரெழில் கொண்டவனென்றும் தடையற்ற தேருக்கு தலைவனென்றும் ஆன சித்ரரதன் இளமையிலேயே தருக்கு நிறைந்திருந்தான்.
ஒரு நாள் விண்ணின் ஏழு கந்தர்வக் கன்னியரை துணை சேர்த்து தேரில் முகில் நெடும்பாதையில் விரைந்து கொண்டிருக்கும்போது அவன் முன் ஒரு வாடிய மலர் பாதையில் கிடப்பதைக் கண்டான். அவனுடன் இருந்த கன்னியரில் முதல்வியாகிய கும்பீநசி “அதோ ஓர் அழகிய மலர். தேரை ஒதுக்கு” என்று கூவினாள். “வாடிய மலருக்காக என் தேர் வழிமாறாது” என்றான் சித்ரரதன். அவன் தேர் அம்மலர் மேல் ஏறி உருண்டு மறுபுறம் சென்றது. அதுவோ அன்று காலை மலர்ந்து மாலையில் கூம்ப வேண்டிய கள்மலர். ஆனால் அதனுள் பீதாம்பரன் என்னும் தேவன் தன் தேவியுடன் வண்டு உருவில் நுழைந்து இதழ்களை இழுத்து மூடிக்கொண்டு இன்கலவியில் ஆழ்ந்திருந்தான். அவர்களின் எடை தாளாமல் காம்பு உடைந்து உதிர்ந்து பாதையில் கிடந்தது அம்மலர்.
கலவி முழுமைக்கு முன்னே தன் மேல் ஏறிச்சென்ற சகடங்களை உணர்ந்த பீதாம்பரன் சினத்துடன் எழுந்து பேருருவம் கொண்டு சித்ரரதனை வழி மறித்தான். “உனது தேர் என் இன்ப நுகர்வை அழித்தது. தேவருக்காயினும் மானுடருக்காயினும் தெய்வங்கள் அளித்த இன்பங்கள் மூன்று. உண்ணுதல், புணர்தல், ஊழ்கத்தில் அமர்தல். மூன்றையும் சிதைக்கும் உரிமை விண்ணவருக்கோ மண்ணவருக்கோ அளிக்கப்படவில்லை. இங்கு நீ செய்த பிழைக்கு என்ன சொல்லப்போகிறாய்?” என்றான்.
“விண்ணிலும் மண்ணிலும் பாதைகள் தேர்களுக்கானவை. எளிய சிற்றுயிர்கள் பல்லாயிரம் அப்பாதைகளில் இருக்கலாம். அவற்றை நோக்குபவன் தேரோட்ட இயலாது. இன்று வரை இலக்கடைந்த அத்தனை தேர்களும் அவ்வழியில் உள்ள பிற எவற்றையும் நோக்காதவையே. நான் தேர்வலன். இலக்கு நோக்கும் வீரன். இச்சிற்றுயிர்களை அழிப்பது எனக்கு பிழையல்ல, அறமே” என்றான் சித்ரரதன்.
பீதாம்பரன் சினந்து “என்ன சொன்னாய்? மூடா, இக்கந்தர்வபுரியை அள்ளி ஒரு கணையாழியாக என் கையில் மாட்டும் அளவு பெரியவன் நான். ஏழு விண்ணுலகங்களில் ஒவ்வொரு உலகும் அதற்கு முந்தைய உலகத்தின் ஒரு சிறு துளியே என்றுணர்க! முதல் உலகில் வாழ்பவன் நீ. ஏழாவது உலகின் அமராவதியை ஆளும் இந்திரனின் அவையிலிருக்கும் தேவன் நான். உன் பாதையில் உள்ளவை சிற்றுயிர்கள் என்று நினைக்கும் உரிமையை உனக்கு அளித்த நூல் எது? அச்சொல் அளித்த மூடன் எவன்?” என்றான்.
சித்ரரதன் “தேவனே, விண்ணவருக்கானாலும் மண்ணில் வாழும் மானுடர்க்கானாலும் சிற்றுயிர்க்கானாலும் ஆன்மா ஒன்றே. ஊழ்நெறியும் ஒன்றே. வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் நிகரானவையே. ஆயினும் யானைகள் செல்லும்போது எறும்புக்கூட்டங்கள் அழிகின்றன. பெருமீன் வாய்திறந்து ஒரு இமைப்புக்கு ஆயிரம் சிறு மீன்களை உண்கிறது. வேட்டையாடி விலங்கைக் கொன்று உண்பவன் அதன் உடலில் உள்ள பல்லாயிரம் சிற்றுயிர்களையும் எண்ணாமல் கொல்கிறான். ஆன்மா அமைந்திருக்கும் உடலே இப்புடவி நாடகத்தில் அதன் இடத்தை முடிவெடுக்கிறது. சிற்றுயிரென்பது உடலால் சிற்றுயிரே. இன்று என் முன் பேருருவம் கொண்டு எழுந்து நிற்கும் நீ அம்மலருக்குள் வண்டென அமர்ந்திருக்கும்போது சிற்றுயிராக இருந்தாய். என் செயலை அவ்வடிவில் இருந்தபடியே நீ மதிப்பிடவேண்டும்” என்றான்.
பீதாம்பரன் நகைத்து “கந்தர்வனே! ஐம்புலன்களும் தொட்டறியும் பருவுலகத்தை மட்டுமே அறிபவனுக்கு பெயர் உலகியலான். அதனுள் உறையும் ஆற்றலை அறிபவன் யோகி. அறிந்த அனைத்தையும் ஒன்றென காண்பவன் ஞானி. கந்தர்வன் எனப் பிறந்தவன் நீ. இவ்வுடல் மட்டும் காணும் கண் கொண்டிருந்தாய் என்றால் இங்கு நீ வாழ்வதற்கான தகுதி என்ன?” என்றான்.
“இச்சொல்லாடல் எங்கும் முடிவுறாது. பாதையின் ஒவ்வொரு சிற்றுயிரையும் உளம் கொண்டேனென்றால் இத்தேரில் முகப்பில் அமர்ந்து நான் கடிவாளம் பற்ற முடியாது. இத்தேரை எனக்களித்த எந்தை இட்ட ஆணை பிழையில்லை என்றால் இதில் எனக்கு ஐயமில்லை. பிழையென ஒரு கணமும் உணராத ஒருவனை தண்டிக்கும் ஆற்றலுள்ள தெய்வம் ஒன்றில்லை” என்றான் சித்ரரதன். “ஆம், நாம் சொல்தொடுத்து முடிவறிய இயலாது. வருக, இந்நகர் நடுவே உள்ள அந்த நீலச்சுனை அருகே செல்வோம். உன் முகத்தையும் என் முகத்தையும் அதில் காட்டுவோம். பிழையும் நிறையும் பேருருக்கொண்டு பல்கிப் பெருகி முடிவிலி என அங்கு ஆகும். அப்போது ஐயமிருக்காது” என்றான் பீதாம்பரன்.
“ஆம், அதை நோக்குவோம்” என்று தன் தேரைத் திருப்பி நகரில் பெருஞ்சுழல் பாதையில் விரைந்தான். அவன் அருகே தன் நுண்ணுடலுடன் பீதாம்பரன் வந்தான். அலையற்றுக் கிடந்த ஆடி வட்டம் போன்ற சுனையை அடைந்த சித்ரரதன் “இன்மையின் சுழியே! இங்கு என் சொல் பிழை என்றால் காட்டுக!” என்றான். பீதாம்பரன் “எங்கள் பூசலின் இறுதி முடிவை இங்கு காட்டுக!” என்றான். இருவரும் குனிந்து நீல ஆடிவெளியை நோக்கினர். அச்சுனைக்குள் தன் முகங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிக் கொண்டு முடிவிலா நீள்சரடாக எழுவதை சித்ரரதன் கண்டான். அச்சரடின் மறுநுனி அலைந்தது. யானையின் துதிக்கையென அதன் அண்மைநுனி வந்து அவனை பற்றிக்கொண்டது. மறுசொல் உரைப்பதற்குள் அவனையும் அவனுடனிருந்த ஏழு கந்தர்வக் கன்னியரையும் வளைத்து நீருக்குள் கொண்டு சென்றது.
நீல வெறுமைக்குள் கணம் கோடி காதமென சென்று கொண்டிருந்த அவன் விழித்தெழுந்தபோது கங்கைக் கரையின் மலர்ச்சோலை ஒன்றில் பூத்த மந்தார மலர்களின் இதழின்மேல் சிறு பொன்வண்டாக அமர்ந்து சிறகு துடித்துக் கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து ஏழு சிறு பூச்சிகளாக அக்கந்தர்வக் கன்னியர்கள் அதிர்ந்து கொண்டிருந்தனர்.
சித்ரரதன் தலை தூக்கி ஒளிமயமாகக் கிடந்த வானை பார்த்தான். அங்கே முகில்களுக்கு மேல் பொன்முடிகள் எழுந்த நகரி தெரிந்தது. “எந்தையரே, நான் மீள்வதெப்போது?” என்று அவன் கேட்டான். “இளையோனே, நீ எதிர்கொண்ட வினவுக்கு விடையொன்று கிடைக்கும்போது” என்றது காசியபரின் குரல். சித்ரரதன் “எவர் சொல்லில் அதைப்பெறுவேன்?” என்றான். “ஒரு கையில் சுடரும் மறு கையில் குருதியுமென வரும் ஒருவனை நீ காண்பாய்” என்று சொல்லி அடங்கியது விண்பெருங்குரல்.
கங்கைக் கரையில் சைத்ரிகம் என்னும் அடர் சோலையில் தன் துணைவி கும்பீநசியுடனும் ஆறு தோழியருடனும் சித்ரரதன் அழகிய பொன்வண்டு வடிவில் வாழ்ந்தான். மலர்ப்பொடி ஆடியும் இன்மது அருந்தியும் அலைகளில் நீராடியும் வண்டுகளுடன் இசையாடியும் அங்கிருந்தான். ஆயிரம் ஆண்டுகளில் தான் வளர்ந்த நகரை அவன் மறந்தான். மீண்டும் ஆயிரம் ஆண்டுகளில் தன்னை கந்தர்வன் என்றே உணராமல் ஆனான். ஒவ்வொரு நாளும் பல கோடி மலர்கள் தேனுடன் மலர்ந்த அச்சோலையில் பிறிதொன்றை எண்ணவே அவனுக்கு நேரமிருக்கவில்லை. காதல் மனைவியுடன் இசையும் மதுவுமாகக் களித்து மலரிதழ்களின் ஆழத்தில் துயின்று புலரியில் விழித்தெழுந்தான்.
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் சித்திரை மாத முழுநிலவு கந்தர்வர்களுக்கு உரியது. அன்று நிலவு கிழக்கே நாற்பத்தைந்து பாகைக்குமேல் எழுந்து அணைவதற்கு நாற்பத்தைந்து பாகை வரை உண்டான காலம் கந்தர்வ காலம் என்று நிமித்திகர்களால் வகுக்கப்பட்டுள்ளது. அன்று இல்லங்களிலோ தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்ட காடுகளிலோ அன்றி வேறெங்கும் மானுடர் நடமாடலாகாது என்று மூதாதையர் அறிவுறுத்தியுள்ளனர். அன்று பிறநிலங்கள் அனைத்தும் கந்தர்வர்களின் களியாட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவர்களை மானுடர் தங்கள் ஊன்விழிகளால் அன்று காணமுடியும்.
அணுவடிவென இப்புவியில் வீழ்ந்த கந்தர்வர்கள் பேருருவம் கொண்டு எழுந்து நிலமும் நீரும் ஆடிக் களிக்கும் காலம் அது. துடிக்கும் இலைநாவுகளில் அவர்களின் இசை எழுந்து மானுடச்செவிகளை அடையும். அன்று மானுடர் எவரும் எல்லை மீறுவதில்லை. ஆனால் பாண்டவர்கள் ஐவரும் தங்கள் அன்னையுடன் அப்போது கங்கைக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். வாரணாவதத்து எரிமாளிகை நீங்கி இடும்ப வனம் ஏகி இடும்பனைக் கொன்று இடும்பியை மணந்து மீண்டு ஏகசக்ரபுரி சென்று பகனையும் கொன்றபின் அறியாப் புதுநிலம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
அன்னையைத் தோளிலேற்றி பேருடல் கொண்ட பீமன் நடந்தான். அவனுக்குப் பின்னால் அம்பு தொடுக்கப்பட்ட வில்லுடன் நகுலனும் சகதேவனும் சென்றனர். அவருக்கு முன்னால் வாளுடன் தர்மன் நடந்தான். அந்த ஐவருக்கும் முன்னால் ஒரு கையில் எரிசுள்ளியும் மறுகையில் வில்லும் தோளில் அம்பறாத்தூணியுமாக அர்ஜுனன் நடந்தான். எரிசுள்ளியின் செவ்வொளி பட்டு இருளுக்குள் துயின்றிருந்த மரங்கள் இலைகள் பளபளக்க விழித்துக் கொண்டன. பறவைகள் விடியலென மயங்கி கலைந்து சிறகடித்து எழுந்தன. இலைகளின்மேல் சிறகுகள் உரச வௌவால்கள் அவர்களைச் சூழ்ந்து பறந்தன. ஐவரும் நடந்த காலடி ஓசை எழுந்து ஆயிரம் எதிரொலிகளாக பெருகி அவர்களைச் சூழ்ந்தது.
மறுநாள் புலர்வதற்குள் அருகிருந்த ஆயர்குடியொன்றை அடைந்துவிட வேண்டுமென்று தருமன் திட்டமிட்டிருந்தான். பகலில் பெருநகரச்சாலை வழியாக செல்வதை அவர்கள் தவிர்த்தனர். கங்கைக் கரையோரத்து நாணல்புதர்களில் பகலெல்லாம் படுத்துத் துயின்றனர். அந்தி சாய்ந்து இருள் கனத்தபின் கிளம்பி காட்டை கடக்க முற்பட்டனர். ஆனால் அன்றிரவு அம்முடிவு சரிதானா என்று தருமன் அஞ்சத் தொடங்கினான். அரக்கென இறுகிய இருளுக்குள் மரங்களும் பாறைகளுமாக அழுந்திப் பதிந்து அசைவற்றிருந்தது காடு. ஒவ்வொரு கணமும் ஒரு கரிய திரையைக் கிழித்துச் செல்வது போல இருளை ஊடுருவ வேண்டியிருந்தது. நெடுந்தூரம் வந்தபின்னும் கிளம்பிய இடத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பது போல் உளமயக்கு ஏற்பட்டது.
“இளையோனே, இது கந்தர்வ இரவு. இக்காட்டிற்குள் இப்படியே செல்வது உகந்ததா என்று என் உள்ளம் ஐயம் கொள்கிறது. நான் எண்ணியதைவிட இது அடர்வு கொண்டு இருக்கிறது. இங்கெங்காவது இரவு தங்கிவிட்டு செல்வதல்லவா சிறப்பு?” என்றான் தருமன். “மீண்டும் காலையில் நாம் நகர் மாந்தர் கண்களில் பட வேண்டியிருக்கும் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இக்காட்டைக் கடந்து மறுபக்கம் சென்றால் எவர் ஆட்சியிலும் இல்லாத ஆயர் குடிகள் உள்ளன. அவர்களிடம் நாம் போய் சேர்வோம். அன்னை வழியில் நாம் யாதவர் என்பதால் நம்மை ஏற்காதிருக்க மாட்டார்கள். அங்கு சில காலம் தங்கியபின் ஆவதென்ன என்று சிந்திப்போம்.”
தருமன் “என் உள்ளுணர்வு அஞ்சுகிறது. நாம் மானுடருக்குரிய எல்லைகளை மீறுகிறோம்” என்றான். பீமன் “மூத்தவரே, நாம் மானுடரல்லாமலாகி நெடுநாட்களாகின்றன. நாம் வாரணவதத்தின் சிறையில் எரிந்துவிட்டோம். இப்போது பேய்களென உலவுகிறோம்” என்றான். குந்தி “ஆம் மைந்தா, நாம் காட்டைக் கடந்துவிடுவதே நல்லது” என்றாள். “தங்கள் ஆணை அன்னையே” என்றான் தருமன்.
இருளுக்குள் நிழலெனச் சென்ற அவர்களைச் சூழ்ந்து உடலிலிகளான பாதாள நாகங்களும் குருதிப் பேய்களும் விழி ஒளிர்ந்த இயக்கிகளும் நடந்தனர். அவர்களின் ஓசையையோ மணத்தையோ அவர்கள் அறியவில்லை. ஆனால் ஐம்புலன்களுக்கும் அப்பால் ஒன்று விழிப்புகொண்டு அவர்களுடன் வருபவர்களை சொல்லிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் தன் உடல் மெய்ப்பு கொண்டிருப்பதை தருமன் உணர்ந்தான். “நம்மை பல நூறு விழிகள் சூழ்ந்து உடன் வருகின்றன என்று உணர்கிறேன் இளையோனே” என்றான் தருமன். “காடு விழிகளால் ஆனது” என்றான் அர்ஜுனன்.
“இல்லை, இவை விலங்குகளின் விழிகள் அல்ல. பறவைகளின் விழிகளும் அல்ல. உடலற்ற நோக்குகள். மிக அண்மையில் அவர்கள் நம்மை சூழ்ந்துள்ளனர்.” அச்சொற்களைக் கேட்டு கரிய நிழலென இருளுக்குள் சென்று கொண்டிருந்த இயக்கன் ஒருவன் தன் தோழனை விழிநோக்கி புன்னகைத்தான். மலைக்கொடியென மரத்தில் சுற்றியிருந்த பாதாள நாகம் ஒன்று சற்று வெருண்டு உடல் வளைத்து பின்னகர்ந்தது. அர்ஜுனன் “எவராக இருப்பினும் இங்கு என் முன் உடல் கொண்டு வந்து என் வில்லுக்கு நிகர் நின்றாக வேண்டும் மூத்தவரே. விண்ணிலும் மண்ணிலும் எவரையும் இவ்வில் கொண்டு எதிர் கொள்ள முடியும் என்று நானறிவேன். அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான்.
அர்ஜுனனின் முன்னால் வந்து அவன் கண்களை கூர்ந்து நோக்கி அவன் முன்னால் எட்டு வைக்க பின்சரிந்து அவன் கால்பட்ட மண்ணாக தன்னை விரித்து அவன் கடந்து சென்றபிறகு நிழலாக எழுந்து சுருண்டு அவனைச் சூழ்ந்த இலைகளின்மேல் கைவிரித்து ஆடி நின்றிருந்த சாயை என்னும் இயக்கி தன் துணைவனாகிய சாருதனை நோக்கி “ஒரு கணமேனும் அஞ்சாதவனை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் போல் தேவர்களுக்கும் இல்லை. இவனை வெல்லாது இவ்வைவரையும் நாம் கொல்வதும் அரிது” என்றாள்.
காலன் என்னும் நாகம் நீர்நெளிவு போல அவர்களை கடந்துசென்று எழுந்தது. “இந்நுண்ணுருவில் இவனை நான் தீண்ட முடியாது. உடல் கொண்ட பாம்பென வந்தால் விழிதொடுமுன்னே வந்து தைக்கும் அவன் அம்புக்கு ஈடு நிற்க என் உடலால் இயலாது” என்றது. “நம்மில் எவர் இவனை வெல்லக்கூடும்?” என்றாள் சாயை. இலைநுனிப் பனித்துளிகளென தன் விழிகளை வைத்துப் பரவியிருந்த அரக்கி சொன்னாள் “உண்மையை சொல்கிறேன், இங்கு இவனை வெல்ல நம்மில் எவராலும் முடியாது.”
இளங்காற்றென பறந்து அவன் தலையை சுற்றிய பாகையின் குச்சத்தை அசைத்து கடந்து சென்ற சூஷ்மன் என்னும் கந்தர்வன் சொன்னான் “இவனை வெல்லக்கூடுபவன் ஒருவனே. அப்பால் உள்ளது சைத்ரிகம் என்னும் காடு. இவனை வழிதிருப்பி அங்கு கொண்டு செல்வோம். தன் எல்லைக்குள் புகுந்தவனை சித்ரரதன் கொல்லாமல் விடப்போவதில்லை.” “ஆம் ஆம்” என எழுந்தன பேய்கள். காற்றின் நகைப்பொலியாக அவர்களின் மகிழ்வை அர்ஜுனன் கேட்டான்.
“காற்றின்றியே கிளைகள் சிலிர்க்கும் விந்தைதான் என்ன இளையோனே? என் அச்சம் மிகுகிறது. நாம் திரும்பிவிடுவோம்” என்றான் தருமன். “காட்டுக்குள் சிறு காற்றிடப்பெயரல்கள் உண்டு மூத்தவரே. அல்லது அவை சிறு விலங்குகளாகக்கூட இருக்கலாம்” என்றான் அர்ஜுனன். “என் அச்சம் என்னை நடக்க விடவில்லை” என்றான் தருமன். “மூத்தவரே, நாம் இப்பேய்களைவிட கொடியவர்களை கண்டுள்ளோம். வஞ்சனையை எதிர்கொண்டவன் பின் இவ்வுலகில் அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான் பீமன். தருமன் புடைத்த வேரில் அமர்ந்து “என் உடலைவிட உள்ளம் எடைகொண்டிருக்கிறது” என்றான். அவ்வேரின் நிழலெனக் கிடந்த பாதாளநாகமாகிய கிருதன் மெல்ல நெளிந்தான்.
“ஒரு கணம் அஞ்சினான் என்றால் போதும், அவன் உடலில் இருந்தே என் படைக்கலன்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வேன்” என்றான் காலகன் என்னும் பிரம்ம அரக்கன். “இன்னும் சற்று தொலைவுதான் மூத்தவரே, விரைந்து செல்வோம்” என்று அர்ஜுனன் சொன்னான். “நிலவு மேலெழுந்துவிட்டது. அது கீழ்சரிவை அடையும்போது நாம் புல்வெளியை அடைந்திருக்கவேண்டும்.” தருமன் எழுந்து பெருமூச்சுவிட்டு “இப்படி காட்டுமிராண்டிகளைப்போல செல்பவர்கள் அஸ்தினபுரியின் இளவரசர்கள் என்பதை தெய்வங்கள் அறிந்திருக்குமா?” என்றான். பீமன் “தெய்வங்களுக்கு கொடைகளைத் தவிர வேறென்ன வேண்டும்?” என்றான்.
“இவர்கள் ஆயர்பாடியை நோக்கி செல்கிறார்கள். இவர்கள் உள்ளத்தில் இருப்பது கன்றுகள் சென்று உருவான தடம்” என்றான் காலகன். “பிறிதொரு வழி சமைப்போம். அங்கு இவன் கால்கள் தவறச்செய்வோம்” என்றாள் மாயை என்னும் இயக்கி. அவர்கள் காற்றாக மாறி காடுகளை வகுந்தொதுக்கி ஒரு மாற்றுப்பாதை அமைத்தனர். அதன் எல்லையில் ஓர் இல்லத்து சிறுவிளக்கென தன்னைக் காட்டினாள் ஜ்வாலாபிந்து என்னும் கந்தர்வப் பெண். “அங்கொரு அகல் விளக்கு தெரிகிறது. ஒரு முனிவரின் தவச்சாலை அங்கிருக்கக் கூடும்” என்றான் தருமன்.
பீமன் “இக்காட்டுக்குள் தவச்சாலை அமைவதற்கு வாய்ப்பேயில்லை மூத்தவரே. அது விளக்கல்ல, ஏதோ விலங்கின் விழிகள் காட்டும் மாயம்” என்றான். தருமன் “இங்கு முனிவர்கள் உண்டென்று நானறிவேன். அது அகல் சுடரென்று அறிய என் விழிகளே எனக்குப் போதும்” என்றான். “மூத்தவர் சொல்வது சரிதான் அரசே. இங்கொரு முனிவர் இல்லம் இருக்க வழியில்லை” என்றான் அர்ஜுனன். “அவ்விளக்கொளி நோக்கி செல். இது என் ஆணை” என்றான் தருமன்.
“அரசே…” என்று அர்ஜுனன் சொல்லத்தொடங்க “என் ஆணைக்கு மேல் ஒரு சொல்லை நான் விழைய மாட்டேன்” என்று சொன்னான் தருமன். “தங்கள் ஆணை” என்று தலைவணங்கி காட்டுக்குள் எழுந்த அந்தச் சிறிய ஒளியை நோக்கி சென்றான் அர்ஜுனன். “தவக்குடில் ஒன்றில் சிறிது இன்னீர் அருந்தி துயில்கொண்டு மீளாமல் என்னால் இனிமேல் நடக்கமுடியாது” என்றபடி தருமன் அர்ஜுனனை தொடர்ந்தான்.
அவர்கள் செல்லச்செல்ல ஜ்வாலாபிந்து அகன்றுசென்றபடியே இருந்தாள். பீமன் “நாம் செல்லும்தோறும் அவ்வொளி வளரவில்லை, அவ்வண்ணமே அகன்றுசெல்கிறது. இளையோனே, இதில் ஏதோ சூதுள்ளது” என்றான். “இல்லை, நான் அறிகிறேன். அது ஒரு தவக்குடிலின் அகல்சுடரேதான்…” என்றான் தருமன். அர்ஜுனன் எச்சரிக்கையுடன் மெல்ல நடந்தான்.
சைத்ரிகத்தின் எல்லை என அமைந்த முள்நிறைந்த குறுங்காட்டை அவர்கள் அடைந்தபோது பீமன் “இளையோனே, நாம் கந்தர்வர்களின் எல்லையை அடைந்து விட்டோமென நினைக்கிறேன். மரநிழல்களும் மரக்கிளைகளைப் போலவே பருப்பொருளாகி நம் மேல் முட்டுகின்றன” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இதெல்லாம் நீங்கள் உங்கள் அச்சத்தால் சொல்வது… நான் ஓய்வெடுக்க விழையும்போது உங்கள் பேச்சை மாற்றத் தொடங்குகிறீர்கள். நான் இன்று அந்தத் தவச்சாலையில் ஓய்வெடுத்தாகவேண்டும். இது என் ஆணை” என்றான் தருமன். “அன்னை என்ன சொல்கிறார்கள்?” என்று நகுலன் கேட்டான். “துயின்றுவிட்டார்கள்” என்றான் பீமன். “என் ஆணை இது” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
சைத்ரிகத்தின் எல்லையில் சித்ரரதன் தன் இரு இமைகளையும் சிறகுகளாக்கி ஓர் ஆந்தையென்று உருவெடுத்து மரக்கிளையில் அமர்த்தியிருந்தான். கந்தர்வநிலவில் அவன் உடலே விழிகளென்றாக ஏழு துணைவியருடன் காமநீராடிக்கொண்டிருந்தான். குறுமுழவின் ஒலியில் குமுறியபடி அது அவர்களைச் சுற்றிச் சிறகடித்தது. “மிகப்பெரிய ஆந்தை… அது ஆந்தையல்ல” என்றான் பீமன். “ஆம்” என்றான் அர்ஜுனன். ஆந்தை அர்ஜுனனை சிறகால் முகத்தில் தாக்கியது. அவன் விழிக்கணத்தில் விலகி அதே விரைவில் எரிசுள்ளியால் அதை அடித்தான். வாளை உருவும் ஒலி எழுப்பியபடி அது சிறகு உலைந்து சரிந்து பறந்து சுழன்று வந்தது. “நீ யார்?” என்றான் அர்ஜுனன் உரக்க.
ஆந்தை எழுந்து அவனருகே ஒரு மரச்சில்லையில் வந்தமர்ந்து ஆடியது. மின்னிய விழிகளுடன் “விலகிச்செல் மானுடா. இது சித்ரரதன் என்னும் கந்தர்வனின் காடு. இதன் எல்லையை இன்றிரவு எவரும் மீறலாகாது. மீறத்துணிபவன் வாளோ குருதியோ இன்றி நூறு துண்டுகளாக வெட்டப்படுவான்” என்று கூவியது. அர்ஜுனன் “எவர் எல்லையையும் மீற நான் விழையவில்லை. நாங்கள் இவ்வழிச்செல்லவே எண்ணினோம்” என்றான். “இது எங்கும் செல்வதற்கான இடமல்ல. நீங்கள் வழிதவறியிருக்கிறீர்கள்…” என்றது ஆந்தை. “திரும்பிச்செல்லுங்கள்.”
“திரும்பிவிடுவோம்” என்று தருமன் அர்ஜுனன் தோள்களைப் பற்றினான். “சித்ரரதனிடம் நாங்கள் அறியாது எல்லை கடந்ததை அறிவித்துவிடுக! எங்களுடன் முதிய அன்னை இருக்கிறாள். எந்தத் தீங்கும் விளையலாகாது.” பீமன் “ஆம், விலகிச்செல்கிறோம். கந்தர்வர் மகிழ்ந்திருக்கட்டும்” என்றான். ஆந்தை சிறகடிப்போசையுடன் இருளில் எழுந்து “உங்கள் பணிவு உங்களைக் காத்தது. மானுடரே, தலைதாழ்த்தி இந்த மண்தொட்டு வணங்கி எல்லை கடந்தமைக்கு பொறுத்தருளக் கோரி பின்முகம் காட்டாது விலகுங்கள்” என்றது.
தருமன் அதை நோக்கி சற்றே தூக்கிய கைகளுடன் நின்றான். பின்பு “நாங்கள் திரும்புகிறோம் ஆந்தையே. ஆனால் என் இளையவன் எங்கும் தலைவணங்கமாட்டான். அவன் பாரதவர்ஷம் கண்ட நிகரற்ற வீரன்” என்றான். ஆந்தை சினந்து காற்றில் சிறகுகள் சீற சுழன்றது. “ஆனால் இவ்வெல்லை கடந்த எவரும் என் தலைவனை வணங்காது திரும்பியதில்லை. எளிய மானுடப்பதர்கள் நீங்கள். எப்படி திரும்பிச்செல்ல ஒப்ப முடியும்?” என்று சினத்துடன் கூச்சலிட்டது.
தருமன் “வையத்தில் மானுடருக்களிக்கப்பட்ட அறிதல்களனைத்தும் தெய்வங்களுக்குரியவையே. அவற்றில் ஏதாவது ஒன்றில் முழுமை கண்டவன் விண்ணவனே. என் தம்பி உன் கந்தர்வனுக்கு நிகரானவன். தெய்வங்களால் விரும்பப்படுபவன். பரம்பொருளுக்கு அன்றி எவருக்கும் தலைவணங்க மாட்டான். அவன் குலமூத்தாரின் துளி என்பதனால் எனக்கு மட்டுமே பணிவான்” என்றான். “முடியாது. இங்கு தலைவணங்காது திரும்ப மானுடர் எவரையும் நான் விடமாட்டேன். மீறத்துணிபவர்களை இக்கணமே கொன்றுவீழ்த்துவேன்” என்றது ஆந்தை.
அர்ஜுனன் “என் தமையனின் சொல்லுக்கு மறுசொல் உரைப்பவர் என் எதிரிகள். உயிர் காத்துக்கொள், விலகு” என்றான். சினத்துடன் படைக்கொம்பு என கேவல் ஒலி எழுப்பியபடி சிறகுகளை மேலும் பலமடங்கு விரித்து கூருகிர்களை நீட்டி அவன் மேல் பாய்ந்தது ஆந்தை. இருளில் அதன் கரிய உடல் முற்றிலும் மறைய இரு செம்புள்ளிகளாக விழிகள் மட்டுமே தெரிந்தன. கணம் நிகழ்ந்து மறைவதற்குள் ஒற்றைக்கையால் எடுத்த அம்பை அதன் இரு விழிகளுக்கு நடுவே வீசி அதன் நெற்றியைப்பிளந்தான். கிளைமுறியும் ஒலியுடன் அவன்மேலேயே அது விழுந்தது.
சூடான குருதி அவன் தோளில் விழுந்து கை நோக்கி வழிந்தது. வலக்கையை உதறி அதை சிதறடித்துவிட்டு திரும்பி “இங்கு நின்றிருங்கள் மூத்தவரே. நான் வெற்றியுடன் மீள்கிறேன்” என்று சொல்லி அவன் வலக்காலை எடுத்து வைத்து சைத்ரிகத்தின் எல்லைக்குள் சென்றான்.