ஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள்

கீதை

அன்புள்ள திரு. ஜெயமோகன்,
ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம் கடிதங்களைப் படித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிந்தனைத் துறை.
எனக்குள் வெகு காலமாக ஒரு கேள்வி உண்டு. மூளை நரம்பு மண்டலங்களுக்கு கட்டளை தரும் ஒரு கட்டுப்பாட்டு மையம். உதாரணமாக நீங்கள் உங்கள் சுண்டு விரலை மட்டும் ஆட்ட வேண்டும் என்று விரும்பினால் மூளை அந்த வினாடியே கட்டளைகளை பல்வேறு வேதிப்பொருட்கள் (neuro transmitters, eg. Acetyl choline) மூலமாக நரம்பு செல்களுக்கு அனுப்பி கடைசியில் அந்த தசையை (சுண்டு விரல்!) உங்கள் விருப்பத்திற்கேற்ப நீட்டவோ, மடக்கவோ செய்யலாம். இவ்வாறே ஒரே நேரத்தில் உங்கள் உடலின் வெவ்வேறு அங்கங்களை இயக்கலாம்- மூளை என்கிற அந்த சூப்பர் கம்ப்யூட்டரின் அதிவேக கட்டளை பிறப்பிக்கும் ஆற்றலின் மூலம். எனது சந்தேகம், இப்போது உங்கள் மூளைக்கு, அதாவது நரம்பு மண்டல கட்டுப்பாட்டு அறைக்கு கட்டளை இடுவது எது? உங்கள் இச்சை அல்லது மனமா? மனம் என்கிற இல்லாத ஒரு உறுப்பு(?!), மூளை என்கிற ஒரு இருக்கிற உயிரியல் உறுப்பிற்கு, உடல் இயக்கங்களை, அசைவுகளை, நடத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கினைக்கவும் தூண்டுகிறதா? அதனால் தான் நம் இந்து ஞான மரபில், ரிஷிகள் உடற்பிரக்ஞையற்று இருக்க, செயல்களையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்த, மூளையின் மூலமாகிய மனதை (சித்த விருத்தியை) அடக்க தியானத்தில் ஈடுபட்டார்களா? ஏனென்றால் மூளையை என்கிற தசைப் பிண்டத்தை நேரடியாக செயல் படாமலிருக்குமாறு கட்டுப்படுத்த முடியாது. அது தன்னிச்சையாகவும் (இதயம், நுரையீரல் போன்றவற்றின் இயக்கம்), விருப்பதிற்கு வேண்டியும் (தசைகளை இயக்குதல்) கட்டளைகளை பிறப்பித்து ஒருங்கினைக்கும் ஒரு உறுப்பு மாத்திரமே.
அந்த சித்த விருத்தியை, எண்ண அலைளை ஒருவிதமான மின் காந்த அல்லது ரேடியோ அலைகள் போன்று கருதலாமா? ஒருவர் இதமான குரலில் பாடும் போதும், பேசும் போதும் எந்த வேதிப் பொருளையும் உடலில் செலுத்தாமலேயே அந்த அதிர்வு அலைகள் நம் மூளைக்குள் புகுந்து பரவசமடையச் செய்கிறதா?
இவற்றை மேற்கத்திய பரிசோதித்தல் மூலமாக முழுமையாக விளக்க முடியுமென்று தோணவில்லை. நம் இந்திய விஞ்ஞான முறையாகிய அகத்தேடல், உணர்தலாலேயே முழுதுமாக அறியமுடியுமென்று நினைக்கிறேன்.
மேலும் செயற்கை அறிவு என்பது சாத்தியமா என்றும் சந்தேகமாகவே இருக்கிறது. உணர்வு கருவிகள் (sensors)  மூலமாக சிந்திக்க வைக்க முடியாது. தீ யைத் தொட்டால் ஆபத்து என்று ஒரு மென்பொருள் கட்டளையை வேண்டுமானால் சேர்க்கலாமே தவிர, ஒரு முறை தீயைத்தொட்டு, சூடு பட்டு அனுபவத்தால் மறு முறை தொடாமல் தப்பிக்க கணினியால் முடியாது என்று நினைக்கிறேன்.
இதெல்லாம் விட முக்கியமானது நான் முதலில் கேட்ட “மூளைக்கு கட்டளை இடுவது எது?” என்கிற கேள்விக்கு தங்கள் கருத்து.
சொல்ல (கேட்க) வேண்டியதை ஒரளவாவது தெளிவாக எழுதியுள்ளேனா? பேசத் தெரிந்த அளவு எழுதத் தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.
உங்கள், தத்துவ, நகைச்சுவை, சமூக அக்கறை கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பேன். தொடருங்கள், எப்போதும் போல உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயந்து!
அன்புடன்
பிரகாஷ்.
பிராக், செக் குடியரசு.
சேட்டா…… (உங்களை இப்படி அழைக்க ரொம்ப நாள் ஆசை!)

 அன்புள்ள பிரகாஷ்

நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் அடிபப்டையானவை. பதில் கண்டுபிடித்துவிட்டால் நோபல் பரிசு அல்லது ரிஷி நிலை உறுதி. மனிதமூளை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று புறவயமாகக் கேட்போமென்றால் அது பூமியில் உள்ள உயிர்களின் மூளைகள் என்ற பொது அமைப்பின் பகுதி என்று சொல்ல வேண்டும். மூளைகள் பூமியின் உயிரமைப்பு என்ற அமைப்பின் பகுதிகள். உயிரமைப்பு என்பது இங்குள்ள ஒட்டுமொத்தமான கட்டமைப்பின் பகுதி. அப்படிக்கொண்டால் மனிதமூளையை கட்டுப்படுத்தும் விசை என்பது பூமியின் ஒட்டுமொத்த உயிரமைப்பும் அதன் இயக்கவிதிகளும்தான். அதை மேலும் விரித்தால் பிரபஞ்ச விதிகள் எனலாம். எந்த பிரபஞ்ச விதி ஒளியை அமைத்ததோ அதுவே கண்களையும் அமைத்தது. இது ஒரு மிகப்பொதுப்படையான பதில். ஆனால் சாத்தியமான பதில் இதுவே.

சேட்டா என்று அழைக்கலாம். தவறில்லை. ஆனால் திருவனந்தபுரம் பகுதியில் மலையாளத்திலும் அண்ணன் என்றுதான் சொல்வார்கள். தெற்கு கேரளத்தில் சேட்டன் என்றால் கிறிஸ்தவர்களை – மரியாதையுடன் – அழைக்கும் ஓர் அழைப்பு.
ஜெ

****

அன்புள்ள ஜெ,பதஞ்சலி யோகம் பற்றி நீங்கள் எழுதும் தொடர் கீதையை புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன். கீதையை வாசிக்கும் போது வாசகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்தத் தொடரில் பதிலிருப்பதைக் காண்கிறேன். ஆத்மா- மனம்- சித்தம் போன்ற வினாக்களை பதஞ்சலி யோகம் கறாரான அறிவியல் நோக்கில் அணுகுவதைக் காண்கிறேன். இரண்டு நூல்களையும் சேர்த்துப் பயில்வது எந்தக் குருகுல மரபிலாவது உள்ளதா?

கணேஷ்
[தமிழாக்கம்]

அன்புள்ள கணேஷ்,

நாராயணகுருகுல மரபின் வழக்கம் அது. கூடவே ஆதிசங்கரரின் விவேக சூடாமணியையும் சேர்த்துக்கொள்வதும் உண்டு. பௌத்த ஞான மரபுகளிலெல்லாம் யோகமும் தத்துவமும் சேர்ந்தே கற்பிக்கப்பட்டு வந்தன

ஜெ

 அன்புள்ள ஜெ

நான் 28 வயதானவன். உங்கள் இணையதளத்தின் தொடர் வாசகன். அச்சிலும் சில படித்துள்ளேன்

ஜெ.கிருஷ்ணமூர்த்தியை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட ஐயம் இது

ஜெ கிருஷ்ணமூர்த்தி ‘தனித்து நில். எந்த மதத்துக்கும் தேசத்துக்கும் சொந்தமாக இராதே. எந்த மேலாதிக்கத்துக்கும் பணியாதே. நீயே உள்ளே சென்று கண்டடை’ என்று சொல்கிறார்

இது இந்து, பௌத்த மரபின் ஏதேனும் அடிபப்டைகளைச் சார்ந்ததா என்ன? ஏனென்றால்பிந்து ஞான மார்க்கம் ‘ உனது பாதையைக் கண்டடை’ என்று அறிவுறுத்துகிறது. புத்தர்  நான் சொன்னேன் என்பதநால் ஏற்காதே, நீயே சிந்தனைசெய்து பார் என்கிறார்

இவை ஆழத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்ன?

இளையராஜா பரமசிவம்

அன்புள்ள இளையராஜா

இந்து ஞான மரபு, சமண ஞான மரபு, பௌத்த ஞான மரபு மூன்றிலும் பொதுவாக உள்ள ஒரு விவேகம் என்பது மனிதன் தன்னந்தனியாக பூமிக்கு வந்தான், தனியாகவே அவனது முக்தியை தேடிக்கொள்ள வேண்டும் என்பது. கண்ணதாசன் சித்தர் வரிகளின் சாயலில் அதை எழுதியிருப்பார் ‘வீடுவரை உறவு வீதிவரை பிள்ளை காடு வரை மனைவி கடைசி வரை யாரோ?’ என்று.துணையும் சுற்றமும் எல்லாம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே.

தனிமனிதனாக தன் ஆழம் நோக்கிச் செல்வதே தியானம். தமிழில் ஊழ்கம். கூட்டான தியானம் என்பது ஒரு பயிற்சி மட்டுமே. தியானத்தில் ஒவ்வொருவருக்கும் அவருக்கு மட்டுமேயான வழிமுறை உண்டு. எனக்கு என் குருவிடமிருந்து சொல்லப்பட்ட வழிமுறை வேறு எவருக்குமே சொல்லப்படாதது. நானே அதை மேலும் விரித்தும் கொண்டேன். குருகூட வழியில் நின்றுவிடும் பயணம் அது.

தனித்திரு பசித்திரு விழித்திரு என்பது வள்ளலாரின் வரி. முதல் விஷயமே தனித்திருத்தல்தான். எதையாவது சார்ந்திருப்பவனுக்கு ஆன்மீகமான பயணம் இல்லை

ஜெ

ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

ஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம்
 

முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்
அடுத்த கட்டுரைசுகுமாரன்:கடிதங்கள்