‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5

பகுதி ஒன்று : கனவுத்திரை – 5

முன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை! விரைந்தோடு யானை!” என்றான் சுஜயன்.

கண் தெளிந்ததும் அவர்கள் கண்ட பசும்புல்வெளி அலைச் சரிவென இறங்கிச் சென்று வளைந்தெழுந்து உருவான பசுந்தரை மேட்டில் மூங்கிலாலும் ஈச்ச ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகிய தவக்குடில் மெல்லிய வானொளியில் பொன்னிறமாகத் தெரிந்தது. “அதற்கப்பால் தெள்நீர் ஓடும் சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மிகச்சுவையான நீர் அதுவே. நாங்கள் மூங்கில் குவளைகளில் நிறைத்துக் கொண்டு செல்வோம்” என்றான் காவலன்.

“மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது?” என்றாள் சுபகை. “இளைய பாண்டவர் வாரணவதத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்கு பேரரசி ஆணையிட்டதாகவும் அப்போது அவர் சென்று அரசியை வணங்கி பிறிதொரு ஆண்மகன் தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். அவர் கோரியதற்கேற்ப பேரரசி உருவாக்கிய தவக்குடில் இது. அன்றுமுதல் அவர் இங்குதான் இருக்கிறார். திரும்ப அஸ்தினபுரிக்கு சென்றதேயில்லை.”

“இளையபாண்டவர் இங்கு வருவதுண்டா?” என்றாள் சுபகை. “அஸ்தினபுரியில் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வருவார். அவர் வரும்போது மட்டும் மூடிய கதவைத் திறந்து வெளியே வருவதுபோல மாலினி தேவியின் உள்ளிருந்து பழைய மாலினிதேவி வெளிவருவார் என்கிறார்கள். இருவரும் இப்புல்வெளியில் விளையாடுவார்கள். மாலினிதேவியை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் இளையபாண்டவர் வேட்டைக்குச் செல்வதுண்டு. அவர் சென்றபிறகு மீண்டும் தன் வாயில்களை மூடிக் கொண்டு ஒரு சொல்கூட எழாது முற்றிலும் அடங்கி விடுவார்.”

“நதியை ஊற்றுமுகத்தில் பார்ப்பவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள் என்கிறார்கள்” என்றாள் சுபகை. “நாம் ஒரு நதியை ஊற்றாக சுமந்து செல்கிறோமா?” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “அர்ஜுனர்” என்றான் சுஜயன். “நான் அவருடன் வில் போர் செய்வேன்.” கையை ஆட்டி விழிகளை விரித்து “இங்கு அவர் வரும்போது நான் பெரிய வில்லை… அவ்வளவு பெரிய வில்லை வளைத்து அவருடன் போர் செய்வேன்” என்றான்.

“நீங்கள் போர் செய்யாத எவரேனும் இப்புவியில் உள்ளனரா இளவரசே?” என்றாள் சுபகை. “நான் பரசுராமருடன் போர் செய்வேன். அதன் பிறகு… அதன்பிறகு…” என்று எண்ணி சுட்டு விரலைத்தூக்கி ஆட்டி “நான் பீஷ்மருடன் போர் செய்வேன்” என்றான். “நீங்கள் இவ்வுலகிடமே போர் செய்யலாம். ஆனால் அதற்கு முன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தவேண்டும்” என்றாள் முஷ்ணை. காவலன் உரக்க நகைத்தான். சுஜயன் “என் நெஞ்சில் வாள் படும்போது குருதி கால் வழியாக செல்கிறது” என்றான். “விடவே மாட்டார். எத்தனை முறை திருப்பிப் போட்டு கேட்டாலும் அதை குருதி என்றே சொல்லி நிறுவிவிடுவார். காலப்போக்கில் இதுவே ஒரு புராணமாக ஆகிவிடும். குருகுலத்து சுபாகுவின் மைந்தர் காலையில் குருதி வழிய கண்விழிக்கிறார்” என்றாள் சுபகை.

குடில் முற்றத்திற்கு வந்து நின்ற சேடியொருத்தி அவர்களை நோக்கினாள். “அவள் பெயர் சரபை” என்றான் காவலன். “மாலினிதேவிக்கு அணுக்கத்தோழி. இங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இளவரசர் வருவதனால் இரு காவலர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் இக்காட்டில் காவல் புரிவார்கள்.” “மற்றபடி அவர்கள் இருவரும் தனித்தா இருக்கிறார்கள்?” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா?” “உண்டு. ஆனால் அவை இங்கே அணுகுவதில்லை. அவைகளை அகற்றும் மந்திரம் தெரிந்தவர் மாலினிதேவி.”

கொம்பூதிய காவலன் அவர்களை அணுகி தலைவணங்கி “குருகுலத்து இளவரசரை வரவேற்கிறேன் தங்களுக்காக மாலினிதேவி சித்தமாக இருக்கிறார்” என்றான். சுஜயன் “எனக்கு பசிக்கிறது” என்றான். “உணவருந்திவிட்டு மாலினிதேவியை சந்திக்கலாம்” என்றாள் சுபகை. “எனக்கு உண்பதற்கு முதலைகள் வேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “ஏழு முதலைகள். நான் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை தின்பேன்.” “இன்னும் கொஞ்ச நாளைக்கு முதலை உணவுதான்” என்று சுபகை சிரித்தாள்.

அவர்கள் மேடேறினார்கள். “புல் சற்று வழுக்கும் செவிலியன்னையே. பற்றிக் கொள்ளுங்கள்” என்று காவலன் கை நீட்டினான். அவனது வலுவான கைகளைப் பற்றியபடி கால்களை வைத்து மூச்சிரைக்க மேலேறினாள் சுபகை. “இங்கு வாழ்ந்தால் இவரது அச்சம் குறைகிறதோ இல்லையோ என் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். “அரண்மனையின் நெய்ச்சோறு இங்கு கிடைப்பதில்லை” என்றாள் முஷ்ணை. “ஆமாம் நெய்ச்சோறுதான் உண்கிறோம். நான் எதையுமே உண்பதில்லையடி. என் உள்ளம் நிறைந்திருக்கிறது. ஆகவே உடல் பெருத்தபடியே செல்கிறது” என்றாள் சுபகை.

மேலிருந்த சரபை அருகே வந்து தலைவணங்கி “வருக! தங்களது தங்குமிடமும் உணவும் சித்தமாக உள்ளன” என்றாள். “இளவரசருக்கு மட்டும் சற்று பால் கஞ்சி அளியுங்கள்” என்றாள் சுபகை. “நாங்கள் இப்போதே மாலினிதேவியை சந்தித்து வணங்கிவிடுகிறோம்.” சரபை தலை வணங்கி “அவ்வாறே” என்றாள். சுபகை இடையைப்பிடித்து உடலை நெளித்து “தேவியரே, என்ன ஒரு நடை…” என்றாள். முஷ்ணை “இனி இங்கே அன்றாடம் நடைதான்” என்றாள். சரபை “செல்வோம்” என்றாள்.

ஏழு தனிக்குடில்களின் தொகையாக இருந்தது அந்த குருகுலம். புதிதாக கட்டப்பட்ட குடிலுக்குள் அவர்களை சரபை அழைத்துச் சென்றாள். காவலன் தலை வணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம் செவிலி அன்னையே” என்றான். “நன்று சூழ்க!” என்றாள் சுபகை. சிறிய குடிலாக இருந்தாலும் அதன் உட்பகுதியின் இடம் முழுக்க சரியாக பகுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தும்படி இருந்தது. மூங்கில்கள் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இரு மஞ்சங்களும் நடுவே கன்றுத் தோல் கட்டி இழுத்து நிறுத்தப்பட்ட தூளிக்கட்டிலும் இருந்தன. அவற்றில் மான்தோல் விரிப்புகளும் மரவுரிப் போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் மூட்டைகளை வைப்பதற்காக மூங்கிலால் கட்டப்பட்ட பரண்கள் சுவர்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. ஆடை மாற்றுவதற்காக குடிலின் சிறிய மூலை மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.

மண்ணில் இருந்து மூங்கிலில் எழுப்பப்பட்டு அதன்மேல் மரப்பலகைகள் அடுக்கப்பட்டு தளமிடப்பட்டிருந்தது. சுபகை நடந்த போது பலகைகள் மெல்ல அழுந்தி கிரீச்சிட்டன. “உடைந்துவிடாதல்லவா?” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு?” என்றாள். “ஆம். இவரது உள்ளத்திலிருக்கும் வீரத்தை உடலுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு இளைய பாண்டவரின் கதைகள் உதவும் என்றார்கள்.”

சரபை சிரித்து “உண்மை, அஸ்தினபுரி முழுக்க அவரது கதைகளைக் கேட்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. பிஞ்சு உடல்களில் உறையும் தெய்வம் விரும்பும் மந்திரம் அது என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். சுஜயன் அவளை நோக்கி “உன்னால் பறக்க முடியுமா?” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்?” என்றான் சுஜயன். சரபை சிரித்தபடி “இளையபாண்டவர் கைகளை பற்றிக் கொண்டால் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடுவேன்” என்றாள்.

சுபகை அவள் தோளில் ஓங்கி அடித்து “விளையாடாதே. நீ நினைப்பதை விடவும் இவருக்கு புரியும்” என்றாள். சரபை “இங்குதானே இருக்கப்போகிறார். அனைத்தையுமே சொல்லி புரிய வைத்துவிடுவோம்” என்றாள். “இதோ பார், வீரத்தை ஊட்டத்தான் இங்கு கூட்டி வந்தேன். நீ சொல்லும் வீண் கதைகளை ஊட்டுவதற்காக அல்ல” என்றாள் சுபகை. “வீரமும் காமமும் பிரிக்க முடியாதவை செவிலி அன்னையே. இரண்டையும் கலந்து ஊட்டுவோம்” என்றபடி சரபை வெளியே சென்றாள். அவள் தன் இடையை வேண்டுமென்றே ஆட்டியபடி நடப்பதை சுபகை கவனித்தாள்.

முஷ்ணை தன் உடையை அவிழ்த்து கைகளால் நீவி சீரமைத்தபடி “இங்கு எத்தனை நாள் இருக்கப்போகிறோம்?” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா?” என்றாள். “எனக்கு முதலை உணவுதான் வேண்டும்” என்றான் சுஜயன்.

“இளவரசே, நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் தெரியுமா?” என்றாள் சுபகை. “எதற்கு?” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா?” என்ற சுஜயன் பாய்ந்து ஓடி முஷ்ணையின் மடியில் ஏறி அமர்ந்து அவள் இரு கைகளையும் பிடித்து தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “நான் நாளைக்கு குதிரையில் செல்வேன்” என்றான்.

சிரிப்பை அடக்கியபடி சுபகை “ஆம். குதிரையில் சென்று நீங்கள் அந்த அரக்கர்களை வெல்லப்போகிறீர்கள். அந்த அரக்கர்களை வெல்வதற்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இது” என்றாள். “இதுவா?” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா? மூங்கில் குவளையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை அப்படியே நீங்கள் அருந்தும்போது உங்கள் உடல் ஆற்றல் பெருகும். அதன் பிறகுதான் நீங்கள் உடைவாளை உருவி குதிரையில் சென்று போரிடமுடியும்.”

“நாளைக்கு நான் குடிப்பேன். அப்போது என் உடம்பு பெரிதாகும். பெரிதான பிறகு நாளைக்கு…” என்றபின் கைகளைத்தூக்கி அசையாமல் சில கணங்கள் வைத்துவிட்டு “நிறைய நாளைக்குப் பிறகு நான் சென்று அரக்கர்களை வெல்வேன்” என்றான். “ஆமாம், நீங்கள் வளர்வதற்கு நிறைய நாளாகும். அதுவரைக்கும் இந்த அமுதை குடியுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கி இலையை அகற்றி உள்ளே பார்த்து “கஞ்சி” என்றான். “அமுதுக் கஞ்சி” என்றாள் சுபகை. சுஜயன் அதை வாங்கிக் குடித்துவிட்டு நாவால் முன்வாயை நக்கி “இனிப்பாக இருக்கிறது” என்றான்.

“ஆம். இனிமையாகத்தான் இருக்கும். விரைந்து குடியுங்கள். வாயை எடுத்தால் இது அமுதம் அல்லாமல் ஆகிவிடும்” என்றாள். “எனக்கு மூச்சு திணறுமே” என்றான் சுஜயன். “வேகமாக விரைந்து குடியுங்கள்” என்றாள் சுபகை. சுஜயன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்து திரும்பி முஷ்ணையின் மேலாடையை எடுத்து தனது வாயை துடைத்துக் கொண்டான். “இப்போது புரிகிறது இவருடைய இடர் என்ன என்று. இவர் இங்கே வாழவில்லை” என்றாள் சரபை. “ஆமாம். அத்துடன் அவர் எங்கு வாழ்கிறாரென்று யாருக்குமே தெரியவில்லை” என்றாள் சுபகை. சரபை சிரித்தபடி வெளியே சென்றாள்.

“அவரது வாயைத்துடைத்து தலையை சற்று சீவி ஒதுக்கு. மாலினிதேவியை சந்திக்கச் செல்லும்போது அவர் இளவரசராக இருக்க வேண்டுமல்லவா?” என்றாள் சுபகை. முஷ்ணை சுஜயனை தூக்கி நிறுத்தி அவன் இடையில் இருந்து ஆடையை அவிழ்த்து உதறி நன்றாக மடிப்புகள் அமைத்து சுற்றிக் கட்டினாள். தன் சிறு பையிலிருந்து தந்தச்சீப்பை எடுத்து அவன் குழலை சீவி கொண்டையாக முடிந்தாள். தலையில் சூடிய மலர்மாலையிலிருந்து இதழ்கள் உதிர்ந்திருந்தன. அவற்றை திரும்பக் கட்டி சேர்த்துவைத்தாள். சுஜயன் “நான் வெளியே போய் புல்வெளியில் புரவிகளுக்கு பயிற்சி அளிப்பேன்” என்றான்.

“நாம் முதலில் மாலினிதேவியை சென்று பார்த்து வணங்குவோம்” என்றாள். “மாலினிதேவி யார்?” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா?” என்றான். “ஆம். அதைக் குடித்துதான் அவர் மாவீரர் ஆனார்.” சுஜயன் “நான் இளைய பாண்டவருடன் போர் புரிவேன்” என்றான். “ஆம். நிறைய அமுதை அருந்தி பெரியவனாகும்போது போர் புரியலாம்” என்றாள்.

சரபை மீண்டும் வந்து வணங்கி “செல்வோம். மாலினி அன்னை சித்தமாக இருக்கிறார்” என்றாள். சுஜயனை முஷ்ணை கையில் எடுத்துக் கொண்டாள். அவன் “நான் நாளைக்குத்தான் வருவேன். என் கையில் வாள்பட்டு… வாள்பட்டு குருதி…” என்றான். முஷ்ணை சுஜயனின் தலையை தன் அருகே இழுத்து காதுக்குள் “மாலினிதேவியைப் பார்த்ததும் சென்று அவர்களின் கால்களைத் தொட்டு கண்களில் வைத்து அன்னையே என்னை வாழ்த்துங்கள், நான் பெருவீரனாக வேண்டும் என்று சொல்ல வேண்டும். புரிகிறதா?” என்று கேட்டாள். “ஏன்?” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா? அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும்?” சுஜயன் கண்கள் தாழ்ந்தன. அவன் எண்ணத்தில் ஆழ்ந்து எடையற்றவன் போலானான்.

மாலினிதேவியின் குடில் அந்த வளாகத்திற்கு நடுவே கூம்பு வடிவக் கூரையுடனும் வட்டமான மூங்கில்சுவர்களுடனும் இருந்தது. அதன் வட்டவடிவ திண்ணை செம்மண் மெழுகப்பட்டு வெண் சுண்ணத்தால் கொடிக்கோலம் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. புலரியில் அங்கு நிகழ்ந்த பூசனைக்காக போடப்பட்ட குங்கிலியப்புகையின் மணம் ஈச்ச ஓலைகளுக்குள் எஞ்சியிருந்தது. முஷ்ணை சுஜயனை கீழே இறக்க அவன் அவள் முந்தானையைப் பிடித்து கையில் சுருட்டி வாயில் வைத்து கடித்தபடி கால்தடுமாறி நடந்தான்.

குடில் வாயிலில் நின்ற சிறிய கன்றுக்குட்டி காதுகளை முன்கோட்டி ஈரமூக்கை சற்றே தூக்கி அவர்களை ஆர்வத்துடன் நோக்கியது. அதன் மாந்தளிர் உடலில் அன்னை நக்கிய தடங்கள் மெல்லிய மயிர்க் கோலங்களாக தெரிந்தன. சிறிய புள்ளிருக்கையை சிலிர்த்தபடி வாலைச் சுழற்றியபடி அது தலையை அசைத்தது. வாயிலிருந்து இளஞ்சிவப்பான நாக்கு வந்து மூக்கைத் துழாவி உள்ளே சென்றது. “அது ஏன் அங்கே நிற்கிறது?” என்றான் சுஜயன். “அது கன்றுக் குட்டி. அதன் அன்னையைத்தேடி இங்கு வந்து நிற்கிறது.”

சுஜயன் முஷ்ணையை அணைத்து அவள் ஆடையைப் பற்றி தன் உடலில் சுற்றிக் கொண்டபடி “அது என்னை முட்டும்” என்றான். “கன்றுக்குட்டி எங்காவது முட்டுமா? அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன்!” என்ற சுஜயன் திரும்பி கையைத்தூக்கி காலை உதைத்து “என்னைத்தூக்கு” என்றான். “தூக்கக் கூடாது. தாங்கள் நடந்துதான் இதற்குள் செல்லவேண்டும்” என்றாள் சுபகை. கையை நீட்டி “அது என்னை தின்றுவிடும்” என்றான் சுஜயன். உரத்தகுரலில் “இளவரசே, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். நடந்து செல்லுங்கள்” என்றாள் சுபகை.

முஷ்ணையின் கால்கள் நடுவே புகுந்து அவளை தடுமாறச்செய்தபடி “இந்தக் கன்று அரக்கனை நான் பெரியவனாகும்போது கொல்வேன்” என்றான் சுஜயன். “நடந்து செல்லுங்கள் இளவரசே” என்று முஷ்ணை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். கன்றருகே சென்றதும் அவன் பிடியை உதறிவிட்டு பின்னால் ஓடிவந்து சுபகையை கட்டிப்பிடித்தான். “இந்தக் கோழையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கன்றுக் குட்டியை பார்த்தெல்லாம் குழந்தைகள் அஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.”

கன்று சுஜயனை ஆர்வத்துடன் நோக்கியபடி தலையை அசைத்து அவனை நோக்கி வந்தது. “அது என்னை கொல்ல வருகிறது! கொல்ல வருகிறது!” என்று கூவியபடி அவன் சுபகையை முட்டினான். சுபகை தள்ளாடி விழப்போன பிறகு அவனை பற்றித் தூக்கி மேலெடுத்துக் கொண்டாள். அவன் கால்களாலும் கைகளாலும் பிடித்துக் கொண்டு “கன்று அரக்கன்! அவன் கண்களில் தீ!” என்றான். கன்று அண்ணாந்து சுஜயனை நோக்கி மெல்ல ஒலி எழுப்பியது. சுஜயன் “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். இங்கெல்லாம் ஏராளமான அரக்கர்கள் இருக்கிறார்கள். அரண்மனையில் என்னுடைய உடைவாள் இருக்கிறது. நான் உடைவாளை வைத்து அங்குள்ள அரக்கர்களிடம் போரிடுவேன்” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்று சொல்லி தலை குனிந்து சுபகை உள்ளே சென்றாள். முஷ்ணை கைகூப்பியபடி பின்னால் வந்தாள்.

குடிலின் தென்மேற்கு மூலையில் போடப்பட்டிருந்த மூங்கிலினாலான பீடத்தில் மாலினி அமர்ந்திருந்தாள். நீண்ட குழலை சிறியபுரிகளாகச்சுற்றி கூம்புக் கொண்டையாக சற்று சரிவாக தலையில் சூடியிருந்தாள். மாந்தளிர் நிற மரவுரி ஆடை இடை வளைத்து தோளைச் சுற்றி சென்றிருந்தது. வலது வெண் தோள் திறந்திருக்க அதில் அவள் அணிந்திருந்த உருத்திரவிழி மாலை தெரிந்தது. நீண்ட யானைத்தந்தக் கைகள் வந்திணைந்த மெல்லிய மணிக்கட்டுகளிலும் சிறிய உருத்திரவிழியொன்று கோர்க்கப்பட்ட பட்டுநூலை கட்டியிருந்தாள்.

காலை அனல் வளர்த்து ஆகுதியிட்டு பூசையை முடித்து வந்திருந்தமையால் வேள்விக் குளத்தின் கரியைத் தொட்டு நெற்றியிலிட்ட குறி அவளுடைய நீள்வட்ட முகத்தின் சிறிய நெற்றியின் நடுவே அழகிய தீற்றலாகத் தெரிந்தது. வெண் பளிங்கு முற்றத்தில் விழுந்து கிடக்கும் கருங்குருவி இறகு போல என்று சுபகை நினைத்தாள். அழகி என்று அவள் உள்ளம் சொன்னது. அழியா அழகு என்று அச்சொல் வளர்ந்தது. எப்படி ஒருத்தி தன் அழகின் உச்சத்தில் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிட முடியும்?

ஏனென்றால் அவள் அரண்மனையில் இருக்கவில்லை. அங்கு தன் அலுவல் முடிந்ததும் ஒரு கணம் கூட பிந்தாமல் தன்னை விடுவித்துக் கொண்டு இத்தவக்குடிலுக்கு மீண்டிருக்கிறாள். எது அவளை அழகென நிலை நிறுத்தியதோ அதை மட்டுமே தன்னுள் கொண்டு எஞ்சியதை எல்லாம் உதிர்த்து இங்கு வாழ்ந்திருக்கிறாள். அவளை உருக்கியழிக்கும் காலத்தை நகரிலேயே விட்டு விட்டாள். ஆம், அதுதான் உண்மை. இங்கு ஒவ்வொரு மரமும் இலையும் தளிரும் புல் நுனியும் அழகுடன் உள்ளன. இங்கு இருப்பவள் அழகுடனேயே இருக்க முடியும்.

ஏன் இளைய பாண்டவர் மீள மீள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தேடும் அழியா அழகு குடி கொள்வது இங்கு இவளில் மட்டும்தான். தான் தொட்ட ஒவ்வொன்றும் நீர்த்துளியென உதிர்ந்து காலத்தில் மறைவதை அவர் கண்டு கொண்டிருக்கிறார். சுடர்களை அணைத்தபடியே செல்லும் காற்றுபோல எதிர்கொள்ள நேர்ந்த அழகுகள் அனைத்தையும் அழித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் உவந்த பெண்கள் முதுமை அடைந்துவிட்டனர். அவர் முத்தமிட்ட இதழ்கள், அவர் புன்னகையை எதிரொலித்த விழிகள், அவர் இதயத்தில் தேன் நிறைத்த குரல்கள் ஒவ்வொன்றும் அடித்தட்டிற்கு சென்று படிந்துவிட்டன. தான் மட்டும் இளமையுடன் எஞ்சுவதற்காக புதிய கிண்ணங்களிலிருந்து அமுதை பருகிக் கொண்டிருக்கிறார். இங்கோ வைரத்தில் செதுக்கப்பட்ட மலர் போல் இவள் அமர்ந்திருக்கிறாள். உதிராத மலர், வாடாத மலர்.

ஒரு கணத்திற்குள் அத்தனை எண்ணியிருக்கிறோமென உணர்ந்தாள். திகைத்து விழிநோக்க மாலினி புன்னகைத்து “வருக சுபகை! உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை?” என்றான். “அதோ அமர்ந்திருக்கிறாரே அவர்தான் உங்கள் மூதன்னை, மாலினி தேவி. சென்று அவர்கள் கால்களைத்தொட்டு வணங்குங்கள்” என்றாள்.

சுஜயன் வாய்க்குள் கையை வைத்து இடையை வளைத்து ஐயத்துடன் நோக்கியபடி நின்றான். முஷ்ணை அவன் தோளைத்தொட்டு “செல்லுங்கள். வணங்குங்கள்” என்றாள். அவன் தலையசைத்தான். “செல்லுங்கள் இளவரசே” என்றாள் சுபகை. “அவர்கள் உடைக்குள் குறுவாள் இருக்கிறதா?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான். “பார்த்தருக்கு அளித்த அமுதை தங்களுக்கும் அளிப்பார்கள். செல்லுங்கள். சென்று வணங்குங்கள்” என்றாள் சுபகை. மாலினி அவனை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “வருக இளவரசே” என்றாள். அவன் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றான். “செல்லுங்கள்” என்று முஷ்ணை அவன் தோளை உந்தினாள்.

அவன் சென்று மாலினியை அணுகி முழந்தாளிட்டு அமர்ந்து அவள் காலைத்தொட்டு தன் சென்னியில் வைத்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “வீரமும் வெற்றியும் நற்புகழும் கூடுக!” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை! கரிய யானை!” என்றான். மாலினி திரும்பி “யானை மேலா?” என்று சுபகையிடம் கேட்டாள். சுபகை சிரிக்கும் கண்களுடன் “யானை போன்ற வீரனின் தோளில் வந்தார்” என்றாள்.

மாலினிதேவி சிரித்து “ஆக அதுதான் இவரது நோயா?” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய்? இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே?” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா? எத்தனை மைந்தர் உனக்கு?” என்றாள்.

“நான் மணம் கொள்ளவில்லை” என்றாள் சுபகை. “ஏன்?” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா?” என்றாள். சுபகை விழிகளைத் தாழ்த்தி புன்னகைத்து தலையசைத்தாள். “நீ உள்ளே வந்து புன்னகைத்தபோதே சிறிய உதடுகள், சிறியபற்கள் என்று எண்ணினேன். இத்தனை அழகிய புன்னகையை அவன் தவற விட்டிருக்க மாட்டான் என உய்த்துக்கொண்டேன்” என்றாள் மாலினி.

“தவறவேயில்லை” என்றாள் முஷ்ணை. “அவர்களை இளைய பாண்டவர் ஏதோ மந்தணப் பெயர் சொல்லி அழைப்பாராம். அந்தப் பெயரையே தானென எண்ணுகிறார்.” மாலினி விழிதூக்கி “என்ன பெயரிட்டிருப்பான் உனக்கு? வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா? அந்தப்பெயரா?” என்றாள். நீர்ப்பாவை தொடுவதில் கலைவது போல கலைந்து “ஆம். என் பற்கள்தான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன” என்றாள் சுபகை.

“அரண்மனையில் அத்தனை பேருக்கும் உங்கள் பற்கள்தான் பிடித்திருந்தன. ஆனால் எயினி என பெரிய பல்லுள்ளவர்களைத்தானே அழைப்பார்கள்…? அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன?” என்றாள் மாலினி. “என் பெயர் முஷ்ணை. கிருத குலத்தவள். சூதப்பெண்” என்றாள் முஷ்ணை.

“எயினி என்றால் என்ன பொருள்?” என்றான் சுஜயன். மாலினி சிரித்து “இவன் இங்கு நடப்பது அனைத்தையும் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறான்” என்றாள். “எங்கோ உலவிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் பேசுவது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்” என்றாள் முஷ்ணை. “சுற்றிலும் நிகழ்வது அனைத்தையும் அல்ல. சுற்றிலும் இருக்கும் பெண்களின் பேச்சுகளை மட்டும்” என்றாள் சுபகை. மாலினி நகைத்து “வீரம் வலக்கை என்றால் காமம் இடக்கை என்பார்கள்” என்றாள்.

சுபகை சிரித்தாள். அவள் சிரிப்பதை சுஜயன் நோக்கிக்கொண்டிருந்தான். கைசுட்டி “நீ கெட்டவள்” என்றான். சுபகை கன்னங்களில் குழி விழச் சிரித்து “ஏன்?” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று?” என்று முஷ்ணை அவனை பிடித்தாள். அவளை உதறியபடி திமிறிய சுஜயன் “இவள் அரக்கி, கெட்ட அரக்கி” என்றான்.

“அவனை வெளியே கொண்டுசெல்” என்றாள் மாலினி. “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை அன்னையே” என்றாள் முஷ்ணை. “எனக்குத்தெரிகிறது. வெளியே கொண்டுசென்று எதையாவது காட்டு…” என்றாள் மாலினி. “இல்லையேல் வலிப்பு வந்துவிடும்.” முஷ்ணை கைகால்கள் இறுகி இழுத்துக்கொண்டிருந்த சுஜயனைத் தூக்கி வெளியே கொண்டுசென்றாள். அவன் “ம்ம் ம்ம்” என்று முனகினான். பற்களால் இதழ்களை இறுகக் கடித்திருந்தான். அவன் வெண்ணிறக் கைகளில் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நாணிழுக்கப்பட்ட வில்லை கொண்டுசெல்வதுபோல உணர்ந்தாள் முஷ்ணை.

முந்தைய கட்டுரைகாந்தியவாதியா?
அடுத்த கட்டுரைநாளைக்கான நாளிதழ்