ஹொய்ச்சாள பயணம்- கடிதங்கள்

மிக அற்புதமாக திட்டமிடப்பட்ட்டு , சீர் படுத்தப் பட்டு , நிகழ்த்தப் பட்ட பயணம். சந்திர சேகர் போல ஒருங்கிணைப்பதில் /செயல்படுவதில் ஒருவர் ஒவ்வொரு பயணத்திலும் உதவினால் இது போல செறிவாக செலவு மலிவாக அனைத்தும் அமையும்.

மணி உடனே மொழிபெயர்த்தலில் உதவினார், பேலூரில் இடத்தை செய்தார், ரவி அதேபோல அதை அர்சிகேரே வில் செய்தார்.

அடுத்தமுறை பயத்தில் பங்குபெறும் அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்கிறேன்.

இது மிக அடர்த்தியான காட்சி மற்றும் உரையாடல் அனுபவங்களைப் பெற்றுத் தந்த பயணம்.

கிருஷ்ணன்

…..

அன்புள்ள ஜெ,

பொதுவாக எந்தப் பயணத்தைப் பற்றியும் விரிவாக எழுதிவிடுவீர்கள். உங்களுடனே வாசிப்பவர்களும் நிழல் பயணம் செய்வோம். (என்ன, ஒரு நாள் பின் தங்கி!)

வெண் முரசோ அல்லது அதிக நிகழ்ச்சிகள், பயணங்கள் கொண்டதாலோ சமீப கனடா, அமெரிக்கப் பயணங்கள் பற்றி அதிகமும் எழுதவில்லை.

எனவே இந்த ஹொய்ச்சாள திடீர் (கடைசிவரையிலான ரகசிய?!) சுற்றுப்பயணத்தைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள் என்று தெரிய வந்த போது சந்தோஷமாக இருந்தது.

முதல் புகைப்படத்தைப் பார்க்கும் போது மரச்சிற்பங்கள் என்றே தோன்றியது.

நடன நிலைகளில் உதடுகளில் உறைந்திருக்கும் நிலைகள், மாபெரும் கல்மலர் தலைகீழாகத் தெரிவது போல், கல்மரச்செண்டு, கல்மலர்…கல் மலர்தல் என்ற சொல்லாட்சி, இலை தெரியாமல் பூத்த கொன்றை போல் சிற்பங்கள் மட்டுமே தெரிந்த மல்லிகார்ஜுனர் ஆலயம், மடிப்பு மடிப்பாக அமைந்த சுவர்சிற்பங்களை கடந்து நடந்துசெல்வதென்பது ஓவியத்திரை ஒன்று அசைவதுபோல நீர்நிழல்பரப்பு நெளிவது போல…

ஏதோ ஒரு கட்டத்தில் மெல்லிய பெருமூச்சுடன் விலகிச்செல்லவேண்டியதுதான் என்றாலும் உங்களுடன் இன்னொரு நிழல் பயணம்…

//எங்கள் பயணத்தில் அந்தியில் எப்போதும் ஓரு தொன்மையான ஊரில் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அது அளிக்கும் தியானநிலை அபாரமானது. //

ஆம், இந்தியாவில், கொளுத்தும் மதியவெயில் தயக்கமாக சரிந்து கொண்டே வந்து ஓர் ஆசுவாசமான நிலையில் அந்தி ஆரம்பிக்கும். ஆனால் சட்டென, பாயில் போட்ட குழந்தை, வாசக்கதவில் யார் என பார்த்துவிட்டு திரும்புவதற்குள் பாயை விட்டு வெகுவாக விலகியிருப்பதைப் போல் அந்தி முடிந்து முன்னிருள் கவிழ்ந்துவிடும்.

அந்த நேரத்தில், வழக்கமான தின அவசரங்கள், பணிகள் இல்லாமல் ஓர் தொன்மையான ஊரில், ஆலயத்தில் இருப்பது என்ற நினைவே அபாரமாக, மயக்கமாக இருக்கிறது…

இந்தப்பயணத்தின் எனது takeawayஆக கல் மலர்தல் எனும் சொல்லாட்சி.

சிவா கிருஷ்ணமூர்த்தி