பகுதி ஒன்று : கனவுத்திரை – 6
மாலினி சுபகையை நோக்கி புன்னகைத்து கைநீட்டி “அருகே வாடி” என்றாள். சுபகை கைகளை ஊன்றி உடலை அசைத்து சென்று அவளருகே அமர்ந்தாள். சுபகையின் தலையைத் தொட்டு வருடி “உன் உள்ளம் புரிகிறது. நீ அதன்பிறகு இளைய பாண்டவனை பார்த்தாயா?” என்றாள். அவள் “இல்லை. அவர் என்னை அழைக்கவில்லை. சாளரங்களினூடாக நான் அவரை பார்ப்பதுடன் அமைகிறேன்” என்றாள்.
மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு முறை சொன்னேன் நெடுந்தொலைவு செல்கிறாய் மகனே, ஒன்று நினைவுறுக! சென்ற பாதை அனைத்தையும் திரும்பிக் கடக்காமல் எவரும் விண்ணகம் செல்வதில்லை. எனவே நெடுந்தூரம் செல்வது நல்லதல்ல என்று. நான் செல்லவில்லை அன்னையே, துரத்தப்படுகிறேன் என்றான். எதனால் என்று நான் கேட்டேன். நூறு அர்ஜுனர்களால் வில்லும் கதாயுதமும் வாளும் வேலும் ஏந்தி துரத்தப்படுகிறேன். ஒரு கணம் கூட நிற்க எனக்கு நேரமில்லை என்றான்” என்றாள்.
மாலினி சொன்னாள் “நீ செல்லும் விரைவில் எவற்றையெல்லாம் உதிர்த்துவிட்டு செல்கிறாய் என்று அறிவாயா என்றேன். ஆம் அன்னையே, இவ்விரைவினால் என் கையில் எதுவும் ஒரு கணத்திற்கு மேல் நிற்பதில்லை. நறுமணம் வீசும் அரிய மலர்கள், ஒளிர் மணிகள், இன்சுவைப் பொருட்கள் ஒவ்வொன்றும் வந்து தொட்டு எழுந்து பறந்து செல்கின்றன. நான் முன்விரைகிறேனா அடியற்ற பாதாளம் நோக்கி குப்புற விழுகிறேனா என்றே ஐயம் கொண்டிருக்கிறேன் என்றான். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல எனக்கும் கூடவில்லை.”
சுபகை பெருமூச்சுவிட்டாள். மாலினி “அவன் இங்கு வருவதே களியாடுவதற்காகத்தான். எனவே அரசியலோ உறவுச் சிடுக்குகளோ எதுவும் எங்கள் பேசு பொருளாக அமைவதில்லை” என்றாள். சுபகை “அந்த விரைவே அவரை மாவீரராக்குகிறது” என்றாள். “இதை நான் பல முறை எண்ணியிருக்கிறேன்” என்றாள் மாலினி. “வரலாற்றை ஆக்கும் மாமனிதர்களின் இயக்கநெறி ஒன்றே. அவர்கள் தங்களை ஆடிப்பாவைகள் போல ஒன்றிலிருந்து பல்லாயிரமாக பெருக்கிக் கொள்ளவேண்டும். ஒரே தருணத்தில் பல்லாயிரம் இடங்களில், பல்லாயிரம் வாழ்வுகளை வாழ்ந்தாகவேண்டும் அவர்கள். ஒற்றைமனிதர் ஒரு படையாக சமூகமாக நாடாக ஆவது அவ்வாறுதான்.”
“ஆனால் அவ்வாறு சிதறிப்பரந்து நிறைந்தபின் ஒரு புள்ளியில் மீண்டும் தங்களை தொகுக்க முடியாமல் ஆகிறார்கள்” என்றாள் மாலினி. “அவர்கள் சென்று சேரும் இருள் அதுதான். அவ்விருளில் நின்று ஏங்குகிறார்கள். ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி இது அல்ல இது அல்ல என்று தவிர்த்து நான் யார் என்று வினவி விடையற்று துயருற்று மறைகிறார்கள். அவர்களை மண்ணில் இருந்து அள்ளி எடுத்து வரலாற்றின் கோபுர உச்சியில் பொற்கலங்களின் மேல் நிறுத்தும் தெய்வங்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக் கொள்கின்றன.”
அவள் என்ன சொல்கிறாள் என்பது சுபகைக்கு புரியவில்லை. “நீ இங்கிரு. அவன் மீண்டும் வருவான்’’ என்றாள் மாலினி. “இல்லை அன்னையே, இனி ஒரு போதும் அவர் முன் நான் சென்று நிற்க மாட்டேன்” என்று சுபகை சொன்னாள். “ஏன்?” என்றாள் மாலினி. “இவ்வுடலல்ல நான். அன்று அவருக்கு நான் அளித்த உடலும் அல்ல இது. இதை நோக்கி என்னை அறியாது அவர் உதறிச் சென்றால் பின்பு நான் வாழ்வதில் பொருளில்லை. அவர் இங்கு வந்தால் அவரை அஞ்சி இக்குடில்களில் எங்கோ ஒன்றில் ஒளிந்து கொள்வேன். அல்லது காட்டுக்குள் சென்றுவிடுவேன்.”
மாலினி நகைத்து “ஆனால் நான் அவன் உன்னை இவ்வுடலில் பார்க்கவேண்டுமென்று விழைகிறேன். அன்று அவன் கண்ட அந்த எயினியை இவ்வுடலில் மீண்டும் அவனால் காண முடிந்தால் மட்டுமே அன்று அவன் எதையாவது பெற்றிருக்கிறானென்று பொருள்” என்றாள். சுபகை “இல்லை. ஆண்கள் பெண்களின் ஆன்மாவைக்கூட உடல் வழியாகத்தான் அறிகிறார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “அது சூதர்களின் பொய். விராடபுராணம் உடல் அவர்கள் உள்ளே வருவதற்கான பாலம் என்கிறது. உடல் வழியாக வந்து உடலுக்கு அப்பாலுள்ளதை அறிபவனே உண்மையில் அறிபவன்” என்றாள்.
“இல்லை அன்னையே, ஆண்கள் எதையும் அறிய முடியாது” என்றாள் சுபகை. மாலினி “உன் கண்களில் வைரமுனை போல ஒளிவிடும் அச்சிரிப்பை நிகழ்த்தும் ஒன்று உன் ஆழத்தில் உள்ளது. அதை அவன் அறிகிறானா என்று பார்க்க விழைகிறேன்” என்றாள். சுபகை “என்னை வற்புறுத்தாதீர்கள் அன்னையே” என்று சொல்லி கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். “இதோபார்…” என மாலினி ஏதோ சொல்லவர “வேண்டாம்” என சுபகை தன்னை குறுக்கிக்கொண்டாள்.
முஷ்ணை சுஜயனுடன் உள்ளே வந்தாள். அவன் கையில் ஒரு நீண்ட ஈச்ச ஓலையை வாள் போல ஏந்தியிருந்தான். மார்பில் எச்சில் வழிந்திருந்தது. “அன்னையே, இங்கு இளைய பாண்டவர் எப்போது வருவார்?” என்றான். அவன் கேட்டதை மாலினி செவி கொள்ளவில்லை என்று அறிந்து இடையில் இருந்து இழிந்து ஓடிவந்து அவள் மடியில் ஏறி நின்று அவளை கன்னத்தைப் பிடித்து திருப்பி “அர்ஜுனர் எப்போது வருவார்? நான் அவரிடம் விற்போரிடுவேன்” என்றான்.
“போரிடலாம். இப்புவியில் இன்று வாழும் வில்லவர் அனைவரும் கொண்டிருக்கும் விழைவு அவனுடன் போரிடுவதுதான்” என்றாள் மாலினி. “அவனை வெல்வதை கனவு கண்டுதான் பெண்களும் இங்கு வாழ்கிறார்கள். உண்மையில் அவ்விழைவுகள் வழியாகவே வெற்றி கொள்ளமுடியாத ஆற்றல் கொண்டவனாக அவன் ஆகிறான்” என்றாள் மாலினி. முஷ்ணை “இங்கு தங்களுடன் தங்கி அவர் கதைகளை இவர் கேட்டு வளர்வாரென்றால் அச்சம் நீங்கி அவரைப்போல ஆண்மகனாவார் என்று நிமித்திகர்கள் சொன்னார்கள்” என்றாள். மாலினி நகைத்து “ஆம், பார்ப்போம்” என்றாள்.
சுபகை எழுந்து சுஜயனை வா என்று கை நீட்டினாள். “மாட்டேன்” என்று அவன் மாலினியின் தோள்களைப்பற்றிக் கொண்டான். “எனக்கு கதை சொல்லுங்கள். ஏழு குதிரைகளின் கதை” என்றான். “அது என்ன ஏழு குதிரைகள்?” என்றாள் மாலினி. சுஜயன் “ஏழு குதிரைகளின் மேல் கந்தர்வர்கள் போய் பாம்புகளைத் துரத்தி…” என்று சொன்னபிறகு என்ன சொல்ல வந்தோம் என்பது தனக்கே தெரியாமலிருப்பதை உணர்ந்து மாலினியை பார்த்து “நீங்கள் சொல்லுங்கள்” என்றான்.
“எந்த உலகில் வாழ்கிறாரென்பதே தெரியாமலிருக்கிறார். சொல்லோடு சொல் தொடுவதில்லை. நாம் சொல்லும் எதுவும் இவருக்குள் சென்று சேர்வதில்லை. எதைப்பார்க்கிறார் எங்கிருந்து காட்சிகளைப் பெறுகிறார் என்று எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். சில சமயம் உண்மையிலேயே நாம் அறியாத தெய்வங்களும் தேவர்களும் இவரிடம் வந்து விளையாடுகின்றனவா என்று எண்ணி இருக்கிறேன். வைரவிழிகள் கொண்ட பாதாள நாகங்களையும் தேனீச்சிறகுகள் கொண்ட கந்தர்வர்களையும் இவர் விவரிக்கும்போது ஓர் எளிய குழந்தையின் உள்ளத்தில் தோன்றுபவை அல்ல இவை என்றே படுகிறது” என்றாள் சுபகை. “சில சமயம் நான் துயிலும்போது என் கனவுகளிலும் அவ்வுருவங்கள் எழுகின்றன. விண்ணிலும் மண்ணுக்கு அடியிலும் நம்மைச் சூழ்ந்துள்ள ஒளி இருள் உலகங்களில் இருந்து அவை எழுந்து வருவன என்று தோன்றுகிறது.”
மாலினி “இளவயதில் அவனும் அப்படித்தான் இருந்தான். உருவிய வாளுடன் பதினான்கு உலகங்களிலும் அலைந்து கொண்டிருந்தான்” என்றாள். “அவரது வீரகதைகளில் அவர் வென்ற மானுடரைவிட கந்தர்வர்களும் தேவர்களும்தான் மிகுதி” என்றாள் மரக்கோப்பையுடன் உள்ளே வந்த சரபை. முஷ்ணை “ஆம். பார்த்தர் இன்னும் மானுடர்களை அதிகம் களத்தில் சந்திக்கவில்லை. வெற்றிக்கதைகள் அனைத்திலுமே எதிரி விண்ணில் உலவுபவராகவே உள்ளார்” என்றாள். சரபை “சூதர்களுக்கென்ன? எதையும் சொல்லலாம்” என்றாள்.
மாலினி “சில வருடங்களுக்கு முன் இங்கு வந்த சூதர் ஒரு கதை சொன்னார்” என்றாள். “இளைய பாண்டவர் தன் ஊனுடல் விழிகளாலேயே ஏழு விண்ணுலகங்களையும் ஏழு அடியுலகங்களையும் பார்க்க முடியும். அங்கிருந்து எழுந்து இம்மண்ணில் உலவும் ஒவ்வொன்றையும் விழி தொட்டு உரையாடமுடியும். அதற்கு சாக்ஷுஷி மந்திரம் என்று பெயர். அதை காசியப பிரஜாபதி முனி என்ற மனைவியில் பெற்றெடுத்த சித்ரரதன் அவருக்கு அளித்தான்” என்றாள். சுஜயன் அவள் கன்னத்தைப் பிடித்து திருப்பி “என்ன மந்திரம்?” என்றான். “சாக்ஷுஷி மந்திரம். அதை அடைந்தால் உன் கண்களுக்கு தேவர்களும் கந்தர்வர்களும் தெரிவார்கள். தெய்வங்களும் தெரிவார்கள்.” “அந்த மந்திரம் எங்கே கிடைக்கும்?” என்றான் சுஜயன். “சொல்கிறேன்” என்றாள் மாலினி.
விண்வெளியில் முடிவிலாத் தொலைவுக்கு ஒளிநீர்த் தீற்றலென விரிந்துகிடந்த மரீசி பிரம்மனின் கனிவு உருக்கொண்ட மைந்தன். அக்கனிவிலூறிய ஞானம் சொட்டிய தவமைந்தன் காசியப பிரஜாபதி. அவர் அரிஷ்டை என்னும் துணைவியை மணந்து பெற்ற மைந்தர்கள் கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். ஏழு வகை விண்வாழ் தேவர்களில் கந்தர்வர்கள் அழகுருவானவர்கள். மலர்களில் புலரியின் நாள்கதிர் தொட்டு எழுவதற்கு முன்பே எழும் வண்ண ஒளி அவர்களுடையது. நீரில் இரவிலும் எஞ்சும் பளபளப்பு அவர்களுடையது.
விண்ணில் முகில்களுக்கு அப்பால் உள்ளது அவர்களின் பெரு நகரம். அங்கிருந்து சிலந்திப்பட்டு நூல்களால் ஆன படிகளில் இறங்கி மண்ணுக்கு வருகிறார்கள் அவர்கள். கண்ணில் படும் முதல் பறவையின் சிறகுகளை தாங்கள் பெற்றுக் கொள்கிறார்கள். கிளிகளாக, சிட்டுகளாக, தட்டாரப்பூச்சிகளாக, வண்ணத்துப்பூச்சிகளாக மண்ணில் பரவி பரந்தலைகிறார்கள். நீர்ப்பரப்பின் மேல் தன்னுருவை தொட்டுத் தொட்டு விளையாடும் வண்ணத்துப்பூச்சிகளை பார்த்ததுண்டா? அவை கந்தர்வர்கள். இலை நுனிகளில் அமர்ந்து ஊசலாடி மகிழும் தட்டாரப்பூச்சிகளை கந்தர்வர்கள் என்றறிக. இரை தேடாது விண்ணின் ஒளி வெள்ளத்தில் விழுந்தெழுந்து குமிழியிட்டு மகிழும் சிட்டுகள் கரவுருக்கொண்ட கந்தர்வர்கள்தான்.
விண்ணிலும் மண்ணிலும் மகிழ்வை அன்றி பிறிது எதையும் அறியாது வாழும் இறைச்சொல் அளிக்கப்பட்டவர்கள் அவர்கள். பேருருக் கொண்டு போர் புரியும் மகிமையும் நுண்ணுருக்கொண்டு மலர்ப்பொடிகளுடன் கலந்து காற்றில் பறக்கும் அணிமையும் அவர்களின் கலைகள். முகில்பீலியின் எடையின்மை கொள்ளும் இலகிமையும் வாயுதேவனும் சலிக்கும் பேரெடை கொள்ளும் கரிமையும் அவர்களின் திறன்களே. விழைவதை அடையும் பிராப்தியும் உடல் கடந்து குடிகொள்ளும் பிரகாமியமும் அவர்கள் அறிவர். அனைத்தையும் வயப்படுத்தும் வசித்துவம் கொண்டவர்கள். தெய்வங்களை விழிகொண்டு நோக்கும் ஈசத்துவம் கையகப்பட்டவர்கள். குழந்தை, எண்சித்திகளும் கந்தர்வகலைகளே என்கின்றன நூல்கள்.
விண்ணின் முகில்கள் ஏழு. இரும்பாலான கருமுகில்களின் முதல்வட்டம் கனிகம். செம்பாலான செம்முகில்களின் உள்வட்டம் தாம்ரகம். பச்சைநிறமான மூன்றாம் வட்டம் ஹரிதகம். இளநீலநிறமான நான்காம் வட்டத்தை நீலகம் என்கின்றனர். ஐந்தாவது வட்டம் வெண்மை. அது ஷீரவலயம். ஆறாவது பளிங்குவண்ணம். அது மணிபுஷ்பம் எனப்படுகிறது. ஏழாவது வட்டம் பொன்னிறமான ஹிரண்யகம். அதன் மேல் அமைந்துள்ளது அவர்களின் நகரமான கந்தர்வபுரி. பொன்னால் ஆன பன்னிரண்டு கோட்டைகளால் சூழப்பட்டது. அதன் நடுவே ஒளிவிடும் வைரங்கள் பதிக்கப்பட்ட குவைமுகடுகள் கொண்ட பன்னிரண்டாயிரம் மாளிகைகள் நிரை வகுத்த தெருக்கள் பெருஞ்சுழியென வளைந்து சென்று மையத்தில் அமைந்த நீலச்சுனை ஒன்றை அடைகின்றன.
அச்சுனை ஓர் அழகிய ஆடி. அதில் தலைகீழாகத் தெரிவது அடுத்த வானில் அமைந்த பிறிதொரு கந்தர்வ நகரத்தில் அமைந்திருக்கும் இன்னொரு சுனை. இரு சுனைகளுக்கும் நடுவே விழியறியமுடியாத வெட்ட வெளி உள்ளது. அச்சுனை அருகே கந்தர்வர்கள் செல்வதில்லை. சுழற்பாதை நூற்றி எட்டு வளைவுகள் கொண்டது. அந்நூற்றெட்டு வளைவுகளையும் கடந்து அச்சுனை அருகே சென்று தன் முகம் பார்க்கும் கந்தர்வன், முடிவிலிப் பெரு வெளியாக தன்னை அறிவான். அச்சுனையின் ஆழம் அவனை உறிஞ்சி எடுத்து அணுத்துகளென ஆக்கி தன்னுள் அடக்கிக் கொள்ளும்.
ஆனால் எத்தனை தவிர்த்தாலும் கந்தர்வர்கள் அச்சுனையை அடைந்தே ஆகவேண்டும். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுக்கும் ஓர் அணுவிடைத் தொலைவுக்கு அவர்கள் அதை நோக்கி செல்கிறார்கள். இறுதியில் சுடரில் விட்டில் என அதில் சென்று அமைகிறார்கள். அதன் நீரின் ஒவ்வொரு அணுவும் அவ்வாறு சென்று நோக்கிய பல்லாயிரம்கோடி கந்தர்வர்களால் ஆனது. அவர்கள் பிறகெப்போதோ ஒரு முறை அத்தடாகத்திலிருந்து நீராவியென எழுந்து வானில் அலைந்து துளித்துச் சொட்டி மீண்டும் அந்நகரத் தெருக்களிலேயே விழுந்து உருக்கொண்டு எழ முடியும். இந்த முடிவிலா சுழற்சியில் காலத்தை உணர்கிறார்கள் அவர்கள்.
மண்ணிலிருந்து கந்தர்வபுரியை எவரும் காண முடியாது. ஆனால் மழை வெளுத்து வெயில் எழுவதற்கு முன்பு அரைக்கணம் விழிமயக்கென முகில்களின் மேல் அறியாப் பேருருவனின் மணி முடி போல தோன்றி மறையும் அந்நகரை காண முடியும். நூல் கனிந்த சூதரும் ஞானம் முழுத்த முனிவரும் சொல் முளைக்காத சிறாரும் அதைக் காண முடியும் என்பார்கள். கந்தர்வபுரி பொன்னொளி கொண்டது. எனவே பொன்னன்றி அங்கேதுமில்லை. பஞ்சுத் துகள்கள் இளங்காற்றிலென அங்கு ஒழுகி அலையும். கந்தர்வர்கள் ஒளியுடல்கொண்டவர்கள். எனவே ஒருவரை ஒருவர் ஆடிகளென எதிரொளித்துக் கொள்வார்கள். காதல் கொள்கையில் உடல்தழுவி முற்றிலும் ஒருவரை ஒருவர் எதிரொளித்து முடிவின்மையாவார்கள். நீர்த்துளிகள் இணைந்து பெரிய நீர்த்துளியாவது போல ஓருடலாகி அவ்வெடையால் சரிந்து விழுந்து நீரென ஒளியென பரவுவார்கள்.
கந்தர்வபுரியில் அவர்களால் தங்கள் விரல்களை ஒன்றுடனொன்று தொட்டு பேரியாழின் இசையை எழுப்பமுடியும். உள்ளங்கைகளில் விரல்களால் அறைந்து முழவின் தாளத்தை எழுப்ப முடியும். அவர்களின் மூச்சுக் காற்றே குழலிசை. அங்கு அவர்கள் பேசும் மொழியென இருப்பது இசையே. ஒவ்வொரு கந்தர்வரும் பிறிதொருவரிடம் தன் உள்ளம் பகிர்கையில் அத்தனை இசைகளும் இணைந்து ஒற்றைப் பேரிசையாகி முடிவிலாது அங்கு முழங்கிக் கொண்டிருக்கும். கந்தர்வர்கள் அந்த இசையிலிருந்து தங்களை பிரித்துக் கொள்வது சொல்லின்மைக்குச் சென்று அணையும்போது மட்டுமே. அங்கே மோனமும் அமைதியும் விரிந்திருக்கும். அதில் தங்களை பொருத்திக் கொள்ளும்போது வெயிலில் ஆவியாகி மறையும் நீர்த்துளியென ஆவர். இறுதிக்கணத்தில் திரும்பி அந்நகரை ஆளும் அப்பேரிசையென்பது ஒரு சிறு நரம்பை விண் விரலொன்று தொட்டுச் செல்லும் இசைத்துளி மட்டுமே என்றுணர்ந்து திகைப்பர்.
கந்தர்வ நகரத்தில் காற்றில்லை. அவர்களுக்கு மூச்சும் இல்லை. அங்கு திரைச்சீலைகளையும் மலர்களையும் முகில்களையும் அவர்களின் எண்ணங்களே அசைக்கின்றன. உவகை கொண்டவனருகே மலர்க்குவைகள் நடனமிடுகின்றன. காதல் கொண்ட கந்தர்வப் பெண்ணின் அருகே திரைச்சீலைகள் நாணி நெளிகின்றன. சினம் கொண்டவனைச் சுற்றி இலைகள் கொந்தளிக்கின்றன. கந்தர்வர்கள் உணவுண்பதில்லை. கந்தர்வபுரியில் மலரும் மலர்களின் தேனை மட்டுமே அருந்துகிறார்கள். அங்குள்ள பெரும் மலர்ச்சோலைகளில் பல்லாயிரம் இதழ் கொண்ட தாமரைகள் மலர்ந்து இதழ் ஒளி கொண்டு குளிர்ந்திருக்கின்றன. பசி கொண்ட கந்தர்வன் தனக்குரிய மலரைத் தேடிச்சென்று அதைச் சுற்றி பறந்து தன் உள்ளத்தின் இனிய நுண்மைகளை ஒவ்வொன்றாக எடுத்து இசையாக்கி அதைச் சூழவேண்டும். அவ்விசை கேட்டு கனிந்து அமுதூற்று என ஆகி அம்மலர் சொட்டத் தொடங்குகையில் இரு கைகளாலும் குவித்து அத்தேனை அவன் அருந்தவேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வமுதை அருந்தாத கந்தர்வன் தன் உடல் எடை கொண்டபடியே இருப்பதை உணர்வான். அவன் ஆடி எதிரொளிக்கும் ஒளியென பறந்தலைய முடியாமலாவான். ஈரம் கொண்ட பஞ்சுத்துகளென கந்தர்வபுரியின் தரை நோக்கி அழுந்துவான். கை நீட்டி அவன் பற்றிக் கொள்ளத்துடிக்கும் ஒவ்வொன்றும் பொருளல்ல, வெறும் ஒளித்தோற்றமே என அறிவான். மாளிகை விளிம்புகள் தூண்கள் மரங்கள் அனைத்தும் அவனை கைவிடும். அவன் விரும்பிய தோழனும் தோழியரும் அவனை அள்ளிப்பற்ற முயல்கையில் தாங்கள் புகை வடிவானவர்கள் என்று உணர்வார்கள். தரையில் கூழாங்கல்லென விழுந்து மென் புழுதியில் தடம் பதித்து அங்கே கிடப்பான்.
ஒவ்வொரு கணமும் என அவன் எடை கூடிக் கூடி வரும். கந்தர்வபுரியின் மண் பொற்துகள் பொடியாலானது. அதில் புதைந்து அழுந்தி ஓர் ஆழ்துளையென ஆகி அப்பரப்பை பொத்துக் கொண்டு மறுபக்கம் வந்து மண்ணுக்கு இறங்குவான். இரவில் எரி விண்மீனென ஒளி நீண்டு தரைக்கு வருபவர்கள் உதிரும் கந்தர்வர்களே. இங்கு விழிவிரிந்த குளிர்நீர்ச்சுனைகளில், இலை நீட்டி ஊழ்கத்தில் அமர்ந்த மரங்களில், குளிர்ந்து இருட்குவையென இறுகிய பாறைகளில் அவர்கள் வந்து விழுவார்கள். நீரில் அவர்கள் விழுகையில் அலையெழுவதில்லை. மரங்களை அவர்கள் தழுவிக்கொள்கையில் கிளை அசைவதில்லை. பாறைகளில் துளிசிதறுவதில்லை.
அக்கணம் முழுத்து மறுகணம் எழுந்ததும் தான் என உணர்கிறான் மண்ணுக்கு வந்த கந்தர்வன். தன் கந்தர்வ நகரில் தான் நுகர்ந்த இன்பங்களை இங்கு நாடுகிறான். அவன் விரல்களும் உடலும் மூச்சும் இசை எழுப்பாமலாகின்றன. எனவே மானுட நகரங்களுக்குள் புகுந்து இங்குள்ள சூதர்கள் வைத்திருக்கும் யாழ்களையும் முழவுகளையும் குழல்களையும் கண்டு இங்குள்ள இசையை கற்கிறான். அல்லிவட்டங்களில் யாழை மீட்டுகிறான். மூங்கில்களில் குழலூதுகிறான். நெற்றுகளில் பறைமீட்டுகிறான். மலர்ப்பொடிகளையும் இன் நறவையும் வண்ணத்துப் பூச்சிகளுடன் சேர்ந்து பறந்து மாந்துகிறான். அலைநீர் பரப்பில் தன் முகத்தை மீள மீள நோக்கி மகிழ்கிறான்.
ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு அவன் செய்யும் தவமென்பது இழந்தவற்றை மீட்க முயல்வதே. கதிரெழும் முதற்பொன்னொளியில் முகில்களில் எழும் கந்தர்வநகரியை நோக்கி இலை நுனிகளில் ஒளி விழிகளைப் பதித்து படபடத்து ஏங்குகிறான். அந்தி இருண்டு அடங்குகையில் செங்கனல் குவையென தோன்றி மறையும் தன்நகர் கண்டு தனிப்பறவையின் குரலில் விம்மி அழுது அமைகிறான். நிலவெழுகையில் காட்டை தன் மேல் எதிரொளிக்கும் ஆடிப்பரப்பென உடல் கொண்டு எழுகிறான். குளிர் என ஆகி இலைப்பரப்புகளை நனைக்கிறான். நிலவு நீராடும் சுனைகளில் தானும் இறங்கித்திளைக்கிறான்.
இளையோனே, மண்ணிலுள்ள தூயவை அனைத்தையும் அவன் அறிந்து நிறைகையில் அவன் உடல் எடையற்றதாகிறது. இனிய மலர்த்தேனால், புலரியந்தியின் பொன்வண்ணங்களால், அகம் நிறைக்கும் இசையால், கனிந்த காதலால், காதல் முழுத்த காமக் களியாட்டத்தால் தன்னுள் இனிமை நிறைத்து தன் எடையை இழக்கிறான்.
பட்டுச் சரடால் கால் கட்டப்பட்ட பறவை போல் இங்கு இறகு படபடத்துக் கொண்டிருக்கும் கந்தர்வனை அறுத்து விடுதலை செய்வது ஒன்றே. அவன் அறிந்த இனிமைகள் அனைத்தையும் ஒன்றெனத்திரட்டி முழுமைப்படுத்தும் ஒரு மெய்ஞானம். அதை அறிந்த கணமே முற்றிலும் எடை இழந்து அவன் வானேறத்தொடங்குகிறான். ஏழு முகில் அடுக்குகளைக் கடந்து ஹிரண்யவதி என்னும் தன் கந்தர்வ நகரத்தில் அடிமணலில் சென்று ஒட்டுகிறான். விதை என அங்கு உறங்கி முளையென விழிப்பு கொண்டு தளிரென அந்நகரத்தெரு ஒன்றில் முளைத்தெழுகிறான். அங்கு தான் மறந்து வந்த அனைத்தையும் மீண்டும் கண்டடைகிறான்.